Skip to content
Home » அகலாதே ஆருயிரே-11-13

அகலாதே ஆருயிரே-11-13

��அகலாதே ஆருயிரே��
��11��

பள்ளி முதல்வர் முன்னால் நின்றிருந்த ஆருஷி கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். அவளை
இழுத்துப் பிடித்து சமாதானம் செய்து கையோடு பிடித்து நிறுத்தி இருந்தாள் ரிது. பின்ன அவளும்
ரிதுவும் நிதீஷிடம் பேசியதற்கான விசாரணை தான் நடந்துகொண்டு இருக்கிறது அங்கே.

அதில் ஆருஷியின் மொத்த கோபமும் நிதீஷின் பெற்றோர் மீது தான். முதல்வர் இவன் இரு
பெண்களுடன் தனித்து பேசிக்கொண்டிருந்தான் என்று சொல்லி முடிப்பதற்குள், காதில் கேட்ட
அறையின் சத்தத்தில் ரிது மெய் நடுங்கிப்போனாள் என்றால், ஆருவோ ருத்ரகாளியாக மாறினாள்.

இடம் பொருள் இல்லாமல் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பையனை அடித்த அவனின் தந்தை
மேல் அவ்வளவு ஆத்திரம்  ஆருவுக்கு. தன்னை தடுக்கும் ரிதுவையும் முறைத்துக்கொண்டு
நின்றாள்.

ஆனால் நாராயணனும் சரி, கேசவனும் சரி, முதல்வர் சொன்னதை முழுமையாக கேட்டுவிட்டு,

“என் பொண்ணு இந்த பையனோட பேசுறது எனக்கு முன்னாடியே தெரியும் சார். பாப்பா
சொல்லிட்டா. அவங்க சாதாரண பேச்சு தான் பேசினாங்க. இதுக்கு மேல இதை பற்றி நான் பேச
எதுவும் இல்ல. “,என்று நாராயணன் முடிக்க,

கேசவனோ ஒரு படி மேலே போய், “என் பொண்ணை எனக்கு தெரியும். அவளுக்கு அவன்
அண்ணன் என்று தான் சொல்லிருக்கா. தேவையில்லாம இந்த மாதிரி வேண்டாத
விஷயத்துக்கெல்லாம் எங்களை கூப்பிடாதீங்க சார்.”, என்று சொல்லிவிட,

நிதீஷின் அப்பாவோ, “அதெப்படி, என் பையனோட உங்க பொண்ணுங்களுக்கு என்ன வேலை.
ஒரே க்ளாஸ் இல்ல, ஒரே குரூப் இல்ல. அப்பறம் என்ன பேச்சு வேண்டி இருக்கு. “,என்று கத்த,

“அங்கிள்”, என்ற குரல் அவருக்கு பின்னால் இருந்து வந்தது. எல்லாரும் ஆருஷின்னு தானே
நெனைச்சிங்க.. இல்லயே. அது ரிதுவோட குரல்.

“என்ன அங்கிள் பேசுறீங்க? புரிஞ்சு தான் பேசுறீங்களா?? நாங்க ஒரே குரூப், கிளாஸ்  அப்படி
இருந்தா மட்டும் பேசலாம். இல்லனா பேசக் கூடாதா? என்ன பேச்சு இது. அவர் எங்களுக்கு
அண்ணன். நான் இல்லாம அவ பீல் பண்ணினப்போ அவளை அழகா கைட் பண்ணி படிக்க
சொன்னார் அவர். அவ்ளோ தான். அதுக்கு நான் நன்றி சொன்னேன். “

“ஓ. அதுக்கு உங்களுக்கு மூணு நாள் அங்கேயும் இங்கேயும் நின்னு பேச சொல்லுதா?? “, என்று
கேட்டாள், போட்டுக்கொடுத்த அந்த ஆசிரியை.

“எங்க உறவு வெறும் ஹாய், பை னு முடிஞ்சிருக்கும். இப்போ நீங்க தான் எங்களை
தேவையில்லாம திசை திருப்பி விடறீங்க. எங்களுக்கு எங்களோட எல்லை தெரியும். வீட்ல
சொல்லிக் கொடுத்து தான் வளர்த்திருக்காங்க. அது மட்டும் இல்ல. நாங்க எது செஞ்சாலும்
வீட்டுக்கு சொல்லிடுவோம். தப்பு பண்ணினா தான் மறைக்கணும். நாங்க சும்மா தான்
பேசினோம். இப்படி தான் போன வருஷம் பன்னாண்டாவது படிச்ச சுஜிதா அக்காவை அவங்க
கிளாஸ் பையன் லோகேஷ் அண்ணாவோட சேர்த்து வச்சு பேசி, அவங்க வீட்டுக்கு சொல்லி,
பெரிய பிரச்சனை ஆகி, அது வரைக்கும் வெறும் பிஸிக்ஸ் ரெகார்ட் ஷார் பண்ணினவங்க,
இன்னிக்கு வாழ்க்கையை ஷார் பண்ணிகிட்டு எவ்ளோ கஷ்டப்படறாங்க தெரியுமா? அந்த அக்கா

முழு நேரமும் வேலைக்கு போறாங்க, அந்த அண்ணா காலைல பாலிடெக்னிக் போய்ட்டு மதியம்
பெட்ரோல் பங்க்ல வேலை பார்க்கிறார். அவங்க அப்படி ஆக நீங்க தான் சார் காரணம். இல்லாத
உறவை இருக்கறதா நெனச்சு குழந்தையா இருக்கற எங்களைப் போல பிள்ளைகளை அப்படியும்
இருக்குமோன்னு வாழ்க்கையை சூன்யமா ஆக்கிக்க வைக்கிறது உங்க சந்தேகம் தான்.”, என்று
காரமாக அவள் பேச,

அவளை மாட்டிவிட்ட ஆசிரியையோ, “என்ன சும்மா பேசிட்டே போற, உங்களுக்கெல்லாம்
ஒன்னுமே தெரியாதா? பச்ச பிள்ளைகளா நீங்க? “, என்று புடவை மேல் அணிந்திருந்த கோட்டின்
பாக்கெட்டில் கை வைத்தபடி கேட்க,

“ஏன் மிஸ் நீங்க இந்த கோட் எப்போ போட ஆரம்பிச்சீங்க?”

“இப்போ எதுக்கு அது?”

“சும்மா சொல்லுங்க?”

“ரெண்டு வருஷத்துக்கு முன்னால, டீச்சர்ஸ் பேசி முடிவு பண்ணி யூனிபார்மா போடறோம்.”

“எதுக்கு?’

“எதுக்குன்னா?? சும்மா தான்.”

“நான் சொல்றேன் மிஸ். சும்மா இல்ல. நீங்க புடவை கட்டிட்டு வர்ரதை பார்த்து பசங்க கிண்டல்
பண்ணறாங்கனு கரஸ் கிட்ட பேசி இப்படி கோட் போட்டிங்க சரியா??”

“ஆமா அதுக்கு என்ன?”

“ஒரு ஆசிரியரா நீங்க பண்ணினது சரியா? உங்க வசதிக்கு இந்த கோட் போட்டிருக்கலாம். இல்ல
சாக்பீஸ் வைக்க, பேனா வைக்க வேணும்னு போட்டிருந்தால் பரவால்ல, பசங்க அங்க
பாக்கறாங்க இங்க பாக்கறாங்கனு நீங்க சொன்னிங்களே ஒரு காரணம்.”

“ஏன் அப்படி பாக்கலையா என்ன??”

“பள்ளிக்கூடம்னா என்ன மிஸ்? உலக வாழ்க்கையை கற்று தரும் இடமா இருக்கணும். அதுல
ஒழுக்கமும் ஒன்னு. பொண்ணுங்க கூட பேசாதன்னு சொல்லித்தறது ஒழுக்கம் இல்ல மிஸ்,
பொண்ணுங்க கூட கண்ணியமா பேசுன்னு சொல்லித்தறது தான் ஒழுக்கம். அதை தானே இந்த
கல்விச்சாலை செய்திருக்கணும். ஆனா ஆசிரியர் நீங்களே கண்ணாடி மாதிரி புடவை கட்டி
வர்ரதும், அதுக்கு மேல கோட் போடறதும். சரியா?? அவன் தப்பா பார்த்தா தனியா கூப்பிட்டு
கண்டிங்க, சொல்லிக்கொடுங்க, திருத்துங்க. அதுக்கு பேர் தான் குரு. ஆனா நீங்க ஒரு பையன்
தப்பா பார்த்ததுக்கு, ஆயிரம் பசங்களுக்கு முன்ன கோட் போட்டு , பசங்கன்னா இப்படி தான்னு
சொல்றிங்க. உங்களுக்கு முன்னாடி இருந்த ஆசிரியர்கள் யாரும் புடவை கட்டலையா? இல்லை
அவங்களை அவங்க மாணவர்கள் கிண்டல் பண்ணலையா? அவங்க தான் அப்படிப்பட்ட
பசங்களை திருத்தலையா??”

காட்டமாக ரிது கேட்க, ஆருஷி வாய் பிளந்து கேட்டுக்கொண்டு இருந்தாள்.

“ஏன் பசங்க பொண்ணுங்க பேசக்கூடாதுன்னு ரூல் போடறிங்க?? அறிவா பேச
சொல்லிக்கொடுங்க. நல்லதை நீங்க விதைக்க மறந்துட்டு, களையை கொல்ல பூச்சிமருந்து
அடிச்சிட்டு இருக்கீங்க. விதையே இல்லாத இடத்தில் நல்லது முளைக்காது மிஸ்.”, என்று சொல்ல,

நாராயணன் தன் மகளை மெச்சுதலாக பார்த்தார். நிதீஷின் அப்பா அவளை ஆச்சர்யமாக
பார்த்தார். கேசவனோ நேரம் போகிறதே கிளம்பவேண்டுமே என்று எரிச்சலில் பார்த்தார்.

ஆனால் ஆசிரியரும் சரி, முதல்வரும் சரி அவள் பேசியதை கேட்டு கோவம் தான் கொண்டனர்.
“எங்க கல்விமுறையை தப்புன்னு சொல்ற? ரூல்ஸ் தப்புன்னு சொல்ற.. நீ என்ன அவ்ளோ பெரிய
அறிவாளியா?? “,என்று அந்த மிஸ் குதிக்க,

முதல்வரோ, எங்கே பள்ளி பெயர் கெட்டுவிடுமோ, தாளாளருக்கு பதில் சொல்ல வேண்டி வருமோ
என்று பயந்தவராக,

“அமைதியா மன்னிப்புக் கடிதம் கொடுத்துட்டு கிளாஸ்க்கு போங்க. வேற பேச வேண்டாம். இனி
பசங்க கூட பேசக்கூடாது. “,என்று முடித்தார்.

ஆனால் நாராயணன், “என் பொண்ணு எதுக்கு மன்னிப்பு கடிதம் கொடுக்கணும். அவ தப்பு
பண்ணல, இப்போ தப்பாவும் பேசல, அப்பறம் எதுக்கு? “,என்று கோபமாக கேட்க,

“அப்போ வேற ஸ்கூல்ல சேர்த்துக்கோங்க”, என்று கூலாக சொன்னார். பாதி வருடத்தில் இப்படி
சொன்னால், எந்த பெற்றோரும் இறங்கி வந்துவிடுவார்கள் என்ற தனியார் பள்ளி மனோபாவம்.

ஆனால் கொஞ்சமும் தயங்காமல் நாராயணன், “டி.சி ரெடி பண்ணுங்க சார். நான் என்
பொண்ணை கூட்டிட்டு போறேன். செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்டா தான் அந்த படிப்பு
அவளுக்கு கிடைக்கும்னா அது தேவையே இல்லை. என் பொண்ணோட சுயசிந்தனையை
விட்டுக்கொடுத்து ஒன்னும் அவ இங்க படிக்க வேண்டியதில்லை.”,என்று முடிக்க,

நிதீஷின் அப்பா, “என்ன சார் இப்போ போய் வேற எந்த பள்ளில இடம் கிடைக்கும்.
பொண்ணோட ஒரு வருஷ படிப்பு வீணா போய்டும் சார்.”

“தேவைப்பட்டா, அவ வீட்ல படிச்சு, பிரைவேட் எக்ஸாம் கூட எழுதட்டும் சார். எனக்கு என்
பொண்ணு தான் முக்கியம்.”, என்றார் நாராயணன்.

முதல்வர் டி.சி எழுத சொல்லி எழுத்தரை அழைத்து சொல்லிவிட, கேசவன் கிளம்ப
எத்தனிக்கையில், “எனக்கும் டி.சி வாங்குங்க டாடி. நானும் ரிது கூடத்தான் படிப்பேன். “,என்று
ஆருஷி சொல்ல,

அடுத்த கலவரம் வெடித்தது. அவர் முடியாது, சீட் கிடைக்காது என்று சொல்ல, “ரிதுவோடு
இருந்தா இருப்பேன். இல்லனா அவ்ளோ தான்.”, என்று அவள் தந்தையை மிரட்ட, வேறு
வழியில்லாத அவரும் டி.சி தரச்சொன்னார்.

முதல்வர் இரு இடங்கள் காலியானால் அதற்காக வரும் கேள்விகளை எப்படி சமாளிப்பது என்று
யோசிக்க, பேசாமல் இருவரையும் மன்னித்து அனுப்பிவிடலாம் என்று நினைத்து,

“சரி வேண்டாம் விடுங்க. ரெண்டு பேரும் இங்கேயே படிக்கட்டும். இனிமே பசங்க கூட
பேசக்கூடாது அவ்ளோ தான். கிளாஸ் போங்க.”, என்றதும், கேசவன் மகிழ, நாராயணன் தன்
மகளை கூர்ந்து பார்த்தார். ஆனால் ரிது கையை முன்னால் கட்டியபடி,

“என் டி.சி இப்போ இங்க வரணும். நான் போகணும். அவ்ளோ தான். நீங்க போன்னா
போறதுக்கும், இருன்னா இருக்கவும் நான் ஒன்னும் சும்மா  கிடையாது. பணம் கட்டி தானே
படிக்கிறோம்.  நாங்க ஒன்னும் உங்க அடிமை இல்லையே. அப்பறம் என்ன? டி.சி இஸ்யூ
பண்ணுங்க சார். காண்டக்ட்ல கை வைக்கலாம்னு நினைக்காதீங்க. இந்த ரூம் சி.சி.டி.வி. வீடியோ
வச்சு உங்க மேல கேஸ் போடுவேன்.”,என்று கூலாக சொல்ல,

முதல் முறை முதல்வர் அவளை ஆச்சர்யமாக பார்த்தார். இந்த வயத்தில் இவ்வளவு தெளிவும்,
தைரியமும் அவருக்கு தனிப்பட்ட முறையில் பிடித்திருந்தாலும், பள்ளி முதல்வர் என்ற முறையில்
அதை வெளிக்காட்ட முடியாமல் அமைதியாக இருந்தார்.

��அகலாதே ஆருயிரே��
��12��

வேணி கொதிநிலையில் தன் கணவனை வறுத்து எடுத்துக்கொண்டு இருந்தாள். அவளால்
இன்னும் தன் மகளுக்கு டி.சி. வாங்கிக்கொண்டு வந்து நிற்பதை ஏற்கவே முடியவில்லை.

“உனக்கு அந்த பையனோட என்னடி பேச்சு? அப்படியே ஸ்கூல்ல திட்டி ,ஒரு அபாலஜி லெட்டர்
கேட்டா கொடுத்துட்டு, படிப்பை பார்க்கறதை விட்டுட்டு அவ சண்டை போட்டாளாம்,
அவங்கப்பன் டி.சி. கேட்டானாம், இவளும் வாங்கித் தர சொன்னாளாம், இவரும் வாங்கிட்டு
வந்துட்டாராம். என்ன விளையாட்டா போச்சா உங்களுக்கு? ஏங்க இவளுக்கு தான் அறிவில்லை,
உங்களுக்கும் இல்லாமலே போச்சா? இப்படி பாதி வருஷத்துல எவன் சீட் கொடுப்பான்னு நீங்க
இவ பேச்சை கேட்டு டி.சி வாங்கிட்டு வந்திங்க? நாளைக்கு ஒழுங்கா நீங்களும் உங்க பொண்ணும்
போய் சாரி கேட்டு, அதே ஸ்கூல்ல கண்டின்யூ பண்ணுங்க. இல்லனா நடக்கறதே வேற.”

“என்னால ரிது இல்லாம அந்த ஸ்கூல்ல படிக்க முடியாது. அது மட்டும் இல்ல. இனி அவங்களே
சீட் கொடுத்தாலும் அந்த ஸ்கூல்ல படிக்க மாட்டேன்.”

“ஓங்கி ஒன்னு விட்டா தெரியும் ஆரூ உனக்கு. செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு.
பேச்சை பாரு.”

“என்னது செல்லம் கொடுத்தியா?? யாரு நீயா? இல்ல இவரா? நான் ஏதோ இந்த அளவுக்கு
நடமாடுறேன்னா அதுக்கு ஒரே காரணம் ரிதுவும் அவ குடும்பமும் தான். என் பிறந்தநாள் எப்போ?
சொல்லும்மா பார்க்கலாம்?”

வேணி முழிக்க, கேசவன் எதுவும் பேசாது தலையை தாழ்த்தி இருந்தார். ஏற்கனவே பள்ளியை
விட்டு கிளம்பியதும் காரில் வைத்து ‘ஏன் இப்படி செய்தாள்?’ , என்ற ஒரு கேள்விக்கு அவரை
நாராய் கிழித்து விட்டாள் ஆருஷி. இப்போது மனைவியின் முறை என்று அவர் அமைதி காக்க,

“என்னம்மா தெரியலையா?? நீ தானே பெத்த? இல்ல தவுட்டுக்கு வாங்குனிய?”

“என்ன ஆரூ பேச்செல்லம் சரி இல்லயே.”

“என்னம்மா செய்ய சொல்ற, போன மாசம் என் பிறந்தநாள். நீங்க ரெண்டு பேருமே மறந்து உங்க
வேலைக்குள்ளேயே முழுகி போய்ட்டிங்க. ஆனா ரிதுவும் அவ குடும்பமும் தான்
கொண்டாடினாங்க.”

“நம்ம காசுக்காக அவ அப்படி பண்றாளா இருக்கும் ஆரூ.”

“யாருக்கு வேணும் உன் காசு. அன்பா நாலு வார்த்தை பேசி, என்னோட ரெண்டு நிமிஷம்
செலவழிக்க முடியாத நீ, எனக்கு லட்ச ரூபாய் போட்டு வாங்கி தந்த வண்டியை நான் தொடறதே
இல்ல. அங்கிள் வாங்கித் தந்த சைக்கிள்ல தான் போறேன். அன்பு காசுல இல்ல, கொடுக்கிறதுல
இல்ல, அது எப்படி, யாரால கொடுக்கப்படுதுன்றதுல இருக்கு.”

“என்ன எங்களுக்கு எதிரா உன்னை திருப்பி விடுதா உன் தோழி குடும்பம்.”

“அம்மா பைத்தியம் போல பேசாத. சசி ஆன்ட்டி கிட்ட, என் அம்மாக்கு என்னை பிடிக்கல, எனக்கு
நேரம் செலவு பண்ணலன்னு சொன்னதுக்கு, உனக்காக தான் நேரம் காலம் பார்க்காம ஓடறாங்க.
நீ கொஞ்சம் புரிஞ்சுக்கோ, நீயே போய் கொஞ்ச நேரம் அவங்களோட இருக்க கேட்டா செய்யாம
போய்டுவாங்களானு எனக்கு சொல்லித் தந்தது ஆன்ட்டி தான். எனக்கு இப்போ வரைக்கும்
தனிமையில பைத்தியம் பிடிக்காம இருக்குன்னா அதுக்கு காரணம் என் ரிது தான். எனக்கு ரிது
தான் முக்கியம்.”

“இப்போ எப்படி டி படிப்ப? அறிவு இல்லியா?”

“அம்மா ரிது என்ன பண்ணறாளோ நானும் அதையே பண்ணுவேன். நீ விட்ரு. இத்தனை நாளா
நீயா கவலைப்பட்ட.. இல்லல போய் உனக்காக காத்திருக்கும் நடிகர் நடிகைகளை பாரு.”

“ஆரூ. நான் தெரிஞ்ச ஒருத்தர் கிட்ட சொல்லி   MMM ஸ்கூல்ல இடத்துக்கு ஏற்பாடு
பண்ணிருக்கேன் மா”,என்றார் கேசவன்.

“ரெண்டா வாங்கினா வாங்குங்க. இல்லனா விடுங்க.”

“ஏய் என்ன டி ரொம்ப பண்ற? எப்படி டி ரெண்டு சீட் வாங்க முடியும். உனக்கும் அப்பறம் தர
மாட்டாங்க. எப்படி டி படிப்ப.”

“எப்படியும் அங்கிள் அவளொட சேர்த்து எனக்கும் சீட் வாங்குவார். அது எந்த ஸ்கூலா
இருந்தாலும். எனக்கு நாராயணன் அங்கிள் பத்தி தெரியும்.”, முடிவாய் சொல்லிவிட்டு தன்
அறைக்குள் சென்றாள் ஆருஷி.

“என்ன கேசவ் இது. இவ ஏன் இப்படி பண்ணறா..”

“விடு. அவ மனசுல நிறையா காயம் முடிஞ்சவரை அவளோடு நேரம் செலவழிக்க பாக்கலாம்.”

“அப்பறம் யார் சம்பாதிக்கிறது?”

“சம்பாத்யமே அவளுக்கு தானே வேணி. பார்ப்போம்.”

“பேசாம ஏதாச்சும் வெளியூர் ஸ்கூல் ஹாஸ்டல்ல போடுங்க. சரியா வருவா.”

“பேசாம போ வேணி.”, என்று எரிந்து விழுந்தவர் மனதில் மகளை தனிமைப்படுத்திய தன்
மேலேயே அவ்வளவு கோவம்.

“என்னம்மா இன்னும் அதையே நெனச்சுட்டு இருக்கியா? வேற ஸ்கூல்ல இடம் வாங்கிக்கலாம்
டா.”, தன் மகளின் தலையை வருடிச் சொன்னாள் சசி.

“இல்லம்மா என்னை பற்றி இல்லை. ஆருவும் டி.சி. வாங்கிட்டா. அதான் கவலையா இருக்கு. “

“அவ அப்படி சொல்லுவான்னு நானும் எதிர்பார்க்கல சசி. அவளுக்கு ரிது மேல அவ்ளோ பிரியம்.”

“நமக்கு சந்தோசம். ஆனா அவ அப்பா அம்மா பத்தி நெனச்சு பாருங்க. நம்மையும் தப்பா தான்
நினைப்பாங்க.”

“அது உண்மை தான்.”,என்று நாராயணன் ஒத்துக்கொள்ள,

“உள்ளே வரலாமா?”, என்று கேட்ட குரலில் அனைவரும் திரும்ப அங்கே கேசவன் நின்றிருந்தார்.

“வாங்க”, என்று நாராயணன் அழைக்க, வீட்டை நோட்டமிட்டபடி உள்ளே வந்த கேசவன்
முதலில் சொன்னது,

“ஸ்கூல் அட்மிஷன் என்ன ஆச்சு. இடம் கிடைச்சுதா?”

“RRR ஸ்கூல்ல சொல்லிட்டேன். ரெண்டு சீட் கேட்ருக்கேன். இன்னிக்கு சாயங்காலம்
சொல்றேன்னு சொன்னாங்க.”, என்றார்.

கேசவன் காதுகளில் ஆரூவின் வார்த்தைகள் காதில் கேட்டது,’எப்படியும் அங்கிள் அவளோட
சேர்த்து எனக்கும் சீட் வாங்குவார். அது எந்த ஸ்கூலா இருந்தாலும். எனக்கு நாராயணன் அங்கிள்
பத்தி தெரியும்.’

‘எவ்வளவு உண்மை. இந்த குடும்பம் எப்படி இப்படி இருக்கு. வீடொண்ணும் அவ்வளவு பெருசு
இல்ல. பெரிய வசதிகள் இல்லை. ஆனா எல்லார் முகமும் எவ்வளவு தெளிவா இருக்கு. ஒரு
டென்ஷன் இல்லை. ஏன் பொண்ணு டி.சி வாங்கிட்டு வந்துருச்சு அந்த பதற்றம் கூட இல்லை.
அவ்வளவு பணம் படைத்தவர்கள் போல தெரியவில்லை.  இப்போது புது பள்ளிக்கு பணம் கட்ட
வேண்டும் என்ற யோசனை கூட இல்லையே.. என்ன மாதிரி குடும்பம் இது. வீட்டுக்குள்

நுழைந்தது முதல் மனதில் ஒரு நிம்மதியும் அமைதியும் பரவும் சூழ்நிலை. நம்ம வீடு இப்படி
இல்லையேன்னு எனக்கே தோணும்போது ஆருக்கு தோண்றதுல ஆச்சரியமே இல்ல. ‘

“என்ன சார் ஒன்னும் பேசாம ஒரே யோசனையா இருக்கீங்க?”

“இல்ல என் பொண்ணு உங்களைப்பற்றி சொன்னா. அதை நெனச்சேன். எவ்ளோ உண்மைன்னு
இங்க வந்த பின்னாடி தான் தெரியுது.”

“கண்டிப்பா அந்த பள்ளிக்கூடத்துல இடம் கிடைச்சிடும் சார். கவலைப்பட வேண்டாம். எங்களால
உங்களுக்கு ஒரு சிரமமும் வராது.”

“சிரமம்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசாதிங்க நாராயணன்.”

“ஆருஷி வெளில வரவேண்டிய தேவையே இல்லையே. ஆனா எங்க ரிதுக்காக தானே வந்தா.
அவளை கண்டிப்பா நான் அப்படியே  விட்டுட மாட்டேன். அவளும் என் பொண்ணு தான்.”

“உண்மைலேயே எனக்கு பெருமையா இருக்கு நாராயணன். இத்தனை வருஷத்துல எனக்காக
யாரும் இப்படி சொல்லுவங்களா? அப்படிப்பட்டவங்களை நான் சம்பாதிச்சு வச்சிருக்கேனா
தெரியல. ஆனா என் மகள் உங்களைப்போல சிலரை சம்பாதிச்சு வச்சிருக்கா. அவளோட நட்பை,
அன்பை நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படறேன். என் பொண்ணு அந்த ஸ்கூலை விட்டு
உங்க பொண்ணுக்காக வர அளவுக்கு கண்டிப்பா உன் பொண்ணும் தகுதியான ஆள் தான் சார்.
நானும் ஒரு ஸ்கூலில் பேசி வச்சிருக்கேன். எங்க முதல்ல கிடைக்குதோ அங்க ரெண்டு பேரையும்
சேர்த்துடலாம். அதை சொல்லிட்டு போக தான் வந்தேன்.”,அவர் சொல்லி முடிக்கவும், ரிது
அவருக்கு காபியும், ஸ்னாக்சும் எடுத்து வரவும் சரியாக இருந்தது.

அவளை ஆழமாக பார்த்தவர், “என் பொண்ணை பத்தி நான் இனி கவலையே பட மாட்டேன் மா.
நீ அவளை சரியா வழி நடத்துவன்னு நான் நம்புறேன். ஒரு நட்பு எப்பவும் நம்மை
நல்வழிப்படுத்துவதாக இருக்கணும். தப்பு செய்த பின்னாடி அதை மறைப்பதாகவோ, தப்பை
சுட்டிக்காட்டியவரை காயப்படுத்துவதாகவோ இருக்க கூடாது. அந்த வகையில் உன் நட்பு என்
பொண்ணுக்கு பெரிய பலம். நல்லா இரும்மா.”, என்று அவள் தலையில் கைவைத்து  சொல்ல, ரிது
உடல் சிலிர்த்தது.

அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த ரிஷி அக்காவைப் பார்த்து, ” என்ன அக்காவே,
வாத்தியாரையே வாசிச்சிட்டு வந்துட்ட போல, என் கிளாஸ்ல நீ தான் இப்போ மாஸ் ஹீரோயின்.
சில டீச்சர்ஸ் நீ சொன்னதை சரின்னு சொல்லி, இனிமே கோட் போட மாட்டோம்னு
சொல்லிட்டாங்க. அதைவிட எப்பயும் கடுகடுன்னு இருப்பாங்களே ரம்யா மிஸ் இன்னிக்கு வந்து,
யாருக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் சொல்லுங்க, எப்பயும் நான் உங்களுக்கு நல்ல
வழிகாட்டியா இருப்பேன். என் கிளாஸ்ல பசங்க பொண்ணுங்க பேசுங்க. நான் ஒன்னும் சொல்ல
மாட்டேன். ஆனா என்னோட நம்பிக்கையை காப்பாத்தனும் அப்படின்னு சொல்லிட்டாங்க.
எனக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம்.”

“நாங்க ப்ரின்ஸி ரூம்ல பேசுனது ஸ்கூல் முழுக்க எப்படி டா தெரிஞ்சது??”

“அந்த மிஸ், அதான் உன்னை போட்டுக் கொடுத்துச்சே, அது தனக்கு எல்லாரும் சாதகமா
பேசுவாங்கன்னு நெனச்சு ஸ்டாப் ரூம்ல வச்சு எல்லாத்தையும் சொல்லிருக்காங்க, சில டீச்சர்ஸ் நீ
சொன்னது உண்மைன்னு பேசி இருக்காங்க. அங்க இருந்த சில ஸ்டுடெண்ட்ஸ் மூலமா ஸ்கூல்
முழுக்க பரவிடுச்சு.”

அப்போதுதான் அங்கிருந்த கேசவனை கண்டவன், “இவர் யாரு அக்கா?”,என்று அவளை ஒட்டி
நின்று கேட்க,

“நம்ம ஆருவோட அப்பா டா.”

“என்னது?”, என்று கேட்டவன், “ஏன் அங்கிள் ஆரூ அக்காவை பாத்துக்கறதை விட, உங்களுக்கும்
ஆன்ட்டிகும் என்ன வேலை. பாவம் அக்கா எவ்ளோ தனியா பீல் பண்றா தெரியுமா? இல்லனா
வெளில போகும்போது அவளையும் கூட்டிட்டு போங்க. அப்போ தானே உங்க வேலை அதுல
இருக்கற கஷ்டம் அக்காவுக்கும் புரியும். அவளும் அப்பாக்கு வேலை அதிகம் ன்னு மனசை
சமாதானமா வச்சுப்பா. நான் என் அப்பா ஆபிசுக்கு அடிக்கடி போவேன். அப்பா எவ்ளோ
கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாருனு தெரிஞ்ச பின்னால, அப்பாவை நான் எதுக்குமே தொந்தரவு
செய்ததே இல்ல தெரியுமா?”

என்று அவன் மனதில் பட்டதை பேச, கேசவன், குழந்தைகள் மனதை இந்த குடும்பம் தான்
எவ்வளவு பக்குவமாக வைத்திருக்கிறது, அதற்கான மெனக்கெடல்கள் தான் எத்தனை என்று
நினைத்து,

“கண்டிப்பா நான் ஆருவை இனிமே தனியா பீல் பண்ண விட மாட்டேன் மை பாய்.”என்று
சொல்ல,

“என் பேர் ரிஷி அங்கிள்.”,என்றான் வேகமாக.

��அகலாதே ஆருயிரே��
��13��

அபியின் வாழ்வு தெளிந்த நீரோடை போல அடுத்து வந்த வாரத்தில் செல்ல, அவனுக்குமே
கொஞ்சம் நிம்மதி தான். காலை டியூஷன், அதில் ஹர்ஷாவின் சேட்டைகள், கெமிஸ்ட்ரி சாரின்
புலம்பல்கள் என்று காலை ரணகளமாக இருக்க,

பள்ளியில் முதல் மாணவன் என்பதால், அவனிடம் தொந்தரவு செய்வோரும் இல்லை. இயல்பில்
கோபக்காரனாக இருந்தாலும் பணிவானவன் என்பதால் ஆசிரியர் முதல் சக மாணவர் வரை நல்ல
மதிப்பும் அன்பும் சம்பாதித்து வைத்திருந்தான்.

மாலை வேலையிடத்தில்  சுரேஷிடம் நல்ல நட்பும், முதலாளியின் மேல் மரியாதையும் அபியை
அந்த வேலை மீது நல்ல பிடிப்பை கொடுத்தது. சமையலறை வேலை ஒதுக்கினால், செப்புடன்
சேர்ந்து அவரிடம் சமையலும் கற்க துவங்கினான் அபி.

வீட்டில் இரவு அம்மாவுடனான பொழுதுகள் அனைத்தும் அவனுக்கு இனிமையே. அவன்
புத்தகத்தோடு அமர்ந்தால், அம்மா பொடி வகைகளை பாக்கெட் போடுவது, ரவிக்கைக்கு ஊக்கு
வைப்பது அப்பளக்கட்டு இட்டு வைப்பது என்று ஏதோ ஒரு வேலையோடு பிளாஸ்கில் டீயுடன்
அமர்ந்துகொள்வார். இவன் கொண்டு வரும் உணவுகள் அனைத்தையும் தமக்கைகள் கபளீகரம்
செய்வதால், சுரேஷிடம் சொல்லி, அம்மாவுக்கு பிடித்தவைகளை மட்டும் தனியாக வாங்கி
புத்தகப்பைக்குள் வைத்து தமக்கையர் தலை மறைந்ததும் அம்மாவிடம் தருவான்.

“இதென்ன அபி இப்படி செய்யற.. சாப்பிட்டா சாப்பிட்டு போறாங்க. எனக்கும் மட்டும்
கொடுப்பது தெரிஞ்சா உன் பெரிய அக்கா ஆடுவா டா.”

“அவளுக்கு தராமல் உனக்கு தரலேயே அம்மா. நீயும் மனுஷி தானே. நான் பார்க்காமல்
போனாலும் பெரியவள் வந்தது முதல் ஆடாமல் அசங்காமல் உன்னிடம் தான் வேலை வாங்குறா.
நீயும் உன்னோட வேலையை எவ்வளவு சீக்கிரம் முடிச்சாலும் நீண்டுகிட்டே போகுது. வர வர
சாப்பாடு கூட குறைவா தான் சாப்பிடற.. நான் உன் மகன் மா. உன்னை எனக்கு தெரியாதா?
உன் முகத்துல இருக்கற சோர்வு சொல்லுது இன்றைய நாள் உனக்கு எப்படி போச்சுன்னு. நானும்
உன்னை தூங்க விடாம படிக்க உக்காந்து தூக்கத்தை கெடுக்கறேன்.”

“இல்ல அபி. இந்த வேலைகளை பகலில் செய்யவே முடியல. நீ சொல்றது உண்மை தான். ரேகா
ஒரு வேலையும் பார்க்கறதே இல்ல. ஸ்வாதி நல்ல நாளிலேயே உதவ மாட்டாள். இப்போ ரேகா
கூட சண்டை போட தான் அவளுக்கு நேரம். எனக்கு சில நேரம் சாப்பிடவே பிடிக்கல அபி. என்ன
செய்ய சொல்லு. “

“எல்லாம் சரியா போகும். இன்னும் கல்யாணத்துக்கு ரெண்டு மாசம் இருக்கே, இவ ஏன் ம்மா
இப்போவே இங்க வந்துட்டா? மாமா கிட்ட பேசவா?”

“வேண்டாம். என்னவோ அவளுக்கு அங்க பிரச்சனை. இவ வாயை விட்டிருப்பா. உன் மாமாக்கு
தெரியாதா இருக்கும். அதான் இங்க வந்துட்டா. அவருக்கு தெரிஞ்சா அவர் பாணில கேள்வி
கேட்பாரே.அதான் தங்கச்சி கல்யாணம் வரை உதவிக்குன்னு சொல்லி இங்க வந்துட்டா.”

“நல்லா உதவி பண்றாம்மா உன் பெரிய பொண்ணு. ஏன்மா அவளையும் நீ தானே வளர்த்த? அவ
மட்டும் எப்படி அப்படி இருக்கா? ஸ்வாதி அக்கா கூட ஒரு வகையில சேர்க்கலாம். உதவி பண்ண
மாட்டாளே தவிர, உபத்திரவமும் பண்ண மாட்டா. இவ ரெண்டும் பண்றா மா.”

“அபி, நீ உங்க அப்பா செல்லத்தை அனுபவிச்சு இருக்கியா?”

“அவர் என்கிட்ட நின்னு பேசவே மாட்டாரு. அப்பறம் எங்க இருந்து செல்லம்??”,
சொல்லும்போதே குரலில் சற்று காரம் இருந்தது.

“ம்ம். ஆனா அவங்களுக்கு அப்படி இல்ல. முழுக்க முழுக்க அப்பா செல்லம். அதட்டவோ,
திட்டவோ, தப்பு பண்ணினா கண்டிக்கவோ எனக்கு எந்த உரிமையையும் உங்க அப்பா
கொடுக்கலை.”

“இதுல உரிமை கொடுக்க என்னம்மா இருக்கு. அவங்க உன் பொண்ணுங்க. நீ நாலு சாத்து சாத்தி
இருந்தா, இன்னிக்கு இவ இப்படி பண்ணுவாளா மா?”

“நாலு சாத்து.. எவ்வளவு ஈஸியா சொல்லிட்ட அபி, ஒருநாள் அவள் சொல்பேச்சு கேட்காம
சேட்டை செய்ய,கையை ஓங்கினேன். கண்டிப்பா அடிச்சிருக்க மாட்டேன். ஆனா
ஓங்கினேன்,அதுக்கே உங்க அப்பா எல்லார் முன்னாடியும் என்னை அடிச்சிட்டாரு. கேட்டதுக்கு,
நான் இருக்கும்போதே பொண்ணுங்களை இப்படி பண்றியே, இல்லன்னா நீ என்ன செய்ய
மாட்ட?? ன்னு சொல்லி  கேட்டார். இதை வச்சு உங்க அக்கா ரேகா பண்ணின வேலை,
அடிக்காமலே அடிச்சேன்னு சொல்றது, அவ மார்க் கம்மியா வாங்கிட்டு வந்து நான் ஏன்னு
கேட்டா, கோபத்துல அவளே பேப்பர் கிழுச்சிட்டு, நான் தான் பண்ணினேன்னு உங்க அப்பா
கிட்ட சொல்றதுன்னு.. என்னை மதிக்காம, உங்க அப்பாவை எனக்கு எதிரா அப்படியே அவளுக்கு
சாதகமா வச்சிட்டா. ஸ்வாதிக்கு அவ்வளவு குயுக்தி இல்ல. ஆனா அவருக்கு என்மேல விழுந்த
அபிப்பிராயம் மாறல. நானும் மாத்த முயற்சி பண்ணல. பண்ணுனா, அவ வேற ஏதாவது செய்வா.
அதான் எனக்கு நீ இருக்கியேன்னு மனசை தேத்திக்கிட்டு உன்னோட என் கைகளை நான்
பிணைச்சு வச்சேன். அவரும் உன்னை அதிகம் கண்டுக்கல. அதனால இன்னும் வசதியா நான்
உன்னை நினைச்சது போல வளர்த்தேன். அவங்களை நான் வளர்க்கவே இல்லயே.”, என்றார்
ஆதங்கத்துடன்.

“அம்மா.. “, என்று அவள் கையை ஆதரவாக பிடித்தவன், ஏம்மா என்றான்.

“வீட்ல அம்மாவை ஒரு குடும்பத்து மனிதர்கள் எப்படி மதிக்கிறாங்களோ அப்படி தான்
குழந்தைகள் அவர்களிடம் நடக்கும். அப்படி இருக்கும்போது, ‘உனக்கு ஒண்ணும் தெரியாது, நீ
லாயக்கே இல்ல, உனக்கு உரிமை இல்ல, உன் நிலை தெரியாம இருக்க’ என்றெல்லாம்
பிள்ளைகள் முன்னாடி பேசினால், அவர்கள் கண்டிப்பா அந்த அம்மாவை மதிக்கவே மாட்டாங்க.
ஏதாவது சொன்னா கூட, உனக்கென்ன நான் அப்பா கிட்ட சொல்லிக்கிறேன் அப்படின்னு தான்
சொல்லுவாங்க. எனக்கும் அதுதான் அபி நடந்தது. குடும்ப சூழ்நிலை தெரியாம
பெண்பிள்ளைகளை இவர் வளர்த்தார். அதோட விளைவு, ஒருத்திக்கும் பொறுப்பு இல்ல.
இவ்வளவு விலை உள்ளதை அப்பாவால வாங்க முடியுமா? அப்பா பாவம் இல்லையா?
அப்படிங்கற நியாய புத்தி இல்ல. அவர் கடன் வாங்கி செய்வார். கடன்காரன் என்னை கேட்பான்.
அவமானப்பட்டு நிக்க கூடாதேன்னு நான் இது போல சின்ன சின்ன வேலைகள் செஞ்சு அதை
அடைப்பேன். இதை பற்றியும் உன் அப்பாவுக்கு கவலை இல்லை. மகள்கள் மகிழ்ச்சியா இருந்தா
போதும்.”

“அம்மா.. “,என்று அவளை ஆதரவாக அணைத்தவன். “கவலைப்படாதே மா. இன்னும் அஞ்சு
வருஷம் தான். உன்னை நான் ராணி மாதிரி வச்சு பார்த்துப்பேன் மா. கவலைப்படாதே. ப்ளீஸ்..”

“கவலை எல்லாம் இல்ல அபி. உன்னை எனக்கு தெரியும். நீ என் வளர்ப்பு. ஆனா அப்பாவை
வெறுத்துடாதே. அவர் மகள்கள் மேல அன்பு வைக்க கண்டிப்பா காரணம் இருக்கும். எனக்கும்
அவருக்குமான இடைவெளி அதை அவரை என்னிடம் சொல்ல விடலை. அவ்ளோ தான்.”

“அம்மா எனக்கு நீ வேற அப்பா வேற கிடையாது. ஆனா கண்டிப்பா அவங்க ரெண்டு பேரையும்
கொஞ்சம் அடக்கி தான் வைக்கணும். நான் தம்பியா போய்ட்டேன். இல்லனா இந்நேரம்..”, என்று
அவன் முஷ்டியை மடக்க,

“அபி.. போதும். கோவம் வேண்டாம். அது ரெண்டு பக்கமும் கூர்மையான கத்தி. உன்னையும்
அது பாதிக்கும்.”

“போம்மா.. “,என்று அவன் கொஞ்சம் தனிய,

“படிச்சது இல்லயா அபி நீ.. சினம் என்னும்   சேர்ந்தாரைக் கொல்லி  அப்படின்னு..”

“தெரில.. நீயே சொல்லு.”,என்றான். சற்று கடுமை குறைந்து நின்றான்.

 “”பூச்சி கொல்லி ” , தாவரங்களைத்  தாக்கும் பூச்சிகளை அழிக்கும் மருந்து .
 “உயிர்க்கொல்லி ” , மனித உயிரைப்பறிக்கும் கொடிய நோய் .
“சேர்ந்தாரைக் கொல்லி “,னா சினம்.
சினத்திற்கு  வள்ளுவர் வைச்ச பெயர் தான் அது.

     “சினம்என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனம் என்னும் 
      ஏமப் புனணயைச் சுடும் “

என்று அவர் நிறுத்த,

“அப்படின்னா..?”, என்று அவன் கேட்க,

“சினம் ,அது கொண்டவர் ,அவரது குடும்பம் ,சுற்றம் மட்டுமல்லாது  அவரது இனத்தையே
அழிக்கும் நெருப்பு .
தண்ணீர் நெருப்பை அணைக்கும், சினம் என்னும் நெருப்போ ஒரு தெப்பத்தையே அதாவது
தண்ணீரையே சுட்டு எரித்து அழித்துவிடும். இது தான் அதோட தெளிவுரை.”

“என்னமா புத்தகத்தில இருக்கறது போல சொல்ற..”

“படிக்கணும் அபி, அது அப்படியே புத்தகமாவே நம்ம மனசுல சேர்ந்து கலந்து போகணும்.. அதுல
இருந்தது எல்லாமே நம்ம வாழ்க்கையில கடைபிடிச்சு, கடைசிவரைக்கும் நெறிபிறழாத வாழ்வு
வாழணும். என் மகனும் அப்படி ஒரு வாழ்வு  வாழணும். வாழுவியா??”

“கண்டிப்பா மா. முடிந்த வரைக்கும் கோபப்படாம இருக்கேன். சரியா..”

“ஐயோ.. உன்னை இன்னிக்கு படிக்க விடாம பண்ணிட்டேன் டா.”

“வாழ்க்கை பாடம் கத்து கொடுத்துருக்க மா. அது இதை விட பெருசு.”

“சரி சீக்கிரம் படிச்சிட்டு தூங்கு பா.”

அவளும் அவன் விழித்திருந்து வரை ஏதோ ஒன்றை உருட்டிவிட்டு, அவனுடன் சேர்ந்து
படுத்துக்கொண்டாள்.


கதிரவன் தன் கரங்களை மேல் நோக்கி நீல வானை தீண்ட, நீலம் பொன்னிறமாக ஜொலிக்க
துவங்கிய காலை வேளை,

“என்ன டா இன்னிக்கு  சீக்கிரம் கிளம்பாம இருக்க?”, சோமு தன் மகனை பார்த்து கேட்க,
அவனோ,

“அப்பா தூக்கம் வருது பா. நான் இன்னிக்கு லீவு சொல்லிட்டேன் டியூஷனுக்கு. மனசாட்சி
இல்லாம ஞாயிறு கூட கிளாஸ் வச்சா எப்படி?”

“நீ நல்லா படிச்சா அவர் ஏன் டா கிளாஸ் வைக்கிறார் ஞாயிறு அன்னைக்கு. அவருக்கு மட்டும்
குடும்பம் இல்லையா, இல்ல தூக்கம் வராதா?”

“அப்பா”, என்று அவன் சிணுங்கி, “அம்மா கிட்ட பூஸ்ட் கேட்டேன்னு சொல்லுங்க.”

“எழுந்து பல்லை விளக்கு, அவளே தருவா.”

“அப்பா ஏம்பா கொடுமைப்படுத்துற.. சிங்கம் புலி எல்லாம் பல்லு விளக்குதா என்ன??”

“இல்ல தான். ஆனா அது காட்டுல இருக்கு. நீயும் காட்டுக்கு கிளம்பு,நான் ஏன் உன்னை பல்லு
விளக்க சொல்ல போறேன்.”, என்று இலகுவாக சோமு கிண்டல் செய்ய..

“நீயா ப்பா இது.. இவ்ளோ ஜாலியா உனக்கு பேசத் தெரியுமா??”

“ஏண்டா நான் என்ன ஜூபிடர் கிராகத்துல இருந்து வந்த ஏலியனா?? நானும் உன் வயசை
தாண்டி தானே வந்தேன்.”

“அதான் பா. நீ தாண்டி வந்துட்ட.. எனக்காக அங்கேயே இருந்திருக்கலாம்.”, என்று படுக்கையில்
அனந்தசயனமாக இருந்தபடி வம்பு செய்த ஹர்ஷாவை,அவனுடைய பழைய சாக்ஸை எடுத்து
அவன் மேல் வீசுவது போல சோமு பாவலா செய்ய..

“ஐயையோ.. என்னை இவர் கொல்லப்பாக்கறார்.. “,என்று கத்தியபடி குளியலறைகுள் புகுந்தான்
ஹர்ஷா.

அவன் போன திக்கை பார்த்து சிரித்தவர், தன் கையில் இருந்ததை தூர வீசிவிட்டு, “டெட்டால்
எங்க?? ச்ச..”, என்று வேறு அறை குளியலறைகுள் நுழைந்தார்.


ஆரூ.. உன் ஆசைப்படியே உனக்கும் ரிதுவுக்கும் RRR ஸ்கூல்ல இடம் கிடைச்சாச்சு.

“ஹையா.. ஜாலி..”

“உனக்கு அங்க யாரையாவது தெரியுமா?”

“எங்க டியூஷன்ல நிறைய பேர் அந்த ஸ்கூல் தான் அப்பா. நோ பிராப்ளம்..”

“சரிடா.. “,என்று அவளை அணைத்தார் கேசவன்.

பல வருடங்களுக்கு பிறகான தன் தந்தையின் அருகாமையும் ஸ்பரிசமும் ஆருவை தன் கட்டுக்குள்
இல்லாமல் உணர்வுகள் விடுதலை பெற்று, கண்ணீர் ஆறாகி அவள் தந்தை மேல்சட்டையை
நனைக்க,

அவரோ, அவளின் தலையை வருடியபடி, தன் மகளை வாடவிட்ட தன்னையே நொந்து
கொண்டார்.

4 thoughts on “அகலாதே ஆருயிரே-11-13”

  1. CRVS 2797

    அப்பாடா…! இப்பத்தான் பொண்ணை புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்காரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *