Skip to content
Home » அன்பென்ற மழையிலே-16

அன்பென்ற மழையிலே-16

மழை -16

அழகர் அய்யா, மூன்று நாள் மருத்துவமனையிலிருந்தார். அம்மாவும், மகனுமான அவரை தாங்கினர். அவர் பதட்டமடைய கூடிய செய்திகளை முற்றிலும் தவிர்த்தனர். அன்பு எழிலை, உள்ளே அனுமதிக்கவும் யோசித்தான். ஆனால் மகளைப் பார்க்காமல் அழகர் இருப்பாரா, அவருக்கும் மகளிடம் பேச வேண்டியது இருந்தது. தங்கையிடம் மகளை  விசாரித்தார். 

“ப்ரீதியோட வீட்டுக்கு போயிருக்கு, நின்னதண்டிக்கு வந்துட்டோம். துணிமணியெல்லாம் வேணுமுல்ல” எனவும்,  

“துணிமணியா, எத்தனை நாளைக்கு இங்கன டேரா போடுறது. நான் நல்லா தான் இருக்கேன். மாப்பிள்ளை அவசரப்பட்டு கூட்டியாந்துட்டான். வீட்டுக்கு போகலாமத்தா , காசுக்கு புடுச்ச கேடு,  எம்புட்டு செலவு ஆகுது பார் ” என அங்கலாய்த்தார். 

“இருக்கட்டும் அண்ணன், முழு செக்கப் பண்ணிக்கிறது ஒன்னும் தப்பு இல்லை” 

“பாப்பாவை பார்க்கணும், போன் போட்டு வர சொல்லுத்தா. என் போன் வச்சுட்டு வந்துட்டேன். பாவம் புள்ளைப் பயந்து போயிருக்கும்” 

“நானும் போன் எடுத்துட்டு வரலை அண்ணேன் , அன்புக்கிட்ட சொல்றேன்” என அவன் வந்ததும், இந்திராணி சொல்ல, 

“வரட்டும் மாமா, சிங்கப்பூர் போற மேடமுக்கு நிறைய வேலை இருக்கும்ல.” எரிச்சலாக மொழிய. 

“அதெல்லாம் அண்ணன் வேண்டாம்னு சொன்னா எழிலு போகாது. நீங்க கடிசா சொல்லிப்புடுங்க அண்ணேன்” என்றார். 

“வரட்டும் ஆத்தா பேசுவோம். அது மனசுல என்ன நினைச்சிருக்கோ” என அவர் கண்கலங்க, 

“மாமா, இப்படி எமோஷனல் ஆகுறதா இருந்தா, அவளை வரவே விட மாட்டேன்” என்றான் அன்பு. 

“இல்லை சாமி, இல்லை. நான் கலங்க மாட்டேன். பாப்பாவை வரச்சொல்லு” என்றார்.

அன்பு சொல்லாமலே, அடுத்த நாள் அதிகாலையில், அவர்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு, வழியில் கோவிலுக்குச் சென்று அழகர் பெயரில் அர்ச்சனையும் செய்து பிரசாதத்தோடு எழில் மட்டும் கேபில் வந்து சேர்ந்தாள். 

அவள் தனியாக, இரண்டு கைகளிலும் பைகளைத் தூக்கிக்கொண்டு வருவதைப் பார்க்கவும் அன்புவுக்கு கோபம் அதிகமானது, வேகமாகச் சென்று வெடுக்கெனப் பைகளைப் பிடுங்கியவன், “ ப்ரீத்தி வரேன்னு தானே சொன்னா, அதுக்குள்ள எதுக்கு இந்த சீன்” என்றவன் அவள் பதிலுக்கும் காத்திராமல் லிஃப்டுக்குள் சென்று அவளுக்காகக் காத்திருக்க, மௌனமாகவே அவன் பின்னே சென்றாள். அவன் பைகளைத் தூக்கி வந்து அறையில் கொடுத்துவிட்டு, வெளியே சென்று நின்று கொண்டான். 

எழில், “அப்பா” என அவர் அருகில் சென்று, கைப்பையிலிருந்து விபூதியை எடுத்து அவருக்கு வைத்து விட்டாள். மகளை வாஞ்சையாய் பார்த்தவர், “பயந்துட்டியா ஆத்தா” என்றார். 

“ஆமாம் போங்க. எனக் கோபிக்க, அருகில் அமர்த்திக் கொண்டவர், “நீ நல்லா வாழுறதை பார்க்காமல் கண்ணை மூட மாட்டேன் ஆத்தா, பயப்படாதே” என்றார். 

அன்பு, வெளியேயிருந்து எட்டிப் பார்க்க, “நாங்க அழுகலை சாமி, நீ நிம்மதியா இரு” என மருமகனைக் கலாய்க்கவும், முறைத்து விட்டு ப்ரீத்திக்கு அழைப்பு விடுத்தான். 

“எழில் வந்துட்டாளா, சாரி ஏகே. இரண்டு பெரும் கிளம்பிட்டு இருந்தோம் அதுக்குள்ள, பிரேம்  சைட்ல ஒரு எமெர்ஜெனசி , உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னு, அவனையே வரச்சொல்லி, நான் அங்க போயிட்டு தான் வர்றேன்.” என விவரங்களைச் சொல்லிக் கொண்டே மருத்துவமனையில் காரை பார்க் செய்தாள்.

 ப்ரீத்தி, சைட்டுக்கு சென்று வர, எழில் கோவிலுக்குச் சென்று வந்திருந்தாள். இரண்டுமே அவன் வேலை,கடமை . பெண்மக்கள் பிரித்துச் செய்திருந்தனர். அப்போதும் ப்ரீத்தியை பாராட்டியவன், எழிலைக் குறை சொன்னான்.  

அன்பு, எழிலைக் கோபித்ததும், இந்திராணி மூலம்  அழகருக்குத்  தெரியும், மகளைப் பார்க்கவும், “என் மேல உள்ள பாசத்தில், உன்னைய அப்படி சொல்லிப்புட்டான். அதையெல்லாம் மனசில வச்சுக்காத ஆத்தா” என,  மகளிடம் அவன் சார்பில் சமாதானமாகப் பேச, 

“எப்பவுமே, அவர் அப்படி தான் பேசுவார். எனக்கு பழகிடுச்சுப்பா. ஆனால் நான் சிங்கப்பூர்ல வேலை கிடைச்சிருக்குன்னு சொல்லவும் தானே, உங்களுக்கு இப்படி ஆச்சு. சாரிப்பா. என்னை மன்னிச்சுடுங்க. இரண்டாவது தடவையும் நானே உங்க நெஞ்சு வலிக்குக் காரணமா போயிட்டேன்” கலங்கிய கண்ணோடு சொல்ல, 

“அப்படி சொல்லாத தாயி, எல்லாருக்கும் நல்லது செஞ்சு பார்த்துட்டேன். உனக்கு மட்டும் குறை வச்சுட்டேண்டு ஒரு விசனம்” என்றார். 

“ நான் ஆசைப்பட்டது மாதிரி படிக்க வச்சு இருக்கீங்களே அப்பா. அந்த படிப்பு தான், அது தந்த நம்பிக்கை, சிங்கப்பூர் வரைக்கும் பேச வச்சிருக்கு. உங்க கிட்ட சந்தோசமா சொல்ல வந்தா, நீங்க நெஞ்சை பிடிச்சுக்கிட்டிங்க” என குறை பட, மகளின் தலையை வாஞ்சையாய் வருடியவர், 

“எனக்கு என்னத்தா தெரியும், படிக்காத தற்குறி. என் மகள் உசந்த வேலைக்கு போறான்னு சந்தோசப்படுறதை விட்டு புட்டு, தூரமா போறாளேன்னு பயந்துட்டேன்” என்றார். 

“உங்க மருமகன் படிக்கச் சென்னை போனாரு, பெங்களூரு போனாரு, பிஸ்னஸ் பண்ண மும்பை போனாருன்னு ஊருக்குள்ள பெருமை பேசுனீங்க. அது மாதிரி மகளை சொல்ல உங்களுக்கு வாய் வரலை பாருங்க. “ அவள் குறை பட, 

“ம்க்கும், பாருவேன். அம்புட்டு மதி இல்லை. பொட்டப்புள்ளையிண்டா ஒரு ஆம்பளைக்கு கட்டிக் கொடுத்து, பிள்ளையை சுமக்கனுமுண்டு காலம் காலமா மண்டைக்குள்ள ஏத்திவச்சுப்புட்டாய்ங்கே” என்றவர், 

“ அந்த வேலை வேண்டாம்னு சொல்லிப்புட்டியா” என வினவ, 

“நீங்க வேண்டாம்னு சொன்னா, அதுவும் வேண்டாம்னு சொல்லிப்புடும் அண்ணேன்.  நம்ம புள்ளை நம்மளை மீறியா போயிடப் போகுது” என இந்திராணி இடைப் புகுந்தார்.

அழகர் மகளைப் பார்க்க, “வேண்டாம்னு சொல்றதுக்கும் கெடு இருக்குப்பா. “ எனவும், 

“ அந்த வேலையை ஒத்துக்க பாப்பா. வரோமுண்டு சொல்லிடு” எனவும் “ அப்பா” என ஆச்சரியமாய் அவர் கையைப் பிடிக்க, 

“ என்னண்ணேன் சொல்ற” என இந்திராணி அதிர்ச்சியடைந்தார். 

“ நிசமாத்தான்மா சொல்றேன். அந்த நாட்டில் வேலைக்குப் போக, நம்மூர் காரங்களே எம்புட்டு காசுபணம் செலவழிக்கிறாக. அதெல்லாம் என் மகள் திறமைக்குச் சன்மானமா தேடி வருதுண்டா பெருமை தானே” எனவும், 

“ தேங்க்ஸ் அப்பா” என அவரைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட, அருகில் அமர்த்தி கண்ணீரைத் துடைத்து விட்டவர், “ ஜாதகம், ஜோசியம், தோஷமுண்டு பார்த்து, உன் வாழ்க்கையை வீணாக்கிப் புட்டேன்” என்றார்.

“ அப்படியெல்லாம் சொல்லாதீங்க அப்பா” என அவள் மறுக்க, 

“ முழுசா பேச விடுத்தா” என்றவர், 

“ ஏதோ அன்புவோட புண்ணியத்தில் அதுகுள்ளையே இருந்து உழலாமல், தப்பிச்சு இங்குட்டு வந்தாச்சு. நீயும் தகிரியமான பொண்ணா நிண்டுட்ட. இந்தா இப்ப சிங்கப்பூர் போறேண்டு தகிரியமா சொல்ற பாரு. எனக்கு பெருமை தான். போயிட்டு வாத்தா. வாய்ப்பு இருந்தா, என்னையையும் உங்க அத்தையையும் கூட்டிட்டு போ. நாங்களும் வாறோம்” என்றார்.

“ கட்டாயம்பா. நான் போயி வீடெல்லாம் பார்த்து செட்டில் ஆகிட்டு உங்களையும் அத்தையையும் கூட்டிட்டு போறேன்” எனவும்

“ ஆமாம் இந்த கோணக் கொண்டை காரியத்தான் ப்ளேன்ல ஏத்தப் போறாங்களாக்கும்” இந்திராணி நொடிக்க, “ ஏத்துவாங்க அத்தை. நான் கூட்டிட்டு போறேன்” என வாக்கு தந்தாள்.

“ ஆத்தா நீ எந்த நாட்டுக்குனாலும் போயிட்டு வா. ஆனால் ஒரு கண்டிசன்” என்றார். 

“ சொல்லுங்கப்பா. உங்க பேர் கெட்டுப் போற மாதிரி எந்த கீழ்த்தரமான வேலையும் செய்ய மாட்டேன். அழகர் மகள் ஒழுக்கமான பொண்ணு,நல்ல டீச்சர்னு பேர் எடுப்பேன்பா” என்றாள்.

“ அது தான் தெரியுமே. நீ மறந்தும் தப்பு செய்ய மாட்ட. இது வேற விசயம்” எனப் பீடிகைப் போட்டவர், 

“ இப்ப இளந்தாரி வயசு சுயமா நிண்டுட்ட, வாழ்க்கை முச்சூடும் இப்படியே இருக்க முடியாது ஆத்தா. நாங்க அண்ணன் தங்கச்சி அனுசரணையா இருக்க மாதிரி, உன் அண்ணனுங்க இருக்க மாட்டானுங்க. நம்ம அதை எதிர்பார்க்கவும் முடியாது” என்றவர், 

“ ஜாதகம் ஜோசியம் பார்த்து நான் உன் வாழ்க்கையை வீணடிச்சு புட்டேன். இனி எந்த கட்டும் உனக்கு இல்லை. இனி வர்ற உன் வாழ்க்கையில உனக்கு பிடிச்ச மாதிரி, உன்னை பிடிச்ச மாதிரி  நல்லவனா வந்தா, திறந்த மனசோட ஏத்துக்கோ. சாதி,மதம், நாடு னு எதுவா இருந்தாலும் சரி தான். உனக்கு பிடிச்ச மாப்பிள்ளை தேர்ந்தெடுத்து சொல்லு, அப்பா கல்யாணம் கட்டி வைக்கிறேன்” எனவும், அவரை பெருமையாகப் பார்த்தாள். 

அன்பு காரிடாரில், ப்ரீத்தியுடன் நிற்பதைப் பார்த்து விட்டு, “நான் மாடன் லேடி எப்படி வேணாலும் இருப்பேன் , நீங்கக் கிராமத்தான் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் பெரிய விஷயம்னு நினைப்பீங்கன்னு சொன்னாங்கப்பா. அப்படி இல்லை, கிராமத்தானுக்கும் பரந்த மனசு உண்டுனு மறுபடியும் ப்ரூப் பண்ணிடிங்கப்பா. உங்க மகள் னு சொல்லிக்க  எனக்கு கர்வமா இருக்கு பா” எனப் பெருமையாகச் சொல்ல, 

“ரத்தம் சுண்டும் போது, எல்லாருக்கும் வர்ற ஞானம் தான்மா. நீ நல்லா இரு” என வாழ்த்தி இருந்தார். இந்த அப்பா, மகள் பேச்சை, காரிடாரிலிருந்து அன்புவும், ப்ரீத்தியும் கேட்டனர். 

“மாமாகிட்ட என்னை எப்படி போட்டு கொடுக்குறா பாரு. கிராமத்தான்னு நான் தான் சொன்னேன். மாமா இதை இவ்வளவு ஈசியா எடுத்துக்குவார்னு நான் நினைக்கலை. மகளுக்குச் சரியான வாழ்க்கை அமைச்சு கொடுக்கலைங்கிற கில்டினெஸ்ல அவ போக்குக்கு போறார். “ என குறைபட்டான்

“ ஏதேது பாப்பாஜி ஒத்துக்கிட்டாலும், நீ ஒத்துக்க மாட்டப் போல “ ப்ரீத்தி கேட்க, 

“ என் பேச்சைத் தான் அவ மதிக்க மாட்டேங்குறாளே. மதுரையிலிருந்து தப்பிச்சு வர என் உதவி தேவை பட்டுச்சு யூஸ் பண்ணிக்கிட்டா. அந்த தேவை முடிஞ்சுது, அத்துவிட்டு போயிட்டே இருக்கா. கிளிக்கு றெக்கை மொளைச்சுடுச்சு, பறந்து தானே போகும்” என்றான்.

“அவள் வாழக்கையில் மூவ் ஆன் ஆனால் நல்லது தானே.மத்த விஷயத்தில் பிராட் மைண்டடா இருக்க நீ,  எழில் விஷயத்தில் சின்ன பையனா மாறி, வார்த்தைக்கு வார்த்தை அவளோட சண்டை போடுற” 

“தொட்டில் பழக்கம், போகாது” என்றான். அதன் பின் மேலும் ஒருநாள், மருத்துவமனையில் வைத்திருந்து, அழகர் போகலாம் எனப் படுத்திய பாட்டில் வீட்டுக்கு அழைத்து வந்தனர். 

சிங்கப்பூர் போக மூன்று மாதம் இருந்தாலும், இந்த மாதமே சென்னையை விட்டுக் கிளம்புவது என எழிலரசி முடிவெடுத்தாள். 

“மதுரைக்கு போயி, இரண்டு மாசம் இருந்துட்டு, சித்திரைத் திருவிழா எல்லாம் பார்த்துட்டு, அங்கிருந்தே சிங்கப்பூர் போயிக்கிறேன் பா “ எனவும், 

“நல்ல யோசனை தான் ஆத்தா” என்றவர்,தங்கையிடமும், மருமகனிடமும் பேசினார். 

“ இந்த புள்ளைக்காக தான் இங்குட்டு வந்தேன், அதுவே கிளம்புதே, நானும் ஊரைப் பார்க்க போறேன்பா” அன்புவிடம் சொல்ல, 

“நான் உங்களுக்கு ஒன்னும் இல்லையா மாமா, நீங்க கிளம்புனா அம்மாவும் உங்க பின்னாடியே வந்துடும் ” எனக் குறை பட்டான். 

“ நீ எனக்கு எல்லாமுமா இருக்க போயி தானே சாமி, நொந்துபோன என் மகளை கூட்டிட்டி வந்து, உன் வீட்டில் உட்கார்ந்து இருக்கேன். நீ இளைப்பாறும் மரம் , அதுல நானோ, என் மவளோ கூடு கட்டி வசிக்க முடியாது. உங்கம்மா இனி உன்கூட தான் இருக்கும், பண்டிகை திருவிழாண்டா , பிறந்த வீட்டுக்கு வந்துட்டு போகும் அதுல எந்த மாற்றமும் இல்லை. நீயும் ப்ரீத்தியைக் கல்யாணம் கட்டிக்கிட்டு காலாகாலத்தில செட்டில் ஆகுற வழியை பாரு. தேதி பாரு, இங்குட்டு கல்யாணமுண்டா குடும்பத்தோட வந்து சீரும் சிறப்புமா வந்து செஞ்சு வைக்கிறோம், இல்லை நம்ம ஊருல வைக்கனுமுண்டாலும் சொல்லு, போன கையோட கல்யாண வேலையை ஆரம்பிச்சுடுறேன்.” என்றார். 

“அரசி செட்டில் ஆகாம, நான் எப்படி மாமா?” என்றான். 

“ இங்க தான் நீ தப்பு பண்ற, அது என் கடமை, நான் பார்த்துக்குவேன். உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதும் எனக் கடமை தான், அதைச் செய்ய விடு. இதையும்,அதையும் முடிச்சு போடாத. ப்ரீத்தி நல்ல புள்ளையுங்காட்டி இத்தனை வருஷம் பொறுத்துக்கிட்டு இருக்கு. அதையும் ரொம்ப சோதிக்கக் கூடாது.” என்றவர், “பாப்பாகிட்ட பேசிட்டேன். இப்போ இல்லையினாலும், இன்னும் இரண்டுவருசம் கழிச்சு அது கல்யாணத்துக்குச் சம்மதிக்கும். நீ உன் வாழ்க்கையை பாரு” என அறிவுறுத்தினார். 

எழிலரசி அடுத்த பத்து நாட்களில், பள்ளியிலிருந்து முறையாய் ரிலீவிங் ஆர்டர் வாங்கி, சிங்கப்பூர் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்தாள் . 

அன்பு இல்லத்தில் தான் இருந்தே சுவடே  இல்லாமல் பழைய துணிகள் புத்தகங்களைக் கூட தேவைப் பட்டோருக்குக் கொடுத்தாள். 

“ஏத்தா, திரும்பி இங்குட்டு வரவே கூடாதுங்கிற முடிவில் இருக்கியா. உன் சாமான் எல்லாத்தையும் காலி பண்ற “ இந்திராணி கேட்க, 

“பழசைத் தான் அத்தை கொடுக்குறேன். மத்ததை மதுரையில கொண்டு போய் வச்சுடுவேன்” என்றாள். 

ப்ரீத்திக்கு , எழிலின் வளர்ச்சி எதிர்காலமே இதில் இருக்கிறது எனத் தெரிந்தாலும், இரண்டு வருடமாக ஒரே வீட்டில் சகோதரியாய் பழகியவளைப் பிரிவதில் சோகமாக இருந்தாள். 

“எழில், நீ கிளம்பறது எனக்கு நிஜமாவே கஷ்டமா இருக்குப்பா, ஏகே வை கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்கயே செட்டில் ஆகிடுவேன்.” என்று சொல்ல, 

“பைத்தியம் மாதிரி பேசாத. அவருக்கு என் மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்லை. சின்ன பிள்ளையிலிருந்தே என் மேல எரிஞ்சு, எரிஞ்சு தான் விழுவார். நான் இங்க இருந்தா, நீங்களும் உங்க வாழக்கையை ஆரம்பிக்க மாட்டிங்க. அந்த பிரேம் வேற, உன்னை எப்படா கொதித்து போகலாம்னு பார்த்துட்டு இருக்கார். மரியாதையா இரண்டு பேரும் லேட் பண்ணாமல் கல்யாணம் பண்ணிக்குங்க. நான் திரும்பி வரும் போது, என் ஸ்கூல்ல உன் பிள்ளையைப் படிக்க வைக்கணும்.” எனவும், 

“உன் கற்பனை எல்லாம் நல்லா தான் இருக்கு, நடைமுறைக்கு ஒத்து வருமான்னு தான் தெரியலை” என்றாள் ப்ரீத்தி. 

“ஏன் நடக்காது, எங்க அத்தை நச்சரிச்சே நடத்தி வச்சுருவாங்க” எனச் சிரித்தாள். 

“ த்ரீ மந்த்ஸ் கழிச்சு தானே ஒர்க்ல ஜாயின் பண்ணனும், இப்பவே ஏன் இந்த வீட்டை காலி பண்ற” என வினவ, 

“ மதுரைக்கு போகணும், அண்ணன், அண்ணிங்க, அக்கா, மாமா குட்டிசுங்க, அப்பாவோட சேர்ந்து சித்திரைத் திருவிழா பார்க்கணும். இரண்டு வருசமா என்னால அப்பாவும் அதெல்லாம் மிஸ் பண்ணிட்டாங்க. முடிஞ்ச வரைக்கும் எல்லா பொழுதுகளையும் , ரீ கிரியேட் பண்ணனும்” என கண்ணில ஆசையோடு சொல்ல, 

“ஹான், ஒரு சிலரைத் தவிர மத்த எல்லாரும் நைஸ் பீப்பிள் தான்” என ப்ரீத்தியும் ஆதரித்தாள்.

அத்தையிடமும், ப்ரீத்தியிடமும் இயல்பாக உரிமையாகப் பேசிய எழிலுக்கு அன்புவிடம் பேச மட்டும் தைரியம் வரவில்லை. கண்ணாமூச்சி ஆட்டம் போல் அவனைத் தவிர்த்து சுத்திக் கொண்டே இருந்தாள். ஆனாலும் சொல்லித் தானே ஆகவேண்டும். 

மதுரைக்குக் கிளம்பும் முதல்நாள், வீட்டு உபயோகத்துக்கென அன்பு கொடுத்திருந்த டெபிட் கார்டை அவனிடம் திருப்பி கொடுத்து விட்டு, சமயத்தில் உதவி செய்தமைக்காக நன்றி நவிலக் காத்திருந்தாள்.

அன்பு செவி கொடுப்பானா???

மழை பொழியும். 

2 thoughts on “அன்பென்ற மழையிலே-16”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *