Skip to content
Home » அன்பென்ற மழையிலே 22 -final

அன்பென்ற மழையிலே 22 -final

மழை -22- final 

ப்ரீத்தியின் குழந்தையை பார்க்க வந்த எழிலரசிக்கு , குழந்தையின் தகப்பன் பிரேம் என்றதில் பெரிய அதிர்ச்சி. அன்பரசன் மாமன் மகளை அழைத்து சென்று, விளக்க உரை கொடுத்து, தன் காதலையும் சொல்லி மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தான். 

ஆனாலும் எழில் அப்பா, அத்தை, ப்ரீத்தி ஆகியோரிடம் பாரா முகமாக தான் இருந்தாள். குழந்தையை பார்க்க வந்த உறவினர்கள் கிளம்பியிருக்க, இந்திராணி, அழகர் மட்டுமே உடனிருந்தனர். பிரேம் கையில் இருந்த குழந்தையை பார்க்கவும், மற்றது எல்லாம் மறந்து எழில் கொஞ்ச ஆரம்பித்தவள், “பேபியை நான் தூக்கலாமா, அழுவாளா” என பல சந்தேகம் கேட்க, “நானே தூக்குறேன். நீங்க தூக்குறதுக்கு என்ன” என்றான் பிரேம். 

எழிலை  ஷோபாவில் அமர்த்தி, இந்திராணி அவள் மடியில் குழந்தையை வைத்து விட்டு “பட்டு குட்டி, செல்ல குட்டி, பூஜ்ஜு குட்டி” என கொஞ்சியதை பார்த்துக் கொண்டே முன்னறைக்கு சென்றார். அங்கு அழகரும்,அன்புவிடம் மகளின் மனமாற்றத்துக்கான மகிழ்ச்சியை, “ சாதிச்சிட்டா மாப்பிள்ளை” என கட்டியணைத்து பாராட்டிக் கொண்டு இருந்தார்.

அன்பு, உள் அறைக்கு வந்து, எழில் அருகில் ஷோபாவில் அம்ர்ந்து, “பியூ” என குரல் கொடுக்க, குழந்தை லேசாக கண்ணை திறக்க முயன்றது. 

எழிலுக்கு ஒரே ஆச்சரியம்,”உங்களை எப்படி அடையாளம் கணடுக்குது” என வினவ, 

“ அவங்க மம்மி டம்மில இருக்கும் போதே, தினம் பேசுவோம். நாங்க பிரண்ட்ஸ்” என அன்பு சொல்ல , மற்றொரு சிரிப்பு.

“ அவுங்க மம்மியை மாதிரியே, ஏகே ஜபம் பண்ணும்” என ப்ரேம் குறைபட, 

“ நீ பிஸ்னெஸ் டூர் சுத்துன. ஏகே தானே கூடவே இருந்து பார்த்துக்கிட்டான்” என ப்ரீத்தி சொல்ல, 

“மே, குச் நஹி போலா” என்றான்.

எழில், “பியூ பேபி,உங்க அம்மாகிட்ட , எழிலம்மா கோபமா இருக்கேன் சொல்லிடு. அவ ஒன்னும் என் கூட பேச வேண்டாம்” என சொல்ல, அது அழுதது. 

“ அம்மாவை சொன்னா கோபம் வருதோ” என அவள் கேட்க, 

“ சும்மா இருடி” என எழிலை அடக்கிய அன்பு, “ ப்யு பேபி, அம்மா, சும்மா சொல்றா. ப்ரியு மம்மியை யார்வது கோவிப்பாங்களா. அவுங்க க்யுட் பேபியோட மம்மி இல்லை” அன்பு பேச, குழந்தை சிரிக்க 

“ இப்படி தாங்க மயக்கி வச்சிரீக்குங்க” என ப்ரேம், எழிலோடு கூட்டணி போட்டான். 

ப்ரித்தி “சாரிடி” என கேட்கவும்,

“உன் ஷாதி ல, என்னை தள்ளி வச்சுட்டே இல்லை” என எழில் வருந்த, 

“ஒரு பயம் தான். நீங்க தானே முதல்முதல்ல இந்த பிரேம் உன்னை கடத்திட்டு போயிடுவான்னு சொன்னது.” என்றான் பிரேம். 

“நான் சொன்னது சரிதானே” அவள் கேட்க, 

“யார் இல்லைனு சொன்னா. எனக்கு ப்ரோபஸ் பண்ற வேலையை ஈஸி ஆக்கினது நீங்க தான்” என்றான். 

இருவருமாக, அன்பு, ப்ரீத்தியை  ஓட்டி தள்ள,  “ரொம்ப பண்ணாதீங்க, உங்க ரெண்டு பேருக்கும் வாழக்கை கொடுக்க, நாங்க பண்ண தியாகம் அது” என்றாள் ப்ரீத்தி. 

“சும்மா, உருட்டாதே” என்ற பிரேம், அவர்களுக்குள் நடந்த சம்பாஷணையில்,  அன்பு சென்சார் செய்திருந்த முத்த காட்சிகளை எல்லாம் மிகைப்படுத்தி சுவாரஸ்யமாக சொல்ல, எழில் விழுந்து விழுந்து சிரித்தாள் . 

முன்னறையிலிருந்து அவள் சிரிப்பு சத்தை கேட்ட, அழகரும், இந்திராணியும் உணர்ச்சி வயப்பட்டு பேசிக்கொண்டனர். 

“எழிலு இப்படி சிரிச்சு எம்புட்டு காலம் ஆச்சு இல்ல அண்ணேன்?’ 

“ஆமத்தா, நான் தான் ஜாதகம், ஜோசியமுண்டு புள்ளையை ரொம்ப படுத்தி புட்டேன். இந்த புள்ளை அன்புவை மனசுல நினைச்சே மருகிக்கிட்டு இருந்திருக்கும் போல. “ என்றார். 

“ நமக்கு நம்பகமான ஜோசியர், மாங்கல்ய தோஷமுண்டு சொல்லும் போது, நீங்களும் என்ன அண்ணன் செய்வீங்க. அன்புவை விட்டு கொடுப்பிங்களா, எழிலை விட்டு கொடுப்பிங்களா. நீங்க செஞ்சது சரி தான். ” என அண்ணன் செயலுக்கு தானே வக்காலத்து வாங்கியவர்,”தோஷம் போறதுக்குன்னே கந்துவட்டி காரன் வந்திருப்பான் போல” என அவன் கதையை பேசினர்.

“ அவனுக்கும் பழக்கடை வச்சு கொடுத்திங்க பாருங்க” என இந்திராணி சொல்லவும்

“ அது உன் மகனும், மருமகளும் சொன்ன யோசனை. அவன் தப்பு பண்ணும் போது தண்டிச்சு. திருந்த நினைக்கும் போது அரவணைச்சு, பொழப்புக்கு வழியை காட்டுச்சுங்க. இப்ப நல்லா இருக்கான்” என்றார்.

“ நாலு பேரு வாழ்த்து, இதுங்களை ஒன்னு சேர்த்து நல்லா வாழ வைக்கட்டும். விக்கிரவாண்டி மச்சானுமில்ல நமக்கு சப்போர்ட்டா நிக்கிறாரு” 

“ஆமாம் ஆத்தா, மாப்பிள்ளை , எழிலு சிங்கப்பூர் போன பிற்பாடு , எழிலை கட்டிக்கிறேண்டா சொல்லும் போது கூட, நான் தயங்க தான் செஞ்சேன். மச்சான் தான், தகிரியமா செய்யிண்டாரு. “ என்றவர், 

“மாப்பிள்ளை நேசமணிண்டு , ஒரு நாடகம் ஆடுனான் பாரு. எனக்கு பப்பாகிட்ட உண்மையும் சொல்ல முடியாமல், இவனுக்கும் ஜால்ரா போட்டுக்கிட்டு, கூத்து கட்டுற மாதிரி தான் இருந்தது” என சொல்லி சிரிக்க, இந்திராணியும் அண்ணன் பேச்சுக்கே சிரித்து மகிழ்ந்தார். 

வெளியே அண்ணன் , தங்கை சிரிப்பை கேட்ட ப்ரீத்தி, “இவுங்க சந்தோஷத்துக்கு, நான் எதை வேணம்னாலும் விலையா கொடுப்பேன் எழில். நீ பேசலைனா கூட ஓகே. “ என்றாள். 

எழிலின் கண்ணிலும் நீர் வர, அன்பு அவளை அணைத்துக் கொண்டான். பியு ஒரு முறை பால் குடித்து விட்டு தொட்டிலில் சமத்தாக தூங்கியது. 

ப்ரித்தி “எங்க மேரேஜ் டிசிஷன் எடுக்கவும், மம்மிஜி, பப்பாஜிகிட்ட எப்படி சொல்றதுன்னு தான், எங்களுக்கு ரொம்ப தயக்கம். மம்மிஜிகிட்ட தான் முதல்ல சொன்னோம். பிரேமை குறுக்கு விசாரணை பண்ணி, தாதிஷாவை மீட் பண்ணி , என் அண்ணா, ஜக்கு வீர்ஜியை வரவழைச்சு பேசி, ரெண்டு பேருமா நிறைய  வேலை செஞ்சாங்க. எங்களுக்கு பிராமிஸ் தான் ரொம்ப முக்கியம். ஊர்காரங்க, எங்க பொண்ணுக்காக உன்னை கைவிட்டுட்டோம்னு பேசுவாங்கன்னு தயங்கினாங்க.  பிரேம் தான் அவங்களையும் பேசி சரி கட்டினான். எழில்கிட்ட ஏன் சொல்லக்கூடாதுன்னு ஒரு டிஸ்கேஷன் ஓடிச்சு. அப்புறம் உன் மனநிலையை எடுத்து சொல்லவும், பப்பாஜியும் ஆமாம்னு சொல்லி, ஏகே  நேசமணியா உன்னை டார்ச்சர் பண்ணி” எனவும் அவன் முறைக்க,”லவ் டார்ச்சர்” என சிரித்தவள், “அவ்வளவு சுலபமா எதுவும் நடந்துடலை. 

வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு , ஜோடியை மாத்திக்கிட்டாங்கன்னு வித்தியாசமா, கேலியா தெரியலாம். இதில ஒவ்வொருத்தர் மனசும் சம்பந்த பட்டு இருக்கே. யார் மனசும் நோகாமல் இருக்கணும்னு ரொம்ப கேர்புல்லா மூவ் பண்ணோம்” என்று சொல்ல, 

அவள் அருகில் சென்று ப்ரீத்தியை கட்டிக் கொண்டவள், 

“தேங்க்ஸ், தாங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்” என்று சொல்ல, 

“அவளுக்கு முத்தம் கொடுக்காதே, எனக்கு தான் கொடுக்கணும்” என அன்பு கலாட்டா செய்தவன்,  பிரேமிடம்” இப்போ டெஸ்ட் வையி, என் அழகியை, அரசியை, எந்த கிஸ் வேணும்னாலும் அடிக்க ரெடி” என்றான். 

“அன்பு சவால் விடுறது பார்த்தா, ட்ரைனிங் எடுத்துட்டான் போல” என பிரேம் கலாய்க்க. எழில் குழந்தையை கொஞ்சும் சாக்கில் குனிய, அன்பு அவளருகில் உரசிக் கொண்டு வந்து நிற்க 

“ செம லவ்வுப்பா. பாரு பேபி நாலு வருசம் காத்திருந்தியே. இந்த அன்பு உன்கிட்ட இப்படி நடந்திருக்கானா” ப்ரேம் கேட்க, 

“ அப்போ போலே பாபாவா இருந்தான். இப்போ பலே பாபாவா மாறிட்டான். எல்லாம் எழில் மேஜிக்” என பேசி மகிழ்ந்தனர். 

மூன்று மாதங்கள் கழித்து எழிலரசி, சிங்கப்பூர் வேலையை முடித்துக் கொண்டு வந்து, முன்பு  வேலை பார்த்த பள்ளியில் தலைமை பொறுப்பு ஏற்றிருந்தாள். 

சோழவந்தானில் உள்ள பெரிய திருமண மண்டபத்தில், அன்புக்கரசன், எழிலரசி திருமணம் கோலாகலமாக நடந்தது. 

ப்ரீத்தி, பிரேமின் குழந்தை நிம்ரித் ப்யூஸ் ராணி , தாய் வழி , தந்தை வழி பாட்டி பெயர்கள் மட்டுமின்றி இந்திராணி அம்மாவின் பெயரில் உள்ள ராணியையும் சேர்த்து கொண்டு , அன்பு இல்லத்தின் குட்டி இளவரசியாய் அவர்கள் மனதை ஆண்டு கொண்டு இருந்தது. ப்யுஸ் மண்ணில் இறங்கி வந்த தாரகை போல், குட்டி சாய்வு தொட்டிலில் ,பஞ்சு மெத்தைக்குள் பொம்மையாக தூங்கி கொண்டிருக்க, அது சிணுங்கும் பொழுதெல்லாம், அதன் அம்மா ப்ரீத்தியை விட, பிரேம், அன்பு, எழில் மூவரும் தான் அதிகம் சிணுங்கினர். 

அழகர் அய்யாவின் மகன்கள்,மருமகள்கள், மகள் மருமகன் பேரப்பிள்ளைகள்,  மச்சினன்,சுற்றம், நட்பு என எல்லோரும் மனமகிழ்வுடன் திருமண விழாவில் கலந்து கொண்டனர். 

அன்புவின் கட்டளை படி அழகரை யாரும் ஒரு வேலை செய்ய விடவில்லை. 

முன்பு மீனாட்சி அம்மன் கோவிலில் ப்ரீத்தி கையில் ஒரு அம்மா கொடுத்த பொன் தாலியை அனபு இன்னும் பத்திரமாக வைத்திருந்தான். பஞ்சாபி ராஜஸ்தானி முறைகளில் பொன் தாலி அணியும் பழக்கம் இல்லாததால், அதனை எழிலரசிக்கு என பத்திர படுத்தி வைத்திருந்தனர். தற்போது அதே தாலியை புது மஞ்சள் கயிறு கோர்த்து தயாராக வைத்திருக்க , அன்பு கட்டளையின் பேரில் அன்பழகர் தான் தாலியை எடுத்துக் கொடுத்தார். 

அதை வாங்கி, சுற்றமும் நட்பும் வாழ்த்த, அன்பரசன், தன்னையே நினைத்திருந்த மாமன் மகள் எழிலரசி கழுத்தில் , மனதார வேண்டி காதலோடு போன் மஞ்சள் தாலியை கட்டினான்.

ப்ரித்தி, ப்ரேம் ஜோடி குழந்தையோடு பூமழை தூவி உறவினும் மேலான நண்பர்களை வாழ்த்தினர்.

இந்திராணி, அண்ணன் அழகரின் கையை பற்றி, “ என் மகனை படிக்க வச்சு ஆளாக்கி, உங்க மகளையும் கட்டிக் கொடுத்து, என்னை உசந்த இடத்தில் வச்சுட்டிங்க அண்ணேன்” என மகிழ்ந்தார்.

அன்பு, கண்கலங்கி இருந்த எழிலரசியின் கையை இறுக பற்றி, அழுத்தம் கொடுக்க, “அன்பு மழையில் நனையத்தான். இத்தனை வருஷம் தவமிருந்தேன்” என்றாள்.

“ நம்ம எல்லாருமே, மாமாவோட அன்பில் விளைஞ்சவங்க தான். அவரை மாதிரியே. நம்மளும் வாழ்வோம். மத்தவங்களையும் வாழ வைப்போம்” என்றான்.

அன்பு மழை இவ்வையகம் எங்கும் பொழியட்டும். 

11 thoughts on “அன்பென்ற மழையிலே 22 -final”

  1. Sws-8

    sws- 8. i am Deepa senbagam.
    i have a simple question. ஒவ்வொரு தளத்திலும் வந்து எழுதும் போது , புதிய வாசகர்களை தேடியே பயணிக்கிறோம். எனக்கு பின்னூட்டம் இட்டவர்கள் , எனக்கு புதிய வாசகர்களே. இதற்கு முன் என் கதையை வாசித்து இருக்கீங்களா. தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

  2. Oru azagana….arumaiyana……anbu ullathill… ezil kolammitta….preethiyugamana…..Prem potta…Kathal Kathai….superb sis….🥰🥰💞💝💝💝💝❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *