Skip to content
Home » அன்பென்ற மழையிலே … 3

அன்பென்ற மழையிலே … 3

மழை-3 

அன்பழகன், அதுதான் அழகர் அய்யாவின் முழு பெயர். அன்பழகன், அழகனாகி, வயது மூப்பின் காரணமாக அழகன், அழகர் ஐயா ஆகி விட்டார். அண்ணன் மேல் உள்ள பிரியத்தில் மகனுக்கும் அவரின் முன் பாதியோடு அரசுவை சேர்த்து அன்பரசன் எனப் பெயரிட்டார் இந்திராணி. அவனும் மாமன் மெச்சிய மருமகனாய், கல்வி கேள்விகளில் தேர்ந்து, மும்பையில் கன்ஸ்ட்ரக்ஸன் கம்பெனி வைக்கும் அளவு வளர்ந்துள்ளான். எம் பி ஏ படிக்கும் போதே பகுதி நேரமாக சிவில் இன்ஜினியரிங் வேலையையும் செய்தவன், கோர்ஸ் முடித்து கேம்பஸில் எம் என் சி கட்டுமான கம்பெனியில் பணியில் அமர்ந்தான்.  மூன்று வருடத்தில் தொழில் பழகி, சப் கான்ட்ரேக்ட்டுகளாக எடுத்துச் செய்து, ப்ரீத்தியுடன் சேர்ந்து தனி கம்பெனி  ஆரம்பித்திருந்தான். 

பஞ்சாப் அமிர்தசரஸைப் பூர்வீகமாகக் கொண்ட ப்ரீத்தியின் பங்குக்கு அவளுடைய அண்ணன் சில லட்சங்களை முதலீடாகச் செய்ய, அவனுடைய மூன்று வருடச் சேமிப்பு மற்றும் பத்து லட்சம் வரை அவன் நிலத்தை வைத்து அழகர் பணம் புரட்டிக் கொடுக்க, அதையும் வைத்து மும்பையில் தொழில் தொடங்கி இருந்தான். 

கட்டுமான தொழில் அவன் பொறுப்பு எனில், அதை மேலாண்மை செய்வது அவளின் பணி. இவர்களுக்குக் கீழ் பலர் வேலை பார்த்தனர். அவர்களுக்கான பிரத்தியேகமான கான்ட்ரேக்ட் தொழிலாளர்களும் இருந்தனர்.

அன்பு, பொறியியல் படிப்பை அழகரின் செலவிலல் படித்தாலும், எம்பிஏ படிப்பை  வேலைப் பார்த்துக் கொண்டே தன் செலவில் தான் படித்தான்.

தொழிலுக்குமே அழகர் இரும்பாடியில் உள்ள நிலத்தை வைத்துத் தான் ஒரு வருடம் முன்பு  பணம் புரட்டிக் கொடுத்து இருந்தார். அதற்கு வட்டி கட்டி வருகிறான். அடுத்து ஒரு ப்ராஜக்ட் வந்தால் கடன் அடைபட்டு விடும். இதைப் பற்றிய புரிதல் இல்லாத அழகரின் மகன்கள் மற்றும் மூத்த மருமகன் பிரச்சினை கிளப்ப, அழகர் தன் சொத்தை பங்கு பிரித்துக் கொடுத்து விட்டார். 

இதோ எழிலரசிக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கும் அவளுக்குத் தரப் போகும் வரதட்சணையில் தான் குறி. கோகிலாவின் புகுந்த இடம் வசதியானது என்றே சம்பந்தம் பேச வந்தனர். 

அழகர் இருக்கும் வீடு, பங்கு நிலம் எல்லாம் தனக்குப் பின் மகளுக்கு என்றார். “அது வரும் போது வரட்டும். கல்யாணத்தை சிம்பிளா நடத்தினா போதும். அதற்கு பதில் பத்து லட்சம் பணமாக கொடுத்துடுங்க” என்றிருந்தான் மாப்பிள்ளை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாம் சரியாக வர, அழகரும் ஒப்புக் கொண்டார். 

நாகு, தாமு கல்யாண வேலைகளைப் பகிர்ந்து உடல் உழைப்பைத் தந்தாலும், நகை பணம் விசயத்தில் ஒதுங்கி நின்றனர். “ அன்பு மாமன் மகளைத் தான் கட்டலை. மும்பையில தொழில் செய்யிறான். மாமன் கேட்டால் கட்டாயம் பணம் தருவான். நீ கேளு, இங்கிருந்து அவனுக்குப் போன பணம், அவர் மகளுக்கு தானே வருது. இன்ஜீனியரு தரட்டும். “ என கோகிலாவும் , கந்தவேலை ஏற்றி விட்டு இருந்தாள். அவனும் இது தான் சாக்கு என, லேவா தேவி தொழிலுக்கு உதவியாக இருக்குமெனப் பெரிய தொகையைக் கேட்டு விட்டான். இதோ ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. 

எழிலரசி, பெயருக்கேற்ற அழகின் அரசி தான். ஐந்தரையடி உயரத்தில் கோதுமை நிறம், லட்சணமான முகம், செதுக்கிய உடலமைப்பு எனக் கிராமத்து தூய காற்றைச் சுவாசித்து, இயற்கை வணப்போடு இருப்பவள் . நீண்ட முடி, பூசினாற்போல தேகம். நேர்கொண்ட பார்வை, எளிதில் உணர்வுகளை வெளிக்காட்டாதவள்.  நேர்த்தியாகச் சேலை உடுத்தி, ஆங்கில ஆசிரியைக்கே உரிய மிடுக்கோடு அமரிக்கையாகத் தான் இருப்பாள். மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்ததால், நுனி நாக்கு ஆங்கிலமும், அழகிய கையெழுத்தும் வாய்க்கப் பெற்று இருந்தது. ஜாதகம் சொதப்பியதால் திருமணம் தள்ளிப் போனது. அவ்வளவே. இன்று மஞ்சள் பூசி, பச்சையில் சிவப்பு பார்டர் வைத்த பட்டுடுத்தி அம்மாவின் நகைகளைப் பூண்டு, தலை நிறைய மல்லிகை சூடி, அம்சமாகவே இருந்தாள்.

பந்தற்கால் ஊண்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க, விமானநிலையத்திலிருந்து அமர்த்தப்பட்ட காரில் ப்ரீத்தியோடு வந்து இறங்கினான் அன்புகரசன்.  வாசலிலேயே எல்லோரும் நின்று கொண்டிருக்க, “ வா மாப்பிள்ளை. வாவா” என அழகரும் அவர் மகன்களும் முகமன் கூறி வரவேற்க, வீட்டு பெண்களின் கண்கள் பேண்ட் குர்தியில் வந்த ஹிந்தி கார பெண்ணிடமிருந்தது. 

சுண்டினால் ரத்தம் வரும் பால் வெள்ளையில், பொம்மை போல் இருந்தவளைப் பார்த்தவர்கள், “ அன்பு பய இந்த பொண்ணுகிட்ட விழுந்ததில் தப்பே இல்லடா’ என்ற கமெண்டோடு வாயடைத்துப் போயினர். 

“ஆத்தி, இது என்ன மைதா மாவு கணக்கா இம்புட்டு வெள்ளை” எனப் பெண்கள் அதிசயித்தனர். 

“மெழுகு பொம்மையும், கருங்கல் சிலையையும் மாதிரி, இதென்ன ஜோடி” எனக் கேலியும் செய்தனர். 

அன்பு தன் மாமாவுக்கு கை குவித்து வணக்கம் வைக்க, ப்ரீத்தி “ சன்ஸ்ரியாகால், வணக்கம் பாப்பாஜி” எனக் காலைத் தொட்டுக் கும்பிட, 

“ நல்லா இருத்தா” என வாழ்த்தினார் அழகர்.  முதல் விக்கெட்டை வீழ்ந்திருக்க, ப்ரீத்தி, அன்பு அறிமுகப் படுத்தியவர்கள், மூத்தவர்களாக இருந்தால், காலைத் தொட்டுக் கும்பிட்டு வணக்கம், சன்ஸ்ரியாகால் எனச்  சிரித்தபடி சொல்ல, எல்லா விக்கெட்டும் வீழ்ந்து இருந்தது. 

விக்கிரவாண்டியிலிருந்து கலையரசி  கணவன், பிள்ளை மாமியார் மாமனாரோடு வந்திருந்தாள். அவர்களுக்குத் தாய்மாமா வீடும் அது தான். நாகுவின் மனைவி சுகந்தியும் தாய் மாமன் மகள் தான்.

தாமுவின் மனைவி கோகிலா அந்நிய சம்பந்தம், மூத்த மச்சினனும், நாத்தனாரும் ஒரே வீட்டில் பெண் கொடுத்து எடுத்திருப்பதால் எல்லாவற்றிலும் ஒத்துப் போனார்கள். தன் கட்சிக்கு வலு சேர்க்கவே கோகிலா, ஒன்றுவிட்ட தம்பியின் சம்பத்தத்தை இளைய நாத்தனாருக்குக் கொண்டு வந்தாள். அன்புவுக்காக செலவழித்த பணத்தைத் திரும்ப வாங்க வேண்டும் என்ற நோக்கிலேயே காய் நகர்த்திக் கொண்டு இருந்தனர்.

“ அம்மா, எங்க அத்தாச்சி?” அன்பு கலையரசியைக் கேட்க, “எழிலு ரூம்பில இருக்காங்க” என்றாள் அவள். 

“ மாப்பிள்ளை, குளிச்சு ரெடியாகி வந்துடு. முகூர்த்தக் கால் ஊண்டப் போறோம்” என அழகர் அழைக்க,

“ அம்மாவை பார்த்துட்டு வந்துடுறேன் மாமா. நீங்கள் உங்க செட்யூல் படி ஃபங்க்சனை நடத்துங்க. நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்” என்றவன்

“ ப்ரியூ வா” என அவளை அழைத்துக் கொண்டு, பேக் பேகோடு அழகர் வீட்டுக்குள் சென்றான்.

ஒரு காம்பவுண்டுக்குள், ஐந்து வீடுகள் தனித் தனியாக இருந்தன. பெரிய வீட்டில் அழகரும், எழிலும், பெரும்பாலும் இந்திராணியும் அங்கு தான் இருப்பார். ஒரு வீட்டைத் தங்கைக்கு ஒதுக்கி இருந்தவர், மகன்களுக்குத் திருமணம் ஆகவுமே தனித் தனி வீட்டில் குடி வைத்து விட்டார். மற்றொரு வீட்டைக் கலையரசிக்குக் கொடுத்திருக்க, அதன் வாடகையை அவள் வாங்கிக் கொண்டு இருந்தாள்.

அழகர் வீடு மட்டுமே இரண்டு படுக்கை அறை ஹால் கிச்சன் வராண்டா என இருக்கும். மற்றவை ஒற்றை படுக்கை அறை கொண்ட வீடுகள் தான். 

அன்பு, ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு, அழகர் வீட்டுக்குள் செல்ல, இரண்டாவது படுக்கை அறையில் எழில் தயாராகிக் கொண்டு இருந்தாள். 

எழிலின் அறைக்குள் நுழைந்த ப்ரீத்தி , “ ஓ, மே மர்ஜாவாங். எழில். யூ லுக் ஸோ ப்யூடிஃபுல். பஹீத் சுந்தர் லக்தீஹை யார். “ எனக் கட்டியணைத்து, தனது அன்பை வெளிப்படுத்தியவள், 

“ நான் மட்டும் லட்காவா இருந்தா, துஜே உடாகர் லே ஜாவுங்கி.(உன்னைத் தூக்கிட்டு போயிடுவேன்) ஏஏ, டோட்டல் வேஸ்ட். ஹீ மிஸ்டு யூ” என எழிலின் அழகைப் புகழ்ந்து தள்ள, அவள் பேச்சிழந்து நின்றாள் . 

“ க்யா ரே, பைச்சானா நஹி. {அடையாளம் தெரியலையா) மீ ப்ரித்தோ, ப்ரீத்தம் கௌர். வீடியோ கால்ல பார்த்து இருக்கேல்ல?”  சந்தேகமாகக் கேட்க, ப்ரீத்தியையும் அவள் பின்னால் வாசல் கதவில் சாய்ந்து அவளையே பார்த்திருந்த அன்புவையும் மாறி, மாறி பார்த்தவள். 

தலையை மேலும், கீழும் ஆட்டி, “ ஐ ஸ்டண்ட்  ஸ்பீச்லெஸ். ப்ரீத்தி எப்படி, இப்படி, இங்கே ” என அவளைக் கட்டிக் கொள்ள,   பின் நின்றவன் முகம் அருகில் தெரியச் சட்டென குனிந்து, கண்ணில் நீர் ஒரு நொடி பளபளக்க மறு நொடி சமாளித்து, ப்ரீத்தியை நேரே நிறுத்தி, “ நேரா வந்ததுக்கு தேங்க்ஸ்” என்றாள்.

“ அடிச்சேன்னா பாரு. ஐசே கைசே, நான் வராமல் இருப்பேன். யூ ஆர் மை பேமலி” என எழில் கன்னத்தில் முத்தமிட்டவள், “உன்னை பார்த்ததில் ரொம்ப சந்தோசம்” எனவும் , 

“எனக்கும் தான்.” என்றாள். 

“ சாசுமா, மம்மிஜி கித்தே . ஐ மீன் ஏஏ வோட மம்மி. யுவர் அத்தையம்மா எங்கே ” எனக் கேட்க, 

“பின்னாடி திரும்பி பாரு” என்றாள்.

வாசல் கதவருகில் நின்ற அன்பு அடுப்படியிலிருந்து வந்த இந்திராணியிடம் ,”அம்மா” எனத் திரும்பி  நெருங்கி இருந்தான். தான் ஆடாவிட்டாலும் சதையாடும் என ஒரு கணம் மகனைக் கண்ணில் நிறைத்து உருகி விட்டார். 

அவர் பேசாமல் நிற்கவும், “இன்னும் என் மேல உள்ள கோபம் போகலையாம்மா” என்ற கேள்வியில் மலை ஏறியிருந்தார்.

“உன் மேல கோபப்பட எனக்கு என்ன உரிமையிருக்கு. அது தான் எல்லாத்தையும் நீயே தேடிக்கிறியே.” எனத் திரும்பிக் கொண்டார்.

“ அம்மா” என அவன் கையை பிடிக்க, “ எழிலு நேரமாகுது. காபியை குடிச்சிட்டேண்டா வெளியே போகலாம்” என மகனைத் தவிர்த்து ஒரு எட்டு முன்னே எடுத்து வைக்க, 

“ சன்ஸ்ரியாகால் ம்மிஜி” என ப்ரீத்தி அவர் காலில் விழ, அதிர்ந்தவர்,” நல்லா இருத்தா” என இயல்பு படி சொல்ல, 

வணங்கி எழுந்தவள், இந்திராணி கையை பிடித்துக் கொண்டு, “ நான் சோட்டி குடியா இருக்கும் போதே, என் மம்மி, பாப்பா போயிட்டாங்க. நான் உங்களை மம்மிஜி ன்னு கூப்பிடுக்கவா” அனுமதி கேட்க, ப்ரீத்தியின் குழந்தை முகத்தைப் பார்த்து, அவருள் இளக்கம் வந்தது. 

“ அம்மான்னு கூப்பிடாதேண்டு  யாராவது சொல்லுவாங்களா. தாராளமா கூப்பிட்டுக்கோ.” என அவளைத் திருஷ்டி கழித்து நெட்டி முறித்தவர், 

“ நல்ல நேரத்தில முகூர்த்தக் கால் ஊண்டனும். நேரமாகுது. மசமசண்டு நிற்காமல், நம்ம ஊட்டுல போயி குளிச்சு கிளம்பி வாங்க” என மகனைப் பார்க்காமல், ப்ரீத்தியிடம் முந்தியில் முடிந்து வைத்திருந்த சாவியைத் தந்தவர்

“ எழிலு ரெடியா” என மருமகளிடம் பேச, இரண்டு பெண்களுக்கும் அன்புவை பார்க்கப் பாவமாக இருந்தது. 

“ அத்தை, அத்தான் எவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்கார். இரண்டு வார்த்தை பேசினா குறைஞ்சா போயிடுவீங்க. அவர் முகம் எப்படி வாடிப் போச்சு பாருங்க” என்றாள். 

“அவரு நோக்கத்துக்கு நான் குறுக்க நிற்கலை. இந்த காட்டுச் சிறுக்கி பேசலையிண்டு தான், தவிக்க போறாறாக்கும். எல்லாரையும் உன்னைய மாதிரி நினைக்காத எழிலு. சோடிய தேடிக்க தெரிஞ்சவருக்கு, சந்தோஷமாவும் இருக்கத் தெரியும். கோகிலாவை அனுப்புறேன். அவளோட வா” என வீட்டை விட்டு வெளியேற, “ மம்மிஜி” என ப்ரீத்தி அவர் பின்னோடு சென்றாள்.  

முகம் வாடி நின்ற அன்புவிடம், “ ஸாரி அத்தான். என் மேரேஜ் முடிஞ்சிடுச்சுன்னா, அத்தை நார்மலா ஆகிடுவாங்க. அவங்க பேசலைனாலும் விடாமல் பேசுங்க. நான் உங்க கூட பேசும் போதே, ஸ்பீக்கர்ல உங்க குரலைக் கேட்டுக்கிட்டு தான் இருப்பாங்க. “ அவள் சமாதானம் சொல்ல 

“ என் அம்மாவை எனக்குத் தெரியாதா. நோ ப்ராப்ளம்” என்றவன், “ ப்ரியூ சொன்ன மாதிரி யூ லுக்ஸ் ஸோ ப்யூட்டிஃபுல். மாப்பிள்ளை பார்த்தாருன்னா எழில்அழகுல மயங்கி விழுந்துடுவார்”. அவன் கேலி பேச, வலிந்து சிரித்தாள்.

சிரிப்பு அவள் கண்ணை எட்டாததைக் கவனித்தவன்,” ஏய் அருசி, உனக்கு பிடிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கிற” அவளைக் கேட்க, கண்ணில் நீரோடு கலகலவென நகைத்தவள், “ நல்ல நேரம் பார்த்து கேட்டிங்க, ஏன் கல்யாணத்துக்கு அப்புறம் கேட்க வேண்டியது தானே” எனக் கேலி பேச, அவன் முறைத்தான். 

“ என் சம்மதத்தோட தான் கல்யாணம் நடக்குது. உங்க ரூட் க்ளியர். என்ஜாய் வித் யுவர் ஓட்டி- ப்ரீத்தி” எனச் சிரிக்க, அவளையை கண்ணெடுக்காமல் பாரத்து நின்றான். 

உள்ளே வந்த கோகிலா, “ தம்பி, உங்க கேர்ல் பிரண்டு உங்களை கூப்பிட்டுகிட்டு இருக்கு. நீங்க என்ன, மாமன் மகளோட மல்லுகட்டிக்கிட்டு இருக்கீங்க. இது கிராமம். பரிசம் போட்ட புள்ளைக்கிட்ட முறைக்காரவுகளை பேச விடமாட்டோம், அங்குட்டு போங்க. இனி கல்யாணம் தட்டியும், பிறகும் கூட சூதானமா நடந்துக்குங்க. எல்லா ஆம்பளைங்களும் ஒன்னு சொன்னாப்ல இருக்க மாட்டாங்க” என அளக்க, 

“ ஸாரி” என்ற படி விடுவிடுவென தங்கள் வீட்டை நோக்கிச் சென்றான். 

அன்பு மூன்று நாட்களுக்கு கார் வாடகைக்குப் பேசி இருக்க, அவர்கள் லக்கேஜ் அதிலேயே தான் இருந்தது. இங்கு ப்ரீத்திக்கு வசதி பத்தாவிட்டால் மதுரையில் ரூம் எடுக்கும் யோசனையிலிருந்தான். ஆனால் அதற்கெல்லாம் அவசியமின்றி, ப்ரீத்தி நன்றாகப் பழகினாள். 

இந்திராணி, ப்ரீத்தியோடு வீட்டுக்குத் தான் சென்றிருந்தார். சிறிய வீடானாலும் நேர்த்தியாக, தூய்மையாக இருக்க, மேஜை ,படுக்கை விரிப்புகள் எல்லாம் புதிதாய் பளிச்சென்றிருக்க, மகனின் வருகைக்காக ஒரு தாயின் ஆர்வம் புரிந்தது. 

சுற்றிப் பார்த்தவள் “மம்மிஜி, கர் ஏக் தம் டீக் ஹை. படியா” என கையால் சைகை செய்ய, அது மட்டும் புரிந்தது. இந்திராணிக்குப் பெருமை, ஆனாலும் காலம் கலி காலம் ஆச்சு. மருமக, மாமியாளுக்கு பாராட்டு பாத்திரம் கொடுக்குறா” எனத் தன்னை போல் புலம்பினார். 

ப்ரீத்திக்கு அவரின் பேச்சு வழக்கு புரியாவிட்டாலும் மனக்குறை புரிய, தன்னை நல்ல மருமகள் என நிரூபிக்கும் முயற்சியில் ஓயாமல் பேசினாள் .

“என்னாது. என்னத்தை சொல்றவ. நீ பேசுறது எனக்குப் புரியலை. நான் பேசுறது உனக்குப் புரியலை. இதில என்னண்டு மாமியா மருமவ குடும்பம் நடத்துறது. மாமியா மருமவ பஞ்சாயத்து வரக் கூடாதுண்டே வில்லங்கமா யோசிச்சு உன்னை கொண்டாந்துட்டான். கெட்ட பய” என நொடித்தார். 

“ முதல் முதல்ல வீட்டுக்கு வந்திருக்கவ. இதை தின்னு” என ஒரு தினை உருண்டையை எடுத்து அவளிடம் நீட்ட, வாங்கி ஒரு வாயில் அடக்கியவள், சாப்பிட முடியாமல் திணறி,புரை ஏறியது. 

“ நல்லா தான். சாப்பிடக் கூடவா சொல்லிக் கொடுப்பாக” எனத் தலையில் தட்டி, தண்ணீர் குடிக்க வைத்து, அவள் முதுகில் தடவிக் கொடுக்க,

“ தாங்க்யூ ம்மமிஜி. யூ ஆர் ஸோ ஸ்வீட். மேரி மா க்கி யாத் ஆத்தி ஹை” எனக் கட்டிக் கொண்டு அழ, 

அணைத்துக் கொண்ட இந்திராணி, “ அழுகாதத்தா. மாமியாலையும் அம்மாவா பார்க்கலாம். எல்லாம் பழகுறதில தான் இருக்கு” என அவளை ஆசுவாசப் படுத்த, அன்புவுக்கு கண் கொள்ளா காட்சியாக இருந்தது. 

மகன் வரவும், ப்ரீத்தியை தன்னிலிருந்து விலக்கியவர், “ சீக்கிரம் குளிச்சிட்டு உடுப்பை மாத்திட்டு வா. எழிலுக்கு அத்தை வீட்டுச் சீர் வைக்கனும்” என ப்ரீத்தியைப் பார்த்தே சிடுசிடுத்தார். 

“ தஸ் மினிட் மே ஆவுங்கி” என்றவள், “ ஏஏ, சூட்கேஸ் கித்தே ஹை” எனக் கேட்க, காரிலிருந்து இறக்கியவன், 

“ நீ முதல்ல ரிப்ரெஷ் ஆகிட்டு வா” என அவளைக் குளிக்க அனுப்பி விட்டு அடுப்படியில் காபி கலந்து கொண்டு நின்ற அம்மாவிடம் வந்தான். 

அவர் கண்டு கொள்ளாமல் நிற்க, பின்னே வந்து கட்டிக் கொண்டவன், அவர் தோளில் தலை சாய்த்து,” பேசும்மா. என்னைத் திட்டக் கூடச் செய். இப்படிப் பேசாமல் இருக்காதே. நீயே என்னை வெறுத்தா, எங்க போவேன்” எனக் கண்ணீர் விட, அது அவரை உருகியது. சட்டெனத் திரும்பியவர், 

“ உன்னைய எப்படி சாமி வெறுப்பேன். நீ வந்திட்டு போற நாலு நாளுக்காகத் தானே, வருஷம் பூரா காத்திருக்கேன்.” என அவரும் கண்ணீர்  வடிக்க, அம்மாவைக் கட்டிக் கொண்டு அப்படியே நின்றான். அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, சிறுவயதிலேயே அள்ளி முடித்த கொண்டை தான். ஜடை போட்டுக் கூட அவன் பார்த்தது இல்லை. நவநாகரீகம் வளர்ந்த நாட்டில் இன்னும் இப்படி சிலர். ஐம்பது வயதிலும் இளமையாய் காட்டிக் கொள்ளும் நகர மாந்தர் எங்கே, இருபது வயதிலேயே துறவு கொண்ட அம்மா எங்கே. விவரம் தெரிந்த பின் அம்மாவின் வாழ்க்கை பிரமிப்பைத் தந்தது. 

“ எழிலை கட்டினேண்டா , கூட பத்து நாள் இங்க வந்து தங்குவேண்டு ஒரு நப்பாசை. அதுவும் போச்சு. மறுக்கமுடியாமல், இன்னொரு பச்சபுள்ளையை கொண்டாந்து மருமவளா நிறுத்தி இருக்க. எங்கிருந்தாலும் நல்லா இரு” என மகனின் சிகையை வாஞ்சையாகத் தடவ, 

“ அம்மா. எழில் கல்யாணம் முடியவும் என் கூட வந்து இரும்மா” என்றான்..

“ தெரியாத ஊர் புரியாத பாஷை. இது எல்லாத்துக்கும் மேல, உன் மாமாவை விட்டுட்டு என்னால வரமுடியாது. நீ உன் இடத்தில இரு. நான் என் இடத்தில இருந்துக்குறேன். அப்ப்ப வந்து முகத்தை காட்டிட்டு போ. மொத்தமா போற அன்னைக்கு” அவர் பேசும் முன் அவர் வாயை அடைத்தவன் 

“ நல்லதா பேசும்மா. எழிலரசி கல்யாண வீடு” என நினைவு படுத்தினான்.

“ நான் ஒரு கிறுக்கி” என்றவர், “இந்தா கருப்பட்டி காபி” என அவன் கையில் திணித்து விட்டு, “ பாலு டிக்காசனு சீனி” எல்லாம் இருக்கு. அந்த புள்ளைக்கு புடிச்ச மாதிரி கலந்துக்க சொல்லு. நான் போறேன். அண்ணன் எதிர்பார்த்துகிட்டு இருப்பார். சாப்பாடு அங்க தான். அந்த மைதா மாவு உருண்டையும் கூட்டிக்கிட்டு வா. சேலை கட்டுமா. இந்திராணியம்மா மருமவ, ஹிந்திகாரியாம்லண்டு வேடிக்கை பார்க்கவே ஒரு கூட்டம் வருவாளுங்க” என்று விட்டு நகர,

“ அம்மா” என நிறுத்தியவன், 

“ எழிலரசிக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் தானே. அந்த மாப்பிள்ளையை பிடிச்சு தானே கல்யாணம் பண்ணிக்குது” அதே கேள்வியைக் கேட்க, 

“ பொட்டச்சிகளுக்குத் தேர்ந்தெடுக்கிற உரிமை இருக்கா என்ன. அது தான் ஜாதகம்னு ஒன்னை கொண்டு வந்து, தெரியாதவன் வீட்டுக்கு பிள்ளையை அனுப்பி விடுறோமே. நல்லா வச்சுக்குவான்கிற நம்பிக்கையில தான் கல்யாணத்தை பண்றோம்” எனத் தத்துவம் பேசி விட்டுச் செல்ல, அன்புக்கரசன் வெகுவாக குழம்பிப் போனான். 

4 thoughts on “அன்பென்ற மழையிலே … 3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *