மழை-6
“மரகத வள்ளிக்கு மணக்கோலம். என் மங்கலச் செல்விக்கு மலர்க் கோலம். “ என மைக் செட்டில் பாடல் அலறிக்கொண்டிருக்க, திருமண ஏற்பாடுகள் படு ஜோராக நடந்து கொண்டிருந்தன.
அழகரின் மூத்த மகன், மருமகள் மாப்பிள்ளையை முறையாக மண்டபத்துக்கு அழைத்து வந்திருந்தனர்.
மணப்பெண் உள்ளூர் என்பதால் அலங்காரம் முடித்து மண்டபத்துக்கு அழைத்து வரச் சொல்லி,கோகிலாவோடு கந்தவேலின் அக்காவிடம் தாலிக்கட்டு சேலையை கொடுத்து அனுப்பி இருந்தனர்.
அழகரும், அவர் மகன்கள், மருமகன், மாமன் மச்சினன் என அனைவரும் மாப்பிள்ளை வீட்டினரை கவனிப்பதில் மும்மரமாக இருந்தனர். அழகர் கேட்ட இடத்திலிருந்து ஒரு லட்சரூபாயை மட்டும் கொண்டு வந்து கொடுத்திருக்க, பைக்கட்டோடு கந்தவேலின் தகப்பனை அழைத்துச் சென்று தனி இடத்தில் வைத்து கொடுத்து, “மொய் வரும், அதோட சேர்த்துப் போட்டு , என் தலையை அடமானம் வச்சாவது மீதியை கொடுத்திடுறேன்” என கண்கலங்கினார்.
“ பரவாயில்லை சம்பந்தி, நீங்க வாங்க. முதல்ல கல்யாணத்தை நல்ல படியா முடிப்போம்” என தன்மையாகவே சொல்லி , ஒரு லட்சத்தை வாங்கி வைத்துக் கொண்டார்.
கந்தவேலு தகப்பனிடம், “அந்தாளு பணம் கொடுத்தாரா” என விசாரிக்க,
“ பணம், பணம், பணம். அதிலேயே குறியா இரு. எல்லாம் கொடுத்து இருக்காரு. இதெல்லாம் மறந்திட்டு சந்தோஷமா கல்யாணத்தை பண்ணிக்கடா. மகாலட்சுமியாட்டம் படிச்ச பொண்ணு மருமகளா வருது, அதை விட என்ன வேணும்” என கடிய,
“ பணத்தை பத்திரமா வச்சிருப்பா. பெரிய ஜாக்பாட் அடிக்க இந்த பணம் தான் முதலீடு” என அவர் பேசியதை விடுத்து தன்னிலே சந்தோஷமானான். முழு பணமும் வரவில்லை எனில் மகன் கல்யாணத்தை நிறுத்துவானோ என பயந்து, ‘ஒரு கல்யாணத்தை நடத்த ஆயிரம் பொய் சொல்லலாம்’ என்ற ஆன்றோர் வாக்கில் நம்பிக்கை வைத்து, தொகையை பற்றி குறிப்பிட்டுச் சொல்லாமல் பணம் கொடுத்துவிட்டார் என்று மட்டும் சொல்லி வைத்தார்.
அருகில் உள்ள ஜனகை மாரியம்மன் கோவிலில் தான் திருமணம் என்பதால், மாப்பிள்ளை வீட்டார், முதல்நாள் தங்கள் வீட்டில் சாமி கும்பிட்டு எடுத்து வந்த தாலிகட்டு சீலையை உடுத்தியே மணப்பெண் மண்டபத்துக்கு வரட்டும் என கந்தவேலின் அக்காவிடம் கொடுத்து அனுப்பினர்.
முன்னதாக எழிலரசி, ப்ரீத்தியின் கை வண்ணத்தில் உயர்தர மேக்கப் பொருட்கள் உபயோகப் படுத்தப் பட்டு அளவான மேக்கப்போடு பேரழகியாகவே இருந்தாள். இந்திராணி அடிக்கொருமுறை மருமகளை வந்து பார்த்து, முகத்தை தொடாமல் தொட்டு வழித்து சொடக்கு போட்டுச் சென்றார்.
எழிலுக்கு உள்ளே ஒரே படபடப்பு. எவ்வளவு யோசித்தாலும் கந்தவேலு கண்முன் வர மறுத்தான். எங்கே நேரே பார்த்தோ, ஓரிரு முறை பேசியிருந்தாலோ நினைவில் வருவான். அவன் தூரத்திலிருந்து மட்டுமே அவளைப் பார்ப்பான்.
சில நேரங்களில் பணம் சொன்னபடி தரவில்லை என்பதற்காக வியாபாரிகளிடம் கடுமையாக நடந்துக் கொண்டதையும் அவள் பார்த்திருக்கிறாள். இவள் பார்ப்பது தெரிந்தாலும், அது தான் கெத்து என்பது போல் மீசையை முறுக்கி கெண்டு நிற்பான்.
அப்பாவின் மனம் கோனக்கூடாது, தன்னை கரையேற்றி விட்ட நிம்மதியை அவருக்கு தரவேண்டும் என்றே கந்தவேலுவுக்கு சம்மதம் தெரிவித்து இருந்தாள்.
ஏனெனில் இவன் ஜாதகம் தான் பொருந்தி இருந்தது. அன்புவுடையது சுத்த ஜாதகம் மாங்கல்ய தோஷம் உள்ள அவளை மணந்தால் அவன் உயிருக்கு ஆபத்து என்ற பின் எப்படி தைரியமாக அத்தை மகனிடம் மனதைச் சொல்வாள். துளிர்த்த காதலை நுனியிலே கருக்கிக் கொண்டாள்.
அத்தைக்கு ஒரே மகன். அவனாவது நன்றாக இருக்கட்டும். ப்ரீத்தியை பார்த்த பின் அன்புவுக்கு ஏற்ற பண்பானவள் என்ற முடிவுக்கு வந்து, அவனை முழுவதுமாக தன் மனதிலிருந்து அகற்ற நினைத்தாள். மனம் ஒரு குரங்க. ஒன்றை நினைக்காதே என்றால் அதையே நினைக்கும். அவஸ்தை தான்.
‘ எல்லாருக்கும் பிடித்த வாழ்க்கையா கிடைத்து விட்டது. கிடைத்த வாழ்க்கையை பிடித்ததாக மாற்றிக் கொள்வோம்’ என மனம் தேறி, இதோ மணமகளும் ஆகிவிட்டாள்.
“ அயித்தை, திருஷ்டி சுத்துறமுண்டு, மிளகாயை காலி பண்ணிட்டு தான் விடுவியாட்டத்துக்கு.” என கலையரசி கேலி பேசினாள்.
“ பின்ன, ஊர்கண்ணு, உறவு கண்ணு படக்கூடாது இல்லை. அதுக்குத் தான்” என்றவர் எழிலரசியிடம் செல்ல,
“ அத்தை , ஏற்கனவே மூணு தடவை சுத்திட்ட போதும் “ என அவள் சலிக்க, சிர்த்தவர்,
“செப்பு சிலையாட்டம் இருக்கவ. அது தான் ஒருத்தன் கடத்திட்டு போறானே. இனி எங்குட்டு கிடந்து சுத்த போறேன்.” என கண்ணை துடைக்க,
“ அவளே இப்ப தான் ஓய்ஞ்சு இருக்கா. திருப்பி ஆரம்பிக்காதீங்க. உங்க ஹிந்திக்கார மருமவ போட்ட மேக்கப் எல்லாம் கலைஞ்சுடும்” என்ற கலையரசி, “ அன்பு நல்ல புள்ளையைத் தான் பிடிச்சிருக்கு” என சான்றிதழும் தந்தாள்.
“ சின்னம்மா,எழிலை அழைச்சிட்டு வரச் சொல்றாக. மண்டபத்திலிருந்து கோவிலுக்கு அவுக அழைச்சுகுறாகலாம்” என்றபடி கோகிலா ஒன்றுவிட்ட சகோதரியோடும், தாலிக்கட்டு சேலையோடும் உள்ளே வந்தாள்.
“ உன் சின்னம்மாளுக்கு இங்கன வந்து பொண்ணை அழைக்கிறதுக்கு நோகுதாகும்” என்றவர்,
“ அண்ணனையும், மருமகனுங்களையும் வரச் சொல்லு, பிறந்த வீட்டு விட்டை கிளம்புற புள்ளைக்கு துன்னூரு போடட்டும்” என்றார்.
“ அத்தை அதுக்கெல்லாம் நேரமில்லை. நீ துன்னுரு போடு, நீ போட்டா எல்லாரும் போட்ட மாதிரி தான்” கலையரசி சொல்ல
“ சூடம், ஆம்பளைங்கதாண்டி காட்டனும்” என்றவர், ப்ரீத்தியிடம
“ நீயும் போயி சேலையை மாத்திக்கிட்டு வா. அன்புவை வரச் சொல்லு” என்றார்.
எழிலரசிக்கு கொண்டு வந்திருந்த தாலிக் கட்டுச் சீலையை பிரித்தபடி,
“ ஸேரி ப்ளீட் வச்சுடுட்டு போறேன்” என்றாள் ப்ரீத்தி
“ நான் தினம் கட்டுற சேலை தானே. அக்கா, மதனி எல்லாம் இருக்காங்க. நீ போய் சேலையை மாத்திட்டுவா” என எழில் சொல்லவும், “பக்கா, ஓகே.” உறுதி வாங்கிக் கொண்டு இந்திராணி வீட்டுக்குள் ஓடினாள்.
அன்பு அப்போது தான், பட்டு வேஷ்டியை கட்டிக் கொண்டு சட்டையை போட எடுத்தான்.
பெண்வீட்டுக்காரர்கள் ஆண் பெண் என அனைவருக்கும் ஒரே வண்ணத்தில் பட்டுப் படவை, பட்டு வேஷ்டி மெருன் சட்டை அணிந்திருந்தனர். அழகரின் மகன்கள் மருமகன் வரிசையில் அன்புவுக்கும் எடுத்துக் கொடுத்திருந்தனர்.
வேஷ்டி, வெள்ளை முண்டா பனியனில் அவனை பார்த்த ப்ரீத்திக்கு கண்கள் விரிந்தது,
“ ஹேய் ஏகே, யூ லுக் ஹேண்ட்சம் மேன்” என அவனைக் கட்டிக் கொள்ள, அதை எதிர்பார்க்காதவன், அதிர்ந்து பின் அவள் நெற்றியில் முட்டி, சிகையில் முத்தமிட, அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டவள்,
“ ஐ யம் ஸோ, எக்ஸைட்டட். இதே போல நாமளும், இங்கேயே வந்து கல்யாணம் பண்ணிப்போம்” என்றாள்.
“ ஜரூர். கட்டாயம்” என்றவன், “அரசி ஓகே வா. டென்சன் இல்லாமல் இருக்காளா” என வினவ,
“ கஹாங் யார். டென்ஷன் இல்லாமல் எப்படி இருக்கும். ஷிவரிங்க். பட் இட்ஸ் ஓகே” என்றவள், அவனுக்கு சட்டை போட உதவ,
“ நான் போட்டுக்குறேன். நீ ட்ரெஸ் மாத்து. எழிலுக்கு துணைப் பொண்ணா நின்னுக்கோ.”என சொல்லிக் கொண்டு சட்டை பட்டனை போட்டவன், அவள் தன் உடைகளை எடுக்கவும்,
“ மே ஐ ஹெல்ப் யூ” என கண் அடிக்க,
“ ஸேரி பாந்தனா ஹை. உனக்கு தெரியுமா. கரோகே” கண்ணால் சவால் விட,
“ஏன் செய்ய மாட்டேன்னு நினைச்சியா” என சேலையை எடுக்க, அவள் நமட்டுச் சிரிப்போடு பார்த்து நின்றாள்.
“ அன்பு, நேரமாச்சு. சாமி கும்புடனும் கிளம்பிட்டேனா சீக்கிரம் வாய்யா” என இந்திராணி குரல் கொடுக்க,
“ ஜா, அன்பு ஜா அய்யா” என அவனை வெளியே தள்ளி கதவை சாத்த, “ நம்ம மேரேஜ் அன்னைக்கீ கட்டி விடுறேன்” என்ற படி வெளியே வந்தான்.
அன்பு முழுக்கை சட்டையை மடக்கி விட்டபடி,”அம்மா” என வர இந்திராணியே இமைக்க மறந்து தான் பார்த்தார்.
“ ஆத்தே , என் கண்ணே பட்டுடும் போலயே” என ஓடிச் சென்று மிளகாயை எடுத்து வந்து,”ஊர்கண்ணு, உறவு கண்ணு” என சொல்லியபடியே அவன் தலையை சுற்றி அடுப்பில் போட, ஒரு கார நெடி இல்லை.
“ஆத்தாடி” என்றவர் மீண்டும் ஒரு பிடி உப்பை எடுத்து வந்து அவன் தலையை சுற்ற “ அம்மா, இப்ப தான சுத்துன” எரிச்சல் பட்டான்.
“ இருக்கட்டும், இளவட்ட புள்ளைங்க கண்ணெல்லாம், உன் மேல தான். மிளகாயில ஒரு நெடி இருக்கனுமே. அது தான் உப்பை கரைச்சும் ஊத்திடுவோம்” அவன் தடுத்தும் முறையை செய்ய, வீட்டிற்குள் இருந்து தனது மின்னலென தன் மேக்கப்பை முடித்து, அடர் சிவப்பு டிசைனர் டிசைனர் சேலையில் அட்டகாசமாக வந்தாள் பீரித்தம் கௌர். அம்மா, மகன் இருவருமே சிலையாகி போனார்கள்.
மும்பையில் தைக்கப்பட்ட ப்ளவுஸ், பின்னிறக்கும், முன்னிறக்கம் எல்லாம் கச்சிதமாக பொருந்தி வஞ்சனையில்லாமல் அவள் பெண்மையை எடுத்துக் காட்ட, சினிமா நட்சத்திரங்களுக்கு போட்டிப் போடும் அழகில், பஞ்சாபிகளுக்கே உரிய ப்ரஞ்ச் ப்ளாட் ஜடை போட்டு மல்லிகையை வளைவாக வைத்து, ஒய்யாரமாக வந்தாள் ப்ரீத்தி.
“ ஆத்தாடி ஆத்தி. நான் யாரையிண்டு காவல் காக்குறது. அம்புட்டு பய கண்ணும் , இவ மேலயில்ல இருக்கும். அன்பு வடநாட்டுகாரவுக மூடாக்கு போடுவாகளே, இவளுக்கு அந்த பழக்கம் இல்லையா” இந்திராணி ப்ரீத்தியை காட்டி கவலையாக கேட்க, அன்புவே பெருமூச்சு விட்டான்.
‘மும்பைனா இந்த குண்டு பூசணியை கண்டுக்கவும் ஆள் இருக்காது. இங்க பார்ப்பாய்ங்களே’ அவன் மனசாட்சி சொன்னாலும், அவன் வித்தியாசமாய் எதுவும் சொல்லவில்லை.
அம்மா மகன் இருவர் முகத்தையும் பார்த்த ப்ரீத்தி, “ க்யூ ஜி, முஜ்கோ ஸாடி அச்சா நஹி ஹை க்யா” சோகமாக கேட்க, “ பஹீத் அச்சா ஹை குல்பி. அது தான் பிரச்சினை” என அம்மாவுக்கு தெரியாமல் கண்ணடிக்க, பால் வண்ண மேனியாள் கன்னம் அவள் கட்டியிருந்த சேலைக்கு தோதாக கன்னத்தில் தக்காளியை விளைவித்திருந்தது.
“ ம்க்கூம். ஜவுளிகடை பொம்மையாட்டம் தங்க சிலையா இருக்க. அது தான், ஊரு பயலுக கண்ணுலிருந்து உன்னைய எப்படி காப்பாத்த போறமுண்டு கவலையா கிடக்கு “ இந்திராணி சொல்லவும்,
“ டோண்ட் ஓரி மம்ஜி. யாராவது கை வச்சா, உஸ்கா ஹாத் தோடுங்கீ” என கையை உடைப்பது போல் சைகை காட்ட,
“ அம்புட்டுக்கு எல்லாம் எவனுக்கும் தகிரியம் கிடையாது. கண்ணுலையே திம்பாய்ங்கே. ஆரு கண்ணுலையும் மடாமல் சூதானமா இரு. “ என்றார்.
“ அம்மா, பேசாமல் போங்க. அவ சமாளிச்சுக்குவா” எனவும்,
“ என்னமோ போடா” என ப்ரீத்திக்கும் மிளாகாயை சுற்றி அடுப்பில் போட்டார்.
“அத்தை எழிலு ரெடி” எனவும்
“ அய்யா, அன்பு இங்க வா.” என அழைக்க, “ அத்தை விடாது” என கலையரசி சலித்தாள்.
“ முறையா செய்யனுமடி” என்றவர்
எழிலுக்கு கொடுக்க வேண்டிய பலகார குடங்கள், சாமி படம், குத்து விளக்கு ஆகியவற்றை சாமி அறையில் வைத்து, அழகர் வீட்டு குலதெய்வத்துக்கு அவனை சூடம் காட்டச் சொன்னார்.
“ அம்மா, நானா” அவன் தயங்க,
“ வீட்டு ஆம்பளையிண்டு நீ தான் இருக்க. எழிலு போற இடத்தில சீரும், சிறப்பா இருக்கனுமுண்டு வேண்டிக்கிட்டு சூடத்தை காட்டு” என்றார்.
அம்மா சொல்படி மகன் செய்ய, பெண்கள் அனைவரும் கூடத்தில் நின்றனர். அன்பு சூடத்தை தான் ஒற்றிக் கொண்டு பெண்கள் பக்கம் காட்டினான்.
“ சூடத்தை தொட்டு கும்பிடு எழிலு” இந்திராணி சொல்ல, சூடத்தை ஒற்றிக் கொள்ள கூட இயலாமல் கண்ணீர் வடிந்தது.
“ ஏய் அருசி” என்றவன், தானே சூடத்தை ஒற்றி, அவள் முகத்துக்காட்ட,
“ மேக்கப் கலையாம” என்றாள் கலையரசி.
“உனக்கு உம்பாடு” என்றவன்,
“ சந்தோஷமா கல்யாணம் கட்டிக்க அரசி, நானும், ப்ரீத்தியும் எப்பவும் உனக்கு நல்ல ப்ரண்டா உனக்காக முன்ன நிற்போம்” என்றான்.
அதற்கும் அவளுக்கு பொங்கிக் கொண்டு வந்தது. “ கிளம்புற நேரம் அழுகாதம்மா” என கோகிலாவும், கலையரசியும் சொல்ல, ப்ரீத்தி எழிலை அணைத்துக் கொண்டாள்.
இந்திராணியிடம் ஆசி வாங்கி, கிளம்பும் நேரம் மகளை இன்னும் வரக் காணோம் என தேடி வந்து அழகரிடமும் ஆசி வாங்கி, கண்ணீரோடு கார் ஏறினாள் எழிலரசி.
கலையரசி உறவினரோடு பைக்கில் தொற்றிக் கொள்ள, அழகர், தங்கையை அழைத்து வருவதாகச் சொன்னார்.
அன்பு வந்த காரில் அவனே காரை செலுத்த முன்னே ப்ரீத்தியும், பின்னே நாத்தனார் அண்ணன் மனைவிக்கு இடையில் எழிலரசியுமாக அமர்ந்து வர பெண்ணழைப்பு நட்ந்தது.
காரை செலுத்திக் கொண்டிருந்த அன்புவின் பார்வை கண்ணாடி
வழியே எழிலரசியை அடிக்கடி தொட்டு மீண்டது. அவள் நார்மலாக இல்லை. மிகுந்த பத்ட்டத்தில் இருப்பது தெரிய, அவள் நிமிர்ந்து ஆடியில் அவனை பார்த்த ஒரு நொடியில் அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.
‘இன்னும் அரை மணியில் அடுத்தவன் கையால் தாலிக் கட்டிக் கொள்ள போகிறவள், அவனருகில் உரிமையாய் ப்ரீத்தி அமர்ந்திருக்க, இதென்ன பார்வை.
மேக்கப் எல்லாம் அவளாக தானே செய்து கொண்டாள்,வேறு ஏதேனும் முடிவெடுத்து விட்டாளோ. இல்லை இருக்காது. சினிமாவை பார்த்து கெட்டு போயிருக்கேன்’ தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.
மண்டபம் வந்திருந்தது. பெண்கள் இறங்க வசதியாக நிறுத்தினான்.
பெண்கள் இறங்க, அன்பு காரை ஓரமாக நிறுத்தி விட்டு வரச் சென்றான். வழி நெடுக நெரிசலான கடை வீதி. காரை நிறுத்த சரியான இடமில்லாமல் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றிருந்தான். இவ்வளவு தூரத்தையும் திரும்பி நடந்து வரவேண்டும்.
“ போறாளே பொண்ணு தாயி” பாடல் எங்கிருந்தோ வந்து காதில் ஒலிக்க, அன்புவுக்கு ஏதோ நடக்கப் போகிறதோ என்ற படபடப்பு.
அரசிகிட்ட பேசியிருக்கனுமோ? அம்மா சொல்ற மாதிரி, விட்டா சரின்னு ஒதுங்கிக் கிட்டேனா?
ப்ரீத்தி சொல்ற மாதிரி மாமா வந்து என்கிட்ட கேட்கனும்னு நினைச்சேனா?
அரசி மேல எனக்கு உள்ள அக்கறை தானே? அவள் கண்கலங்கினா அழுதால் எனக்கு ஏன் இப்படி துடிக்குது.
அந்த பார்வையே மனசை என்னமோ பண்ணுதே!
அப்போ ப்ரீத்தி மேல உள்ளது காதல் இல்லையா? நீ எங்கடா காதலிச்ச? அப்படின்னா அவள் முதல்ல சொல்லும் போதே ஓகே சொல்லி இருக்கனுமே?
காதலே இல்லாமல் கடனேன்னு ஒரு வாழ்க்கை வாழறேனா?
அரசி நல்லபடியா கல்யாணம் பண்ணிக்குவாளா?
தெரியாத ஆளை கல்யாணம் பண்ணப் போற படபடப்பா? இல்லை மனசில என்னை நினைச்சிருந்திருப்பாளா?
அவன் எண்ணம் தறி கெட்டு ஓட, அவரசமாக மண்டபத்தை நோக்கி வந்தான். அதற்குள் பொண்ணு மாப்பிள்ளை உற்றார் உறவினர், ஜனகை மாரியம்மன் கோவிலுக்குள் சென்றிருக்க, அவசரமாக செருப்பை அங்கொன்றும், இங்கொன்றுமாய் கலட்டி விட்டு, தலை தெரிக்க கோவிலுக்குள் ஓட. கெட்டி மேளச் சத்தம் அவன் செவியை வந்து அடைந்தது
மழை வரும்…