Skip to content
Home » அபியும் நானும்-3

அபியும் நானும்-3

🍁3

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

காலையில் குழம்பு வைக்கும் பொழுதே ஒரே பதற்றம். தாளிக்கும் எண்ணையில் உளுந்து போட மறந்திருந்தாள். கையில் குக்கர் சூடு வேறு அவசரத்தில் பட்டு விட்டது.

இது போன்ற எந்த எரிச்சலும் அவளுக்குள் எதுவும் நேரம் கடத்தவில்லை அபி இன்று கலர் டிரஸில் மேடை ஏறுவாள் குறள் சொல்லுவாள் என்ற கனவில் மிதந்தாள்.

வழக்கமாக உடுதும் சிவப்போ கருப்போ எடுக்காமல் ஊதா நிற சேலை கட்டினாள்.

கையில் வளையல் செயின் என்று வைத்து அபியை எழுப்ப, அபியோ எழுந்தவள் தள்ளாடி பிரேஷ் தேய்த்து ஷவரில் நிற்க வைத்து குளிப்பாட்ட.. அபியும் இன்று சமத்தாக ஒத்துழைத்தாள்.

அபி பாலை குடிக்க கொடுக்க அவளோ நிற்காமல் ஒருவித விளயாட்டு போக்கில் நடந்தே குடிக்க அதே நேரம் கீர்த்தனா அபி நின்று குடி என்று அருகே வர பாலை எல்லாம் சேலையில் கொட்டியது.

“தரையிலே ஒழுங்கா நடக்க தெரியல.. இதை கூட்டிட்டு ஸ்டேஜ் போன மொத்த கூட்டமும் உன்னையும் உன் மகளையும் தான் பார்க்கும் உங்களை பற்றி தான் பேசும்” என்று டை மாற்றியபடி ராஜேஷ் சொல்ல

இன்று தான் சேலை அணிந்த தனக்கு அதிலே பால் கொட்டி விட்டதே என மாற்ற போனாள். ராஜேஷ் கூறிய வார்தைகள் கீர்த்தனா நெஞ்சில் அலைமோதியது.

இன்று போகவேண்டுமா? பேசாமல் வீட்டிலே கூட இருந்திடலாமே என்று சிந்தித்து இருக்க வெளியே அபியின் ‘அகர் முகர் எலுதலாம் அடி பகுவான் முதற் உள்கு’ என்றே அபியின் மழலை குரலில் கேட்க பாதி சேலை அணிந்தவள் அப்படியே ஓடி வந்தாள். அபியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

”பரவாயில்லை ஒரு குறளை சொல்லிடுச்சு… ஆன அதுக்காக எனக்கு ப்ரைஸ் ஆஹ்..” என்று பார்வை அவளின் மேனியில் படர சேலை மாற்ற இருந்தவள் அப்படியே வந்த நிலையை கண்டு ராஜேஷ் இப்படி கூற அவனை தீயாய் முறைத்தவள்.

”நீ வா அபி” என அவளின் அறைக்கே அழைத்து சென்றாள்.

எப்பொழுதும் போலவே அந்த சிவப்பு நிற பாலோசோ பாண்ட் எடுத்தால் ஒரு குர்தி எடுத்து அணிந்தாள். ஏனோ கைகளில் இருந்த வளையலை வீசி எறிந்தாள். என்றும் போல அதே கழுத்தில் மெல்லிய செயின் காது ஒற்றிய கம்பல் என்று ஹேண்ட் பேக் எடுத்து கொண்டாள்.

அபியை மட்டும் அழகான சாண்டல் நிற கவுன் அணிவித்து வளையல் கம்பல் நெற்றியில் கல் பதித்த பொட்டு அணிவித்து உதட்டு சாயம் வைத்து நெற்றி முறித்தாள்.

அவளை தனது ஆப்பிள் போனில் விதவிதமாக போட்டோ எடுத்தாள்.

இதற்கே கீர்த்தனா மகிழ்ந்து கொண்டாள். கிளம்பும் பொழுது மனதில் அவள் இந்த ஒரு குறள் சொன்னா கூட போதும் தான் என்ற நிம்மதியில் கிளம்பினாள்.

ராஜேஷ் இருவரையும் ஒருவித ஏளனதோடும் கண்டு விட அதனை நின்று பார்த்த கீர்த்தனா வலியோடு கிளம்பினாள்.

பள்ளிக்கு செல்லும் பொழுது அபி என்றும் போலவே ஆடி கொண்டு தான் வந்தாள். தனது சிவப்பு காரினை பார்க் செய்துவிட்டு கொஞ்சம் தைரியதோடு தான் நுழைந்தாள்.

எத்தனையோ வலி வேதனை பார்த்தயிற்று மற்றவர்கள் தந்ததை தாங்கிய தனக்கு, மகள் எப்படி சொன்னாலும் செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்திலே வந்து நின்றாள்.

அபியின் ஆசிரியர் அவளை கண்டதும் ஓடி வந்து “கொஞ்சம் உட்காருங்க இன்னும் சீஃப் கெஸ்ட் வரலை” என்று சொல்ல அங்கே ஏற்கனவே இருந்த இருக்கைகள் நிரம்பி இருக்க உட்கார வழியின்றி நின்றாள்.

அபியை அறிந்த ஆசிரியர் மல்லிகா என்பதால் அபிக்கு மட்டும் ஒரு இருக்கை எடுத்து வந்து அமர வைத்து அதன் பக்கத்திலே கீர்த்தனா இருக்க ஆசிரியரும் நின்று கொண்டார்.

இந்த சிறு பள்ளிக்கு யார் வருவார்கள் என்ன பேசுவார்கள்… அவர்கள் பேசி முடித்து நிகழ்ச்சி துவங்கும் வரை அபி அமைதியாக இருப்பாளா? இல்லை கூட்டமே அவளை பார்க்கும் படியும் உச்சு கொட்டும் விதமாக மாற்றிடுவாளா? என்ற பயமிருக்க அங்கே மூவர் சீஃப் கெஸ்ட் வந்து நின்றார்கள்.

முதலில் ஒரு கல்லூரியின் பேராசிரியர்… சீதாலட்சுமி. அடுத்து ஒரு அழகான பெண்.. நவீன நாகரீகம் கொண்ட நங்கை யாரேனும் நின்று பார்க்கும் அழகு தான். அவளின் பெயர் கீர்த்திகா அவள் ஒரு ‘கதை சொல்லி’ என அறிமுகப்படுத்தினார்கள். அடுத்து இந்த விழாவுக்கும் நாயகன் அபிமன்யு. நமது நாயகனும் தான்.

முதலில் வரவேற்பு கடவுள் வாழ்த்து என்று சொல்லி அடுத்து இவர்களின் பேச்சு ஆரம்பமானது.

முதலில் பேசியது பேராசிரியர் சீதாலட்சுமி. அவர் கல்லூரியில் இருந்து பணியாற்றினாலும் prekg படித்த முதல் ஒன்றாம் வரை இருந்த ஆசிரியர் மட்டுமே என்றும் நினைவு வரும் என கூறினார். அதற்கு காரணம் அவர்கள் மட்டுமே பிஞ்சு வயதில் மனதில் அழியாது பதிந்து ஊன்றியவர்கள் என பேசிக்கொண்டு இருந்தார்கள். அங்கே ஐந்தாம் வகுப்பு மட்டுமே இருப்பதால் அவர்களுக்கு புரியும் வகையில் எளிதாக கொஞ்ச வெளி உணவு தவிர்க்கணும், பண்டைய கால உணவுகள் சாப்பிடுங்கள் என பேசி வணக்கம் வைத்து நகர்நதார்.

அடுத்து ‘கதை சொல்லி’ என அழைக்கபடும் கீர்த்திகா ”ஹாய் நான் தாங்க ‘கதை சொல்லி’ என்று என்னை அறிமுகப்படுத்தி இருப்பாங்க… யெஸ் நான் கதை மூலமா பிள்ளைகளிடம் பேசுவேன் அதாவது ஒரு விஷயம் அவர்களிடம் சொல்லணும் என்றாலும், அதை கதை மூலமாக தான் சொல்லி புரிய வைப்பேன். எனக்கு இந்த ஆர்வம் எப்படி வந்துச்சு என்றால், நான் லண்டன்ல தனியா இருந்த பொழுது ஒரு பள்ளியில் இருந்தேன். அங்க நிறைய தமிழ் குழந்தைக்கு கதை என்றாலே தெரியாம இருந்தது அதான் அதை சொல்லி கருத்து சொல்லி இருந்தேன்‌. இப்போ அதே எனக்கு ஒரு அங்கீகாரமா மாறிடுச்சு… அப்பறம் எப்பவும் பிள்ளைகளுக்கு நாம தான் முன் உதாரணம் நாம போனில் ரொம்ப நேரம் இருந்தா அவங்களுக்கும் போனில் தான் பொழுது போகணும் என்று தோணும்.

அதே நாம புக் வச்சிக்கிட்டு எப்பவும் இருந்தா, அவங்களும் கதை புக் படிக்கணும் ஆர்வம் வரும் நாளடைவில் அது நல்ல பழக்கத்துக்கு வித்தா அமையும். அதனால பேரண்ட்ஸ் முதலில் பக்கத்தில இருக்கற நூலகத்துக்கு அடிக்கடி போயி பழகுங்க.. தேங்க்ஸ்” என அமர்ந்தவள் அருகே இருந்த அபிமன்யுவிடம்

”ஒழுங்கா பேசினேனா அபி” என கேட்க, அவனோ மந்தகாச சிரிப்பில் கட்டை விரலை உயர்த்தினான்.

அடுத்து அபிமன்யு பேச கூப்பிட ”இல்லை நீங்க குழந்தைகளை பெர்ஃபார்மன்ஸ் பண்ண சொல்லுங்க லாஸ்ட் ல பேசிடறேன்” என்றான்.

முதலில் prekg குழந்தைகள் ரைம்ஸ் பாடி ஆட.. ரசிக்காதவர்களின் மனமே இல்லை. அடுத்து lkg பிள்ளைகள் வைத்து ஆடல்பாட விட அவர்களோ ஒரு ஆங்கில பாடலுக்கு கையும் காலும் இடுப்பை வளைக்க அதுவே மயில் போல இருந்தது. அதிலும் கன்னங்கள் கொழு கொழுவென இருந்த குழந்தைகளின் முகம் பார்க்கவே தெவிட்டவில்லை..

அடுத்து ukg சிலர் தமிழ் பாரதி பாடல் பாடினார்கள். சிலர் குறள் ஒப்பித்து சொன்னார்கள். அதிலே அவர்கள் யோசித்து யோசித்து சொல்லிய விதம் அழகோ அழகு…

அடுத்து முதல் வகுப்பு மானவர்களில் சிலர் நகைச்சுவை படித்ததை செய்து காண்பித்தார்கள்.

அடுத்து அபிநயாவை முன்னே அழைத்து திருக்குறள் சொல்ல போவதாக கீர்த்தனாவிடம் சொல்லி அபிநயாவை அழைத்து செல்ல கீர்த்தனவுக்குள் ரத்த செல்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்தது. அபிநயாவை கண் இமைக்காமல் பார்த்தாள். கொஞ்சம் கேமரா மேன் அருகே சென்று போனில் வீடியோ பதிவு செய்ய காத்திருந்தாள்.

அபிநயாவை அவளின் ஆசிரியர் மேடையில் lkg குழந்தை போல அழைத்து வர அவளும் அதன் பாதுகாப்பிலும் மீறி கவுன் தடுக்க, கீர்த்தனா ஒரு கணம் நின்று இருந்த இடத்தில் இருந்து ஒரு அடி முன் வைக்க ஆசிரியர் அவரே பார்த்து கொள்வதாக செய்கையில் கூற முறுவலிக்க முயன்றாள்.

மைக் கையில் கொண்டு ஆசிரியர் சொல்லு அபிநயா என்றதும் அவளோ வீட்டில் சொல்லியது போல்

அகர் முகர் எலுதலாம் அடி

பகுவான் முதற் உள்கு’

தீ…யினால் சுட்ட புண் ஆரு…மே ஆறதே

நாவினால் சுட்ட வடு

இன்ய உளவாக இன்னதி குரல் கனி இருக்க

காய் கவர்ந்தற்று என கூறியவள் தலையை இடம் வலமாக மாற்றி மாற்றி கூற, அடுத்த குறள் என்ன என்று அறியாது மறந்து போக, கூட இருந்த ஆசிரியர் அவரோ, மைக் பிடித்து அவள் தலையை திருப்ப முயலாத வகையில் பிடித்து ‘சொல்லுடா’ என ஊக்குவித்தார்.

”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் ஆர்வலர்

பூங்கனிர் போசல் தரும். என முடித்து நத்ரி வன்க்கம்.” என முடித்தாள். கீர்த்தனா அந்த குறள் முடிவிலே தன்னை கட்டுபடுத்தி இருந்தாள்… அங்கே கரவோசை அதிர்ந்தது.

கீர்த்தனாவின் எண்ணம் களைய ”கொஞ்ச நேரம் இருங்க சீஃப் கெஸ்ட் பேசியதும் அவளை கூட்டிட்டு போங்க” என்று மல்லிகா மிஸ் சொன்னதும் தான் அவளை வீட்டுக்கு அழைத்து செல்ல தான் கேட்க வருவதை புரிந்து கொண்ட ஆசிரியர் எண்ணி மனம் மகிழ்ந்தாள்.

அபிமன்யு எழுந்து கொள்ள அதே நேரம் அபிநயா அவள் அமர்ந்து இருக்கும் ஸ்விட்ச் போர்ட் கையை விட சென்றாள்.

“அபி…” என கீர்த்தனா கத்த அந்த நிசப்த ஒளியில் ‘அபி’ என்ற பெயர் கேட்க அங்கு இருந்தவர்களுக்கு சொல்லாமலே புரிந்தது.

கீர்த்தனா அபிநயாவை சொல்கின்றாள் என்று. ஆனால் அபிமன்யு மட்டும் அந்த ‘அபி’ என்ற சொல் அவனின் உயிர் வரை தீண்ட அவளை பார்த்து ”ரெட் காரு” என பட்ட பெயரை மனதில் சொல்லி கொண்டான். இவள் எங்க இங்க? குழந்தைக்கு சித்தியா? அத்தையா இருப்பாளோ? என்றெண்ணி மேடை ஏறினான்.

முதலில் பேசிடும் முன் பரிசு பொருட்கள் கொடுக்க சொல்ல அவனும் குழந்தைக்கு பரிசு கொடுக்க செய்தான். அபி மட்டும் வாங்க போகும் பொழுது மல்லிகா மிஸ்ஸோ “நீங்களும் கூட போங்க” என்று கீர்த்தனாவை அனுப்பினார்கள்.

கீர்த்திகா அபிமன்யு அபிநயா கீர்த்தனா இருக்க போட்டோ அழகாக அவர்களை உள்வாங்கியது.

தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *