Skip to content
Home » அலப்பறை கல்யாணம்-11

அலப்பறை கல்யாணம்-11

அத்தியாயம்-11

  அதிகாலை மூன்று முப்பதிற்கு அலாரம் வைத்து எழுந்தாள்.

  முகம் கழுவி, வாசலில் சாணி தெளித்து பெருக்கி கோலமிட்டாள்.

  மணி நான்கை தொட நெருங்கியது. சத்தமில்லாமல் போனில் உள்ள டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு அரசன் வீட்டுக்கு பதுங்கி வந்தாள்.
 
   அவன் வீட்டில் தான் ஏகப்பட்ட ஜன்னல் உள்ளதே. போனை சைலண்டில் போட்டுவிட்டு டார்ச்சையும் அணைத்துவிட்டு, மெதுவாக திரைச்சீலையை தள்ளி கவனிக்க ஆரம்பித்தாள்.

   நான்கு மணி ஆனதும், அரசன் சொன்னது போல, ஹாலில் துகள்கள்  ஒருங்கிணைந்து உருவமாய் மாறி ஆங்காங்கே சிலர் நடமாட, தமிழுக்கு மூச்சு முட்டியது.

  போனில் என்ன தான் அரசன் கூறினாலும், அந்த பையனை பார்த்ததாலும் ஏதோவொன்று சரியில்லையென்று தான் வந்தாள்.

  இப்படி பேய் கும்பலாய் கூட்டமாய் கல்யாணத்திற்கு தயாராகி அழகாய் அலங்காரம் செய்து ஆளாளுக்கு விழாவிற்கு தயாராக, ஆடிப்போனாள்.

இந்த அரசன் எங்கப்போனான்? என்று வீட்டில் இருப்பவர்கள் பார்த்திடாமல், வெளியே யாராவது பார்த்திடாமல் கவனமாய் இருந்தாள்.

  சத்தம் கொடுத்திடக் கூடாதென்று தன் வாயை தன் கைகளால் மூடிக்கொண்டிருந்தாள். அதிசயம் காண்பது போல விழி விரிந்து காண, கொஞ்சம் கொஞ்சமாய் விடியல் மலர துவங்கியது. இதற்கு மேலும் இங்கேயிருந்தால் வெளியே யாராவது பார்த்து அசிங்கமாக பேச நேரிடுமென திபுதிபுவென வந்த வழியே ஓடினாள்.
மடமடவென கொஞ்சம் போல பால் கறந்து, அரசனுக்கு மட்டும் கொண்டு வந்தாள்.

மற்றவர் யாரேனும் கேட்டால் பால் கறக்கவில்லை வேலை பளு என்று ஏதாவது சொல்லிக் கொள்ள நினைத்தாள்.

காலிங் பெல் அடிக்க, அலறாத குறையாக, அரசன் எழுந்தான்.

  மணி ஐந்தரை ஆகுது. இப்ப யாரு பெல் அடிக்கறது?’ என்று சோம்பல் முறித்தவன் விக்கியையும் எழுப்பி வாசலுக்கு வந்தான்.‌

  “பொறுப்பு இல்லாம இன்னும் இருக்கான் பாருங்க?”

“கல்யாண பையனே இன்னும் குளிக்கலை. எம்மகன் அவனோட சுத்தறான்” என்று விக்கியின் அம்மா புலம்ப, தூக்க கலக்கத்தில் அம்மாவை தேடாமல் அரசன் கைகளை பிடித்து இமை திறக்காமல் நடந்தான் விக்கி.

“ஆடலரசா… எங்க போற?” என்று தாத்தா முறையில் இருந்தவரும் கேட்க, “போங்கயா.. நான் யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன். நீங்களாம் யாரு என்ன பண்ணறிங்க? எதுக்கு இப்படி உலாத்தறிங்க? எது கேட்டாலும் பதில் சொல்லலை. நான் மட்டும் சொல்லணுமாக்கும். எப்படியும் ஆறு மணிக்கு மறைந்து போற மாயாவிங்க தானே. நான் பால் வாங்கிட்டு வர்றேன். உங்களை பார்த்துட்டு இருந்தா எனக்கு டீகாபிக்கு பால் இருக்காது.” என்று கதவை திறந்தான்.

  மலருக்கு நடுக்கம் கூடியது. இந்நாள்வரை யாரோ பெரிய குடும்பம் இங்கே வந்து செல்வதாக நினைத்தாள். இன்று இங்கிருப்பதே எல்லாம் பேய்கள் என்றதும் பயம் இல்லாமலா? நடுக்கத்துடன் பால் ஊற்றினாள். மணி ஆறை தொடவும், ஒவ்வொருத்தராய் மாயமானார்கள். விக்கியை மட்டும் நேற்று போல இறுக்கமாய் பிடித்திருக்க, அவனுமே துகளாக மாயமாகி மீண்டும் உருவத்துடன் அரசனின் கைக்குள் கட்டுண்டு இருந்தான்‌.

      மலருக்கு மயக்கம் வருவது போல தோன்ற, பாலை ஊற்றியவள் தள்ளாடி சரிந்தாள்.

பாலை அங்கிருந்த ஸ்டூலில் வைத்துவிட்டு, “ஏங்க… என்னங்க.. அய்யோ.. என்ன இந்த பொண்ணு இங்க வந்து மயங்கிடுச்சு. தமிழோட அப்பா மட்டும் இங்க இப்ப வந்தார். என்னையில்ல தப்பா எடுத்துப்பார்.

   இன்னிக்கு பார்த்து நல்லா தூங்கிட்டேன். ஹலோ… இங்க பாருங்க.. பால்கார பொண்ணு.” என்று தட்டினான்.
 
   ப்ரிட்ஜ் திறந்து ஐஸ் வாட்டரை எடுத்து முகத்தில் தெளிக்க, அந்த குளிர்ச்சியில் உடல் சிலிர்த்து மயக்கம் தெளிந்து இமை திறந்தாள் மலர்.

  ”என்னங்க ஆச்சு… ஏதாவது பார்த்திங்களா?” என்று விக்கியை அணைத்து நின்றான்.
விக்கிக்கு இருந்த தூக்க கலக்கம் மொத்தமாய் மலர் மயங்கவும் களைந்துவிட்டது.

  “இ… இல்லைங்க. நேத்து மாடு கண்ணு போட்டுச்சா. ஓவர் வேலை. அந்த வேலையில் சரியா தூங்காம உடலை‌ கெடுத்துக்கிட்டேன். இங்க வந்து மயங்கிட்டேன்.” என்றாள்.

   ”அம்மா தாயே… உடனே கிளம்பு. என்‌ நெஞ்சுல ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு.” என்று அலறாத குறையாக அனுப்ப முயன்றான். அவள் உருவத்தை பார்த்ததாக கூறினாலாவது உட்கார வைத்து பேசுவான்.

  மயங்கி விழுந்துட்டேன்னு சொல்லறேன். தண்ணி குடிக்க கொடுத்து என்னை அங்க ரெஸ்ட் எடுக்க சொல்றானா? அனுப்ப பார்க்கறான்.’ என்று மெதுவாக நடக்க, “கொஞ்சம் வேகமா நடந்து போங்க.” என்றான்.
 
  மலரோ திரும்பி நின்று முறைக்க, ”என் மாமனார் எங்கயாவது நின்று பார்த்துட்டா, எனக்கு பொண்ணு தரமாட்டான் மா. ஏற்கனவே என் தமிழ் திமிரெடுத்த தமிழச்சியா இருக்கா” என்று முனங்க மலரோ மென்முறுவலிட்டு நடந்தாள்.
   அவள் மயக்கமுற்ற நேரம் இவ்விடமிருந்து விழுந்தடித்து ஓடவேண்டியது. கால்கள் வேரூன்ற மயங்கி சரிந்தாள். ஆனால் தமிழ் பேச இயல்பாகி விட்டாள். இதில் தன் அப்பா பார்த்து பேசுவதாக போனில் உரைத்ததை வைத்து இன்றும் வந்து பார்ப்பாரென நம்பிவிட்டாரே.
  ஆம் அப்பாவிற்காக நான் வந்தது உண்மை தானே. எனக்கு அம்மா அப்பா என்ற இரு பொறுப்புடன் நான் ஒருத்தி சுமக்க வேண்டும். பால் கிண்ணத்தோடு நடந்து சென்றாள்.

   இந்த பொண்ணு எப்பவும் வண்டில வரும். இன்னிக்கு நடந்து வந்துட்டு போகுது.’ என்று விக்கியை அழைத்து உள்ளே வந்தான்.
 
  “நல்லவேளை நீயும் மறைந்து போயிடுவியோனு கையை பிடிச்சேன்.” என்று அணைத்துக் கொள்ள, சிறுவன் அவன் புரியாமல் விழித்தான்.

   அதன் பின் காய் வெட்டி நூடுல்ஸ் தயாரித்தான். இந்த நாலு டூ ஐந்தை பெருசா எடுத்துக்காம நான் பாட்டுக்கு தூங்கி ஆறுமணிக்கு வந்தா அதுக்கு பிறகு பிரச்சனையேயில்லை. பேசாம அப்படியே விட்டுடட்டா?’ என்று சிறுவனிடம் ஆலோசனை கேட்க, ”மாமா நீ பேசறது எனக்கு புரியலை. எனக்கு முதல்ல நூடுல்ஸை போட்டு தா” என்றான் விக்கி.

  “உன் கஷ்டம் உனக்கு.” என்றவன் மலருக்கு அழைத்தான். அவளோ போனில் யார் யார் வீட்டுக்கு பாலூற்ற நினைத்தது எல்லாம் மன்னிப்பு கேட்டு பால் கண்ணுக்குட்டி குடிச்சதாக கூறி தப்பித்தாள்.

  இரண்டாம் கால் பதிவாக அரசனின் அழைப்பு வருவதை கவனித்தவள், வேலைக்கு செல்வதில் மும்முரமானாள்.

    பேருந்து ஏறிவிட்டு பேசலாமென அப்பொழுதும் எடுக்கவில்லை.

   அரசனோ கணினியில் வேலையை பார்க்கும் நேரம், பேருந்தில் ஏறி நிதானமாய் அழைத்தாள்.

   ப்ளூடூத்தை காதில் வைத்து, “அட… கால் பண்ணிட்ட தமிழ். நான் கூட லவ் பண்ணறவன் லவ்வுல உலறினா பரவாயில்லை. பைத்தியம் மாதிரி உலறுவதை கேட்டு இனி கால் பண்ணா எடுக்க கூடாதுனு முடிவெடுத்துட்ட போலனு நினைச்சேன்.‌ நீ என்ன கால் பண்ணிட்ட?” என்றான்.‌ வேலை பார்த்தபடி தான் பேசினான்.

”பச்… அரசன்… இன்னிக்கும் அவங்க எல்லாம் வந்தாங்களா?” என்று கேட்டாள். நேர்ல தான் பார்த்தியே இப்படியொரு கேள்வி கேட்கற?’ என்று மனசாட்சி பிராண்டியது.

“இன்னிக்கு கொஞ்சம் தூங்கிட்டேன். காலையில் அவங்க கிளம்பறப்ப தான் கண்முழிச்சேன். ஆனா வந்துட்டு அவங்க அவங்க வசனத்தை சொல்லி கல்யாண வீட்ல நகை நட்டு போட்டு பட்டு கட்டி டிராமா முடிஞ்சி கிளம்பிட்டாங்க” என்றான்‌ வெகுசாதாரணமாய்.

“அட பக்கி..‌. பேய் கூட இருக்க. ஒருமையில் சொல்ல முடியாது. பேயுங்க கூட இருக்க. ஆனா கொஞ்சமாவது பயந்து பேசறியா. ஏதோ எல்லாம் வெக்கேஷனுக்கு வந்தவங்க மாதிரி பேசற.

தூங்கிட்டானாம்… யோவ் லூசு… நானா இருந்தா நிம்மதியா அங்க ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன். நீ என்ன குடித்தனம் பண்ணற. அதுவும் கூட குட்டி பேயை கூட்டிட்டு ஊர்வலம் போற.” என்றாள்.

  “எம்மா… அதான் சொன்னேனே. இதுக்கு என்ன காரணம் ஏன்‌ வர்றாங்க என் கண்ணுக்கு மட்டும் ஏன்‌ தெரியறாங்க ஒன்னும் புரியலை தமிழ். ஒருவேளை இந்த வீட்ல நான் இருப்பதால் என்‌ கண்ணுக்கு தெரியறாங்களோ என்னவோ?” என்றான்.‌

  அடுத்த வினாடி, “நான் அந்த வீட்ல இல்லையே.‌ என் கண்ணுக்கு எப்படி தெரிவாங்க” என்றாள்.

  “ஏதே…” என்றதும், “அதுவந்து எங்க அப்பா உன் கூடயில்லையே. அவர் கண்ணுக்கு தெரியறாங்களே” என்றாள். சமாளிக்க தெரியாம மாட்டிக்கிட்டு முழிக்க போறப்பாரு மலர் என்றது மனசாட்சி.

   “தெரியலைங்க.. உங்கப்பா கண்ணுக்கு தெரியறதால் விக்கியை கடைக்கு கூட்டிட்டு போனேன். அவன் யார் கண்ணுக்கும் தெரியலை. நேத்து ஒரு மத்திய வயசு பொம்பள பால் ஊத்தும் பொண்ணு இரண்டு பேரும் வீட்டுக்கே வந்தாங்க. அப்ப வீட்டுக்குள்ள வந்து பேசியும் விக்கியை இரண்டு பேருக்கும் தெரியலை. ஏன் டெய்லி அந்த பொண்ணு வருது பால் ஊத்துது அது கண்ணுக்கும் தெரியலை.” என்று வருத்தப்பட்டான்.

  ‘அடேய்… அதெல்லாம் கண்ணுக்கு நல்லா தெரியறாங்க. அதான் ஏன்னு தெரியலை. பங்கஜம் கண்ணுக்கு தெரியலை. டீக்கடைக்காரர் கண்ணுக்கு தெரியாத அந்த குட்டி பையன், என் கண்ணுக்கு தெரிந்தான். பேய் ஏன் என் கண்ணுக்கு தெரியணும்.’ என்று தனக்குள் வருத்தம் கொண்டாள்.

“நான் உங்கப்பாவை பார்க்கலாமா?” என்றான்.

  “அரசன்… எங்கப்பாவிடம் உங்களை பத்தி பேசமுடியாது. ஆனா உங்க மேல இருக்கற அனுதாபத்தில் சொல்லறேன். அந்த வீட்ல ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கா? யார் வீடு என்னனு விசாரிங்க. ஏன்னா… அந்த வீடு ரொம்ப பெரிய வீடு. முப்பது லட்சத்துக்கு விற்று இருக்காங்க. அதுவும் வேலை விட்டு நின்ற கொஞ்ச நாளில் வாங்கியிருக்கிங்க.” என்று கூறவும் அரசனிடம் பலத்த அமைதி.

“ஏங்க…” என்று கூப்பிட, “கேட்குது தமிழ். நான் விசாரிக்கறேன். அப்பறம் என் மேல காதல் இருந்தா பேசு அனுதாபம் எல்லாம் வேண்டாம்.
   அனாதை என்ற கண்ணோட்டத்தில் நிறைய பேர் அனுதாபப்பட்டு இருக்காங்க. யார் யாரோ அனுதாபம் காட்டும் போது வலிக்காது.
 
  நீ அனுதாபம் என்ற வார்த்தை வீசறப்ப, என்னை காயப்படுத்தற மாதிரி இருக்கு” என்றான்.

  “அரசு.. சாரி” என்று மலர் கூற, “வைக்கறேன் தமிழ்” என்று துண்டித்தான்.

   எப்பவும் துள்ளலாக வரும் தமிழரசனின் குரல், ஏதாவது பேசும் போது தன்னை அறியாமல் காயப்படுத்துவதை மலர் உணர்ந்தாள்.

  இத்தனைக்கும் தமிழரசன் படித்து முடித்து சொந்தமாய் வீடு வாசல் வாங்கி தனியாக வாழும் தன்னம்பிக்கை கொண்டவன்.
 
தமிழ்மலர் படித்திருக்கின்றாளே தவிர நல்ல வேலை என்று சொல்லயியலாது. ஏனெனில் படித்து முடித்தது எல்லாம் தொலைத்தூர கல்வியே.
  ஒரு வேளை சொந்த வீடு என்றும், தந்தையை அடிக்கடி தன் கண்ணுக்குள்  கவனிக்க வேண்டுமென்ற காரணத்தால், இந்த இடத்தை விட்டு அகலாமல், வெளியூரில் வேலை செய்யாமல் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகின்றாள்‌

  இதே வீட்டையும் தந்தையும் விடுத்து, தன் படிப்பிற்கான வேலை என்று வெளியிடம் சென்றால் மட்டுமே சம்பளம் அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு. தமிழரசனை விட வசதி வருமானத்தில் கீழே உள்ளவள் அவன் மீது அனுதாபமிட்டால் எப்படி?

  சொல்லம்போனால் இவ்வுலகில் யாரும் யாரையும் அனுதாபமாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
   ஏற்றத்தாழ்வு என்பது மனிதரின் வாழ்வில் பகல் இரவு போல மாறி வந்தால் எல்லாம் மாறும்‌.

    இவ்வாறு சிந்தனையில் தமிழரசனிடம் இனி ஜாக்கிரதையாக மனம் கோணாமல் பேச வேண்டுமென்று முடிவெடுத்தாள்.

   இங்கே தமிழரசன், தனக்கு வீடு விற்றவரை பிடித்து இந்த வீட்டில் அமானுஷ்யம் உள்ளதா என்று விசாரிக்க, “ஏன் தம்பி இப்படி கேட்கறிங்க? எங்கப்பாவோட சொத்து. நான் வெளிநாட்டுக்கு போறதால அவசரத்துக்கு பணிந்த விலையில் உங்களிடம் விற்றுட்டு வந்தேன். இதே மத்தவங்கன்னா அந்த இடத்தை இடிச்சிட்டு அடுக்குமாடில பத்து வீடு கட்டி, அதுல இன்ஞினியருக்கு இரண்டு வீட்டை கொடுத்துட்டு, எட்டு வீட்டை வாடகைக்கு விட்டு, வாடகையா வர்ற வருமானமே வாங்கி கால் நீட்டி வாழலாம்.
   எனக்கு ஏது நேரம். இங்க அமேரிக்கால புள்ளைய பெத்தா க்ரீன் கார்டு கிடைக்கும்னு அவசரமா வேலைக்கு வந்தப்ப நிறை மாச பொண்டாட்டியையும் அழைச்சிட்டு வந்து இருக்கேன். என்னிடம் இப்படி கேட்கறிங்க. வையுங்க தம்பி போனை” என்று கோபமாக வீட்டை விற்ற ஆள் கத்தி அணைத்தார்.

”அண்ண..அண்ண…” என்று கத்திவிட்டு மீண்டும் அழைக்க பயந்தான்.

   இந்த நேரத்தில் அழைத்து இவ்வாறு கேட்பது தவறு தான்.
  வீட்டை சுற்றி ஏதேனும் அப்நார்மலாக தென்படுகின்றதா என்று நோட்டமிட்டான்.

  அங்கே இவன் வளர்த்த காய்கறி செடிகள் பசுமையாக வளர்ந்து செழித்திருந்தது. இன்னும் கொஞ்ச காலத்தில் மொட்டு விட்டதில் காய்கறி காய்க்கும்.

  டீக்கடைக்காரரிடம் வீட்டை பற்றி விசாரிக்க, “நான் இங்க டீக்கடை போடறப்பவே இந்த இடம் பாழடைந்து தான் இருந்தது‌ தம்பி. மத்தபடி அதுக்கு முன்ன அந்த இடத்துல யார் இருந்தா, எத்தனை பேர் இருந்தாங்க, எதுவும் தெரியாது தம்பி. ஏழெட்டு வருஷமா மூடியிருப்பதா பேசிப்பாங்க. நான் கடை வச்சது ஐந்து வருஷமாகுது.

   முன்ன இங்கயிருந்தவங்கள்ல யாரிடமாவது விவரம் கேளுங்க.” என்று கூறி டீயை ஆற்றுவதில் மும்முரமாக இருந்தார்.

  வீட்டை வாங்கிட்டு இப்ப வந்து விவரம் கேட்கறார்’ என்று டீக்கடைக்காரன் குழம்பினான்.‌

    அக்கம் பக்கம் எல்லாம் இந்த இடம் இப்ப தான் தம்பி பேமஸாச்சு. அதுக்கு முன்ன இங்க வீடு எல்லாம் கிடையாது. அங்க ஒன்னு இங்க ஒன்னுன்னு தான் கிடக்கும்.
  
  அதோட முன்ன இருந்த ஆட்களில் யாரும் உயிரோட இருக்காங்களா தெரியலை. இப்ப எல்லாம் வயசு புள்ளைங்க தான். அதுவும் வீட்டை தொறந்து வர்றதில்லையே.” என்று கூறினார்கள்.

   ஒருத்தரை மாற்றி ஒருத்தர் இதை தான் உரைத்தார்கள்.

  ஊருக்கு தனியாக இருந்த இடத்திலான வீட்டில் என்ன நடந்ததோ?’ என்று உலவியவன், மாலையில் அந்த வீட்டு வேலிக்குள் நுழைந்தான்.

  -தொடரும்.

12 thoughts on “அலப்பறை கல்யாணம்-11”

  1. M. Sarathi Rio

    அலப்பறை கல்யாணம்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 11)

    முடியலைங்க…! இதுக்கு மேல சத்தியமா முடியலை…! அதெப்படி தமிழ், மலர், மலரோட அப்பா செந்தில் இவங்க கண்ணுக்கு மட்டும் தான் தெரியுறாங்க. ஆனா மத்தவங்க கண்ணுக்கு தெரியலை. அது ஏன் ?னு யோசிச்சு, யோசிச்சு மண்டை காய்ஞ்சது தான் மிசசம். நீங்களும் சொல்ல மாட்டேங்கறிங்க, தமிழூக்கும் புரியலை, தானாவும் விளங்க மாட்டேங்குது. அப்புறம் என்ன தான் பண்றது…?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *