Skip to content
Home » அலப்பறை கல்யாணம்-6

அலப்பறை கல்யாணம்-6

அத்தியாயம்-6

  தமிழரசனுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது.

  நமக்கு கல்யாண கனவு வருதுன்னு பார்த்தா, என்னவோ என்னை சுத்தி நடக்குது.

  கல்யாண கனவு மாதிரி தெரிந்தாலும், ஆட்கள் ரியலா வந்து காணாம போறாங்க. கனவுன்னா தூக்கத்தில் தானே வரணும். நான் கண் முழிச்ச பிறகும் ஆட்கள் நடமாடிட்டு இருக்காங்க. அதுவும் கல்யாண வீட்டு ஆட்கள் மாதிரி பட்டுசேலை வேஷ்டி, நகை நட்டுன்னு ஜோரா கனவுல நடமாடறாங்க.

   அப்பறம் ஒவ்வொருத்தரா மாயமாகறாங்க. இல்லை எனக்கு மனபிராந்தியா? கல்யாண ஆசை முத்திடுச்சா?

  அப்படின்னா கூட பொண்ணை கண்ணுல காட்டலையே.’ என்று அங்கும் இங்கும் நடந்தவனுக்கு பைத்தியம் பிடிக்காத குறை. மெதுவாக கடையில் வாங்கிய மாவில் தோசை ஊற்றி வேர்கடலை சட்னி அரைத்து தொட்டு சாப்பிட்டான்.

  நாளைக்கும் இது மாதிரி நடந்தா அப்ப பார்க்கலாம், இல்லைன்னா இது கனவு முத்திப்போச்சுனு அர்த்தம் என்ற முடிவுடன் வெளியே வந்திருந்தான்.‌

இங்கே செடிகொடியை வளர்த்திட நினைத்தான். கூடவே வெப்செட் ஓர்க் ஒன்று ஆறு மாதத்தில் செய்து தர தனிப்பட்டு வேலையில் மூழ்கியிருந்தான்.
   கூடவே வேறு ஏதேனும் முயற்சி செய்ய நினைத்தான். 
   இங்கு நம் நாயகி மலரோ, ‘தன்னந்தனியா தானே அந்த வீட்டை வாங்கினான். இப்ப என்ன வீடு முழுக்க கல்யாண கூட்டம் மாதிரி‌? உண்மையில் இவன் அனாதை தானா? இல்லை பொய் சொல்லறானா? பொய் சொல்லறதா இருந்தா ஏன் சொல்லணும். அதுவும் இந்த கிராமத்துல வந்து, என்னை நோட்டமிடுவது போலவும் தெரியலை. ஒருவேளை என்னை நோட்டமிட்டு வந்து பார்க்கறதா இருந்தா அவன் என் வீட்டை தேடி வந்துல்ல பால் ஊத்த முடியுமான்னு விசாரிச்சியிருப்பான்.
    அவனை நான் தான் பார்க்கற மாதிரி அவன் பாட்டுக்கு இருக்கான்.
  இதுல டிரவுசஸர் வேற. அத்தனை கூட்டத்துல ஒருத்தராவது  நாகரிகமா வந்து பால் வாங்கியிருக்க கூடாது. இந்த தூங்குமூஞ்சியை தான் அரையும் குறையுமா அனுப்பணுமா? என்ன இழவோ, இருக்குற பிரச்சனை போதாதுன்னு இவன் வேற’ என்று தன் பணியில் தீவிரமாக இருந்தாள். கடைக்கு எல்லாம் பால் ஊற்றி வந்தவளின் நினைப்பு தமிழை பற்றி சிந்தித்தாலும்‌, உடனடியாக வேலைக்கு செல்வதால் நேரம் கடந்தது.

”அப்பா… சாப்பாடு ரெடி. வேலைக்கு போயிட்டு வந்துடுவேன். கீலகீழ விழுந்தா உசுரு போகாதுப்பா. செலவு தான் ஏறும். நான் தான் கடன் வாங்கணும். அதனால் பக்குவமா இரு. மதியம் வந்துடுவேன்.” என்று கிளம்பினாள் மலர்.

   செந்தில் எச்சி ஒழுக, தலையாட்டி சரியென்றார்.

  தமிழ் மலர் தமிழரசன் வீட்டை தாண்டி தான் வேலைக்கு சென்றாள். வேலைக்கு தந்தையின் வண்டியை பயன்படுத்த மாட்டாள். பஸ் ஸ்டாப் சென்று பஸ் பிடித்து செல்வாள்.

   அவ்வாறு சென்று திரும்புவது அவளது வழக்கம்.

  வேலைக்கு வந்ததும் முதல் வேலையாக தமிழரசன் புரப்பைல் எடுத்து பார்த்தாள்.

   பெயர்  தமிழரசன் என்று போட்டு வயது படிப்பு, அவன் இருப்பிடம் மாதசம்பளம், அனைத்தும் இருந்தது.
  உறவு என்ற இடத்தில் தாய் தந்தை உறவுகள் யாருமில்லை என்று தான் பதிவிடப்பட்டுள்ளது.
  
      நகம் கடித்தபடி, ‘இவன் வேலைவிட்டு வந்தப்பின்ன வேலை செய்த இடத்நை இன்னும் மாத்தலை. இதுல சொந்தபந்தம் யாருமில்லைன்னு தான் போட்டிருக்கான். பிறகு வீடு முழுக்க இருந்த கூட்டம் யாராயிருக்கும் என்று சிந்தித்தவளுக்கு ஒரு வினோத எண்ணம் உதிக்க, செயல்படுத்தினாள்.

  தமிழரசனின் எண்ணிற்கு அழைத்து, “சார் நாங்க மேட்ரிமோனியல் மூலமா உங்க நம்பரை வாங்கியிருக்கோம். உங்க புரப்பைல் நல்லாயிருந்தது.” என்றதும் தமிழரசன் இன்பம் தாளாமல் “ஓ.. சூப்பர் சொல்லுங்க. உங்களுக்கு அப்பா அம்மா சொந்தம் எல்லாம் இருக்காங்களா?” என்று ஆர்வமாய் கேட்டான்.‌

  “ஆஹ்… ஆங்ங்.. அப்பா நீங்க எதிர்பார்த்த உறவுகள்… ம்ம்ம இருக்காங்க. ஆனா நீங்க ஏன் சார் பொய் பொய்யா போட்டு வச்சிருக்கிங்க.” என்றாள்.

   “பொய்யா?” என்று இதுவரை ஆனந்தமாய் பேசியவன் சிரிப்பை தொலைக்க, ”பின்ன இல்லையா? நீங்க வேலை செய்த ஆபிஸுக்கு போன் பண்ணினா, முன்ன வேலையில் இருந்தான். இப்ப வேலையில் இல்லை‌. பொண்ணை கட்டிக்கொடுத்தா பார்த்துக் கொடுங்கன்னு சொல்லறார்” என்றதும் தமிழரசன் ‘அவனா தான் சொல்லிருக்கணும்’ என்று சண்டை வந்தவனை பற்றி நினைத்து விட்டு, “ஏங்க முன்ன ஓர்க் பண்ணினேன். இப்ப ரீசண்டா வேலை விட்டு நின்றுட்டேன். புரப்பைல்ல அதை மாத்தலை. இப்ப வேலை எதுவும் பார்க்கலை. பிசினஸ் ஏதாவது ஆரம்பிக்கலாமானு இருக்கேன்” என்று கூறினான்.

  மலரோ “ஆஹா இப்படி வேலையில் இல்லாம, இருப்பதா போட்டுவச்சா என்ன சார் அர்த்தம்.” என்று குரல் உயர்த்தினார்.‌

  “ஏங்க குரல் உசத்துறிங்க. பயோடெட்டால மாத்த  மறந்துட்டேன். இனி மாத்திடுவேன்.” என்றான்.‌

  மலரோ விடாமல், “அதுமட்டுமா பொய்? சொந்தபந்தமே இல்லைன்னு போட்டிருக்கிங்க. காலையில் வந்து பார்த்தா வீடு முழுக்க சொந்தக்காரங்க இருந்தாங்க?” என்றாள்.

  “காலையில் என்னை பார்க்க வந்திங்களா?” என்றான் அவசரமாய்.

  மலரோ மாட்டிவிட போகின்றாய் என்று நாக்கை கடித்து, “நான்னா நான் இல்லை. எங்க அப்பா வந்து பார்த்தார். உங்க வீட்ல சொந்தக்காரங்களா சுத்திட்டு இருந்ததா.” என்றதும், தமிழரசனோ, “ஏங்க ஏங்க… உங்க அப்பா கண்ணுக்கு காலையில் என்‌வீட்ல நடமாடிய ஆட்கள் தெரிந்தாங்களா?” என்று கேட்டான்.‌

   மலரோ ‘லூசா இவன்?’ என்பது போல போனை வைத்து அங்கும் இங்கும் பார்த்து, “பின்ன பால் ஊத்தற பொண்ணு முன்ன டவுசரோட வந்து நின்றான் மாப்பிள்ளைனு சொன்னார்.” என்றதும் தமிழரசனோ தலையிலடித்து மலரின் செவியில் துள்ளியமாக விழுந்தது.
 
  லேசாக சிரிப்பு வர போனை மூடி நகைத்தாள்.‌

“அட சென்னையில் இருந்த நினைப்பில் ஷார்ட்ஸ் போட்டிருந்தேங்க. உங்கப்பா தப்பா எடுத்தா அதுக்கு நான் என்ன பண்ணறது. பார்க்கற கண்ணுலயும் எண்ணத்திலயும் கோளாறு. இதே உங்க வீட்டுக்கு காலையில் வந்து நின்றா அழுக்கு நைட்டில இருப்பிங்க. நான் அதை குறை சொல்ல முடியுமா?
 
  நைட்டு இலகுவான உடையா அணிந்திருப்பிங்க” என்றான்.

  மலரோ ‘இவன் என்ன வெட்கமேயில்லாம பேசறான். அடராமா’ என்று சலித்துக்கொள்ள, ”அதை விடுங்க. உங்கப்பா கண்ணுக்கு எங்க வீட்ல நடமாடிய ஆட்கள் தெரிந்தாங்களா? கொஞ்சம் உங்கப்பாவிடம் போனை கொடுங்களேன்.” என்றான் ஆர்வமாக.

  “அ..அது.. அது வந்து… அப்பா இப்ப இல்லை. அந்த பையன் ஷார்ட்ஸ் போட்டுட்டு சுத்தறான். நல்லபிப்ராயமா தெரியலைன்னு சொன்னார். அதான் நான் புரப்பைல் நோண்டி பார்த்தேன். அழகா இருக்கிங்க. ஆனா ஏன் பொய்யா போட்டிருக்கிங்கன்னு கேட்டுட போன் போட்டேன்.” என்று கூறினாள்.

   “அதான் சொன்னேனுங்களே. இப்ப தான் வேலையை வேண்டாம்னு விட்டேன். சென்னை தாண்டி கிராமத்துல சேர்த்து வச்ச காசுல ஒரு வீடு வாங்கினேன். அதை ஆல்டர் பண்ணி தங்கியிருக்கேன். உங்களுக்கு என்னை பிடிச்சிருந்தா நேர்ல உங்க அப்பாவை கூட்டிட்டு வாங்க. நேர்ல பேசி முடிவெடுங்க. என் பார்வை உங்க கண்ணை தாண்டி போகாது.” என்று அடுக்கினான்.

  மலரோ அதானே பால் ஊத்தும் போதும், டீ கடையிலும் ஜெனுவா தான் பேசினார். தவறான பார்வை என்னை ஊடுருவி பார்ப்பது எதுவும் இல்லை.
  ஊடுருவி பார்ப்பதாக இருந்தா அவர் மனசுல நான் நெருக்கமா இல்லை. “ஏங்க… ஹலோ” என்றதும் “ஆங் சாரிங்க நான் வேலையில் இருக்கேன்.” என்று துண்டிக்க பார்த்தாள்.

  “சரிங்க.. வேலை தான் முக்கியம். உங்களை இப்ப தொந்தரவு பண்ணலை. நம்பரை சேவ் பண்ணிக்கறேன். உங்கப்பாவிடம் அப்பறமா பேசலாமா” என்றான்.‌

   “நான்… அப்பறமா சொல்லறேன்னே. சாரி” என்றதும், “புரியுதுங்க… அவசரமா என் புரப்பைல் பார்த்து கால் பண்ணிட்டிங்க. இப்ப உங்கப்பா திட்டுவார்னு பயப்படறிங்க. என்னை சப்போஸ் கான்டெக் பண்ணணும்னா இதே நம்பருக்கு அழைச்சி பேசுங்க” என்று கூற சரியென்று கூறி மலர் போனை கத்தரித்தாள்.

  ‘அச்சோ.. இப்ப என் நம்பரை சேவ் பண்ணிருப்பார்.’ என்றவள் தன் அலைப்பேசியையே வெறித்து, லேசாக புன்னகைத்தாள். அவளது போனில் எதிலும் அவளது முகப்பு புகைப்படம் இருக்காது. பூப்படம் தான் வைத்திருப்பாள் அதனால் கவலையின்றி இருந்தாள்.

   ஒரு புரப்பைலில் வரும் தகவல் சரியா தவறா என்று பார்ப்பதும் அதை சம்பந்தப்பட்ட ஆட்களிடம் பேசி சரிச்செய்வதும் மலரின் பணியில் ஒன்று என்பதால் அவள் வெட்டி அரட்டை அடித்ததாக எண்ணவில்லை.

  அதோடு தமிழிடம் இலகுவாய் பேசியதால் அவன் பேசியதை எல்லாம் அவள் அசைப்போடவில்லை. அவள் வயதிற்கு மூளையில் அவன் சொன்ன விஷயம் பதிவாகவில்லை. ஆனால் ஏனோ அவனகடம் இவ்வாறு விளையாடி பேசியது இதயத்திற்குள் வேடிக்கையாக இருந்தது. அதனாலோ என்னவோ அன்று முழுக்க சற்று முகமலர்வோடு நடமாடினாள்.

  “என்ன மலர் வீட்டுக்கு போகாம ஆர்வமா வேலை பார்க்கற? உங்கப்பா  பார்க்க டான்னு கிளம்பிடாவ” என்றதும் நேரத்தை பார்த்து எழுந்தாள்.‌

  “எப்பவும் நேரம் போகாது. அடிக்கடி பார்ப்பேன். இன்னிக்கு நேரம் போனதே தெரியலை.” என்று கிளம்ப தயராக கணினியை அணைத்துவிட்டாள்.‌

  தோள்பையை ஏந்தி மடமடவென பேருந்து நிலையத்தை நோக்கி நடையிட்டாள்.

   பத்து நிமிடம் தாமதமானதால் எப்பொழுதும் செல்லும் பேருந்தை நழுவவிட்டாள். காத்திருந்து அரைமணி நேரம் தாமதமாக வேறொரு பேருந்தில் ஏறினாள்.

   வழியெங்கும் கடிகாரத்தை அடிக்கடி பார்த்தாள்.

  தமிழரசன் வீட்டை கடக்கும் போது அவளையறியாது குறுகுறுப்பாக அவன் வீட்டை அளந்தபடி நடையிட்டாள்.‌
 
   ‘மதிய நேரமெல்லாம் வெளியே வந்தா இந்த வெயிலுக்கு கலர் கருத்துடுவார்னு வீட்டுக்குள்ளயே இருக்கார் போல’ என்று நகைத்தபடி அவளது வீட்டுக்குள் நுழைந்தாள்.
 
  செந்தில் நேரத்தை பார்த்தவாறு “ஏ..ஏன் லேட்” என்பதாக பார்த்தார்.‌

  “கொஞ்சம் லேட்டாகிடுச்சுப்பா. பஸ் விட்டுட்டேன்” என்றவள் தட்டில் சாதம் குழைத்து பருகுவதற்கு பதமாக கொண்டு வந்து தந்தையை சாய்வாக அமர வைத்து குடிக்க வைத்தாள்.‌

  மகளின் வதனத்தில், கூடுதல் பொலிவாக லேசாக சிரிக்க முயன்று “என்ன சந்தோஷம்’ என்று முகபாவனையில் கேட்டார். லேசான முகபாவனையிலேயே தந்தைக்கு இயற்கை உபாதையா, பசியா, உறக்கம் வருகின்றது, சோகமா, அழைக்கின்றாரா என்கின்றார காரணம் அறிந்திட, “ஒன்னுமில்லைப்பா.” என்று சமாளித்து சாப்பிட சென்றாள்.

   சற்று நேரம் வீட்டுப்பக்கம் பூத்திருந்த மல்லிப்பூவை எல்லாம் பறித்தாள்.
   அதை அரை உழக்கில் சிலரிடம் விற்றிடுவாள்.

  உழைப்பில் சின்னது பெரிது என்று பாராது பணம் புரட்டுவது அவளது எண்ணம்.

  தன்னை நிமிர்வாக, உழைப்பாளியாக, பத்து பைசாவும் மற்றவரிடம் கையேந்தாமல், கேவலமான விஷயத்தை அண்டாமல் வாழ என்று பார்த்து பார்த்து செய்வாள்.

    பூவை பறித்ததும், பால் கறக்க ஆரம்பித்தாள்.

  தந்தையிடம் கூறிவிட்டு வண்டியில் சென்றாள். முதல் வீடே தமிழரசனின் வீடென்பதால் கதவை தட்ட, எங்கேயோ கலெக்டர் உத்தியோகத்திற்கு செல்பவனாக வந்து நிற்க ஆவென வாய்பிளந்து நின்றாள்.

  பால் வாங்க வந்தவன் அவளை தாண்டி வெளியே எட்டியெட்டி பார்த்தான்.

   பால் ஊற்றியபடி “யாராவது வர்றாங்களா?” என்றாள்.‌

  “இல்லைங்க.. ஆனா வரலாம்” என்றவன் பார்வை ஆர்வமாய் வாசலை அலச, காலையில் பேசியது நினைவு வந்தது.

   போனில் பேசியது போல உரையாட இயலாது தவித்தவள் நகரும் நேரம், ‘பூவாசம் வீசுது’ என்று அவள் முன் நுகர, “மல்லிப்பூ… மல்லிப்பூ.. விற்க கொண்டு போறேன்.” என்று காட்டினாள்.

  “சாரிங்க… ஏதோ சம்திங்… வாசம் ரொம்ப இழுத்தது.” என்றவன் விலைக்கேட்க, “உங்களுக்கு பூக்கட்ட தெரியுமா?” என்று கேட்டாள்.

   “இல்லைங்க.. தெரியாது. ஏன் பூக்கட்டி தானே விற்பிங்க” என்றதும், பறித்த பூவை திறந்து காட்டினாள்.

  இந்த அளவுல புல்லா தட்டி விற்பேன். பூ கட்ட தெரிந்தவங்க பூகட்டி சாமிக்கும் அவங்க வீட்டு பொம்பளைக்கு தலையில் வச்சிப்பாங்க.” என்று புறப்பட முயன்றாள்.

  “ஏங்க ஏங்க… இன்னிக்கு காலையில் பால் ஊத்தும் போது இங்க யாராவது பெரியவர் இருந்தாங்களா? என்னை பத்தி ஏதாவது விசாரித்தாங்களா?” என்று கேட்டான்.

   தான் போனில் பேசியதன் விளைவு என்றது புரிய, “இ..இல்லையே. என்னிடம் யாரும் விசாரிக்கலை.” என்று நகர, ‘ஏங்க யாரையாவது என்னை விசாரிப்பதை பார்த்திங்களா?” என்று செல்பவளை தடுத்து கேட்டான்.‌

  “இங்க பாருங்க.. நான் நாலு வீட்டுக்கு பால் ஊத்த போகணும். என் வேலையை கெடுக்கறிங்க. முதல்ல வழியை விடுங்க.” என்று முன்னேறி செல்ல அவளை தடுத்து நிறுத்தும் வழியின்றி வேடிக்கை பார்த்தவன் எங்கயாவது போனில் பேசிய பெண்ணின் தந்தை தன்னை தேடுகின்றாரா என்று திசைக்கொரு பக்கம் தேடினான்.

-தொடரும்.

3 thoughts on “அலப்பறை கல்யாணம்-6”

  1. Super epi sis👌👍😍 already pratilipi la padichiten erundhalum enga padichi comment kudukanum nu odi vandhen sis❤️🥰

  2. Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr

    Maapla tip top ah kilambi nikkiraare😆😆😆😆😆😆😆😆

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *