Skip to content
Home » அலப்பறை கல்யாணம்-7

அலப்பறை கல்யாணம்-7

அத்தியாயம்-7

   தமிழரசன் வாசலில் அங்கும் இங்கும் உலாத்தி, முக்கு தெரு வரை வந்து யாரேனும் இருக்கின்றனரா என்று ஆர்வமாய் ஆவலாய் பார்த்தான்.

    தனித்து வளரந்தவனுக்கு குடும்பத்தை காண ஆவல் வருவது சகஜமே.

  எப்படி கூட்டு குடும்பத்தில் வாழும் இளஞைனுக்கு தனிக்குடித்தனம் இனிக்குமோ, அதே போல தனித்து வாழ்பவருக்கு கூட்டு குடும்பமாக ஏங்குவது சரிதானே?!
     இதை ‘பிரிவோம் சந்திப்போம்’ படமாக கூட எடுத்தாரே சேரன் அவர்கள். அப்பா அம்மா ஒரே பெண் சிநேகா என்று வளர்ந்த நாயகி கூட்டுக்குடும்பத்தை எதிர்பார்த்து ஆசைப்படுவது போல. ரத்தின சுருக்கமாய் நம் நாயகனும்.

   டீகடைக்காரர் கூட, “என்ன தம்பி இன்னிக்கு வழக்கத்தை விட சந்தோஷமா இருக்கிங்க?” என்று கேட்டார்.

  “இல்லிங்களே…” என்று அசடு வழிந்தான்.

   பால் ஊற்றி திரும்ப வந்த மலரோ, பணத்தை பெற்று கொள்ள வந்தவள், இப்பேச்சை கேட்க நேரிட்டது.

  “அட வந்த அன்னைக்கு முகத்தை தொங்கப்போட்டு அக்கடான்னு இருந்திங்க. இன்னிக்கு முகத்துல தெரியுது ஆனந்த தாண்டவம்” என்றதும் அங்கிருந்த சிறு கண்ணாடியில் முகத்தை கண்டான். அதில் அவனுக்கு பின்னால் மலர் நின்றிருந்தாள்.

  கண்ணாடியில் தனக்கென்ன ஆனந்தம் என்று ஆராய, அதில் மலர் தெரியவும், ”பொண்ணு… அந்த பொண்ணு.” என்று போனை எடுத்தான்.

     நொடியும் தாமதிக்காமல் அழைத்தான். மலரின் இடையில் சொறுகி வைத்த போன் அதிர்வை உண்டாக்கியது.

  அவள் மேனி அதிர, போனை எடுத்து பார்த்தவள் தமிழ் என்றதும் அவனை கண்டு திருட்டுத்தனம் கொண்டாள். நல்லவேளை ரிங்டோன் வைத்து இடத்தை அதிரவைத்து இவளை காட்டி கொடுக்கவில்லை‌.

தமிழரசன் அவளை கவனிக்காமல் போனையே வெறிக்க அவசரமாய் கத்தரித்து, சைலண்டில் போட்டாள்‌.

   ‘இவனுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு.’ என்று முனங்கி அவசரமாய் அங்கிருந்து அகன்றாள்.

    ‘என்ன எடுக்க மாட்டேங்கறாங்க’ என்று மீண்டும் அழைத்தான்.

     வீட்டுக்கு வந்தவள் டிவிஎஸ் வண்டியை நிறுத்திவிட்டு தந்தைக்கும் தனக்கும் டீயை போட்டு கொதிக்க வைத்து அவருக்கு கொடுத்துவிட்டு நிதானமாக அவள் பருகும் நேரம் மீண்டும் தமிழரசன் அழைக்க போனை எடுத்தாள்.

  அதற்குள் ஏழெட்டு முறை அழைத்துவிட்டான். எல்லாம் தவறிய அழைப்பாக மாறியிருந்தது.

  மலர் எடுத்ததும் “என்னங்க நீங்க… கட் பண்ண பண்ண போன் போடறிங்க. இதான் உங்க நாகரிகமா?
   நான் வெளியே இருந்தேன். அப்பா எதிர்ல இருந்தார். உங்கயிஷ்டத்துக்கு போன்‌ போட்டுட்டேயிருக்கிங்க. ஒரு பொண்ணு
நம்பர் கிடைச்சா போதுமே” என்று பொரிந்து தள்ளினாள்.

  எல்லா திட்டையும் கேட்டு, “பொண்ணு நம்பர் கிடைச்சா மட்டுமில்லைங்க. பொண்ணு கிடைச்சா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பேன். உங்களுக்கு என் பீலிங்ஸ் தெரியாது. இத்தனை நாள் எனக்குன்னு யார் இருக்கா என்று சங்கடப்பட்டேன். இனி எனக்குன்னு ஒருத்தி, என் உலகமே ஒருத்தியா வரப்போறா என்ற சந்தோஷத்தை அனுபவிக்கற எனக்கு தான் தெரியும்.” என்றான். அவன் பேசியது கேட்க கேட்க ஏதோவொரு மாயவுலகத்தில் செல்வது போல தான் தோன்றியது.

  “ஹலோ நான் ஒன்னும் உங்க மனைவி இல்லை. கட்டிக்கறேன்னு சொல்லவேயில்லை. ஜஸ்ட் புரப்பைல் பார்த்தேன் சில சேஞ்ச் மாத்த சொல்லி சொல்ல போன் போட்டேன். மத்தபடி வேற உரிமை உறவு என்னிடம் எதிர்பார்க்காதிங்க. ஏமாந்துப்போவிங்க” என்றாள்.

  “இல்லைங்க… நான் ஏமாறலை‌ உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு. அதனால் தான் எனக்கு போன் போட்டு பேசினிங்க. உங்கப்பா என் வீடு தேடி வந்திருந்தார். இப்ப கூட என் நம்பரை சேவ் பண்ணிட்டிங்க. இதெல்லாம் ஏதோ ஒரு சக்தி நம்மளை இணைக்குது.” என்றான்.‌

  ‘ஒரே ஏரியா, ஒரே தெரு, உங்க வீட்டுக்கு பால் ஊத்தறேன் இதான் இணைக்குது’ இதை சொன்னா நம்மளை ஏறயிறங்க பார்ப்பார்’ என்றவள் “இங்க பாருங்க தமிழரசன். உங்களை என்னை இணைத்தது இந்த கல்யாண அப்டேட் செய்யற இடம் மட்டும் தான். இந்த போன் சிம்மை தூக்கி போட்டுட்டா உங்களுக்கும் எனக்கும் எந்த இணைப்பும் இருக்காது. நீங்க என்னை விட்டுட்டு வேற வரன் ஏதாவது அமையுதானு தேடுங்க” என்றாள். அவள் வார்த்தையில் தீவிரம் இருந்தது. வேடிக்கையான பேச்சாக உதிர்க்கவில்லை‌.

   “ஏங்க… காலையில் என்னை நேரில் பார்த்த உங்கப்பாவுக்கு என் எதார்த்தமான உடை நடை பிடிக்கலையா?” என்றான். அவன் பேச்சில் அளவுக்கடந்த சோகம்.

   இவனை எப்படி துண்டிக்க என்று யோசித்தவள், திட்டம் கிடைத்தது “ம்ம்ம் ஆமா… எங்கப்பா வீட்டுக்கு வந்தார். உங்களை பத்தி தான் பேசினார். உங்களை பார்க்க சாயந்திரம் வந்தார். நீங்க டீ குடிக்க வெளியே வருவிங்க அப்படியே பார்க்கலாம்னு நினைச்சார். ஆனா நீங்க பால் ஊத்தற பொண்ணை வழிமறைச்சு  அந்த பொண்ணு பால் ஊத்திட்டு ஓட பார்த்தா நிறுத்தி நிறுத்தி பேசினிங்களாம்.” என்று பொய் கோபத்தோடு கேட்டாள்.

  “உங்கப்பா திரும்ப வந்தாரா? நான் வெளிய தானே நின்றேன். ஏங்க என்னிடம் நேர்ல பேச வந்திருக்கலாம்ல. ஏங்க உங்கப்பா தப்பு தப்பா பார்க்கறார்.
  அந்த பால் ஊத்தின பொண்ணுக்கிட்ட உங்க அப்பாவை பத்தி தான் விசாரித்தேன்.‌ நீங்க வேண்டுமின்னா நாளைக்கு அந்த பொண்ணு இருக்கறப்ப உங்களுக்கு கால் பண்ணி தர்றேன். அந்த பொண்ணுக்கிட்டயே கேளுங்க” என்றான்.

  “நான் ஏன் கேட்கணும்” என்றாள் மலர்.

  “ஏன்னா…. ஏதோ ஒரு அசைவு, உங்களால் என் இதயம் துள்ளுதுங்க.” என்றான்.

   மலர் சிறிது நேரம் மௌனமாக மாறினாள். அவனுமே மௌனத்தை நிதானிக்க நேரம் தந்து, “உண்மையாவே உங்களோட பேசறப்ப எனக்குள் முகம் தெரியாத நபரிடம் பேசற பீல் வரலை. நீங்க தான் நான் தேடற பொண்ணுன்னு மனசுல ஒரு பட்சி சொல்லுதுங்க.” என்றான்.

   மலரோ அதிர்ச்சி உற்றவளாக “அப்பா கூப்பிடறார். நான் வைக்கறேங்க‌. போன் போட்டுட்டே இருக்காதிங்க. எனக்கு வேலை இருக்கு. என்‌ மனசுல எந்த பட்சியும் எதுவும் சொல்லலை. அதனால ப்ளீஸ் என்னை விட்டுடுங்க” என்று வேண்டுகோள் விடுத்து துண்டித்தாள்.

    மலர் போனை துண்டித்து வாசலில் அங்கும் இங்கும் நடையிட்டாள்.

  வாசலில் செல்லும் ஒரு முதியவளோ, “ஏண்டி இந்த நேரத்துல போனை வச்சிட்டு அங்கயும் இங்கயும் நடக்குற?” என்று கேட்க, “ம்ம் உன் பையன் இந்த பக்கம் வருவான்ல அப்படியே வசியம் வச்சி இழுக்க நின்னுட்டுயிருக்கேன். வேலைய பார்த்துட்டு போவியா” என்று சிலாகித்தாள்.

   அந்த பெண்மணி ஒழுங்குகாட்டி நடக்க, தந்தையை கவனிக்க ஓடினாள்.

   அங்கே அவர் பாடலை கேட்டுக் கொண்டிருந்தார். அவரது முழு நேர பொழுதுபோக்கே எஃப் எஃம் கேட்பது மட்டுமே. அதில் பழைய பாடல்கள் தொகுப்பாய் வலம்வர, லயித்திருந்தார்.

    மலரோ, ‘பக்கத்து வீட்டு பருவ மச்சான். பார்வையிலே படம் பிடிச்சான்’ என்று கேட்க, ‘கடவுளே… இந்த தமிழ் இங்க வந்ததிலருந்து என் ஆவி போகுது.’ என்று இரவுக்கு இட்லியை ஆவியில் வேகவைத்தாள்.

  கிச்சன் ஜன்னலிருந்து எட்டிப்பார்க்க, தூரத்தில் சாப்பாட்டு பொட்டலத்தை வாங்கிக்கொண்டு தமிழரசன் சுற்றி முற்றி தேடுதலோடு வந்தான். அவன் தேடுதல் தன் தந்தையை தான் என்று புரிய, சிரித்தாள்.

  இந்த நேரத்தில் இன்னமும் உடைமாற்றாமல் மாப்பிள்ளை போல நடமாடுகின்றானே.

    எல்லாவற்றிற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். அவன் விரும்பியது போல பெரிய குடும்பம் தன்னுடையது இல்லை. தன் தந்தை இப்பொழுதோ அப்பொழுதோ என்ற ரீதியில் தான் இருக்கின்றார். சில நேரம் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாததை தெரியாத்தனமாக கொடுத்துவிட்டால் அடுத்த ஒரு வாரம் அவர் உடல்நிலை மோசமாகி இழுப்பறியில் தள்ளிவிடும். அந்த நேரம் எல்லாம், உயிருக்கு போராடும் உணர்வு.

   எதையோ உள்ளுக்குள் போட்டு உயிரை கையில் பிடித்திருக்கின்றார். அது தன் திருமணம் மட்டுமே. அது தமிழரசன் எதிர்பார்ப்புக்கு அதிகமே.
    இங்கு தனக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவோர், அவரவர் எதிர்பார்ப்பால் மட்டுமே திருமணம் தள்ளிக்கொண்டே போகும். இதே தமிழரசன் எதிர்பார்ப்பு எதுவுமில்லாமல் இருந்தால் இந்த நேரம் மணக்கோலத்தில் யார் கையாவது பற்றியிருப்பான். ஏன் தன் கையை கூட மனைவியாக பற்றியிருப்பான்.‌

   எதிர்பார்ப்புகள் தானே அனைத்தையும் தட்டிக் கழித்து வாழ்க்கையை வாழ விடாமல் தடையிடுகின்றது என்று நிதர்சனத்தோடு, எதிர்மறையாக எண்ணினாள்.

   தந்தைக்கு இட்லி ஊட்டிவிட்டபடி, தண்ணீரை கொடுக்க, சிறிது வழியவிட்டு குடித்தார்.

    வெளியே உணவை வாங்கி வந்த தமிழரசனும் உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு கை அலம்பினான்.

  நீண்ட டிராக் பேண்டும், பனியனும் அணிந்து படுத்தான்.

‘இன்னிக்கு காலையிலும் சாயந்திரமும் அந்த பொண்ணோட அப்பா என்னை நோட் பண்ண வந்திருக்கார். அப்படின்னா.. அவருக்கு என்னை பிடிச்சிருக்கும், அதே போல என்னிடம் போன் போட்டு திட்டாம பேசுறா அந்த பொண்ணு. அப்படின்னா அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு. நிச்சயம் இந்த வீடு வாசல் வீட்டை சுற்றி வளர்த்திருக்க மரம் செடி, நல்ல வேலை இதெல்லாம் மாப்பிள்ளைக்கு இருக்கு என்னை மறுக்க வாய்ப்பில்லை’ என்று ஊர்ஜிதமாய் நம்பினான்.

    இதே எண்ணத்தோடு நாளைக்கு அவ பெயரை கேட்கணும்’ என உறங்கினாள்.

எப்பவும் போல ஆழ்ந்த நித்திரையயில் தத்தளிக்க, பொண்ணு பெயர் என்ன?” என்ற குரல் எங்கோ கேட்க, “தமிழ்” என்றார் சிவப்பு நிற சேலைகட்டிய பெண்ணொருத்தி.

    “அது என் பேராச்சே. பொண்ணு பேரு என்ன?” என்று உலற, “ஆங்காங்கே மேளம் கட்டும் சத்தம் கேட்டது.

  தமிழரசன் விழிகள் அங்கும் இங்கும் சுழன்று நடப்பது கனவில்லை என்று திடுக்கிட்டு எழுந்தான்.

அவன் எண்ணியது போலவே அந்த ஆட்கள், ஆங்காங்கே நகைநட்டுடன், பட்டுடையுடுத்தி, உறவு முறை பெயர் கூறி ஆளாளுக்கு அழைத்து பேசினார்கள்.

   ஹாலுக்கு வந்தவன் ஒவ்வொருத்தராய் வேடிக்கை பார்த்தான். அதுவும் பின்னாலே நடந்து ஆச்சரியமாய் வேடிக்கை பார்த்தான்.

   “நீ…நீங்க எல்லாம் உண்மையான மனுஷங்க தானே? இல்லை வேற ஏதாவதா?” என்று கேள்விக்கேட்டு நின்றான்.

  ”மாப்பிள்ளைக்கு கேலியை பார்த்திங்களா? கல்யாண நேரத்துக்கு கிண்டல் பண்ணிட்டு இருக்கார்.’ என்ற குரல் வந்தது.

“அட முதல்ல டிரஸை மாத்துங்க. பட்டுவேஷ்டி சட்டை போடுங்க” என்று தமிழரசனை பார்த்து பேச, “யோவ் நீங்கலாம் யாரு? பேயா பிசாசா? பேய்யுன்னா நைட் பன்னிரெண்டு மணிக்கு தானே வரணும். நீங்க என்ன அதிகாலையில் ஐந்து டூ ஆறுக்கு வர்றிங்க.?”  என்று கேட்டு தலையை சொறந்தான்.

“டேய்… எங்களை எல்லாம் யாருனு கேட்கற? நாங்க எல்லாம் உன் சொந்தபந்தம்‌. இவர் உங்க மாமா அவங்க உன்‌அத்தை. நான் உன் பெரிம்மா, இந்தா உன்‌ பெரிப்பா. உன்‌ சித்தப்பா அர்ச்சனை தட்டை எடுத்துட்டு வந்தவாளிடம் ஆசி வாங்க போயிருக்கா, உன் சித்தி அம்மா இரண்டு பேரும் உன் பொண்டாட்டிய வர்றவளை அழைச்சி வர போனாங்க. உன் அப்பா சம்பந்தி வீட்டுக்காரங்க கூட பேசிட்டு இருக்காங்க. அதோ பாரு” என்று சுட்டிகாட்டினார்.

   இத்தனை உறவா? என்று கண்கலங்க ஒவ்வொருத்தரையும் ஆசைத்தீர கண்டான். தந்தை என்றவரை கைதீட்டிய திசையில் காணவும் உறைந்தவனாக நின்றான்.

   அதே நேரம் அழைப்பு மணியோசை விடாமல் அழுத்த, “நான் போய் திறக்கறேன்” என்று எல்லாரையும் பார்வையிட்டு நடந்தான். இரவே பால்பாத்திரம் கதவு பக்கமிருக்கும் ஸ்டூலில் வைத்திருக்க அதை எடுத்து கதவை திறந்தான்.

   மலரோ இவங்க எல்லாம் சொந்தக்காரங்க போல, பால் ஏதும் அதிகம் தேவைப்படுமோ என்று ”எக்ஸ்ட்ரா பால் ஊத்தவா?” என்று கேட்டாள்.

  “ஆங்… இவங்க உன் கண்ணுல” என்று பேசியவன் நொடியில் சுதாரித்தான்.
  ஏனெனில் அவன் அறைப்பக்கம் இருந்தவர்கள் ஒவ்வொருத்தராய் மாயமாக மறைய ஆரம்பித்தனர்.
  இந்த நேரம் இவங்களை தெரிதா? என்று கேட்டு இந்த பெண் தன்னை முட்டாளாக நினைக்க வாய்ப்புண்டு என்று மௌனம் சாதித்தான்.

  பால் அதிகம் வேண்டும் வேண்டாமென்று எதையும் தமிழரசன் கூறாததால் அவன் நீட்டிய பாத்திரத்தில் பாலை ஊற்றி வீட்டிற்கு வந்த வழியே அவசரமாய் சென்றாள்.

  அவள் செல்லவும் ஒவ்வொருத்தராய் மறைந்தனர்.

  ஒரு வேளை மலர் இருக்கும் போதே யாராவது மறைந்திருந்தால் அவள் பயந்து அலறி தமிழிடம் இந்த நிமிடமே விசாரித்திருப்பாள். 

-தொடரும்.

11 thoughts on “அலப்பறை கல்யாணம்-7”

  1. M. Sarathi Rio

    அலப்பறை கல்யாணம்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 7)

    உண்மை தான். எதிர்பார்ப்பு இருந்தாலே அங்கு ஏமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், இதில் கனவு காணுங்கள் அப்பத்தான் நினைத்தது நடக்கும்ன்னு சொல்றாங்களே..
    அது என்ன கேட்டகரி…?
    கனவு காணுறதௌ எதிர் பார்ப்பாடோத் தானே…?
    இதெல்லாம் நடந்தா நல்லா இருக்கும்ங்கிற எதிர் பார்ப்புத்தானே… நம்மை கனவு காண வைக்குது. அப்ப இதிலேயே ஏதோ முரண்பாடு இருக்கிற மாதிரி இருக்குதே.

    ம்.. பாவம் தான் தமிழ்…! வீடு நிறைய உறவுகள் வேணும்ங்கிறது அவனோட எதிர்பார்ப்பு. யாராவது ஒருத்தனாவது தன்னை மணமுடித்து போயிடமாட்டானாங்கிறது
    மலர் & அவளோட அப்பாவோட எதிர்பார்ப்பு. இப்படி இவங்க எத்ர்பார்ப்பும் ஒரு முரண்பாடோடத்தான் இருக்குது. ஒருவேளை, முரண்பாடுகள் ஒத்து வருமோ..? முரண்பாடுகள் தான் முன்னுதாரணங்கள் ஆகிடுமோ ?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *