19
ரேணுவிற்கு ராகவனிடம் இருந்த விருப்பத்தினால் அவனுடன் சேர்ந்து அவளால் கௌதமை குறை சொல்ல முடிந்தது என்பது உண்மையானால் கௌதமை குறை சொல்வதை பொறுத்து கொள்ள முடியாததிற்கு தனக்கு அவனிடம் விருப்பம் இருப்பதால் தானோ என்ற லாஜிக்கை அவளால் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. கௌதமிடம் அவளுக்காவது விருப்பம் இருப்பதாவது? ஒரு நல்ல திறமைசாலியை இந்த ராகவன் இப்படி வீணில் அசூசை கொள்கிறானே என்று தான் இருந்தது. மற்றப்படி விருப்பமாவது? ஒன்றாவது? தோள்களை குலுக்கி சிந்தனையிலிருந்து விடுபட்டவளாக ரேணுவை கூப்பிட்டாள்.
“சரி வருகிறாயா ரேணு போகலாம்”
“இல்லை சாரு. நீ போ. நான் ராகவனுடன் கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்து விட்டு வருகிறேன்”
“ஆமாம் சாரு. நீ போ. நான் அவளைக் கொண்டு வந்து விடுகிறேன்”
“சரி. நான் போகிறேன்”
வெளிச்சம் விடைப்பெற்று கொண்டு மெல்ல மறையத் தொடங்கிய அந்த பின்மாலைப் பொழுதில் இருள் மெல்ல கவியத் தொடங்கிய அந்த நேரத்தில் அந்திவானம் ஒரு வித சிவப்பு கலந்த ஆரஞ்சு நிறத்தில் வர்ண ஜாலம் காட்டத் தொடங்கி இருந்தது. பேருந்தில் சென்று விடலாம் என்ற நினைவை கைவிட்டு இந்த சுகானுபவமான கிளைமேட்டை ரசித்து கொண்டே நடந்து விடலாம் என்று தீர்மானித்தவளாக நடக்கத் தொடங்கினாள்.
அப்போது..!
காம்பவுண்ட் அருகே உள்ள கார் பார்க்கின் அருகில் கௌதமை அந்த பெண்ணுடன் பார்த்தாள்.
அந்த பெண் அவனை மிகவும் நெருங்கி நின்று அவனை அணைத்தவாறு நின்றிருந்தாள். என்னவோ பேசி கொண்டிருந்தாள். என்ன சொன்னாளோ அவன் இல்லை என்பதாக தலையசைத்தவாறு என்னவோ சொல்லி கொண்டிருந்தான். அவள், அவன் கன்னத்தில் எட்டி முத்தமிட்டாள். அவன் அவளை ஆதரவாக தோளில் தட்டி கொடுத்தான்.
இவள் வருவதை பார்த்து விட்டான். அங்கிருந்தே அவளை அணைத்தவாறே ஹாய் சாரு என்று அழைத்தான். இவனுக்கு விவஸ்தையே இல்லை என்று நினைத்தவளாய் அவனை கடந்து சென்று விட முயன்றாள். ஆனால் அவன் விடுவதாக இல்லை.
என்ன சேகர் என்று கேட்டவாறே நின்றவளை அருகில் வர கூப்பிட்டான். அப்போது தான் சாருவைப் பார்த்த மற்றவள் அவனிடமிருந்து விலகி கண்களை துடைத்து கொண்டே அவளைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்தாள்.
ஏன் அழுகிறாள்? என்ன பண்ணினானோ? சாலையோடு போகிறவளை ஏன் அழைக்கிறான்? என்ற சந்தேகத்துடன் தயங்கியவாறு மெல்ல அருகில் சென்றாள். அவளை அந்த பெண்ணிற்கு அறிமுகப்படுத்தினான். அவன் அவளை தமிழில் அழைக்கவுமே அந்த பெண்ணிற்கும் புரிந்தது சாரு அவனுடைய ஊர்காரியாகத் தான் இருக்க வேண்டும் என்று.
அந்த பெண் சாருவிடம் ஆங்கிலத்தில் சொன்னாள்.“இப்படி ஒரு நண்பனை கிடைக்கப் பெற்றது
உண்மையிலேயே உன் அதிர்ஷ்டம் தான்” என்று.
“சும்மா இரு மேரி.”
“சும்மா இரு கோதம். நன்றி சொல்ல வேண்டியது என் கடமை”
“அது தான் என்னிடம் சொல்லி விட்டாயே. இன்னும் என்ன?”
“எப்போதுமே நல்லதையும் நன்றியையும் நாலு பேரிடம் சொல்ல வேண்டும். குற்றம் குறைகளை சம்பந்தப்பட்டவரிடம் தனியாக நேருக்கு நேர் சொல்ல வேண்டும் என்று எங்கள் ஊரில் சொல்லுவார்கள்”
“எங்கள் ஊரிலும் கூட சொல்லுவார்கள்”
“பின் என்ன? நீ எனக்கு செய்த நன்மைகளை நாலு பேரிடம் சொல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் உன் தோழியிடமாவது சொல்ல வேண்டாமா?”
“ஹே, இங்கே என்ன நடக்கிறது? சேகர் அவளை பேச விடுங்கள்”
“ஓகே உன் இஷ்டம்”
“தோழியே, நான் இவனுடன் ஒரே வகுப்பில் படிக்கிறேன். எங்கள் நாட்டில் மிகவும் பின் தங்கிய பகுதியில் மத்திய தர குடும்பத்தில் இருந்து வருகிறேன். இந்த ஊரும் நாகரிகமும் ஒருபுறம் மிகவும் பயமுறுத்தியது என்றால் மொழியோ அதை விட அதிகமாக என்னை பயமுறுத்தியது. நான் இங்கே வந்த புதிதில் என் நாட்டு மாணவர்கள் கூட அதிகமாக என்னுடன் பேச மாட்டார்கள். எனக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கி கௌதம் தான் மொழியை கற்று கொடுத்து பாடத்தில் கவனத்தை ஊக்கி என்னை இன்று தேர்வில் மிகவும் சிறப்பாக செய்ய வைத்தது”
“ஹே மேரி நான் என்ன செய்தேன்? நீ அதற்கு தகுதியானவள் தான்”
“உண்மை. நான் தகுதியானவள் தான். அந்த தகுதியை வளர்த்து கொள்ள நீ உதவியிருக்காவிடில் நான் இன்று இப்படி இருந்திருக்க மாட்டேன்”
உணர்ச்சியால் தழுதழுத்த குரலுடன் மீண்டும் கௌதமை நெருங்கி எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் மேரி. அந்த சின்ன செய்கையில் தான் எத்துனை அன்பு. அருகில் வந்து பார்த்திராவிட்டால் இதை தான் தவறுதலாகத் தானே நினைத்திருப்போம் என்ற குற்ற உணர்வு குறுகுறுத்தது சாருவிற்கு. அதற்கு பதிலாக சாரு மேரியின் கைகளை வாஞ்சையுடன் பற்றியவளாக சொன்னாள்.
“கேட்கவே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது மேரி”
“சாரு. அவள் தான் சொல்கிறாள் என்றால் நீயும் அப்படியே சொல்கிறாயே?”
“இல்லை சாரு. உனக்கு இவனைத் தெரியாது”
“எனக்கு தெரியாதா?”
“பார்த்தாயா அவள் என்னை நம்ப மாட்டாள். அவளிடம் போய் சொல்லி கொண்டிருகிறாயே?’”
“என் ஊர்காரன் தான் வில்லியம்ஸ். ஆனால் அவன் கூட எனக்கு உதவினது இல்லை. ஆரம்பம் முதலே எனக்கு மட்டுமல்ல, என்னை போன்ற மற்ற பெண்களுக்கும் மாணவர்களுக்கும் கௌதம் தான் உதவி செய்வான்.”
சாருவிற்கு சுவாரஸ்யமாக இருந்தது. இவனா….? ஒரு கூட்டத்திற்கே இவன் உதவியாக இருந்திருக்கிறான். நான் இவனை தப்பாக நினைத்து கொண்டிருந்து விட்டேனே.
20
“ஏன் வில்லியம்ஸ் உங்கள் ஊர்காரன். அது மட்டுமல்ல உங்கள் மொழி அறிந்தவனும் கூட.. அவன் உனக்கு உதவியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே.”
“ஒன்று தெரிந்து கொள் சாரு. எப்போதுமே நன்றாக படிப்பவர்கள் அடுத்தவர்களுக்கு சொல்லி கொடுக்க மாட்டார்கள்”
“அப்படியா மேரி.?”
“ஆமாம் சாரு. நீயே கவனித்து பார். சாதாரணமாக படிப்பவர்கள் அடுத்தவர்களுக்கு சொல்லி கொடுப்பதினால் தனக்கு ரிவைஸ் ஆகும் என்று நினைத்து சொல்லி கொடுப்பார்கள். ஆனால் நன்றாக படிப்பவர்கள் நேரம் வீணாகி விடும் என்று ஒதுங்கி கொள்வார்கள்”
“ஓஹோ’
சொன்னவளுக்கு ராகவன் நினைவு வந்தது. எத்தனை பேருக்கு இவன் உதவி இருப்பான் என்று தோன்றியது. அவனை எப்போதுமே நன்றாக படிக்க கூடிய மாணவர்களின் தொகுப்பிலேயே தான் காண முடிந்திருக்கிறது. அதை வைத்து அவனை நல்லவனாகவே அடையாளப்படுத்திக் கொண்டு இருந்திருக்கிறேன். இவன் இந்த மாணவர்களுடன் உல்லாசமாக சுற்றி கொண்டிருக்கிறான் என்று இவனை எத்தனை மோசமாக நினைத்தோம். ஏன் இந்த பெண்களையும் தான் மட்டமாக நினைத்தோம். ச்சே. என்ன ஒரு அகம்பாவம் நமக்கு. தன்னுடைய சிந்தனையில் மூழ்கி இருந்தவளை மேரியின் குரல் இழுத்தது.
“மேலும் இன்று இந்த வேலை கிடைத்ததற்கும் கௌதம் தான் காரணம். என்னுடைய தயாரிப்பை மெருகேற்றியவன் அவன் தான். எனக்கு மட்டுமல்ல இன்னும்….அநேக மாணவர்களுக்கு ……….”
“போதும் நிறுத்து மேரி. விட்டால் என் புராணத்தை பாடிக் கொண்டே இருப்பாய்”
“பாடுவது ஒன்றும் தப்பில்லையே” என்று அவனை தடுத்தவள் சாருவிடம் திரும்பி தொடர்ந்தாள். “மேலும்…தோழியே……சமயத்தில் எனக்கு வேண்டிய பண உதவியும் செய்து……….”
அவசர அவசரமாக குறுக்கிட்டவன் அவளுடைய இரு கைகளையும் பிடித்து கொண்டு கெஞ்சினான்.
“மேரி, ப்ளீஸ் சும்மா இரு.”
“நான் சும்மா இருந்து விடுவேன். ஆனால் நம் மற்ற நண்பர்கள் உனக்கு பெரிய ட்ரீட் கொடுக்க வேண்டும் என்று சொல்லி கொண்டிருந்தார்கள்”
“ஆளை விடுங்கள். நான் ஊருக்கு போகப் போகிறேன்”
“அவ்வளவு தானா கௌதம்”
“நாம் பிறருக்கு செய்த நல்லதையும் அவர்கள் சொல்லும் நன்றியையும் அப்போதைக்கு அப்போதே மறந்து விட வேண்டும். நான் மறந்து விட்டேன். அவ்வளவு தான்.”
“அவ்வளவு தானா?”
“ம். அவ்வளவு தான். வேறு என்ன?”
“எங்களை எல்லாம் என்றேனும் சந்திக்க வேண்டும் என்று நினைக்க மாட்டாயா?”
“ஓ, அதை கேட்கிறாயா? அதெற்கென்ன கண்டிப்பாக என்றேனும் ஒருநாள் நாம் சந்திப்போம்.”
“சந்திப்போமா?”
“ஏன் சந்திக்காமல்? இந்த உலகம் மிகவும் சின்னது தான் மேரி. நினைத்த மாத்திரத்தில் சந்தித்து விடக்கூடிய தூரத்தில் தான் இருக்கிறோம். மனது மட்டும் இருந்தால் போதும்”
அவன் சொன்னதை கேட்டு தனக்குள் புன்னகைத்தவளாக, மீண்டும் மேரியை கைகளை குலுக்கி ஆல் தி பெஸ்ட் சொல்லி விட்டு கௌதமிற்கு தலையை அசைத்து போய் வருகிறேன் என்று ஜாடை காட்டி விட்டு கையை அசைத்து பை சொல்லியவாறு அங்கிருந்து நகர்ந்தாள்.
####
பின்மாலை பொழுதில் சிலுசிலுவென ஊதக்காற்றில் நடந்து போவது நன்றாக இருந்தது. கைகளை நெஞ்சின் குறுக்கே கட்டிக் கொண்டு நிதானமாக நடந்து கொண்டிருந்தாள் சாருலதா.
வானில் உயரத்தில் வெண்ணிலா கூடவே வந்து கொண்டிருந்தது. சாலையின் வலதுபுறம் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது தேம்ஸ் நதி. வெண்ணிலவின் ஒளி வெளிச்சத்தில் பளபளவென்று மினுங்கியது. ஆற்றின் ஓரத்தில் நடைப்பாதையில் போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாபில் போய் அமர்ந்து கொண்டாள்.
நதியைப் பார்த்தவாறு ஆணும் பெண்ணும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து கொண்டும் நின்றவாறும் நதியை நிலா வெளிச்சத்தில் ரசித்து கொண்டிருந்தார்கள்.
தூரத்தில் பாலம் வரிவடிவமாக தெரிந்தது. நதியில் சிறு சிறு படகுகள் சுற்றுலா பயணிகளுடன் மெல்ல அசைந்தாடி கொண்டு போனது. அதில் இருந்து வெளிப்பட்ட மெல்லிய மென்மையான இசை காற்றில் கலந்து அந்த பிரதேசத்தில் பின் மாலைப் பொழுதில் ஒருவித கிறக்கத்தை கொடுத்திருந்தது.
அய். ஆம். நாட் தட் ஸ்டப் என்ற ராகவனால் இந்த சூழ்நிலையை இந்த அருமையான காட்சியை ரசிக்க முடியாது. இதுவே கௌதம் என்றால் தான் மட்டும் தனியாளாக இல்லாமல் ஒரு கூட்டத்துடன் இதை ரசித்து கொண்டிருப்பான்.
கௌதமைத் தான் நினைத்து கொண்டிருந்தாள். அவன் இயல்பிலேயே அடுத்தவருக்கு உதவுபவன். அவனைப் போய் இப்படித் தவறுதலாக புரிந்து கொண்டு அவனை அளவிற்கு அதிகமாகவே இன்சல்ட் செய்து விட்டோம்.
“இந்த இடமும் இந்த நிலவும் இனிமையாக இருக்கிறது இல்லையா சாரு?”
தன் காதருகில் கேட்ட அந்த ஆழ்ந்த குரல் திரும்பி பாராமலே அது கௌதமுடையது என்பது சாருலதாவிற்கு தெரிந்திருந்தது.
“தின்க் ஆப் தே டெவில். தி டெவில் இஸ் ஹியர்”
“என்னய்யா சொல்றே சாரு?”
“ம்”
“நீ என்னை சாத்தான் என்று சொன்னதற்கு கோபித்து கொள்வதா? அல்லது என்னை நினைத்து கொண்டிருக்கிறாய் என்பதற்காக சந்தோஷப்படுவதா?”
“ஏன் சாத்தான்கள் சந்தோஷப்படுவது இல்லையா என்ன?”
“என்ன பதில் இது?”
“ஏன்…? இந்த பதிலுக்கு என்ன?”
“சரி விடு. என்னை சாத்தான் என்று சொல்லுமளவிற்கு எதற்கு என்னை நினைத்து கொண்டிருந்தாய்?”
“அது….வந்து. ஒன்னும் இல்லை.சும்மா தான்”
“சும்மாவா?”
“ம். சும்மா தான்”
“நீ ஏதேனும் காரியம் இருந்து என்னை நினைத்து கொள்வதே அதிகம். அப்படி இருக்க நீ என்னை சும்மா நினைத்து கொள்வதாக சொல்வது ரொம்பவே அதிசயமாக இருக்கு”
“அய்யய்யோ, தெரியாமல் சொல்லி விட்டேன்.”
“கமான் சாரு. ஆனாலும் சும்மா என்றாலும் கூட நீ என்னை நினைத்து கொள்வது எனக்கு சந்தோஷமாக இருக்கு”
“எப்படி சொல்வது என்று புரியாமல் ஒரு பேச்சுக்கு சொன்னால் உடனே அதை உண்மை என்று நம்பி வீணா கற்பனை பண்ணிக்காதீங்க”
“அப்படின்னா எதற்கு இந்த நேரத்தில் இந்த இடத்தில் என்னை நினைத்து கொண்டாய்?”
“மேரி சொன்னதை நினைத்து கொண்டிருந்தேன்”
“ஓ, அதுவா.”
இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். இருவருக்குமே ஒருவரை பற்றி மற்றொருவர் என்ன நினைக்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால் இப்படியே ஒருவர் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பது இதமாக இருந்தது. வாய் பேசவில்லையே தவிர மனது பேசி கொண்டது. உணர்வுகள் பதில் சொல்லி கொண்டிருந்தது.
Mounam yeppothum oru sugam thaan… Athuvum pidithavargal arugil erukkum pothu innumey kooduthal alagu😍