Skip to content
Home » அழகே அருகில் வர வேண்டும்-21-22

அழகே அருகில் வர வேண்டும்-21-22

21

இப்படியே ஒருவர் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பது இதமாக இருந்தது. வாய் பேசவில்லையே தவிர மனது பேசி கொண்டது. உணர்வுகள் பதில் சொல்லி கொண்டிருந்தது.

“எப்போது வேலையில் சேரப் போகிறீர்கள் சேகர்?”

“இப்போதைக்கு இல்லை. நான் ஊருக்கு போய் விட்டு கொஞ்ச நாள் சும்மா சுற்றி கொண்டு இருந்து விட்டு பிறகு ஒரு மாதம் கழித்து தான் வேலையில் சேர வேண்டும்’

“அதுவும் சரி தான்.”

“நீ லீவிற்கு ஊருக்கு போகிறாயா சாரு?”

“ஆமாம்.”

“நன்றாக படிப்பது மட்டும் முக்கியம் இல்லை. இந்த ஊரை இந்த கிளைமேட்டை அனுபவி. நல்ல நண்பர்களை சேர்த்து கொள். அவர்களுடன் விவாதித்து கொஞ்ச அனுபவ அறிவையும் பெற்று  கொள்ள வேண்டும்.”

“ம்.”

“கண்ணையும் காதையும் விரித்து மனதை நன்றாக திறந்து வைத்து கொண்டு எல்லோரையும் திறந்த மனதுடன் அணுகு. பாடத்தை மட்டுமன்றி வாழ்க்கையையும் புதிய கோணத்தில் அணுகலாம்”

“சரி கௌதம்”

இதை இவன் இதுவரை சொன்னது இல்லை. இன்று சாதித்து காட்டியவனாக அவன் சொல்வதை ஒப்பத் தான் வேண்டும். இதில் ஈகோவிற்கு இடமில்லை.

“போகலாமா?”

“ம்.”

பதிலாக முனகியவள் அவனை எப்போதிலிருந்து கௌதம் என்று அழைக்க தொடங்கினோம் என்று தனக்குள் வியந்து கொண்டாள். இன்று மாலை தான் இவனை நட்பு கொள்ள கூட தகுதியானவன் இல்லை என்று நினைத்தோம். எட்டியே நில் என்றதான பார்வை எங்கே போயிற்று?

அவள் மெளனமாக இருக்கவே, போவதற்காக எழுந்து நின்றவன் அமர்ந்திருக்கும் அவளைப் பார்த்தான். நிலா வெளிச்சத்தில் வரிவடிவமாக தெரிந்தவளை கண்டு மனம் தன்னை அறியாமல் அவள் வசப்பட்டதை உணராமலே ஒன்றும் பேசாமல் அவள் அருகில் மீண்டும் அமர்ந்தான். அவனுடைய அருகாமையும் அதனால் உண்டான கதகதப்பும், அந்த மயக்கும் மாலைப் பொழுதும், இனிமையான சூழலும், இனிமையான இசையின் பின்னணியும் ரொம்ப ரொமாண்டிக் ஆக இருந்தது சாருவிற்கு. எத்தனை நேரம் உட்கார்ந்திருந்தார்களோ? குளிர் எலும்பை குத்த தொடங்கவும் கௌதம் மீண்டும் சாருவிடம் சொன்னான்.

“என்ன சாரு, போவோமா? அல்லது இரவு முழுவதும் இப்படியே இருப்பது என்றாலும் எனக்கு சரி தான்”

புன்னகைத்து கொண்டவளாக எழுந்து அவனுடன் நடந்தாள். நடைபாதையில் நடந்து வந்த போது கௌதம் அவனையறியாமல் அவளுடைய விரல்களை மென்மையாக பற்றி கொண்டிருந்தான். அதில் தயக்கம் இருந்தது.

அவளுக்கோ அது மிகவும் பாதுகாப்பான உணர்வை தந்தது. ஒன்றும் மறுத்து பேசாமல் அவனுடன் இணைந்து நடந்தாள்.

கார் பார்க்கிங்கிற்கு வந்த போது கௌதம் சொன்னான்.

“வா சாரு. உன்னை உன் அறையில் விட்டு விட்டு போகிறேன்”

அன்றைய மாலைப் பொழுதின் மயக்கத்தில் இருந்ததினாலோ என்னவோ அல்லது கௌதமின் ஆளுமையால் அவனிடம் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டதாலோ அதிசயத்திலும் அதிசயமாக மறுப்பேதும் சொல்லாமல் அவனுடைய காரின் முன் கதவை திறந்து ஏறி அமர்ந்தாள் சாருலதா தேவி.

 ஹீத்ரு விமான நிலையம்.

மிகவும் பரபரப்பாக இருந்தது. போர்டிங் பாஸ் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள் நால்வரும். அது முடிந்து செக்யூரிட்டி செக் முடிந்து  உள்ளே வந்து அவர்களுக்கான கேட்டிற்கு முன் அமர்ந்திருந்தார்கள்.

“வா ரேணு ரெஸ்ட் ரூம் போய் வரலாம்”

“ராகவன் பார்த்து கொள்ளுங்கள். போய் வருகிறோம்”

“கௌதம் நீ இரு. நானும் போய் வருகிறேன்”

எல்லோரும் போய் விட்டிருந்தார்கள். கையில் இருந்த புத்தகத்தில் கவனமாக இருந்தான் கௌதம். பிரயாணத்திற்கான அழைப்பு வரவும் போனவர்கள் திரும்ப வரவும் சரியாக இருந்தது.

எதிகாட் விமானம் நல்ல சொகுசாக இருந்தது. ரேணு ராகவன் அருகில் போய் சட்டென்று அமர்ந்து விடவே சாரு வேறு வழியில்லாமல் கௌதமின் அருகில் அமரும்படி ஆயிற்று. சாருவும் கௌதமும் முன் வரிசையிலும் ரேணுவும் ராகவனும் பின் வரிசையிலும் அமர்ந்தார்கள்.

பிளைட் டேக் ஆப் ஆகி நிலைப்படவும் சீட் பெல்ட்டை அவிழ்த்து விட்டு தளர்வாக அமர்ந்ததும் சாருவிற்கு லேசாக பசி வயிற்றை கிள்ளியது. பயணசீட்டுடன் உணவும் சேர்த்து ஆர்டர் செய்திருப்பதினால் விமான பணிப் பெண்கள் உணவு கொண்டு வந்து தரும் வரை காத்திருக்க வேண்டும். கண்களை மூடி பசியிலிருந்து கவனத்தை வேறுபுறம் திருப்பினாள். ம். ஊஹூம். இருக்கையில் அசைந்து அசைந்து அமர்ந்தாள்.

“பசிக்கிறதா சாரு?”

“ம். கிளம்பற எக்ஸ்சைட்மண்டில் மதியம் சரியாக சாப்பிடவில்லை.”

“இந்தா இதை கொஞ்சம் சாப்பிடு”

“என்னது?”

“சான்ட்விச்”

“எங்களுடனே தானே இருந்தீர்கள். எந்த கேப்பில் இதை போய் வாங்கி வந்தீர்கள்?”

“ரூமிலிருந்து வரும் போதே வாங்கி கொண்டு வந்து விட்டேன்.”

“சாப்பாடு ஆர்டர் பண்ணலையா?”

“பண்ணி இருக்கிறேன். ஆனாலும் எல்லாம் செட்டில் ஆகிய பிறகு விமானப் பணிபெண்கள் உணவை அவனில் வைத்து சூடு செய்து பிறகு ஒவ்வொருவராக கேட்டு கேட்டு மெல்லமாக நம்மிடம் வருவதற்குள் பசி உயிர் போய் விடும். அதனால் நான் எப்போதும் கையோடு எதையாவது கொண்டு வந்து விடுவேன்”

“ரொம்ப முன் ஜாக்கிரதை தான்”

“ஒன்னு ரெண்டு தடவை நானும் அவஸ்த்தை பட்டு தான் பாடம் படித்திருக்கிறேன்”

“தாங்க்ஸ் கௌதம்”

திரும்பி பார்த்தாள். ரேணு தலையை கைகளில் தாங்கியவாறு அமர்ந்திருந்தாள். இவள் திரும்பி பார்ப்பதை கண்டு தலையை நிமிர்த்தியவள்  கண்களை சுருக்கி மெல்ல உதட்டை அசைத்து பசிக்கிறது என்றாள். இவள் கையில் இருந்த சிறு துண்டை அவளிடம் கொடுத்தாள். அவள் ஏது என்று ஜாடையில் கேட்கவும் சாரு கௌதமை கண்களால் காட்டினாள். ரேணு புருவத்தை உயர்த்தி

உதட்டை பிதுக்கினாள்.

உணவு வரவும் உண்டு விட்டு விளக்குகள் அணைக்கப்பட்டு மெல்ல உறக்கத்தின் வசப்பட்டார்கள் பயணிகள் அனைவரும். நல்ல ஆழ்ந்த உறக்கம். கண்கள் விழித்த போது கௌதம் சாருவின் தோளை முட்டி கொண்டு உறங்கி கொண்டிருந்தான்.

சூப் வந்தது. பொதுவாக இந்த பயணத்தில் தரப்படும் வெஜிடபிள் சூப் மிகவும் தரமாக இருக்கும். நல்ல சூடாக வேறு இருக்கும். குடிக்கலாம் என்று நினைத்தால் கௌதம் அவள் தோளில் சாய்ந்து பாவம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்..தோளை அசைத்தால் எங்கே முழித்து கொண்டு விடுவானோ என்று அசையாமல் அமர்ந்திருந்தாள்.

22

மிகவும் சொந்தமாக தோளில் சாய்ந்திருக்கும் அவனைப் பார்த்து கொண்டிருந்தவள் அவன் மெல்ல அசையவும் அவனுக்கு தோதாக தோளை கொடுத்து சரிந்து அமர்ந்து கொண்டாள். மீண்டும் உறங்க முயற்சி செய்தவளுக்கு உறக்கம் வரவில்லை. ஹெட் போனை எடுத்து மாட்டி கொண்டு படம் பார்த்து கொண்டிருந்தாள். டீ கொண்டு வரவும் மெல்ல அவனை பெயர் சொல்லி அழைத்து டீயை கொடுத்தாள். நன்றாக நிமிர்ந்து அமர்ந்தான். இவளுக்கு பால் பாக்கெட்டை உடைக்க முடியவில்லை. இவள் கையிருந்து வாங்கி அதை அழகாக கிழித்து கொடுத்தான்.

இவ்வளவு நேரமும் அவளுடைய தோளில் சாய்ந்து உறங்கியது அவனுக்கு தெரியுமா? என்று தன்னைத் தானே கேட்டு கொண்டாள்.

அபுதாபியில் இறங்கி சென்னைக்கு வேறு பிளைட் பிடிக்க வேண்டும். பயண மாறுதலுக்காக காரிடாரில் நடந்து வந்த போது கௌதம் சாருவின் மணிக்கட்டை பிடித்து நிறுத்தினான்.

“என்ன?”

“சாரு. நான் துபாயிற்கு பிரேக் ஜர்னியில் போய் விட்டு ரெண்டு நாட்கள் கழித்து தான் வருவேன்.”

“சொல்லவில்லை?”

“நீ கேட்கவில்லை. அதனால் நீங்களும் இப்படித் தான் போவீர்கள் என்று நினைத்திருந்தேன்.”

“இல்லை. நான் நேரே சென்னைதான்.”

“சரி சாரு. போய் வருகிறேன்”

“சரி. போய் வாருங்கள்”

“ம்.அப்புறம்” என்று அருகில் வந்தவன் சொல்ல வந்ததை சொல்லாமல் அவளை தன் தோளுடன் சேர்த்து  மெல்ல அணைத்தான். முதுகில் அவன் கைப்பிடி அழுத்துவது போல தோன்றிய அந்த ஒரு விநாடி மனது எதற்கோ ஏங்கிய அந்த ஓர் வினாடி சட்டென்று முடிவிற்கு வந்து அவன் அவளை சட்டென்று விட்டு விட்டு கையை அசைத்து விட்டு விரைந்து வெளியே போனான். எஸ்கலேட்டரில் கிழே இறங்கி கொண்டிருந்த அவனை தலை மறையும் வரை பார்த்தவாறு நின்றிருந்தாள் சாரு.

நம்முடன் கடைசி வரை வருவான் என்று நினைத்திருந்த போது இப்படி பொசுக்கென்று பாதி வழியில் விட்டு விட்டு போய் விட்டானே என்று இருந்தது அவளுக்கு.

நல்லவேளையாக இவனிடம் நாம் மனதை பறி கொடுக்கவில்லை. இப்படி பாதியில் விட்டு விட்டு போகிறவனை நம்பி அப்படி ஏதேனும் செய்திருந்தால் இன்று இத்தகைய பிரிவு தன்னை எத்தனை பாதித்து இருந்திருக்கும். மனதிற்கு சமாதானம் சொல்லி கொண்டாலும் அதையும் மீறி மனசு அவன் கடைசிவரை தன்னுடன் வந்திருக்கலாம் என்று நப்பாசைப்பட்டது.

அவன் ஜெர்மனில் வேலைக்கு போகப் போகிறான். இவள் மீண்டும் இதே லண்டன் மாநகருக்கே தான் வந்தாக வேண்டும். இன்னும் ஒரு வருட படிப்பு இருக்கிறது. அதற்கு பிறகு அவளுக்கு எங்கே வேலை கிடைக்குமோ?

இனி வாழ்நாளில் அவனை சந்திப்போமா?

காலச்சக்கரம் உருளும் வேகத்தில் அவனை மறந்து தான் விடுவோமா?

அப்படியே மீண்டும் சந்தித்தாலும் இன்றைய இந்த உணர்வுகள் அப்படியாகவே இருக்குமா?

இருக்கும்படியான சூழ்நிலையில் அவனை சந்திப்போமா?

அல்லது இவனை நினைக்கவே முடியாதவாறு நமக்கு வேறு  யாருடனாவது திருமணம் முடிந்திருக்குமா?

பிரயாணம் முழுவதும் அவன் சாய்ந்து உறங்கி கொண்டு வந்த தோளைப் போலவே மனமும் கனத்தது. அதற்கு எத்தகைய எதிர்காலமும் இல்லை என்றான போதும் மனம் மயங்கி தவித்தது.

“சாரு. என்ன அங்கேயே நின்னுட்டே? வா நேரமாகிறது”

ரேணுவின் குரல் அவளை யதார்த்த உலகிற்கு கொண்டு வந்தது.

கௌதம் ஏர்போர்ட்டின் வெளியே சென்ற திசைக்கு நேர் எதிர் திசையில் எர்போர்ட்டின் உள்ளே சென்றாள் சாருலதா தேவி.

9

சென்னையில் காலை ஒன்பது மணிக்கே வெய்யில் சுளீர் என்று தான் அடிக்கத் தொடங்கி இருந்தது. வழக்கமாக சாரு தங்கி இருக்கும் விடுதியில் இருந்து அவள் பணிபுரியும் அலுவலகத்திற்கு நடந்தே வந்து விடுபவள் ஆதலால் அன்றும் அப்படியே நடந்தே வந்து கொண்டிருந்தாள்.

அலுவல் தொடங்க இன்னும் நேரம் இருந்ததால் அவள் நடை சாதாரண வேகத்திலேயே தான் இருந்தது. திடீரென்று அந்த சின்ன சாலையில் போக்குவரத்து நெரிசலாகி போனது.

இந்த வெய்யிலும் புகையும் வாகன நெரிசலும் மூன்று வருடம் லண்டனில் இருந்தவளுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. இப்போது இந்த ஆறு மாதத்தில் ஓரளவு பழகி

போயிருந்தது.

சாலையில் நடந்து செல்லவே முடியாதவாறு வாகனங்கள் ஒலி எழுப்பி கொண்டு சென்றன. பின்னால் வந்த ஆட்டோ திடீரென்று ஹாரன் அடித்து இவளை திடுக்கிட வைத்தது. நகர்ந்து அந்த ஆட்டோவிற்கு வழிவிட்டவளை  ஆட்டோக்காரன் என்னமோ திட்டி விட்டு சென்றான்.

இதெல்லாம் தேவையா?

படிப்பு முடிந்ததும் அங்கேயே நல்ல கம்பனியில் பிளேஸ்மென்ட் கிடைக்கவும் வேலையை ஒப்பு கொண்டு ஒரு வருடம் செய்து கொண்டிருந்தாள்.

ரேணுவும் ராகவனும் கூட அங்கேயே தான் இருந்தார்கள். இப்போதெல்லாம் பாட்டி சொல்லாமலே சமயம் கிடைக்கும் போதெல்லாம் முருகன் கோயிலுக்கு போனாள் சாரு. ராஜ அலங்காரத்தில் முருகனை பார்க்கும் போதெல்லாம் திருநீறு இட்டிருந்த களையான முகத்தை கண்கள் தேடும். எங்கோ ஜெர்மனியில் இருக்கும் அந்த முகத்தை காணவே காண முடியாது என்று புரிந்த போதும் கூட.

அதே பருவநிலை. அதே தேம்ஸ் நதி. அதே பவுர்ணமி இரவு. அன்று போல இன்றும் தனிமையில் அமர்ந்திருந்தாள். கதகதப்பான அந்த அருகாமையை மனம் மறந்து விடவில்லை. சற்று ஏக்கமாக கூட இருந்தது.

அமைதியான இரவு, குளிர்ச்சியான தென்றல், சங்கீதம் பாடும் தெளிந்த நீரோடையான தேம்ஸ் நதி, இந்த அழகிற்கெல்லாம் அடைக்கலம் தருகின்ற முழுநிலவு 

பாட்டி விரும்பி அவ்வப்போது முணுமுணுக்கும் பழைய பாடல் நினைவில் வந்தது.

அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தார் என்னருகே.

நான் அடைக்கலம் தந்தேன் என்னழகை.

நீ அறிவாயோ வெண்ணிலவே

பாடலின் வரிகள் தன்னிலை மறக்கச் செய்திருந்தது சாருவிற்கு. வெளிப்படாத ஆசை நிராசையாகி ஒரு பெரிய பெருமூச்சாக வெளிப்பட்டது.

“இந்த இடமும் இந்த இரவும்  இனிமையாக இருக்கிறது இல்லையா சாரு?”

யாரை நினைத்து கொண்டிருந்தாளோ அவன் அன்று சொன்ன அதே வார்த்தைகளால் திடுக்கிட்டாலும் குரல் அவனது அல்லவே. கூடவே அது யாருடையது என்பதை அறிந்தவளாக ஏன் என் தனிமையை கலைக்க வந்தாய் என்று மனதிற்குள் சலித்து கொண்டாள்.

1 thought on “அழகே அருகில் வர வேண்டும்-21-22”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *