27
நொடியில் விளையாட்டை கை விட்டு விஷயத்திற்கு வந்தவனை மெச்சிக் கொண்டவளாக கேட்டாள். “பெரியவர் என்று சொல்கிறார்களே. அப்படியானால் சின்னவர் என்று ஒருவர் உண்டோ?” என்று.
“ஆமாம். இவருடைய மகன்”
“அவர் எங்கே? பார்க்கவே முடியவில்லையே”
“இந்த கம்பனியின் கிளைகள் தெற்காசிய நாடுகளில் நிறுவப்பட்டிருக்கிறது. அதை மேற்ப் பார்வையிட போய் இருக்கிறார்”
“எப்போ வருவார்?”
“அவர் போய் ஆறு மாதத்திற்கு மேலாகி விட்டது. இன்னும் ஒன்று இரண்டு மாதங்களில் வந்து விடுவார்”
“ஓஹோ. அது சரி..! நான் இங்கே இவருக்கு பக்கத்தில் தான் இருக்கிறேன். எனக்கு தெரியவில்லை. நீங்கள் எங்கோ பாக்டரியில் இருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லாம் தெரிகிறதே?”
“ஆங். அது அப்படித் தான்”
“எது எப்படித் தான்?”
“அது…!” எப்படி சொல்வது என்பதை யோசித்தவன், நொடியில் தெளிவுற்றவனாக “ஒரு வீட்டின் நிலவரம் அந்த வீட்டு வேலைக்கரிக்குத் தான் நன்றாக தெரியும். அதுபோல் ஒரு பாக்டரியின் கொடுக்கல் வாங்கலில் இருந்து முதலாளிகளின் சொந்த வாழ்க்கை விவரங்கள் வரை தொளிலார்களுக்குத் தானே அத்துப்படியாக இருக்கும்”
“நானும் தொழிலாளி தானே. எனக்கு தெரியவில்லை”
“நீ தொழிலாளியா?”
“இல்லையா பின்னே?”
“நீ நிர்வாகத்தில் இருப்பவள். நாங்கள் இறங்கி வேலை செய்பவர்கள். மேலும்”
“மேலும்”
“நீ ஏசி ரூமில் முதலாளிக்கு அருகில் இருக்கிறாய். நான் தொழிற்சாலையில் அல்லவா தொழிலார்களுடன் கிடக்கிறேன்”
“முதலாளிக்கு அருகில் இருப்பதால் நான் முதலாளி ஆகி விட மாட்டேன்”
“அது சரி”
“நீங்கள் சீனியர். உங்களுக்கு எல்லாம் தெரியும். என்னையும் கொஞ்சம் கவனித்து கொள்ளுங்கள்”
“அதை நீ சொல்லவே வேண்டாம்”
சட்டென்று மாறிய அவனுடைய பார்வையும் குரலில் ஏறிய கேலியையும் கண்டு அவசர அவசரமாக சொன்னாள்.
“சும்மா பேச்சுக்கு சொன்னேன்”
“நான் கூட உண்மையோ என்று நினைத்து விட்டேன்”
“அடடா. டோன்ட் இமாஜின் திங்க்ஸ்”
அவளை நன்றாக பார்த்தான். வெளியே பாக்டரி வரை போய் வந்ததில் சின்னதாக ஒரு அலுப்பு முகத்தில் இருந்தாலும் மிகவும் தெளிவாக இருந்தாள். எப்போதுமே ஒரு தோரணையுடன் இருப்பவள். இப்போது தோரணையுடன் மிடுக்கும் கூடி இருந்தது.
எட்டியே நில் என்ற பார்வை இல்லை. ஆனால் அதற்கு பதில் அவளுடைய தோரணையும் உடல்மொழியும் எவரையுமே அவள் அருகில் நெருங்கி விட முடியாத அக்கினி பழம் போன்று இருந்தது.
“சார், இந்தாருங்கள். டீ குடிங்கள்” ஒரு கோப்பையை கொண்டு வந்து நந்தினி கௌதமிற்கு கொடுத்தாள்.
இவ்வளவு நேரம் தன்னுடன் தானே பேசி கொண்டிருக்கிறான். அவனை டீ குடிக்க சொல்ல தனக்கு தோன்றவில்லை. பரவாயில்லை நந்தினிக்கு தோன்றி இருக்கிறதே. என்ன இருந்தாலும் நந்தினி அவள் வேலையில் கில்லாடி தான்.
அவளை பாராட்டும் விதமாக புன்னகையுடன் திரும்பியவள் நந்தினியின் பார்வையின் போக்கைக் கண்டு அதிசயித்தாள். அது கௌதமிடம் நங்கூரமிட்டிருந்தது.
நந்தினியின் பார்வை வேறு எதையோ சொல்கிறதே?
ஓஹோ கதை அப்படி போகிறதா?
டீயை வாங்கி கொண்டே நந்தினியிடம் இயல்பாக கேட்டான். “என்ன நந்தினி, எப்படி இருக்கே?”
“ஏதோ உங்கள் தயவுலே நல்லா இருக்கேன் சார்”
“என் தயவு என்ன என் தயவு? நீ உழைக்கிறே. நீ நல்லா இருக்கிறே. இதில் என் தயவு என்ன இருக்கிறது?”
“நீங்க மட்டும் இந்த வேலையை கொடுக்கலேன்ன என் குடும்பமே இன்னைக்கு ரொம்ப கஷ்டபட்டிருக்குமே சார்”
“ஓ.கே.”
“சார். போன தடவை வந்திருந்த போது உங்களுக்கு அடிபட்டிருந்ததே. சரியா போயிருச்சா சார்?”
“சின்ன அடி. அது அப்பவே சரியா போச்சு. அதை இன்னுமா ஞாபகம் வைத்திருக்கிறாய்?”
“உங்க விஷயம் என்றால் அதை நான் மறந்து விடுவேனா சார்?”
“ஓ.கே. நன்றி நந்தினி.”
பட்டுதறித்தார் போன்ற குரல் அவளுக்கு என்ன உணர்த்தியதோ டீ கப்பை எடுத்து கொண்டு வெளியேறினாள் நந்தினி. அதுவரை இருவரும் பேசியதை கவனித்து கொண்டிருந்த சாருவிற்கு ஆச்சரியம் தான்.
கௌதம் சாதரணாமாக தன் கீழே பணிபுரியும் சக ஊழியனிடம் விசாரிப்பது போலத் தானே விசாரித்தான். அதற்கு ஏன் இந்த பெண் இப்படி நாணி கோணி பதில் சொல்லணும்?
எப்போதும் தன்னிடம் கொஞ்சம் கம்பீரமாகவே நடந்து கொள்ளும் நந்தினி இன்று ஏன் கௌதமை கண்டதும் இப்படி வழிவதும் குழைவதுமாக இருந்தாள்? டீயை கொடுக்க வரும் போது முன்னை விட பளிச்சென்று இருந்தாள் நந்தினி. மென்மையாக அதேநேரத்தில் அவசர அவசரமாக சின்னதாக மேக்கப்பை கொஞ்சம் கூட்டி மெருகேற்றி இருந்தாள் போலும்.
கௌதமிற்காகவா?
மச்சக்காரன். எங்கிருந்தாலும் இவனை சுற்றி பெண்கள் கூட்டம் சூழ்ந்து கொள்கிறது. இங்கேயுமா?
“பரவாயில்லை. எங்கே போனாலும் அங்கே இருக்கும் பெண்களை வசியம் செய்து விடுகிறீர்கள்”
“நானா வசியம் செய்கிறேன்?”
“ஓஹோ. அவர்களாக வந்து வசியம் ஆகி கொள்கிறார்கள் போலும்?”
“அது தெரியாது. ஆனால் எனக்கு வசிய சக்தி ஏதும் கிடையாது”
“அதை நான் அல்லவா சொல்ல வேண்டும்”
“சொல்லு சாரு. எனக்கு அந்த சக்தி இருக்கிறதா என்று சொல்லு சாரு.”
“உண்மையில் உங்களுக்கு தெரியாதது போல் கேட்கிறீர்களே?”
“உண்மையாகவே எனக்கு தெரியாது சாரு. அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்”
“என்னவோ இதுவரை யாரையுமே வசியம் செய்தது இல்லை போல எப்படி பேசுகிறீர்கள்?”
“அப்படியா? யாரை எல்லாம் வசியம் செய்து விட்டேன்”
“உம்” என்றவள் பார்வை நந்தினியிடம் போய் திரும்பியது.
“யார் யாரை எல்லாம் வசியம் செய்து என்ன புண்ணியம்?”
“எதுக்கு இவ்வளவு சலித்து கொள்கிறீர்கள்?”
“பின்னே என்ன? நம் மனசிற்கு பிடித்தவர்களை வசியம் செய்ய முடியவில்லையே”
“எல்லா நேரமும் வசிய சக்தி வேலை செய்யாது கௌதம். மேலும்…!”
“மேலும்.?”
“அது எல்லாரிடமும் வேலை செய்து விடாது”
அவனுக்கு சொல்ல வேண்டிய செய்தியை சொல்லி ஆயிற்று. ஆனால் அவனா விடுபவன்? கடைசி வார்த்தை அவனுடையதாகத் தானே இருக்கும். லாஸ்ட் வேர்ட் ப்ரீக்.
“யாரிடம் வேலை செய்யாது என்பதை அறிந்து, அவர்களை வசியப்படுத்துவதில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே இருக்கிறது”
28
ஒருநாள் மதிய உணவிற்கு பிறகு சாருவின் அறைக்கதவை ஒற்றை விரலால் தட்டி விட்டு அவளுடைய அனுமதிக்கு காத்திராமல் உள்ளே நுழைந்தான் கௌதம்.
“வாங்க கௌதம்” சொன்னவள் மீண்டும் கணினியில் பார்வையை திருப்பினாள். சற்று நேரம் அவளை பார்த்து கொண்டு அமைதியாக இருந்தவன் அவள் திரும்பாமல் போகவே கேட்டான்.
“என்ன சாரு ரொம்ப பிசியாக இருக்கியா?”
“இல்லை…..வந்து ..ஆமாம்”
“ஏன் இவ்வளவு குழப்பமா இருக்கே?”
“ம். எப்படி சொல்லுவது?” தீவிரமாக யோசித்தவளை இடை மறித்து மீண்டும் கேட்டான் கௌதம்.
“என்ன அப்படி சீரியசான விஷயம்?”
“எனக்கு சின்னதா ஒரு குழப்பம் இருக்கு?”
அவளுடைய குழப்பத்தை தன்னுடைய மனதிற்குள் ஒருமுறை கோர்வையாக சொல்லி பார்த்து கொண்டவளாக அவனை தீர்மானத்துடன் பார்த்தாள். அவள் சொல்லப்போவதை கேட்கும் ஆவலுடன் அவளை ஊக்குவிக்கும் விதமாக தலையை ஆட்டி சொல்லு என்பதாக ஜாடை செய்தான். அவளுடைய குழப்பம் இப்போது அவனையும் தொற்றி கொண்டது. அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்தது.
“கட்டுமான கம்பனிகள் கொடுத்திருந்த பொருட்களுக்கான ஆர்டரை செக் பண்ணி கொண்டிருந்தேன்”
“ம்.”
“அந்த ஆர்டருக்கு நம் தொழிற்சாலை சப்ளை செய்திருக்கும் மெட்டீரியலின் வவுச்சரையும் சரி பார்த்தேன்”
“சரி”
“ரெண்டும் சரியாகத் தான் இருக்கு”
“நல்லது தானே”
“நல்லது தான். ஆனால்….”
“ஆனால்….ஆனால் என்ன?”
“நாம் வாங்கி இருக்கும் மூலப்பொருட்களின் கணக்கு சரியாக ஒத்து போக மாட்டேங்குதே”
“எப்படி?”
“முதலில் இருந்து சரியாக சொல்கிறேன்.”
“ம் “
“நாம் நூறு சதவீதம் மூலப்பொருட்களை கொள்முதல் செய்கிறோம். அதில் எழுபத்தி அஞ்சு சதவீதம் ஆர்டரை சப்ளை செய்து விடுகிறோம். சேதாரம் ஒரு பத்து சதவீதம் இருக்குமா?”
“ஆறிலிருந்து எட்டு சதவீதம் இருக்கும்”
“எட்டு என்றே……… இல்லை இல்லை பத்து என்றே வைத்து கொள்வோம். எழுபத்தி அஞ்சு சப்ளை. சேதாரம் பத்து. போக மீதி பதினைஞ்சு ஸ்டாக் இருக்கணும்.”
“ஆமாம்.”
“ஆனால் இருப்பதோ பன்னிரண்டரை சதவீதம் தான்”
“அப்படியா?”
“ம். அது தான் குழப்பமாக இருக்கு”
“நன்றாக செக் பண்ணிட்டியா?”
“என்னிடம் இருக்கும் டேட்டாவை தரோ செக் பண்ணிட்டேன்.”
“இப்போது என்ன செய்யலாம்?”
“ஏன் கௌதம் நம் தொழிற்சாலையில் இருந்து வெளியே போகும் பொருட்களின் விவரம் மெயின் கேட்டில் சீப் செக்குரிடியிடம் ரெஜிஸ்டர் இருக்கும் இல்லையா?”
“ஆமாம்”
“அதனுடன் ஒருமுறை என்னிடம் இருக்கும் டேட்டாவை கிராஸ் செக் பண்ணினால் ஏதாவது விடுபட்டு போய் இருக்கிறதா என்று பார்க்கலாம்”
“சரியாக சொன்னாய். செய்”
இப்போது அவளுடைய குழப்பம் தெளிந்தவளாக புன்னகையுடன் நன்றி சொன்னாள்.
“எனக்கு எதற்கு நன்றி?”
“என்னுடைய குழப்பத்திற்கு ஒரு வழி கிடைத்ததே”
“நீயே தானே அந்த வழியை கண்டு பிடித்தாய். அதனால் உனக்குத் தான் அந்த கிரெடிட்.”
அவள் பெரியவரிடம் போய் விவரம் சொல்லி மெயின் கேட் அவுட்பாஸ் ரெஜிஸ்டரை கேட்கும் முன் பைரவன் அதை கொண்டு வந்து அவள் மேஜையில் வைத்தான்.
நான் கௌதமிடம் தானே இதைப் பற்றி விவாதித்தேன். அதற்குள் எப்படி இது நம் கையில் கிடைத்தது?
மதிய உணவு இடைவேளையில் தினமும் கௌதம் பெரியவரை பார்க்க வருகிறானே அது ஏன்?
அவன் தான் பெரியவரிடம் விவரம் சொல்லி இருப்பானா?
மேற்கொண்டு அதைப் பற்றி யோசிக்க நேரம் இல்லாத வகையில் தொடர்ச்சியாக அவளுக்கு வேலை கடினமாக இருந்தது. கொஞ்சம் புரியாமலும் இருந்தது. புரிந்த போது ஒரு பெரிய முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது. அது நெடு நாட்களாக ஏன் வருட கணக்கில் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல சின்ன லெவலில் ஆரம்பித்திருந்த முறைகேடு காலப்போக்கில் கம்பெனிக்கு மிகப்பெரிய இழப்பை கொடுத்திருந்தது.
வழக்கம் போல மதிய உணவு இடைவேளையின் போது அங்கு வந்த கௌதம் சாருவின் முகத்தை பார்த்து எதையோ அவள் கண்டுபிடித்திருக்கிறாள் என்பதையும் அது மிகவும் முக்கியமானது என்பதையும் புரிந்தவனாக அவளை சற்றே நிதானபடுத்தி விஷயங்களை அறிந்து கொண்டான்.
அவள் சொல்லி முடிக்கும் வரை பொறுமையுடன் கேட்டு கொண்டிருந்தவன் மிகுந்த யோசனையுடன் முகவாயை தடவி கொண்டான். ஏதோ தீர்மானத்திற்கு வந்தவனாக அவள் தலையை செல்லமாக ஒரு தட்டு தட்டி விட்டு வெளியே “எதையும் சொல்லாதே சாரு” என்று சொல்லி சென்றான்.
எதற்கு வெளியே எதையும் சொல்ல கூடாது?
ஒருவேளை இவனுக்கு இது முன்பே தெரியுமோ?
அப்படியானால் இதில் இவன் பங்கு என்ன?
தான் கண்டுபிடித்திருக்கும் முறைகேட்டினால், மண்டையைக் குடையத் தொடங்கியிருந்த
குழப்பம் போதாது என்று இந்த குழப்பமும் சேர்ந்து கொண்டது. சோர்ந்து தான் போனாள் அவள்!
#####
காலையில் வந்ததிலிருந்து வேலை சாருவை நெட்டி முறித்தது. நந்தினி கொண்டு வைத்த டீ மேஜையின் மீது ஆறி போயிருந்தது. எல்லாவறையும் முடித்து நிமிரவும் பெரியவரின் தனி உதவியாளர் பைரவன் வந்து சாருவை பெரியவர் அழைக்கிறார் என்று கூப்பிடவும் சரியாக இருந்தது.
“சாரு டீயை குடித்து விட்டு போ”
“இல்லை நந்தினி எதற்காக அழைக்கிறாரோ?”
“இப்போது தான் பெரியவர் வந்தது போல் இருக்கிறது.”
“எப்படித் தெரியும்?”
“தெரிவதற்கென்ன? பைரவன் இப்போது தான் கூடையை கொண்டு போனார்”
“சரி இருக்கட்டும். வந்ததும் வராததுமாக எதற்கு என்னை அழைக்கிறாரோ?”
“அதற்குத் தான் சொல்கிறேன். டீயை குடித்து விட்டு நிதானமாகவே போ”
“இல்லை நந்தினி. என்னெவென்று கேட்டு விட்டே வந்து குடித்து கொள்கிறேன்”
“சரி. அப்புறம் உன் இஷ்டம்”
nice