3
“ஹாய் ராகவா, என்ன நீ கூட அதிசயமாக வெளியே கிளம்பிட்டே? அதுவும் பிரெண்ஸ்சுடன்” கௌதம் இவர்கள் எதிரே வந்து நின்று ராகவனிடம் கையை நீட்டினான்.
அவனுடைய நக்கல் புரிந்தாலும் புரியாதவன் போல அவன் கையைப் பற்றிய ராகவன் பதில் சொன்னான்.
“உன் அளவிற்கு இல்லாவிட்டாலும் நானும் அப்பப்போ போறது தான்”
“தட்ஸ் குட். கூட ரெண்டு அழகிகள் வேறு வந்திருக்கிறார்கள். ஹேய் ரேணு ஹாப்பி நியு இயர்”
அவனுடைய வாயால் ரேணு என்று அவள் பெயரை கேட்டதும் ஏற்பட்ட வெட்கத்தையும் போதாக்குறைக்கு கூடுதலாக அழகி என்று வேறு சொன்னதும் ஏற்பட்ட சந்தோசத்தையும் மறைக்க அவள் மிகவும் கஷ்டபட்டாள். அவளையே பார்த்து கொண்டிருந்த சாருவிற்கு அவன் ஏதோ ஒரு முகஸ்துதிக்கு சொல்கிறான், அதை இந்த பொண்ணு இப்படி நம்பி கொள்கிறதே என்றும், இப்படி கூடவா பெண்கள் இருப்பார்கள் என்று அதிசயப்பட்டும் கொண்டாள்.
“தேங்க்ஸ் கெளதம்”
“ஹாய் சாரு. ஹாப்பி நியு இயர்”
“நன்றி சேகர், உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்”
ரேணுவை போல அவனுடைய முதல் பெயரை சொல்லாமல் ரொம்ப பார்மலாக சேகர் என்ற அவனுடைய பின் பெயரை சொன்னதனால் அவனிடம் சற்று எட்டியே நில் உன்னை எனக்கு தெரியும் என்ற பார்வையுடன் மிகவும் கெத்தாகவே பதிலுக்கு முகமன் கூறினாள்.
அவனுக்குமே ரேணுவிற்கும் சாருவிற்கும் வித்தியாசம் புரியாமல் இல்லை. அவள் வேறு. இவள் வேறு.
“விடிய விடிய நாங்கள் அப்படியே ஒரு சுற்று சுற்றி விட்டு தான் அறைக்கு போக போகிறோம். கிளைமேட்டும் நன்றாக இருக்கிறது. நீங்களும் கூட வாங்களேன்”
“தேங்க்ஸ் கெளதம். நான் ராகவனுடன் என் அறைக்கு போக போகிறேன். காலையில் சந்திப்போம். வா ராகவா போகலாம்” ரேணு ராகவனை அழைத்தாள்.
“ஓகே, ரேணு. போலாம்” என்ற ராகவன் “சாரு. பை. நாளை சந்திப்போம்” என்று கையை ஆட்டி விடைப் பெற்றான்.
“அது தான் அவர்கள் இருவரும் உன்னை அம்போ என்று விட்டு விட்டு போய் விட்டார்களே, என் கூடத் தான் வாயேன்”
”அவர்கள் இருவரும் ஒரே திசையில் இருக்கிறார்கள். எனக்காக வந்து போவது என்றால் கஷ்டம். மற்றபடி என்னை அம்போ என்று விட்டு விட்டு போகவில்லை.”
“ஓகே, முறைக்காதே. உன் பிரெண்ட்ஸ் நல்லவர்கள் தான். ஒப்பு கொள்கிறேன். நீ இப்போது எங்களுடன் வருகிறாயா இல்லையா?”
அவனுடன் இருக்கும் கூட்டத்தை பார்த்தாள். அவனை இடுப்போடு அணைத்து பிடித்து கொண்டு லிண்டாவும் அவன் தோளில் சாய்ந்து கொண்டு ஒனாரியும் இவள் வகுப்பு மாணவர்கள் ஜோ, ரூடி, இன்னும் தெரியாத சீனியர் மாணவர்கள் என்று பெரிய பட்டாலியனே இருந்தது.
அவரவர் நாட்டு மக்கள் அவர்கள் சொந்த மனிதர்கள் அவர்கள் வயது, அவர்களிடையே இருந்த தோழமை என்று பொதுவில் இருந்த காரணத்தால், அந்த பொது இணைக் குழுவில் ஒருவருக்கு ஒருவர் அடிப்பதும் தள்ளுவதும் பிடிப்பதும் ஆடுவதும் பாடுவதுமாக உல்லாசமாக இருந்தார்கள். இவளை தெரிந்த மாணவர்கள் இவளை கண்டதும் ஹாய் ஹாப்பி நியு இயர் என்று வாழ்த்தினார்கள். இவளும் அவர்களை கண்டதும் சிநேகமாக ஒரு மெல்லிய சிரிப்புடன் பதிலுக்கு அவர்களை வாழ்த்தினாள்.
“வருகிறாயா? வரலையா?” குரல் கிட்டத்தட்ட அதட்டலாக இருந்தது.
எதற்காக இவன் நம்மை மல்லுகட்டுகிறான்? புருவ மத்தியில் சுருக்கம் விழ யோசித்து கொண்டாள்.
எத்தனை பேர் அருகில் இருந்தாலும் நம் மனிதர்கள் அருகில் இருப்பது பெரிய சாதனையாக அவன் நினைத்திருக்க கூடும். அதனால் தானா? அல்லது தனியளாக இருக்கிறாளே அவளை கொஞ்சம் என்டர்டெயின் செய்யலாமே என்ற நல்ல எண்ணமா? அல்லது நம்மவர்களிடம் தோன்றும் ஒரு அன்னியோநியமும் சொந்தமான உணர்ச்சியுமா? எது என்று வரையறுத்து சொல்லி விட முடியாத ஒரு மாதிரி உணர்வா?
அவளுக்குமே அவனை கண்டதும் நம்மவன் என்றதான ஒரு உணர்வு ஏற்படத்தான் செய்ததது. ஆனால் அதற்காக கூட அவள் அவனுடன் போக தயாரில்லை.
“தேங்க்ஸ் சேகர். நான் போய் படுக்க போகிறேன். நாளை சந்திப்போம்”
“உனக்கு என்னுடன் வர பிடிக்கவில்லையா? அல்லது இவர்களுடன் வர பிடிக்கவில்லையா?”
“இது என்ன கேள்வி? பிடிப்பதற்கும் பிடிக்காததற்கும் இதில் என்ன இருக்கிறது?”
“அப்படியானால் வருவதற்கு என்ன?”
“ம்” தயங்கினாள்.
“உனக்கு என்னோடு வருவது தான் பிரச்சினை”
அவள் பதில் சொல்லவில்லை. ஏனெனில் அது தான் உண்மை. அதை சொல்லி வீணில் அவனை வருத்துவானேன்?
ஆனால் அவனோ அவளை விடுவதாக இல்லை. தனக்காக இத்தனைப் பெரிய கூட்டமிருந்தாலும் இவள் தன் அழைப்பை இப்படி நிராகரிப்பது அவனுடையை ஈகோவை எங்கேயோ குத்தியது.
“இல்லை, என் இடத்தில் ராகவன் உன்னை கூப்பிட்டிருந்தால் நீ போய் இருந்திருப்பாய்”
“இருக்கலாம்” அவளுக்குமே மனதின் அடியில் ஒரு நமனம்ப்பு ஏற்பட செய்தது. என்ன இவன்!
“போ, ராகவன் கோவிலுக்கு அழைத்து கொண்டு போவான். அவனுடன் போய் பஜனை பண்ணு.”
“சரி. நல்லது தானே. புதுவருடமும் அதுவுமாக கோவிலுக்கு போவது நல்ல விஷயம் தானே?”
“நீ எல்லாம் ஊரு விட்டு ஊரு வந்தாலும் மாறவே மாட்டாய். ஹிப்போகிரேட்ஸ் தான் நீ.”
“இருந்து விட்டு போகிறேன். அதனால் உங்களுக்கு என்ன கஷ்டம்?” எரிச்சல் அப்பட்டமாக பிசிறடித்தது.
”ராகவனுடன் போக முடிகிறது உனக்கு. என்னுடன் வருவது என்றால் பிடிக்கவில்லை. அப்படித் தானே?”
“இப்போது உங்கள் பிரச்சினை என்ன சேகர்?”
“புது வருடமும் அதுவுமாக நம் ஊர்காரி ஆயிற்றே. கொஞ்சம் சந்தோசமாக இருக்கலாமே என்று அழைத்தால் ரொம்பத் தான்..”
“அதே தான் நானும் கேட்கிறேன். புதுவருடமும் அதுவுமாக ஏன் என்னிடம் கோபப்படுகிறீர்கள்?”
“கோபம் எல்லாம் இல்லை. இந்த ஊருக்கு வந்தும் கூட இன்னும் நம்மூரு கட்டுபெட்டியாக இருக்கிறாயே?”
“ஊரு விட்டு ஊர் வந்தால் வேர் விட்டு போய் விடுமா?”
“என்னது..? என்ன சொன்னே?”
“ம்..! ஊரு விட்டு ஊரு வந்து விட்டால் நம்முடைய வேர் என்பது விட்டு போகுமா?”
“அப்படின்னா என்ன?”.
“நமக்கென்று ஒரு கலாச்சாரமும் பண்பாடும் இருக்கிறது. அது ரொம்ப விசேஷமானது. நம்மை மற்றவர்கள் மத்தியில் தனித்து காட்ட கூடியது. அது தான் நம்முடைய வேர். நம் ஊரை விட்டு இங்கே வந்ததினால் நம் வேரை மறந்து விட முடியுமா?”
“அப்பப்பா..! எவ்வளவு பெரிய லெக்சர் கொடுக்கறே. சரிம்மா உன் இஷ்டம். ஆளை விடு”
“சாரி..”
ஓகே என்று சொல்லி விட்டு அவனை அணைத்து கொண்டு நின்றிருந்தவளை மேலும் தன்னுடன் நன்றாக இறுக்கி கொண்டவனாக அவர்களுடன் பேசி கொண்டே சென்று விட்டான். அவன் என்ன சொன்னானோ எல்லோரும் அவளை ஒருமுறை திரும்பி பார்த்து விட்டு பெரிதாக சிரித்து கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.
அவர்கள் எல்லோரும் ஒருசேர அவளை திரும்பி பார்த்து சிரித்தது உள்ளூர கோபம் மூண்டாலும் அவள் யாரையும் சட்டை செய்யாமல் தன் வழியில் நடக்கத் தொடங்கினாள்.
இவன் இந்த ஊருக்கு படிக்க வந்ததை விட என்ஜாய் பண்ணுவதற்க்கென்றே வந்தவன் போலும்.
அவன் செல்வதையே பார்த்து கொண்டு சற்று நேரம் நின்றிருந்தவள்,
ஊரும் வேரும்,.!
இதெல்லாம் இவனுக்கே எங்கே புரிய போகிறது என்று நினைத்தவளாக பெருமூச்செறிந்தாள்.
4
“என்னை என்னடா பண்ண சொல்கிறாய்? எனக்கு நேரமே இல்லை. நீ தான் வாயேன்” கெஞ்சிக் கொண்டிருந்தான் டாக்டர் மகேஷ்.
மகேஷ் கௌதமின் தாய் மாமாவின் மகன். இங்கே செட்டில் ஆனவன். அவன் மனைவி கயல்விழியும் இங்கே தான் டாக்டராக பணிபுரிகிறாள். அவன் விடுமுறைக்கு ஊருக்கு போயிருந்த போது கௌதமின் தாய் இந்துமதி இவனுக்காக கொஞ்சம் தின்பதற்கு என்று வீட்டில் தயார் செய்து கொடுத்தனுப்பிய தின்பண்டங்களை வந்து வாங்கி கொண்டு செல்லும்படி இவனை கெஞ்சி கொண்டிருந்தான்.
தாயில்லாத மகேஷிற்கு இந்துமதியிடம் அலாதியான பிரியமும் மரியாதையும் அதிகம். அவனை வளர்த்தவளும் அவளே தான். கெளதமுடன் உடன் வளர்ந்தவனும் கூட. அவனுடைய குணாதிசயங்கள் எல்லாம் மகேஷிற்கு அத்துப்படி. இந்துமதி ஒன்று சொல்லி அதை மறுக்கவோ அல்லது தட்டவோ அவனால் முடியாது. அவனுக்குமே நன்றாக தெரியும் கௌதம் இதை எல்லாம் சீண்ட போவதில்லை என்று. ஆனாலும் அந்த தாயின் பாசமுகம் இவனிடம் மகேஷை கெஞ்ச வைக்கிறது
“நானா உன்னை ஊரிலிருந்து மூட்டை கட்டி கொண்டு வரச் சொன்னது?”
“சரிப்பா. கொண்டு வந்து விட்டேன். இனி என்ன செய்வது?”
“உனக்கு எப்போது முடியுமோ அப்போது கொண்டு வந்து கொடு”
“திங்கற சாமான் டா. ரொம்ப நாள் வெச்சிக்க முடியாது. கெட்டு போய்டும். வாடா வந்து வாங்கி கொண்டு போ”
“ஏண்டா இப்படி உயிரை வாங்கறே? நீயோ டாக்டர். நேரமே கிடைக்காது. உன்னாலே என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பது என்பது முடியாதுன்னு தெரியும். அப்புறமும் ஏன்டா பொறுப்பா வாங்கி கொண்டு வந்து விட்டு என்னை கெஞ்சிட்டு இருப்பே?”
“கொடுத்து விட்டது உன் அம்மாவாச்சே. அதாவது என்னுடைய பிரியமுள்ள அத்தையாச்சே”
“அவ்வளவு பிரியம் இருந்தால் அவஸ்தை தான் படணும். நன்றாக படு”
“பரவாயில்லை. நான் அத்தைக்காக அவஸ்தை பட்டு கொள்கிறேன். நீ மட்டும் தயவு செய்து வந்து வாங்கி கொண்டு போ”
“இந்த அம்மாவிற்கு வேறே வேலை இல்லைடா. என்னமோ இந்த ஊரில் எந்த பண்டமும் கிடைக்காதது போல ஒரு பாவலா. காசை தூக்கி விட்டெறிந்தால் எதுவும் இங்கே கிடைக்கும்.”
“உனக்கு எல்லாம் ஈசியாக தான் இருக்கும். என்னை மாதிரி அம்மா இல்லாமல் வளர்ந்திருந்தால் உனக்கு தெரிந்திருக்கும் அம்மாவின் அருமை.”
“அப்பனே ஆரம்பித்து விடாதேடா உன் அம்மா புராணத்தை”
“அப்படி என்றால் ஒழுங்கு மரியாதையாக வந்து வாங்கி கொண்டு போ. உனக்கு புண்ணியமாக போகும்.”
“சரி வருகிறேன். ஆனால் நான் இங்கே இந்த கோடியில் இருக்கிறேன். நீயோ அந்த கோடியில் இருக்கிறாய். அவ்வளவு தூரம் வர என்னால் முடியாது”
“அதற்காக என்ன பண்ண சொல்கிறாய்?”
“உன் வீட்டில் கயல் இருந்திருந்தாலாவது வந்திருப்பேன். அவளை ஊரிலேயே விட்டு விட்டு வந்து விட்டாய்.”
“அவளுக்கு பிரசவ நேரம்டா. அவள் அம்மாவால் இங்கே இந்த குளிருக்கு தாக்கு பிடிக்க முடியாது என்று சொன்னதால் அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டேன்”
“அதற்காக என்றால் கூட உன்னை பார்க்கவென்று அவ்வளவு தூரம் வரமுடியாது. கயல் இருந்திருந்தால் ஒருவேளை சோறாவது கிடைக்கும். உன்னை நம்பி உன் வீட்டிற்கெல்லாம் வர முடியாது”
“ஆமாமாம் . கயல் இருந்திருந்தால் வந்திருப்பே. போடா போ. இந்த ரெண்டு வருடத்தில் நீ எத்தனை முறை வீட்டிற்கு வந்திருக்கிறாய்?”
“கயல் வந்ததும் அவசியம் வருகிறேன்.”
“சந்தோஷம் அவசியம் வா. இப்போதைய பிரச்சினைக்கு என்ன தீர்வு?”
“ஒன்று செய்யலாம்..ம்…”
“என்னன்னு சொல்லு. திரும்ப யோசிக்காதே. அப்புறம் வரமாட்டேன்னு பழைய பல்லவியையே பாடுவாய்”
“நீ பாதி தூரம் வா. நானும் பாதி தூரம் வருகிறேன்”
“சரி ஒழி. பாதி வழியில் எங்கே சந்திப்பது?”
“நீ சொல்லு”
“ம்.. நடுவில் முருகன் கோயிலில் சந்திப்போம்”
“கோயிலிலா?”
“ஏண்டா திகைப்பூண்டை மிதித்தவன் போல திகைச்சி போறே”
“திகைப்பூண்டா?…அப்படின்னா என்னடா?”
“மலை மேலே அல்லது காட்டுக்குள்ளே வளரும் ஒருவகை குத்து செடி. அதை யாராவது தப்பி தவறி மிதித்து விட்டால் அப்படியே திகைத்து நின்று விடுவார்கள். நாம் எதற்கு அங்கே வந்தோம் எங்கே போகிறோம் என்பது எதுவும் நினைவிற்கு வராது”.
“அச்சச்சோ. அப்புறம்?”
“அப்புறம் என்ன அப்புறம்? அப்படியே நின்னது நின்ன மேனிக்கு நின்ன வாக்கிலேயே பரலோகம்
போய் விட வேண்டியது தான்”
“காலை எடுத்து விட்டால்?.ஞாபகம் வந்து விடும் அல்லவா?”
“எடுத்தால் தானே……? அது தான் எல்லாமே மறந்து விடுமே”
“உண்மையிலேயே இப்படி செடி எல்லாம் இருக்கிறதா?”
“நம்முடைய ரெத்தினவேல் தாத்தா சொல்வது தான் இந்த கதை எல்லாம்”
“உனக்கு எப்படிடா இதெல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கு.”
“உனக்கு அம்மாவின் அப்பா அவர். அதனால் நீ லீவிற்கு தானே வருவே. எங்களுடன் தானே இருந்தார். இன்னும் நிறைய கதை எல்லாம் சொல்வார்டா நம் தாத்தா.”
“அது ஞாபகம் இருக்கு. ஆனால் கதை தான் ஞாபகம் இல்லை.”
“அவரு வருடாவருடம் சபரிமலை போய் வருவார் இல்லே. கோயிலுக்கு எதிரில் உள்ள மலையில் தானே ஜோதி தெரியும். கொஞ்சம் நாத்திகவாதிகள் எல்லாம் அந்த எதிர் மலையின் மேல் ஜோதி எப்படி வருதுன்னு பார்க்க போனவர்கள் எல்லாம் இது போன்றே திகைப்பூண்டை மிதித்து அதிலேயே சிக்கி கொண்டு செத்து போய்டுவாங்கன்னு தாத்தா சொல்வார். அதுமட்டுமல்ல அங்கே ஒருவகை கொடி உண்டாம். அதை தெரியாமல் மிதித்து விட்டால் அது நம்மை அப்படியே சுற்றி கொண்டு இறுக்கி மூச்சு முட்டி செத்து போவோமாம்”
“பரவாயில்லை மகேஷ். நீ டாக்டர் தொழிலை விட்டு விட்டு கதை எழுத போய் விடலாம்”
“இதெல்லாம் சின்ன வயதில் கேட்ட பான்டசி கதைகள். வழி வழியாக வந்த செவிவழி கதைகள். ஆனால் இன்றைக்கும் நீ அப்படித் தானே திகைச்சு நிக்கறே”
“அப்படியா நான் ஆகி போனேன்?”
“ஒரு பேச்சிற்கு சொல்லுவது தான். பின்னே நீயும் தான் ஆச்சு. கோயிலுக்கு வா என்றதும் கோயிலுக்கா? என்று மலைத்து போனாயே அதனால் தான் அப்படி சொன்னேன்.”
தொடரும்.
NICE