31
விழாவினை முன்னிட்டு தொழிற்சாலையே அல்லோலகல்லோலமாக இருந்தது. பெரிய விருந்திற்கு ஏற்பாடாகி இருந்தது. தொழிலாளர்களுக்கு கொடுக்கவென்று அன்பளிப்புகள் வந்து இறங்கி இருந்தது.
அன்று பெரியவரின் மகன் வரப்போகிறார். கூடவே இந்த தொழிற்சாலையின் மேனேஜிங் டைரக்டர் பொறுப்பை ஏற்று கொள்ள பெரியவரின் பேரன் வெளிநாட்டில் இருந்து வரப்போகிறார்.
பழையன கழிந்து புதியன வரப்போகும் தருணம். கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்?
நந்தினி முதற் கொண்டு அங்கே பணியாற்றும் பெண்கள் மிகவும் அலங்காரமாக அலங்கரித்து கொண்டு வந்திருந்தார்கள்.
சாருவும் கௌதமை முருகன் கோயிலில் சந்தித்த அன்று உடுத்தியிருந்த அதே ஆடையை உடுத்தி அதே அலங்காரத்தில் இருந்தாள். என்ன அன்று கோயிலுக்கு வருவதற்காக அலங்காரம் செய்திருந்தவள் இன்று அவளுக்குரியவனுக்காக அலங்காரம் செய்திருந்தாள்.
எங்கே கௌதமை இன்னும் காணவில்லை? அவனுடைய டிபார்ட்மென்ட் சகாக்கள் எல்லோரும் காணப்பட்டார்கள். இவனை மட்டும் இன்னும் காணவில்லை.
கௌதம் தான் விழா கமிட்டியின் செயல் தலைவர். ஆதலால் கடைசி நேர ஏற்பாட்டில் ரொம்ப பிசியாக இருக்கிறான் போலும். எல்லா கமிட்டி உறுப்பினர்களும் ரொம்பவே பிசியாக இருந்தார்கள். இவளுமே இன்விடேசன் கமிட்டியில் இருந்ததால் அவளுடைய வேலை தொடக்கத்திலேயே முடிந்து விட்டது.
கண்களும் மனதும் ஒரு சேர தேடிய போதும் யாரிடமும் கேட்கும் துணிவு அற்று சோர்ந்து போனாள்.
விழா தொடங்குவதற்கான அழைப்பு வரவே எல்லோரும் போய் இடத்தை ஆக்கிரமித்து கொண்டார்கள். விழா தொடங்கியது. மேடையில் அமர்ந்திருந்த பெரியவரும் அவருடைய மகன் தனசேகரும் பேசி முடித்து விட்டு அமர்ந்தார்கள்.
பெரியவர் எழுந்து இந்த கம்பனி தொடங்கிய கதையை சொல்லி அதை அவரும் அவர் மகன் தனசேகரும் எப்படி எல்லாம் வளர்த்தெடுத்தார்கள் என்பதையும் இன்று இங்கே இப்போது என் பேரன் இந்த கம்பனியின் பொறுப்பை எடுத்து கொள்ளுவார் என்று சொல்லி முடித்தார்.
மேடையில் காணப்படாத அவருடைய பேரனை எல்லோரும் தேடிய போது மேடையின் பக்கவாட்டிலிருந்து வந்த கௌதம் முன்னே வந்து பெரியவரின் காலைத் தொட்டு வணங்கினான்.
அவனை தூக்கி ஆரத் தழுவிய பெரியவர் ராஜசேகர் சொன்னார்.
“இதோ இவர் தான் என் பேரன் கௌதம் சேகர். இன்று முதல் இந்த கம்பனியின் மேனேஜிங் டைரக்டர்”
எல்லோரும் ஒருநிமிடம் ஆச்சரியத்தில் வாயடைத்து தான் போனார்கள். தங்களுக்குள் பேசிக் கொள்ளத் தலைப்பட்டார்கள். இவனா? இவரா? என்று ஆரவாரமாக இருந்தது. ஒருவழியாக சுதாரித்து கொண்டவர்களாக கைகளை தட்டி அமர்க்களமாக “கௌதம் கௌதம்”என்று முழக்கம் இட்டார்கள்.
மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைப் போல் சொல்லாமல் கொள்ளாமல் தன் மேல் விழுந்த இடியை தாங்கும் திறனற்று பலனிழந்து நாற்காலியில் சாய்ந்தாள் சாருலதா த
ராஜசேகரின் தந்தை வீரசேகர் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் சென்னையில் சிறிய அளவில் வியாபாரம் செய்து வந்தார். தொழிற்சாலையில் இருந்து வாங்கி வந்த கழிவுகளில் இருந்து இரும்பு, பித்தளை, அலுமினியம். நிக்கல் மற்றும் தகரத்தையும் பிரித்து தனித்தனியாக விற்பனை செய்து வந்தார்.
பின் இரும்பு கழிவை உருக்கி அதைக் கொண்டு சிறிய இரும்பு பொருட்களை உற்பத்தி செய்யும் வீ.எஸ் என்டர்ப்ரைசெஸ் என்னும் மோல்டிங் கம்பனியை பெருங்குடியில் தொடங்கினார்.
அவருக்கு பின் அவருடைய மகன் ராஜசேகர் இரும்பு கழிவுகளை வாங்காமல் நேரடியாக மூலபொருளாக இரும்பை கொள்முதல் செய்து அதிலிருந்து பொருட்களை உற்பத்தி செய்தார். தொழிற்சாலையும் பெருகியது.
அவருடைய ஒரே மகனான தனசேகர், சின்ன சின்ன இரும்பு பொருளாக அல்லாமல் பெருகி வரும் ரியல் எஸ்டேட் தொழிலை கருத்தில் கொண்டு அந்த தொழிலுக்கு தேவையான கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்தார். முக்கியமாக இரும்பு ராடுகள் அதிக அளவில் உற்பத்தி ஆயிற்று.
அவருடைய ஒரே மகனான கௌதம், தொழிற்சாலையை நிர்வகிக்கும் பொருட்டு மேல்படிப்பை லண்டனில் படிக்க அனுப்பி வைக்கப்பட்டான். அங்கிருந்து வந்து நிர்வாகத்தின் பொறுப்பை எடுத்து கொள்வான் என்று எல்லோரும் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக எல்லோர் எதிர்ப்பையும் மீறி ஜெர்மனியில் வேலைக்கு போனான்.
அதிர்ஷ்டவசமாக அங்கே அவன் வேலைக்கு சென்ற கம்பனியும் ஒரு கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாக இருந்தது. அங்கே இரும்பை நல்ல தரமேற்றும் இயந்திரங்களின் வேலைகளை கண்டவன் அவர்களுடைய தயாரிப்பின் தரமும் இன்றைய மார்கெட்டின் தேவைக்கேற்ப புதிய புதிய வடிவமைப்பும் செயல்திறன் கொண்ட பொருட்களை ஆர்வமுடன் கற்று கொண்டு மேலும் அவனாகவே பல புதிய தயாரிப்புகளை முயற்சியும் செய்து வெற்றியும் கண்டான்.
அதன் பயனாக அதையே இங்கு அவர்கள் கம்பனியில் அதை புகுத்தி தொழிலை மேலும் விரிவுபடுத்த முனைந்தான். அவன் படிப்பையும் கம்பனியின் வரவு செலவையும் கருத்தில் கொண்டு ஒரு நல்ல தொகையை கடனாக கொடுக்க வங்கிகள் முன் வந்தன.
புதிய இயந்திரங்களை தொழிற்சாலையில் நிறுவி அதை இயக்க இங்குள்ள இளம் தொழிளார்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டி இருந்தது. அதற்கு சீனியர்கள் முட்டுக்கட்டை போடக்கூடும். இவனை நேரடியாக கம்பனியின் எம்.டி யாக களம் இறக்கினால் மேலைநாட்டில் கிடைத்த படிப்பறிவை விட தங்களுடைய பட்டறிவு தான் பெரியது என்றோ அல்லது புது புது இயந்திரங்களை இறக்கி எங்கே ஆட்குறைப்பு செய்து விடுவார்களோ என்ற அச்சத்தையோ சீனியர் தொழிலார்கள் பரப்பி விட்டு விடக்கூடிய அபாயம் உண்டு.
அது தொழிலாளர்கள் பிரச்சினையாக வெடித்து வேலை நிறுத்தம் உற்பத்தி பாதிப்பு என்று
தொடங்கி ஏற்றுமதிக்கு பொருட்களை அனுப்ப இயலாமல் தொழிலே முடங்கி விடக்கூடிய ஆபத்து உண்டாகி விடக்கூடிய சூழல்.
தனசேகர் இல்லாத நேரத்தில், தொழிலார்களை இயக்கும் அனுபவமற்ற கௌதமால் அவர்களை சமாளிக்கவும் கம்பனியை ஒழுங்குபடுத்தவும் சிரமமாகி போகும். அதனால் தனசேகர் வரும் வரை கௌதம் அங்கே வேலை செய்பவனாக பணியில் அமர்ந்தால் எம். டி யின் பேச்சை ஏற்க ஈகோ காட்டும் தொழிலாளர்கள் தங்களைப் போன்ற சக தொழிலாளியின் பேச்சில் நம்பிக்கை வைப்பார்கள். பணக்காரனின் மகனாக பிறந்த கௌதமும் அடிமட்ட தொழிலார்களின் கஷ்டங்களையும் சைக்காலஜியையும் நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும். எங்கே எல்லாம் ஊழலும் முறைகேடும் ஏற்படக்கூடும் என்பதை தொழிலாளியாக அறிந்து கொண்டால் பிற்காலத்தில் அதை முதலாளியாக நிவர்த்தி செய்து விட முடியும்.
அதனால் எல்லா வகையிலும் கௌதம் அங்கே ஒரு தொழிலாளியாக சேருவது தான் உசிதம். தனசேகர் வரும் வரை தன்னை முதலாளியாக அடையாளப்படுத்தி கொள்ள கூடாது.
அதற்காக ரிசர்ச் அண்ட் டிவலேப்மென்ட் என்று புதிய பிரிவை தொடங்கி அதற்கு அவனை மேனேஜராக நியமித்து தொழிற்சாலையின் அடிப்பகுதியும் முக்கியமான பகுதியுமான இடத்தில் ஒரு கண் வைத்து கொள்ள ஏற்பாடாயிற்று. புதிய இயந்திரங்கள் வந்து இறங்கியது. பெரிய அளவில் பிரச்சினை இல்லாமல் வேலை தொடங்கியது. சின்ன சின்னதாக ஏற்பட்ட சலசலப்பையும் கௌதமின் தோழமையான அணுகுமுறை சரி செய்தது.
32
கௌதமிற்கு மேலைநாட்டில் கிடைக்கப்பெற்ற அறிவை கொண்டு விஸ்தரிக்கப்பட தொழிற்சாலையின் உற்பத்தியை கீழைநாடுகளில் ஏற்றுமதி செய்ய ஆர்டர் பிடிக்க தனசேகர் பயணமானார்.
பெரியவர் ராஜசேகர் நிர்வாகத்தை பொறுப்பெடுத்து கொண்டார். கௌதம் மறைமுகமாக நிர்வாகத்தை நடத்தினான்.
அவன் ஜெர்மன் போயிருந்த போது தான் ராஜசேகர் சாருவை இந்த வேலைக்கு தேர்வு செய்திருந்தார். தொழிளார்களுக்கு சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக கௌதம் பெரியவரை பார்க்க வருவதில்லை. வீட்டில் தான் எல்லா டிஸ்கசனும் இருக்கும். அதனால் சாரு அங்கே வேலையில் இருப்பது உண்மையில் கௌதமிற்கு தெரியாது.
சாருவை அங்கே கண்ட பின் தான் கௌதம் பெரியவரைப் பார்க்க மதிய உணவு இடைவேளை நேரத்தில் வரத் தொடங்கினான்.
தன் வாழ்க்கையில் சாருவை மீண்டும் சந்திக்க கூடும் என்று எதிர்பார்த்திராதவன், சந்திக்க வேண்டும் என்ற விருப்பமும் அற்றவனான கௌதம். சாருவை அங்கே கண்ட போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்.
காலப்போக்கில் அவளுடைய அருகாமையும் அழகும் அறிவும் பண்பும் சேர்த்து அவளை மட்டுமே நினைக்க கூடியவன் ஆகிப் போனான். நீண்ட வருடங்களாக நடைப்பெற்று வந்த சம்பத்தின் முறைகேடை அவள் கண்டுபிடித்த போது எந்நேரமும் தொழிற்சாலையில் இருக்கும் தன்னாலேயே அது முடியவில்லையே. பரவாயில்லை கெட்டிக்காரி தான் என்று சிலாகித்து கொண்டான்.
சம்பத்தின் கொலை மிரட்டலை அவள் தனக்கு தெரியபடுத்திய சாதுரியம் அவளிடம் அவனுக்கு ஒரு சுவாரஸ்யத்தை கொடுத்தது. ஏற்கனவே அவள் அழகில் மயக்கமிருந்தது. அதை விட அருகில் இருந்து பணியாற்றும் போது அவள் அறிவில் ஒரு நாட்டம் ஏற்பட்டிருந்தது.
விளைவாக அவளையே வாழ்க்கைத் துணையாக கொள்வது என்று மனம் தீர்மானித்து கொண்டது.
எப்போதும் பெண்களுடனே சுற்றி கொண்டிருப்பவன் பொறுப்பற்றவன் என்று தன்னை பற்றி நினைத்து கொண்டிருப்பவளிடம் தன்னைப் பற்றியும் தான் தான் இந்த தொழிற்சாலையின் முதலாளி என்பதையும் சொல்லி விட வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் தான் வருடாந்திர விழாவை முன்னிட்டு தந்தை தனசேகர் திரும்பி வந்திருந்தார். ஒரு வருடத்திற்கு தேவையான ஆர்டர்களை கை நிறைய கொண்டு வந்தவரிடம் தொழில் பேச்சு பேசவே நேரம் போதவில்லை. போதாக்குறைக்கு விழா கமிட்டி சேர்மன் வேறு. நேரமே இல்லாமல் திரிந்து கொண்டிருந்தான்.
சரி. இருக்கட்டும். எங்கே போய் விடப்போகிறாள்? விழா முடியட்டும். பொறுப்பானவனாக அவள் முன் போய் நிற்ப்போம். நம்மை மறுப்பதற்கு அவளுக்கு முகாந்திரம் இல்லாமல் போகும்.
விழா அன்று முன்பே வந்து விட்டிருந்த கௌதம் வரவேற்ப்பு பகுதியில் சாருவை பார்த்தான். முதன் முதலில் முருகன் கோயிலில் எந்த உடையில் அவளைக் கண்டு மயக்கம் கொண்டானோ அதே உடையில் அவளைக் காணவும் அவளை நெருங்கி சென்று மெல்ல அவளுடைய கரம் பற்றி அவள் காதில் தன்னுடைய ரகசியத்தை சொல்லி விடத் துடித்தவனை சாப்பாட்டிற்கு பொறுப்பு ஏற்றிருந்த உதவி மேனேஜர் சகாயம் வந்து உணவை சரி பார்ப்பதற்கு அழைத்தார். மறுக்க முடியாமல் அரை மனதுடன் சென்றவன் மீண்டும் அவளை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் தவித்து போனான்.
மேடையில் அவன் தாத்தாவின் அருகில் நின்றிருந்த போது கூட்டத்தில் அவளை பார்த்து விட்டான்.
ஆனால் என்ன இது?
சாருவின் கண்களில் தென்பட்ட திகைப்பையும் பரிதவிப்பையும் அவனால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இத்தகைய இடத்தில் நிற்பவனை கண்டு ஆச்சரியபடுவது தானே இயற்கை. ஆனால் இவள் என்னவென்றால் இப்படித் திகைத்து போனாளே. அது ஏன்? குழப்பம் மண்டைக்குள் வண்டாக குடைந்து கொண்டிருந்தது.
கூட்டம் முடிந்ததும் அவளை உடனே தேடி சென்று அவள் கரங்களை கோர்த்து கொள்ள துடித்தவனை, கூட்டம் முடிந்ததும் எழுந்து விரைந்து செல்லும் சாருவை நெருங்கி விட முடியாமல் தொழிலார்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது.
அவர்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் பெற்று கொண்டு கூட்டத்தில் இருந்து
ஒருவழியாக விடுபட்டு வெளி வந்தவனால் சாருவை பார்க்க முடியவில்லை.
மறுநாள் ஞாயிறு. அவளுடைய முகவரி தெரியாது. போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. அன்றைய நாள் முழுவதும் எல்லா வேலையையும் விட்டு விட்டு இதுவே வேலையாக தொடர்ந்து முயன்றும் அவளை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. நந்தினியிடம் கேட்கலாமா என்று உள்ளே எழுந்த ஆவலை எப்படி கேட்பது என்ற தயக்கம் புறம் தள்ளியது.
இரவு முழுவதும் அவள் நினைவில் உறக்கம் வராமல் புரண்டான். உறங்கிய அந்த சிறு உறக்கத்திலும் வந்த கனவில் அவள் தான் அவனுடன் மல்லுக் கட்டி கொண்டிருந்தாள்.
ஊர் விட்டு ஊர் வந்தால் வேர் விட்டு போகுமா என்று கேட்ட சாரு. யூரோப் டூருக்கு அழைத்த போது மறுத்த சாரு. முருகன் கோயிலில் தான் விழுந்து வணங்கிய போது தரிசனம் தந்த செவ்வரி ஓடிய வெண்பஞ்சு பாதங்கள். தேம்ஸ் நதி, குளிர் தென்றல், முழுநிலவு, அடர்த்தியான இரவு, கதகதப்பாக அருகில் அவள். மென்மையாக பற்றி கொண்ட அவளுடைய மெத்துமெத்தென்ற விரல்கள். விமானப் பயணம். தோளில் சாய்ந்து உறங்கிய போது ஏற்பட்ட இதுவரை தோன்றிராத சொந்தமான உணர்வு. ஏர்போர்டில் பிரிந்த போது ஒரே ஒரு நிமிடம் வலித்த பிரிவு.
தான் பார்த்து பழகிய எந்த பெண்ணையும் போன்றவள் இல்லை சாரு. இவள் தனித்துவமானவள். தன்னை நெறிப்படுத்தக்கூடியவள். தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் கட்டி காக்க கூடியவள். எனக்கு அவள் வேண்டும். என்றும் வேண்டும். என்றென்றும் வேண்டும்.
திங்கள் கிழமை அவளை காண வேண்டும் என்று ஆர்வத்துடன் வந்தவன் அவளைக் காணாமல் தேடிக் கொண்டு அவளுடைய இருக்கைக்கே வந்தான்.
அங்கேயும் இல்லை. இன்னுமா வரவில்லை?. ஏன்?
“குட் மார்னிங் சார்”
அவசரமாக திரும்பியவன் நந்தினியை கண்டு சாரு எங்கே என்று கேட்டான்.
“இன்னும் வரவில்லை சார்”
“எந்த நேரத்திற்கு வருவாள்?”
“இந்நேரம் வந்திருக்க வேண்டும் சார்”
“பின் ஏன் இன்னும் காணவில்லை?”
“தெரியவில்லை சார்”
“நந்தினி”
“சொல்லுங்கள் சார்”
“நீ எப்போதேனும் என்னை இந்த கம்பனி முதலாளி என்று அவளுக்கு சொல்லி இருக்கிறாயா?”
“இல்லை சார். சொன்னது இல்லை”
“ஏன்?”
“அவர்களுக்கு தெரியும் என்று நினைத்தேன் சார்”
“எதனால்?”
“அவர்கள் உங்களைப் பெயர் சொல்லி அழைத்தார்களே சார்.”
‘அதனாலே?”
“அதனாலே அவர்கள் உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள் என்று நினைத்தேன் சார்”
“உன் பெற்றோர்கள் எங்கள் வீட்டில் தான் வேலை செய்கிறார்கள் என்றேனும் சொன்னது உண்டா?”
“என்னைப் பற்றி எப்போதுமே நானும் சொன்னது இல்லை. அவர்களும் கேட்டது இல்லை”
“அவளைப் பற்றியேனும் தெரியுமா?”
“அதையும் அவர்கள் என்னுடன் பேசுவதில்லை. எப்போதேனும் அவர்கள் தாத்தா பாட்டியை பற்றி இரண்டு ஒன்று வார்த்தைகள் பேசியது உண்டு”
“சரி. அவள் வந்தால் உடனே என்னை வந்து பார்க்க சொல்”
மதிய உணவு வரை சாரு வரவில்லை.
நந்தினி தான் வந்தாள்.
சாரு வேலையை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பி இருக்கிறாள் என்று அப்போது தான் குரியரில் வந்திருந்த கடிதத்தை கையில் கொண்டு.
இனி என்ன செய்வது? அவளை எங்கே தேடுவது? அவள் இல்லாத வெறுமை திடீரென்று தாக்க அமர்ந்திருந்த இருக்கையில் சரிந்து சாய்ந்தான் கௌதம்.
பாவம் கௌதம் எப்படி சாருவை கண்டுபிடிக்கபோறான்
Achooo
interesting