Skip to content
Home » அழகே அருகில் வர வேண்டும்-33-34

அழகே அருகில் வர வேண்டும்-33-34

33

அந்த வெள்ளாட்டு கூட்டம் மண்சாலையை அடைத்து கொண்டு சென்றது. தலையில் சேலைத் தலைப்பை பிரியாக சுற்றி வைத்து அதன் மேல் உடை முள்ளை கட்டாக கட்டி வைத்து கொண்டு இடுப்பில் ஒன்றரை வயது ஆண் குழந்தையை இடுக்கி கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை நோக்கி கேட்டான் காரில் வந்த கௌதம்.

“ஏன்மா சிம்மபுரம் போகணும். எப்படி போறது?”

“சிம்மபுரமா?”

“ஆமாம்.”

“அப்படி இந்த பக்கம் ஒன்னும் இல்லையே”

“இல்லையா? அல்லது உனக்கு தெரியலையா?”

“இல்லே சார். நான் இங்கன தானே பொறந்து வளந்தவ. எனக்கு தெரியாதா என்ன?”

எப்படி இல்லாமல் போகும்? தான் கூகுளில் தேடி திருச்சியிலிருந்து புதுக்கோட்டை போகும் வழியில் சாலையின் வலது புறம் இருக்கும் நார்த்தாமலையை ஒட்டி மேற்கே இரண்டு கிலோமீட்டர் உள்ளே போனால் சிம்மபுரம் வரும் என்று நிச்சயித்து கொண்டு தானே சாலையின் வலதுபுறம் திரும்பியதே.

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை மாநில தார்சாலையில் வந்து இதோ நார்த்தாமலையை ஒட்டி திரும்பி வருகிறோம். இந்த பிரதேசத்திலேயே சிம்மபுரம் என்னும் கிராமமே இல்லை என்கின்றாளே இந்த பெண் என்று குழம்பி தயங்கி தான் ஒட்டி வந்த காரை சற்றே மட்டுபடுத்தினான் கௌதம்.

இவனுக்கு முன்னே சென்ற அந்த பெண் சாலையோரம் இருந்த பூவரச மரத்தில் கையில் இருந்த துறட்டுகோலால் ஆட்டுக்கு இலையை பறிக்க முயன்றாள். துறடு மரத்தின்  கிளையில் மாட்டி கொண்டு விடவே குழந்தையை கீழே இறக்கி விட்டு விட்டு எம்பி கோலை எடுக்க முயற்சித்தாள். அவளால் முடியவில்லை. காரில் இருந்து இறங்கியவன் எம்பி அந்த கோலை எடுத்து கொடுத்தான். அந்த சின்ன செய்கை அவளுக்கு அவனிடம் சகஜமாக பேசுவதற்கு ஏதுவாக இருந்தது. அப்போது சீருடையில் சென்ற பள்ளிமாணவன் ஒருவன் இவளை பார்த்து விட்டு என்ன செவந்தியக்கா என்று கேட்டான்.

“ஏலே கார்த்தி, இந்த பக்கம் சிம்ம………. அது என்ன ஊரு சார்?”

“சிம்மபுரம்”

“ஆங். அது தான். அது எங்கடா இருக்கு? அப்படி ஒரு ஊரே இல்லை தானே?”

“அய்யே அக்கா. அது நம்ம சிம்மாரம்க்கா”

“எது நம்ம சிம்மாரமா?”

“ஆமாக்கா.”

“அதைத் தான் இப்படி சொன்னாரா இந்த சாரு?”

விழுந்து விழுந்து சிரித்தாள் செவந்தி. அவள் சிரிப்பதை பார்த்து அவள் இடுப்பில் இருந்த

குழந்தையும் பொக்கை வாயை திறந்து சிரித்தது.  இதை பார்த்து கொண்டிருந்தவனுக்கு இவள் ஏன் இப்படி சிரிக்கிறாள் என்று எரிச்சலாக வந்தது.  அதை அந்த குழந்தையின் சிரிப்பு மட்டுப்படுத்தியது.

“சார். சிம்மபுரம்னு இங்கே இருந்து வெளியே போய் படிக்கிறவங்க வெளியூர்காரங்க தான் சொல்லுவாங்க. உள்ளூர்காரங்க சிம்மாரம்னு சொல்லுவாங்க சார்”

“சிம்மாரமோ சிம்மவரமோ சிம்மபுரமோ நார்த்தாமலைக்கு அருகில் ரெண்டு கிலோமீட்டர் உள்ளே இருக்கும் கிராமம்”

“கூகிளில் தேடினீங்களா?”

ஆச்சரியப்பட்டவனாக ஆமாம் தம்பி என்றான்.

“கூகிளில் சிம்மபுரம் ஜமீன்னு போட்டிருக்கும்”

“ஆமாம்”

“அங்கே யாரை பார்க்கணும் சார்?”

“ரத்தினவேல் கருணாகரன்”

குனிந்து இலைகளை சேகரித்து கட்டி கொண்டிருந்தவள் பெயரை கேட்டதும் டக்கென்று நிமிர்ந்து சொன்னாள்.

“ஏன் சார் முதலிலேயே பேரை சொல்லி இருக்கலாம் இல்லே.”

“உனக்கு ஊரே தெரியலே. இதில் பேரை சொன்னால் தெரியுமாக்கும்?”

“இந்த பக்கம் எல்லாம் பேரை சொன்னாலே தெரியும். அதுவும் பெரிய ஐய்யாவை தெரியாதவங்க இந்த சுத்துப்பட்டு கிராமத்திலே யாராச்சும்  உண்டா என்ன?”

“அது எனக்கு தெரியாது இல்லை”

“ஏன் சார் ஜமீனை தேடி வந்திருக்கீங்க?. அவரை பத்தி தெரிஞ்சிக்காமலா வந்தீங்க?”

“ஜமீனா?”

“ஆமாம் அவர் தான் சிம்மபுரம் ஜமீன்தார். அவரை நாங்க யாரும் பேரை குறிப்பிட்டு சொல்ல மாட்டோம். பெரிய அய்யான்னு தான் சொல்லுவோம்”

ஜமீன்தாரா? ரத்தினவேல் கருணாகரன் ஜமீன்தாரா? பெரிய அய்யான்னு தான் சொல்லணுமாமே? அவருக்கும் சாருவிற்கும் என்ன சம்பந்தம்?

அவளை காணவில்லை என்று தேடியவன் ராஜினாமா கடிதத்தை குரியரில் அனுப்பியவளின்

முகவரியை தேடி எடுத்து அவளை கண்டு பிடித்து விடும் ஆவலில் இல்லை இல்லை தேவையில் இதோ இவ்வளவு தூரம் வந்து இருக்கிறான்.

சாருலதா தேவி, பாதுகாவலர் ரத்தினவேல் கருணாகரன், சிம்மபுரம் போஸ்ட்  நார்த்தாமலை வழி, புதுக்கோட்டை மாவட்டம்.

இங்கே வந்தால் இந்த ரத்தினவேல் கருணாகரன் ஜமீன்தார். இன்னும் பழைய பாரம்பரியம் மாறாமல் அவரை அய்யா என்றே அழைக்கும் மரியாதைப்பட்ட மனிதர். இவருக்கும் சாருவிற்கும் என்ன சம்பந்தம்?

“வாங்க சார். நான் முன்னாடி போறேன். நீங்க பின்னாடி வாங்க. ஆங், இது கிராமம். குழந்தை குட்டி ஆடு மாடு எல்லாம் ரோட்டிலே தான் இருக்கும். பாத்து மெதுவா வண்டியை உருட்டிகிட்டு வாங்க”

அவன் சொன்னது போல வண்டியை உருட்டி கொண்டு தான் போனான். கிராமத்திற்குள் நுழைந்து ரெண்டு புறமும் வேடிக்கை பார்த்து கொண்டே சென்றான்.

வீடுகளுக்கு வேலிக்  கிலுவை அடைத்திருந்தது. குடிசைகளுக்கு முன்னே தட்டைப் பந்தல் முடைந்திருந்தது. ஊர் தான் கிராமம் என்று பெயரே தவிர அரசின் இலவச திட்டங்களும் தொலைதொடர்பு சாதனங்களும் நிறைந்திருந்தது. எல்லா குடிசையின் உச்சியிலும் டிவி டிஷ் ஆன்டனா சொருகி இருந்தது. ரெண்டு தெரு வழியாக போனார்கள் இருவரும்.

திடீரென்று தெரு முடிந்து கொஞ்ச தூரத்திற்கு வீடுகளே தென்படவில்லை. காரில் இருந்த வாக்கில் கார்த்திக்கிடம் கேட்டான்.

“ஏன் கார்த்திக். வீடுகளே இல்லை. இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?”

“அந்தா தெரியுதே அந்த வீடு தான் சார்”

தென்னமரங்களின் ஊடே தெரிந்தது அந்த பழமையான பெரிய வீடு. காட்டியவன் இடது புறம் திரும்பி போய் விட்டான். மிகவும் குறுகலான பாதையாக இருந்தது அந்த மண்சாலை. சாலையின் இருபுறமும் கருவேல மரம் முட்களை நீட்டி கொண்டு பாதையை அடைத்து கொண்டு நின்றது. மெல்லமாக காரை ஒட்டி கொண்டு வந்தான் எங்கே பக்கவாட்டு முட்கள் காரை கீறி விடுமோ என்று.  

அருகில் வர வர அந்த வீட்டின் முழு விஸ்தீரணமும் தெரிந்தது. கிட்டத்தட்ட ஒரு சின்ன அளவிலான அரண்மனை போன்று இருந்தது அது. சிதிலமடைய தொடங்கி இருந்த பழைய பெரிய வீடு. பெரிய பெரிய தூண்களுடன் கூடிய முகப்பு, பால்கனிகள் மாடிகள் பெரிய பெரிய சாளரங்கள் ஆளுயர காம்பவுண்ட். தேக்கு மர கேட். மரங்கள். உள்ளே  நுழைந்து கேட்டிற்கும் வீட்டின் முகப்பிற்கும் இடையே உள்ளே பாதையில் காரை நிறுத்தி இறங்கி நடந்தான் கௌதம். அடர்த்தியான மரங்கள் நிழலை வாரி இறைத்திருந்தது. வெய்யிலுக்கு அந்த இடமே குளுகுளுவென்று இருந்தது.

34

வீட்டின் முகப்பில் வழவழவென்று ரெட் ஆக்சைடால் பாவியிருந்த தரையில் கால்களை நீட்டி அமர்ந்து முறத்தில் முருங்கை கீரையை உருவி கொண்டிருந்த மூதாட்டி கௌதமை கண்டதும் நீட்டி இருந்த கால்களை சற்றே மடக்கினார் போல வைத்து கொண்டாள். 

“யாருங்க? என்ன வேணும்?”

“சாரு…சாருலதா தேவி?”

“ஆங். ஆமாம் இந்த வீடு தான். நீங்க யாரு?”

“நான் அவளுடன் ஒன்றாக படித்தவன்”

“வெளிநாட்டிலேயா?”

“ஆமாம். அவங்க இங்கே இருக்காங்களா?”

“அது தெரியாமத் தான் தேடிகிட்டு வந்தீங்களா?”

“இங்கே இருக்காங்கன்னு தெரியும். இப்போ வீட்டிலே இருக்காங்களான்னு கேட்டேன்”

கார் வந்து நின்ற சத்தமும் அதன் தொடர்ச்சியாக யாரோடோ பாட்டி பேசும் பேச்சு குரலும் கேட்டு வெளியே வந்த சாரு

“என்ன பாட்டி? யார்ட்ட பேசி கிட்டு இருக்கே?”

வெளியே வந்தவள் கீழே அமர்ந்திருக்கும் பாட்டியை பார்க்கவில்லை. மாறாக நின்று கொண்டிருந்த கௌதமை தான் கண்டாள். எதிர்பாராமல் அவனை அங்கே கண்டவளுக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று திகைப்பாயிற்று. நீண்ட தூரம் வண்டி ஒட்டி வந்த களைப்பையும் மீறி அவளை கண்டதும் ஒரு நிம்மதி அவன் முகத்தில் பரவுவதை கண்டவள் அதற்கான காரணம் விளங்காமல் அவனையே பார்த்து கொண்டு நின்றாள். அவளை முறைத்தான் கௌதம். ஒருநாள். ஒரே ஒருநாள் நின்று அவனிடம் என்ன எது என்று விவரம் கேட்காமல் அவள் பாட்டுக்கு ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு வந்து விட்டாளே.

“வீட்டுக்கு வந்தவங்களை வான்னு கூப்பிட மாட்டாயா?”

“எதுக்கு வந்தீங்கன்னு புரியாதப்ப எப்படி கூப்பிடுவது?”

“காரணம் இருந்தால் தான் உள்ளே கூப்பிடுவாயா?”

“அப்படி இல்லை”

“பின்னே என்ன?”

“காரணம் என்னவாக இருக்கும் என்று யோசனை”

“என்னவாக இருந்தாலும் வீட்டிற்கு வந்தவங்களை வா என்று கூப்பிடுவது தானே உன் மண்ணின்

பெருமை. நீ அப்படித் தானே கலாச்சாரம் பண்பாடு என்று லெக்சர் கொடுப்பே”

“அது உண்மை தான்”

“சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டால் தேடாமல் கொள்ளாமல் விட்டு விடுவேனா?”

“ஏன் தேடனும்?”

அவ்வளவு நேரமும் இருவரும் பேசி கொண்டிருந்ததை கேட்டு கொண்டு இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்த பாட்டியை பார்த்து சொன்னாள் சாரு.

“பாட்டி இவர் தான் நான் வேலை செஞ்ச கம்பனி முதலாளி”

“உன்னோட ஒண்ணா படிச்சவருன்னு சொன்னாரே”

“ஆமாம். என்கூட ஒண்ணா படிச்சவரு தான். இங்கே அவர் கம்பனியில் தான் வேலை செய்தேன்”

“நீ வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் தான் ஆவுது. அதுக்குள்ள தேடிகினு வந்துட்டாரே?” 

“அது தான் எனக்கும் தெரியலை பாட்டி”

“ஒரு கணக்கை முடிக்காமல் வந்து விட்டாள். முக்கியமான கணக்கு. அது தான் யாரையும் அனுப்பாமல் நானே கிளம்பி வந்தேன்”

“என்ன சாரு இப்படி பொறுப்பு இல்லாமல் இருக்கிறே? இருந்து கணக்கை முடித்து கொடுத்து விட்டு வந்திருக்க கூடாது. பாரு இப்ப இந்த தம்பி அங்கேருந்து இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்திருக்கு”

“தேங்க்ஸ் பாட்டி. நீங்களாவது சரியா புரிஞ்சிகிட்டீங்களே?”

“ஏன் தம்பி, சாரு இனிமே இங்கே தான் இருக்க போறேன்னு சொன்னாள். இப்ப நீங்க வந்திருக்கீங்களே, கையோடு கூட்டி கொண்டு போய்டுவீங்களா?”

“நான் இங்கே ரெண்டு நாள் இருந்து கணக்கை முடித்து கொண்டு போனால்  உங்களுக்கு ஆட்சேபனை ஒன்னும் இல்லையே?”  

“என்னப்பா இப்படி கேட்கறே? மகராசனா இரு. ரெண்டு நாள் என்ன ஒரு வாரம் கூட இருந்து கணக்கை முடித்து விட்டே போ”

“பாட்டி நீ பாட்டுக்கு அவரை இருக்க சொல்றே. அவரு எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா?”

“எவ்வளவு பெரிய ஆளா இருந்தா என்ன பாட்டி? இந்த கணக்கு ரொம்ப முக்கியமானது. அதை முடிக்காமல் போக முடியாதே”

“அது தான் தம்பி சொல்லுதே. அதுக்கு தெரியாதா எது முக்கியம்னு?”

“கரெக்ட் பாட்டி. சரியா சொன்னீங்க. தேங்க்ஸ் பாட்டி”

“சார் அவுங்க சொல்றாங்கன்னு நீங்க பெரிசா எடுத்துக்க வேணாம் சார். ரெண்டு நாள் நீங்க இங்கே தங்குவது எல்லாம் ஆகர காரியம் இல்லை. அங்கே உங்க வீட்டில் தேடப் போறாங்க”

“நான் எதை தேடுகிறேன் என்று அவர்களுக்கு தெரிந்தால் அவர்களும் என்னுடன் சேர்ந்து தேடுவார்கள்”

“முக்கியமானதா இருந்தால் பரவாயில்லை. கடைசியில் இதுக்குத் தான் போனியான்னு உங்க வீட்லே வருத்தப்படப் போறாங்க”

“முக்கியமா இல்லையான்னு நான் தான் தீர்மானிக்கணும்”

“தீர்மானிச்சிட்டீங்களா?”

“ஆமாம். தீர்மானிச்சிட்டேன்”

“எப்போதிலிருந்து?”

“அதை எல்லாம் இப்படி வீட்டு வாசலிலேயே நிக்க வெச்சி தான் கேட்கணுமா? அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்திருக்கிறேனே. ஒரு காப்பி கீப்பி கொடுக்க கூடாதா?”

“ஏன் சாரு அந்த தம்பியே வாய் விட்டு கேட்கற மாதிரி வெச்சிப்பியா? உள்ளே கூப்பிட்டுட்டு போ. தம்பி நீங்க உள்ளே போங்க.”

அப்பவும் அவள் அவனை வா என்று கூப்பிடாமல் நின்றாள். அவனோ அவளை சட்டை செய்யாமல் கைப்பையை எடுத்து கொண்டு உள்ளே போனான்.

இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த பாட்டிக்கு அவர்களிடையே இருந்த ஊடல் புரிந்தது. அவர்களுக்குள் என்ன கணக்கு இருக்க கூடும் என்பது புரியாதவள் இல்லையே. அவளும் அவளுடைய வாலிப வயதில் இத்தகைய கணக்கை தன் கணவருடன் போட்டவள் தானே.

2 thoughts on “அழகே அருகில் வர வேண்டும்-33-34”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *