Skip to content
Home » அழகே அருகில் வர வேண்டும்-35-36

அழகே அருகில் வர வேண்டும்-35-36

35

அந்த இளம் காலை வேளையில் நடப்பது நன்றாக இருந்தது. நார்த்தாமலை என்பது ஒன்பது சிறு சிறு குன்றுகளின் தொகுப்பு. வடக்கிலிருந்து தெற்காக ஓடிய குன்றின் அடிவாரத்தில் ஒரு சிறு குளம் இருந்தது. மலைகளில் இருந்து வழிந்து வரும் மழை நீரை சேமித்து அந்த சின்ன கிராமத்தின் குடிநீர்  தேவையை பூர்த்தி செய்கிறது அந்த குளம். காற்றுக்கு தண்ணீரின் மேற்பரப்பில் சின்ன சின்ன அலைகள் தவழ்ந்து கொண்டிருந்தது.

குன்றின் மீது ஏறத் தொடங்கினார்கள் இருவரும். பச்சை பசேலென்ற புல்வெளிகள் மட்டுமே அழகு என்று உருவகப்படுத்தியிருந்த கற்பனையை முற்றிலுமாக தகர்த்து விட்டது அந்த இயற்கை எழில் கொஞ்சும் குன்றுகளால் சூழப்பட்டிருந்த பிரதேசம். முட்செடிகளும் கருவேல உடை மரங்களும் இளஞ்சிவப்பு நிற பாறைகளும் புட்டுமாவு போன்ற திரிதிரியான இளஞ்சிவப்பு சரளைக் கற்களால் ஆன மண்ணும் எம்பி குதித்து ஓடும் ஆடுகளும் கண்கொள்ளாக் காட்ச்சியாக இருந்தது. டிசம்பர் மாத இளம்காலை பொழுதில் சில்லென்று வீசிய காற்றில் படபடத்த துப்பட்டாவை நன்றாக இழுத்து பிடித்து கொண்டு கூடவே நடந்தாள் சாரு. 

மேலே குன்றின் மீது விஜயாலயசோழீச்சரம் என்னும் சிவன் கோயில் ராஜராஜனின் முப்பாட்டனான விஜயலாய சோழனின் பெருமையை பறைசாற்றியவாறு இயற்கையின் சீற்றங்களுக்கு ஈடு கொடுத்து காலங்களை வென்று  நின்றது.

ஆளரவமற்ற பிரதேசம். தனிமை. பனி விலகத் தொடங்கியிருந்த  இளங்காலையின் இதமான சூடு. சூரியன் மேலே ஏற ஏற அதன் கிரணங்கள் பாறையில் பட்டு பிரதிபலிக்க தொடங்கி இருந்தது. பாறையின் மீது ஒற்றையாக நின்று இருந்த பெரிய கருவேலமரத்தின் கீழே நிழலில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். அமைதியாக. என்னவோ காலம்காலமாக இந்த இடத்தில் வசித்து வருபவர்களைப் போல மனம் மயங்கியது.

“ஏன் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி வந்தே?”

“என்ன சொல்லணும்?”

“ஊருக்கு போகிறேன்னு சொல்லிட்டு வந்திருக்கலாம் இல்லே?”

“எதுக்கு உங்களிடம் சொல்லணும்?”

“சாரு”

“என்ன?”

“ப்ளீஸ் நான் எதுக்கு உன்னை தேடி வந்தேன் என்று உனக்கு புரியவில்லையா?”

“எதுக்கு தேடி வந்தீர்கள்?”

“நீ வேண்டும் என்று உன்னை தேடி வந்தேன் என்பது மெய்யாலுமே உனக்கு புரியவில்லையா?”

“புரிந்து என்ன பிரயோஜனம்?”

“ஏன்? என்ன பிரயோஜனம் இல்லை?. நாம் இருவரும் நம் ஆயுள் முழுவதும் ஒன்றாகவே வாழப் போகிறோமே அது பிரயோஜனம் இல்லையா?”

“அதை நீங்கள் சொல்லிவிட்டால் ஆயிற்றா?’

“வேறு யார் சொல்ல வேண்டும்?”

“உங்கள் வீட்டில்?”

“என் வீட்டில் நான் சொல்வது மட்டுமே, என் விருப்பம் மட்டுமே முக்கியம்”

“ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் ஒரே வாரிசு. என்னை ஏற்பார்களா?”

“நீ கூடத் தான் ஜமீன் வாரிசு. உன் வீட்டில் என்னை ஏற்பார்களா?”

“என் வீட்டின் நிலவரம் உங்களுக்கே தெரியும். ஒருகாலத்தில் ஜமீனாக இருந்தவர்கள் தான். ஆனால் இன்று எங்களிடம் ஒன்றும் இல்லையே”

“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே”

“கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் வீணில் ஆசையை வளர்த்து கொண்டு கடைசியில் கையை சுடும் என்றாலும் தீயைத் தொடும்  பிள்ளை போல வேதனைப்படக் கூடாது அல்லவா? அதனால் தான் விலகி வந்து விட்டேன்”

“நான் நெருப்பா சாரு?”

“நீங்கள் சந்தனமாகவே இருந்தாலும் உங்கள் இருப்பிடம் நெருப்பே அல்லவா?”

“நெருப்பாகவே இருந்தாலும் நான் எப்போதும் உன்னருகில் சந்தனமாகவே இருப்பேன் என்று சொன்னால் நம்புவாயா சாரு?”

“எப்போதிலிருந்து கௌதம்?”

“எப்போதுமே. அதிலும்…”

கண்மூடி, கண்களுக்குள் விரிந்த காட்சியை தனக்குள் ரசிப்பவனை மிகுந்த ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தாள் சாரு. இருவருக்குமாக எத்தனையோ சம்பவங்கள். அதில் என்ன காட்சி அவன் கண்களுக்குள் விரிந்திருக்கிறது என்பதை குறிப்பிட்டு உணர முடியாமல் அவனாகவே சொல்லட்டும் என்று அமைதியாக அவனையே பார்த்து கொண்டிருந்தாள். சற்று நேரத்திற்கு பிறகு மெல்ல கண்களை திறந்தவன் அருகில் இருந்த சாருவை மிகுந்த ரசனையுடன் பார்த்தவாறு சொன்னான்.

“முருகன் கோயிலின் வாசலில் நிற்கிறேன் என்று அம்மாவிடம் சொன்னேன். அம்மா சொன்னார்கள் உள்ளே போய் சாமியை தரிசனம் செய்து விட்டு வா என்று. உள்ளே போனால் உன் முருகன் என்ன கொடுப்பார் என்று விளையாட்டாக கேட்டேன். பொண்ணு தருவார் என்றார்கள். கொடிமரத்தின் கீழே தரையில் வணங்கி விழுந்து கிடந்த போது செவ்வரி ஓடிய இரு வெண்பஞ்சு பாதங்களை கண்டேன். நிமிர்ந்து பார்த்தேன். அழகே உருவாக அறிவின் சுடராக, எனக்குரியவளாக அன்று முருகன் காட்டியவளான உன்னை என்றென்றும் மறக்க இயலாமல் தவித்தேன். உன்னை மீண்டும் என் ரெக்கையின் கீழே அந்த முருகனே கொண்டு சேர்த்த போது இவள் தான் என்னுடையவள் என்று உறுதியாக நம்பினேன்”     .

உணர்ச்சியுடன் சொல்லி முடித்தவனையும் அவன் சொன்ன நிகழ்வையும்  அவளும் தனக்குள் மீண்டும் ஒருமுறை திரும்ப பார்த்தாள். அதையே தானே பாட்டியும் சொன்னார்கள். முருகன் கோயிலுக்கு போ. உனக்குரியவனை அந்த முருகன் இன்று உன் கண்களில் காட்டுவார் என்று.

அப்படியானால் இது தெய்வச் செயலா?

ஒப்புக் கொண்டு கீழ்ப்படிவது தான் தன்னுடைய கடமையோ?

அவனருகில் நெருங்கி அமர்ந்து அவன் தோளில் தன்னுடைய தலையை சாய்த்து கொண்டாள். மனம் பெரும் புயலுக்கு பின்பு அமைதியாக இருந்தது. கடந்த நாட்களில் தன் மனதையும் அதில் இருந்த கௌதமிற்கான காதலையும் அறிந்தவள் அவனை மிகப் பெரிய பணக்காரனாக கண்டு பயந்து ஓடி வந்தவள் ஆயிற்றே.

தன்னுடைய எந்த கேள்விக்கும் பதில் சொல்லாத அவளின் இந்த சின்ன செய்கை அவனுக்கு போதுமானதாக இருந்தது.

36

தன்னுடைய எந்த கேள்விக்கும் பதில் சொல்லாத அவளின் இந்த சின்ன செய்கை அவனுக்கு

போதுமானதாக இருந்தது.

மெல்ல சொன்னாள். முருகன் கோயிலுக்கு வந்த அன்று தனக்கும் தன்னுடைய பாட்டிக்கும் நடந்த உரையாடலையும் அந்த நாள் அவனை கண்டதும் தன் மனத்திலும் இவன்  தான் அவனோ என்று மயங்கியதையும் தெளிவாக சொன்னாள்.

இருவரும் ஒருவர் கரத்தை ஒருவர் கோர்த்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார்கள். வெயில் உச்சிக்கு ஏறத் தொடங்கி இருந்தது. கரங்களை பிரிக்காமல் இருவரும் கீழே இறங்கி வந்தார்கள். மௌனத்தை கலைக்க விரும்பவில்லை இருவரும்.

அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று கௌதமின் மனதில் ஓடிய சிந்தனைக்கு நேர்மாறாக சாருவின் மனதில் அவன் எல்லாவற்றையும் பார்த்து கொள்வான் என்று நிம்மதி கலந்த அமைதி இருந்தது.

ஊரை நெருங்கும் போது உள்ளே போக முடியாதவாறு பாதையில் ஒரு கருவேலமரம் முறிந்து கிடந்தது. அங்கே போய்க் கொண்டிருந்த ஒரு நடுத்தர மனிதனை கேட்டார்கள் எப்படி போவது என்று.

“எரிச்சமேடு வழியாக போங்க”

“எரிச்சமேடா?”

“ஆமாம்.”

“இந்த பக்கத்தில் பெயரெல்லாம் ஒரு தினுசா இருக்கு. சிம்மாரம். எரிச்சமேடு”

காரை திருப்பி எரிச்சமேடு வழியாக வந்தார்கள். வரும் வழியில் ஒரு குளக்கரையில் இருந்த ஆலமரத்தின் நிழலில் பனைநுங்கு விற்று கொண்டிருக்கவே கீழே இறங்கி பனை ஓலையில் அவன் கட்டி கொடுத்த நுங்கை சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.

அங்கே மரத்தின் மறுபக்கம் பத்து பதினைந்து நடுக்கற்கள் மஞ்சள் பூசி குங்குமம் இட்டு பூ வைத்து பூஜை செய்ததற்கான சுவடுகளுடன் தென்பட்டது.

“இது என்ன நடுக்கற்கள் போலிருக்கிறது?”.

“ஏதேனும் போர் வீரர்கள் நினைவாக நட்டு வைத்திருப்பார்கள் போலும்”

அதைக் கேட்டு கொண்டிருந்த நுங்கு வியாபாரி சொன்னான்.

“சார் இது நடுக்கற்கள் இல்லை. இது கன்னி சாமிகள்”

“இத்தனை கன்னி சாமிகள் இருக்கிறதே? பொதுவாக ஊரில் ஒன்னே ஒன்னு சாமி தானே இருக்கும்”

“சார் அது ஒரு சோகமான கதைங்க”

“சோகமா? கன்னிகளுக்கு எப்பவுமே சோகம் தானே. சொல்லுப்பா”

“சிம்மாரம் ஜமீன்தார் இந்த பக்கத்து பொண்ணு மேலே ஆசைப்பட்டாராம். அதுக்கு ஜமீன் வீட்லே ஒப்புத்துக் கொள்ளலையாம். அதனால் அந்த பெண்ணையும் அதோடு சேர்த்து இந்த ஊரில் இருந்த கன்னி பெண்களையும் சேர்த்து வெச்சி இந்த இடத்தில் எரிச்சிட்டாங்களாம். அதனால் தான் இந்த இடத்திற்கு எரிச்சமேடுன்னு பேர் வந்ததாம்”

“அடப்பாவமே. அவ்வளவு பொல்லாதவர்களா சிம்மபுரம் ஜமீன்தார்?”

சாருவிற்குமே இது புது செய்தியாகத் தான் இருந்தது. அதனால் அவளுமே இதை காது கொடுத்து கேட்கத் தான் செய்தாள்.

“அப்படின்னு சொல்ல முடியாது. முதலில் இருந்த பெரிய ஜமீன்தார் தான் இது போல செய்தவராம். அவருக்கு பிறகு அவர் மகன் ரொம்ப நல்லவராம்.. மத்தப்படி இந்த ஊர்பக்கம் இருக்கும் கம்மாய் கால்வாய் குளம் குட்டை கோயில் எல்லாம் அவர்கள் தான் எடுத்து செய்தவர்கள். இந்த கன்னி கோயிலை கூட அவர் தான் எடுத்து கட்டியதாக சொல்லுவார்கள்”

“ஓஹோ, இப்ப இருக்கிறாரே கருணாகரன் அவர் எப்படி?”

“யாரை கேட்கறீங்க பெரிய அய்யாவையா? அவர் ஜமீன் வாரிசு இல்லைங்க. அந்த அம்மா தான் வாரிசு. இவர் அந்த அம்மாவை கட்டி வந்தவர்”

“ஓஹோ.”

மேல்கொண்டு அவனிடம் கதை கேட்டு கொண்டிருக்காமல் வண்டியை கிளப்பி கொண்டு போனார்கள் இருவரும்.

அந்த தேக்கு மரத்தாலான சோபாவில் அமர்ந்திருந்தார் கருணாகரன். எதிர் ஒற்றை நாற்காலியில் அமர்ந்திருந்த கௌதம் கருணாகரனின் அருகில் அமர்ந்திருந்த உலகம்மையையும் அவரையும் பார்த்து விவரங்களை விவரித்தான்.

தன்னைப் பற்றி தன் பெற்றோர்களைப் பற்றி பெரியவர் ராஜசேகர் பற்றி அவர்கள் வியாபாரம் சொத்து சுகம் அந்தஸ்து உற்றார் உறவினர் எல்லாவற்றையும் விளக்கினான். முருகன் கோயிலில் வைத்து சாருவை முருகன் தனக்குரியவளாக காட்டி கொடுத்ததை கூறி அவளை தனக்கு

மணமுடித்து கொடுக்கும்படி கேட்டு கொண்டான்.

கௌதம் பேசிய எல்லாவறையும் பொறுமையுடன் கேட்டு கொண்டிருந்த ரத்தினவேல் கருணாகரனும் உலகம்மையும் ஒன்றும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தார்கள். இறுதியாக கருணாகரன் கேட்டார். 

‘பேசி முடித்து விட்டாயா தம்பி?”

“ஆமாம் அய்யா. பேசி முடிக்கவில்லை. கேட்டு முடித்து விட்டேன். உங்கள் பெண்ணை எனக்கு மனம் முடித்து தாருங்கள் என்று கேட்டு முடித்து விட்டேன்”

பாட்டியும் தாத்தாவும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். கௌதம் வந்த அன்றே சாருவின் மனவிருப்பத்தை உணர்ந்து கொண்டவள் ஆயிற்றே உலகம்மை. ஆனாலும் என்ன செய்ய முடியும்? விதியின் நினைப்பு வேறாக இருக்கிறதே.

“தம்பி நீ எங்களை தப்பாக எடுத்து கொள்ள கூடாது”

“இல்லை சொல்லுங்கள்”

“சாருவை உனக்கு மணம் முடித்து தர இயலாது”

இந்த பதிலை சாருவே எதிர்பார்க்கவில்லை. திகைத்து போனவளாக கௌதமை பார்த்தாள். அவனோ நிதானமாகவே இருந்தான்.

“பாட்டி என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா?”

“உன்னை பிடிப்பதில் என்ன இருக்கிறது? உனக்கு என்ன குறைச்சல்?”

“நான் சாருவை நன்றாக பார்த்து கொள்வேன் பாட்டி”

“அது எனக்கு நன்றாக புரிகிறது தம்பி. எங்கள் சாரு இங்கே வந்த அன்று உலகத்தையே தொலைத்தவளாகத் தானே வந்தாள். காரணம் புரியாமலும் அவளிடம் எப்படி கேட்பது என்று தயங்கியும் பரிதவித்து கொண்டிருந்தோம். நீ வந்த அன்று அவள் முகத்தில் தென்பட்ட அமைதியே எல்லா கதையும் எங்களுக்கு சொல்லி விட்டதே”

“பிறகு என்ன? அவளுக்குமே இந்த திருமணத்தில் விருப்பம் என்பது உங்களுக்கே புரிகிறது. பிறகு ஏன் அவளை எனக்கு தர மறுக்கிறீர்கள்?”

“உனக்கு என்று இல்லை. யாருக்குமே சாருவை  திருமணம் செய்து வைக்க முடியாது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *