Skip to content
Home » அழகே அருகில் வர வேண்டும்-5-6

அழகே அருகில் வர வேண்டும்-5-6

5

ஒரு பேச்சிற்கு சொல்லுவது தான். பின்னே நீயும் தான் ஆச்சு. கோயிலுக்கு வா என்றதும் கோயிலுக்கா? என்று மலைத்து போனாயே அதனால் தான் அப்படி சொன்னேன்

“பின்னே திகைக்காமல் என்னவாம்? உனக்கு தான் தெரியுமே எனக்கு கோயில் குளம் எல்லாம் போவது என்பது ஆகாத விஷயம் என்று” .

“உனக்கு கோயிலுக்கு வர கஷ்டம் தான். ஆனால் காலையில் வேறு எங்கேயும் சந்திக்க முடியாதே” 

“காலையிலா..?”

“ஏண்டா எல்லாத்துக்கும் திகச்சா என்ன பண்ணறது? என்னவோ காந்தி செத்துட்டாரா என்பது போல கேட்கிறே?”

“என்னது…! காந்தி செத்துட்டாரா?”

“டேய் உதை வாங்குவே”

“கோவிச்சிக்காதேடா மச்சான். நீ சொன்னதை அப்படியே திரும்ப சொல்லி பார்த்தேன்”

“உனக்கு என்னை பார்த்தால் கிண்டலா இருக்கு”. “

“ச்சே. ச்சே. நம் ஊரிலேயே காலையில் எழுந்துக்கறது எனக்கு கஷ்டம். அதுவும் இந்த ஊரில் இந்த குளிரில் காலையில் எப்படிடா எழுந்துக்குவது?”

“உன்னிடம் பார்சலை கொடுத்து விட்டு நான் ஹாஸ்பிடலுக்கு போகணும்டா. படுத்தாமல் வாடா. ப்ளீஸ்”

“சரி போய் தொலை. உனக்காக வருகிறேன். ஆனால் இனி இது போல கொடுத்து விடக் கூடாது என்று உன் ஆசை அத்தைக்கு சொல்லி வை.”

“நீயே படிப்பை முடித்து விட்டு கிளம்ப போகிறாய். இனி நானும் அடுத்த வருடம் தான் ஊருக்கு போகப் போறேன். அதனால் உனக்கு அந்த கவலை வேண்டாம். இந்த ஒருமுறை மட்டும் தயவு செய்து வந்து வாங்கி கொண்டு போ”

“சரி. நான் கோயிலில் காத்திருக்கிறேன்”

“அப்பனே நன்றிடா சாமி. நாளை காலை கோயிலில் சந்திப்போம்”

“சந்திப்போம்” 

###

“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாப்பா.”

“தேங்க்ஸ் தாத்தா”

“எப்படி இருக்கே சாரும்மா?”

“ரொம்ப நல்லா இருக்கேன் தாத்தா”

“இரு சாரும்மா. உன் பாட்டி என்னை பேச விடாமல் கையை கையை நீட்டி கொண்டே இருக்கிறாள். அவளிடம் பேசு”என்றவர் கோபத்துடன் உலகம்மை தேவியிடம் போனை கொடுத்தார். அங்கே மறுமுனையில் சின்ன வாக்குவாதம் நடந்தது. இந்த வயதான காலத்திலும் இருவருக்கும் இருக்கும் ஊடலையும் கோபதாபங்களையும் மீறி அவர்களுக்குள் இருக்கும் அன்னியோனியத்தை அவள் அறிந்தவள் ஆதலால் அவளுக்கு சிரிப்பு வந்தது.

“ஹல்லோ”

“ஏன் பாட்டி, தாத்தாவை படுத்தறே?”

“நான் படுத்தறேனா? சொல்லுவியே நல்லா? யாரு யாரை படுத்தரான்னு இங்கே வந்து பாரு”

“சரி சரி. நீ ரொம்ப நல்லவள் தான் ஒத்துக்கறேன்”

“பேச்சை மாத்தாதே. நான் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயத்தை மறந்து விடப் போகிறேன்”

“இன்னைக்கு என் பிறந்த நாள். எப்போதும் வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது. இதில் சொல்வதற்கு என்ன முக்கியமான விஷயம் இருக்க போகிறது உனக்கு?”

“சாரும்மா இன்றைக்கு உனக்கு பிறந்த நாள் என்பது மட்டும் தான் உனக்கு தெரியும். ஆனால் அதை விட மிகவும் முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அதனால் அவசியம் அங்கே ஏதாவது ஒரு கோயிலுக்கு போய் வா”

“என்ன பாட்டி, எல்லா பிறந்த நாளைப் போலவும் தானே இன்றைய நாளும்”

“அப்படி சாதாரணமா சொல்லிடாதே கண்ணு. இந்த நாளுக்காகத் தான் நானும் உன் தாத்தாவும் கண்களில் உயிரை வைத்து கொண்டிருக்கிறோம்.”

“என்ன பாட்டி, ரொம்பத் தான் பில்ட் அப் பண்றே. அப்படி என்ன இந்த நாள் முக்கியமா போச்சு மீதி வருசத்தை விட”

“நீ இந்த நாளை பார்ப்பாயா என்றே நிச்சயம் இல்லாமல் மனதிற்குள் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாங்கள்.”

“ஏன் பாட்டி இப்படி தேவை இல்லாமல் நீயாகவே எதையாவது கற்பனை செய்து கொண்டு நீயாகவே பயந்து கொள்வே?”

“உனக்கு இதெல்லாம் புரியாது.”

“ஒழுங்கா பதில் சொல்ல தெரியவில்லை என்றால் உடனே உனக்கு புரியாது என்று சொல்லி முடித்து விடுவது உனக்கு பழக்கம்.”

“நான் சொல்வதை அப்படியே நம்பி விட்டு போயேன்.”

“நானும் என் சின்ன வயதிலிருந்து உங்களை பார்த்து கொண்டு தானே இருக்கிறேன். ஏதாவது கேட்டால் உனக்கு புரியாது என்று பட்டென்று முகத்தில் அடித்தது போன்று பேச்சை முடித்து விடுவது உன்னுடைய டெக்னிக்.”

“சரி அப்படியே வைத்து கொள்”

“ஆஹாஹா, இன்றைக்கு அந்த பேச்சு உதவாது. நீ உண்மையை சொல்லி தான் ஆக வேண்டும்”

பாட்டி பெருமூச்சு விடுவது அவ்வளவு தொலைவில் இருந்து பேசிய போதும் தொலைபேசியில் துல்லியமாக கேட்டது. நீண்ட வருடங்களாக நெஞ்சை அடைத்து கொண்டிருந்ததை கீழே இறக்கி வைப்பதற்கான முஸ்தீபுடன் சற்று நேர அமைதிக்குப் பின் சொன்னாள் பாட்டி உலகம்மை தேவி.

6

“நீ பிறந்த போது ஜாதகம் பார்த்ததில் நம் குடும்பத்தில் மூணு தலைமுறையாக இருந்த ஒரு கஷ்டம் .உன்னுடைய இருபத்தி மூணாவது பிறந்த நாளுடன் முடிவிற்கு வரும். இதற்கு பிறகு நம் வீடு பழைய நிலைக்கு திரும்பி விடும் என்று சொல்லி இருக்கிறது சாரும்மா.”

“நல்ல விஷயம் தானே. அதற்கு நீ ..?”

“குறுக்க குறுக்க பேசாம நான் சொல்லுவதை கேட்கிறாயா?”

“சாரி பாட்டி. சொல்லு. இனி நீ பேசி முடிக்கும் வரை குறுக்க பேச மாட்டேன்.”

சற்று நேரம் எதிர்முனை அமைதியாக இருந்தது. சாருவும், பாட்டி மேற்கொண்டு பேசுவதற்கு பொறுமையுடன் காத்திருந்தாள். ஆனால் பாட்டி அதிலிருந்து மீள்வதாக இல்லை. சந்தேகம் அடைந்தவளாக பாட்டி என்று மெல்ல கூப்பிட்டாள் சாரு. சுதாரித்து கொண்டவளாக மூக்கை உறிஞ்சி வெளிக்காற்றை நெஞ்சிற்குள் நன்றாக இழுத்து நிதானமாக வெளியே விட்டாள் உலகம்மை தேவி.

“பாட்டி….”

தொண்டையை கனைத்து சரி செய்து கொண்டு பேசினாள் உலகம்மை.

“என்னோட அப்பா சிறுவயதாக இருக்கும் போது ஒரு சம்பவம் நடந்தது. அப்போதிலிருந்து நம் குடும்பத்தில் ஆண் வாரிசே கிடையாது என்றும் பெண் வாரிசுகளும் அல்பாயுசில் அதாவது இருபத்தி மூன்று வயதை காண மாட்டார்கள் என்றும் ஒரு கர்ண பரம்பரை கதை ஒன்று உண்டு”

“ஓஹோ”

“ஆமாம். உன் அம்மாவும் இருபத்தி மூன்று வயதை காணவில்லை”

“உனக்கு ஒன்றும் ஆகவில்லையே பாட்டி?”

“யார் சொன்னது? அந்த வயதில் மலைக் கோயிலுக்கு போய் இருந்த போது ஒரு பெரிய பாறை திடீரென்று உருண்டு வந்து என்னை தள்ளி விட்டு விட்டு கீழே போய் வழியை அடைத்து கொண்டு விட்டது. கீழே இருந்து யாரும் மேலே வரவோ அல்லது மேலே இருந்து நான் கீழே இறங்கவோ முடியாமல் போய் விட்டது. பசியும் தாகமுமாக மொட்டை வெய்யிலில் கிடந்தேன். தாகத்தால் சாக கிடந்தேன். அன்று நான் உயிர் தப்பி பிழைத்தது பெரிய கண்டம் தான். அன்றே நான் போய் இருந்திருக்க வேண்டியது. கடவுள் அன்று என் உயிரை காப்பாத்தினது உன்னை வளர்க்க தான் போலும்”

உண்மை தான். சாருவிற்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து தாயும் தகப்பனும் இல்லை. அவள் தாய் உமையாள் தேவியை பெற்ற தாயும் தகப்பனும் அதாவது இந்த பாட்டியும் தாத்தாவும் தான் அவளை வளர்த்து வருகிறார்கள்.   

6

சாருவிற்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து தாயும் தகப்பனும் இல்லை. அவள் தாய் உமையாள் தேவியை பெற்ற தாயும் தகப்பனும் அதாவது இந்த பாட்டியும் தாத்தாவும் தான் அவளை வளர்த்து வருகிறார்கள்.   

“உன் அம்மா இறந்ததும் உன்னை பொத்தி பொத்தி வளர்த்து வருகிறோம். இன்று நீ இருபத்தி மூன்று வயதை பார்த்து விட்டாய். இனி நம் குடும்பத்திற்கு நல்ல காலம் தான். விமோச்சனம் உண்டாகி போச்சு. பீடை கழிய கோயிலுக்கு போய் வா சாரும்மா”

பாட்டி சொல்வது உண்மை தான். சாருவிற்கு சின்னதாக ஏதேனும் அடிபட்டாலோ அல்லது உடல் சுகவீனம் அடைந்து விட்டாலோ இருவரும்  கண்களில் உயிரை வைத்து கொண்டு அவளுடைய படுக்கையின் தலை மாட்டிலேயே தான் அமர்ந்திருப்பார்கள். அவள் நல்லபடியா எழுந்து ஒரு வாய் சாப்பிட்டால் தான் நிம்மதியாவார்கள்.

“நான் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து கோயில் எல்லாம் தூரத்தில் தான் இருக்கிறது.”

“எந்த சாக்கு போக்கும் சொல்லாமல் தயவு செய்து போய் வா”

“கண்டிப்பா போறேன் பாட்டி. கொஞ்சம் பக்கத்தில் ஒரு முருகன் கோயில் இருக்கிறது. நான் போய் வருகிறேன் பாட்டி”

“கண்ணு. கோயிலுக்கு போகிறாய். புடவை உடுத்தி கொண்டு போம்மா”

“பாட்டிம்மா. இந்த குளிரில் புடவை எல்லாம் கட்டி கொண்டு போக முடியாது”

“கொஞ்சம் முயற்சி செய். எதற்கெடுத்தாலும் அச்சானியமாக பேசி கொண்டிருக்காதே”

“நான் கோயிலுக்கு போவது உனக்கு முக்கியமா? அல்லது புடவை கட்டி கொள்வது முக்கியமா?”

“நல்ல நாளும் பிறந்த நாளும் அதுவுமாக தழைய தழைய புடவை கட்டி கொண்டு கோவிலுக்கு போவது முக்கியம்”

“என்னாலே உன்னிடம் பேசி ஜெயிக்க முடியாது”

“யாரு….? நானா ரொம்ப பேசறேன்?”

“ஏன் பாட்டி  நீ என்னை புடவை கட்டி கொள்ள சொல்லி வற்புறுத்துவதை பார்த்தால் .! எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கு”

“இதில் சந்தேகப்பட என்ன இருக்கிறது?”

“என்னை யாராவது பெண் பார்க்க வரப்போகிறார்களா?”

“உனக்கு எல்லாத்துக்கும் கிண்டல் தான். இருந்தாலும் இந்த பாட்டி சொல்கிறேன். யாருக்கு தெரியும்? உண்மையிலேயே உன்னை கட்டிக்க போறவனை இன்னிக்கி நீ அங்கே பார்ப்பாயோ என்னவோ?”

“நீ நல்லா கதை விட கற்று வைத்திருக்கிறாய். இந்த ஊரில் என்னை கட்டிக்கிட போறவன் இருந்து, அவன் இன்று அந்த முருகன் கோயிலுக்கு வந்து, என் கண்ணெதிரில் நின்று, எனக்கு தரிசனம் தந்து,

என்னை ஆட்கொள்ள போகிறானோ?”

அவளுடைய கிண்டலை கேட்டதும் பாட்டி ரொம்பவே ரௌத்திரமாகிப் போனாள். உரத்த குரலில் குடுகுடுப்பைக்காரன் குறி சொல்வதை போல, கண்களுக்கு புலப்படாத யாருக்கோ சவால் விடுவது போல உரத்து சொன்னாள்.

“இது நடக்கப்போகிறதா இல்லையா பார்?”

“பார்ப்போம்”

“பார்ப்போம்”

“தங்கம். எங்க அம்மா இல்லை. என் கண்ணு இல்லை. எங்க ராஜாத்தி தானே நீ. எப்போதும் விதியுடன் விளையாட கூடாது. இன்றைக்கு உனக்கு மிகுந்த முக்கியமான நாள் என்று சொன்னால் அதை ஒப்பு கொண்டு நான் சொன்னது போல கோயிலுக்கு போய் வா.”

பாட்டியின் பயமும் ஆதங்கமும் புரிந்தவளாக விளையாட்டு பேச்சை விட்டு விட்டு உண்மையில் மிகுந்த அக்கறையுடனும் தெளிவுடனும் நிதானமாகவும் சொன்னாள் சாரு.

“பாட்டி. கவலைப்படாதே. நீ என் நன்மைக்கு தான் சொல்கிறாய் என்று எனக்கு தெரியும் சும்மா விளையாட்டுக்கு அப்படி பேசினேன்.”

“தெரியும்டா கண்ணு”

“என் பாட்டி ஒன்று சொல்லி அதை நான் அதை எதிர்த்தோ மறுத்தோ பேசுவேனா?”

அவளுடைய அக்கறையான பேச்சு உலகம்மையை நெஞ்சை நெகிழ்த்தி விட்டது போலும். எதிர்முனையில் அழுகையை அடக்க மூக்கை உறிஞ்சும் சத்தம் கேட்டது.

காரணங்கள் வேறு வேறாக இருந்தாலும் சாருவும் கௌதமும் போகும் இடம் ஒன்று தான். காலம் அவர்கள் இருவருக்கும் என்னவிதமான புதிர்களை வைத்திருக்கிறதோ? அல்லது எத்தகைய அதிசயங்களை கொடுக்க காத்திருக்கிறதோ?

அந்த முருகப் பெருமானின் பொருள் பொதிந்த புன்னகைக்கு யார் தான் உரை எழுத முடியும்?

தொடரும்.

ஷியாமளா கோபு

2 thoughts on “அழகே அருகில் வர வேண்டும்-5-6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *