Skip to content
Home » இதயத்திருடா-1

இதயத்திருடா-1

இதயத்திருடா-1

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

‘மல்லி மல்லி முழும் இருபது ரூபா’, வேர்கடலை வேர்க்டலை பத்து ரூபா வேர்க்கடலை’, மாம்பழம் நாற்பது ரூபா’ என்று பேருந்து வந்ததும் அதில் மாறி மாறி ஏறி வியாபாரம் நடைப்பெற, பேருந்து வந்து சில பல வினாடியில் கூட்டம் சேர்ந்தனர்.

     பேருந்து புறப்படும் நேரம் வரை இத்யாதியான பொருட்களை வாங்கி சாப்பிட்டு நேரம் கழித்தனர் சிலர்.

பலரும் பேருந்தில் இருந்து இறங்கியதும் வயிறு பசி பசி என்று கூப்பாடு போட்டால், அதனை சாந்தப்படுத்த தேடும் ஹோட்டலில் முதன்மையாக ஈர்க்க செய்தது அந்த சின்னசிறிய ஹோட்டல்.

ஆம் சின்ன சிறிய ஹோட்டலே. பெரிய பெரிய ஏசி ஹோட்டலுக்கு மத்தியில் அந்த சிறு நடுத்தரமானவர்களுக்கான ஹோட்டல் புதிதாக திறக்கப்பட்டது. இதற்கு முன் பழைய புத்தக கடையாக இருந்தது. அதனை வாங்கி ஒரு வருடமாக கொஞ்சம் கொஞ்சமாய் உழைப்பை போட்டு தனது மாறா (அ)சைவ உணவகம் தினசரி நடுத்தர மக்களான வாடிக்கையாளரை ஈர்த்து அமோகமாய் வியாபாரம் பெருகியது.

விலை நியாயமாகவும், சுவை தனித்துவமாகவும் இருக்குமென்றால் இனிப்பை தேடி எறும்புகள் போல மக்கள் வர தான் செய்தனர்.

அதிலும் டேபிளில் அமர்ந்ததும் உணவு வரும் வரை அங்கே சிறு லைப்ரரி போன்றதொரு புத்தகத்தில் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப காதல், க்ரைம் சமூகம், ஞானிகளின் போதனை, சாதனை புத்தகம், கவிதைகள், வரலாற்று புதினம் என்று புத்தகம் வழங்கி வாசிக்க வைப்பான்.

அதில் உணவு தாமதமானாலும் முகம் வாடாது படித்து ரசித்து தினமும் வர ஆசைக் கொண்டனர் மக்கள். தினமும் வருவோருக்கு படிக்க கொடுப்பதால் வருவோர் சில அத்தியாயங்களை தினமும் ஒன்றென வாசித்து மகிழ்ந்து அவனின் இந்த புது முயற்சியை பாராட்டியும் சென்றனர்.

இது போல மேல்தட்டு ஹோட்டலில் காண நேரலாம் நடுத்தர வர்க்கத்தில் இதுவே முதல் முறை அல்லவா.

அப்பேற்பட்ட உணவகத்தில் ஓரமாய் இருந்த டேபிளில் மூக்கும் முழியுமாய் ஒருத்தி வந்து பேரரிடம் ரோதனை செய்து கொண்டிருந்தாள்.

சாதாரண குற்றம் சுமத்தவில்லை. அவ்ஹோட்டலே தூய்மையாக காட்சியளிக்க, தான் ஆர்டர் கொடுத்த உணவில் பல்லி இறந்து இருப்பதாக சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

பேரர் பதினொன்பது வயது
இளைஞன் என்பதாலும், பார்ட் டைம் பகுதியாக வேலை செய்வதாலும், இந்த குற்றத்தை கண்டு பயந்து நடுங்கினான்.

“மேடம் எப்படி வந்ததுனு தெரியலை மேடம் சத்தம் போடாதிங்க. உங்களுக்கு வேற உணவை எடுத்துட்டு வர்றேன். என்னோட கவனக் குறைவா இருக்கும். நானே இங்க வேலைக்கு சேர்ந்து ஆறு மாசம் தான் ஆகுது” என்று விட்டால் அழுதிடும் நிலையில் தவித்தான்.

    அவனை கண்டு பாவம் பார்த்த ஒரு நாற்பது வயது சக பேரர் வடிவேல் வந்து, “மேம் கொஞ்சம் பொறுமையா இருங்க. பையன் புதுசு. காலேஜ் படிக்கிறான். நான் விளக்கம் தர்றேன். இது போல இனி வராம பார்த்து ஜாக்கிரதையா பரிமாறறோம்” என்று தன்மையாய் பதில் தந்தார்.

“முதல்ல உங்க கடை முதலாளியை இங்க அனுப்புங்க. அவரிடம் பேசிக்கறேன்.” என்று கூறி கையை கட்டி கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக சாய்ந்தமர்ந்தாள்.

இனியும் தங்களால் சமாளிக்க இயலாதென, மாறா (அ)சைவ உணவகத்தின் உரிமையாளர் மதிமாறனை அழைக்க சென்றான் அந்த இளைஞன்.

மதிமாறன் வயது 33 முழுதாக முடிவடைய இன்னும் இரண்டு மாதம் ஆகும் நிலுவையில் இருந்தான்.

அந்த முப்பத்தி மூன்று  வயதிற்குண்டான ஆளுமையும், கம்பீரமும் பெற்றவன், முகவசீகரம் கொண்டு, “நான் பார்த்துக்கறேன் சரத். எந்த பெஞ்ச்” என்று குரல் கொடுத்த வண்ணம் வந்தான்.

“இந்தக்கா தான் அண்ணா. நான் கொண்டு வந்து கொடுத்தப்ப பாவ் பஜ்ஜில இந்த பல்லி இல்லை. ஆனா சாப்பிடும் பொழுது வந்திருக்குமோ என்னவோ ஆனா அவங்க என்னை குற்றம் சுமத்தறாங்க. போதாதற்கு கடையை வேற கிழி கிழினு கிழிக்கறாங்க” என்று சுட்டிக் காட்டினான்.

சரத் என்பவன் சுட்டிக்காட்டிய திசையில் மதிமாறன் பார்வை செல்ல அங்கே மதிமாறன் வந்ததும் நிமிர்ந்தவளின் பார்வையும் ஒன்றாக கலந்தது.

மதிமாறனோ அமர்ந்திருந்தவளை கண்டதும் உணவை பார்த்தான். அதில் பர்க்கரில் மேலே அழகுக்கு வைத்தது போல கேபேஜ் தழை இருக்கும் அல்லவா, அது போல பல்லியை அலங்கார பொருளாக வைத்திருந்தாள் அந்த யுவதி.

   மதிமாறன் வந்ததும் யுவதியை கண்டு, “சரத் அது ரப்பர் பல்லி நீ உன் வேலையை பாரு. வடிவேல் அண்ணா கொஞ்ச நேரம் பில்-பேமண்ட் செக்ஷன்ல இருங்க. பயப்பட வேண்டாம். இவங்க பெயர் நற்பவி. போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ப எப்படியோ? தெரிஞ்சவங்க தான் சும்மா விளையாடறாங்க” என்றவன் யுவதி முன் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“நான் இங்க இருக்கேன்னு எப்படி கண்டுபிடிச்ச. இங்க வந்து என்ன விளையாட்டு. அதுவும் ரப்பர் பல்லியை வச்சிட்டு. கஷ்டமர் யாராவது இதை பார்த்தாலோ, நீ பேசறதை கேட்டாலோ, இங்க வரமாட்டாங்க.” என்று கடை ஊழியரிடம் மரியாதையோடும் இவளிடம் நீ வா என்ற ஒருமையில் உரிமை போட்டும் பொறுமையாய் பதில் தந்தான்.

“ஆமா பெரிய தாஜ் ஹோட்டல். நான் விளையாடவும், வர்ற கஷ்டமர் ஓடிட போறாங்க. நீங்க இங்க தான் இருக்கிங்கனு ஆறு மாசம் முன்னயே தெரியும். இன்னிக்கு தான் பேசணும்னு தோன்றியது நேர்ல வந்தேன்.

சரி வந்ததும் நார்மலா அறிமுகம் ஆக வேண்டாமேனு இப்படி வந்தேன். நீங்க அடிச்சி பிடிச்சி வருவிங்கனு பார்த்தா ஆற அமர வர்றிங்க.

கடைக்கு யார் வர்றா, யார் வரலைனு பார்க்கறதில்லை. கல்லா பெட்டி பக்கத்துல காசை எடுத்து போட்டு பணமே தெய்வமா வாழறது. அப்பறம் எப்படி சார் நான் வந்ததை பார்த்திருப்பிங்க.” என்று நற்பவி குத்தலாய் பணம் முக்கியமா உனக்கு நான் வந்தது கூட உனக்கு தெரியலை என்பதாய் கூறினாள்.

“இப்ப உனக்கு என்ன வேண்டும்?” என்று நேராக கேட்டான் மதிமாறன்.

“ம்… யாரோ நம்பர் மாத்தாம இருப்பேன்னு கண்ணடிச்சு என்னிடம் விளையாடிட்டு வந்தாங்க. ஆனா அந்த நம்பர் உபயோகத்தில் இல்லைனு வருது. என்ன ஏதுனு கேட்க வந்தேன்” என்றாள் நாயகி நற்பவி.

“அது ஏதோ ஜஸ்ட் அன்னிக்கு விளையாடிட்டு வந்தேன். தப்பர்த்தம் பண்ணாதே. அதே நம்பர் வச்சி யாரும் என்னை தேடி வந்திடக்கூடாதுனு தான் உபயோகிக்கலை” என்றான்.

அவன் முகத்தில் முதலில் வழிந்த மகிழ்ச்சி குறைந்து வாட்டமாய் போனது. நீ தேடி வரக்கூடாதென்றே நம்பரை மாற்றினேன் என்ற பொருள் அதிலிருந்தது.

“ஓ… அப்ப வேண்டுமின்னே தான் அவாய்ட் பண்ணிருக்கிங்க. நான் தான் புரியாம ஆறு மாசமா வெளியே இருந்து உங்களை நோட் பண்ணிருக்கேனா?” என்று உச்சு கொட்டினாள்.

“சரத் மேடத்துக்கு சூடான பிரட் பஜ்ஜி எடுத்துட்டு வா” என்று கூறினான்.

“அப்ப பாவ் பஜ்ஜியை என்ன செய்ய?” என்று கேட்டதும் அவன் பக்கம் இழுத்து உண்ண துவங்கினான்.

“இப்ப எதுக்கு என்ன மீட் பண்ண வந்திங்க நேரா விஷயத்துக்கு வாங்க” என்றான் மதிமாறன்.

‘அதை பேச தானே வந்தேன்.’ என்பது போல நகத்தை பார்த்து உதடு மடித்து கூற தயங்கியவளாய் நின்றாள்.

அதற்குள் பாவ் பஜ்ஜியை நொடி பொழுதில் சாப்பிட்டு சரத்திடம் அதை கொடுத்து விட்டான். சரத் பிரட் பஜ்ஜி எடுத்து வந்தவன் மேஜையில் வைத்து தயக்கமாய் மற்ற உணவு தட்டை எடுத்து சென்றான்.

பிரட் பஜ்ஜி சாப்பிட்டவாறு, “கல்யாணம் ஆகிடுச்சா?” என்று கேட்டாள்.

மதிமாறன் முறைத்து கையை கட்டி வேடிக்கை கண்டான். எனக்கு கல்யாணமாகி என் மனைவி இறந்தது உனக்கு தெரியாதா என்பதை போல இருந்தது அந்த பார்வை.

“சாரி சாரி… நீங்க அக்கா மாமா தயவில் படிச்சி வளர்ந்தவர் என்று தெரியும். உங்க அக்கா மகள் மதுவந்தி ஐஏஎஸ் ஒரு ஆக்சி..டெண்ட்ல இறந்துட்டதாகவும் தெரியும். இப்ப அகைன் மறுமணம் பண்ணி செட்டிலாகிட்டிங்களானு கேட்க வந்தேன்.” என்று தக்காளி சாஸ் தொட்டு பிரட் பஜ்ஜியை விழுங்கினாள்.

“அக்கா மாமா கூட தான் இருக்கேன். எனக்கு மறுமணம் பண்ணற ஐடியா இல்லை. எவளும் என்னோட மதுவந்தி இடத்துல நிற்க முடியாது.” என்று கூறினான்.

“நிற்க முடியலைனா எதிர்ல ஒரு சேர் போட்டு உட்கார வையுங்க. ஐ மீன் மனசுல சிம்மாசனம் போட்டு உட்கார வையுங்கனு சொன்னேன்.” என்றாள் நற்பவி.

“அதுக்கு அவசியம் இல்லை. சாப்பிட்டாச்சா கிளம்பறியா?” என்றான்.

“ஒரு நேரம் மரியாதையா வார்த்தை வருது. ஒரு நேரம் சகட்ட மேனிக்கு நீ வா போன்னு பதில் வருது.” என்று கேட்டாள்.

அவன் பேச்சை கத்தறித்து துரத்துவதில் முயன்றால், இவள் பேச்சை நீட்டிக்க செய்தாள்.

“உங்க வீட்ல தேட மாட்டாங்களா. இல்லை வேலை விட்டு ரிசைன் பண்ணிட்டியா?” என்றான் அடக்கப்பட்ட கோபத்தோடு.

“அதெல்லாம் மற்ற நேரம் தேடமாட்டாங்க. இன்னிக்கு கண்டிப்பா தேடுவாங்க. ஏன்னா இன்னிக்கு நாலு மணிக்கு என்னை பொண்ணு பார்க்க வர்றாங்க.” என்று மற்றொரு பிரட்டை எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.

“அப்ப இங்க என்ன பண்ணற?” என்றான் கோபமாக. மணி தற்போது மூன்று ஐம்பது.

“நான் மாப்பிள்ளை பையனை பார்க்க வந்துட்டேன்” என்று கூறி கடைசி வாயை உண்டு முடித்து டிஸ்ஸு பேப்பர் கொண்டு துடைத்து மெதுவாய் மதிமாறனை பார்த்தாள்.

-இதயத்தை திருடுவான்

  • பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “இதயத்திருடா-1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *