இதயத்திருடா-2
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
“உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க?” என்று மதிமாறன் இடம் மறந்து கத்தினான்.
அனைத்து டேபிள் ஆட்களும், அவர்கள் இருந்த டேபிளை எட்டி பார்த்தனர்.
பெரும்பாலும் தடுப்பு கொண்டு அழகாய் வடிவமைத்து வைத்தது தான். ஆனாலும் அவன் கத்திய விதம் அப்படி.
“ஐ அம் சாரி” என்று பொதுவாய் உதிர்த்து விட்டு அங்கிருந்த நீரை பருகினான் மதிமாறன்.
“என்ன பேசறேன்னு தெரிந்து தான் பேசறியா?” என்று கொதித்தான்.
“இப்ப எதுக்கு கத்தி கோபப்படறிங்க மாறன். நான் பையனிடம் பேச போறேன். அவனுக்கே ஆட்சபனை இல்லைனு சொல்லிட்டான். உங்களுக்கு என்ன?” என்றதும் மதிமாறன் குழம்பினான்.
தொண்டையை செருமிக் கொண்டு, “மாப்பிள்ளையோட அம்மா அப்பா வீட்டுக்கு வருவதா திடீரென அப்பா சொன்னார்.
ஆனா பையனுக்கு வேலையிருக்குனு வரலையாம். சார் ரிசர்வ் பேங்க்ல ஓர்க் பண்ணறார். அதனால அவர் வரலை என்றதும் வேலை எங்க ஏதுனு கேட்டேன். இங்க தான் பிராட்வே என்றதும் உங்க கடை பெயரை சொல்லி இங்க வர சொல்லிட்டேன்.
ஆக்சுவலி பிஸி மேன் நாலு முப்பதுக்கு வர்றேன்னு சொன்னார். மணி நாலு பத்து ஆகுது.” என்று கை கடிகாரத்தை பார்த்து விட்டு வாசலில் பார்வை பதித்தாள்.
மதிமாறனுக்கு வருத்தமா, இல்லை நிம்மதியா இரண்டு மனநிலையை தந்தது.
“போட்டோ இருக்கா?” என்று கேட்டான். நற்பவியின் தோற்றத்திற்கும் மிடுக்கிற்கும் பொருந்துவானா என்று பார்க்க ஆசைக் கொண்டான்.
அவளின் போனை எடுத்து காட்டினாள்.
வால்பேப்பரில் அவள் அக்கா நன்விழி குழந்தைகளான இரட்டையர்களோடு செல்பி எடுத்ததை வைத்திருந்தாள்.
குழந்தையோடு குழந்தையாக நாக்கை துருத்தி இருந்தவளை இரண்டு நொடி ரசித்திட, “அப்பானு இருக்கற வாட்சப் காண்டேக்ல பாருங்க.” என்று கூறவும் எடுத்து பார்த்தான்.
அப்பா என்ற சாட் முழுவதும் வெறும் ஆண்கள் புகைப்படமாகவே இருந்தது. பெரும்பாலும் உயர் ரக ஆட்கள் படித்தவர்கள் என்று புகைப்படமே கூறிவிட்டது.
“அதுல இருக்கற எல்லா பசங்களும் இல்லை. இப்ப கடைசியா ஒன்னு அனுப்பியிருப்பார் அவர் தான்.” என்று கூறினாள்.
வேண்டுமென்றே தான் பார்க்க வேண்டும் என்று தன்னிடம் போனை நீட்டியிருப்பது அறிந்து கொண்டான்.
அவள் இங்கு வந்தது சும்மா இல்லை என்பது நூறு சதம் விளங்கிவிட்டது.
“ஆள் அழகா உனக்கு மேட்ச்சிங்கா இருக்கார்.” என்று கூறி போனை திருப்பி தந்தான்.
“இதுல இருக்கறவன் எல்லாருமே அழகா தான் இருக்காங்க. நல்ல வசதி… பின்ன எங்க அக்கா மாமா செலக்ட் பண்ணியது.” என்று கெத்தாய் அசட்டையாய் கூறினாள்.
“இங்க எதுக்கு பேச வர சொன்ன? நீ நினைச்சா பெரிய ஹோட்டல்ல சந்திச்சிருக்கலாமே” என்று பயந்து கேட்டான்.
எங்கே தன்னை காட்டி பேசிடுவாளோ என்று.
“அதுவா… எனக்கு இங்க பீச் ஸ்டேஷன் பக்கம் ஒரு டிரக் கேஸ் க்ரிமினலை தேடி வந்தேன். அதனால இங்கயே மீட் பண்ணி பார்த்து பிடிச்சா ஓகே சொல்லிடலாமேனு” என்று நேரத்தை பார்த்தாள்.
“ஓகே நீங்க வெயிட் பண்ணுங்க. அங்க வடிவேல் அண்ணா திணறுறார் அதை கவனிக்கறேன். அவர் வந்தா சாப்பிட என்ன அனுப்ப?” என்று கேட்டான்.
“வரட்டும் வந்ததும் கேட்டுட்டே சொல்றேன். இந்த டேபிள் சரத் தானே பார்த்துக்கறேன்.” என்றதும் மதிமாறன் ஏமாற்றமாய் எழுந்து பணம் வாங்கும் இடத்தில் வந்து நின்றான்.
கடைக்கு வருபவர் அனைவரையும் அவள் காட்டிய பையனா என்று ஆர்வம் மேலோங்க கண்டான். நான்கு முப்பது ஆனதும் வந்தான்.
நற்பவியிடம் தெரிவிக்க திரும்பினான் மதிமாறன். ஆனால் அவள் கையசைத்து இடத்தை அறிவித்து போனை காதில் வைத்து இருக்க, அவன் வருவதை அறிந்து இருக்கின்றாளென கவனத்தை கஷ்டமர் கொடுக்கும் பணத்தை வாங்கி போட்டு திசை திருப்பி கொண்டான்.
கொஞ்ச நேரத்திற்கு பின் மாதுளை ஜூஸ் இரண்டு கூற சரத் எடுத்து செல்வதை கண்டான்.
நற்பவி கையை ஆட்டி ஆட்டி பேச காற்றில் இசைக்கும் கவிதையாய் கண்ணுக்கு காட்சி தந்தாள்.
வந்தவனும் அழகாக பேசி சிரிக்க, முதலில் நிம்மதியானான். தன்னை அவள் குடைந்து தேடி குடைச்சல் தர வரவில்லையென.
ஆனால் நேரம் கூடுதலாகவும் முகம் கருத்து சிறுத்தது. அதுவும் நற்பவி கன்னத்தில் கை வைத்து கதை கேட்பது போல இருக்கவும், அவன் பேச பேச சிரிக்கவும் கடுப்பானான்.
சில்லரை தப்பும் தவறுமாக கொடுத்து விட உணவு உண்டவர்கள் அதை கூறி சரியான பணத்தை பெற்று கிளம்பவும், தன் தவறை உணர்ந்தவனாய் கவனம் கொண்டான்.
என்ன பேசினார்களோ ஆனால் எழுந்த போது இருவரும் கை குலுக்கி கொண்டார்கள்.
சரத் பில் வைத்து விட்டு செல்ல, அதை நற்பவி எடுத்து கொண்டு, பே செய்யும் இடம் நோக்கி வந்தாள்.
“இல்ல… பைசா வேண்டாம்” என்று நற்பவியிடம் கூறினான் மாறன்.
“வேண்டாம்னா… எப்படி? ஏன் வேண்டாம் சொல்லறாருனு அவர் கேட்பாரே… நம்ம நட்பை சொல்லட்டுமா?” என்றாள் நற்பவி. அதில் கேலியும் கிண்டலும் வழிந்திட மாறன் முகம் திருப்பி ‘போன் பே’ செய்யும் கோர்டை திருப்பினான்.
அவசரமா தன்னை பற்றி அறிமுகம் வேண்டாமென “நோ நோ.. பே பண்ணிடு” என்றான். அந்த நேரம் தான் நற்பவியை பார்க்க வந்தவன் கண்ணாடியில் தன்னை பார்த்து கொண்டு இருந்தான். இதை கவனிக்கவில்லை.
“ம்ம்… போன் பே பண்ணிடறேன்” என்றவள் அவனின் கடை முன் இருந்த கணினியில் ஸ்கேன் செய்து நம்பர் வர பணத்தை செலுத்தினாள்.
மதிமாறனின் பேக்கெட்டிலிருந்த போன் ஓசையெழுப்பி அடங்கியது.
“சோ…. இதான் உங்க நம்பர்” என்று கேட்டதும் நற்பவிக்கு வாய் திறந்து பதில் தராமல் தலையாட்டினான்.
“தேங்க்ஸ் அண்ட் பை” என்று கூறி அந்த புதியவனோடு புறப்பட்டாள்.
சற்று தள்ளி அவளது புல்லட் இருக்க அதில் ஏறி கிளம்பியிருந்தாள்.
அவளோடு பேசியவனோ கொஞ்சம் தள்ளி நின்றான். பேண்டிலிருந்து சிகரேட் எடுத்து புகையை இழுத்து விட்டு வாயில் மவுத்பிரஷ் டிக்டாக் போட்டு விட்டு, பைக்கை எடுத்தான்.
மதிமாறனுக்கு சிறு ஏமாற்றம் எட்டி பார்த்தது. என்ன தான் தன்னை அறிமுகப்படுத்த அவன் விரும்பவில்லை என்றாலும் அவளாக தெரிந்தவரென கூறுவாளென்று ஆசைக் கொண்டான்.
நற்பவி அவனை தன்னிடம் அறிமுகப்படுத்தி பேசுவாள் என்றும், அவனோ எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவனாக இருப்பான் என்றும் எண்ணியிருந்தான்.
இரண்டும் ஏமாற்றம் தர, அதன்பின் என்றும் இருக்கும் உற்சாகம் வடிந்தது
இரவு பதினொன்றுக்கு கடை மூடி பணத்தை எடுத்து வீட்டுக்கு சென்றான்.
வாசலை சத்தமில்லாமல் திறந்து வண்டியை நிறுத்திவிட்டு மாடிபடியில் மெல்ல நடந்தான்.
கீழே அக்கா செவ்வந்தி, மாமா கணேசன் விழித்து கொள்வார்கள் என்று, தன் வீடானா மாடிக்கு நுழைந்திருந்தான்.
கீழே அவனின் அக்கா மாமா இருந்தனர். மேல் மாடியில் மதிமாறன் தங்கினான். தனிதனி வீடு என்றாலும் உணவு மட்டும் காலை இங்கே சாப்பிடுவான். மற்றவை அவனின் ஹோட்டலில் பார்த்துக் கொள்வான்.
வீட்டுக்கு வந்து ஒரு குளியல் முடித்து கைலி(லுங்கி) அணிந்து மெத்தையில் படுக்க நற்பவி வந்து சென்றதே மனக்கண்ணில் தோன்றியது.
இதென்ன புது வித அழுத்தம். அவளை காணாத போது நிம்மதியாய் உணர்ந்த இதயம் அவளை கண்டப்பின் அதுவும் இது போன்றதொரு சூழ்நிலையில் அவளை கண்டு மனம் பிசைகிறது.
நானாக தான் அவளிடம் கண் சிமிட்டி விளையாடினேன். அது அப்பொழுது ஒரு வேகம். அவளால் கண்டுபிடிக்கவில்லை என்ற எண்ணமும் அவள் தன்னை கண்டு ஒதுங்குவதால் ஏற்பட்ட சிறுநகைப்பும் தோன்ற அப்படி விளையாடியது.
இன்று அப்படி விளையாடியது தவறோ என்று எண்ணினான்.
மதுவந்தி உயிரோடு இருந்தால் தனக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கும். அப்படியிருக்க ஒரு குழந்தைக்கு அப்பாவாக இருந்து இவளை ஆசையாக விளையாடியது தவறோ?
சேசே.. அது ஒரு வேகத்துல கண்சிமிட்டியது. அவ தன்னை தேடி வரக்கூடாதுனு அப்படி இன்டீசண்டா பிஹேவ் பண்ணிட்டு வந்தேன்.
அவளும் தேடி வரலை. எனக்கும் அது தான் வேண்டும். இன்னிக்கு பார்த்த வரன் அவளுக்கு சூட்டபிள் ஆச்சுனா மேரேஜ்கு சொல்வா. கண்ணியமா கல்யாணத்துக்கு போய் பிளஸிங் பண்ணிட்டு வரணும்.
மேரேஜூக்கு கிப்ட் வாங்கணும்.
மற்றபடி நான் ஒரு கொலைக்காரன். என் மனைவியை கொன்ற ஷண்முகத்தை கொன்ற கொலைக்காரன. அது யாருக்கும் தெரியாது என்றாலும் நற்பவிக்கு இந்த விஷயம் தெரியும்.
அவ முதல் முதலில் அவளோட இன்வஸ்டிகேஷனில் சந்திச்சது. ஊருக்கு வேண்டுமின்னா மதுவந்தி இதழினியை கொன்ற ஷன்முகத்தை இதழினியோட அண்ணா தரண் கொலை செய்தாரென முடிவாகி கேஸ் முடிந்திருக்கலாம்.
ஆனா இதழினிக்காக கொலை செய்ய போன தரணுக்கும் முன்னால, மதுவந்திக்காக நான் கொலை செய்தது யாருக்கும் தெரியாதே.
நான் தான் கொலையாளினு அவளுக்கு தெரிந்தும் ஆதாரம் இல்லாம என்னை பிடிக்கவும் முடியாம இருக்கா.
‘அவளுக்கு தான் நீ கொலையாளினு தெரிந்தும் விரும்பினா?’ என்று மனசாட்சி எடுத்துரைக்க ‘நோ… அது தப்பு. அவ வானத்துல இருக்கற பவித்தரமான நிலா. அவளுக்கு எல்லாம் ஹோட்டல்காரன் வேண்டாம். பேங்க் உத்தியோகம் தான் பெட்டர். ஜஸ்ட் நான் அவளோட பிரெண்ட். அவள் முதல் முதலில் ஒர்க் பண்ணின கிராமத்துல நான் அவளுக்கு உதவினேன். அவளுக்கு கொலைக்காரன் என்றதற்கு முன்ன வரை நண்பனா பார்த்தா, அதை மறந்து எந்தவொரு உறவும் இல்லை. இதை மனசுல ஆழ பதிய வச்சிக்கணும்.’ என்று பலமுறை கூறிக்கொண்டு உறங்கினான்.
-இதயத்தை திருடுவான்.
-பிரவீணா தங்கராஜ்.
Ava apdi eruka viduvaala yenaa🤣❤️
Super narpavi comes for investigation not for alliance. Mathimaran awaiting for your reply. Intresting sis.
Wow interesting thriller story ah ithu ippadi yosikurane ethukaga mathi wife eranthanga ena nadanthu irukum 🤔