Skip to content
Home » இது மிஷின் யுகம்-புதுமைப்பித்தன்

இது மிஷின் யுகம்-புதுமைப்பித்தன்

இது மிஷின் யுகம்
     நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட – ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே – ஹோட்டலுக்குச் சென்றேன்.

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள். ‘அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா!’ என்ற அதிகாரங்கள்; இடையிலே உல்லாச சம்பாஷணை; சிரிப்பு.

     போய் உட்கார்ந்தேன்.

     “ஸார், என்ன வேண்டும்?”

     “என்ன இருக்கிறது?” என்று ஏதோ யோசனையில் கேட்டு விட்டேன்.

     அவ்வளவுதான்! கடல்மடை திறந்ததுபோல் பக்ஷணப் பெயர்கள் செவித் தொளைகளைத் தகர்த்தன.

     “சரி, சரி, ஒரு ப்ளேட் பூரி கிழங்கு!” அது அவன் பட்டியலில் இல்லாதது. முகத்தில் ஏதாவது குறி தோன்ற வேண்டுமே! உள்ளே போகிறான்.

     “ஒரு ஐஸ் வாட்டர்!”

     “என்னப்பா, எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?”

     “என்ன கிருஷ்ணா, அவர் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?”

     “இதோ வந்துவிட்டது, ஸார்!” என்று ஓர் அதிகாரக் குரல் கெஞ்சலில் முடிந்தது.

     “காப்பி இரண்டு கப்!”

     இவ்வளவுக்கும் இடையில் கிருஷ்ணன் ஒரு கையில் நான் கேட்டதும், மற்றதில் ஐஸ் வாட்டரும் எடுத்துவருகிறான்.

     “ஸேவரி (கார பக்ஷண வகை) எதாகிலும் கொண்டா!”

     “இதோ, ஸார்!”

     “பில்!”

     உடனே கையிலிருந்த பில் புஸ்தகத்தில் லேசாக எழுதி, மேஜையில் சிந்திய காப்பியில் ஒட்ட வைத்துவிட்டு, ஸேவரி எடுக்கப்போகிறான்.

     “ஒரு கூல் டிரிங்க்!”

     “ஐஸ்கிரீம்!”

     பேசாமல் உள்ளே போகிறான். முகத்தில் ஒரே குறி.

     அதற்குள் இன்னொரு கூட்டம் வருகிறது.

     “ஹாட்டாக என்ன இருக்கிறது?”

     “குஞ்சாலாடு, பாஸந்தி…”

     “ஸேவரியில்?”

     கொஞ்சமாவது கவலை வேண்டுமே! அதேபடி பட்டியல் ஒப்புவிக்கிறான். சிரிப்பா, பேச்சா? அதற்கு நேரம் எங்கே? அவன் மனிதனா, யந்திரமா?

     “ஐஸ் வாட்டர்!”

     “ஒரு கிரஷ்!”

     “நாலு பிளேட் ஜாங்கிரி!”

     கொஞ்சம் அதிகாரமான குரல்கள்தான். அவன் முகத்தில் அதே குறி, அதே நடை.

     நான் உள்பக்கத்திற்குப் போகும் பாதையில் உட்கார்ந்திருந்தேன். என் மேஜையைக் கவனித்துக்கொண்டு உள்ளே போகிறான்.

     மனதிற்குள் “ராம நீஸமாந மவரு” என்று கீர்த்தனம்! உள்ளத்தை விட்டு வெளியேயும் சற்று உலாவியது. அப்பா!

     திரும்பி வருகிறான் கையில் பண்டங்களுடன். பரிமாறியாகிவிட்டது.

     என்னிடம் வந்து பில் எழுதியாகிவிட்டது. எல்லாம் பழக்க வாசனை, யந்திரம் மாதிரி.

     “ஸார், உங்கள் கைக்குட்டை கீழே விழுந்துவிட்டது, ஸார்!”

     அவன் குனிகிறான் எடுக்க. நானே எடுத்துக்கொண்டேன்.

     மனிதன் தான்!

     “ஒரு ஐஸ்கிரீம்!”

     திரும்பவும் மிஷினாகிவிட்டான்!

-புதுமைப்பித்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *