Skip to content
Home » இரசவாதி வித்தகன்-11

இரசவாதி வித்தகன்-11

இரசவாதி வித்தகன்-11

   வித்தகன் மஞ்சரியை இழுத்து வந்து தோட்டத்தில் அமரவைத்தான். அமலா மஞ்சரியின் வீட்டில் சமையலறையில் இருக்க, இங்கே தனித்து இருந்த ஓட்டு வீட்டில் திண்ணையில் அவளருகே அமர்ந்து, “உங்கிட்ட பேசணும்” என்றான்.

“என்ன பேசணும்.?” என்று கையைக் கட்டி அவனைத் திமிராய் நோக்கவும், அவன் பார்வை தடம் மாறியது.

“தயவுசெய்து கையெல்லாம் கட்டாத. மரியாதை மனசுல இருக்கட்டும்.” என்று கூறவும் மஞ்சரி எழமுற்பட்டாள். அவன் பார்வை சென்ற தினுசு அப்படி.

“ஏய்.. சாரி சாரி.. நான் எது பேசினாலும் கொஞ்சம் பொறுமையா கேளு. நான் உன்னைக் கிண்டல் பண்ணலை. ஹர்ட் பண்ணற நோக்கத்திலும் பேசலை.

எனக்கு இங்க நிறைய விஷயம் மறைக்கறாங்கனு தெரியுது. நீ கூடச் சித்தப்பாவிடம் ‘மாமா நீங்க மறைச்சிங்க உங்க தப்பு. என்னவோ சொன்னியே.

இங்க பாரு…. சித்தப்பா என்னிடம் எதையோ மறைச்சிட்டார். அது என்னனு எனக்குத் தெரியலை.

என்னைப் பொறுத்தவரை கடைசியா என்னோட பத்தாவது பிறந்தநாளுக்கு ஜாதகம் பார்க்க, உங்க அப்பாவும் எங்கம்மாவும் போனாங்க.

ஜாதகத்துல இளையவன் அப்பா அம்மா கூட இருந்தா ஆபத்துனு சொன்னாங்க.

அப்போ எங்க பாட்டி கூட அதை ஆமோதிச்சு என்னைத் திட்டிட்டே இருந்தாங்க.

அதை மீறி எங்கப்பா என்னை இரட்டை மனசோட வளர்க்கலாமா, இல்லை பணம் கொடுத்து சேதுபதி சித்தப்பாவோட வளர்க்கலாமானு தீவிரமா டிஸ்கஷன் நடத்தினாங்க.

என் பாட்டி, உங்கப்பா, எங்கம்மா மூன்று பேரும் ஜாதகத்தை நம்பினாங்க.

போதாதுக்கு என் அப்பா டிரெயின் வர்றப்ப தண்டவாளத்தைத் தாண்டும் போது, எக்ஸ்பிரஸ் வந்து மோதி இறந்துட்டாரே.

அப்ப தானே ஐயப்பன் மாமா முடிவா, வித்தகன் ஜாதகத்தோட தாக்கத்தில் தான் அவர் தங்கை கணவர் இறந்துட்டார். தங்கை அமங்கலி ஆகிட்டாங்கனு என்னை விரட்டினார்.

என் பாட்டி என்னை அடிச்சி தெருவுல தள்ளி விட்டாங்க. அம்மா… கடைசி வரை வெளிய வரலை” என்ற போது குரல் உடைந்தது.

அதனை சமாளித்தவனாக ”சேதுபதி சித்தப்பா என்னைத் தூக்கிட்டு என் அண்ணன் இறந்தது விபத்து. அதெப்படி மேகவித்தகனை சொல்லுவிங்கனு திட்ட, உங்கப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் சண்டை அதிகமானது.

ஐயப்பன் மாமா கண்டிப்பா என்னை வீட்டுல சேர்க்க மாட்டேன்னு கதவடைச்சிட்டார்.

ஏன்…. பார்வதி அத்தை எங்கப்பாவோட கூடப்பிறந்த தங்கச்சி தானே. அவங்களுக்குக் கூடப் பாசமில்லையே.

அன்னைக்கு உங்க வீட்ல மயூரன் அழறது மட்டும் தான் எனக்குக் கேட்டுச்சு. எங்கம்மா… அதான் உங்க அமலா அத்தை எனக்காக எட்டி கூடப் பார்க்கலை. அவங்க வெளியே வந்து என்னைப் பேசியதுக்கோ, போக வேண்டாம்னு தடுக்கவோ செய்யலை.

வலுக்கட்டாயமாக என்னைச் சித்தப்பா கூட்டிட்டு போக, அம்மா ரூம்ல கல் மாதிரி இருந்தாங்க அசையவேயில்லை.

பாட்டி வீட்லையும் அவங்க ‘இவனை ஏன்டா இங்க கூட்டிட்டு வந்த. என் மகனை முழுங்கிட்டான்னு திட்டினாங்க.
சித்தப்பா மட்டும் தான் என்னை இங்க இருந்து அவரோடவே வச்சிக்கிட்டார்.

இந்த ஊர்லயிருந்து போனதும், சென்னையில இரண்டு வருடம் இருந்தோம். சொத்து மட்டும் விற்று லண்டன்ல வந்து சேர்ந்தோம்.

சித்தப்பா நேர்மையா முன்னேறலை. எனக்குத் தெரியும்… சூதாட்டத்துல தான் பணத்தைச் சேர்த்தார்.

என்னை ராசிக்கெட்டவன், இவனிருந்தா உயிருக்கு உத்திரவாதமில்லைனு பேசியதுக்கு மாறா, ‘நீ தான்டா என் லக்கி சார்ம்’னு என்னை அணைச்சிக்கிட்டார்.

எனக்கு நினைவு தெரிந்த நாள்லயிருந்து அமலாம்மா என்னிடம் பேசலை.

பாட்டி உயிரோட இருந்தவரை பேசலை… பாட்டி என்னிடம் பேசாமலே இறந்துட்டாங்க.
ஏன் உங்கப்பா அம்மா பேசியதுயில்லை.

இப்ப கல்யாணம் வச்சிட்டு ‘வாவா’னு போன்ல கெஞ்சினானு சொன்னியே உங்க மயூரன் அத்தான். அவனுமே என்னிடம் பேசியதில்லை.

இப்படி யாரும் பேசாம இருந்ததுல நான் மட்டும் எப்படிப் பாசத்தோட இருப்பேன்.

தேவைப்படற நேரத்துல யாரும் இல்லை. திடீரென மயூரன் கல்யாணத்துக்கு வரச்சொன்னா எப்படி? மயூரனிடம் பேசத்தோணுமா?

எப்படி எங்கம்மாவிடம் பேசுவேன்? கட்டி பிடிச்சி என் பீலிங்கை ஷேர் பண்ணுவேன்? அன்பா நாலு வார்த்தை பேச முடியுமா?

உங்க வீட்ல உங்கப்பா விருந்துக்குக் கறி-மீனுனு தடபுடலா வாங்கறார். உங்கம்மா எனக்காகச் சமைக்கறாங்க.. இப்ப மட்டும் எப்படி என்னால பழசை மறந்து சாப்பிட முடியும்.” என்றதும் மஞ்சரி வித்தியாசமாய்க் காணவும், “என்ன பண்ணறது வெட்கமேயில்லாம சாப்பிட்டேன்.” என்று முகம் தொங்கி நின்றான் வித்தகன்.

மஞ்சரியோ கதை கேட்டு முடித்து, பச் சாப்பிட்டதை யார் தப்பா நினைச்சா? என்று புறம் தள்ளி, “பாட்டி இறந்துட்டதா யார் சொன்னா?” என்று கேட்டாள்.

“யார் சொல்வா? சித்தப்பா தான் ஒரு முறை சொன்னார்.

நான் பதிமூன்று வயசுல இருந்தப்ப, ‘ஏன் சித்தப்பா… பாட்டிக்கு என் மேல என்ன கோபம்னு கேட்டேன். அவர் அதுக்குக் ‘கிழவிங்க அப்படித் தான். செத்தவங்களை விட்டு தொலைடா.’ அப்படின்னு சொன்னார்.

மத்தபடி அம்மாவை கேட்டா… அவங்க என்னிடம் பேச விரும்பலைனு சித்தப்பா சொல்வார்.

எனக்குப் பதினெட்டு வயசு வந்தப்ப மயூரன் பேசறான்னு போனை கொடுத்தார். எனக்குக் கிடைச்ச வேதனைகள், அது கற்று கொடுத்த பாடமும் மயூரனிடம் கூடப் பேச பிடிக்கலை.

ஆனா மயூரன் லண்டனுக்கே வந்து என்னை அடிக்கடி மீட் பண்ணி நான் முகம் திருப்பிட்டு போனாலும் கெஞ்சிட்டு பின்னாடியே வருவான்.

மயூரன் கெஞ்சி கொஞ்சியே என்னை இங்க வரவச்சிட்டான்.

உண்மை சொல்லணும்னா… நான் சித்தப்பாவுக்காக வந்தேன். அதோட நான் சின்ன வயசுல ‘அண்ணன்னு ஒருத்தன் இருந்தும் இல்லாம போயிட்டானேனு பீல் பண்ணியது’ போல, மயூரன் மனசுல ‘தம்பினு ஒருத்தன் இருந்தும் கல்யாணத்துக்கு வரலைனு பீல் பண்ணிடக்கூடாதே’னு தான் வந்தேன்.

ஆனா என்னவோ நான் திமிர் பிடிச்சவன் மாதிரி இங்க உங்க பார்வைக்குத் தெரியறேன்.” என்று தன் நெடுநாள் ஆதங்கத்தை ஒரே மூச்சில் விவரித்து வருந்தினான்.

மேகவித்தகன் விளையாட்டை மூட்டைக்கட்டி பேச ஆரம்பித்ததும், மஞ்சரி அவனது பக்க எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்துச் செவியில் ஏற்றுக்கொண்டாள்.

“சேசே.. உங்களை யார் திமிர்பிடிச்சவனா பார்த்தாங்க?” என்று மறுத்து பேசினவளை, “நெஞ்சை தொட்டு சொல்லு.. நீ என்னை அப்படி நினைக்கலைனு?” என்றதும் மஞ்சரி மௌவுனமானாள்.

“சாரி… மேகன் அத்தான். தப்பு தான்… ஆனா இங்க நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. நிறைய விஷயம் மாமா உங்களிடம் சரியா சொல்லலை.

அவரும் வேண்டுமின்னே மறைச்சிருக்க மாட்டார். அவரோட சூழ்நிலை அப்படி அமைந்திருக்கும்.” என்று பேசிடவும், மேகவித்தகன், “இப்ப ஓகேவா.. என் மேல கோபமில்லையே…” என்று ஆதரவாய் கைப்பற்றப் போகவும் அவன் தீண்ட வந்த மஞ்சரி கையிலேயே ஓடு வந்து விழுந்தது.

“அச்சோ… அம்மா.” என்று அலறிட, அந்த ஓட்டின் பின்னால் சின்னதாய் பூரானும் மஞ்சரி கைமேல் பட்டு ஊர்ந்து கீழே விழுந்தது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “இரசவாதி வித்தகன்-11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *