இரசவாதி வித்தகன்-12
வித்தகன் பதறியவாறு அவளது கையைத் தீண்டவும், “அவுச்’ என்று உதறிக்கொண்டே சமையல் அறைப்பக்கம் சென்றாள்.
வித்தகனும் பின்னாடியே ஓடிவந்தான்.
“என்ன பூச்சி கையில கடிச்சிடிச்சா. அச்சோ ஓடு வேற” என்று அவளது கையைப் பிடிக்க, மஞ்சரி கையை உருவியவள், மிளகை இடித்து வெற்றிலை கொடியோடு வாயில் அதக்கிவிட்டு, சுண்ணாம்பை எடுத்துக் கையில் பூசினாள்.
“ஏய்… ஹாஸ்பிடலுக்கு வா.” என்று கூப்பிட, “எனக்குத் தெரியும். பூரான் லைட்டா ஊர்ந்து போயிருக்கும். இதே போதும்.” என்றவள் சிடுசிடுத்து கொண்டாள்.
“ஆர் யூ சூர்?” என்று வித்தகன் அழுத்தமாய்க் கேட்க, “நல்லா தெரியும்… பூரானால எதுவும் ஆகாது. இந்த ஓடு மேலப்பட்டது தான் வலிக்குது. ஆயின்மெண்ட் தடவணும்” என்று கூறவும் வித்தகன் அவளது கையைப் பிடிக்க இம்முறையும் இழுக்கப் பார்த்தவளை, “நான் தொட்டு பார்க்க கூடாதா?” என்று வம்படியாய் கேட்க, மஞ்சரி அவ்வார்த்தையில் அவனை ஏறிட்டாள்.
“லைட்டா சிவந்திருக்கு வீக்கமும் தெரியுது” என்று கையை வருடி அவளை ஏறிடவும் இரு கண்களும் மின்சாரத்தைப் பாய்ச்சி கொண்டது.
“வித்தகன்.. என்னோட வா” என்று மயூரன் அழைத்துச் செல்ல, மேகவித்தகனோ மஞ்சரியை திரும்பி திரும்பி பார்த்தான்.
தன் மனதில் தேங்கியதை அவளிடம் கூறினோமே அவள் அதற்கு எந்த எதிர்வினையும் காட்டும் முன் இப்படி ஓடும், பூரானும் தடையிட்டதேயெனத் தவித்தான்.
மஞ்சரியோ வெற்றிலை மென்று சாறை விழுங்கியவள், வித்தகன் மீது தவறு இல்லையெனப் புரிந்திடவும், தற்போது யார் யாரின் நிலையை யார் எடுத்து சொல்வதென்று சிந்தித்தாள்.
முதலில் பாட்டி உயிரோடு இருப்பதைக் கூறணும். அடுத்து ஜாதகம் பார்த்து வித்தகனை தவிர்த்தது அப்பா தான் அத்தையில்லைனு புரிய வைக்கணும்.
அதுக்குப் பிறகு இத்தனை நாள் அத்தை ஜெயிலில் இருந்ததைச் சொல்லணும். மாமா இறப்பு கூடக் கொலையா தற்கொலையானு தெரியாம போனதும் காதுல போடணும்.
இந்தக் கிழவி எங்கப்போச்சு… என்று அமலா தங்கிருக்கும் தோட்டத்து வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு நடந்தாள். இதே உடையில் சென்றால் தன்னை அடையாளம் தெரியவில்லையென்று பேச மாட்டாரே’ என உடைமாற்ற போனாள்.
ஆனால் இன்று பாட்டியை தேட முடியாது. அலுவலக வேலை வேறு உள்ளது. விக்டரிடம் வீடியோ காலில் பேசிவிட்டதால் நிச்சயம் செய்து முடிக்கும் பணியால் கழுத்தை நெறிக்கும்.
தங்கள் வீட்டுக்குள் வந்தப்போது அவள் தந்தை ஐயப்பனோ பார்வதியை கடிந்து கொண்டிருந்தார்.
அமலாவோ “ப்ளிஸ் அண்ணா… சாதாரணமா பழகறதை தப்பா பேசாதே. இரண்டு பேரும் பெரியவங்க.” என்றுரைக்கவும் மஞ்சரி வித்தகனின் எண்ணத்தைத் தவிர்த்து விட்டு பணியைக் கவனித்தாள்.
எப்படியும் வித்தகனுக்குக் கூறவேண்டும். தற்போது சூழல் சரியில்லையே.
ராஜாராமோ “அப்பா… மஞ்சு வந்துட்டா” என்றதும் ஐயப்பன் வாய் மூடினார்.
கையை ஊதிக்கொண்டே வரவும் ராஜாராம் பார்த்துவிட்டு “என்னாச்சு மஞ்சு?” என்று கையைப் பிடித்துக் கேட்டான்.
“பச்… வித்தகனோட பேசிட்டு இருந்தேன். மேலயிருந்து ஓடு கீழே விழ, என் கையில பட்டுடுச்சு. அதுல பூரான் வேற இருக்கவும் லைட்டா ஊர்ந்தது.
சுண்ணாம்பு தடவிட்டு, மிளகு வெற்றிலையை மென்றிட்டு வந்தேன்.
அப்பா…. வித்தகனுக்குப் பாட்டி உயிரோட இருப்பது தெரியாதா? அவனுக்கு அத்தை ஜெயிலுக்குப் போனதை மறைச்சிங்க… சரி… சின்ன மாமா பாட்டி செத்துட்டதா சொல்லி வச்சிருக்கார்.
எதுவும் தெரியலைனா என்ன பண்ணுவார்.
ஏதோ நான் அவரைத் திட்டிட்டே இருக்கவும் என்னிடம் ஜாதகம் பார்த்துப் பையனை தள்ளி வச்சதா அமலா அத்தை மேல கோபமாயிருக்கார். பாட்டி செத்துட்டதா நினைக்கிறார். உங்க மேலயும் கோபம் இருக்கு. அவர் பக்கம் சரியா தான் நடக்கிறார்.
இங்க நம்மளோட பார்வை தான் தவறா இருக்கு” என்று தந்தைக்கும் ஒரு கொட்டு வைத்து அகன்றாள்.
“ஏற்கனவே அவ இந்த ஊர்ல இருந்து போரடிக்குனு வேலைக்கு ஓடறா. இதுல நீங்க வேற தேவையில்லாததைப் பேசினிங்கனு தெரிந்தது வித்தகன் மாதிரி மஞ்சரியும் இங்க வரமாட்டா.” என்று ராஜாராம் தந்தையிடம் கூறினான்.
மேலும் “உங்க தங்கை பாசம் வேற… என் தங்கை பாசம் வைக்கிற விதமே வேற. எட்டி நிறுத்தணும்னு முடிவுக்கட்டிட்டா நீங்க எப்படியோ அதே போலத் தான்.” என்று சுட்டிக்காட்டி எடுத்துரைத்தான்.
மணி ஒன்றாக மயூரனும் வித்தகனும் பேசியபடி வந்தார்கள். மதிய உணவை முடித்து விட்டு அங்கேயே இருக்கவும் மயூரன் வித்தகன் அருகே வந்து “நீ வேண்டுமின்னா நம்ம வீட்டுக்கு போடா மணி இரண்டாகுது” என்று அவனைத் துரத்த முயன்றான்.
“என்ன பிரச்சனை… இதப்பாரு… வராதவனை வரவச்சிட்டிங்க. நான் என் இஷ்டத்துக்கு ஏத்த மாதிரி தான் இருப்பேன். அங்கயிருப்பேன்… இங்கயும் இருப்பேன். எனக்குப் பிடிச்சதை செய்வேன்.
எனக்கா போகணும்னா போவேன். நீயா என்னை எதுவும் சொல்லக்கூடாது” என்று பேசிவிட்டு அமர்த்தலாகப் போனை எடுத்து ஒரு நம்பரை போட்டுக் காதில் வைத்து பேச ஆரம்பித்தான்.
மயூரனுக்கு ‘வித்தகனை கூப்பிட்டு நானே உரல்ல தலையை விட்டுட்டேன். ராஜாராம் என்னடானா மாமா ஏதோ மஞ்சரி கையைப் பிடிச்சி இழுத்துட்டு போனானு அவருக்குத் தம்பி மேல கோபம்னு சொன்னானே. மாமா ஜாதகம் அதுயிதுனு இன்னமும் யோசிக்கறார். சே… இந்த ஒன்னு தான் மாமாவை பிடிக்க மாட்டேங்குது. இது மட்டும் இவனுக்குத் தெரிந்தது… அவ்ளோ தான்.’ என்று தம்பியை நோக்கினான்.
“லொகேஷன் ஷேர் பண்ணிட்டேன் ப்ரோ.. அங்க வந்துடுங்க.” என்று பேசி அணைத்தான்.
‘இவன் யாரை வரச்சொல்லறான்? கேட்டா பக்கம் பக்கமா பேசுவான்.’ என்று வருவதை வைத்து அறிவோமென அமைதியானான் மயூரன்.
வீட்டுக்குள் மஞ்சரியோ தூக்கு வாளியை கிச்சன் மேடையில் வைத்து, “உங்கம்மா எங்க போனாங்கனு தெரியலை. நானும் எப்பவும் இருப்பாங்கனு சில இடம் சொல்வீங்களே அங்கயெல்லாம் பார்த்துட்டேன். கிழவி காலையிலருந்து ஆளையே காணோம். சாப்பிட்டுச்சா இல்லையானே தெரியலை.” என்று தன் பாட்டியை பற்றி மஞ்சரி பார்வதியிடம் சலிப்பாய் கூறினாள்.
“எங்கம்மாவை காணோம்னு பதட்டமேயில்லாம வந்து சொல்லற?” என்று பார்வதி பொரிந்தார்.
“ஆமா.. அப்படியே பாதுகாப்பா வச்சிக்கலாம்னு கூப்பிட்டா வந்துடறாங்களா.” என்று இத்தனை நாள் சொல் பேச்சை கேட்காத பாட்டியால் சலிப்படைந்து தான் பதில் தந்தாள் மஞ்சரி.
ஒரு கார் வீட்டின் முன் வந்து நிற்கவும், வித்தகன் எழுந்து வர, மயூரனோ ‘யாரென?’ ஆராயும் பார்வையை வீசினான்.
கிச்சனிலிருந்து பார்வதியும் மஞ்சரியும் ஜன்னல் வழியே எட்டி பார்க்க, ஐயப்பன் ஹாலிலிருந்து தலைதிருப்பிப் பார்த்தார்.
அப்பொழுது தான் வாழைத்தாரிலிருந்த வாழைக்காய்களை எண்ணெய் தடவி கைகளில் கறை படியாது வெட்டிய ராஜாராமும் திண்டிலிருந்து காரை கவனித்தான்.
அந்தக் காரிலிருந்து லண்டன் ரிட்டன் போல ஒரு மூதாட்டி இறங்கினார்.
பார்ப்பதற்கு மதராஸு பட்டினத்திலிருந்து இறங்கிவரும் கிழவியின் உடையில் மீனாம்பாள் ஸ்டிக் வைத்து இறங்கினார்.
முதலில் யாரென அறியாது மயூரன் உற்று உற்று பார்க்க மீனாம்பாளின் பாய்கட்டில் சற்று நேரமானது அது தங்கள் பாட்டி மீனாம்பாள் என்று அறிந்திடவே.
வித்தகனோ “பாட்டி உயிரோட இருக்காங்கனு நீ கூடச் சொல்லலை.” என்று குற்றம் சாட்டும் பார்வையைத் தமையனிடம் வீசி வார்த்தையை உதிர்த்தான்.
“வித்தகா.. அவங்க.. மனநலம் பாதிக்கப்பட்டு..’ என்றதும், பளீரென அறை மீனாம்பாள் மயூரன் கன்னத்தில் இறக்கினார்.
“யாருக்குடா பிராந்து.. உனக்குத் தான் பிராந்து.” என்று மீனாம்பாள் குரலில்… வீட்டிலிருந்து மஞ்சரி, பார்வதி, அமலா, ஐயப்பன் வரிசையாக வந்து நின்றார்கள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
ஹே மாடர்ன் பாட்டியா ? சூப்பர்.