Skip to content
Home » இரசவாதி வித்தகன்-13

இரசவாதி வித்தகன்-13

இரசவாதி வித்தகன்-13

      மீனாம்பாள் அடித்து விடவும், “அச்சோ பாட்டி அண்ணா பாவம்” என்று வித்தகன் வரவும், கன்னத்தைப் பிடித்து மயூரன் தம்பியை கண்டான்.

    “அது வந்து அண்ணா… நேத்து மதியம் சாப்பிடும் பொழுது பாட்டி கத்தினாங்க. எப்பவும் போலச் சித்தப்பா மறைச்சிட்டு நீ சாப்பிடு நான் பார்த்துட்டு வர்றேன்னு ஓடினார். அப்ப அவங்க பாட்டினு தெரியாது. நீங்களும் கமுக்கமா இருந்திங்க.

   அதே குரல் நேத்து நைட் தூங்கறப்ப வீட்டுக்கிட்ட கேட்டது. பாட்டியும் சித்தப்பாவும் பேசிட்டு இருந்தாங்க.

      ‘பரமேஸ்வரனை ரயிலுக்குத் தூக்கி கொடுத்துட்டேனே.’னு ஒரே ஒப்பாரி சித்தப்பா நான் வந்துடுவேன்னு ‘உஸ்உஸ்’னு சத்தம் போடாம கத்த சொல்லவும் பாட்டி ரொம்ப அழுதாங்க.

    வித்தகனையும் இத்தனை காலம் கண்ணுல பார்க்காம போயிட்டேனே டா. நான் என்ன பண்ணிருக்கணும். என் பையன் செத்துட்டா. மருமகளும் இல்லை. மயூரனையும் வித்தகனையும் நான் வளர்த்திருக்கணும். கேவலம் மலயாள நம்பூதரி சொன்னான்னு வித்தகனால தான் இதெல்லாம் நடந்ததுனு பழி சுமத்தி அவனைத் தள்ளி வச்சி பேசிட்டேனே.

    இந்நேரம் நீ ஒருத்தன் இல்லைனா என் சின்னப் பேரன் நிலைமை என்னாகியிருக்கும்.’ ஒரே புலம்பல்.

     பாட்டி சாகலை என்றதும் அவங்களுக்கு என் மேல ஜாதகத்தை வச்சி பிடிக்காம போனதும் முந்தைய கதை. அவங்க சித்தப்பாவிடம் முன்ன பேசியது அதுக்குப் பிறகு பீல் பண்ணிருப்பாங்கனு என்னால புரிஞ்சிக்க முடிந்தது.

   நான் அவங்க பேசறதை கேட்டுட்டு இருப்பதைக் காட்டிக்காம மறைவாவே இருந்தேன்.

    சித்தப்பாவும் பாட்டியும் அப்பாவோட இறப்பை பேசினாங்க. அப்பறம் அம்மா….” என்றவன் அமலாவை பார்த்து, “ஜெயிலுக்குப் போனதா பேசினாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் பேச்சு வார்த்தை கட்டாகி ஆளாளுக்கு ஒரு வித அழுத்தத்துல வளர்ந்து, தனித் தனியா இருக்கறது புரியுது.

   அதனால தான் காலையில எழுந்ததும் இங்க வந்தேன். தூரத்துல பாட்டி என்னையே பாலோவ் பண்ணினாங்க. 
  
   சித்தப்பா பாட்டியிடம் ‘நான் அவங்க இறந்ததாவே நினைச்சிட்டு இருப்பதைச் சொல்ல’ என் முன்ன வர பாட்டி தயங்கினாங்க. நான் ஏற்கனவே இங்க வரப்பிடிக்காம இருந்ததால் என்னைப் பார்க்க தயங்கினாங்க.

     நடுவுல சித்தப்பா தனியா போகவும் மயூரனும் வர்ற வழில சவீதா அண்ணியோட அப்பாவிடம் பேச போனான்.

    அந்தக் கேப்ல தனியா பாட்டியிடம் வந்து நின்றேன். ஏதோ ஒரு கோவில் ஓட்டின குளத்துல படுத்திருந்தாங்க.

  நான் ‘பாட்டி’னு பேசவும் என்னைக் கட்டி பிடிச்சி அழ ஆரம்பிச்சிட்டாங்க.

    ‘சித்தப்பாவோட பேசியதை கேட்டேன். அழாத பாட்டி’னு சொல்லி கண்ணைத் துடைச்சேன்.

   ‘ரொம்ப அழுக்கா இருக்கேன்’னு மீனா பாட்டி என்னிடமிருந்து தள்ளிப்போனாங்க.

   நான் தான் ‘இப்ப மனசு சுத்தமா இருக்கு பாட்டி. முன்ன தான் நீ அழுக்கா இருந்த’னு சொன்னேன்.

   பாட்டி அப்பவும் ஒதுங்கினாங்க.  இந்தச் சோஷியல் சர்வீஸா ரொம்ப அழுக்கா இருக்கற முதியவர்களுக்குக் குளிப்பாட்டி, டிரஸ் மாத்தி ஹேர் கட் பண்ணுவாங்களே. அவங்களைக் காண்டெக்ட் பண்ணினேன். இதோ இப்ப எப்படி இருக்காங்க பாரு. பாட்டி மாதிரி தெரியலை. ப்யூட்டி மாதிரி இருக்காங்க.” என்று கன்னம் பிடித்துக் கொஞ்சினான்.

   மஞ்சரியோ இதென்ன அநியாயம். இத்தனை நாள் ஏதோ தாங்கள் இந்தக் கிழவியைப் பாராதது போல ஒரு பழி என்று கத்த துவங்கினாள். “ஆமா… நாங்க சொன்னப்ப பைத்தியம் மாதிரி பினாத்திட்டு சுத்தினாங்க. வீட்டுக்கு வான்னா என் பேரனை சேர்த்துக்கலையே இந்த வீட்டுக்கு வரமாட்டேனு ஒரே அடம்.

   மயூரன் அத்தானும் இவங்களிடம் முன்ன பேசமாட்டார். ஏதோ மாமா இறந்தப்ப ஆறெழு வருஷம் ரோஷப்பட்டுத் திமிரெடுத்து ஜாதகம் தான் இப்படி என் பையனை சாகடிச்சது. ஜெயிலுக்கு அனுப்பியது. அதுயிதுனு ஏகவசனம் பேசி அப்பறம் சின்ன மாமா பேசலை என்றதும் ஆடி அடங்கிடுச்சு.

    இப்ப வரை எங்க வீட்டுக்கு வரலை. சாப்பாடு கொடுத்தா திண்ணுட்டு திண்ணையில படுத்து ஏதோ பெரிய மாமா மட்டும் தான் இவங்க குழந்தையா பெத்தெடுத்த மாதிரி இருந்தாங்க. இதுல நீ மட்டும் தான் பேரனா? ஏன் ராஜாரம், நான், மயூ அத்தான் இல்லை. எங்களைக் கண்டா முன்ன சின்ன வயசுல கொனட்டிக்கிட்டு போகும்.
 
    இத்தனை வருஷம் பேச ஆரம்பிச்சாளே பினாத்திட்டு இருந்து அழுது, கிடைச்சதை திண்ணுட்டு, நினைச்சா குளிக்கும், கோவில்ல படுத்துருளும். இப்ப நீ வந்ததும் நாங்க கவனிக்காத மாதிரி வந்து நிற்குது.

   ஏய் கிழவி… எத்தனை முறை டெய்லி குளி, சாப்பிடு. வீட்டுக்கு வானு கூப்பிட்டோம். ஏன் சொந்த வீட்ல கூட இருக்காம இருந்தது யாரு.” என்று மஞ்சரி வெடித்தாள்.

    மீனாம்பாளை அழைத்து வந்த வண்டியை அனுப்பிவிட்டு கேட்டுக் கொண்டிருந்த வித்தகனோ, “அவங்களை விடு. அம்மா… நீ என்ன பண்ணின. ஏன் ஜெயிலுக்குப் போனிங்க? அப்பா இறந்து விபத்தில்லையா? என்ன நடந்தது என்னிடம் சொல்லேன். நான் உங்களிடம் கோபம் மறந்து பாசமா தானே பேசறேன். நீங்க மட்டும் ஏன் மறைக்கறிங்க?’ என்று கேட்டான்.

    அமலாவோ சாய்ந்த தூணில் அப்படியே கீழே அமர்ந்து தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தார்.
 
    ஐயப்பனோ முன் வந்து “இங்க பாரு வித்தகா. நீ வந்த போகப்போற. பதினைந்து வருஷத்துக்கு மேல முடிஞ்சி போன கதையைப் பேசி ஒரு புரோஜனமும் இல்லை.

   என் தங்கை கொலை பழி வந்து வீட்ல இருக்கா. அதுவும் இப்ப தான் உன்னை மாதிரி நேத்து தான் இந்த மண்ணுல அடியெடுத்து வச்சியிருக்கா. ஒரு வாரம் போகட்டும்.

   பார்வதி.. சூரியன் மறையுது பாரு. அவங்களுக்குச் சாயா போடு. மஞ்சரி துணி காய்ந்துடுச்சு எடுத்து மடிச்சி வை. டேய் ராஜாராம் வாழைக்காயை கட் பண்ணி கறையோட நிற்காதே. புதுத் துணி போய் அதெல்லாம் உள்ள எடுத்து வை.
மயூரா… உங்க மாமனார் எப்பப்பா வர்றார்.?” என்று பேச்சை மாற்றினார்.

பார்வதி சாயா போட சென்றார். மஞ்சரியோ “ஏய் கிழவி வா இங்க” என்று அழைத்துச் சென்றாள். ராஜாராமோ வாழைக்காயை தனியாகப் பேப்பரில் சுருட்டி வைத்துத் தனிதனியாக வைத்தான். மயூரனும் ஐயப்பனோடு பேச ஆரம்பித்தான்.

“கல்யாணத்துக்கு முன்று நாள் முன்ன சவீதாவும் அவ தம்பி ரித்விக்கும் வர்றாங்க மாமா. அவங்க அப்பா மட்டும் கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்ன வர்றாராம். இங்க தான் ஏதாவது லாட்ஜ்ல ரூம் புக் பண்ணணும். ஆனா லாட்ஜில வேண்டாம்னு சவீதா சொல்லறா. இங்க ஏதாவது பிரைவேசியா மூன்று நாளுக்கு வாடகைக்குத் தனி வீடு கிடைக்குமா மாமா?” என்று பேசவும் ஐயப்பன் அதற்குப் பதில் தந்து அப்படியே வாசலோடு வித்தகனை தாண்டி கடந்தார்.

வித்தகனோ அதிருப்தியாக மாமாவை ஏறிட்டான்.

‘ஏன் இன்னிக்கே பேசினா என்னவாம்.’ என்று தூணில் துவண்டு சாய்ந்தமர்ந்த அமலாவை கவனித்தான்.

அம்மாவை எழுப்ப முன் வந்து மண்டியிட்டு அமர்ந்தான்.

“நமக்குள்ள பேச நிறைய இருக்கும்மா. ஆனா நீ மனசுல காயப்பட்டிருக்கனு உங்கண்ணா சொல்லறார். இன்னிக்கு நான் இங்க வந்து இரண்டாவது நாள் அம்மா. அவன் கல்யாணத்துக்கு இன்னும் பதிமூன்று நாள் இருக்கு. மாமா சொல்லற மாதிரி பொறுமையா தெரிஞ்சுக்கறேன். எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. எனக்குத் தெரிஞ்சா யாருக்குப் பிரச்சனை வந்திடப்போகுது சொல்லுங்க.” என்றவன் ஐயப்பனை ஏறிட அவரோ ஒருவித ஏளனத்தோடு நின்றார்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *