இரசவாதி வித்தகன்-16
மீனாம்பாள் அந்த வீட்டை ஏக்கமாய்ப் பார்த்தார். மகன் மருமகள் வாழ்ந்த வீடு. ஏன் தானுமே தன் கணவரோடு வாழ்ந்தது.
மயூரன் மேகவித்தகன் சிறு வயதில் விளையாடியது. கண்களில் நீர்க்கோர்க்க சிறுவயது நினைவில் நின்றார்.
“என்ன மீனு… கண்கலங்கி நிற்கற?” என்று பிரட் ஆம்லேட் எடுத்து வந்து கொடுத்தான்.
“என்னடாயிது?” என்று கேட்க, “எனக்கும் வேலையிருக்கு மீனு. அங்கயிங்க போனா நேரம் போகுது. மார்னிங் புட். மதியம் ஆர்டர் பண்ணிடறேன்.” என்றான்.
மீனாம்பாள் பேரனை வினோதமாய்ப் பார்த்து அமைதியானார்.
லேப்டாப்பை திறந்து மெயிலில் தனது லீவை கேன்சல் செய்துவிட்டு பணியைப் பார்க்க ஆரம்பித்தான். அலுவலக ஐடியில் பாஸ்வோர்ட் போட்டு வோர்க் ப்ரம் ஹோமில் பணியைத் துவங்கவும் மயூரனோ “என்னடா லீவு போட்டிருக்கேன்னு சொன்ன?” என்று வந்தான்.
“இப்ப என்ன பிரச்சனை உனக்கு. நான் வந்துட்டேன்னு நீ என்ன என் கூடவே வா இருக்க? இல்லை உங்க மாமா பொண்ணு மஞ்சரி வேலைக்குப் போகலையா? அத்தை பையன் ராஜாராம் அவனும் தோட்டம் துரவுனு இருக்கான். இதுல நேத்து கூடக் கோவைக்குப் போயிட்டு வந்தான்.
நான் மட்டும் என்ன? வீட்லயிருந்தே தானே வேலை செய்யறேன்.” முன்பு வந்த அன்று பேசியது போலவே பேசினான்.
சேதுபதியோ மெதுவாய் தலைக்காட்டி, “ஏன்ப்பா இப்படிப் பேசற?” என்று வந்தார்.
“வாங்க சித்தப்பா… இப்ப தான் கண்ணுக்கு முன்ன வர்றிங்க. எங்க போனீங்க?” என்று கூலாகக் கேட்டான்.
சேதுபதியோ தலைகுனிந்து வித்தகன் அருகே அமர்ந்தார்.
“அம்மா எல்லாம் சொன்னாங்களா?” என்று கேட்டார்.
“ஓ… அதுக்குத் தான் சைலண்ட் இருக்கிங்களா? எல்லாம் ஓரளவு சொல்லிட்டாங்க.” என்றவன் தலை நிமிர்ந்து மீண்டும் வேலையைப் பார்க்க துவங்கினான்.
மயூரனோ ‘சித்தப்பா அப்படியே விடுங்க. அவனிடம் பேசாதிங்க’ என்பது போலச் சமிக்ஞையில் பேசினான்.
சேதுபதியும், மயூரனும் மஞ்சரி வீட்டுக்கு வந்து சாப்பிடும் நேரம் மஞ்சரி வாசலை ஏறிட்டாள்.
“பாட்டி வரலையா?” என்று கேட்டாள்.
“வித்தகன் பிரட் ஆம்லேட் கொடுத்தான். அவங்க அதைச் சாப்பிட்டாங்க. சரி அலைச்சல் வேண்டாமேனு விட்டுட்டேன்.” என்று மயூரன் கூறவும் மஞ்சரி அவளது வேலையைக் கவனித்தாள்.
மதியம் ஆரம்பமானதும் வித்தகன் வரவில்லை. மயூரன் சாப்பிடும் நேரம் வித்தகனுக்கு அழைத்தான்.
“டேய் சாப்பிட வரலையா?” என்று கேட்டான்.
“நாங்க சாப்பிட்டுட்டோம். டோர் டெலிவெரில. டெய்லி ஒரு வீட்ல வந்து என்னால சாப்பிட முடியாது. நீ கல்யாணத்துக்குத் தான் வரச்சொன்ன. அங்க வரணும்னு என்ன போர்ஸ் பண்ணற?” என்று கடிந்தான்.
“அதில்லைடா…” என்று ஆரம்பிக்கவும், “ஐ கால் யூ பேக். ஆபிஸ் கால்” என்று துண்டித்து விட்டான்.
மயூரனோ சோகமாய் மாறி, பெற்றவளை நோக்கினான்.
அமலாவோ சின்னவன் வரவில்லை என்றதும் சாப்பாடு உள்ளிறங்க பிடிக்காமல் தவிர்த்தாள்.
மஞ்சரி வீட்டு ஆட்களும், சேதுபதியும் உணவை விழுங்க, மஞ்சரி மயூரனின் சோர்ந்த முகத்தைக் கண்டு வருந்தினாள்.
அமலாவும் சரியாகச் சாப்பிடாமல் இருப்பதைக் கண்டு மஞ்சரி வித்தகனை மனதில் திட்டி தீர்த்தாள்.
இரவு உணவை சாப்பிட வரும்போது தாளிக்க வேண்டும் என்று பொறுமை காத்தாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்தது போல வரவில்லை. மயூரனிடம் “நான் மலபார் பரோட்டா சாப்பிட்டுட்டேன். நீயும் சித்தப்பாவும் சாப்பிடுங்க உன் மாமா வீட்லயே.” என்று அலட்டிக்கொள்ளாமல் பதில் தந்தான்.
மயூரனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால் தம்பி பாட்டி சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். அது போதும்’ என்று கிளம்பினான்.
மஞ்சரிக்கோ ‘என்ன நினைச்சிட்டு இருக்கான். கிழவி வேற… கமுக்கமா சுத்துது.’ என்று நொடித்துப் பாத்திரம் தேய்த்தாள்.
பார்வதியோ இரண்டு நாளாய் எதையோ இழந்தது போல இருந்தார். ஐயப்பனுமே அவர் வேலையை மட்டும் கவனித்தார்.
ராஜாராமோ ‘வித்தகனை எடுத்தெறிந்து பேசியதும் அவன் இங்க வரலை. இப்ப வரலையேன் கவலை. அப்பாவே ரொம்பச் சைலண்ட் ஆகிட்டார். அவன் கோபம் மறந்து வருவானா?” என்று தங்கையிடம் பேசியபடி கடந்தான்.
மஞ்சரிக்கோ ‘நாளை காலையில இருக்கு?’ என்று கருவியபடி உறங்கினாள்.
வித்தகனும் எவ்வித சிந்தனைக்கும் செல்லாமல் உறங்கினான்.
அடுத்த நாள் காலை மஞ்சரி பெருக்கி, தண்ணீர் தெளிக்க வித்தகன் எழுந்தது போலவே தெரியவில்லை. கோலம் போட்டதும் கிளம்ப வேண்டுமே என்று வீட்டுக்குள் புயலாய் நுழைந்தாள்.
மீனாம்பாளும் வித்தகனும் கிச்சனில் காபி குடித்துக்கொண்டு சிரிப்பதை கண்டு வேகமாய் வந்தாள்.
“என்ன பண்ணிட்டு இருக்கிங்க. நேத்து உங்களுக்காகச் சமைச்சி வச்சி வீணாகிடுச்சு. வந்து சாப்பிட என்னவாம்.” என்று அதட்டினாள்.
காபியை குடித்துக் கொண்டவன் “இந்த அதட்டறது மிரட்டறது கொஞ்சறது குழையறது உங்க மயூ அத்தானிடம் வச்சிக்கோ. நான் மேகவித்தகன். நான் வந்தது எங்க தாத்தா வீட்டுக்கு. உங்க வீட்டுக்கு இல்லை.” என்று கடுமையாய் பேசி அகன்றான்.
மஞ்சரியோ “ஏன் கிழவி என்னவாம் உன் பேரனுக்கு?” என்று அடுப்படியில் ஏறியமர்ந்தாள்.
“அவன் சொன்னது சரிதானே. நான் தான் பரதேசியா பிச்சை வாங்கிச் சாப்பிட்டேன். என் பேரன் ராஜா டி. அவன் ஏன் உங்க வீட்டுக்கு வரணும்.” என்று கூறவும் மஞ்சரியோ கையைப் பிசைந்து நின்றாள்.
“ஏன் பாட்டி இப்படிப் பேசற. எங்க வீட்ல சாப்பிட்டது பிச்சையா?” என்று கேட்டாள்.
“இல்லையா பின்ன… என் மகள் என்னைக்கு எனக்குத் தூக்குல சாப்பாடு எடுத்துட்டு வந்தா. சின்னதுலயிருந்து நீ தானடி கொண்டு வருவ. ஏதோ குளத்தடில கோவில்ல, வருவ… தூக்குவாளியை அங்க வச்சிட்டு போவ. வயிறு காந்தவும் நானா சாப்பிடுவேன்.
நான் ஒரு கூறுக்கெட்டவ. இந்த வீடு வாசல் எல்லாமிருந்தும் அனாதையா தனியா இருந்துட்டேன். இனியாவது என் பேரனை கவனிக்கணும்.” என்றவர் உளுந்து வறுத்து மல்லி சேர்த்து துவையல் தயாரித்தார். மறுபக்கம் கூழ் தயாராகிக் கொண்டிருந்தது.
“பாட்டி… அங்க வந்து சாப்பிட மாட்டிங்களா? மருமகன் வீட்ல சாப்பிடணும்னு கௌவுரவம் பார்க்கறியா?.” ன்று கவலையாய் கேட்டாள்.
“காலம் போற வயசுல எனக்கென்னடி கௌவுரவம். என் பேரன் கௌவுரவம் கெடக்கூடாது.” என்று சமையலை கவனிக்க, மஞ்சரியோ இவரிடம் பேசுவதற்குப் பதிலாக அந்த நெடுமரத்தானிடம் பேசி பார்ப்போம் என வித்தகன் இடம் வந்து சேர்ந்தாள்.
“ஹே டூட்… இன்னமும் டுவெல் டேஸ் டா. அப்பறம் வந்துடுவேன். அதுவரை பீச் ஹவுஸ் ப்ரீ தான். என்ஜாய் மேன்.” என்று கூறவும் மஞ்சரி எதிரே நின்றாள்.
வித்தகன் போன் பேசிக்கொண்டே அவள் வரும் திக்கிற்கு எதிரே தள்ளி செல்ல விடாமல் பின்னால் வந்தாள்.
இரண்டு மூன்று முறை தவிர்த்தவன், “ஒன் செகண்ட்” என்றவன் காலை மியூட்டில் போட்டுவிட்டு “வாட் இஸ் யுவர் ப்ராப்ளம்?” என்று சிடுசிடுத்தான்.
“வீட்ல வந்து சாப்பிட என்னவாம். நீ வராததால பாட்டி வரலை. அத்தை அங்க டல்லாயிட்டாங்க. நீ வரமாட்டியானு ஏங்கறாங்க. மயூ அத்தான் கல்யாணத்தை வச்சிட்டு சோகமா இருக்கார். ஏன் இப்படிப் பண்ணற?” என்று எரிந்து விழுந்தாள்.
“ஷட் யுவர் மௌத். என்னைக் கேள்விக் கேட்க நீ யாரு? யாரு உனக்கு அதிகாரம் தந்தா? உங்க வீட்ல ஏன் நான் வந்து சாப்பிடணும். எங்கம்மா நான் வரலைனா ஏன் பீல் பண்ணணும். இது அவங்க வீடு. எங்கப்பாவும் அவங்களும் வாழ்ந்த வீடு. அவங்க மாமியார் இங்க இருக்காங்க. வந்து சர்வீஸ் பண்ண சொல்லு. அவங்க பையனுக்குக் கல்யாணம் இந்த வீட்ல பந்தக்கால் நட சொல்லு. நான் அவங்க சின்னப் பையன். லண்டன்ல இருந்து வந்திருக்கேன். அக்கறை இருந்தா அவங்க இங்க வந்து எனக்குச் சமைச்சி போடட்டடும். எதுவும் தோணலையா. அவங்க அண்ணா வீட்ல மூலையில் இருந்துக்கச் சொல்லு.
உங்க மயூ அத்தான் அவனோட வருங்கால மனைவி சவீதாவுக்கு இங்க தங்க ரூம் கிடைக்கலைனு கவலையா இருக்கான். தவிர என்னை நினைச்சி கவலைப்பட நேரமிருக்காது. சோகமாயிருக்கானாம் சோகமா…
போ.. உங்க மயூ அத்தானை கேளு. என்னிடம் பேசாத. தி இஸ் யுவர் லிமிட்.” என்று கத்திவிட்டு அகன்றான்.
மஞ்சரியோ பேயறைந்தது போல நின்றாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super sis megavithagan I like so much daily episode kudupigala ? 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😊🥰🥰🥰😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Yes. Read and comments panunga udane post paniduven
Na read panuvan sis ❤️
வித்தகன் சொல்வது சரிதான். அவரவர் கவலை அவரவர்க்கு.