Skip to content
Home » இரசவாதி வித்தகன்-2

இரசவாதி வித்தகன்-2

இரசவாதி வித்தகன்-2

பிளைட்டில் ஏறுவது புதிதல்ல, ஆனால் அப்பொழுது எல்லாம் மகிழ்ச்சியான சூழ்நிலையில் மனம் சுற்றித் திரிந்தது.

இப்படிப் பெற்றெடுத்த அம்மா, உடன்பிறந்த மயூரன் அண்ணா, இருவரையும் பார்க்க பிடிக்காமல், அவர்களுக்காகப் பயணம் செய்வது கடுகடுப்பை கூட்டியது.

“சித்தப்பா… பிளைட்ல இருந்து இறங்கியதும் திரும்ப லண்டனுக்கே திரும்பிடலாமா?” என்று கேட்டதும், “டேய்…மேத்யூவிடம் பதினைந்து நாள் கல்யாணம் முடிச்சி தான் வருவேன்னு சொல்லிருக்கேன். அப்ப காதுல விழுந்தது தானே. சும்மா வாடா.” என்று கூறினார் சேதுபதி.

வித்தகனோ சில மணி நேரத்தில் பிளைட் லேண்ட் ஆகிடுமே என்று வானத்தை வெறித்தான்.

”பெரிய ஜெர்னலிஸ்டு… சிம்பிளா கல்யாணம் வச்சி வேலையைப் பார்க்க வேண்டியது தானே” என்று அண்ணனை திட்டினான்.

இத்தனை காலமாய் அமலா ஒருமுறை கூட வித்தகனை காண வந்ததில்லை. ஆனால் மயூரன் ஆறுமாதம் ஒருமுறை தம்பியான தன்னைக் காண வந்திடுவான்.

எப்பொழுதும் அவன் பேசினாலும் முகம் திருப்பிப் பேசுவது மேகவித்தகன் தான்.

இங்கே மயூரன் முகம் திருப்பிக் கொள்வானோ? என்று யோசனையில் ஆழ்ந்தான்.

இங்கு மயூரனோ சாவியை மஞ்சரியிடம் நீட்டி, “நல்லா கூட்டி பெருக்கி கழுவிடு மஞ்சரி. என்ன காரணம் கிடைக்கும் ஓடிடலாம்னு யோசிப்பான் வித்தகன். வீடு தூசியாயிருக்கு அதுயிது சொல்லிடக்கூடாது.

அதனால தான் உன்னிடம் சாவி தர்றேன். வீட்டை கூட்டிட்டு வீட்டை அலங்காரம் செய்து வைக்க, ராஜா பேன்ஸி ஸ்டோருக்கு போ. என்ன பிடிக்குமோ அதை வாங்கி அந்தந்த இடத்துக்கு ஏற்றது மாதிரி அலங்காரம் பண்ணிடு.

இப்படி வீட்டுல எதுவும் வச்சில்லனாலும் அவன் மூளை ஏறுக்கு மாறா யோசிக்கும். ஏதோ பழைய வீட்ல தங்க வச்சிட்டான்னு புலம்புவான்.” என்று மஞ்சரியிடம் கூறவும் அவளோ சாவி வாங்கினாள்.

“ஏன் அத்தான்… இந்தளவு மெனக்கெடுறதுக்கு வேற ஹோட்டலோ தனி வீடோ வாடகைக்கு எடுக்கலாம்ல?” என்று மஞ்சரி சாவியைப் பையில் போட்டு கேட்டாள்.

“சித்தப்பா இங்க மட்டும் தான் தங்குவேன்னு சொன்னார் மஞ்சு” என்றதும் “சரிசரி போ” என்று விரட்டிவிட்டு, கிணற்று நீரை இறைத்து வெளியே கழுவிவிட்டாள்.

வீட்டில் உள்ளே மோட்டார் பம்பு என்பதால் தண்ணீர் பைப்பை வாங்கி, காரை சுத்தம் செய்வது போல நீரை திறந்துவிட, அழுக்கு தூசி அடித்துப் போனது. மஞ்சரி ஒரளவு துடைப்பத்தால் சுத்தம் செய்ய உதவினாள்.

பார்வதியோ சின்ன அண்ணனும், பெரியண்ணாவின் இரண்டாவது மகனும் வரவே, அவர்களும் சில வேலையைச் செய்து பாடுபட்டார்.

ஐயப்பன் செருமியபடி வந்து “ஆகட்டும்… சின்ன அண்ணன் வர்றான்னு உங்கம்மா துள்ளறாளா.

அதோட என் தங்கை அமலாவும் ஜெயிலிருந்து வர்றா நினைவிருக்கட்டும்.

அவளுக்கு இப்படிப் பகட்டா தனிப் பங்களால தங்க பிடிக்காது அதே நேரம் நம்ம வீட்லயும் இருக்க மாட்டா. நம்ம வீட்டு தோட்டத்து வீட்டை ரெடிப்பண்ணு.” என்று ஐயப்பன் கடிந்து செல்லவும், பார்வதியோ ”நீ இங்க பார்த்துக்கோ அம்ம.. அம்மை விரசா வந்துடறேன்.” என்று சென்றார்.

‘ம்கூம்… ஏதோ நம்ம வீட்ல கல்யாணம் மாதிரில நான் வேலை செய்யறேன். எல்லாம் இந்த மயூரன் அத்தானுக்காகத் தான். இல்லைனா விளக்கமாத்தை நான் பிடிக்க மாட்டேன்.’ என்று வீட்டை கழுவியபடி வேலையை முடித்தாள்.

தூண்கள் வைத்த மரவீடு. பல ஜன்னல்கள் இருந்ததால் தண்ணீர் பைப்பால் கழுவியதும், உடனே திறந்து காற்று வர காயவும் செய்தது. அக்காலத்தில் தண்ணீர் ஊற்றினால் பள்ளம் தேடி செல்வதற்குத் தோதுவாகத் தான் அமைத்திருந்தனர். ஒவ்வொரு அறையும் தண்ணீர் விட்டு அலசியிருந்தாள். ஜன்னலும் தூணும் கருப்பு வைரமாய் மின்னியது. அனைத்து தேக்கு மரம் கருப்பு வார்னீஷ் கொண்டு அடித்திருந்தனர்.

வீடு ஜொலிக்கவும் மஞ்சரி குளித்துவிட்டு, ஈரக்கூந்தலோடு ராஜா பேன்சி ஸ்டோர் கடைக்கு வந்தாள். இங்கிருக்கும் கடைகளில் இது தான் மூன்றடுக்குக் கடை.

மயூரன் கொடுத்து சென்ற ஏடிஎம் கார்டால் எங்கு எதை வைத்தால் நன்றாக இருக்குமெனப் பார்த்து பார்த்து வாங்கிப் பில் போட கூறினாள்.

ஏடிஎம் கார்டு தேய்க்கவும் மயூரன் சொன்ன பின்நம்பரை அழுத்தினாள்.

ஏற்கனவே ஆட்டோவொன்றை பேசி முடித்து, மொத்த பொருட்களையும் அட்டைப்பெட்டியில் மூடி வைத்து ஏற்றினாள்.

மூன்று நான்கு அட்டைப்பெட்டியோடு வீடு வந்து சேர்ந்தாள்.

பெட்டியை பிரித்து ஹாலில் முதலில் ஜன்னலுக்குத் திரைச்சீலைகளை மாட்டினாள். ஆங்காங்கே ஆணியடித்த படி இருந்த வெறும் சுவரில் வாங்கி வந்த இயற்கை புகைப்படங்களை மாட்டினாள். மயிலிறகு கொண்ட பையை மாட்டிவிட்டாள். ஏதேனும் போன் சார்ஜர் வைக்க உதவுமென்று.

பால்கனியில் மீன் தொட்டியை வைத்து விட்டு செடியையும் ஆங்காங்கே அழகாய் எடுத்து வைத்தாள்.

கிச்சனில் தண்ணீரும் காபி மேக்கரும், தட்டு டம்ளரென அடுக்கினாள்.

பெரிய பூஜை அறையில் குரூவாயூரப்பனையும் லட்சுமியையும் வைத்தாள். இதற்கு மேல் இங்கே கடவுளை நிரப்ப மஞ்சரிக்கு இஷ்டமில்லை. எப்படியும் ஃபாரின் பார்ட்டி சாமியையே கும்பிடாதே.

பாத்ரூமில் புது வாளியும் மக்கும் வைத்து விட்டு சென்றாள். பிரஷ் வைக்க ஒரு பிளாஸ்டிக் ஹேங்கரை மாற்றினாள்.

இரண்டு அறையிலும் மரப்பீரோ அறையோடு பொருந்தி இருந்ததால் கட்டில் மட்டும் மயூரன் வாங்கிப் போட்டுவிட்டுச் சென்றான். அதில் ஆறமரந்து, “இரண்டு பேர் இந்த வீட்ல இருக்க இந்தளவு போதும்” என்று கிச்சனில் பழமும் குக்கீஸும், இனிப்பும், நேந்திர சிப்ஸும் என அடுக்கியிருந்தாள். அனைத்தும் கண்ணாடி குடுவையில் போட்டுவிட்டாள்.

கிச்சனுக்கு வந்தாளே என்ன திண்பண்டம் உள்ளதெனத் தெரிந்திடும். அந்தளவு கச்சிதமாக வைத்திருக்க, மெத்தையில் படுத்து சோம்பல் முறித்து அசதியில் உறங்கினாள்.

சற்று நேரம் ஓடியிருக்கும் “சித்தப்பா… வீட்ல யாருமில்லை… இந்த வீடு தானே. உள்ள போலாமா?” என்ற குரலில் விழித்தாள்.

“யாரோ புதுக்குரல். ஒரு மாதிரி புதுசா?” என்று எழுந்து வேகமாக வெளியே வர, “ரம்பை மேனகை என்று கூறுவார்களே அவர்களைப் போல ஒருத்தி அறையில் இருந்து வரவும் மேலிருந்து கீழ்வரை நிதானமாய்ப் பார்த்தான்.

கணுக்கால் வரை ஏற்றிக்கட்டிய தாவணியில், கொலுசு கால்களைக் கண்டதும், இமை மூடி திறந்தான்.

அவன் கையை நீட்டி பேசவும் சட்டெனத் தாவணியை இறக்கி விட்டு, “யார் நீங்க?” என்று கேட்டாள்.

டார்க் ப்ளு டீஷர்ட், வெளீர் நிற ஜீன் என்று வந்த வித்தகன், “நீ யாரு?” என்றான்.

“நான் கேட்டதையே திருப்பிக் கேட்கறிங்க?” என்று மஞ்சரி ஆரம்பிக்கும் நேரம், “இதான் தங்கச்சி மஞ்சரி மாமா.” என்று சேதுவும் சேதுபதியும் வந்தார்கள்.

“அட நம்ம மஞ்சரியா? நான் 11வயசு வித்தகனை இழுத்துட்டு போறப்ப, ஐந்து வயசுல பார்வதி இடுப்புல இருந்த நம்ம மஞ்சரியா இது.” என்றார்.

“ஆமா மாமா.” என்று கூறினான் சேது. உடனடியாக மஞ்சரியோ “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா. எப்படியிருக்கிங்க” என்றாள் மஞ்சரி.

அவள் எழும் போது “யார் சித்தப்பா இவங்க?” என்று கேட்டான் வித்தகன்.

“என் தங்கை பார்வதியோட பசங்க வித்தகன். இவன் சேது, அவ மஞ்சரி உனக்கு நினைவில்லையா?” என்றார் சேதுபதி..

“யாரையும் நினைவுயில்லை. நினைவு வச்சிக்கவும் விரும்பலை. ஏன் சித்தப்பா அவன் கல்யாணத்துக்குத் தானே வந்தது. அவன் எங்க? மயூரன் இவங்களை விட்டுட்டு எங்க போயிட்டான். இதுக்குத் தான் மெயில் மேல மெயில் அனுப்பி என் கல்யாணத்துக்கு வாடானு சொன்னானா?” என்றதும் மஞ்சரிக்கு வித்தகனை கண்டு அருவருப்புக் கூடியது.

கூடபிறந்த அண்ணனுக்குத் திருமணம் ஏதோ சொந்தத்துக்குச் சொல்லி வச்சி வர்ற மாதிரி வர்றானே’ என்று பார்வையை வீசினாள்.

அவனோ குட்டை பாவாடை, டைட் ஜீன் ஸ்கர்ட், என்று பார்த்திருந்தவன். சேலை போன்றதொரு ஒரு ஆடையைச் சுற்றி இருந்தவளை ரசித்தபடி பேசினான்.

“அதானே… மயூரன் எங்க? ஏன் எங்களைத் தவிர்த்து முதல்ல அவ அம்மா தான் முக்கியம்னு அவளைக் கூட்டிட்டு வர போயிட்டானா?” என்று சேதுபதி கோபமானார்.

அம்மா இங்க தானே இருப்பாங்க. அவங்க எந்த நாட்டுக்கு போனாங்க. கூப்பிட்டு வர போகற அளவுக்கு என்று வித்தகன் மனம் சிந்தித்தது. அவர்கள் ஜெயிலில் சென்று இன்று தான் திரும்புவதை அவனுமே இனி தானே அறிய போகின்றான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “இரசவாதி வித்தகன்-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *