Skip to content
Home » இரசவாதி வித்தகன் -9

இரசவாதி வித்தகன் -9

இரசவாதி வித்தகன்-9

வித்தகன் நேற்று போலவே ஷார்ட்ஸ் அண்ட் டீஷர்ட் அணிந்து மயூரன் அருகே வந்து, “வா போலாம்” என்றான்.

“எங்க?” என்று கேட்டான் மயூரன்.

“இங்க நான் தனியா இருந்து என்ன பண்ணறது. அங்க போனா டைம் பாஸ் ஆகும்” என்று கூறி வாட்சை கட்டிக்கொண்டிருந்தான்.

“அங்க போனா சண்டையும் வருதே. உனக்குக் கஷ்டமாயிருக்குமே?” என்றான் மயூரன்.

“நான் அப்படித் தான்… சாமர்த்தியமா சண்டையில்லாம தவிர்க்க ரெப்ரி வேலையைப் பாரு” என்று அண்ணனை எழவைத்தான்.

“டேய்… நான் கல்யாண மாப்பிள்ளை டா. ரெப்ரியா?” என்று கேட்டு எழுந்து தம்பியை பார்த்து வினவினான்.

“கல்யாண மாப்பிள்ளை கல்யாண மாப்பிள்ளைனு நீ தான் சொல்லிக்கற. கல்யாண பொண்ணு போட்டோவை காட்டினியா?” என்றதும் சேதுபதி வந்தார்.

“பொண்ணை நான் ஸ்கைப்ல பார்த்தேன் டா. நீ தான் பார்க்கலை” என்று உரைத்தார்.

“வீடியோ கால் பண்ணவா வித்தகா?” என்று மயூரன் ஆர்வமாய்க் கேட்டான்.

”வீடியோ கால், ஸ்கைப்ல எல்லாம் வேண்டாம். போட்டோ மட்டும் காட்டு. ஜஸ்ட் அது போதும்” என்று வித்தகன் கூறவும் பேண்ட் பேக்கெட்டிலிருந்து போனை எடுத்து கேலரியை ஓபன் செய்து மயூரன் விரும்பும் பெண்ணான சவீதாவை காட்டினான்.

கூடுதலாகச் சவீதா தந்தை இளஞ்செழியன், தம்பி ரித்விக் என்று காட்டினான்.

“அந்தப் பொண்ணோட அம்மா?” என்று கேட்க சேதுபதியோ, “வித்தகா. அண்ணினு சொல்லணும்பா.” என்று திருத்தினார்.

“சரி… அண்ணியோட அம்மா எங்க?” என்றதும் மயூரனோ “சவீதா ஸ்கூல் படிக்கிறச்ச அவங்க அப்பா அம்மா சண்டையில எதச்சையமா படில ரோலாகி இறந்துட்டாங்க.” என்று கூறினான் மயூரன். லேசாகக் கூறும் போது குரல் இறுகிவிட்டது.

வித்தகனோ, “கொலையும் இல்லாம, தற்கொலையும் இல்லாம, விபத்தா போயிடுச்சு… அப்படித் தானே?” என்று ஒரு மாதிரி கேட்கவும், மயூரனோ கலங்கிய கண்களைத் துடைத்தபடி, “ஆமா.” என்று தம்பி தோளைத்தட்டி “அத்தை மாமா வீட்டுக்குப் போகலாம்” என்று முன்னே நடந்தான்.

வித்தகனோ “சித்தப்பா நீங்களும் வாங்க” என்று இழுத்துச் சென்றான்.

“இல்லப்பா.. நான் வரலை. இன்னிக்கு என் பிரெண்ட்ஸ் பார்க்க போறேன். இது நான் பிறந்து வளர்ந்த இடமாச்சே. என்னோட பழைய பிரெண்ட்ஸை பார்க்க போறேன். நீ அங்க போ… நான் மதியம் சாப்பிட வந்துடறேன்” என்றதும் வித்தகன் சரியென்றான்.

சேதுபதி வலது பக்கம் செல்ல, வித்தகன் இடது பக்கம் மயூரனோடு நடந்தான்.

இருவரும் நடக்கவும், வித்தகனுக்குத் தன் அண்ணன் அமைதியோடு வர பிடிக்காமல், “எத்தனை வருஷ லவ்வு?” என்று அண்ணனின் காதல் கதையைக் கேட்டான்.

“இரண்டு வருஷம்… எங்க ஆபிஸ் தான். அவளும் ரிப்போர்டர். முதல்ல என்னைச் சுத்தமா கண்டுக்கலை. நான் வேற பின்னாடியே சுத்தவும் அவ தம்பி ரித்விக்கை வச்சி மிரட்ட வேற செய்தா.

எம்.எல்.ஏ இளஞ்செழியனோட பொண்ணு வேறயா… லைட்டா பயமாயிருந்தது.

ஆனா அவளிடம் கெஞ்சறதுக்குப் பதிலா? அவ தம்பியிடம் க்ளியரா சொன்னேன். அவனுக்கு ஏற்கனவே அக்கா கல்யாணம் பண்ணினா போதும்னு இருந்தான். அதனால என் கேரக்டர் பிடிக்கவும், கோழி அமுக்கற மாதிரி ஒரு நாள் அமுக்கி அவமுன்னாடி வச்சி பேசி சம்மதம் வாங்கிட்டோம்.” என்று அன்றைய நாட்களை நினைத்து பார்த்துக் கனவு போலப் பேசினான்.

“சீ… தம்பியை வச்சி மிரட்டினாங்களா? அய்யய்ய… ஒரு பொண்ணு பின்னாடி சுத்தினியா… கெஞ்சினியா?
எம்.எல்.ஏ-னா ஏன் பயப்படணும்?” என்று அஷ்டகோணலாக முகம் வைத்துக் கேள்விக் கேட்கவும், “அதெல்லாம் தனிக்கதை. ஏதோ ஒத்துக்கிட்டாளேனு நானும் அவ தம்பியும் கல்யாணத்தைக் குயிக்கா வைக்கிறோம். சிம்பிளா இருந்தா கூட ஓகே என்பதால தான் இதோ போன மாசம் பேசி முடிச்சிட்டோம்.” என்று கூறவும், “அடப்பாவமே… அப்ப நீ இரண்டு வருஷமா லவ் பண்ணற. அந்த அண்ணி ஒரு மாசமா தான் அக்சப்ட் பண்ணிருக்காங்களா?” என்று சந்தேகத்தைக் கேட்டான்.

“ஈஈஈஈ.. ஆமா டா.” என்று வெட்கம் கொண்டான் மயூரன்.

அண்ணன் முகம் கலங்கியது சரியானதும், அத்தை வீடு வந்திடவும் தனது ஒட்டு மொத்த கவனிப்பையும் வீட்டுக்குள் செலுத்தி மஞ்சரியை தேடினான்.

“சரி நீ போ. நான் அம்மாவை பார்த்துட்டு வர்றேன்” என்று மயூரன் தோட்டத்து வீட்டுப் பக்கம் சென்றான்.

‘அய்யய்ய… சீ.. என்று முகம் சுழித்து ஒரு பொண்ணுக்காகவா?’ என்று அண்ணனிடம் பார்வை வீசியவன் வீட்டுக்குள் நுழைந்ததும் பாவாடை தாவணியும், கைகாலில் தங்க அணிகலன்களை அணிந்தவளான மஞ்சரி என்றவளை தான் தேடினான்.

ஹாலில் அவன் எதிர்பார்ப்புக்கு மாறாக, போனிடெயில் அணிந்த மங்கை கணினிக்கு தலையை விட்டு யாரிடமோ வீடியோ காலில் பேசிட கண்டான்.

“மஞ்சு… ஊ இஸ் தட்?” என்ற வீடியோ கால் பேசும் ஆண் கேட்க மஞ்சரி தனக்குப் பின்னால் திரும்பினாள்.

“விக்டர்… ஹீ இஸ் மை கசின்… வித்தகன்” என்றவள் இயல்பாய் மேகவித்தகனை கண்டு வீடியோ காலில் பேச துவங்கினாள் மஞ்சரி.

“சாரி” என்று மேகவித்தகன் அவளின் எதிர்புறம் அமர்ந்து அவளையே நோக்கினான்.

இதுவரை இப்படிப் பச்சையாக எந்தப் பெண்ணையும் நேருக்கு நேர் நோட்டமிட்டது கிடையாது.

வித்தகனுக்கு இது முதல் முறையாக, அவனையறியாது அவளைப் பார்வையால் ரசித்து விழுங்கினான்.

நேற்று போல இல்லாமல், போனிடெயில் த்ரிபோர்த் பேண்ட்டும், டாப்ஸும் அணிந்து கணிப்பொறியில் ஆங்கிலத்தில் எதிரே வீடியோ காலில் இருந்தவனோடு சரளமாக உரையாட, நேற்றைய தோற்றத்தோடு மனதில் தராசை வைத்து ஒப்பிட்டான் மேகவித்தகன்.

‘அழகுல எது தூக்கல் என்றே சொல்ல முடியலை.’ என்று அவனது மனசாட்சி தோற்றத்தை தான் எடைப்போட்டது.

‘பச்… அவ எப்படிப்பட்ட டைப்னு தெரியலை.’ என்று சலித்திட, “என்ன?” என்று மஞ்சரி அதட்டினாள்.

அங்க அண்ணனிடம் ‘கெஞ்சின, கொஞ்சின, மிரட்டலுக்குப் பயந்தியா?’ என்று இளக்காரம் செய்த மனசாட்சி இவனைக் கண்டு, ‘என்னடா வழியற, குழையற, அவ அதட்டவும் பம்மிட்டு ஒன்னுமில்லைனு தலையாட்டற” என்று அதட்டி கேலி செய்தது.

‘ஆமா… மயூரனுக்கு ஒரு தம்பி உதவினான். எனக்கு யாரு உதவறது?” என்று வாடும் நேரம், ராஜாராமோ தோளில் குற்றாலத்துண்டை போட்டு அதன் மேலே வாழை தாரை எடுத்து வந்து வீட்டில் இறக்கினான்.

“அட வாங்க வித்தகன்.” என்று பேச, “ராஜாராமை கண்டதும், “உங்களைத் தான் தேடினேன். எங்க யாரையும் காணோம்” என்று கேட்டான்.

“ஓகே விக்டர் பை” என்று நொடியில் கத்தரித்து, சைன் அவுட் செய்தவள், “யாரை தேடின? யாரை காணோம்?” என்று கைகட்டி கேட்டாள்.

“உங்கம்மா அப்பா.. அப்பறம் எங்க…எங்க.. அம்..அம்மா” என்றான் தயக்கமாய்.

“அத்தை மாமா அப்பறம் அம்மா… எங்க சொல்லுங்க பார்க்கலாம்… அம்மா” என்று கூறிட அவள் பேச்சில் நக்கல் தெரிக்கவும், “ஏய்… நீயே என்னை முறை வச்சா கூப்பிடற.? நீ ரொம்ப ஒழுங்கு. நான் வந்ததும் கூப்பிடணுமா?” என்று சிடுசிடுத்தான் மேகவித்தகன்.

இதுவரை சேதுபதி சித்தப்பா கூடத் தன் குறையைச் சுட்டிக்காட்டி இகழ மாட்டார். இவளோ வந்ததிலிருந்து வம்பு செய்ய நக்கல் தெறிக்கப் பேசவும் சினம் துளிர்க்க கேட்டான்.

“ஓ… மயூரன் அத்தானை முறை வச்சி தான் கூப்பிடுவேன்.” என்று தோளைக் குலுக்கி கூறவும், “அப்ப நான் யாரு…?” என்று சூடாகக் கேட்டான்.

வரும் பொழுதே இவளிடம் சண்டையிடக் கூடாதென்ற எண்ணத்தை மனதில் கொண்டு பேச முயன்றான். அது இரண்டு பக்கமும் எடுக்கப்பட வேண்டிய முடிவு. இங்கு இவளோ ‘சண்டைக்கு வாடா’ என்ற தினுசில் கேட்க, இவனும் பொறுமை பறக்க கேட்டுவிட்டு அவளை அளவெடுத்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

1 thought on “இரசவாதி வித்தகன் -9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *