இருளில் ஒளியானவன் 10
வைஷ்ணவியின் திருமண செய்தியை கேட்டதில் அதிர்ந்து, தனது அறைக்கு வந்த விஷ்ணு அப்படியே கட்டிலில் மல்லாக்க படுத்து விட்டான்.
அவனது இதயம் பாரமாக இருக்க, தொண்டை அடைத்துக்கொண்டு அழுகை வந்தது. அவனையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘ஏய் பூசணி, நீ வேறு யாரையே கல்யாணம் பண்ண போறீயாடி. நான் உனக்கு வேண்டாமா டி’ என்று தன் மனதிற்குள் குடியிருக்கும் அவனது வைஷ்ணவியின் மடியில் படுத்து கேட்டுக்கொண்டிருந்தான்.
“போடா நெட்டை கொக்கு” என்று அவனை பழிச்சம் காட்டிவிட்டு ஓடினாள் வைஷ்ணவி அவனது நினைவில்.
சரியாக அந்நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது. “அம்மா, கொஞ்ச நேரத்துல வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, குளியலறை சென்று குளிர்ந்த நீரினால் முகத்தை அழுத்தி கழுவினான். பின்னர் தன்னை சமன்படுத்திக் கொண்டு தாயைக் காண சென்றான் விஷ்ணு.
தனது கவலை எல்லாவற்றையும் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு, சாதாரணமாக தன் தாயிடம் வந்து அமர்ந்து, “அம்மா டீ” என்றான்.
விஷ்ணு அவனது அறைக்குச் செல்லும் பொழுது கலை இழந்து இருந்த முகம், இப்பொழுது தெளிவாக இருப்பதை கண்டு குழம்பினார் சங்கீதா. தன் குழப்பத்தை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு, “இதோ” என்று உடனே மகனுக்கு டீ போட்டு எடுத்து வந்து கொடுத்து, அவனது முகத்தில் ஏதாவது தெரிகிறதா என்று உற்றுப் பார்த்தார்.
தன் தாய் தன்னை பார்ப்பதை கண்டு புன்னகைத்து, தன் தொலைபேசியை எடுத்து அவனது முகத்தை பார்த்துக்கொண்டு “என்னம்மா? என் முகத்தில் ஏதாவது வித்தியாசமாக இருக்கிறதா என்ன? இப்படி பார்த்துக் கொண்டே இருக்கீங்க!” என்று கிண்டல் அடித்தான்.
அவனின் முகத்தை வைத்து எதுவும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் மகனின் குரலில் இருந்த நக்கலில் அவனை முறைத்துப் பார்த்து, வைஷ்ணவியின் திருமணத்தைப் பற்றி மீண்டும் கூறினார்.
பின்னர் மூவரும் சென்று வருவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி கூற,
“அம்மா என்னால் வர முடியாது” என்றான்.
“ஏன்?” என்று ஆராய்ச்சியாக அவனைப் பார்த்தார்.
“நான் சென்னைக்கு வேலைக்கு செல்லலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு, முடித்த பிறகு உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் இங்கு வேறு மாதிரி நடந்து விட்டது” என்று பெருமூச்சு விட்டான்.
“என்ன நடந்து விட்டது?” என்று அவனைப் பார்த்தார்.
தாயின் கேள்வியில் தன் வாய் உளரி விட்டதை உணர்ந்து, தன்னை சமாளித்துக் கொண்டு, “ஒன்றுமில்லை அம்மா. எனக்கு கொஞ்சம் இங்கு வேலை இருக்கிறது. நான் கேசவன் அங்கிள் மருத்துவமனையில் வேலைக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். அதைத்தான் சொல்ல நினைத்தேன்” என்றான்.
அது ஆரம்பத்திலேயே எடுத்த முடிவுதான். அவன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததும் நான் கேசவன் அங்கிள் மருத்துவமனையில் தான் வேலை பார்ப்பேன் என்று சொல்லிவிட்டான்.
அது மட்டும் அல்லாது கேசவனின் மருத்துவமனையில் அன்பரசுவும், சாரங்களும் ஒரு பங்குதாரர்கள்தான். ஐம்பது சதவிகிதம் கேசவனும் மீதம் இருக்கும் ஐம்பது சதவீதத்தில் அன்பரசுவும் சாரங்களும் பாதி பாதி.
ஆகையால் அவன் எப்படியும் சென்னைக்கு செல்வான் என்பது தெரிந்த விஷயம் தான். அதனால் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல்,
“சரி, அதற்கும் வைஷ்ணவி திருமணத்திற்கும் என்ன சம்பந்தம்? போய்விட்டு வரலாம் அல்லவா?” என்றார் சங்கீதா.
“இல்லை மா, நான் இங்கு இருந்து விடுபடுவதாக கூறிவிட்டேன். அதற்கான இறுதி கட்டப் பணிகளை எல்லாம் முடிக்க வேண்டும் அல்லவா? நீங்கள் போயிட்டு வாங்க, நான்தான் இன்னும் ஒரு மாதத்திற்குள் வேலை முடிந்ததும் அங்குதானே செல்கிறேன். அப்பொழுது சென்று அந்த பூசணியை பார்த்துக் கொள்கிறேன்” என்றான் புன்னகைத்துக் கொண்டு.
“டேய், இன்னும் நீ அப்படித்தான் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாயா? குழந்தையில் தான் அவள் குண்டா இருந்தா. இப்ப எவ்வளவு ஒல்லியா, அழகா இருக்கா தெரியுமா?” என்று அவரது புகைப்படத்தை எடுத்து காண்பிக்க பார்க்க,
“பரவாயில்லை அம்மா, எப்படி இருந்தாலும் எனக்கு அவள் பூசணி தான்!” என்று சொல்லிவிட்டு, “உங்கள் இருவருக்கும் டிக்கெட் போடுகிறேன்” என்று தனது அறைக்கு சென்று விட்டான்.
வைஷ்ணவியின் திருமணத்தன்றே சாரங்கனின் சொந்தத்தில் ஒரு திருமணம் இருக்க, இரண்டு நாட்களுக்கு முன்பு அன்பரசுவின் வீட்டிற்கு சென்று, வைஷ்ணவியின் திருமணம் முடிந்த பிறகு தங்கள் சொந்ததில் உள்ள திருமணத்திற்கு சென்று விட்டு, அன்று இரவே மும்பை திரும்பி விடலாம் என்று முடிவு செய்தார் சாரங்கன்.
அதன்படியே அவர்களும் வைஷ்ணவியின் திருமணம் முடிந்ததும் அங்கிருந்து கிளம்பி விட்டதால், அன்று அங்கு நடந்தது எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை. அன்பரசுவும் இருந்த குழப்பத்தில் நண்பனிடம் அதைப்பற்றி சொல்லவும் இல்லை.
விஷ்ணுவும் அவளுக்கு திருமணம் முடிந்து விட்டது, இனிமேல் அவளைப் பற்றி நினைப்பது தவறு என்று நினைத்து ஒதுங்கி விட்டான். அவனுக்கு இப்பொழுது சென்னைக்கு போகலாமா வேண்டாமா என்ற தடுமாற்றம் உருவாகியது. முடிவாக எப்படியும் சென்னையில் தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்ததால் அங்கு செல்வதாக முடிவு எடுத்து அதற்கான வேலைகளை செய்து சென்னைக்கும் வந்தான்.
மகன் சென்னை செல்வதில் உறுதியாக இருப்பதால் சாரங்கனும் தன் வேலைகளை சென்னைக்கு மாற்ற முடிவு செய்தார். மும்பையில் உள்ள வேலைகளுக்கு ஆட்களின் பொறுப்பில் விட்டுவிட்டு, மாதம் ஒருமுறை வந்து செல்லலாம் என்று முடிவு செய்து கொண்டார்.
இப்பொழுது வைஷ்ணவியை மருத்துவமனையில் பார்த்து மிகவும் அதிர்ந்து விட்டான் விஷ்ணு.
அவள் சந்தோஷமாக வாழ்கிறாள் என்று நினைத்தவனுக்கு, அவளின் நிலை கண்டு இதயத்தில் கத்தி கொண்டு கிழித்தது போல் வலித்தது.
இதிலிருந்து அவளை எப்படியாவது சீக்கிரம் வெளியே கொண்டு வர வேண்டும் என்று நினைத்து துடித்தான். ஆனால் அவளோ அவனை பார்ப்பதை கூட தவிர்ப்பதை நினைத்து மிகவும் வருந்தினான். தன் காதலையும் கவலையையும் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு புன்னகையுடன் அன்பரசு மற்றும் லட்சுமியுடன் பேசிக் கொண்டு இருந்தான்.
ஏற்கனவே வைஷ்ணவியின் திருமணத்திற்கு, சொந்தங்கள் வந்து தங்கி, பயன்படுத்துவதற்காக, சாரங்கனின் வீட்டில் குடியிருந்தவர்களை காலி செய்ததால், இப்பொழுது காலியாக இருக்க வீட்டை மேலும் சுத்தம்படுத்தி அவர்களை குடியிருக்க வைத்து விடலாம் என்று நினைத்தார் அன்பரசு.
வீட்டுவேலை இருப்பதால் மருத்துவமனையில் வைஷ்ணவிக்கு, லட்சுமியை துணையாக வைத்துவிட்டு, வீட்டிற்கு வந்த அன்பரசு உடனே ஆள் வைத்து வீட்டை வெள்ளை அடித்து சுத்தப்படுத்த ஏற்பாடு செய்தார்.
அது மட்டும் அல்லாது மகளின் விவாகரத்துக்கும் விரைவாக ஏற்பாடு செய்யும்படி அவரது வக்கீலிடம் கேட்டார். அவரது வக்கீலோ ஒரு மாதத்திற்குள் விவாகரத்து கிடைப்பது கடினம் என்று கூறினார்.
ஆனால் காலம் தாமதிக்க விரும்பாத அன்பரசு நேராக மருத்துவமனையில் இருந்த வெங்கட்டை சந்திக்க சென்றார். திருமணத்தில் பார்த்ததை விட மிகவும் பாதியாக மெலிந்து கண்கள் கருவளையம் சூழ, முகத்தில் தாடி முளைத்து, ஜன்னல் வழியே எங்கோ வெரித்துப் பார்த்திருக்கும் வெங்கட்டை கண்டு அவருக்கு வருத்தமாக இருந்தாலும், தன் மகளின் வாழ்க்கை அவருக்கு மிக முக்கியமாகப் பட்டதால், கண்டிப்பாக அவனிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்தார் அன்பரசு.
- தொடரும்..
💛💛💛💛
Vaishnavi oda vazhkai la ava alavukku athigam ah kastapattuta atleast ithuku appuram aachum ava nimathi ah va iruka num athukku venkat kita pesuvathu ah thavira vera option illa
Nice epi👍