இருளில் ஒளியானவன் 12
கேசவன் கூறியபடியே அன்றே மருத்துவமனையில் இருந்து வைஷ்ணவியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார் அன்பரசு.
அவள் உடலின் நலம் நன்றாக தேறி விட்டது. மனதை மட்டும் இனிமேல் இவர்கள் காயப்டுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். மனைவியிடமும் மகளை கவனமாக பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வீட்டின் வாயிலில் காவலுக்கு ஆள் வைத்து விட்டார் அன்பரசு.
அதேசமயத்தில் சாரங்கனின் வீடும் குடியிருக்க தயாராகியது. அதுவரை தங்களது வீட்டிற்கு வந்து தங்கச் சொல்லியும் வர மறுத்து மருத்துவமனையிலேயே தங்கி இருந்த விஷ்ணுவை அவனது வீட்டில் தங்கும் படி கூறினார் அன்பரசு.
வெள்ளை அடித்து புதிதாக காட்சியளித்த வீட்டிற்கு, அவனை வெறுமனே தங்க வைப்பது விருப்பமில்லை லட்சுமிக்கு. பால் காய்த்து பின்னர் அவனை தங்கச் சொல்லலாம் என்றார். சாரங்கள் இப்பொழுது சென்னை வர முடியாத காரணத்தால் தங்கையிடமே அந்த பொறுப்பை ஒப்படைத்தார். ஆகையால் லட்சுமி நல்ல நாள் பார்த்து கேசவன் குடும்பமும், தங்கள் குடும்பமும் சேர்ந்து பால் காய்கலாம் என்று முடிவு செய்தார். அதன்படியே ஞாயிற்றுக்கிழமை எல்லோருக்கும் விடுமுறையாக பார்த்து பால் காய்க்க ஏற்பாடு செய்தார்.
வீட்டிற்கு வந்த பிறகு கூட, தனது அறையை விட்டு அதிகம் வெளிவருவதில்லை வைஷ்ணவி. அவளை சகஜமாக்கும் பொருட்டு சின்ன சின்ன வேலைகலை கொடுத்துக் கொண்டே இருந்தார் லட்சுமி.
முதலில் சாரங்கனின் வீட்டிற்கு வரவே மறுத்தாள். பெற்றோர் இருவரும் ஊரில் இருக்க தனியே வந்திருக்கும் விஷ்ணுவிற்கு நாம் தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று கூறி அழைத்து வந்துவிட்டார்.
அதுபோல் இன்றும் “வைசு குட்டி, அந்த விளக்கை இங்கே எடுத்து கொஞ்சம் மஞ்சள் குங்குமம் வை. சாமி படத்திற்கு பூ போடு” என்று ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே இருந்தார்.
மகளிடம் வேலை சொல்லிக் கொண்டே இருக்கும் மனைவியை, “ஏன் குட்டிமாவை வேலை வாங்குகிறாய் லட்சுமி? அவளைக்கு கொஞ்சம் ஓய்வு கொடேன்” என்று கண்டித்தார் அன்பரசு.
கேசவனோ “தங்கச்சி செய்றது சரிதான் அரசு. அப்போது தான் அவள் மனம் கண்டதையும் யோசிக்காது” என்றார்.
என்ன இருந்தாலும் மகள் கஷ்டப்படுவாளோ என்று வருத்தமாக மகளை பார்த்துக் கொண்டிருந்தார் அன்பரசு.
எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அம்மா சொல்லும் வேலைகளை வெறுமையாக செய்து கொண்டிருந்தாள் வைஷ்ணவி.
மாலாவிற்கு வைஷ்ணவியை பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது, எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கும் பெண் இப்படி ஓய்ந்து போய் அமைதியாக இருக்கிறாளே என்று.
ஒரு வழியாக அனைத்து ஏற்பாடுகளும் முடிய, சாமி கும்பிட தயாராக இருந்தார்கள். அப்பொழுது வேஷ்டி கட்டிக்கொண்டு வந்த விஷ்ணுவை நண்பர்கள் இருவரும் பெருமையாக பார்த்தார்கள். இரு பக்கமும் வந்து நின்று எவ்வளவு பெரிய ஆளாயிட்டான் என்று மகிழ்ந்தனர்.
வைஷ்ணவியிடம் சமையலறையில் காய்ச்சிய பாலை எடுத்துக்கொண்டு பூஜை அறையில் வைக்க கூறினார் லட்சுமி. அவளும் அப்படியே செய்ய விஷ்ணுவும் பூஜை அறைக்கு வந்து, அவளின் அருகில் நின்றான்.
லட்சுமி அவளை விளக்கேற்றபடி கூற, அவளும் அம்மா கூறியதும் விளக்கை ஏற்றி அருகில் நின்று கொண்டாள். அதன் பின் கற்பூரம் காண்பித்து அனைவருக்கும் பாலை ஊற்றிக் கொடுத்தார் லட்சுமி.
அனைவரும் மகிழ்ச்சியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, உணவு மேஜை நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்தாள் வைஷ்ணவி. அவளுக்கு எதிரே வந்து ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்த விஷ்ணு, “இப்போ எப்படி இருக்க வைஷு?” என்றான்.
அவளும் “ம்ம்” என்று மட்டும் பதில் கூறிவிட்டு கையில் உள்ள பால் டம்ளரையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
இவனும் அவர்கள் சிறுவயதில் செய்த சேட்டைகள் ஒவ்வொன்றையும் கூற, அவளோ எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து “என்ன வைஷு? எதுவுமே பேச மாட்டேங்குற! நான் பாட்டிற்கு பேசிக்கிட்டே இருக்கேன்” என்று கை நீட்டி டேபிளில் மேல் இருந்த அவளது கையில் பிடித்தான்.
அவ்வளவுதான் எங்கிருந்து கோபம் வந்ததோ தெரியவில்லை சட்டென்று என்று அவளது கையை உதறிவிட்டு பளார் என்று கன்னத்தில் அறைந்து, ஒரு விரல் நீட்டி “என்னை தொட்ற வேலை வைத்துக் கொள்ளாதீர்கள்” என்று முறைத்தாள்.
ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெரியவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து விட, லட்சுமி தான் விரைவாக வந்து மகளின் கையைப் பிடித்து “என்ன செய்து கொண்டிருக்கிறாய் வைஷு” என்று தன்னைப் பார்த்து திருப்பினார்.
தாயை அருகில் கண்டதும் அவரை இறுக்கமாக கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்து விட்டாள்.
கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து அமர்ந்திருந்த விஷ்ணுவிற்கு ஒரு நொடி என்ன நடந்தது என்று புரியவில்லை. என்னை அவள் அடித்தாளா? என்று அதிர்ச்சியில் அவன் அமர்ந்திருக்க, அவளின் அழுகை சத்தத்தில் தன் நிலைக்கு வந்த விஷ்ணு, தன்னை சமாளித்துக் கொண்டு,
“ஆன்ட்டி அவளை அழ வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்று தன் ஒரு கண்ணில் வடிய இருந்த கண்ணீரை உள் இழுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து மாடிக்கு சென்று விட்டான்.
மாலாவிற்கும் அவளது அழுகையை கண்டு உள்ளம் உருக, அங்கு திடமாக இருந்தது கேசவன் மட்டுமே. அவளது தலையை தடவி விட்டு,
“ரிலாக்ஸ் வைஷ்ணவி, ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?” என்று அதட்டலாக கேட்டார்.
அவரின் அதட்டல் சற்று வேலை செய்ய, அழுகை மட்டுப்பட்டு மெதுவாக விசும்பலாக மாறியது.
சிறிது நேரம் கழித்து, தான் செய்தது தவறு என்று உணர்ந்தாள். உடனே “சாரி அங்கிள், தெரியாமல் செய்திட்டேன்” என்று கூறி தலை குனிந்தாள்.
அவளை நிமிர்ந்து பார்க்கச் சொல்லி, “எங்களிடம் சாரி சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. விஷ்ணுவிடம் தான் நீ சாரி கேட்க வேண்டும். அவன் மேலே இருக்கிறான், போ” என்றார்.
அன்பரசுவிற்கோ பதட்டமாகிவிட்டது. நண்பனின் அருகில் வந்து “என்னடா சொல்ற!” என்று அவருக்கு மட்டும் கேட்கும்படி கேட்டார்.
அவரை கைகாட்டி அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு,
“போமா, போய் அவன் கிட்ட சாரி சொல்லு” என்றார்.
அவள் தயக்கமாக தாயைப் பார்க்க, அவரும் “போய் சாரி சொல்லிட்டு வந்துடுடா. அவன் ரொம்ப பீல் பண்ணுவான்” என்றார் மென்மையாக.
அவன் வருந்துவான் என்று அவளுக்குமே தெரியும் தானே, “சரி” என்று மெதுவாக மாடிப்படி ஏறினாள்.
“அவளை இப்படியே இருக்க விட கூடாது அரசு. அவள் விஷ்ணுவுடன் சகஜமாக பேசி பழகினால் தான், அவளால் எல்லோருடனும் சாதாரணமாக பேச முடியும். விஷ்ணு அவளை பார்த்துக் கொள்வான். கவலைபடாதே” என்று அவரை தோளுடன் அணைத்து கூறினார்.
ஹாலில் ஜன்னலின் அருகே வெளியே பார்த்தவாறு நின்றிருந்தான் விஷ்ணு.
அவனின் பின்னால் மௌனமாக வந்து நின்றாள் வைஷ்ணவி.
அவள் வந்திருக்கிறாள் என்று அவளின் தலையில் சூட்டி இருந்த மல்லிகைப் பூவின் வாசத்தில் உணர்ந்து கொண்டாலும், அவளாக பேசட்டும் என்று அமைதியாக நின்று இருந்தான் விஷ்ணு.
வைஷ்ணவி அவளுக்கே கேட்காத அளவில் மென்மையாக “சாரி” என்றாள்.
‘கன்னம் பழுக்க அடிக்க வேண்டியது, சாரி மட்டும் மெதுவா கேட்கிறது’ என்று நினைத்துக் கொண்டு மெதுவாக திரும்பி, “என்ன சொன்ன?” என்றான்.
அவன் பேசியதும் நிமிர்ந்து அவனை பார்க்க, ஒரு காலை மடக்கி சுவற்றில் சாய்ந்து, கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.
அவன் நிற்கும் தோரணையே, அவள் கண்டிப்பாக பேச வேண்டுமென்று தோன்ற, மீண்டும் அவன் கண்களைப் பார்த்தே, “சாரி” என்று சொல்லி அவன் கன்னத்தை தயக்கமாக பார்த்தாள் வைஷ்ணவி.
- தொடரும்..
Adi romba palamooo😂😂🥳
Super
Enna adi vishnu konjam illa rombhavae jerk aagitan