Skip to content
Home » இருளில் ஒளியானவன்-18

இருளில் ஒளியானவன்-18

இருளில் ஒளியானவன் 18

வெங்கட்டிடம் இருந்த பண பலத்தின் வாயிலாக, தனி விசாரணை. நீதிபதியும் இரு தரப்பு வக்கீல்களுமே உள்ளே இருந்தனர். வைஷ்ணவி பதட்டமாகத்தான் அந்த அறைக்குள் வந்தாள்.

நீதிபதி இடத்தில் இருந்த வயதான நீதிபதியை வணங்கிவிட்டு, தந்தையின் அருகில் நின்று கொண்டாள். இருவரும் விரும்பியே விவாகரத்திற்கு சம்மதிப்பதால், வெங்கட்டின் வக்கீல் மட்டுமே நிறைய பேசினார்.

அவர் காட்டிய சாட்சியங்கள் அனைத்தையும் கவனமாக படித்த நீதிபதி, சில கேள்விகளை வெங்கட்டிடமும் வைஷ்ணவியிடமும் கேட்டார். இருவரது பதில்களையும் கேட்ட பிறகு இருவருக்கும் விவாகரத்தை வழங்கிவிட்டார் நீதிபதியும்.

நீதிபதியை பார்த்து கைகூப்பிய வைஷ்ணவி, அங்கிருந்து மௌனமாக வெளியேறி, தன் தாயின் அருகில் வந்து அமர்ந்து, அவரது கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். அவளின் மறுபுறம் வந்து அமர்ந்த சங்கீதா, அவளை தன் தோளுடன் அணைத்துக் கொண்டார்.

வரும்பொழுது இரு ஜெயிலர்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டேன் என்று கூறிய வைஷ்ணவி, இப்பொழுது அவர்கள் இருவர்களுக்குள்ளுமே அடங்கி ஆறுதல் தேடினாள்.

அனைத்தும் முடிய, அனைத்திலும் கையெழுத்திட்ட வெங்கட், அன்பரசுவின் முன்னால் வந்து “இனி எனக்கும்.. சாரி, எங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனிமேல் நீங்கள் உங்கள் மகளின் வாழ்க்கையை உங்கள் விருப்பம் போல் மாற்றிக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் சென்று விட்டான்.

அவன் பின்னாலையே அவனது தம்பியும் சென்றுவிட, அவனது தந்தை மட்டும் எல்லோரிடமும் வந்து சொல்லிவிட்டு, வைஷ்ணவியிடம் “நடந்ததை எல்லாம் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுமா. உன் வாழ்க்கையை நல்லபடியாக பார்த்துக்கொள். இனிமேல் எங்கள் தொல்லை உனக்கு இருக்காது” என்று கூறினார்.
அவளும் மௌனமாக இருக்க, மற்ற இருவரிடமும் தலையசைத்து விடை பெற்று சென்றார்.

அன்பரசுவிற்கு வெங்கட்டிடம் இருந்து மகளுக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்தாலும், அவரது வாழ்க்கை இனி என்னாகும் என்று ஒரு குழப்பம் இருந்தது. அதுவும் மகள் இப்பொழுது இருக்கும் நிலையை அவரின் இதயத்தில் யாரோ பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல் வலி தோன்ற, வருத்தத்துடன் மகளை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.

இதை கவனித்த சாரங்கன் தன் மனைவிக்கு கண்ணைக் காட்ட, வைஷ்ணவியிடம் “சரி நேரம் ஆகிடுச்சு, கிளம்பலாம் வா” என்று சொல்லி காருக்கு அழைத்துச் சென்றார்.

அவள் எறியதும், ஒருபுறம் லட்சுமி ஏறிக்கொள்ள, “அண்ணா, நீங்க வைஷ்ணவி கிட்ட உட்காருங்க. நான் முன்னாடி இருக்கிறேன்” என்று கூறி கணவனின் அருகில் ஏறிக் கொண்டார் சங்கீதா.

அவருக்கும் மகளின் அருகாமை தேவைப்பட, எதுவும் சொல்லாமல் மகளின் அருகில் அமர்ந்து கொண்டார். அவர் அமர்ந்ததும், தாயின் மீது சாய்ந்திருந்த தலையை தந்தையின் மீது சாய்த்து, அவர் கையை லேசாக அணைத்துக் கொண்டாள்.

தான் இருக்கிறேன், கவலை வேண்டாம் என்று ஆறுதல் படுத்தும் நோக்கில் அவரும் மகளை லேசாக அணைத்து தலையை தடவினார்.
கார் மிகவும் அமைதியாக பயணித்தது. சிறிது நேரம் கழித்து சாரங்கன் எல்லோரையும் இறங்கும்படி கூற, ஒரு உயர்தர உணவகத்தில் முன் காரணம் இருப்பதை கண்டு, லட்சுமி தான் “வேண்டாம் அண்ணா, வீட்டிற்கு போய்விடலாமே” என்றார்.

“நீ இன்று காலையில் எதுவும் சமைக்கவில்லை என்று எனக்கு தெரியும். சங்கீதாவும் எதுவும் செய்யவில்லை. வீட்டிற்கு போய் இனிமேல் சமைத்து சாப்பிட இரவாகிவிடும். இறங்கு, சாப்பிட்டுவிட்டு செல்லலாம்” என்றார்.

லட்சுமிக்கு மகள் இந்நிலைமையில் இப்பொழுது சாப்பிடுவாளா? என்று தெரியாமல், “குட்டிமா, அண்ணா இங்க சாப்பிடலாம் என்கின்றார். இங்கு சாப்பிடலாமா? அல்லது வீட்டிற்கு போய் விடலாமா?” என்று தயக்கமாக மகளின் முகத்தை பார்த்தார்.

மணி மூன்றை கடந்திருக்க, எல்லோருக்குமே பசிக்கும் தானே என்று உணர்ந்த வைஷ்ணவி, “ஆமாம்மா, இங்கேயே சாப்பிடலாம், பசிக்கிறது” என்று கூறி தந்தையிடமும் “சாப்பிடலாமாப்பா” என்றாள்.

“சாப்பிடலாம்” என்று கூறி அவரும் இறங்க, அனைவரும் உணவகத்திற்குள் சென்றார்கள்.
ஏதோ சாப்பிட வேண்டுமே என்று அவள் நினைக்க, சிறிது நேரத்தில் வைஷ்ணவிக்கு பிடித்த உணவுகள் அவர்கள் மேஜைக்கு வந்தது. தனக்கு பிடித்த உணவை கண்டு விருப்பமாகவே சாப்பிட்டாள் வைஷ்ணவி.

சாப்பிட்டு முடித்ததும் தந்தையிடம் “அப்பா, பீச்சுக்கு போகலாமா?” என்று தயக்கமாக கேட்டாள்.

அவரின் தலையை கோதிய அன்பரசு “போலாம் குட்டிம்மா” என்று கூறி நண்பனிடம் “பீச்சுக்கு போகலாமா சாரங்கா?” என்றார்.

அவரும் சரி எனும் விதமாக தலையை ஆட்டினார். பின்னர் அங்கிருந்து கிளம்ப, தந்தையின் தோளில் கண்மூடி படுத்திருந்த வைஷ்ணவி, அப்படியே லேசாக உறங்கி விட்டாள்.

மகளின் தலையில் தலை சாய்த்த அன்பரசுவும், மகள் உறங்குவதால், அசையாமல் அப்படியே இருக்க, அவர் கண்களும் தூக்கத்தை தழுவியது. காலையிலிருந்து பதட்டமாக இருந்த லட்சுமிக்கும் மகள் சாதாரணமாக சாப்பிட்டு, பேசுவதை கண்டு நிம்மதியை அடைய, அந்த நிம்மதியில் அவருக்கும் உறக்கம் கண்ணை கட்டியது. கார் பயணம் தொடர, தாலாட்டுவது போல் பின் இருக்கையில் அமர்ந்த மூவரும் நன்கு உறங்கி விட்டார்கள்.

வெகு நேரம் கழித்து அன்பரசுவை எழுப்பினார் சாரங்கன். அவர் “வீடு வந்துருச்சா?” என்று பதட்டமாக எழுந்து, மகளையும் “குட்டிம்மா” என்று குரல் கொடுத்தார்.

அவளும் எழுந்து இறங்க, அவர்கள் நின்றிருந்த இடத்தைக் கண்டு ஆச்சரியமாக, “என்ன அங்கிள்? பீச்சுக்கு போகலாம்னு சொன்னேன். நீங்க இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க” என்றாள் ஆச்சரியமாக.

இப்பவும் பீச்சுக்கு தான் போகப் போறோம் என்றார்.

மகாபலிபுரம் போகும் வழியில் இருந்த, பீச் ரெசார்ட்டிற்குத் தான் அழைத்து வந்திருந்தார் சாரங்கன். அங்கு இவர்களுக்காக தனியாக ஒரு காட்டேஜ் புக் பண்ணி இருக்க, அங்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு பீச்சுக்கு போகலாம் என்றார் சாரங்கன்.

எப்படி எல்லாவற்றையும் செய்தார் என்று நினைத்தாலும், அவளுக்கு சிறிது நேரம் சாய்ந்து இருக்க வேண்டும் என்று தோன்ற, அங்கிருந்த ஊஞ்சலில் சாய்ந்து அமர்ந்தாள்.

சோஃபாவில் ரிலாக்ஸாக அமர்ந்த அன்பரசு, எப்படி டா திடீரென்று ப்ளான் பண்ணின” என்று சாரங்கனிடம் கேட்டார்.

“நான் எங்கே ப்ளான் பண்ணினேன். எல்லாம் விஷ்ணு தான்” என்று கூறி,
காலையிலிருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை சங்கீதாவிற்கு மெசேஜ் செய்து கொண்டே இருந்தான் விஷ்ணு. இங்க என்ன நடக்கிறது என்பது மட்டுமல்லாமல், வைஷ்ணவி நிலை என்ன என்பதை குறித்தும் அடிக்கடி மெசேஜ் செய்து கேட்டுக் கொண்டே இருந்தான். அதன்படி தான் மதியான உணவிற்கு அவர்கள் சென்ற ஹோட்டலுக்கு டேபிள் புக் பண்ணியதும் விஷ்ணு தான் என்றார்.

“அதானே பார்த்தேன். அந்த ஹோட்டலுக்கு டேபிள் புக் பண்ணாம போக முடியாதே எப்படி என்று யோசித்தேன்” என்றார் அன்பரசு

பின்னர் அவள் பீச் போக வேண்டும் என்று சொன்னதும், அவன் தான் உடனே இங்கு ரெசார்ட் புக் பண்ணி அனுப்பினான். இரவு வருவதாக கூறியிருக்கிறான்” என்றார்

சிறிது நேரத்தில் அனைவருக்கும் தேநீர் வந்தது. அதை குடித்ததும் கொஞ்சம் தெளிவான வைஷ்ணவி, புத்துணர்ச்சியுடன் “பீச்சுக்கு போகலாமா அங்கிள்!” என்று சாரங்கனிடம் கேட்டாள்.

“போகலாம்மா” என்று அனைவரும் தயாராகி, அந்த தனியாருக்கு சொந்தமான கடற்கரைக்கு சென்று அமர்ந்தனர். பெரியவர்கள் குடையில் அமர, வைஷ்ணவி மட்டும் தனியாக கடலில் கால் நனைத்தபடி நின்று கொண்டிருந்தாள்.

கடலின் சத்தமும், பரந்த நீர்ப்பரப்பும், அவள் மனதிற்குள் ஒரு வித அமைதியை தந்தது. அமைதியாக, ஆர்ப்பரிக்கும் கடலை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

பெரியவர்கள் தூரத்தில் குடையின் கீழ் அமர்ந்து, கடலையும் வைஷ்ணவையும் பார்த்துக் கொண்டு பொதுவாக பேசிக்கொண்டு இருந்தார்கள். தனியே கடலில் இருந்தவளுக்கு சிறிது நேரத்தில் போர் அடிக்க, சரி அம்மாவிடம் போய் அமரலாம் என்று திரும்ப,

“ஹாய் பூசணி, தண்ணிக்குள்ள போகலையா?” என்றபடியே அவளின் அருகில் வந்து நின்றான் விஷ்ணு.

  • தொடரும்..

6 thoughts on “இருளில் ஒளியானவன்-18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *