Skip to content
Home » இருளில் ஒளியானவன்-20

இருளில் ஒளியானவன்-20

இருளில் ஒளியானவன் 20

விஷ்ணு தன் மனதில் இருந்ததை கூறிக்கொண்டு இருந்தான். “அவள் திருமண பத்திரிக்கை பார்த்ததும், சரி நான் தான் அவளை காதலித்தேன் போல் அவளுக்கு என் மேல் எந்த எண்ணமும் இல்லை. அதனால்தான் திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறாள் என்று நினைத்து என் மனதை நான் தேற்றிக் கொண்டேன்.

அவள் எங்காவது நலமாக வாழ்ந்து இருந்தாலாவது நான் நிம்மதியாக இருப்பேன். ஆனால் இப்போ இவள் இப்படி இருக்கும் பொழுது, என்னால் என் கவலையும், என் காதலையும் கட்டுப்படுத்த முடிய இல்லையே மாமா” என்று ஒரு தொப் என்று சோபாவில் அமர்ந்தான் விஷ்ணு.

அவன் கூறியது கேட்ட நண்பர்கள் மூவருக்குமே அதிர்ச்சி தான், விஷ்ணு வைஷ்ணவியை காதலித்திருக்கிறான் என்று தெரிந்து. அதில் மிகவும் வருத்தப்பட்டது சாரங்கன் தான். தன் மகனிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் விட்டேனே என்று அவரும் அவனது அருகிலேயே அமர்ந்து, அவனை தன் தோளுடன் அணைத்துக் கொண்டு,
“ஒரு வார்த்தை நீ என்னிடம் சொல்லி இருக்கலாமே டா” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

“முன்புதான் சொல்லாமல் விட்டேன் அப்பா. ஆனால் இப்பொழுது என் காதலை மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு என்னால் வாழ முடியவில்லை. அதான் இப்பொழுது சொல்லிவிட்டேன். இதைவிட வேறு சந்தர்ப்பம் அமையுமா? என்று தெரியாது” என்றான் தரையை பார்த்துக் கொண்டே பேசினான். பின்னர்
விஷ்ணு தன் மனதிற்குள் இத்தனை காலம் பூட்டி வைத்திருந்த, தன் காதலை சொல்ல ஆரம்பித்தான்.

“முதலில் நீங்கள் எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். இந்த நேரத்தில் இதை நான் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இதை விட்டால் எனக்கு எப்போ சொல்லுவேன் என்று தெரியவில்லை. நான் பத்தாவது படிக்கும் பொழுது இருந்தே வைஷ்ணவியை காதலிக்கிறேன்” என்றான்.

அவன் கூறியதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

“என்னடா சொல்லுற?” என்று வாய் திறந்து கேட்டே விட்டார் சாரங்கன்.

“ஆமாம் அப்பா, எனக்கு அவளை அப்போது இருந்தே மிகவும் பிடிக்கும். அதை நான் ஈர்ப்பு என்றுதான் நினைத்தேன். அதை ஒதுக்கவும் முயன்றேன். ஆனால் நான் கல்லூரிக்கு சென்ற பிறகு, அவளை என்னால் மறக்கவே முடியவில்லை. அதன் பிறகு தான் அவள் மேல் இருப்பது காதல் என்பதை உணர்ந்து கொண்டேன்.

என் படிப்பு, அவள் படிப்பு எல்லாம் முடிய வேண்டும் என்று காத்திருந்தேன். அவளுக்காகத்தான் சென்னையிலேயே வேலை மாற்றிக் கொண்டு வரலாம் என்றும் நினைத்தேன். அதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்த பிறகுதான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் அவளுக்கு திருமணம் என்று பத்திரிக்கை வந்து விட்டது” என்றான் சோகமாக.

அங்கிருந்த எல்லோருக்குமே ஒரு சங்கடமான நிலைமை உருவாகிவிட்டது.
கேசவன் தான் “இதை நீ முன்பே சொல்லியிருக்கலாமே விஷ்ணு” என்றார் ஆதங்கமாக.

“எப்படி அங்கிள் சொல்வேன். இன்னும் ஒரு மாதத்தில் டிரான்ஸ்பர் வந்ததும் சொல்லலாம் என்று காத்திருக்கும் பொழுது, வீட்டிற்கு பத்திரிக்கை வருகிறது. அவளுக்கு திருமணம் என்று பத்திரிகை அடித்த பிறகு எப்படி சொல்ல முடியும் அங்கிள்?

பத்திரிகை அடிக்கும் வரை வந்திருக்கிறது என்றால், அவள் திருமணத்திற்கு சம்மதித்து இருக்கிறாள் என்று தானே அர்த்தம். அப்படி என்றால் அவளுக்கு என் மேல் எந்த நினைப்பும் இல்லை தானே?” என்றான் கவலையாக அவரது முகத்தை பார்த்தபடியே.

அவருக்கும் அதற்கு என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை.

“தவறு முழுவதும் என்னுடையதுதான். சிறுவயதில் இருந்தே, நீ அவளிடம் வம்பு இழுத்துக் கொண்டே இருப்பாய் அல்லவா? அதை வைத்து உனக்கு அவளை பிடிக்காதோ! என்று நினைத்து விட்டேன்” என்றார் சாரங்கள் மகனை வேதனையாக பார்த்தபடி.

அவனும் விரக்தியாக சிரித்துக் கொண்டு “மிகவும் உரிமை இருக்கும் இடத்தில் தானே அப்பா, நாம் சண்டை போடுவோம். அப்படி ஏன் நீங்கள் யோசிக்கவில்லை ப்பா” என்றான்.

பின்னர் பெருமூச்சு விட்டுக்கொண்டு “இனி முடிந்ததை பற்றி, இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்று பேசி ஒரு பயனும் இல்லை. இனி நடக்கப் போவதை பற்றி மட்டும் பேசலாம்.

நான் வைஷ்ணவியை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுகிறேன். எனக்கு அவளை திருமணம் செய்து வைப்பீர்களா மாமா?” என்று அன்பரசுவை பார்த்தான்.

உடனே பதில் சொல்ல அவரால் முடியவில்லை. வைஷ்ணவி என்ன நினைக்கிறாள், என்ன நிலையில் இருக்கிறாள் என்று அவரால் யூகிக்க முடியவில்லை. அவளை பார்த்துக் கொண்டே ‘இப்பொழுதே பதில் வேண்டுமா?’ எனும் விதமாக விஷ்ணுவையும் பார்த்தார்.

அவனோ வைஷ்ணவியை ஆழ்ந்து பார்த்தான்.
ஒரு வித பதட்டத்தில் அமர்ந்திருந்தாள் வைஷ்ணவி.
அனைவரையும் சுற்றி பார்த்து விட்டு “வைஷு” என்றான் மென்மையாக.
அலைபாயும் கண்ணுடன் அவனை பார்த்தாள் வைஷ்ணவி.

அவளின் பார்வை அவனுக்குள் ஒரு வலியை தோற்றுவிக்க, அவளின் முன் முட்டி போட்டு அமர்ந்து, அவளின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு “வைஷு” என்று மீண்டும் மென்மையாக அழைத்தான்.

அவள் அவனை பார்க்க, அவனும் அவளது கண்களை பார்த்துக் கொண்டே “நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று ஏக்கமாக கேட்டான்.

அவனது காதலை பற்றி கேட்ட பிறகு, அவளாலும் என்ன சொல்ல முடியும்.
அமைதியாக அவன் முகம் பார்த்து, “என்னால் கல்யாணம் பண்ண முடியாது” என்று கூறி தலை கவிழ்ந்தாள்.

“கல்யாணம் பண்ண முடியாதா? இல்லை, என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதா?” என்று கேட்கும் போதே அவன் குரல் உடைந்தது.

அவன் நிலை கண்டு அங்கிருந்த பெரியவர்கள் அனைவருமே கலங்க, சங்கீதா அவன் அருகில் வந்து, அவனை தன் வயிற்றுடன் அணைத்துக் கொண்டு, “போதும் விஷ்ணு இதை இப்படியே விட்டுவிடேன். உன்னை பார்க்க அம்மாவிற்கு கஷ்டமாக இருக்கிறது” என்றார். அதை சொல்லும் போதே அவரது கண்கள் கலங்கி விட, கண்ணீரை துடைத்துக் கொணடார்.

சுற்றும் முற்றும் அனைவரையும் பார்த்தாள் வைஷ்ணவி. எல்லோர் முகமும் இருவரையும் நினைத்து கவலையில் இருப்பதை உணர்தாள்.

“இல்லை இப்போ கல்யாணம் வேண்டாம்” என்று அமைதியாக கூறினாள்.
அவளை நிமிர்ந்து பார்த்து, “அப்போ எப்போ?” என்றான் உடனே.

அவள் “ஒரு..” என்று ஆரம்பிக்கும் முன்பே,
“வருடம் என்று மட்டும் சொல்லிவிடாதே” என்றான்.

அதிர்ந்து அவனை பார்த்து “ஒரு ஆறு மாதம்” என்றாள் தயக்கமா.
சரி என்று மென்மையான் வரண்ட புன்னகை செய்து, பெரியவர்களை பார்த்து
“இன்னும் ஆறு மாதத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று கூறிவிட்டு, தன் முழு உயரத்திற்கு எழுந்து நின்று,
“நினைவு வைத்துக்கொள் வைஷு, இன்னும் ஆறு மாதத்தில் கல்யாணம். பின்பு காலம் கடத்த கூடாது” என்று கூறி விட்டு, “சரி போய் ஓய்வெடு” என்று சொல்லி தன் தாயை பார்த்தான் விஷ்ணு.

அவரும் அவனை என்ன என்று பார்த்தார்.
“அம்மா உங்களுக்கு என் திருமணத்தை மிகவும் சீரும் சிறப்புமாக பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்று நினைத்து இருப்பீர்கள். ஆனால் அதை மட்டும் என்னால் நிறைவேற்ற முடியாது” என்றான்.

அவருக்கு புரியாமல் “என்ன சொல்ற விஷ்ணு? என்று அவனை குழப்பமாக பார்த்தார்.

“அம்மா, வைஷ்ணவியுடன் என் திருமணம் மிகவும் எளிமையாக தான் நடக்க வேண்டும். நம் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் வைஷ்ணவியின் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் போதும்” என்றான்.

அது அவருக்கு வருத்தமாக இருந்தாலும், வைஷ்ணவி நிலைமையையும் கொஞ்சம் யோசித்தார். “இதில் என்னப்பா இருக்கு? எளிமையாக திருமணத்தை கோயில் வைத்து முடித்துவிட்டு, சின்னதாக ஒரு ரிசப்ஷன் மட்டும் எல்லா சொந்தங்களையும் கூப்பிட்டு செய்துவிடலாம்” என்றார்.

விவாகரத்து அன்றே திருமண பேச்சு வந்தது வருத்தமாக இருந்தாலும், தனக்காக தன் தாய் தந்தையர் போலவே, அவர்களின் நண்பர்களும் யோசிப்பதை கண்டு, விஷ்ணுவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தாள்.

ஆனால் அது எளிதில் சாத்தியமா? என்றுதான் அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் பேசிக்கொண்டதை கேட்டுக் கொண்டே, அப்படியே கண் அயர்ந்தாள் வைஷ்ணவி.

  • தொடரும்..

4 thoughts on “இருளில் ஒளியானவன்-20”

  1. Wowww semma proposal…. Vaishanavi ok sollidu ma… Paavam paiyan… Seekiram onna senthu vaalunga.. Life happy ah erukkum…
    Happy women’s day🎊🎊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *