Skip to content
Home » இருளில் ஒளியானவன்-21

இருளில் ஒளியானவன்-21

இருளில் ஒளியானவன் 21

வைஷ்ணவி – விஷ்ணு திருமண ஏற்பாட்டை இரு பெற்றோர்களும் எப்படி செய்யலாம் என்று கலந்தாலோசிக்க ஆரம்பித்தனர். அன்று பீச் ரெசார்ட்டில் பேசியதற்கு பிறகு ஒரு வாரம் கழித்து அதைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

சங்கீதாவிற்கு மகன் விஷ்ணு சொன்னது போல் எளிமையாக செய்து விடலாம் என்று நினைத்தாலும், மகனின் திருமணத்தை விமர்சையாக செய்ய முடியவில்லையே என்று ஒரு வருத்தம் அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது.  அதை போக்குவதற்காக லட்சுமி தான் “வேண்டுமென்றால் உங்கள் ஊரில் வைத்து திருமணத்தை கொஞ்சம் சிறப்பாக செய்து விடலாமே சங்கீதா!” என்று கேட்டார்.

அவர் கேட்டதும் சங்கீதாவிற்கும் மனதிற்குள் மெல்லிய ஆசை தோன்ற, தன் கணவனிடம் அதைப் பற்றி கேட்டார், “நம்ம ஊரில் வைத்து விஷ்ணு திருமணத்தை சிறப்பாக பண்ணலாமா” என்று.

“நீ சொல்லுவதும் சரிதான் சங்கீதா. இங்கு மண்டபம் பிடித்து செய்தால், அது வைஷ்ணவிக்கும் வருத்தமாக இருக்கும். அதே சமயம் நம்ம ஊரில் என்றால் அவளுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறேன். எதற்கும் நான் அன்பரசுவிடமும் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்” என்றார்.

எனக்கு இந்த யோசனையை சொன்னது லட்சுமி தான் என்றார் சங்கீதா.  அதைப்பற்றி தான் இப்பொழுது பெற்றோர்கள் இருவரது பெற்றோரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். ஒருமனதாக அன்பரசுவும் சாரங்கனின் ஊரிலேயே திருமணத்தை முடிக்கலாம் என்று சம்மதித்து, வைஷ்ணவியிடமும் அதைப் பற்றி கூறினார். தனக்காக பெரியவர்கள் அனைவரும் யோசிப்பதை கண்டு நெகிழ்ந்த வைஷ்ணவியும் சரி என்று கூறி “ஆண்டிக்கு எப்படி விருப்பமோ, அப்படியே செய்ய சொல்லுங்க அப்பா” என்று சொல்லி விட்டாள்.

அதன் பிரகாரம், “நான் சென்று அதற்குரிய ஏற்பாடுகளை செய்துவிட்டு வருகிறேன்” என்றார் சாரங்கன்.
அதன்படியே இருவரது ஜாதகத்தை கொடுத்து, ஆறு மாதம் கழித்து நல்ல நாள் குறித்துக் கொண்டு, அந்த நாளில் திருமணத்திற்கு உரிய ஏற்பாட்டை செய்யும்படி ஊருக்கு கிளம்பினார் சாரங்கன்.

நீண்ட நாள் கழித்து தங்களது ஊருக்கு வந்த சாரங்கனை அன்புடன் வரவேற்றது அவர்களது சொந்தங்கள். மகனின் திருமணத்தை பற்றி கூற அனைவரும் மகிழுந்தனர். அவர்கள் கோயிலுக்கு அருகில் அமைந்திருந்த பெரிய மண்டபத்தை ஏற்பாடு செய்தார். அதன் பிறகு அங்கு தன் தம்பி முறையில் உள்ள ஒருவரிடம் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்து, அடிக்கடி ஃபோன் செய்து விவரத்தை தெரிந்து கொள்கிறேன் என்று கூறி கிளம்பினார்.

திருமணம் என்று பேசிய ஒரு மாதத்திற்குள்ளாகவே அனைத்து ஏற்பாடுகளும் முடிந்ததை கண்டு கொஞ்சம் மலைப்பாகவே இருந்தது வைஷ்ணவிக்கு.

அதோ இதோ என்று திருமண நாளும் நெருங்கி விட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு சாரங்கனின் குடும்பத்தில் மூவரும் அவர்களது ஊருக்கு சென்று விட்டார்கள். திருமண நாளுக்கு முந்தைய தினம் வைஷ்ணவியின் குடும்பம் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்க இளம் நீலவண்ண பட்டு புடவையில் தயாராகி வந்தாள் வைஷ்ணவி. சாமி கும்பிட்டுவிட்டு சென்னையில் இருந்து சாரங்கனின் ஊர் நோக்கி பயணித்தனர் அன்பரசன் குடும்பம். அவரது நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே நேராக திருமணத்திற்கு வரும்படி ஏற்பாடு செய்திருந்தார்

வைஷ்ணவியின் வாழ்க்கையில் நடந்தது அனைத்தையும் தெரிந்த சொந்தங்கள், இனிமேலாவது அவளது வாழ்க்கை நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டு, மிகவும் மகிழ்வாக சம்மதித்திருந்தனர்.
திருமணத்திற்கு முந்திய நாள் வைஷ்ணவையும் அன்பரசு லட்சுமி மூவரும் அங்கிருந்து கிளம்பினாலும், அவர்கள் சார்பாக அங்கு விஷ்ணுவுடன் இருந்து அனைத்து வேலைகளையும் பார்த்தான் மகேஷ்.

இருவரது திருமணத்தின் முன்னிட்டு பத்து நாட்களுக்கு முன்பே இந்தியா வந்திருந்த மகேஷ், விஷ்ணுவுடன் சேர்ந்து அவர்களது ஊருக்கு சென்று அன்பரசு சார்பாக என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் பார்த்துக் கொண்டான்.

“உனக்கு எதற்கு சிரமம் மகேஷ். நானே எல்லாம் பார்த்துக்கொள்வேன்” என்று சொன்ன சாரங்கனிடம்,
“என் தங்கைக்காக நான் செய்கிறேன். தயவு செய்து தடுக்காதீர்கள்” என்று கூறிவிட்டான்.

அதன்படியே அனைத்தையும் செய்த மகேஷ், இன்று வரும் தங்கையின் குடும்பத்திற்காக அவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த வீட்டில் காத்திருந்தான். அவர் சொன்ன நேரத்தில் அன்பரசிவின் கார் அவர்கள் தங்க இருக்கும் வீட்டிற்குள் வர, ஊரில் இருந்த சுமங்கலி பெண்கள் அவளை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அங்கிருந்த வயதான பாட்டி ஒருவர் வைஷ்ணவியின் கன்னம் பிடித்து திருஷ்டி எடுத்து சொடக்கு நொடித்து,
“ரொம்ப அழகா இருக்க. என் பேராண்டிக்கு பொருத்தமா தான் இருக்கும்” என்று கூறி விட்டு,
அங்கு அவளையே விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவிடம் “பேராண்டி, உனக்கு எல்லா விதத்திலும் பொருத்தமா தான் இருக்கிறாள் என் பேத்தி. என்ன நிறம் ஒண்டி தான் உன்னோட குறைவா போச்சு” என்றார்.

“பாட்டி, நிறத்தில் என்ன இருக்கிறது. இதை மட்டும் நீங்க சென்னையில் வைத்து சொல்லி இருக்கணும், உங்கள பாடி ஷேமிங் பண்றீங்கன்னு சொல்லி எல்லாரும் ஒட்டி இருப்பாங்க” என்று கிண்டல் அடித்தான்.

“நான் ஏன் சேவ் பண்ணுறேன். எனக்கு என்ன மூஞ்சில முடியா முளைச்சிருக்கு”  என்று ராகமாக சொல்லி, கழுத்தை நொடித்துக் கொண்டு வெற்றிலையை வாயில் மென்றபடியே அங்கிருந்து அகன்றார்.

பாட்டியின் கூற்றையும் செயலையும் கண்டு அங்கிருந்த இளவட்டங்கள் அனைவரும் நகைத்தனர். அப்பொழுது அங்கு வந்த சாரங்கனின் தம்பி,
“பொண்ணு வீட்டுக்கு வந்ததும் தான் கல்யாண கலை கட்டி இருக்கு” என்றபடி வைஷ்ணவி அருகில் வந்து, “பயணம் எல்லாம் சுலபமா இருந்துச்சாமா?” என்றார்.

இதுவரை அமைதியாக இருந்த வைஷ்ணவி, புதிதாக ஒருவர் வந்து கேட்டதும் தயங்கி, தலையை மட்டும் ஆட்டினாள்.

உடனே சாரங்கன் “என்னுடைய சித்தப்பா பையன் மா. உனக்கு சின்ன மாமா முறை வேண்டும்” என்றார்.

முறை சொல்லி கூப்பிட வேண்டும் என்பதை புரிந்து கொண்ட வைஷ்ணவி, வணக்கம் கூறி “பயணம் நல்லபடியாக இருந்தது மாமா” என்றாள்.

உடனே தங்களை முறை சொல்லி கூப்பிட்ட வைஷ்ணவியை அங்கிருந்த ஊர் மக்களுக்கு பிடித்து விட்டது. அனைவரும் அவளை வரவேற்று கொண்டாடினர்.  மருதாணி வைத்து கதை பேசி நேரம் கழிய, பதினோர் மணிக்கு மேல்,
“கல்யாண பொண்ணை கொஞ்ச நேரம் தூங்க விடுங்க. அப்பதான் காலையில பிரெஷா இருப்பா” என்று கூறி அவளை அங்கிருந்து அழைத்து வந்து ஓய்வெடுக்க வைத்தார் சங்கீதா.

மறுநாள் விடியல் மங்களகரமான ஓசையில் விடிந்தது.
எழுந்தவுடன் கேட்ட நாதஸ்வர இசை வைஷ்ணவிக்குள்ளும் ஒருவித புத்துணர்வை தோற்றுவித்தது. அவள் எழுந்ததை கண்ட லட்சுமி அவள் தயாராக ஏற்பாட்டை செய்ய ஆரம்பிக்க குளித்து வந்ததும் அலங்கார பெண்கள் வந்து அவளை அலங்கரிக்க தொடங்கினர்.

தங்கை ஜரிகை கொண்டு நெய்யப்பட்ட மெருன் வண்ண பட்டு புடவையில் தேவதை போல் ஜொலித்தாள் வைஷ்ணவி.

மணப்பெண் தயாரானதும் கோயிலுக்கு அழைத்து வரும்படி கூறி, அனைவரும் கோயிலுக்கு சென்றிருந்தனர். மகேஷ் தான் தங்கையை அழைத்துச் செல்ல, வீட்டில் காத்திருந்தான்.

விஷ்ணு மகேஷிடம் “அவள் ரெடியானதும், ஒரு புகைப் படம் எடுத்து எனக்கு அனுப்புங்கள் அண்ணா” என்று சொல்லிவிட்டு சென்றிருக்க, தயாராகி வந்த தங்கையைக் கண்டு ஒரு நொடி திகைத்தான் மகேஷ், அவனது மனதில் இன்னும் சின்ன பெண்போலவே நினைவிருக்க, புடவையில் மங்கையாக நின்ற தங்கையை கண்டு. “ரொம்ப அழகா இருக்கடா” என்று அவள் அலங்காரம் கலையா வண்ணம் கன்னம் கிள்ளினான்.

“அண்ணா” என்று அவள் வெட்கப்பட, அழகாய் அதை புகைப்படம் எடுத்து, உடனே விஷ்ணுவிற்கும் அனுப்பி விட்டான்.
பட்டு வேஷ்டி சட்டையில் தயாராகி இருந்த விஷ்ணு, நண்பர்கள் கோயிலுக்கு செல்லலாம் என்று கூப்பிட்டும், ஃபோனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மகேஷிடம் இருந்து புகைப்படம் வந்ததும், அதைக் கண்டு மெய்மறந்து ரசித்து நின்றான். “டேய் மச்சான், இன்னும் கொஞ்ச நேரத்துல அவள் உன் பொண்டாட்டிடா. அதுக்கப்புறம் அவளை நீ நேரிலேயே பார்த்து ரசிச்சுக்கோ! இப்ப தயவுசெய்து கோயிலுக்கு கிளம்பலாம் வா” என்று அவனை வற்புறுத்தி அழைத்து சென்றனர் விஷ்ணுவின் நண்பர்கள்.

  • தொடரும்..

6 thoughts on “இருளில் ஒளியானவன்-21”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *