Skip to content
Home » இருளில் ஒளியானவன்-27

இருளில் ஒளியானவன்-27

இருளில் ஒளியானவன் 27

வைஷ்ணவியின் பயந்த முகத்தைக் கண்டு, தன் கோபத்தை குறைத்துக் கொண்டு, சாதாரணமாக அவளுடன் பேச ஆரம்பித்து விட்டான் வெங்கட்.

அவர்களது பேச்சு பொதுவாக இருவரது அலுவலகம் மற்றும் வேலை பற்றி இருந்தது. தன்னுடைய அலுவலகத்தில் செய்யும் வேலைகளை பற்றி அவளிடம் கூறினான். அவள் செய்யும் வேலைகளை பற்றியும் கேட்டான்.

“உனக்கு வீட்டில் இருக்க போர் அடிச்சது என்றால், நம்ம ஆபீஸ்க்கு கூட வாயேன்”

“இப்பதானே கல்யாணம் ஆயிருக்கு, உடனே ஆபீஸ்க்கா” என்று கேட்டு, “நான் கொஞ்ச நாள் கழித்து, எங்க அப்பா ஆஃபீஸ்க்கு போகட்டுமா?” என்றாள் தயக்கமாக.

அவனும் தோள்களை குலுக்கி, “உன் இஷ்டம், எங்க வேண்டுமானாலும் போகலாம்! படித்த படிப்பிற்கு வீட்டிலேயே இருந்து விடாமல், ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும், அது எங்கேயும் இருக்கலாம்”

இப்படியாய் ஒரு வாரம் சென்றது. அவன் சாதாரணமாக பேசும் பொழுது அவளுக்கு ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால் சாயங்காலம் ஆன பிறகு அவனிடம் எப்பொழுதும் ஒரு தடுமாற்றம் இருந்து கொண்டே இருப்பதை கவனிக்க ஆரம்பித்தாள்

அது என்ன என்று அவளுக்கு புரியவில்லை. மாமியார் எப்பொழுதும் அவளை ஏதாவது ஒரு வேலை சொல்லி திட்டிக் கொண்டே இருப்பார். அவளுக்கு ஆதரவாக மாமனார் ஏதாவது சொன்னாலும், அதற்கு மாமனருக்கும் சேர்த்து திட்டு விழும் மாமியாரிடம் இருந்து. ஆகையால் அவர் சொல்லும் வேலைகளை அமைதியாக செய்ய ஆரம்பித்து விட்டாள் வைஷ்ணவி.

பொதுவாக மதிய வேலை முடித்ததும், அவளது அறைக்குச் சென்று விடுவாள். அன்று மதிய உணவிற்கு வெங்கட் வராததால், ஹாலிலேயே அமர்ந்து, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்த வைஷ்ணவிக்கு தாகம் எடுக்க, தண்ணீர் எடுப்பதற்காக சமையலறைக்கு சென்றாள்.

அங்கு பின்புறம் ஏதோ பேச்சு சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தாள். பின்புற வாசலின் அருகில் இருந்த திண்டில் அமர்ந்து, வேலை செய்யும் பெண்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு அதிர்ந்தாள் வைஷ்ணவி.

“இந்த பொண்ணு பாவம் அக்கா. தெரியாம வந்து இந்த வீட்டில மாட்டிக்கிச்சு” என்றாள் முதல் பெண்மணி.

“நீ ஏதாவது பேசி, அது பெரிய அம்மாகிட்ட காதுல விழுந்து, திட்டு வாங்காதே” என்றாள் மற்றவள் அவளை தடுக்கும் பொருட்டு.

இருந்தாலும் அந்த பொண்ணு ரொம்ப பாவம் அக்கா. எப்படித்தான் அவ்வளவு வெளிச்சத்துக்குள்ள வாழுதோ, தெரியல”

“அதெல்லாம் பணக்காரங்க வீட்டு பிரச்சனை. நாம அத பத்தி எல்லாம் பேசக்கூடாது” என்றாள் மற்றொருவள்.

“என்னக்கா இப்படி சொல்லிட்ட, அதுவும் ஒரு பொண்ணு தானே! அந்த பொண்ணு வீட்டிலேயும் கஷ்டப்படறவங்க கிடையாது. பின்ன எப்படி இந்த பையனுக்கு கட்டி வச்சாங்களோ தெரியல. உண்மையிலேயே எனக்கு அதுதான் ஆச்சரியமா இருக்கு”

“ஏய் சும்மா இருடி, எதையாவது பேசி நீ பெரிய அம்மாகிட்ட மாட்டிக்க போற” என்று அவளது பேச்சை மீண்டும் தடுக்க பார்த்தார் மற்றொரு பெண்.

“என்னமோ போக்கா. எனக்கு அந்த பிள்ளையை பார்க்கும் போது ரொம்ப பாவமா இருக்கு” என்று சொல்லிவிட்டு, “சரி நமக்கு எதுக்கு பெரிய இடத்து பொல்லாப்பு. இவங்க கொடுக்குற சம்பளத்துல தான் என் குடும்பமே சாப்பிடுது. கண்டதையும் பேசி வேலை இல்லாம இருக்கிறதுக்கு, வாய மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதான். சரி நீ கொஞ்ச நேரம் ஓய்வெடு. நான் போய் தோட்ட வேலையை பாத்துட்டு வாரேன்” என்று எழுந்து சென்று விட்டாள் அப்பெண்.

தண்ணீரை எடுத்துக்கொண்டு தனது அறைக்கு வந்த வைஷ்ணவிக்கு மனது குழம்பத் தொடங்கியது. ‘என்ன ஆயிற்று? என்னவாக இருக்கும்? ஏதாவது பெரிய நோய் இருக்குமா! எதற்கு ஏமாற்றி கல்யாணம் கட்டினார்கள் என்று பேசுகிறார்கள்?’ என்று ஏதேதோ நினைத்து குழம்ப ஆரம்பித்தாள். குழப்பம் அதிகமாக நேரத்தை பார்க்காமல் சட்டென்று தன் தாய்க்கு அழைத்து விட்டாள்.

அழைத்த பிறகு தான், அவர் உறங்கும் நேரம் ஆயிற்றே என்று ஃபோனை கட் செய்வதற்குள், ஃபோனை எடுத்த லட்சுமி பதட்டமாக “என்னம்மா? என்ன ஆயிற்று? இந்நேரத்திற்கு போன் செய்திருக்க?” என்றார் படபடப்பாக.

அதன் பிறகு தன் தலையில் தட்டிக் கொண்ட வைஷ்ணவி, “எதுக்குமா டென்ஷன் ஆகுறீங்க? உங்களுக்கு நான் சும்மா ஃபோன் பண்ண கூடாதா? சாப்பிட்டு முடிச்சு கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்னு ரூமுக்கும் வந்தேன். அதுல நேரத்தை பார்க்காமல் உங்களுக்கு போன் பண்ணிட்டேன்” என்றாள், அவரை இலகுவாக்கும் பொருட்டு, ஏற்ற இறக்கமாக பேசினாள் வைஷ்ணவி.

அதில் அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துக் கொண்டே, “சரி மா” என்று சாதாரணமாக பேசிவிட்டு வைத்தார்.

தாய் ஃபோனை வைத்த பிறகுதான் வைஷ்ணவிக்கு நிம்மதியாக இருந்தது. தானும் கவலைப்பட்டு தாயையும் பயமுறுத்தி இருப்பேனே என்று நினைத்து வருந்தினாள்.

‘இது என்ன என்று, முதலில் இவர்கள் வீட்டில் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று நினைத்து, யாரிடம் கேட்கலாம்? என்று யோசிக்க ஆரம்பித்தாள் வைஷ்ணவி.

முதலில் நினைவிற்கு வந்தது அவளது மாமனார் தான். வெங்கட்டிடம் கேட்பதற்கு முன் மாமாவிடம் கேட்கலாம் என்று நினைத்தாள். இப்படியே யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது வெங்கட்டின் அறையில் சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்க்க, அவன் தான் அலமாரியிலிருந்த, சில கோப்புகளை எடுத்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனின் அருகில் சென்ற வைஷ்ணவி, “ஏதாவது தேடுறீங்களா? எடுத்து தரணுமா?”

“ஒரு முக்கியமான ஃபைல் வச்சிட்டு போயிட்டேன். அதை எடுத்துட்டு போகணும், அதுக்கு தான் வந்தேன். நான் பார்த்துக்குறேன்” என்று சொல்லிக்கிட்டு ஃபையிலை தேடிக்கொண்டு இருந்தான்.

அருகிலேயே நின்று கொண்டிருக்க, “ஏதாவது என்கிட்ட கேட்கணுமா?” என்றான், அவள் முகத்தில் இருந்த குழப்பத்தை கண்டு.

‘அவ்வளவு அப்பட்டமாக தெரிகிறது’ என்று நினைத்த வைஷ்ணவி, ஆமாம் என்று தலையை நாலா பக்கமும் ஆட்டினாள்.

விசித்திரமான அவள் செயலில், அவன் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு, “என்ன கேட்கணுமோ கேளு” என்று முழுவதுமாக அவள் புறம் திரும்பி நின்றான்.

“அது.. நீங்க ஏன் இவ்ளோ வெளிச்சத்துல இருக்கீங்க?” என்று தயங்கி தயங்கி மனதிற்குள் இருந்த கேள்வியை நாசுக்காக ஒருவழியாக கேட்டு விட்டாள்.

அவளை பார்த்த வெங்கட், “கண்டிப்பா தெரிஞ்சிக்கனுமா?” என்றான் அழுத்தமாக.

அவள் தலை நாலா பக்கமும் அட,

“தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போற?” என்றான் அடுத்த கேள்வியாக.

அவளோ மௌனமாக இருக்க,
பெருமூச்சு விட்ட வெங்கட், “எனக்கு இருட்டுன்னா பயம். அதனால் தான் எப்பவும் நான் இருக்கிற இடத்துல வெளிச்சமா இருக்கணும்” என்றான் வெறுமையாக.

அவன் கூறியது அவளுக்கு குழப்பமாக இருக்க, அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“கேள்வி கேட்ட, பதில் சொல்லிட்டேன், அவ்வளவுதான். இதுக்கு மேல என்கிட்ட பேசி, என்னை டிஸ்டர்ப் பண்ணாத” என்று கோபமாக சொல்லிவிட்டு, தான் தேடி வந்த கோப்பை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்.

அவனின் கோபம் அவளுக்கு பயமாக இருந்தாலும், ‘அப்படி என்ன இருட்டு என்றால் பயமாக இருக்கும்?’ என்று யோசித்தபடியே அறையை விட்டு வெளியே வந்தாள்.

அவள் வெளியே வரவும், அவளது மாமனார் மேலே வரவும் சரியாக இருந்தது.
இதுவரை யாரும் மாடிக்கு வராததால் அவரைக் கண்டதும், “ஏதாவது வேணுமா மாமா?” என்றாள் அவசரமாக.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை மா. வெங்கட் இப்பதான் ஆபீஸ்க்கு போகும்போது சொல்லிட்டு போனான்” என்றார் அவரும் தயக்கமாக.

“என்ன?” என்று குழப்பமாக அவரை பார்த்தாள் வைஷ்ணவி.

“அது.. நீ கேட்டியாமே?” என்று அவரும் தயங்கினார்.

ஆமாம் என்று தலையாட்டி, “ஏன் எல்லா இடமும் வெளிச்சமாக இருக்குன்னு கேட்டேன் மாமா? என்றாள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே.

அவரோ பெருமூச்சு விட்டுக் கொண்டு “அவனுக்கு பிறந்ததிலிருந்தே இருட்டு என்றால் பயம். அதனால் அவன் இருக்கும் இடத்தில் எல்லாம் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்” என்றார் வேதனையாக.

அவளுக்கு அது புதுமையாக தெரிய, “பிறந்ததிலிருந்து இருட்டு என்றால் பயமா? எனக்கு புரியலையே மாமா!” என்றாள் வைஷ்ணவி

  • தொடரும்..

5 thoughts on “இருளில் ஒளியானவன்-27”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *