இருளில் ஒளியானவன் 9
நண்பர்கள் இருவருக்குமே வைஷ்ணவியை மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் இருந்தது.
கேசவன் தன் மகன் மகேஷிடம் வைஷ்ணவியை பற்றி கேட்க, அவள் தனக்கு தங்கை போல் என்று கூறிவிட்டான்.
அதனால் சாரங்கனிடம் விஷ்ணுவை பற்றி கேட்டார் கேசவன். சாரங்களுக்கும் ஆசை இருந்தாலும், சிறுவயதில் இருவரும் எப்பொழுதும் முறைத்துக் கொண்டே இருப்பதை கேசவனிடம் கூறினார்.
பின்னர் எதற்கும் வைஷ்ணவியிடம் அவளின் விருப்பம் என்ன கேட்டு விடலாம். அவளுக்கு விஷ்ணுவை மணக்க சம்மதம் என்றால் திருமணத்தை முடிக்கலாம் என்றார்.
கேசவனுக்கும் அவர் கூறுவது சரியாக பட்டது. உடனே அன்பரசுவிடம் நண்பர்கள் இருவரும் தங்கள் மனதில் இருப்பதை கூறினார்கள்.
காலையில் அலுவலகம் கிளம்பி வந்த அன்பரசு, உணவு உண்டு கொண்டிருந்த வைஷ்ணவியிடம் திருமண விசயத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.
“குட்டிமா உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்” என்றார்.
“இப்ப என்னப்பா அவசரம். இன்னும் சிறிது நாள் உங்களுடைய இருக்கிறேனே” என்றாள் வைஷ்ணவி.
“இல்ல குட்டிமா, காலா காலத்துல நடக்கிறது எல்லாம் சரியா செய்யணும்” என்று கூறி “உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும்” என்றார்.
“உங்களுக்கு மாப்பிள்ளை எப்படி இருக்கணும் என்று தெரியும்தானே அப்பா? அப்படியே பாருங்கள்! நீங்கள் பார்க்கும் மாப்பிள்ளை எனக்கு ஓகே தான்” என்று விட்டாள்.
மெதுவாக நண்பனின் மகன் விஷ்ணு பற்றி கேட்க.
“வேண்டாம்பா, அவன் என்னை திட்டிக்கிட்டே இருப்பான். அவனுக்கு என்னை பிடிக்காது. அவனை கட்டாயபடுத்தாதீங்க” என்று விட்டாள்.
“குட்டிமா அவன் இவன் என்று பேச கூடாது என்று சொல்லி இருக்கேன், இல்லையா?” என்றார் சற்று கோவமாக.
“சாரிப்பா” என்று உடனே மன்னிப்பு கேட்டு, “அவுங்களுக்கு என்னை எப்பவுமே பிடிக்காது அப்பா. அதனால்தான் சொல்கிறேன் வேறு மாப்பிள்ளை பாருங்கள்” என்று விட்டாள்.
அவள் கூறியதை அப்படியே சாரங்கனிடம் சொல்லிவிட்டார் அன்பரசு.
சாரங்கனும் விஷ்ணுவிடம் எதுவும் கேட்காமலேயே, “அவள் சொல்வதும் சரிதான் அன்பு. சின்னதில் அவன் அப்படித் தானே நடந்து கொண்டான். அவளுக்கும் அவன் மீது நல்ல அபிப்ராயம் இருக்காது.
ஆனால் இப்பொழுதெல்லாம் விஷ்ணு அப்படி இல்லை. இருந்தாலும் நாம் அவளை கட்டாய படுத்த வேண்டாம்.
பெரியவர்கள் நாம் சொன்னால் இருவருமே மறுக்க மாட்டார்கள் தான். ஆனால் அப்படி கட்டாயப்படுத்தி அவர்களை திருமண வாழ்க்கைக்குள் தள்ள வேண்டாம். இருவரும் அவரவர் விருப்பப்படியே வாழட்டும்” என்றார்.
நண்பன் கூறியதும், “சரி சாரங்கா, இங்கு ஒரு மாப்பிள்ளை வீடு வந்திருக்கிறது. அதனால் தான் முதலில் நம் பிள்ளைகளிடம் கேட்டு விடலாம் என்று நினைத்தேன். மகேஷ் அவளை தங்கை என்று சொல்லிவிட்டான் என்று கேசவன் சொன்னான். நான் இந்த இடத்தை விசாரிக்கிறேன், நீயும் விசாரித்துச் சொல்லு” என்று வெங்கட் பற்றியும் அவரது நிறுவனத்தை பற்றியும் கூறினார்.
“நல்ல இடம்தான், ஆனால் பையனுக்கு முப்பது வயதிற்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்” என்ற சாரங்கன், “நான் மேலும் விசாரித்து சொல்கிறேன்” என்றார்.
அனைவரும் அவரவர் பங்கிற்கு விசாரிக்க, எல்லோருமே நல்லவிதமாகத் தான் வெங்கட் பற்றி கூறினார்கள். ஒரே ஒரு குறை என்னவென்றால் அவனுக்கு வயது முப்பத்தி ஒன்று ஆகிறது. அதை தவிர அவனது குணம் பற்றி எல்லோரும் நன்றாகவே கூறினார்கள்.
லட்சுமியும் முதல் முதலாக வந்த வரன் என்றும், தானாக தேடி வந்திருக்கிறது என்றும் கூறி, வயது ஆறு வயது தானே வித்தியாசம். இதில் என்ன இருக்கிறது? என்று தன் கணவனிடம் கூறினார்.
வைஷ்ணவியிடம் தாங்கள் விசாரித்தது அனைத்தையுமே ஒலிவு மறைவில்லாமல் கூறினார்கள் லட்சுமியும் அன்பரசுவும்.
“வயது மட்டும் தான் அதிக வித்தியாசம் குட்டிமா. மற்றபடி மாப்பிள்ளை பற்றி விசாரித்ததில் எல்லோருமே நல்ல விதமாகத்தான் கூறுகிறார்கள்” என்றார்
வைஷ்ணவியும் “வயதில் என்ன இருக்கிறது அப்பா? உங்களுக்கும் அம்மாவுக்குமே எட்டு வயது வித்தியாசம் தானே? அதெல்லாம் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. உங்களுக்கு பிடித்திருந்தால் பேசி முடித்து விடுங்கள்” என்று கூறிவிட்டாள்.
அவள் கூறியதை கேட்டு உண்மையில் வியந்தனர் பெற்றோர். இந்த காலத்தில், நண்பர்களின் பெண் பிள்ளைகள் போடும் விதிமுறைகளை எல்லாம் கேட்டு கலங்கித்தான் இருந்தார்கள் இருவரும். ஆனால் வைஷ்ணவி எல்லாம் தங்களின் விருப்பம் என்று கூறியதில் இருவருக்குமே பெருமை தான்.
மகளின் சம்மதம் கிடைத்ததும் உடனே மாப்பிள்ளையின் வீட்டில் தெரிவித்து விட, அதன் பிறகு வெகு விரைவாக திருமண வேலைகள் நடந்தது.
அனைத்தும் முடிவு செய்து பத்திரிக்கையும் அடித்து தொலைவில் உள்ளவர்களுக்கு எல்லாம் அனுப்பப்பட்டது.
சாரங்களுக்கும் அனுப்பிவிட்டு ஃபோன் செய்து இருவரிடமும் பேசினார்கள் வைஷ்ணவியின் பெற்றோர்.
“இவ்வளவு சீக்கிரம் அனைத்து ஏற்பாடும் முடிந்து விட்டதா?” என்று ஆச்சரியமாக கேட்டார் சாரங்கன்.
நேரில் வந்து பத்திரிக்கை வைக்க முடியாத காரணத்தினால் தபாலில் அனுப்பி உள்ளதாக தெரிவித்து, மூவரும் கண்டிப்பாக வரவேண்டும் என்று லட்சுமியும் கேட்டுக் கொண்டார்.
“கண்டிப்பாம்மா, என் மருமகள் கல்யாணத்திற்கு நான் வராமலா?” என்று கூறிய சாரங்கன் “மூவரும் கண்டிப்பாக வருவோம்” என்று கூறி “தம் சார்பாக திருமணத்திற்கு எதுவும் செய்ய வேண்டுமா?” என்றும் கேட்டு கொண்டார்.
பத்திரிக்கை வந்தவுடன் விஷ்ணுவிடம் காண்பித்த சாரங்கன், “திருமணத்திற்கு எல்லோரும் செல்ல வேண்டும். இப்பொழுது விடுப்புக்கு சொல்லிவிடு” என்றார்.
அவனோ தன் வேலையை சென்னைக்கு மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளில் இருந்தால், வேலை மாற்றல் உறுதி பெற்றதும் தந்தையிடம் தன் காதலை தெரிவிக்கலாம் என்று இருக்க, அவளுக்கு திருமணம் என்று பத்திரிக்கையை கண்டதும் அதிர்ந்து விட்டான் விஷ்ணு.
கண்களில் கண்ணீர் முட்ட, தொண்டையில் இருந்து வார்த்தை வெளிவர மறுத்தது.
பத்திரிக்கையை பார்த்த பிறகு, அவனால் எதுவுமே பேச முடியாமல் தனது அறைக்குச் சென்று விட்டான்.
“என்னடி? நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், அவன் எதுவும் பதில் சொல்லாமல் போகிறான்” என்று செல்லும் மகனின் முதுகை பார்த்தபடியே மனைவியிடம் கேட்டார் சாரங்கன்.
மகனின் முகத்தில் தோன்றிய வருத்தத்தை கண்டு என்ன? என்று யோசித்தபடி நின்று இருந்தார் சங்கீதா. “என்னடி? உன் கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு ஏதோ யோசனைல இருக்கிற?” என்றார்.
“இல்லைங்க, பத்திரிக்கை பார்த்ததும் அவன் முகமே ஏதோ சரியில்லை. ஒருவேளை அவன் வைஷ்ணவியை விரும்புகிறானோ?” என்று தன் மனதுக்குள் இருந்த சந்தேகத்தை குழப்பமாக தன் கணவனை பார்த்து கேட்டார்
“ச்சே ச்சே. அப்படியெல்லாம் இருக்காது. அவனுக்குத்தான் அவளை எப்பொழுதுமே பிடிக்காதே!” என்றார்.
“இல்லைங்க, அவன் இங்கு வந்ததிலிருந்தே அவளைப் பற்றி எதுவும் தவறாக பேச மாட்டானே. நான் பேசும்பொழுதும் அமைதியாக தானே இருப்பான்” என்று மகனின் முந்தைய கால நடவடிக்கைகளை ஒப்பிட்டு பார்த்து. யோசித்தபடியே கூறினார்
மனைவியின் பேச்சை கேட்டதும் சாரங்களுக்கும் ‘ஒரு வேளை மகன் வைஷ்ணவியை விரும்பி இருப்பானோ?’ என்ற எண்ணம் தோன்ற ‘அன்பரசு சொல்லும் பொழுதே கேட்டிருக்க வேண்டுமோ?’ என்று தோன்றிய எண்ணத்தை தெரியாமல் வாய் வழியாக பேசி விட்டான்.
“அன்பு அண்ணா என்ன உங்க கிட்ட கேட்டாங்க?” என்று படபடத்தாள் சங்கீதா.
அன்று அன்பரசு வைஷ்ணவிக்கு விஷ்ணுவை பேசியதை பற்றி கூற, “இதை ஏன் நீங்கள் என்னிடம் முன்பே சொல்லவில்லை? நான் அவனிடம் கேட்டிருப்பேனே!
ஒருவேளை அவனுக்கும் விருப்பமிருந்தால் வைஷ்ணவியை நம் வீட்டு மருமகள் ஆக்கி இருக்கலாமே!” என்றார் கவலையாக.
“சரி, இப்பொழுது இதைப் பற்றி பேசி என்ன பயன்? அவளுக்கு திருமணம் முடிவாகி விட்டது. உன் மகனிடம் எதையாவது பேசி அவனது கோபத்திற்கு உள்ளாகாதே, திருமணமத்திற்கு செல்வதற்கு டிக்கெட் போட சொல்லு” என்று சொல்லிவிட்டு தனது வேலையை பார்க்கச் சென்றார் சாரங்கன்.
- தொடரும்..
Ellarumey chinna vayasula nadantha vachi vishnu kita oru varthai kooda ketkavae illa kettu irundhu irukalam
💛💛💛💛💛
Nice epi
இப்படி அப்பாக்கள் சொதப்பிட்டாங்களே!!… அவள்ட்ட கேட்ட மாதிரி இவன் கிட்டயும் கேட்டிருக்கலாம்!!…