Skip to content
Home » உன்னில் தொலைந்தேன்-11-12

உன்னில் தொலைந்தேன்-11-12

💟11
                      பிருத்வி வந்து காரை நிறுத்தி லத்திகா ஸ்கூட்டி பார்த்துவிட்டு ‘வந்துட்டா போல’ என சொல்லி லிப்டில் ஏறி வந்து அலுவலகத்தில் நுழைய , எப்பொழுதும் எழுந்து நிற்காத லத்திகா அச்சமயம் ஏனோ முகத்தை பார்க்கவில்லை என்றாலும் பிருத்வி வந்ததும் எழுந்து நின்றாள். பிருத்விக்கு அதுவே ஒரு வெற்றியாக நினைத்தான்.
                 மூன்று மணி நேரத்திற்கு பின்னர் லத்திகாவை அழைத்தான்.
       ”கங்கிராஸ் கல்யாணம் என்று கேள்விப்பட்டேன்” என்றான். அவள் ஒரு நொடிக்கு குறைவாக அவனை பார்த்துவிட்டு மீண்டும் தலை தாழ்த்தி நிற்க,
               மவனே நக்கலா கேள்வி கேட்கற… ஏதோ உன் ராசி கொஞ்சம் பொறுமையா இருக்கேன் ஏதாவது கேளு அப்ப இருக்கு…. என மனதில் அர்ச்சித்தாள். அதே நேரம் பிருத்வி
       ”அன்னைக்கு பெட்ரோல் பேங்க்ல யார் கூட பேசினேன் என்று இப்ப.. சொல்லலாமே” என்றான் . இப்ப என்ற சொல்லில் அழுத்தம் பதித்து ,
       ”அந்த லூசு தான் என்னை முதல் முதலில் பொண்ணு பார்த்துவிட்டு போனவன்” என்ற பின்னரே லூசு சொல்லியது நினைவு வர ”சாரி” என்றாள்.
       ”ஒஹ் நல்லா ஹாப்பி மூட்ல பேசின அதான். பை மிஸ்டேக் சாரி. சந்தேக கண்ணோட்டத்துல கேக்கல” என்றான் அவசர அவசரமாக.
        ”அவனுக்கு மேரேஜ் ஆகிடுச்சாம். என் கழுத்துல தாலி இல்லைனு என்னை கிண்டல் பண்ணி வெறுப்பேத்த பார்த்தான். நான் விடலை பதிலுக்கு பதில் சிரிச்சுக்கிட்டே குத்தி காட்டி பேசியதும் ஓடிட்டான்.” என்றாள் லத்திகா. இவனின் மனதில் ‘ஆமா பின்ன நீ திமிரா பேசினா யார் தான் உங்கிட்ட நின்று பேசுவாங்க… பயத்தில் விழுந்து அடிச்சுகிட்டு போக தான் செய்வாங்க…. எல்லோரும் என்னை மாதிரி முட்டாளா இருப்பாங்க? உங்கிட்ட திட்டும் வாங்கிட்டு உன்கூட பேச ஆசை பட’ என்றே கூறி கொண்டான். பின்ன அவளிடம் சொல்லி விட்டு அவள் அதுக்கு அப்போ கல்யாணம் செய்துக்காதே போடா’ என கூறி விட்டாள்.
       ”நெக்ஸ்ட் டைம் பார்த்தா சொல்லிடு ஒரு முட்டாள் கட்டிக்க சம்மதிச்சுட்டான் என்று” கூலாக சொல்லி சன் கிளாஸ் கழட்டி மேஜையில் வைத்தான், இவளோ வேகமாக
       ”சாரி நீங்க தான் அப்படி … முட்டாள் என்று சொன்னிங்க நான் மறுக்கலை நானா சொல்லலை” என கத்தி சொல்லி பிறகு முடியும் தருவாயில் மெல்ல கஷ்டப்பட்டு சொல்லி முடிக்க,
      ”இட்ஸ் ஓகே போ” என்றான். விட்டால் போதும் என்று வெளியேறினாள். அவனும் தலைக்கு பின்னால் கையை வைத்து மெல்லிய இதழ் புன்னகை செய்தான்.
          பரவாயில்லை முன்ன விட இப்போ கொஞ்சம் அமைதியா பேசின மாதிரி இருக்கு… என்று நினைக்க அவளோ இவன் எதுக்கு என்னை நிற்க வச்சி கேள்வி கேட்கறேன்…. எல்லாம் இருக்கு டா… என கூறி கொண்டாலும்  தனது இருப்பிடத்திற்கு வந்து அமர்ந்தவள், அன்று கேட்ட அதே கேள்வி ஆனாலும் கோவப்படாமல் பதில் சொல்லி விட்டு வந்து இருக்கின்றேன். அவனது மொத்த கம்பீரத்தில் என்னை தொலைத்து கொண்டு இருக்கின்றேனா? என்றது அவள் மனம்.

அவனும் அவ்வாறு தானே?!
                          வீட்டுக்கு எப்பொழுதும் போல நுழைந்தவளிடம்,
     ”என்னடி அந்த தம்பிகிட்ட பேசிட்டியா?” என்று கேட்டார். 
     ”என்ன பேசணும்” என்று புரியாத விதமாக கேட்டாள்.
     ”லத்திகா அம்மா பயந்து கேட்கறா ஒழுங்கா சொல்லுடா” என்றார் ஜீவானந்தம்.
       ”என்னப்பா சொல்லணும் எனக்கு புரியல”
       ”காலையில் என்னை சொன்னிங்க இப்ப உங்க பொண்ணு பேசறது புரியுதா” என்று சகுந்தலா ஸ்லாகிக்க ஜீவானந்தம் மகளை பவ்யமாக பார்த்தார்.
      ”அப்பா அவர் என்கிட்ட எதுவும் கேட்கலை, நானும் ஏதும் சொல்லலை, ஆனா நீங்க எப்படியும் போன் பண்ணி சொல்லி இருப்பீங்க அவருக்கும் தெரியாம இல்லை. அப்பறம் என்ன கேள்வி”
      ”அம்மாடி லத்திகா அவங்க மேரேஜ் சீக்கிரம் வைக்க சொல்லி இருக்காங்க”
      ”எதுக்காம்?” என்று முகம் அலம்பி துடைத்தவாறு கேட்க,
      ” பிருத்வி தம்பி மறுபடியும் ரிசர்ச்னு போகவிடக் கூடாது என்று  நினைக்கறாங்க அதனால் கல்யாணம் பண்ணி குடும்பஸ்தனா சீக்கிரம் மாற்ற பார்க்கறாங்க” சகுந்தலா கூறி முடித்தார்.
                               ‘ம் இது வேறயா என சலித்து கொண்டு ,”ம்மா பசிக்குது டூ மச் ஒர்க் சாப்பாடு எடுத்து வை” என்றாள் லத்திகா .
      ”நான் என்ன சொல்றேன் இவ என்ன பேசறா” என்றபடியே தோசை வார்த்து தட்டில் வைக்க, வெங்காய சட்டினியுடன் அதை ருசி பார்த்து உண்டாள் லத்திகா. நமக்கு சோறு தாங்க முக்கியம் என்பதுபோல….
         ”இதே கூட பிறந்த பிறப்புகள் என்று அக்கா அண்ணன் தம்பி தங்கை என்று இருந்தா கல்யாண சேதி சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். நாம யாருக்கு சொல்லி சந்தோஷப்பட்டுக்கொள்ள” சகுந்தலா சொல்லி தோசை சுட ஜீவானந்தமிற்கும் அப்படி தான் தோன்றியது .
                                    இரவு ஒன்று வந்தது. அது வழக்கத்துக்கு மாறாக உறக்கம் தர மறுத்து விட்டது. மனமோ பிருத்வி பற்றி நினைத்து பார்க்க சென்றது. 

   பிருத்வி…. இரு தினம் முன் அவனை கரித்து கொட்டி இருந்தாள் இன்றோ அவனிடம் இருக்கும் நல்லதை எண்ணி வானத்தை பார்த்து சிரித்துகொண்டு இருக்கின்றாள். வானத்தில் நட்சத்திரம் அவளை கண் சிமிட்டியது சட்டென்று உதித்தது அவளுக்கு பிருத்வி கண்கள் தான். இத்தகைய பிரகாசம் தான் அவன் கண்களில் அன்று கண்டாள். சே என்ன இது இரு தினமாக பிருத்வி புராணம் பாடுகிறது இந்த மனம். இது தான் காதல் மேஜிக்கா அல்லது கல்யாண மேஜிக்கா? என்று வெட்கம் கொண்டாள். 
                                                 அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் எப்பொழுதும் போல போனது. ஜெயராஜன் அலுவலகம் வருவதை குறைத்துக் கொண்டார். பவானி ஏன் போகவில்லை என்றதற்கு பிருத்வி-லத்திகா பேசிப் பழகி கொள்ள இலகுவாக இருக்க வாய்ப்பை அமைத்து கொடுப்பதாய் கூறினார். அவருக்கு தெரியாது அந்த இரு முட்டாள்களும் பேசி கொள்ள போவதில்லை என்று. முன்பாவது ஒரு முறை இருமுறை அவன் அறைக்கு போகும் வாய்ப்பை மறுக்க முடியாமல் இருந்தாள். இப்பொழுது அவனும் அவளை அழைத்து ஏதும் கேட்கவில்லை. அவளும் போக நேரும் சமயத்தில் புவனாவையே அனுப்பினாள்.
                                               அன்று புவனா பிருத்வி முன் வந்து , ”சார் எனக்கு 2 டேஸ் லீவு வேணும்”
      ”லுக் மிஸஸ் புவனா, நீங்க நிறைய தடவை லீவு எடுத்து இருக்கீங்க. ஒன்னு பிரக்னேட் லீவு எடுத்து வீட்ல இருங்க இல்லையா ஆபீஸ் ரெகுலரா வாங்க. நீங்க நடுவுல நடுவுல லீவு எடுத்தா உங்க ஒர்க் முழுதும் முடியாம தடைப்படும்.” என்றான் கறார் பேர்வழியாக.
      ”சார் … அது … எனக்கு…”
      ”ப்ளீஸ் எனக்கு காரணம் சொல்லாதீங்க போங்க” என்று சொல்லி முடித்து சிஸ்டத்தில் நுழைத்தவனிடத்தில் வேறு பேச முடியாது திரும்பினாள் புவனா.
                           ஜெயராஜன் பலதடவை வீட்டுக்கு கூப்பிட்டு வராத ஜீவானந்தம் அன்று பவானிக்கு உடல் நிலை சரியில்லை என கேள்விப்பட்டு வேறு வழியின்றி சகுந்தலாவுடன் செல்ல முடிவெடுத்து கிளம்பி வந்து இறங்கினர். பிருத்வி வீடு வந்து இறங்கிய அடுத்த கணமே மலைக்க வைத்தது. அச்சத்தையும் கிளப்பியது.
           கேட் திறந்து தோட்டத்தை தாண்டி போர்டிகாவினில் அந்த பெரிய நாயினை கடந்து நிற்க தோட்டத்துக்காரன் யார் என விசாரிக்க திக்கி திணறி பெயரை சொல்ல  இருந்த சமயம் கதிர் அவங்களை உள்ளே விடு என ராஜன் குரல் கேட்க தலையை மேலே பார்த்தவர்கள் எங்கே என்று தேடுவதற்கு முன் உள்ள போங்க சார் என்றான் தோட்டக்காரன்.
       ”வாங்க அண்ணி… வாங்க அண்ணா… இப்ப தான் வர தோணுச்சா அகிலா…” என்று அழைத்து விட்டு , ”என்னங்க…. ” என்ற குரலுக்கு,
       ”வந்துட்டே இருக்கேன் பவானி. வாங்க ஜீவா, வாம்மா … ” இருவரையும் அழைத்து அமர செய்து, அவர்களும் அமர்ந்தனர்.
       ”என்ன அண்ணி உடல் நிலை சரியில்லை அண்ணா சொன்னாங்க இப்ப பரவாயில்லயா”
       ”எனக்கு என்ன அண்ணி கூட யாராவது பேச்சு துணைக்கு இருந்தா போதும். அப்பாவும் பையனும் அலுவலகத்தை கட்டிக்கிட்டு இருக்காங்க. எனக்கு தான் நேரம் போகலை. இல்லாத நோய் வந்து தங்கிடுது”
       ”இந்தாங்க அண்ணி… ” என பழம் ஸ்வீட் என நீட்ட பெற்று கொண்டு அகிலா எடுத்து வந்த குளிர் பானத்தை நீட்டினார் பவானி.
      ”லத்திகா மட்டும் வீட்டுக்கு வந்துட்டா போதும் எனக்கு எந்த நோயும் கிட்டகூட வராது. பேச்சு துணைக்கும் தோதாயிருக்கும்.”
                      சகுந்தலாவும் ஜீவாவும் புன்னகை செய்தனர்.  மேலும் பேசியது பாவனி ராஜன் மட்டுமே ஜீவா சகுந்தலா பேச அஞ்சி புன்னகை மட்டும் சிந்தினர்.
      ”ஜீவா வாங்களேன் வீட்டை சுற்றி பார்க்கலாம்” என ராஜன் அழைத்து சென்றார். பூஜை அறை, மாடுலர் கிச்சன், பெரிய ஹால் கீழே இரண்டு அறை, மேலே எஸ் வடிவ கம்பி படிக்கட்டில் ஏறிட மேலும் இரு அறைகள், அறைகள் எல்லாவற்றிலும் அட்டாச் பாத் ரூம் பால்கனி அதில் ஒரு அறையில் பிருத்வி உபயோக படுத்தும் உடற்பயிற்சி கருவிகள் இருந்தன. அதற்கு மேல் வெறும் மாடி மட்டுமே. மாடியில் இருந்து பார்த்தால் கீழே இருக்கும் பூச்செடிகள் எல்லாம் அழகாக காட்சி அளித்தன.
         ”என்ன ஜீவா எப்பவும் கொஞ்சமாவது பேசுவீங்க இன்னிக்கு அதுவும் இல்லை”
       ”அது கொஞ்சம் மிரட்சியா இருக்கு. எங்களுக்கு … ” என தயங்க,
       ”புரியுது. ஆனா பாருங்க நானும் மனிதன் தான் மறக்காதீங்க. எதுக்கு மிரண்டு போகணும். செல்வநிலை என்பது கடுமையா உழைச்சா கிடைக்கும். அதுவும் இல்லாம இந்த சொத்துக்கள் எல்லாம் என் அப்பாவோடாது. உங்களை மாதிரி சுயசம்பாத்தியம் இல்லை அப்படி பார்த்தா நான் தான் உங்களை கண்டு பிரம்பிச்சு இருக்கனும் ”
      ”இருந்தாலும் …”
     ”இது உங்க பொண்ணு வீடு நினைவு இருக்கட்டும். என்னை நீங்க உரிமையா ராஜன் என்று பெயரிட்டு கூப்பிட்டாதான் எனக்கும் ஒரு சொந்தம் கிடைத்த சந்தோஷம் இருக்கும். எனக்கு ஒரு நண்பன் தங்கை கணவன் என்ற அன்பை மட்டும் தாங்க” என பேச்சை இலகுவாக்கினர். 
                                முதலில் மிரண்டலும் பின்னர் பேச்சின் அன்னியோனியத்தில் இலகுவாக பழக செய்தனர் ஜீவாவும் சகுந்தலாவும். அங்கேயிருந்து கிளம்பும் போது வர்றேன் ராஜன் வர்றேன் தங்கச்சி என ஜீவா கூறுமளவுக்கு நெருங்கி பழகினார்.
    ராஜனும் ”என்ன ஜீவா சாப்பிட்டு கிளம்பினா எனக்கு சந்தோஷமா இருக்கும் மனதில் சின்ன கவலை”
     ”இல்லை ராஜன் என்கேஜ்மென்ட் முடியட்டும் சாப்பிடறேன்” என கூறி விடை பெற்றார்.
                      ஜீவாவிற்கு தன் மகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை வந்தாலும், மனதின் ஓரத்தில் பிருத்வி செல்வ நிலை தனக்கு சரிப்படுமா என்றே கலங்கியது.
                                                                     💟12   
                            வழியில் எங்கும் இருவரும் பேசிடாது வீட்டுக்கு வந்த பிறகே சகுந்தலா கேட்டு விட்டாள்.
      ”ஏங்க நம்ம வசதிக்கு மீறி சம்பந்தம் முடிக்கறோமோ என்று பயமா இருக்குங்க”
        ”எனக்கும் அதே கவலை தான் சகு”
       ”செய்முறை எல்லாம் அவங்க அளவுக்கு நம்மளால செய்ய முடியுமோ என்று நினைச்சாலே வயித்துல புளிய கரைக்குது”
      ”ம் … ஆனா குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம். குறை என்று வந்தா பொருளாதாரத்துல நாம அவர்களைவிட கம்மி. அதுவும் அவங்க கூட கம்பேர் செய்தா மட்டும் தான்.”
       ”பேசாம நாம இந்த கல்யாணத்தை… என தடுமாறி நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி வேற…. ”
       ”அது தப்பு சகு. வேண்டாம் என்று முடிவு எடுத்தா அதை முதலிலே செய்து இருக்கணும். இப்ப மறுத்தா அது அவங்களை அவமரியாதை செய்வது போல் ஆகிடும்”
         ”ஆனா சீர் செய்ய…”  என பேச முடியாது கணவனை பார்க்க , அவரோ வீட்டை முழுதும் பார்வை பதித்தார்.
                                                         இரவு லத்திகா வந்தது சகுந்தலா இன்று பிருத்வி வீட்டிற்கு சென்றதை பற்றி கூற, அவளும் கோதுமை தோசை பிய்த்து வாயில் வைத்த படி கேட்க துவங்கினாள்.
        ”வீடா அது அரண்மனை மாதிரி இருக்கு” என அதிசயித்து கூற,
        ”ம் .. அம்மா ஹன்சிகா பார்த்தியா இல்லை ஆன்ரியா பார்த்தியா இல்லை திரிஷா தம்மன்னா பார்த்தீங்களா?”
       ”என்னது… யார் அவங்க” என்று குழம்பி நிற்க ஜீவா இறுக்கம் தளர்ந்து சிரித்து,
      ”ஏய், உன் பொண்ணு அரண்மனை படத்துல வருகிற ஹீரோயிஸ் பேரை சொல்றா ” என சிரிக்க அதன் பிறகு புரிந்து கொண்ட சகுந்தலா ”உன்னை… நான் எவ்ளோ சீரியஸா பேச ஆரம்பிச்சா இவளை”
       ”ம்மா நீ டபுள் பெட் ரூம் பார்த்து இருந்த ஆளு. உன்னை திடீரென கொஞ்சம் பெரிய வீட்டுக்கு போனதும் அது அரண்மனை மாதிரி தெரிஞ்சு இருக்கும்.”
       ”நெஜமாவே சினிமால காட்டற வீடு மாதிரி இருந்துச்சு லத்திகா”
       ”இருக்காதா பின்ன. ரெண்டு பேர் சம்பாதிக்கிற நாமளே டபுள் பெட் ரூம் கட்டி இருக்கும் போது சிடுமூஞ்சி … சாரி பிருத்வி வீடு தாத்தா காலத்துலே செல்வந்தர் சொல்லவா வேணும்.”
        ”லத்திகா நீ இனியும் மாப்பிள்ளை தம்பியை சிடுமூஞ்சி என்று கூற கூடாதுமா” என ஜீவானந்தம் அறிவுரை வழங்கினார் .
                                அதற்கு சரி என தலை மட்டும் ஆட்டினாள். பிறகு எப்பொழுதும் போல அறைக்கு சென்று அவனோடு புலம்பினாள் மனதோடு தான்.
                                 பாரு இப்பவே உனக்கு மரியாதையை தரணுமாம். ம்…. லத்திகா என்ன இருந்தாலும் உன்னை விட பெரியவன், கட்டிக்க போற புருஷன்… என்ன சொல்லி கூப்பிடறது என யோசிக்க துவங்கினாள்.
      பேரை பாரு பிருத்விராஜன்… நாட்டுக்கே ராஜா என்று நினைப்பு. ராஜன் கூப்பிடலாமா … சே சே ஓல்ட் பேஷன் அதுவும் இல்லாம அது ஜெயராஜன் சார் பேரும் அடங்கி இருக்கு . பிருத்வி… அது எல்லோரும் கூப்பிடற பேர் எனக்குன்னு ஸ்பெஷல் வேணாமா? ம்… ரித்விக்… ம்.. அவன் காலேஜ் ப்ரெண்ட்ஸ் அப்படி தான் கூப்பிடுவாங்க என்று சார் சொல்லி இருக்கார் . வேற…வேற…. ம்… டேய் உனக்கு சிடுமூஞ்சி தான் பெஸ்ட் ஆனா சகு திட்டுவா யார் எதிர்லயும் கூப்பிடவும் முடியாது என்று அறையில் அங்கும் இங்கும் நடந்து ஓய்ந்தவள் கட்டில் அமர்ந்து தலையணை மடியில் வைத்து பிருத்வி ரித்விக் பிருதிவிராஜன் ஆஹ் பிரஜன் எஸ் உன்னை நான் ப்ரஜன் என்று தான் கூப்பிடப்போறன் என பெயரை முடிவு செய்து விட்ட பின்னரே உறக்கம் அவளை தழுவியது.
                                                வாரங்கள் சிறப்பாக போனது. அலுவலகத்தில் அவன் அவளை பார்வையால் மட்டுமே கண்டு சென்றான். பேசி கொள்ள தோணவில்லை. இருவருமே பேசினால் எங்கே சண்டை போட்டு சிறுபிள்ளை போல செயல்படுவோமே அதனால் திருமண நிற்க வாய்ப்பு நேருமோ என்று அமைதி காத்து அவர் தம் பணியை மட்டுமே சிறப்பாகக் செய்தனர்.
                                                                                                                         அன்று ஞாயிறு விடுமுறை என்பதால் அக்கம் பக்கத்து வாலுகளுடன் மூன்று மணி அளவில் லத்திகா பட்டம் விட்டு கொண்டு இருந்தாள்.
       ”டேய் ரோஷன் இந்த பக்கம் காற்று அடிக்கு நூலை விடுடா ” என்று கத்தும் போதே அது அறுந்து மாடியின் பக்கவாட்டு ஷெல்பில் விழுந்தது. ரோஷன் என்ற அச்சிறுவனின் தலையில் வலிக்காது கொட்டி,
      ”இப்ப பாரு ஷெல்பில் விழுந்து கிடக்குது.”
      ”அக்கா அக்கா நீ தான் இறங்கி எடுத்துடுவல அப்பறம் என்ன . எடுத்து தா”
என்று அவன் போக்கிற்கு மரியாதையை அவளுக்கு அவள் போலவே கொடுத்தான்.
       ”ம்.. பொறு.” என சுற்றி ஒரு நோட்டம் விட்டு விட்டு மெல்ல இறங்கி எடுத்து கொடுக்க, பெற்று கொண்ட பரத் மற்றொரு சிறுவனிடம் ,”டேய் வினித் காத்தாடி லைட்டா கிழிஞ்சு போயிருக்குடா வா கம் போட்டு ஓட்டுவோம்” என்ற போது லத்திகா வாசலில் கார் வந்து நிற்க சரியாய் இருந்தது.
      ”லத்திகா உங்க வீட்டுக்கு கார்ல யாரு ” என லத்திகா செல்லம் கொஞ்சும் சிறுவன் ரோஷன் கேட்க 
        ”டேய் சத்தம் போட்டு பேசாத” என வாயில் விரலை வைத்து ‘ஸ்….’ என செய்கை செய்ய மற்றவர்களோ விடு ஜூட் என ஓடினார்கள்.
                         அதற்குள் பவானி ஜெயராஜன் இறங்கி வீட்டின் உள்ளே சென்றனர். லத்திகா இருப்பது பக்கவாட்டு பக்கம் என்பதால் ஓரளவு அவர்கள் கண்ணில் தெரியவில்லை. பிருத்வி உள்ளே சென்றதும் கீழே குதித்து சென்றிடலாம் என காத்திருந்தாள். ஏனென்றால் மாடியிலே குதிக்க மட்டுமே முடியும் மீண்டும் ஏற முடியாது.. கீழே குதித்து தான் இறங்கவேண்டும். 

பிரஜன் வீட்டுக்குள் அப்படியே செல்லும் போது மேலே உருவம் அசைவது கண்டு திரும்பி நிற்க லத்திகா குதிக்கவும் சரியாக இருந்தது.

                    ‘ அடடா இவன் உள்ளே போகலையா ‘ என மனதில் நினைத்து கொண்டு இருக்க ,
      ” அறிவு இருக்கா உனக்கு? மேலிருந்து குதிக்கும் போது ஸ்கர்ட் போட்டா குதிப்பாங்க ” என்று கேட்ட பின்னரே , ‘சே யோசிக்காம ஏறி குதிச்சு இவன்கிட்ட வாங்கி கட்டிகிட்டேன் என தவறை எண்ணி வருந்த, அவனோ அவள் குதிக்கும் பொழுது முட்டி வரை தூக்கிய கால்களை வாழை தண்டு இருக்க திணறி தான் போனான். பின்னர் நொடியில் சுதாரித்து
       ”நீ என்ன குரங்கா?” என்ற வார்த்தையில் கோவத்தோடு முறைத்து சென்றாள். அவள் கோவத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு ரசித்தவன் மென்னகை உதட்டில் குடிப் புகுந்தது அப்படியே உள்ளே நுழைந்தவனை,
       ”ஹலோ உங்க வீட்ல ஷூ காலோட தான் வீட்டுக்கு உள்ளே போவாங்களா?” என்றாள் லத்திகா.
                                                      அவளை மேலும் கீழும் பார்த்தவன் ஷூ கழட்டி விட்டு, ”ஒய் ஷாக்ஸ் போடலாம் இல்லை” என கேட்க ‘ம்கூம்’ என முனங்கி விட்டு சென்றாள். இதுங்க இரண்டும் ஏற்கனவே கொஞ்சம் முட்டி கொள்ள உள்ளே…. சென்றதும்
       ”வாங்க சார் … வாங்க மேம் … ” என வரவேற்றவளை பவானி-ஜெயரஞ்சன் இருவரும் மாறி மாறி பார்த்து விட்டு ஜீவானந்தத்தை பார்த்தனர்.
       ”லத்திகா என்ன இது?” என்று ஜீவா அதட்டிய பின்னரே ,”சாரி … நான்..” என தடுமாறிய அவளை மேலும் பயத்தை மூட்டாமல் ராஜனே சொன்னார்.
      ”லத்திகா இதுவரை சார் சொன்ன ஓகே. இனி அதுவேண்டாம்மா ” என்றார்.
       ”அத்தை மாமா என்று வாய் நிறைய கூப்பிடு லத்திகா” என்று தன் பங்கிற்கு சொல்லிட தன் தவறை மேலும் தொடராது ”சரிங்க அத்தை” என்றாள்.
                        அவளின் அந்த முறையான அழைப்பு பிருத்விக்கு தான் அதிக சந்தோஷத்தை அளித்தது ஆனால் முகத்தில் பிரதிபலிக்க செய்யாது தவிர்த்தான்.

4 thoughts on “உன்னில் தொலைந்தேன்-11-12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *