💟1
அந்தப் பெரிய ஹாலில் அம்மூவரை தவிர வேறு யாருமில்லை. தன்னை உள்ளுக்குள் இழுத்துக்கொள்ளும் உயர்ரக சோபாவில் இருந்து மூக்கு விடைக்க, காதுகள் சிவக்க, அமர்ந்திருந்தவனின் பொறுமை பறந்தது.
எதிரேயிருந்த அவனது தாய்-தந்தையாரான ஜெயராஜன்-பவானி இருவரும் கூட அதே நிலையில் தான் இருந்தனர். என்ன பவானி மட்டும் சற்றே மிரண்டும் பதட்டத்தோடும் இருப்பதாகபட்டது.
”கடைசியா கேட்கறேன் இப்ப நீங்க எனக்கு சம்மதம் சொல்லப் போறீங்களா? இல்லை நானா என் ஆசை தான் முக்கியம் என்று வீட்டை விட்டு போகட்டுமா?” என்று அழுத்ததிருத்தமாக பேசியவனின் குரல் அந்த ஹாலில் எதிரொலியாய் கேட்டது.
”டேய் பிருத்வி அப்பாவை எதிர்த்து பேசாதடா” என தாய் இதயத்தை தாங்கி பிடித்து கேட்டுக்கொண்ட போதிலும் பிருத்விராஜன் என்கின்ற பிருத்வி மட்டும் அதே நிலையில் இருந்தான்.
”ம்மா இந்த நடிப்பு எல்லாம் வேண்டாம். எனக்கு என் ஆசை கனவு தான் முக்கியம்” கறாராக கூறிட,
”நானும் அதே தான் சொல்றேன். எங்க பேச்சை கேட்டு இருப்பதாக இருந்தால் மட்டும் இரு இல்லையா ஒரே பிள்ளையை இருந்தா கூட பரவாயில்லை வீட்டை விட்டு போடான்னு விட்டுடுவேன்” என்றார் ஜெயராஜன் .
”இப்படி சொல்லி என்னை வீட்டை விட்டு தள்ள முடியாது . இந்த வீடு என் தாத்தா வீடு சோ எனக்கும் சொந்தம். இருந்தாலும்… என் ஆசைக்கு சரின்னு சொல்லும் வரை இந்த வீட்டில் என் காலடிப்படாது” என வீம்புடன் எழுந்து வெளியே செல்ல தாயின் கெஞ்சல் அவனை இளக செய்யவில்லை.
”ஏங்க நீங்களாவது அவன்கிட்ட தன்மையா…” பவானி முடிப்பதற்குள் இடைபுகுந்து,
”நீ இப்படி சொல்லி சொல்லியே தான் நான் தணிஞ்சு போயிட்டேன். இந்த தடவை அப்படி நடக்க விடமாட்டேன்” என அவரும் அதே கோவத்தோடு வெளியே சென்று விட்டார்.
இருவருமே நெஞ்சை தாங்கி பிடித்து சோபாவில் சரிந்த அந்த குணவதியின் நிலையை பார்க்க தவறினர் .
ஒருவாரமாக இதே பிரச்சனை. ஜெயராஜன்-பவானி தம்பதியினருக்கு ஒரே மகன் இந்த பிருத்வி. அவன் சண்டை போடுவது நீங்கள் எதிர் பார்ப்பது போல் ஒரு பெண்ணை மணக்க அல்ல. அவன் கனவுக்காக. அவன் கனவு என்ன என்கின்றீர்களா? அது பெரிய விஷயம் அல்ல தான். அவன் படிப்பு ஆராய்ச்சி துறையை சார்ந்தது. அது கூட அவன் தந்தை பேஷன் டெக்னாலஜியை படிக்க மும்பாய் அனுப்பினால் அதை விடுத்து காடு மலை, தாவரங்களை பற்றி ஆராயும் படிப்பு ஒன்றை படித்துவிட்டு கூலாக சமாதானம் செய்தவன்.
தற்போது ஒரு ஆராய்ச்சிக்கு வில்லியமிற்கு பத்து நபர் கொண்ட குழு தேவை அதில் ஒருவனாக இடம் பெற பூர்த்தி செய்யும் படிவில் எழுத மட்டுமே இந்த சண்டை. வில்லியம் ஆராய்ச்சி துறையில் புகழ் வாய்ந்தவர் என்பதாலும் இவனுக்கு பிடித்த குரு என்பதாலும் போக மல்லுக்கு நிற்கின்றான்.
தன் ஒரே மகனை காட்டிற்கு அனுப்ப பெற்றோருக்கு விருப்பம் இல்லை. அங்கு மகன் இன்னலுக்கு ஆளாகுவான் என்பது பெற்றவர்களின் கூற்று. பிள்ளை அவனோ கனவு மட்டுமே முக்கியம் தனக்கு வாய்க்கும் மனைவி கூட பெற்றோருக்கு பிடித்தால் போதும் என கூறி ஆராய்ச்சி கனவுக்கு உயிர் கொடுக்க துடிப்பவன்.
இவனது பேச்சில் அதிக கவலை அடைந்தாலும் அதனை நிராகரித்து தனது ஆடை விற்பனை புரியும் அலுவலகத்திற்கு சென்றார் ஜெயராஜன்.
அது ஐந்து மாடி கட்டிடம் கீழே கார் பார்க் முதல் தளத்தில் குழந்தைகளின் ஆடை உலகமும், இரண்டாவது தளத்தில் பெண்களின் ஆடை உலகம், மூன்றாவது தளத்தில் ஆண்களின் ஆடை உலகமும், நான்காவது தளத்தில் ஆடை உலகத்தின் தயாரிப்புக்கு கணிப்பொறியின் உதவியுடன் ஆடை வடிவமைப்பை செய்யவும், ஐந்தாம் தளத்தில் அங்கேயே ஆடை வடிவமைக்கும் கருவிகளும் இருந்தன. இதற்கு ஒருவிதத்தில் காரணம் பிருத்வி தான்.
சிறு வயதில் ஒரு முறை அப்பா கடைக்கு வருபவர்கள் எந்த கலரில் இந்த டிசைன் வேணும் அந்த கலரில் அந்த டிசைன் வேணும் என்று சொல்லறாங்க ஏன் நாமளே டிரஸ் கலர் டிசைன் அவங்ககிட்ட கேட்டு கலர் கொடுத்து நம்ம கடையிலே சேல்ஸ் பண்ணினா என்ன? என விளையாட்டை கேட்டு விட்டு விளையாட சென்றதும் ஜெயராஜன் அதை செயல் படுத்திவிட்டார்.
ஆம் சில பெரிய இடங்களில் கணிப்பொறியில் டிசைன் பிடித்து போக அதை எந்த கலரில் ஒப்பிட்டு காட்டி வடிவமைத்து கொடுத்திடும் விதத்தால் இந்த ‘ராஜன் டிரஸ் வேர்ல்ட்’ தனி சிறப்பு பெற்றது. அதனின் உரிமையாளன் பிருத்வி காட்டிற்கு செல்வதா? என பெருமூச்சை விட்டு லிப்டில் நான்காவது தளத்திற்கு சென்று தனது அறையில் அடைந்தார்.
அங்கிருந்த நீரை பருகியபடி தனது மகனுக்கு சரி சொல்லிவிடலாம் தான் இது வெறும் படிவம் பூர்த்தி செய்வதாக மட்டும் என்பதால் ஆனால் விண்ணப்பம் ஏற்று கொள்ள பட்டுவிட்டால் காட்டில் மகன் உணவு சரியாக சாப்பிடுவானா உறங்குவானா என்ற கவலை ஒரு வருடம் தாக்குமே. அதற்கு விடாப்பிடியாக இருப்பதே மேல் என்று மீண்டும் நீரை பருகி முடிக்க கதவு தட்டும் சப்தம் வந்தது.
”மே ஐ கம் இன் சார்?” என்ற குரல் கேட்க ,
”கம் இன்” என்றார்.
எதிரில் லத்திகா நின்றிருந்தாள். அழகும் துணிச்சலும் குறும்பும் குழந்தைத்தனமும் கலந்த கலவை அவள். நம் நாயகி.
”சார் நாளைக்கு என்னை பெண் பார்க்க வர்றாங்க அதனால எனக்கு ரெண்டு மணி நேரம் பர்மிஷன் வேண்டும்”
”ஓ அப்படியா தாராளமா எடுத்துக்கோ மா”
”தேங்க்ஸ் சார். சார் இந்த டிசைன் ஓகே வா-னு பார்த்து சொல்லுங்க . புவனா அக்கா இன்னிக்கு லீவு அவங்க ஒர்க் இது”
”ஓகே மா”
”சார் நீங்க பார்க்காமலே சொல்லறீங்க”
”சாரிமா எனக்கு இப்ப டீடைலா பார்க்க இஷ்டமில்லை. நல்லா இருந்தா நீயே ஓகே பண்ணிடு மனசே சரியில்லை”
”சரி சார்” என கதவருகே சென்றவள் திரும்பி வந்து,
”சார் தப்பா நினைக்களனா நான் ஒன்னு கேட்கவா”
”என்னமா”
”சார் நீங்க இதுவரை அலுவலக விஷயத்தை இப்படி அசாதாரணமா பேச மாட்டீங்களே இன்னிக்கு என்ன ஆச்சு சார்”
”உன்கிட்ட சொல்ல என்னமா, பேமஸ் ரிசர்ச்சர் வில்லியம் தெரியுமா?”
”நல்லாவே தெரியும் சார் . இப்ப கூட அவர் ஏதோ ஒரு ரிசர்ச்காக ஒன் இயர் பாரஸ்ட் போக போறதா கேள்விப்பட்டேன்”
”பரவாயில்லையே உலக விஷயம் தெரிஞ்சு வச்சியிருக்க, அந்த வில்லியம் பத்து பேரை செலக்ட் பண்ண போறதா சொல்லியதுல இருந்து என் மகன் அதுக்கு அப்ளை பண்ண துடிக்கிறான்”
”வாவ் இட்ஸ் ரியலி சூப்பர் சார்”
”நீ வேற மா. அதுக்கு தான் ஒரு வாரமா சண்டை. அவனை மும்பை போய் பேஷன் டெக்னாலஜி படிக்கச் சொன்னா ஆராய்ச்சினு கண்ட கழுதையை படிச்சு உயிரை வாங்கறான். கேட்டா அது தான் கனவு விருப்பம் அப்படி இப்படினு பேசறான். அதான் வீட்ல எனக்கும் அவனுக்கும் முட்டிகிச்சு. பாவம் பவானி எங்க ரெண்டு பேருக்கு நடுவுல மாட்டிகிட்டு தவிக்கிறா”
”சரி அவர் கனவு அதுல தான் என்றால் அவரை அப்ளை செய்யறதுல என்ன தவறு”
”என்னமா இப்படி சொல்லிட்ட, பாலும் நெய்யும் சேர்த்து வளர்த்த ஒரே பிள்ளைமா காட்டுல கல்லு மண்ணுனு அனுப்ப முடியுமா?”
”சார் அதுக்காக அவர் கனவை கைவிட முடியுமா”
”நீ என்ன மா என் மகனுக்கு சப்போர்ட் பண்ற”
”நான் அவருக்கு சப்போர்ட் பண்ணல சார். எங்களை மாதிரி இளஞர்களின் கனவுகளை பெற்றோர்கள் புரிஞ்சுக்குவீங்கனு பேசறேன். நிறைய பேருக்கு கனவு மட்டும் தான் இருக்கு. அதை நிறைவேற்ற பணம் இருக்காது. ஆனா உங்க மகனுக்கு கனவும் இருக்கு அதை நிறைவேற்ற வசதியும் இருக்கு. உங்க மகன் என்ன சில பேர் மாதிரி அப்பா பணத்தை காலி பண்ணவா செய்யறார். நீங்க ஏன் சார் தடை போடறீங்க”
”அங்க நல்ல சாப்பாடு தண்ணி கிடைக்குமா. அதுவும் காட்டுல …”
”உங்க பையனுக்கு வயசு என்ன சார்?”
”போன மாசத்தோட 25 முடியுது இப்ப 26”
”அப்பறம் என்ன சார். 5 வயசு பையனா? அவருக்கு தெரியாததா இல்ல தெரியாமத்தான் அந்த ஜாப்-க்கு அப்ளை பண்றாரா?”
”நீயும் பவானி மாதிரியே பேசற, அவளுக்கும் பிடிக்கலை இருந்தாலும் மனசை கல்லாக்கிட்டு அவனுக்கு ஆதரவா இதைத்தான் பேசினா.”
”ம் .. என்ன இருந்தாலும் மகனை புரிஞ்சுக்கறது அம்மா தான்”(இப்போ வக்கணையா பேசு அவனை பார்த்த பிறகு நல்லா சண்டை போடுமா
”ஆமா அவளுக்கு மகன் என்றால் அவளோ பிரியம். அவளை வேற திட்டிட்டு வந்துட்டேன்”
”அது தான் பிரச்சனை. முதலில் மேடமுக்கு போன் பண்ணி சமாதானம் பண்ணுங்க பாதி ரிலாக்ஸ் ஆகிடுவீங்க. தென் உங்க மகனுக்கு புரியும்படி சொல்லுங்க இல்லை நீங்க புரிஞ்சுக்குங்க”
”அவனுக்கு செவி சாய்கிறேனோ இல்லையோ என் மனைவிகிட்ட பேசி அவளை சமாதானம் செய்யணும்”
”ஓகே சார் அப்ப இந்த டிசைன் பார்த்துட்டு சொல்றேன்”
என சென்ற பின்னர், அவரும் வீட்டிற்கு போன் செய்ய துவங்கினர்.
அது நீண்ட நேரத்திற்கு பிறகு எடுக்கப்பட்டது.
”ஹலோ …”
” …………..”
”ஐயோ … அப்படியா எந்த ஹாஸ்பிடல், உடனே வர்றேன்” என துண்டித்து வேகமாக தனது அறையை விட்டு யாரிடமும் சொல்லாமல் சென்றார்.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
Good start. Waiting for next. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Indha story munnadiyae padichiten ka super ah irukum prithvi lathika❤️… Waiting for next ud…
superb superb
Amazing start of episode
Yedharthamana family ah kanula konduvandhurkeenga.. Ella ammavum indha dilemma la irupanga husband or son nu.. good episode
Super😍😍
Interesting