அத்தியாயம்-12
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
யுகேந்திரன் தாமரை மருத்துவமனை வந்து காணும் போது, அங்கே உமாதேவி வெகு தீவிரமான முகபாவத்தோடு யாரிடமோ தலையாட்டி கொண்டிருந்தார்.
‘அம்மா… டாக்டரிடம் பேசிட்டு இருக்காங்க அவ எங்க?’ என்று அலைப்புறுதலாகப் பார்வையிட்டான்.
“பையன் வந்துட்டான். நீங்க அவனிடம் ஒரு வார்த்தை சொல்லிடுங்க” என்று கூறி யுகேந்திரனை அழைத்தார் உமாதேவி.
அம்மா கையசைக்க டாக்டர் முன் வந்தான்
“நீங்க தான் ஜீவிதாவோட கணவரா? உங்க மனைவிக்குக் கர்ப்பபையில் ரத்த கசிவு உண்டாகியிருக்கு.” என்றதும் யுகேந்திரனுக்கு உள்ளம் எல்லாம் நடுக்கம் கூட, “ஆனாலும் எப்படியோ உங்க குழந்தைக்கு ஆபத்தில்லை” என்றார்.
“டாக்டர் அவனுக்கும் அவ உண்டானது தெரியாது.” என்று இடைப்புகுந்தார் உமாதேவி.
“ஓ.. ஓகே. கங்கிராஜிலேஷன் சார். உங்க மனைவி கன்சீவா இருக்காங்க. கொஞ்சம் பலவீனமா இருக்கங்க. இதுல லைட்டா மயங்கி சரிய, ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கு. ஆனா அவங்க குட்லக், குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் நிகழாம காப்பாற்றப்பட்டிருக்காங்க.
நீங்க கடவுளுக்கு நன்றி சொல்லுங்க” என்று கூறவும் பலவித கலவையான உணர்வில் மிதந்தான்.
“அப்பறம் முக்கியமான விஷயம் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கு இல்லையா. அவங்க ரொம்பப் பலவீனமா இருக்காங்கனு சொன்னேன். அதனால் கண்டிப்பா பெட்ரெஸ்ட் எடுக்கணும். மருந்து மாத்திரையை இவ்ளோ நாள் எடுக்கலை. இப்ப இன்னிக்கு முதல் மருந்து மாத்திரை கரெக்ட் டைமுக்கு எடுத்துக்கணும். ரொம்பக் கஷ்டப்பட்டு வேலை செய்யுறது தவிர்க்கவும். இல்லைன்னா கஷ்டம். மத்தபடி இன்னிக்குச் சிகிச்சை முடிச்சிட்டோம். அவங்க ஓருயிர் இல்லை ஈருயிர்.” என்றார்.
“நான் போய்ப் பார்க்கலாமா” என்று ஆர்வமாய்க் கேட்டான்.
உமாதேவியோ மகனை ஆச்சரியமாய்க் காண, டாக்டர் சிரிப்புடன் தலையாட்டலில் அவன் மனைவியைத் தேடி அறைக்குச் சென்றிருந்தான்.
”ஜீவிதா” என்று அவளது கையைப் பிடித்திட, ஜீவிதாவோ மெதுவாகக் கையை உருவினாள்.
அதைக் கவனத்தில் கொள்ளாதவன் கன்னம் பிடித்து நெற்றியில் முத்தமிட செல்ல, முனுக்கென்ற கண்ணீர் எட்டி பார்த்தது.
“ஏய் கள்ளி… கன்சீவா இருக்க என்கிட்ட சொல்லவேயில்லை? எத்தனை நாள்?” என்று முத்தமிட்டான்.
முத்தத்தைப் பெற்றவள் முகம் திருப்பி, “52 டேஸ்” என்றாள்.
“இத்தனை நாள் மறைச்சிருக்க?” என்றான். அவள் அமைதியாக இருக்க “காலையில் அடிச்சது கோபமா?” என்றான்.
“நான் டேஸ் கவுண்ட் பண்ணலை. எனக்கே தெரியாது. அதனால் தான் சொல்லலை.
நீங்க தான் பழிவாங்க கல்யாணம் பண்ணிருக்கிங்க. என்னை அடிச்சது நீங்க தான். நீங்க தள்ளி விட்டதில் இந்தக் குழந்தை இல்லாம போயிருக்கும். ஏதோ காட் கிரேஸ். இதுக்கும் நான் கோபமா இல்லாம இருந்தா எப்படி?” என்று பேசவும், யுகேந்திரன் இங்கு வரும் முன் போட்ட சண்டை நினைவு வந்தது.
அவன் அடித்த அடியில் சுருண்டு விழுந்தவளிடம் நாலு பக்கம் டயலாக் பேசினானே.
“ஜீவி” என்று சமாதானம் செய்ய முயல, “யுகேந்திரா… பில் பே பண்ணிட்டு வாடா. வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க” என்று வந்தார் உமாதேவி.
“சரிம்மா” என்று ஜீவிதாவை பார்த்து “உன்னை வந்து கவனிக்கறேன்” என்று மெதுவாய் கூறி அகன்றான்.
உமாதேவியோ “இன்னிக்கும் அடிச்சிருக்கானா? ஏன் என்னிடம் சொல்லலை?” என்று கேட்டார்.
“சொன்னா கண்டிப்பிங்க, ஆனா அவருக்கு எங்க அக்காவையும் அப்பாவையும் பிடிக்கலை. உண்மை அது தான்” என்று பேசினாள். யுகேந்திரன் வரும் வரை மாமியார் மருமகள் வாக்கு வாதம் நிகழ்ந்தது.
பின்னர் உமாதேவி மருமகள் நிலையை மனதில் வைத்துப் பேச்சை மாற்றினார்.
ஆஸ்பிடலில் பணம் செலுத்தி முடித்து, யுகேந்திரன் வந்ததும், வீட்டுக்குக் கிளம்பினார்கள்.
வீட்டில் இறங்கியதும் தட்சிணாமூர்த்தி “மெதுவாம்மா” என்று மருமகளை வரவேற்றார்.
“ஏலேய் யுகேந்திரா கைப்பிடிச்சி பதமா கூட்டிட்டு போயா.” என்று கூறி உமாதேவியிடம் “தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் இந்த நல்ல விஷயத்தைப் போன்ல சொல்லிட்டியா?” என்று குதுகலமாகக் கேட்டார்.
“சொல்லிட்டேங்க எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க” என்றார் உமாதேவி.
“நல்லது நல்லது. அப்பறம் வேலைக்காரங்களுக்கு ஒரு மாச சம்பளம் கூடுதலா கொடுத்துடும்மா.” என்று மகிழ்ச்சியை வெவ்வேறு விதமாகக் கூறினார்.
உமாதேவியும் பரபரப்பாய் மாறினார். எப்படியும் ரேகா கதிரவன் தங்கள் வீட்டிற்கு ஜீவிதாவை வர நேரும். அதற்குள் இனிப்பும் காரமும் செய்யப் பொன்னம்மாவிடம் வேலையை ஏவினார்.
தனது அறைக்கு வந்து மெத்தையில் ஜீவிதா அமரவும், அவள் முதுகு சாய, தலையணையை வைத்தான் யுகேந்திரன்.
“என்மேல கோபமா? ஜீவி.. என்னைப் பாரு” என்றான்.
“என்னைப் பழிவாங்க தானே கல்யாணம் பண்ணினிங்க? அது உண்மை தானே? அப்பறம் இப்ப மட்டும் எப்படிக் கனிவா பேசறிங்க. உங்க வாரிசு சுமக்கறேன்னா?
இப்படித் தானே ஆச்சிக்கும் எங்கம்மா நினைவும், எங்கம்மாவுக்கு அக்கா நினைவும் தோன்றும். அப்ப அது தப்பா?
உங்களோட ரத்தம் என்றதும், என்னை அடிச்ச அதே கையால தாங்கறிங்க. அதே உணர்வு தானே மத்தவங்களுக்கு. ப்ளீஸ்… என்னைத் தனியா விடுங்க.” என்று அழுதாள்.
அழுதாளோ, உடல் குலுங்கி, வயிற்றில் அதிர்வு அதிகமானால், அதிகமாக வேலை செய்து உடலை வருத்தினால்.. என்பதெல்லாம் நினைவு வர, “ஏய் இப்ப எதுக்கு அழுவற? அழுது என் குழந்தையை ரத்தமும் சதையுமா வெளியே தள்ளிடலாம்னு நினைச்சியா, நீ இப்ப என்னைப் பழிவாங்கற?” என்றதும் ஜீவிதா அதிர்ந்தாள்.
“வயிற்றில் இருக்கறது எனக்கும் குழந்தை.” என்று கண்ணீரை துடைத்து குரலுயர்த்தினாள்.
“அது மண்டையில நினைவுயிருந்தா இப்படித் தேம்பி தேம்பி அழமாட்ட” என்றான்.
கண்ணீரை சேலை முந்தானையால் துடைத்தாள்.
யுகேந்திரனோ ‘கடவுளே… இவளிடம் எப்படித் தான் பேசித் தொலைக்கறதுன்னு சத்தியமா தெரியலை.
இப்ப அடிச்சதுக்கு மன்னிப்பும் கேட்க முடியாது. குழந்தைக்காக மன்னிப்பு கேட்கறியான்னு கேட்பா.
நம்ம ஈகோ தூக்கிப்போட்டு கால்ல விழுந்தாலும் நம்ப மாட்டா.
முதல்ல உடம்பை கவனிக்கட்டும். பிறகு என் மனசை சொல்லிப்போம். எங்கப் போகப் போறா? ஆணித்தரமா எனக்கே எனக்கா வாழ வந்துட்டா.’ என்று ஆனந்தமாய்த் தான் தந்தையாகப் போகும் சந்தோஷத்தோடு உலாத்தினான்.
ஜெகன் போன் போட, அவனிடம் தந்தையான விஷயத்தைத் தெரிவித்தான்.
“பார்டா அவ மேல கோபம் கோபமா வருதுன்னு சொல்லிட்டு திரிஞ்ச, இப்ப மனைவி உண்டாயிருக்கான்னு குழைஞ்சுட்டு சொல்லற.
டேய் கில்லாடி… அப்ப அவளைப் பிடிச்சு தானே கல்யாணம் பண்ணிருக்க? நான் கூடக் கன்னத்துல அறைக்கொடுத்து வீக்கம் வந்துடுச்சு. விருந்துக்கு எல்லாம் வந்தா நல்லாயிருக்காதுடான்னு சொன்ன.
அதுக்குப் பிறகாவது விருந்துக்கு வாடான்னு கூப்பிட்டா.. எங்களுக்குள் நல்ல அன்டர்ஸ்டாண்டிங் வரட்டும்டானு காரணம் சொன்ன. ஏலேய்… இதுக்கு மட்டும் அன்டர்ஸ்டாண்டிங் எப்படில்ல?” என்று நண்பனை ஓட்டவும், யுகேந்திரன் முறுவலோடு, “நேர்ல சொல்லறேன்டா. மாமா அத்தை வந்துட்டாங்க” என்று திரும்ப அழைப்பதாகத் தெரிவித்தான்.
ஜெகனும் ‘சரிசரி’ என்று துண்டித்துக் கொண்டான்.
கதிரவன் ரேகா இருவருக்கும் சந்தோஷம் தாளாமல் அடியெடுத்து வைத்தனர்.
கண்களால் மகளைத் தேடினார்கள்.
“பெட் ரெஸ்ட்ல இருக்கணும்னு சொன்னதாலயும், இப்ப களைச்சி போனதாலயும் உள்ள இருக்கா அத்தை” என்றான் யுகேந்திரன்.
“நீங்க போய்ப் பாருங்க” என்று சுட்டிக்காட்ட, மகளது அறைக்கு ஓடினார்கள்.
மெத்தையில் யுகேந்திரன் முதுகுக்குத் தலையணை கொடுத்திருக்க அதில் சாய்ந்தவள் இமை மூடி இருந்தாள். அன்னை குரலும் தந்தையும் வர, எழ முற்பட்டாள்.
“படுத்துக்கோ. ஏதோ ஹாஸ்பிடல் எல்லாம் போனதா அண்ணி சொன்னாங்க. கொஞ்சம் கவனமா இருக்கக்கூடாது.” என்று மகளின் தலையில் கைவைக்க, பொசுக்கென்று தாய் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள் ஜீவிதா.
கதிரவனோ “நல்லாயிருக்கியான்னு கேட்க கூடாது. ராணி மாதிரி பார்த்துக்கற இடம். நம்ம வீட்ல கூட உங்க அம்மா ரேகா வந்து கஷ்டப்பட்டா. ஆனா நீ இங்க அப்படி எந்தக் கஷ்டமும் படவேண்டியதில்லை. ரொம்பச் சந்தோஷமா இருக்கு. இனியாவது உங்க மூத்த பொண்ணு இங்க வந்துட்டாளாமேனு கேட்கறதுக்குப் பதிலா, உங்க இளைய மக உண்டாயிருக்கா? கேட்டு சந்தோஷமா மாத்துவாங்க. கடவுளுக்கு நன்றி சொல்லணும்.” என்று பேசிக்கொண்டே சென்றார்.
ஜீவிதாவுக்கு மருத்துவமனை செல்லும் முன் யுகேந்திரன் பேசியதும், தந்தை தற்போது பேசியதும் வைத்து, தந்தை சுற்றத்தாரால், நட்புக்களால் மனம் உடைந்து இருப்பதாகப் புரிந்தது.
ஆனால் இந்த நிலையில் அவரிடம் கேக்கவில்லை. அதோடு அவளுக்குக் கர்ப்பம் தரித்த சிம்டம்ஸ் எதுவும் தெரியாததால் அதைப் பற்றிக் கேட்க முடிவெடுத்தாள். “அம்மா... அசதியா இருக்கு. எனக்கு வாமிட்டே வரலை நான் கன்சீவா இருப்பதே தெரியலை. கர்ப்பமா இருந்தா இதெல்லாம் தெரியும் தானே?” என்று சந்தேகத்தைக் கூறினாள்.
“மசக்கைன்னா வாந்தி எடுக்கணும்னு அவசியமில்லை ஜீவிதா. ஒவ்வொருத்தருக்கு ஒரு மாதிரி சிம்டம்ஸ் இருக்கும். சிலருக்கு எப்பவும் போல இருப்பாங்க.” என்று கூறவும் ஜீவிதாவுக்கு அப்படித் தான் தன் உடல் அமைப்போ? என்று தேற்றிக்கொண்டாள்.
இத்தனை நாட்கள் வாந்தி இல்லை, தலைசுத்தல் இல்லை.. நான் நிஜமா கன்சீவா ஆகியிருக்கேன்னா? என்ற அச்சம் சூழ்ந்தது. ஏனெனில் யுகேந்திரன் அதிகமாகவே குழந்தையை எதிர்பார்த்து விட்டானே. இனி அப்படி இல்லை என்றால் அவர் இதயம் வாடுவாரே என்று அவனுக்காக யோசித்தாள்.
என்ன தான் டாக்டரிடம் கேட்டாலும் அம்மாவிடம் கேட்டுத் தெளிவுப் பெறுவது ஒரு சுகம்.
இதைச் சாப்பிடு, இதைத் தவிர்த்திடு. அதிகம் அலைச்சலோ, வேலையோ செய்யாதே என்று அறிவுரைகள் அள்ளி வீசப்பட, படுத்துக்கொண்டு கேட்டாள்.
நெய் மணக்க கேசரி, பாசி பருப்பு வெள்ளம் போட்டுப் பாயாசம் என்று தட்டில் பொன்னம்மா கொண்டு வர, உமாதேவி எடுத்துக்கக் கூறினார்.
மருமகளுக்கு அவர் கையால் கொடுக்க, ஜீவிதா குடித்து முடிந்து, “அ..அவர் எங்க அத்தை?” என்று விசாரித்தாள்.
தாய் தந்தை வந்ததும் வெளியே சென்று விட்டாரா? என்று அறிய கேட்டாள்.
ஏனெனில் இப்பொழுது கணவன் மனைவி முட்டி கொள்வதாகச் சண்டையிட்டனரே. அந்தப் பயம்.
தன் பெற்றோரிடம் அந்தக் கோபத்தைக் காட்டினால்… அப்படிச் செய்யும் ஆள் தான் யுகேந்திரன்.
“உன் புருஷன் வெளியே தான் போன் பேசிட்டு இருந்தான். கூப்பிடட்டா?” என்றதும் “வேண்டாம் அத்தை.” என்று அவசரமாய் மறுத்தாள்.
“அவன் பிரெண்ட் கூடப் பேசிட்டு இருக்கான். அப்படியே ஹாஸ்பிடல் வந்துட்டான்லயா. அதனால மத்த வேலையைப் பார்க்க பேசிட்டு இருப்பான். எப்படியும் இன்னிக்கு உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டான்.” என்று கூறவும் ஜீவிதாவுக்கு ஏன் கேட்டோம் என்றானது.
என்னவோ அவனைக் காதலித்து… அவன் பிடியில்… அவன் நெஞ்சில்… அவன் கைக்குள்ளே… இருக்க ஆசைப்படுவதாக அல்லவா பேசுகின்றார்.
மனமோ அதெல்லாம் நடந்தால் நன்றாகத் தான் இருக்கும். யுகேந்திரன் நெஞ்சில் சாய்ந்து கொண்டால், யுகங்கள் மாறினாலும் தெரியாது. அந்தளவு அங்கே இதம் உணரலாம்.
மனமானது அவனுக்காக ஏங்கும் ஏக்கத்தை வெளிப்படுத்த, குழந்தையைச் சுமக்க தயாரானவள், மனதில் அவனைச் சுமப்பதை அந்த நொடி புரிந்தது.
இந்த அசம்பாவிதம் எப்படி? அவனைத் தன்மனம் நாடுகிறதா?
தன்னிடம் திருமணத்திற்குச் சம்மதம் வாங்கிய போன் உரையாடல் முதல், தாலி கயிறு கட்டும் பொழுதும், ஏன் கருவுண்டாகி இருப்பதை அறிவதற்கு முன் காலை வரை நடந்த சண்டையிலும் கூட அவன் தன்னை வருத்தம் அடைய வைத்தாலும், அவனைக் காதலிக்கின்றதா?
அவனுக்காக மனம் உருகுகின்றதா? இந்த உடலும் மனமும் அவனை மட்டும் நாடுவது இப்பொழுது தான் தெரிகின்றதா? அவன் உன்மேனியை தீண்டாமல் தள்ளி படுத்த போது வெட்கம் கெட்டு வாய் திறந்தாயே?! உன்னை அள்ளி அணைக்கக் கூறி….. அப்பொழுது அறியவில்லையா?! கடமை என்று நீயாகப் பூசி மொழுகி பதில் தந்தாயே… மஞ்சள் கயிறு மகிமை கடமையாகத் தாம்பத்தியம் நடைபெறுவதென்று அல்லவா இத்தனை நாள் தோன்றியது. இந்தப் பந்தம் இதயத்தைத் தாக்கியுள்ளதே.
இதைக் காதல் என்று கூறி அவனிடம் மனதை திறந்தால் அதற்கும் குத்திக்காட்டுவானோ?! என்று பல்வேறு குழப்பத்தைச் சுமக்க, உமாதேவி கூறி யுகேந்திரன் ஜீவிதாவை பார்க்க வந்தான்.
நாசூக்காய் கதிரவன் ரேகா எழுந்து வெளியேறினர்.
“என்னைத் தேடினியா?” என்று மூச்சு வாங்க வந்து நிற்க, இல்லையென்றோ ஆமென்றோ கூற முடியாது தவித்தாள்.
-தொடரும்.

nice!!!
Super super. Sema twist. Yogi u should change now for ur wife and baby. Intresting sis.
Ethunga rendum pesarathukulla adutha prachanai vanthurum
உயிரில் உறைந்தவள் நீயடி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 12)
ஆமாண்டா, உன்னைத் தேடினாள் தான், இத்தனை நாளா நீ அடிச்சே, குத்தி காட்டி குதர்க்கமா பேசினத்தானே..? இனி அவ அதையெல்லாம் திருப்பி உனக்கு செய்யப்போறாள், அவளால முடியாகாட்டியும்
அவ பையனை, இல்லை பொண்ணை வைச்சு அடிச்சு வாயை உடைக்கப் போறா, ரெடியா இரு.
😀😀😀
CRVS (or) CRVS 2797
ithu than purushan pondati kulla irukka understanding love evlo tha kasta paduthinalum rendu per manasulaum love oruthar mela oruthar ku atha thedura