Skip to content
Home » உயிர் உருவியது யாரோ-6

உயிர் உருவியது யாரோ-6

யாரோ-6

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

     சந்தானகிருஷ்ணனுக்கு உயிரே நின்று துடித்தது. மற்றவர்கள் பதட்டமும் திகிலும் அடைந்தனர். ஆனால் சைராவால் நற்பவி குழம்பி போனாள்.

      ஷ்யாம் அறைக்கு சென்று அதன் பின் இங்கு வந்தது அவளுக்கு குழப்பத்தை கொடுத்தது.

   அதுவும் தோட்டத்தோடு சுத்தி சுத்தி இருந்ததே தவிர யாரையும் குறிப்பிட்டு காட்டி குலைக்கவில்லை.

      நேரம் போகவும் ஞானவேலோ, இகழ்ச்சியாய் சிரித்து “ஏற்கனவே ஒரு பொண்ணு இங்க வந்து இன்ஸ்பெக்டரா இருக்கறதே சிரிக்கிற மாதிரி தான் இருக்கு. இதுல நாய் வேற.” என்று திவாகரிடம் நற்பவி காதருகே கூறி சென்றான்.

     “என்னம்மா ஏதாவது தடயம் கிடைச்சுதா?” என்ற எள்ளலோடு சந்தானம் கேட்க, யாசத் வேறு அதெப்படியா கிடைக்கும் எதாவது இங்க இருந்தா தானே?” என்று கூறவும் நற்பவியோ சைராவை அணைத்து கொண்டு அவள் வண்டியின் திசைக்கு சென்றாள்.

    அவள் மௌனம் கண்டு கூடுதலாக அங்கிருந்த சில தொண்டர்கள் சிரிக்க துவங்கினார்கள்.

     எதையும் செவிக்கு எடுத்து செல்லவில்லை.

   வாசுவோ நற்பவியை இரண்டு மூன்று முறை வேடிக்கை பார்த்து சாலையில் கண் பதித்தார்.

        ஸ்டேஷன் வந்த நேரம் ஒரு ஆண் தன் மனைவியை காணவில்லையென புகார் கொடுத்திருந்தான்.

      அதனை வாங்கி படித்தவள் “இரண்டு நாளா காணோம். இப்ப வந்து புகார் தர்றீங்க?” என்று கேட்டாள் நற்பவி.

     “எப்பவும் சண்டை போட்டா ஆத்தா வீட்டுக்கு போவா மேடம். இந்த முறை போன் போட்டு விசாரிச்சிட்டேன். அவ அங்க வரலையாம். அவங்க என் பொண்ணை என்ன பண்ணினனு கேட்டு என் மேல கேஸ் போடுவாங்களாம். அதனால தான் சரி எங்க போனானு எனக்கும் தெரியலை. ஒரு கேஸ் கொடுத்து அவளை கண்டு பிடிச்சி தாங்க.” என்று கேட்டான்.

     “ஏன்யா அவங்க கேஸ் போடறதுக்குள்ள நீ போட்டு நழவ பார்க்கற?” என்று கேட்டாள்.

     அவன் திருதிருவென விழிக்க, திவாகர் கேஸ் பைல் பண்ணிட்டிங்களா?” என்று கேட்க அவர் “எஸ் மேடம்” என்று கூறினார்.

     “உங்க பேர் என்ன?” என்று கேட்டதும் “சுரேஷ் மேடம்” என்றான்.

     “வீட்டுக்கு போங்க கண்டுபிடிச்சு கூட்டிட்டு வர்றேன்” என்றாள் சாவதனமாக. 

     “கழுத்துலயே நாலு மிதி மிதிச்சு இனி ஓடுறாளானு கேட்கணும். நன்றி மேடம்” என்று சென்றான் சுரேஷ் என்பவன்.
 
     “பெண் போலீஸ் முன்னாடியே இப்படி பேசறான். இவனெல்லாம்…. எந்த லிஸ்டோ.” என்று நேரத்தை பார்க்க மணி எட்டை தொட்டது.

    ஷிப்ட் நேர காவலர்கள் மாறி வரும் நேரம் இன்னும் இங்கியிருக்க இயலாது என்று “வாசுண்ணா வீட்டுக்கு நானே ஸ்கூட்டில போயிடுவேன். நீங்க வீட்டுக்கு போங்க” என்று கூறிவிட்டு சைராவை முன்னே அமர வைத்து வண்டியை உயிர்பித்து சென்றாள்.

     “ஏன்யா அந்த பொண்ணு தனியா இருக்கே பயந்து ஊரோட ஒட்டி வீடு கேட்கலை.” என்று ஞானவேல் கேட்க வாசு என்பவரோ “அதெல்லாம் அந்த மேடம் வேண்டாம்னு சொல்லிடுச்சு சார்” என்று கிளம்பினார்.

    ஞானவேலின் பார்வை ஒரு தினுசாக நற்பவி சென்ற வழியையே நோட்டமிட்டது.

   வீட்டில் நற்பவி வந்த நேரம் சோர்வாய் கதவை திறந்தாள்.

   “சைரா… இது தான் நம்ம வீடு. என்னடா தனியா இருக்காளேனு பார்க்கறியா… தனியா இருக்கறதால தான் அக்கா உன்னை எனக்கு கிப்டா அனுப்பிட்டா. இங்க அப்பா, அக்கா, மாமா இவங்களுக்கு பதில் ஒரே நண்பனா நீ இருக்க போற.
  
     ஆமா கேட்கணும் நினைச்சேன். என்னாச்சு சைரா… குழப்பி விட்டுட்ட, ஷ்யாம் ரூமுக்கு போன, பிறகு அங்கிருந்து நேரா சந்தானகிருஷ்ணன் வீட்டு தோட்டத்துக்கு போன. குற்றவாளிக்கு நேரம் நல்லாயிருக்கு போல உன்னால கண்டு பிடிக்க முடியலையா?” என்று கொஞ்சி கேட்டாள்.

     அதுவோ குலைத்தது “சரி சரி கூல் சைரா. எனக்கு புரிஞ்சுக்க தெரியலை சரியா” என்றதும் ஆம் என்பது போல வாலை ஆட்டியது.

    “ம்ம்… அப்ப இரண்டு பக்கமும் கண்ணு வச்சிக்கறேன். சரி சைரா நான் குளிக்க போறேன். நீ இங்க இரு. எவனாவது வந்தா அங்க இங்க அசைய விடாம உட்கார வைக்கிற ஓகே வா. லவ் யூ” என்று முத்தமிட்டு சென்றாள்.

    பதினைந்து நிமிடம் குளித்து விட்டு நேற்று போலவே உடையை உலர வைக்க உதறினாள்.
 
     “ஏங்க.. என்னங்க… மேடம்… என்னங்க… அய்யோ… நற்பவி” என்று மதிமாறன் அலறல் கேட்க ஓடிவந்தாள்.

     கண்களை இறுக மூடி மதிமாறன் ஓரமாய் அமர்ந்திருக்க பற்கள் கூர்காட்டி சைரா அவனருகே நின்றது.

    நற்பவியோ கலகலவென சிரித்தவள் “சைரா லீவ் இட்” என்று கூற, ஓடி வந்து அவளருகே தாவியது.

      “என்னங்க இது இப்படி பச்சை மண்ணை பயமுறுத்த இப்படி பண்ணறிங்க. நானே கடையடைக்கும் முன்ன சூட உணவை கொண்டு வந்து கொடுக்க வந்தா இப்படி தான் பலமான வரவேற்பா? நேத்து பார்க்கலையே இவங்களை?” என்று வந்தான் மதிமாறன்.
 
      “இன்னிக்கு காலையில் தான் வந்து கொடுத்தாங்க. வாங்க உட்காருங்க.” என்றாள்.

   மதிமாறன் தயங்கியபடி நாயை பார்க்க, “மாறன் சைரா ஒன்னும் பண்ண மாட்டா. நான் கமண்ட் கொடுக்கிற வரை குட்டி பப்பியாட்டும் இருக்கும்.” என்றதும் மதிமாறன் நம்பாமல் அதனை கூர்ந்து நோக்கினான். கண்கள் மார்பல்ஸ் போல மின்னியதை கண்டவனுக்கு பயபந்து வந்தது.

     “ஏங்க மசாலா தோசையும் காரசட்னியும் இன்னிக்கு ஸ்பெஷல் அதனால சூடா கொண்டு வந்தேன். பிடிங்க. நான் கிளம்பறேன்.” என்று செல்வதில் துடிக்க, “பச் உட்காருங்க மாறன். கடையில ஆள் இருக்கார் தானே. நான் வேலைக்கு கேட்ட ஆள் எங்க?” என்று கேட்டாள்.

     “அதுவா மேம். ஒரு பொண்ணு இருக்கு. ஆனா அது வீட்டை விட்டு ஓடி வந்துடுச்சு போல. சாந்திக்கா வீட்ல உட்கார்ந்து ஓனு அழுவது. நாளைக்கு கூட்டிட்டு வர்றேன். அநேகமா வீட்டோட கூட தங்கி உங்களுக்கு ஒரு துணையா இருக்கும்” என்று கூற, “ஓ.. சூப்பர். பார்ப்போம். அப்பறம் மாறன் டெய்லி மதியம் பிரியாணி பார்சல் நைட் பாயா அது மாதிரி நான்வேஜ் சைராவுக்கு பார்சல் வேண்டும். எனக்கு வெஜிடேறியன் தான்.” என்று ஆர்டர் தந்தாள்.

     “மேடம் உங்களை பார்த்தா அதிசயமா இருக்கு. நாயுக்கு நான்வெஜ். நீங்க வெஜிடேரியன்” என்று சிரித்தான்.

     “அது அப்படி தான். ஆமா சைரா மிரட்டினப்ப நற்பவினு கத்தினிங்க. இனி மேடம் வேண்டாம். கீ.. கீ ” என்று நாசுக்காய் பிற்பாதியை தவிர்த்தாள்.

      “சரி நற்பவி” என்று புறப்பட்டான், வாசல் வரை சென்றப்பின்  “நல்ல வேளை ‘கீதா கோவிந்தம்’ படம் மாதிரி மேடம் மேடம்னு சொல்லறிங்கனு சொல்ல பார்த்தேன். அப்பறம் என்னவோ நாயகி நாயகன்னு நினைப்புல சுத்தறதா தப்பா நினைச்சிடுவார்.

    நைஸ் மேன்” என்று சைராவை அழைத்து கொண்டு அறைக்குள் சென்றாள்.

      ஸ்கூட்டியில் சைராவுக்கு இருந்த சில பிஸ்கேட்டை அதற்கு கொடுத்தாள்.
    தனியாக அதற்கு பிளேட் தண்ணீர் ஊற்றினாள்.
   
      விளக்குகள் அணைக்கப்பட்டு உறங்க சென்றாள்.

       இரவு மெத்தையில் படுத்து விட்டத்தை நோக்கி “ஷ்யாம் ரூம் எதுக்கு அப்படி கலைந்து இருக்கணும். ஏதாவது அங்க நடந்திருக்குமா? இந்த சைரா ஏன் சந்தானகிருஷ்ணன் தோட்டம் வரை போச்சு? இதுவரை ஷ்யாம் தான் சந்தேகப்படும் படியா சந்தானகிருஷ்ணன் மேலேயே பழி சுமத்தினான். ஆனா இன்னிக்கு சைரா தோட்டம் வரை போகுதுனா அப்ப ஏதோ தவறு அவர் செய்துயிருக்கார். தவறுன்னா… அது கொலை தானா? அப்ப ஷ்யாம் சந்தேகப்பட்ட படி அவர் தானா? அப்படி சந்தானம் தான் கொலை செய்ய சொனனாரென்றால் யார் கொலையை செய்துயிருப்பா?” என்றவள் யோசித்து முடிக்க நாளைக்கு ஷ்யாமை விசாரிக்கணும் முடிஞ்சா அவர் விரும்பற பொண்ணும் அவரோட அப்பாவையும் விசாரிக்கணும்.’ என்று கூறிவிட்டு உறங்கினாள்.

    ஞானவேலோ ஷ்யாமிடம் “ஷ்யாம் அவசரப்படாதே இப்ப ஆளை அனுப்பின நீ தான் அவளை துரத்த அனுப்பியது தெரிஞ்சுடும். அவ கொண்டு வந்த நாய் சந்தானம் தோட்டம் வரை போச்சு. அதனால எப்படியும் அவளோட சந்தேகம் அந்த பக்கம் முழுமையா திரும்பலாம். அதனால நீ எதுவும் நடுவுல பண்ணாதே.

    நான் சொல்லறப்ப எதுவும் செய். வந்து இரண்டு நாளாகுது. இவளெல்லாம் வில்லியா நினைப்பியா. போ… போய் சௌந்தர்யாவிடம் பேசு. நீ உங்கப்பா இறந்ததிலருந்து பேசலைனு அந்த பொண்ணு அழுவறதா அவங்க அப்பா மாணிக்கவிநாயகம் பலதடவை சொன்னார்.

     ஓரெட்டு துஷ்டி கேட்க கூட வர கிளம்பிட்டார். நான் தான் அந்த போலீஸ் பொண்ணு கண்ணுலபட வேண்டாமேனு சொன்னேன். இப்ப அதுக்கு உன் லவ் நல்லவே தெரியுது.” என்று குறைப்பட்டான்.
 
    ஷ்யாமோ புகைவண்டியாக புகையை இழுத்து விட்டு போனில் “உனக்காக பார்க்கறேன் ஞானவேல் இல்லை அவளை இன்னிக்கு பெட்டில பார்சல் பண்ணிருப்பேன்.” என்று கத்த, நட்சத்திரங்கள் அவனின் ஆவேச பேச்சில் மேகத்தோடு ஒளிந்தது.

யாரோ தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
  

1 thought on “உயிர் உருவியது யாரோ-6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *