Skip to content
Home » உயிர் உருவியது யாரோ-9

உயிர் உருவியது யாரோ-9

யாரோ-9

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

    இமை மூடி மயக்கத்தில் இருந்த நற்பவி கூட உறங்கியிருப்பாள். ஆனால் அவளை தூக்கி மெத்தையில் கிடத்தி, டாக்டர் வந்து மருந்து செலுத்தி சென்றப்பின் துளி உறக்கமும் இன்றி தவித்து கொண்டிருந்தான் மதிமாறன்.

      நள்ளிரவு மூன்று மணிக்கு நற்பவி இமை திறக்க மதிமாறன் ஒரு சேரில் கட்டிலருகே அமர்ந்திருப்பதை கண்டாள்.

     நேரத்தை பார்க்க மூன்று என்றதும், சைரா குரைத்த போது மணி பன்னிரெண்டு பத்து என்று காட்டியதை நினைவு கூர்ந்தாள்.

     ‘ஓ மை காட் இவ்ளோ நேரம் ஆச்சா. அவனுங்க எங்க போயிருப்பாங்கனு தெரியலையே. சைரா.. சைராவுக்கு என்னாகியிருக்கும்” என்று எழுந்தாள்.

    அவளின் அசைவை கண்டு மதிமாறன் இமை திறந்தவன், “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறியா. உயிர் போய் உயிர் வந்துடுச்சு.” என்று அதட்டினான்.

    “மாறன் சைரா..?” என்று கேட்க, அது கிணற்று பக்கத்துல கல்கிட்ட இருந்தது. இப்ப அதோட இடத்துல மயங்கிட்டு தூங்குது. அதுக்கு மயக்க ஸ்பிரே அடிச்சிருக்காங்க. டாக்டரிடம் கேட்டுட்டேன் பயப்பட வேண்டாம்.” என்றான்.

       “தப்பிச்சிட்டாங்களா?” என்று கேட்டாள். ஆம் என்பதாய் கூறவும் நற்பவி “பச் மிஸ் பண்ணிட்டேன்.” என்று கவலைக் கொண்டாள்.

     “சில வேலை எல்லாம் பெண்களை தடுக்கறது அவளோட உயிரை விட மானத்துக்கு இழுக்கு நேர்ந்திடுமோனு பயந்து தான். நான் வரலை அவங்க உன்னை என்னை செய்து இருப்பாங்க தெரியுமா?” என்று கோபமாக கேட்டான்.

    “நான் மயங்கியிருந்தா கெடுத்து இருப்பாங்க. பிறகு சாகடிச்சியிருப்பாங்க. அவ்ளோ தானே. இந்த கற்பு என்பதும் ஒழுக்கம் என்பதும் பெண்ணுக்கு தான்.

   பட் எங்கப்பா அப்படி வளர்க்கலை. மானம், கௌரவம் கற்புல பூட்டி வைக்கலை. என்னோட செய்கையில தான். என் செய்கை ஒழுக்கமா நியாயமா தான் இருக்கு. கெடுத்து கொண்ணா அடுத்து அவங்களுக்கு தான் பெரிய ஆப்பு. பிகாஸ் என்னை சீண்டினா யாரும் வரமாட்டாங்கனு மிதப்புல இருப்பாங்க. பட் சென்னை கமிஷனர் தர்ஷன் சார் வந்து நிற்பார்.” என்று ஜம்பமாய் கூறினாள். தந்தை நண்பர் என்ற பெருமையில் கூறினாள்.

     “என்னயிருந்தாலும் ரிஸ்க் நான் கிளம்பறேன்” என்றான்.

     “ஹலோ மாறன். உட்காருங்க அர்த்த ராத்திரி எங்க போவீங்க.” என்று சேரை நகர்த்தினாள்.

    “இல்லை உங்களோட தனியா?” என்று விழித்தான்.

    “மாறன் கண் முழிக்கலைனா இங்க தானே இருந்துயிருப்பிங்க?” என்றதும் “ஆமாம் ஆனா அது வேற.. இது வேற… அது உதவி… இது… இப்படினா ஊர்காரங்க பார்த்தா அசிங்கமா தப்பா பேசுவாங்க” என்று மறுத்தான்.

    “தப்பா பேசறவன் நல்லவனா இருக்க மாட்டான் மாறன். யோக்கியமா நடிக்கிறவன் தான் புரளியா பேசி கதை திரிப்பான். நல்லவன் அவன் உண்டு அவன் வேலையுண்டுனு இருப்பான். இந்த கெட்ட எண்ணம் பிடிச்சவங்க தான் அவங்க இப்படி இவங்க இப்படி என்று ஏதாவது குறைகளை சொல்லிட்டு திரிவாங்க. அவர்களிடம் யாராலும் நல்ல பெயர் எடுக்க முடியாது.” என்றாள்.

    மாறனோ அமைதியாக இருக்கையில் அமர்ந்தான்.

    “தூக்கமும் இனி வராது. உங்களை பற்றி சொல்லுங்க மாறன்.” என்று ஊக்குவித்தாள்.

     “என்னத்தங்க சொல்லறது. என்னை எங்க அக்கா மாமா தான் வளர்த்தாங்க. எனக்கு சின்னதுல இருந்து அம்மா மாதிரி சமையல் நல்லா வரும்னு அக்கா சொல்வா. அதனால ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கறதா சொன்னதும் படிக்க வச்சாங்க.  

     இது மாமா ஊரு. ஒரு பங்ஷன் வந்தேன் இந்த ஊர் பிடிக்கவும் இங்கயே இருந்திட முடிவெடுத்தேன்.
 
     இரண்டு வருடமாகுது பிஸினஸ் செட்டாகிடுச்சு, நல்ல வருமானம், சின்ன காதுகுத்துல இருந்து பெரிய பெரிய கல்யாணம் வரை கூட உணவு மெனு சொல்லறாங்க.

      பெரும்பாலும் ஆள் வச்சி செய்தாலும் புட் பெஸ்டா நிறைவா தந்துடுவேன்.” என்று கூறினான்.

      “ம்ம் அப்ப குயிக்கா 5 ஸ்டார் ஹோட்டல் திறந்திடுவிங்க” என்று கேலி செய்தாள்.

    “ஏன்…. இல்லை ஏன்னு கேட்கறேன். இங்க இருக்கற குடும்பம் எல்லாம் தினமும் பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட வருவாங்களா?

    ஏதோ முன்னேறுவேன் வீடு வாசல் வாங்கிடுவேன். முடிஞ்சா கார் வாங்கலாம். கடையை விரிவுப்படுத்தலாம்.” என்றான் மதிமாறன்.

      “கல்யாணம் பண்ணலாம் இதை விட்டுட்டிங்க.” என்று கேட்டதும் “ம்ம்.. பொண்ணு பார்த்துட்டு இருக்கேன்.” என்றவனின் பேச்சு உடனே நிசப்தத்தை கொடுத்தது.

     மதிமாறன் இரண்டு மூன்று முறை நற்பவி கண்களை சந்திக்க முயன்றான். நாசுக்காய் நற்பவி அதனை தவிர்க்க செய்தாள்.

    “எப்ப பாரு மத்தவங்களிடம் தான் உங்க விசாரணை. இப்ப உங்களை பத்தி சொல்லுங்க. கேட்கறேன்… பொழுது போகணுமே” என்றான்.
 
     நற்பவி மென்னகை சிந்தி “அதான் அன்னிக்கே சொன்னேனே.” என்றாள்.

       “ம்ம்.. சொன்னிங்க சொன்னிங்க.  அப்பா அக்கா மாமா என்று, ஆமா எங்கயிருக்காங்க? உங்க அப்பாவுக்கு இருந்தாலும் தைரியமுங்க. தனியா விட்டுட்டு எப்படியிருக்கார்.” என்று வியந்தான்.

     “அதுக்கு காரணம் அக்கா. எங்க அக்கா ஒரு எக்ஸ் போலீஸ். இப்ப வேலையில் இல்லை. எங்க மாமாவை காப்பாத்த போய் கண்ணு கொஞ்சம் பாதிச்சிடுச்சு. அதனால போலீஸ் வேலைக்கு டிஸ்குவலிபிகேஷன் ஆகிட்டா.

  அவளோட கனவு அவளோட வளர்ப்பு தான் நான். அதனால அப்பாவுக்கு தனி பெருமை தான்.

   இன்னொன்னு எங்கப்பா ஒரு ரைட்டர். மூன்று வருடத்துக்கு முன்ன ‘சின்ன வெண்ணிலா’ என்ற கதைக்கு சாகித்ய அகாடமி விருது வாங்கினாரே அவர் தான்.” என்று இம்முறையும் கண்ணில் பெருமை வழிந்தது.
 
     “நன்விழி..? பொண்ணு பெயர்ல? புனைப்பெயரா எழுயியிருந்தாரே.?” என்று மதிமாறன் கேட்டதும் “எக்ஸாக்ட்லி அவரே தான். அக்கா பெயரை புனைப்பெயரா வைத்து எழுதினார்” என்றதும் மதிமாறன் அங்கும் இங்கும் எதையோ தேடினான்.

    “என்ன தேடறிங்க?” என்று நற்பவி ஆவலாய் கேட்டாள்.

    “ஆட்டோகிராப்ங்க… நன்விழி என்றால் அந்த ஆக்டர் ப்ரனிதை திருமணம் செய்தவங்க. அவங்க தங்கை. ஒரு சாகித்ய அகாடமி விருது வாங்கினவரோட பொண்ணு.

    நீங்க அநியாயத்துக்கு சிம்பிளா இருக்கிங்க.” என்று ஆச்சரியமாய் பேசினான்.

     “இதோடா… இவ்ளோ நேரம் ஒரு பொண்ணு போலீஸா வந்திருக்காளேனு ஆட்டோகிராப் வாங்கலை. பட் ஒரு எழுத்தாளரோட பொண்ணு, நடிகனோட கொழுந்தியா? என்றதும் பேனாவை தேடறிங்க. நல்லா தான் இருக்கு காலம். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உயிரை துச்சமா மதிச்சி சர்வீஸ் பண்ணற நாங்க அசால்டா போச்சு.” என்று பேச மதிமாறன் “பேக்ட்(fact) இது தானங்க” என்றான்.

     “இந்நேரம் அந்த இரண்டு பேரும் எங்கயாவது தப்பிச்சிருப்பாங்க” என்று கவலையாக மாறினாள்.

     “அவனை சூட் பண்ணிங்கலே?” என்று தாமதமாக கேட்டான்.

     “அதுவும் மயக்க ஊசி தான். கன் பயர் பண்ண நான் என்ன பெரிய ஆபீஸரா. இது மயக்க ஊசி இன்ஞெக் பண்ணியது. எப்படியும் ஊசியால குத்தியவன் மயக்கத்துல இருப்பான். என்ன அது விஷ ஊசியா அதுயிதுனு பயந்து போயிருப்பான்.” என்று கூறினாள்.

    “இந்த ஏரியாவுல யாருங்க கொல்ல வந்திருப்பா. அந்த ஷ்யாமா?” என்று கேட்டான்.

     “இருக்காது. சந்தானகிருஷ்ணன் ஆட்களா இருக்கலாம்.” என்று கணித்ததை கூறினாள்.

      “ஷ்யாம் உங்களை ப்ரைன் வாஷ் பண்ணிட்டாரா என்ன. இப்ப சந்தானகிருஷ்ணனு சொல்லறிங்க.” என்று கேட்டதும், நற்பவி முறைத்தாள்.

    “இல்லை… முதல்லயிருந்தே சந்தான கிருஷ்ணன் என்று இந்த முகநூல்ல இருந்து ஊரும் ஷ்யாமும் சொன்னாங்க. நீங்க இருக்காது ஷ்யாம் மேலயும் சந்தேகம் இருக்குனு சொன்னிங்க. இப்ப ரீசண்டா ஷ்யாமும் அவன் காதலி சௌந்தர்யாவை பார்த்ததும் உங்க கருத்து மாறியதும் டவுட்ல கேட்டேன். போலீஸ் மாமூல் வாங்கினா அப்படியே பிளேட்டை மாத்தறதை கேள்விப்படடதை வச்சி வாய் தானா உலறுது.” என்று பேச பேச நற்பவி அவன் கையை கிள்ளி “என்ன பார்த்தா எப்படி மேன் தெரியுது.” என்று உரிமையாய் தீண்டினாள்.

    “அழகான ராட்சஸினு தெரியுது” என்றான். மீண்டும் முறைக்க, “அட ஆமாங்க அழகா இருக்கிங்க. ஆனா பாருங்க கிள்ளி வச்சிட்டிங்க வலிக்குது.” என்று கையை தேய்த்து விட்டுக் கொண்டான்.
   
     “நல்லா பேசறீங்க நல்லா சமைக்கிறீங்க” என்று கூற, எங்கோவொரு சேவல் ‘கொக்கரக்கோ’ வென்று கத்த துவங்கியது.

    “அட விடிஞ்சிடுச்சா. நேரம் போனதே தெரியலைங்க.” என்று மதிமாறன் கூறவும் நற்பவி ஆம் என்றாள்.

     “சரிங்க நான் கிளம்பறேன். இதுக்கு மேல இங்க இருந்து யாராவது பார்த்தா கதை கட்டி பேசுவாங்க” என்று செல்ல அனுமதி வேண்டினான்.

    நற்பவி “தேங்க்ஸ்” என்று உதிர்த்து அவனையே பார்க்க விழிகளை கலக்க விட்டவன் வார் செருப்பை மாட்டி தலையசைத்து புறப்பட்டான்.

   அவன் வந்த வண்டி இந்த நொடி வரை நற்பவி வீட்டின் முன் இருந்ததை சிலரும் பார்த்து விட்டதை அறியாது நற்பவியின் மனதைரியத்தை வியந்தபடி வீட்டுக்கு சென்றான்.

-யாரோ தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

2 thoughts on “உயிர் உருவியது யாரோ-9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *