உறவின் மொழி
அத்தியாயம்—1
தை பிறந்துவிட்டது. மனசும் மலர்ந்து விட்டது. இருள் விலக பொங்கல் பொங்கி வழிந்தது.
கரும்பும் இனித்தது. பொங்கல் நன்னாளை கொண்டாடிவிட்டு கற்பூரத்தை கண்களில் ஒத்திக்
கொண்டு பூஜை அறையை விட்டு வெளியே வந்தாள் லட்சுமி.
“லெச்சுமி அம்மா…” மழலை குரல் ஒன்று வாசலில் கேட்க லட்சுமி வாசலுக்கு விரைந்தாள்.
சிறுமி அகானா கைகளில் ஒரு கிண்ணத்துடன் நின்று கொண்டிருந்தாள். அதில்
வெண்பொங்கல் சிரித்தது.
லட்சுமிக்கு புது மலர் போல் முகம். அம்பத்தைந்து வயது என்று சொல்லமுடியாத இளமை
மிச்சம் இருக்கும் அந்த முகத்தில் எங்கோ ஒரு சிறு துயரம் ஒளிந்து கொண்டிருக்கு.
“வாடி செல்லம். அம்மா கொடுத்து விட்டாளா?” என்று கிண்ணத்தை வாங்கப் போனாள்
லட்சுமி. சிறுமி தயங்கினாள்.
“சினேகா அக்கா கிட்டே கொடுக்கச் சொன்னா அம்மா.”
“சினேகா ஊருக்கு போயிட்டாளே தங்கம்.” என்றாள் லட்சுமி, நீட்டிய கைகளை பின் வாங்கிக்
கொண்டு.
“அப்புறம் வரேன் அம்மா..” சிறுமி ஓடிவிட்டாள். கிண்ணத்தோடு போய்விட்டாள். சூட்சமமாக
உணர்த்தபபட்ட செய்தி இது தான். நீ அபசகுனம். உன்னிடம் தர முடியாது.
கடந்த ரெண்டு வருடமாக லட்சுமி அனுபவித்து வரும் புறக்கணிப்பு தான். சற்று முன் இனித்த
மனம் இப்பொழுது கசந்தது. அவளுக்கு நியாயம் கிடைக்க யாரிடம் போராடுவாள்? சிறுமிக்கு
என்ன தெரியும்? அவளுக்கு கற்பிக்கப் பட்ட நடைமுறைகளை அவள் கடைபிடிக்கிறாள்.
இளைய தலைமுறையையும் இப்படி தவறான பாதையில் இட்டுச் சென்றால், வெளிச்சம்
எங்கே வரும்? அவளா அபசகுனம்? எத்தனை கல்யாணங்களை நடத்தி வைத்திருக்கிறாள்.!
உள்ளிருந்து தாரா வந்தாள்.
“பாத்திரம் எல்லாம் விளக்கிட்டேன் லட்சுமிம்மா.” என்றாள் முந்தியில் கையை துடைத்துக்
கொண்டு. பதில் பேசாமல் எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் லட்சுமி. தாராவுக்குப்
புரிந்தது.
“அம்மா.. நீங்க எதையும் நினைத்து வருத்தப் படக் கூடாது. இந்த சமுதாயம் அப்படித்தான்.”
மிருதுவாக. வருடி விடுவது போன்ற குரல்.
“எனக்குப் புரியலை தாரா. அப்படி என்ன தவறு நான் செஞ்சேன்.? ரெண்டே வருஷத்தில் நான்
ஆகாதவளாகிட்டேன்.. இந்த ஏரியாவில் தான் நான் கல்யாணம் ஆகி வந்தது முதல வாழ்றேன்.
என் கணவர் உயிரோட இருக்கும்வரை……. என் கையால் ஆசி பெற்றுக் கொள்ள வருவாங்க.
நான் தான் ஆசீர்வாதம் பண்ணுவேன். என்னை வணங்கி வாழ்த்தச் சொல்லி
ராசியானவள்ன்னு சொல்லிப் போவாங்க. இப்போ நான் அபசகுனம்..”
“சாம்பிரதாயங்களை அவ்வளவு லேசில் விடமாட்டாங்க பெண்கள்.” தாரா சமாதானம் சொல்ல
முற்பட்டாள்.
“எனக்கு பரவாயில்லை. ஓரளவு வயசாயிடுச்சு. ஆனா எத்தனை இளம் வயது பொண்ணுக,
இந்த புறக்கணிப்பை சகிச்சி வாழ்ந்து வராங்க. கணவன் இறந்தது அவங்க குற்றமா? இதுக்கு
ஏன் இந்த ஒதுக்கி வைக்கிற பழக்கம்.? மனசு கஷ்டப்படுது தாரா.”
தாரா அன்புடன் லட்சுமியை பார்த்துவிட்டு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறி
நின்றாள். அந்த சமயம் வாசலில் மணி ஒலித்தது.
“நான் வரேன் மா. அடுத்த வீட்டு அய்யா வந்திருக்கார் போல.”
லட்சுமி மனம் லேசானது. இறுக்கம் தளர்ந்தது. தாரா ராஜேந்தருக்கு வணக்கம் வைத்துவிட்டு
செல்ல. ராஜேந்தர் உள்ளே வந்தார். புன்னகை ததும்ப நின்ற லட்சுமி
“வாங்க சார். உங்களைத் தான் தேடிட்டு இருந்தேன்.” என்றாள்.
அவருக்கு கிட்ட தட்ட லட்சுமி வயது தான். ரெண்டு வருடம் மூப்பு.
“உனக்கு பிடிக்குமேன்னு கோவில் புளியோதரை கொண்டு வந்தேன்.” நீட்டினார்.
பொட்டலத்தை வாங்கிக் கொண்ட லட்சுமி “நன்றி.” என்றாள்.
“இதுக்கெதுக்கு நன்றி எல்லாம்.? இந்தா இந்த குங்குமத்தையும் வச்சுக்கோ.”
அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போய்விட்டு பிரசாத தட்டுடன் .
வந்திருந்தார். அதில் சாமீப் பூ, குங்குமம், விபூதி, உடைத்த பாதி தேங்காய் எல்லாம் இருந்தது.
“குங்குமம் இட்டுக்கோ.” என்றார்.
லட்சுமி விபூதியை எடுத்து பூசிக் கொண்டாள்.
“தேங்காய் வெள்ளவெளேர்ன்னு உங்க மனசு போல் இருக்கு.” என்று நற்சான்று வழங்கினாள்
லட்சுமி. அவர் பெரிதாக சிரித்தார்.
“நான் குறுகிய மனசுடையவன்னு மங்கை சொல்வா.”
“பார்வைகள் மாறும். அதை விடுங்கோ. உங்களுக்காக வரகரிசி பொங்கல் சுடச் சுட ரெடி. கை
அலம்பிட்டு வாங்க.”
லட்சுமி குங்குமம் இட்டுக் கொள்ளவில்லை. சாமிப் பூவையும் சூடிக் கொள்ளவில்லை என்று
கவனித்தார். வாஷ் பேசனில் கை கழுவிக் கொண்டு உட்கார்ந்தார்.
“நீங்க சீக்கிரம் வரனுமேன்னு வேண்டிட்டு இருந்தேன். சூடா சாப்பிட்டா தானே ருசி.
என்னதான் அப்புறம் மைக்ரோ அவனில் சூடு படுத்தி சாப்பிட்டாலும் அந்த ருசி குறஞ்சிடுமே.”
உணவு மேஜையில் பீங்கான் குழி பாத்திரத்தில் கொண்டு வந்து அவள் வைத்த பொங்கலில்
ஆவி பறந்தது. கத்திரிக்காய் கொஜ்ஜு வாசனை, வயிற்று பசியை தூண்டியது.
“பேஷ்……இன்னிக்கு ஒரு வெட்டு வெட்டப் போறேன். என்னை நீ கடோப்கஜன்னு
நினைத்தாலும் சரி.” என்று அவர் சொல்ல, வாய் விட்டு சிரித்தாள் லட்சுமி.
“நன்னா ரசிச்சு சாப்பிடுங்கோ. அதுக்குத் தானே சமச்சிருக்கேன்.”
“நீயும் உக்கார் லட்சுமி.”
அவளும் ஒரு தட்டைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். இருவரும் சாப்பிட்டனர். ஊர்
கதை சொந்தக் கதை பேசினர்.
“மங்கை போன இந்த பத்து வருஷத்தில் இன்னிக்குத் தான் ருசியா சாப்பிடறேன். அவளும்
நன்னா சமைப்பா. என்ன கொஞ்சம் காரம் தூக்கலா இருக்கும். அந்த வயசில் அது தேவையா
இருந்துச்சு. இப்ப அல்சர் எட்டிப் பார்க்கும் வயது. காரசாரம் எல்லாம் கம்மி பண்ணியாச்சு.”
என்றார். மங்கை அவர் மனைவி. அவள் மறைந்து பத்து வருடம் ஆகிவிட்டது.
கோயம்பத்தூரில் இருந்தார்கள். அவர் ரிட்டையர் ஆகும் முன்னேயே மங்கை
காலமாகிவிட்டாள். பிள்ளைகள் ரகு. சேது இருவரும் மேல்நாடு போனதும், அங்கு இருக்கப்
பிடிக்காமல் இங்கு மதுரைக்கு வந்துவிட்டார். லட்சுமியின் பக்கத்து வீடு விலைக்கு வர.
வாங்கி இங்கு செட்டில் ஆகிவிட்டார். இவர் வந்த நாள் முதல் லட்சுமிக்கு தனிமை சுமை
போனது. கள்ளம் கபடு இல்லாமல் பழகும் நல்ல இனிய நண்பர்.
லட்சுமிக்கு ஒரே பெண் சினேகா. அவளை திருவனந்தபுரத்தில் கட்டிக் கொடுத்து விட்டாள்.
பேத்தி ரியாவுக்கு ஒரு வயது. வேலை பார்க்கும் சினேகாவுக்கு அடிக்கடி அம்மாவை பார்க்கும்
வசதி இல்லை. ஒரு வாரம் வந்திருந்தாள். லட்சுமிக்கு பேத்தியுடன் நன்கு பொழுது போயிற்று.
பொங்கல் பண்டிகை வரவும் அவள் புறப்பட்டுப் போய்விட்டாள்.
“பொங்கலுக்கு இங்கே வந்திடனும்.” என்ற நிபந்தனை இட்ட மாமியார் சொல் மீற முடியாமல்
சென்றுவிட்டாள் சினேகா. போகும் முன் கண் கலங்கிவிட்டுத் தான் போனாள். “நீ தனியா
இருக்கியே மா…”
“அதுக்கு என்ன செய்ய முடியும் சினேகா.? உங்கப்பா இருந்தவரை எல்லாம் சிறப்பா
நடந்துச்சு. இனி இந்த வாழ்க்கைக்கு பழகிட்டு வரேன். கவலைபடாதே. ரியாவை நல்ல
பார்த்துக்கோ.” என்று சொல்லி மகளுக்கு புதுப் புடவை. பேத்திக்கும் மாப்பிள்ளைக்கும்
உடைகள் என்று வாங்கி கொடுத்தனுப்பினாள்.
“இந்த ஒரு வாரம் வீடு கலகலன்னு இருந்துச்சு…”
டாக்சி போனதும் ஏனோ லட்சுமிக்கு அழுகை வந்தது. ஒற்றையாய் என்ன வாழ்க்கை இது.?
அக்கம் பக்கம் நல்ல பழக்கம் என்றாலும் அவளை கணவனை இழந்தவள் என்ற முத்திரை
குத்தி மனசை நோகடித்தார்கள். . எதிர் வீட்டு அகானா சிறுமி பொங்கல் கொடுக்க வந்தாள்.
அதை கூட இவளிடம் கொடுக்கக் கூடாதாம். சினேகாவிடம் தான் தரனுமாம். என்ன ஒரு மூட
நம்பிக்கை.! என் கையில் துரதிர்ஷ்டம் ஒட்டிக்கிட்டா இருக்கு.? இந்தக் கேள்விக்கு யாரிடம்
பதில் இருக்கும்.?
விஜயதசமி வந்த போதும் இப்படித்தான் புறக்கணிப்பு நடந்தது. கொலு வைத்திருக்கும்
பெண்கள் முன்பெல்லாம் முதலில் லட்சுமி வீட்டுக்கு வந்து தான் அழைப்பார்கள்.
“லட்சுமிம்மா….நீங்க கட்டாயம் வரணும். நீங்க வந்து முதல்லே ஒரு பாட்டு பாடி ஆரம்பிச்சு
வைக்கணும்.” என்று சொல்வார்கள். லட்சுமியும் போவாள். தன் இனிய குரலில் ரெண்டு
பாட்டு பாடுவாள். அப்படியே குளிர்ந்து போவார்கள். அவள் காலில் விழுந்து ஆசீர்வாதம்
வாங்குவார்கள் சிறியவர்கள். முதியவர்கள் காலில் இவள் விழுந்து ஆசி வாங்குவாள்.
சுண்டலும் ஒரு ரவிக்கை துண்டும் கிடைக்கும். நீட்டிய வெள்ளி குங்கும சிமிழிலிருந்து
குங்குமம் இட்டுக் கொள்வாள். மஞ்சள் குங்குமம் உள்ள சிறிய டப்பாக்கள் அடங்கிய
பிளாஸ்டிக் வெற்றிலையை பெற்றுக் கொண்டு வருவாள். தலையில் மல்லிகை பூ சிரிக்கும்.
அவள் சிரித்துக் கொண்டே வந்து கணவரிடம் கதை பேசுவாள். யார் யார் வந்தார்கள், என்ன
என்ன பேசினார்கள் என்று சுவை பட சொல்வாள். அவர் அவளையே பார்த்துக்
கொண்டிருப்பார். “என்ன இது குறு குறுன்னு பார்க்கறீங்க?”
“அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கே. எனக்கு ஒரு வரம் தா.” என்பார்.
“கேள் பக்தனே. தந்தோம்.”
“உனக்கு முன்னால் நான் போயிடனும்…..நீ இல்லாத உலகத்திலே நான் ஒரு நொடி கூட வாழ
மாட்டேன். இந்த வரம் தா.”
தன் தங்கக் கையினால் அவர் வாய் பொத்துவாள்.
“என்ன வரம் இது.? இதுக்கு நீங்க என்னை கொன்னுடலாம். ஏதாவது பேத்தாதீங்க.” கண்
கலங்குவாள். “நான் மட்டும் நீங்க இல்லாம வாழ் வேணாக்கும்.?” சொல்லியிருக்கிறாள்.
இன்று அவர் இல்லாமல் தான் வாழ்க்கை ஓடுகிறது. “கணவனை காட்டுவது இல்.” என்று
சிலப்பதிகாரம் சொல்கிறது. யார் இறந்து போனாலும் இவரை அவராக நினைத்துக் கொள்
என்று சொல்வார்கள். ஆனால் கணவன் இறந்துவிட்டால் இவரை கணவராக நினைத்துக்
கொள் என்று வேறு ஒருவரை காட்டி சொல்ல முடியுமா? அந்த இடத்தை யாரும் நிரப்ப
முடியாதே.!
சேர்ந்து வாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை… “நீ கொடுத்த அன்பான நட்பை யார்
கொடுக்க முடியும்.?” என்று மறைந்த கணவரிடம் மானசீகமாக பேசுவாள். இன்றோ “அவர்
அவர் வாழ்க்கை அவரவருக்கு. உதிரப் போகும் பாதி பழுத்த இலைக்கு வாழ்வு என்னும்
மரத்தில் என்ன வேலை.?” என்று சொல்லிக் கொள்வாள். இது தானே நிதர்சனம்.
லட்சுமி தனிமை என்னும் தீவில் சுற்றி உள்ள மனிதர்களின் அவமானமான புறக்கணிப்பின்
வலியுடன் வாழ்கிறாள். அவள் அதிர்ஷ்டமில்லாதவள் தானா.?
கதவு மணி சங்கீதம் பாட லட்சுமி கதவு திறந்தாள். ஒரு இளம் பெண் புன்னகையுடன் நின்று
கொண்டிருந்தாள்.
“வாம்மா….நீ?” நிறுத்தினாள்.
“உங்க மகள்.” என்றாள் வந்தவள்.
தொடரும்.
-சங்கரி அப்பன்
குவிகம் புதினம் போட்டியில் முதல் பரிசு வென்ற கதை.
வாசகர்கள் வாசிக்க இங்கே பதிவு செய்து உள்ளேன்.
Athu yaru new entry…. Nice starting sis