Skip to content
Home » உறவின் மொழி-2

உறவின் மொழி-2

அத்தியாயம்—2


மகள் என்ற அழகான உறவுடன் அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது லட்சுமிக்கு
பிடித்திருந்தது. சின்ன செப்பு போன்ற உருவம். இங்கே நிறைய அன்பு இருக்கு என்று
சொல்லும் பெரிய கண்கள். சினேகமான குரல்.
“உள்ளே வாடா செல்லம். உக்கார். டீ போடட்டுமா?”
அவள் சகஜமாக உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டாள்.


“சூடா இருக்கணும் டீ.” என்று ஆர்டர் போட்டாள். லட்சுமி உள்ளே சென்று டீ தயாரித்து
கொண்டு வந்து கொடுத்தாள். உறிஞ்சிக் குடித்து “பிரமாதம்” என்றுவிட்டு கிளாசை தானே
எடுத்துச் சென்று சிங்கில் கழுவி கவிழ்த்திவிட்டு வந்தாள்.

“அம்மா….சமயலறையை பூஜை அறை போல் சுத்தமா வச்சிருக்கீங்க” என்று பாராட்டினாள்.
பின் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.


“அம்மா என் பேர் ராகினிமா. வயசு இருபத்தி எட்டு. வங்கியில் வேலை. அடுத்த தெருவுக்கு
குடி வந்து மூணு மாசம் ஆகுது. இந்த ஏரியா எனக்கு பிடிச்சுப் போச்சு. இங்கே ஒரு மாதர்
சங்கம் அரம்பிக்கலாமுன்னு யோசனை. நீங்க அதில் உறுப்பினரா சேர்ந்து கொள்ளணும்.”
என்றாள்.


“என்னால் என்ன பயன் ராகினி.? வயசான பெண்களுக்கு அதில் இடமுண்டா என்ன.?’
“என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க.? நீங்க பார்க்க எனக்கு அக்கா மாதிரி இருக்கீங்க. முதல்ல
உங்களால் என்ன பயன்ன்னு சொல்லாதீங்க. மூத்த குடி மக்கள் தான் எங்களுக்கு அட்வைஸ்
சொல்லி வழி நடத்தனும். பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கு தெரியுமா.?’ என்றாள்.
ஆயிரம் ரூபாய் கொடுத்து அவள் கேட்டுக் கொண்டது போல் அந்த சங்கத்தில் உறுப்பினர்
ஆனாள் லட்சுமி.


அன்று முதல் லட்சுமியின் நாட்களில் பட்டாம்பூச்சிகள் வந்து உட்கார்ந்து கொண்டன. ராகினி
தான் தலைவி. அவள் இவளுக்கு கொடுத்த வரவேற்பில் அனைத்து உறுப்பினரும் அவளுக்கு
மரியாதை கொடுத்தனர். ராகினி எவ்வளவு பவர்புல் என்று தெரிந்து போய்விட்டது.
தொடக்க நாள் அன்றே லட்சுமிக்கு குங்குமமும் சந்தனமும் எல்லோருக்கும் போல் அவளுக்கும்
கொடுத்து மரியாதை செய்தாள் ராகினி. “இந்த சங்கத்துக்கு நாம் ஒரு பேர் வைக்க வேண்டும்.
அவங்க அவங்க என்ன பேர் வைக்கலாமுன்னு சஜஸ்ட் பண்ணலாம்.” என்றாள் அவள்.
ஆளாளுக்கு ஒரு பேர் சொன்னார்கள். லட்சுமிக்கு இங்கு வந்ததும் ஒரு அதிர்ஷ்டம் அடித்தது
போல் தோன்ற “அதிர்ஷ்டப் பூக்கள்” என்று சொன்னாள். ஓ.. இது நல்லாயிருக்கே என்று
ராகினி கைதட்டி சொல்ல அனைவரும் ஆமோதித்தனர். அவளுக்கு ஒரு சிறிய பரிசு
கொடுத்தார்கள்.


லட்சுமிக்கு மனம் நிறைந்தது. நாமும் இந்த உலகில் உபயோகமா இருக்கோம் என்ற எண்ணம்
நிறைவை கொடுத்தது. அதிரஷ்டப் பூக்கள் சங்கம் சுறுசுறுப்பாக இயங்கியது. ரெண்டு
வாரத்துக்கு ஒரு மீட்டிங். குக்கரி கிளாஸ். ஜூஸ் கிளாஸ். மாகாபாரதம், ராமாயணம் போன்ற
இதிகாசங்களின் பெருமை எடுத்துச் சொல்லும் வகுப்பு……வெட்டி பொழுது போக்காமல்
அறிவுக்கு விருந்தான நிகழ்வுகள் நடந்தன.


ஒரு நாள் ராகினி போனில் சொன்னாள்
“அம்மா….நீங்க ஒரு நாடகம் எழுதணும்.”
“நானா? அதெல்லாம் எனக்கு வராது.” என்றாள்.


“வானொலி நிலயம் நமக்கு ஒரு பிரோகிராம் கொடுத்திருக்கு. அரை மணி அலாட்
பண்ணியிருக்காங்க. பத்து நிமிடத்துக்கு ஒரு நாடகம் போடலாம்னு இருக்கோம். மீதி
நேரத்தில் யார் வேண்டுமானாலும், எது பற்றி வேண்டுமானாலும் பேசலாம். பொன்மொழிகள்,
பழமொழிகள் சொல்லலாம். ஒரு வாரம் டைம். நீங்க சூப்பரா ஒரு நாடகம் தயார் பண்ணிக்
கொடுங்க. நீங்க நோ சொல்லக் கூடாது.” என்றுவிட்டாள். லட்சுமி திகைத்து விட்டாள். இது
என்ன வம்பு.? அவளுக்கு என்ன எழுத தெரியும்? இரவு தூங்காமல் இதையே யோசித்தாள்.
பிறகு அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. விவசாயிகளின் மகிமையை எடுத்துச் சொல்லும்

ஒரு நாடகம் எழுதலாம் என்று முடிவு பண்ணினாள். பொங்கல் பிரோகிராம் ஆச்சே.!
பொருத்தமா இருக்க வேண்டாமா.?
மறுநாள் ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்தாள். விவசாயிகள் நம் நாட்டின் கண்கள் இல்லயா?
வெளிநாட்டில் வேலை பார்க்கும் தன் மகன்களின் வருகையை எதிர்பார்த்து வாசலை வாசலை
பார்க்கிறாள் ஒரு தாய். இருவரும் வருகிறார்கள். விவசாயிகள் அனைவரும் அந்தப் பொங்கல்
நன்னாளை கொண்டாட கூடி நிற்கிறார்கள். பொங்கல் பொங்கி முடித்ததும் விருந்துன்ன
வேண்டும். மேல்நாட்டு மகன்கள் இருவரும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முதலில்
விவசாயிகளுக்கு பந்தி பருமாறுகிறார்கள். வெளியே சாரல் அடிக்கிறது. உள்ளே
விவசாயிகளுக்கு முதல் மரியாதை என்னும் சாரல் அடிக்கிறது. நாட்டின்
முதுக்கெலுமானவர்கள் மனம் குளிர்கிறார்கள். இதுவே உண்மையான பொங்கல்
கொண்டாட்டம் என்று முடித்திருந்தாள் லட்சுமி. “அர்த்தமுள்ள பொங்கல்” என்று அதுக்கு
தலைப்பு வைத்திருந்தாள் லட்சுமி.


மூன்று பேர் நாடகம் எழுதியிருந்தார்கள். அதில் லட்சுமியின் நாடகமே தேர்ந்து
எடுக்கப்பட்டது.
“புவனா….அருணா உங்கள் நாடகமும் வெகு ஜோர். லட்சுமி அம்மாவின் நாடகம் சிறப்பு.
எனவே நாம இந்த நாடகத்தையே போடுவோம். சிறப்பான வசனம். ஆழமான கருத்து.” என்று
விட்டாள் ராகினி. நாடகம் நடித்தவர்களும் திறம் பட குரல் கொடுத்து பிராக்டீஸ்
பண்ணியிருந்தார்கள். . ராகினிக்கு பரம திருப்தி.


“லட்சுமி அம்மா. உங்க நாடகம் தான் ஹய் லைட். பாருங்க.” என்றாள் ராகினி. புவனா துணை
தலைவி. அவளுக்கு இந்த தேர்வு பிடிக்கவில்லை. தன் நாடகத்தை சூஸ் பண்ணாமல், இந்த
கிழடின் எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுகிறாளே என்று கடுப்புடன் இருந்தாள்.
வானொலி நிலய அதிகாரி துரைசாமியிடம் புகார் படித்தனர் புவனாவும் அருணாவும்..
லட்சுமியின் நாடகத்தில் கருத்துப் பிழை இருக்காம்.


“விவசாயிகள் பரிமாற வேண்டும் என்று நீங்க சொல்றீங்க. ஆனா விவசாயிகள் உழைத்து
பயிர் செய்ததை தான் நாம் சாப்பிடுகிறோம். எனவே அவர்களுக்கு முதல் மரியாதை செலுத்தி,
அவர்களுக்கு விருந்து பரிமாறுவது போல் எழுதியிருப்பது மிகவும் சிறப்பு.” என்று
சொல்லிவிட்டார் துரைசாமி
அடுத்து அருணா ஆட்சேபனை எழுப்பியது லட்சுமி சிவகுமார் என்று இருக்கக் கூடாது.
வெறும் லட்சுமி என்று தான் இருக்கணும். மேலும் சில சீன்களை கட் பண்ண வேண்டும்,
என்று அடம் பிடித்தாள்.


“மத்த உறுப்பினர்களுக்கு சான்ஸ் கொடுக்க வேண்டும் அம்மா. நாடகம் நீளம் அதிகம்.
அதனால் சில சீன்களை கட் செய்தால் நல்லது.” என்று சொல்லிவிட்டார். லட்சுமிக்கு
அழுகையே வந்துவிட்டது. வன்மம் காரணமாக புவனா அருணா செய்த சதி வொர்க் அவுட்
ஆகிவிட்டதே என்று வருத்தமாக இருந்தது லட்சுமிக்கு. இருந்தும் அடுத்தவர்களுக்கு இடம்
கொடுக்க வேண்டும் என்று சொன்னதால் ஒப்புக் கொண்டாள்.


“லட்சுமி அம்மா. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. ப்ரோகிராம் நல்லபடியாக
முடியனும். பிளீஸ்.” என்று கேட்டுக் கொண்டாள் ராகினி. . எல்லாம் சிறப்பாக முடிந்தது.
வீட்டுக்கு வந்தாள் லட்சுமி.

அவளுக்கு தன் நாடகம் சில முக்கிய வசனங்களை இழந்ததை தாங்க முடியவில்லை. மற்ற
யாரையும் இது பாதிக்கவில்லை. யாரிடமும் தன் ஆதாங்கத்தை வெளியிட முடியவில்லை.
அழுகையை அடக்கி வைத்திருந்தாள். வீட்டுக்கு வந்ததும் சுலபமாக கண்ணீரை வழிய
விட்டாள். அந்த நேரம் ராஜேந்தர் ஃபோன் செய்தார்.


“ஹலோ….லட்சுமி. பிரோக்ராம் கேட்டேன், சூப்பர். லைவா போட்டாங்க. உங்களுக்குள்
இப்படி ஒரு திறமை ஒளிந்திருக்கும்ன்னு நான் நினைக்கவே இல்லை. பாராட்டுக்கள். மேலும்
மேலும் எழுதுங்க.” என்று குஷியுடன் சொன்னார். லட்சுமி பதில் பேசாமல் இருக்க….
“என்னாச்சு லட்சுமி.? கேக்குதா? ஹலோ….” என்றார்.


“என் கையை வெட்டின மாதிரி இருக்கு….” என்றாள் விசும்பலுடன். பிறகு சுருக்கமாக
நடந்ததை சொன்னாள்.
“என்ன அழகான கற்பனை.? எவ்வளவு சீரிய வசனங்கள்! வெட்டப்பட்ட பகுதி பத்தி எனக்குத்
தெரியாது. ஆனா இதுவே நிறைவா தான் இருக்கு. போட்டி பொறாமை எல்லாம் சகஜம். மனம்
தளரக் கூடாது லட்சுமி. எங்க ஏரோட்டம் நின்னு போனா..உங்க காரோட்டம் என்னாவாகும்?
ன்னு கண்ணதாசன் ஒரு பாட்டில் எழுதியிருப்பார். அந்த கருத்தை ரொம்ப அழகா கொண்டு
வந்து விவசாயிகளுக்கு நாம் தர மறுக்கும் மரியாதை பற்றி சொல்லியிருப்பது சூப்பர்ப். புவனா,
அருணா பொறாமை தான் உங்க வெற்றியின் அடையாளம் புரியுதா.?” என்றார்.


இப்பவும் லட்சுமிக்கு கண்ணீர் வந்தது. இது ஆனந்தக் கண்ணீர். அவள் கணவர் சிவகுமார்
கூட இப்படித்தான் அவளுக்கு எடுத்துச் சொல்வார்.
“தேங்க்ஸ் ராஜேந்தர் சார். நான் நிம்மதியா தூங்குவேன்.”
“குட் நைட். நாளை சந்திக்கலாம்.”


“குட் நைட்.” என்று போனை வைத்தபோது லட்சுமி மனம் அமைதியாக ஒரு பூப் போல
புஷ்பித்திருந்தது. ரொம்ப நாளைக்குப் பிறகு அவள் குழந்தை போல் தூங்கினாள். கணவர்
இறந்த பின் அவள், தான் ஒரு அனாதை போல் உணர்ந்தாள். எல்லாவற்றுக்கும் பயம். என்ன
சொல்வார்களோ என்ற தயக்கம். நாளைடைவில் மனதை அது தின்றது.


“யார்ட்லி சோப்பா யூஸ் பண்றீங்க.? இவ்வளவு வாசனை தேவையா?”
“பூ எல்லாம் சுமங்கலிகளுக்கு தான். காலம் கலி காலம்.”
“கல்யாணத்துக்கு வந்தது சரி. பட்டுப் புடவை. நகை எல்லாம் இனிமே எதுக்கு.? அவரா
பார்த்து ரசிக்கப் போறார்?. சிம்பிளா ஒரு காட்டன் புடவை உங்கள் நிலமைக்கு ஓ. கே.”
இப்படிபட்ட விமர்சனங்களை கூசாமல் அவள் முகத்துக்கு நேரே சொன்னார்கள் சிலர்.
இதையெல்லாம் அவள் கேட்டுக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்பது போல் அழுத்தமாக
சொன்னார்கள்.


அதன் பின் லட்சுமி குங்குமம் வைக்க தயங்கினாள். பூக் கடையை கண்டாலே ஒதுங்கினாள்.
ஸ்டிக்கர் பொட்டும், விலை குறைந்த காட்டன் புடவையையும் அணிந்து கொண்டாள். காதில்
தோடு தவிர எல்லா நகைகளையும் தவிர்த்து விட்டாள்.

விசேஷ வீடுகள் அவளை புறக்கணித்தன. ஒரு மூலையில் நின்று பார்க்கும் அவளுக்கு எந்த
மரியாதையும் இல்லை. எனவே அதையும் தவிர்த்தாள். அவள் ஏன் வரவில்லை என்று யாரும்
கேட்பதில்லை. வராதவரை உத்தமம் என்று நினைத்தார்களோ என்னவோ?


ஆண்களை குறை சொல்லும் பழக்கம் பெண்களுக்கு இருக்கு. ஆனா கணவனை இழந்த
பெண்களுக்கு ஒரு விடுவு காலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது ஒரு ஆண் தான். ராஜா ராம்
மோகன் ராய். சதி என்னும் தீய பழக்கம் அவரால் தான் ஒழிந்தது. உயிரோடு ஒரு பெண்ணை
தீக்குள் இறங்க வைத்து……என்ன கொடூரம் இது? இன்றும் அது தொடர்ந்தால்..?
நினைக்கவே பயமாக இருந்தது லட்சுமிக்கு.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *