அத்தியாயம்…3
லட்சுமியின் கணவர் சிவகுமார் முற்போக்கு சிந்தனை உடையவர்.
“கணவன் இறந்தால் உடன் கட்டை ஏறுதல் என்பது அபத்தம். சாவு இயற்கையாக
இருக்கணும். மரணம் என்பது, ஜனனம் போல் கடவுளின் பிடிபடாத சக்தி. அதை ஜெயிக்க
நினைத்தால் மானுடம் வீழும்.” என்பார். அவரை பறிகொடுத்த ஒரு வருடம் லட்சுமி
வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாள். துக்கம் தாண்டிய ஒரு வலி உள்ளத்தை தோண்டியது.
மகள் சினேகா அவள் தோழியின் தங்கைக்கு திருமணம் என்று மதுரை வந்திருந்தாள். “நீயும்
வா அம்மா.” என்று லட்சுமியை அழைத்தாள். சிவகுமார் இறந்து ஒரு வருடம் தாண்டிவிட்டது.
“வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கணுமா? ஒரு வருஷம் துக்கம் அனுஷ்டித்தது போதாதா.?.
வெளியிலே வாம்மா. நாலு பேரை பாரு. ஆள் பாதியா இளச்சிட்டே.” என்று சொல்லி கூட்டிப்
போனாள். லட்சுமிக்கும் ஆயாசமாக இருந்தது. இத்தனை நாட்கள் நாலு சுவத்தையே பார்த்துக்
கொண்டு உட்கார்ந்தது கொடுமையாக இருந்தது. காத்தாட வெளியில் கிளம்பினால் நல்லது
என்று தோன்றியது. சூரியனை, வானத்தை முழுமையா பார்த்தே ஒரு வருடம் ஆகிவிட்டது. சரி
என்று சம்மதித்தாள்.
“அம்மா இந்த ரோஸ் நிற பட்டை உடுத்திக் கொள்.”
“வேண்டாமடி. யாராவது ஏதாவது சொல்வார்கள்.”
“எந்த யுகத்தில் இருக்கே.? இது சந்திராயன் விட்டிருக்கும் காலம் மா. பட்டிக்காடு மாதிரி
பேசாதே.” மகள் தான் அவளை வலுக் கட்டாயமாக பட்டுப் புடவை உடுத்தி அழகு பார்த்து,
அழைத்துச் சென்றாள். அந்த கல்யாணத்துக்கு சினேகாவின் மாமியார் ராஜியும் வந்திருந்தாள்.
“என்னடி உங்க அம்மா கோலம்.? புருஷனை இழந்தவ மாதிரியா இருக்கா.? சுமங்கலி மாதிரி
குங்குமப் பொட்டு வேற. ஒரு இணுக்கு பூ தொங்குது. பெரிய மனுஷிக்கு இது கூடத்
தெரியாதா.? வாய் கொள்ளா சிரிப்பு வேற. நல்ல கூத்தா இருக்கு.” என்றாள் லட்சுமி காதுபட.
லட்சுமிக்கு கூசியது. சந்திராயன் காலம் என்றாலும் கணவனை இழந்தவளுக்கு அந்தக் கால
டீரீட்மெண்ட் தான். ஒரு சில மாற்றங்கள் போனால் போகிறது என்ற அனுமதியுடன்.
வெள்ளை சேலை கட்ட வேண்டாம்.
“அத்த….என்ன பேசறீங்க நீங்க.? அப்பா இறந்த துக்கம் மாறத் தான் இங்க கூட்டி வந்தேன்.
நீங்க அதையே நினைவு படுதறீங்க.?……அம்மா எதுக்கு பூவை எடுக்றீங்க.? குங்குமப்
பொட்டை அழிக்கிறீங்க.?” என்று சினேகா திடுக்கிட்டு கூறினாள்.
லட்சுமி கண்ணில் நீருடன் கடகடவென்று வெளியே சென்று ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து
சேர்ந்தாள். அன்று முதல் அவள் மங்கல பொருட்களை தவிர்த்தாள். நீ அழுத்திட்டே தான்
இருக்கணும் என்று இந்த சமுதாயம் சொல்கிறதா? சிரிக்கக் கூட கூடாதா.? கல்யாண வீட்டில்
சிரிக்காமல் அழணுமா? என் துக்கம் என் வலி எனக்குத் தானே தெரியும். ஏதேதோ மனசுக்குள்
புலம்பியபடி சாப்பிடாமல் உட்காரந்திருந்தாள் லட்சுமி.
சினேகா படபடப்புடன் வந்தாள்.
“தாலி கட்டி முடித்ததும் ஓடி வந்துட்டேன். என்னம்மா இது? அவங்க அப்படித்தான்
சொல்வாங்க. அதுக்காக நீ இப்படி அழுதுக்கிட்டு ஓடி வரணுமா? நாக்கிலே நரம்பு
இல்லாதவங்க பேச்சுக்கு மதிப்பு கொடுக்கக் கூடாது அம்மா. நான் நல்ல டோஸ் விட்டேன்.”
என்றாள்.
“புருஷன் செத்து உயிரோடு இருப்பதை விட உடன் கட்டை ஏறுவது மேல்.”
“அம்மா….” என்று அதிர்ந்து போய் குரல் உயர்த்தி சொன்னாள் சினேகா.
புல்லுருவிகள் தான் இப்படி பேசினார்கள். ஆனாலும் அந்த சுடு சொல் தாங்க முடியவில்லை.
இதுக்கு பதில் எந்த விஷேசத்துக்கும் போகாமல் இருப்பதே மேல் என்று லட்சுமி வீடே கதி
என்று இருந்தாள்.
விரக்தி நிலைக்கு தான் ஏன் போக வேண்டும்? என்று யோசித்தாள் லட்சுமி. லட்சுமி அம்மா
என்று அவளை சுற்றி வந்தவர்களைத் தான் அவளுக்குத் தெரியும்.
“லட்சுமி கை பட்டா போதும் எதுவும் மிளிரும்.” என்று ஆராதித்தவர்கள் தெரியும்.
“லட்சுமி அக்கா எங்க வீட்டுக்கும் வாங்க அக்கா. ராணி வீட்டு கொலுவுக்கு மட்டும்
போனீங்களே.” என்று அன்பை பொழிந்தவர்கள் தெரியும்.
“நீங்க மட்டும் தான் லட்சுமி அக்கா என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க.” என்று பெருமைப்
படுத்தியவர்கள் தெரியும்.
சமுதாயம் அவளை கொண்டாடியது ஏன்? அவள் அழகுக்காகவா? அவள் காட்டிய
அன்புகக்காகவா.? அந்தஸ்துக்காகவா? தெரியலை. கொண்டாடினார்கள். இப்ப அதே
கூட்டம் அவளை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதைத் தான் அவளால் தாங்க
முடியவில்லை. திடீரென அவள் அபசகுணமாக, வேண்டாதவளாக ஆகிவிட்டாள் என்பதை
ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது. எல்லாம் இருந்தது. இப்ப ஒன்றுமேயில்லை.
முதல் முதல் ராஜேந்தர் அவளுக்கு அறிமுகம் ஆன போது அவள் அவரையும் இது போன்ற ஒரு
மனிதராகத் தான் நினைத்தாள். ஆனால் ராஜேந்தர் மனைவியை இழந்தவர் என்று தெரிந்ததும்
அவளுக்கு ஆறுதலாக இருந்தது. மனுஷன் இவர்களைப் போல் குத்திக் காட்ட மாட்டார் என்ற
ஆறுதல் தான்.
“கொஞ்சம் உரைக்கு தயிர் கிடைக்குமா?” என்று கேட்டு வந்தவர் தான். பின்னர் மெள்ள
மெள்ள அவளுக்கு உற்ற நண்பர் ஆகிவிட்டார். அவள் ஆதாங்கங்களை செவி மடுத்தார்.
நிறைய கேட்டார். நிறைய பேசினார். அடிபட்ட நெஞ்சுக்கு மருந்தாக இருந்தார்.
“லட்சுமி….நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதீங்க……” என்று ஆரம்பித்து, படிப் படியாக
அவளை ஒருமையில் அழைத்து சகஜமாக பேச ஆரம்பித்தார். தத்துவங்கள் சொன்னார்.
“சமுதாயம் நமக்காக மாறனும் என்கிற எதிர்ப்பு நம் அறிவை மழுங்கச் செய்யும். நாம் அதை
ஏற்றுக் கொள்வதால் ஸ்டிரஸ் குறையும். எது முக்கியம் சொல்லு லட்சுமி.” என்றார்.
“என் காப்பியை ஏஒன் என்று சொல்லி குடிச்சுக்கிட்டு, என்னையே குறை சொல்றீங்களா.?”
என்று சண்டை போட்டாள்.
“அது என்ன? இந்த சமுதாயம் என்னை ஒதுக்கி வைக்கும் உரிமையை எடுத்துக் கொள்கிறது.?
அதை வேடிக்கை பார்த்து, புழுங்கிக் கொண்டிருக்க வேண்டுமா.? இது என்ன நியாயம்?”
இதற்கு பதில் சொல்லாமல் சிரித்தார். “இது தான் பதிலா?”
“பதில்கள் நம் கையில் இல்லை லட்சுமி. உன் துக்கம் பிறந்தது உன் கணவர் மேல் உள்ள
காதலால். அதை இழந்தது மோஸ்ட் அன்பார்சுனேட். அதை மதிக்க அவர்களுக்கு
நேரமில்லை. அது உன் சொந்த விவகாரம். அதிலிருந்து வெளிவர நீ தான் முயற்சி
செய்யணும்.”
“ஸோ…. அவமானங்களை தாங்கிக்கணும்னு சொல்றீங்க.”
“அப்படியில்லை லட்சுமி. ரூட்டை மாத்திக்கோ. இவர்கள் அங்கீகாரம் மட்டும் தான் உன்
வாழ்க்கையா? உனக்கு பண கஷ்டம் இல்லை. அதுவே உனக்கு ஒரு சுதந்திரம். டூர் போ.
வெளியே பழகு. உன்னை உன் மனசுக்காக ஏத்துக்கறவங்க இருப்பாங்க. தேடிப் பார்.
எஞ்ஜாய் லைஃப்.”
ராகினி அவள் வாழ்வில் வந்த போது தான் ராஜேந்தர் சொன்ன வார்த்தைகளுக்கு உள்ள
அர்த்தம் புரிந்தது லட்சுமிக்கு. புறக்கணிப்பவர்களை வாயடைக்க செய்கிற வித்தை
அதிகாரத்துக்கு இருந்தது. ராகினி ஒரு ஐ. பி. எஸ் போலீஸ் அதிகாரி. அவளும் திறம் பட
பெண்களின் பலவீனங்களை புரிந்து, கொட்ட வேண்டிய இடத்தில் கொட்டினாள்.
செப்பனிடும் வேலைகளை செய்தாள்.
“லட்சுமி அம்மா ரொம்ப ராசியானவங்க. அவங்க குத்துவிளக்கு ஏத்தி வச்சி ஆரம்பிச்ச இந்த
“அதிர்ஷ்டப் பூக்கள்” சங்கம் சமுதாயத்தில் ஒரு விளக்காக ஒளி வீசுது.” என்றாள்.
அருணா போன்றவர்களின் பொருமல் பொருமலாகவே நிற்காமல் நட்பு நோக்கி நகர வழி
செய்தது.
“ராகினி ஒரு டிவோர்சி. கணவன் குடிகாரன். வாழ்ந்தது ஆறு மாசம் தான். விவாகரத்து
பண்ணிட்டாங்க. அதனால் தான் அவங்களுக்கு உங்க போன்ற பெண்களின் வலி புரிகிறது.”
என்று சங்க உறுப்பினரில் ஒருத்தியான ஜலஜா சொல்லக் கேட்டாள் லட்சுமி.
ராகினி கொடுத்த போர்வை, ராஜேந்தர் கொடுத்த நட்பு லட்சுமியை அதள பாதாளத்திலிருந்து
மீட்டு எடுத்தது.
லட்சுமி குங்குமம் வைத்துக் கொண்டாள். பூ வைத்துக் கொண்டாள். நல்ல புடவை அணிந்து
கொண்டாள். சங்கம் ஏற்பாடு செய்த டூர்களில் கலந்து கொண்டாள். ஆங்காங்கே கேலியும்
புறக்கணிப்பும் நடந்து கொண்டு தான் இருந்தது. அதை புறக்கணிக்க கற்றுக் கொண்டாள்.
“இந்த ராகினி கொடுக்கும் இடம். இந்த லட்சுமி இந்த வயதில் புதுப் பெண் போல்
மிணுக்கறா.” என்று முதுகுக்கு பின்னால் பேசிய நாக்குகளுக்கு ஒரு அழகிய புன்னகையை
பதிலாக கொடுத்தாள் லட்சுமி.
அதிகாரத்தில் இருப்பவர்கள் மனிதாபிமானம் கொண்டவர்களாக இருந்தால் போதும்.
சமுதாயத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என்பதை ராகினி காட்டிவிட்டாள். அவள் கட்சி
ஆரம்பிக்கப் போகிறாள். தேர்தலில் நிற்கப் போகிறாள் என்று தெரிந்தது. அவள் ஜெயித்தால்
கண்டிப்பாக பெண்களின் நிலை சமுதாயத்தில் உயரும். லட்சுமிக்கு பிரமிப்பாக இருந்தது.
ராகினியின் தன்னம்பிக்கை, தைரியம். பரந்த மனப்பான்மை அந்த சங்கத்திலேயே பெரிய
மாற்றங்களை ஏற்படுத்தியது. அரசியலுக்கு வந்தால் அவள் நாட்டிலேயே பெரிய
மாற்றங்களை ஏற்படுத்துவாள் என்பது நிச்சயம். பெண்களின் கண்களாக மாறுவாள் என்பதில்
சந்தேகம் இல்லை.
“என்ன….இப்பெல்லாம் என்னை கண்டுக்க மாட்ட போலிருக்கு. ராகினி தான் உன் ரோல்
மாடலா.?” என்று கிண்டல் செய்தார் ராஜேந்தர்.
“போங்க சார். வெறும் வானமா இருந்தேன். எனக்குள் நட்சத்திரங்கள், நிலா, வணவில்
எல்லாம் கொண்டு வந்தது முதலில் நீங்க தானே.! கடுமையான டிப்ரஷனில இருந்தேன்.
எல்லாத்துக்கு தேங்க்ஸ்.” என்றாள் லட்சுமி அவருக்கு ஒரு ஆரஞ்ச் ஜூஸ் கொடுத்துக்
கொண்டே.
“ஒரு ஆரஞ்ச் ஜூஸ் கொடுத்து ஏமாத்தக் கூடாது லட்சுமி. எனக்கு ஒரு ட்ரீட் கொடுக்கணும்.”
என்றார்.
“எதுக்கு.? நீங்க என்ன அச்சீவ் பண்ணிட்டீங்க?” என்று கலாய்த்தாள்.
“நான் யூ. எஸ் போறேன். மகன்கள் விசா அனுப்பி இருக்காங்க. ஆறு மாசம் என் தொல்லை
உனக்கு இருக்காது. சந்தோஷம் தானே.?”
“அப்படியா? ஆறு மாசம் அங்க இருக்கணுமா.?”
“சொல்ல முடியாது. கிளைமேட் ஒத்துக்கிட்டா கிரீன் கார்ட்டுக்கு அப்பளை பண்ணிட்டு
நிரந்தரமா செட்டில் ஆகிடுவேன். பிள்ளைகள் இருக்கும் இடம் தானே இனி நமக்கு புகலிடம்.”
என்றார் அவர். தொலைந்து போன குழந்தை போல் லட்சுமி விழித்தாள்.
“என்னாச்சு லட்சுமி.? எங்கே போனாலும் உன்னுடன் தொடர்பில் இருப்பேன். வீடியோ
காலில் பார்த்து பேசிக்கலாம்.” என்றார். அது நேரில் பேசுவது போல் இருக்குமா.? சரி
என்றாள் பலகீனமாக.
“நீ இப்படி மூஞ்சியை தொங்க போட்டால், நான் எப்படி அங்கு நிம்மதியா இருப்பேன்.?”
“அங்கே போனதும் எங்கே உங்களுக்கு என் நியாபகம் இருக்கப் போறது.? இருந்திருந்து
எனக்கு ஒரே ஃப்ரெண்ட் கிடச்சுதுன்னு நினச்சேன். எனக்கு எதுவும் நிலைக்காது போல.”
என்று கண் கலங்ககினாள்.. அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் “அது….” என்று
இழுத்தபடி நிறுத்தினார்.
“நான் சுயநலமா யோசிக்கிறேன். என்னை மன்னியுங்க. சந்தோஷமா போயிட்டு வாங்க.
உடம்பை பார்த்துக்கோங்க. நேரநேரத்துக்கு சாப்பிடுங்க. இங்கே ஒரு ஜீவன் உங்க
ஹலோவுக்காக காத்திருக்கும்னு நினவு கொள்ளுங்க.” என்று சிரித்து விடை கொடுத்தாள்.
தொடரும்.