அத்தியாயம்—4
நாட்கள் ஓடியது. ராஜேந்தர் சொன்னது போல் அவளிடம் வீடியோ காலில் பேசினார்.
நியூயார்க் நகரில் தான் பார்த்த அதிசயங்களை கதை போல் சுவாரசியமாக சொன்னார்.
“இங்குள்ள ப்ருக்லின் பிரிட்ஜ் ஒரு அதிசயம் லட்சுமி. மேன்ஹாட்டனையும் ப்ருக்லினையும்
இணைக்கும் இந்த பாலம், கட்ட பதினாலு வருஷம் ஆச்சாம். இதன் இஞ்சீனியர் ஜானின்
பாதம் கூழாகிவிட, அவர் டெட்டனெஸ் வந்து இறந்து விட்டார். அவர் மனைவி எமிலி தான்
பதினொரு வருடம் முன்னின்று அதை கட்டி முடிக்க உதவினாராம்.”
“அப்படியா.? பெண் என்றால் பெண் தான்.”
“ஆமா. முதலில் இந்த பாலம் கொலாப்ஸ் ஆகிவிடும் என்று மக்கள் பயந்து விட.
அப்படியில்லை என்று நிரூபிக்க இருபது யானைகளை அதில் நடக்கச் செய்தனராம். நிறைய
ஃப்வால்கன் பறவைகள் வருவதும் போவதுமா இருக்கு. செம சைட்.” என்றார். இப்படி அங்கு
உள்ள காட்சிகளை நேரில் பார்ப்பது போல் சொல்வார்.
“அப்புறம்….உங்க பேரன் பேத்தி கூட ஜாலியா பொழுது போவுதா.? இங்கு எனக்கு
இன்னொரு லாஸ். ராகினி தேர்தலில் நிற்கப் போவதால் அதிரஷ்டப் பூக்கள் கிளப் தலைவி
பதவியை ராஜினாமா செய்துவிட்டாள். அருணா தான் அந்த இடத்தில் இப்ப தலைவி.
சொல்லிக்கிற மாதிரி இல்லை. அதிர்ஷ்ட பூக்கள் வாடிட்டு இருக்கு.” என்றாள்.
லட்சுமிக்கு தூண்களாக இருந்த ராஜேந்தரும், ராகினியும் அவள் ரடாரிலிருந்து விலகி விட
லட்சுமிக்கு மீண்டும் டிப்ரஷன் எட்டிப் பார்த்தது.
“லட்சுமி அக்கா முகத்தைப் பார்த்தியா.? புருஷன் இறந்தபோது கூட அவங்க இவ்வளவு
விசனப் படலை, இந்த ராஜேந்தர் சார் போனதுக்கு ஒரே வாட்டம்.” என்று ஒருத்தி கிளப்பிவிட,
மற்றொருத்தி “கணவனை விட காதலன் பிரிவு பெருசு தானே.?” அவள் காது பட பேசினார்கள்
சிரித்தார்கள். லட்சுமி வீட்டுக்கு வந்து அழுதாள். யாரிடம் சொல்ல? அம்பத்தைந்து வயதில்
காதலனா? விவஸ்தை இல்லாமல் ஏன் பேசுகிறார்கள்.? அதில் என்ன திருப்தி கண்டார்கள்.?
தாராவிடம் புலம்பினாள் லட்சுமி.
“அம்மா……கண்டுக்காதீங்கம்மா. உங்க வாழ்க்கையில் என்ன நடந்தால் அவங்களுக்கு
என்ன.?. பேத்திட்டுப் போகட்டும். ஒரு நாள் அது அவங்களுக்கே வந்து விடியும். நீங்க
வழக்கம் போல் இருங்கம்மா.” என்றாள் தாரா.
படிக்காத பெண் தாரா, வாழ்வின் யதார்த்தத்தை என்னமா சொல்கிறாள்! மகள் சினேகாவிடம்
பேசலாம் என்று லட்சுமி ஃபோன் செய்த போது, சினேகாவின் அழுகுரல் தான் அவளுக்கு
கேட்டது.
“என்னாச்சு சினேகா.? ஏன் அழற.?” பதட்டத்துடன் கேட்டாள். விசும்பி முடித்ததும் சினேகா
காரணம் சொன்னாள். பகீர் என்று வயத்தை கலக்கியது. இப்படி கூட ஒரு மனுஷி
இருப்பாளா? ஏதோ ஆறுதல் சொல்லி வைத்தாள். அவளுக்கே ஆறுதல் தேவைப்பட்டது. தன்
மகளுக்கு இப்படி ஒரு கஷ்டமா.? தட்டிக் கேட்க ஆளில்லை என்ற திமிர் தானே அந்த சம்மந்தி
அம்மாவுக்கு.? ஒரு அண்ணனோ தம்பியோ எனக்கு இருந்தா நறுக்குன்னு கேட்டுவிடுவார்கள்.
அந்தக் குடுப்பினை இல்லை. இவளால் என்ன செய்ய முடியும்.? அழத்தான் முடியும்.
ராகினி பிற்பகல் மூன்று மணிக்கு திடீரென வந்தாள். கையில் பூ பழம் என்று உற்சாகத்துடன்
வந்தாள். அவள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள். “நன்னா இரும்மா. வாழ்க்கையில்
எல்லாத்திலேயும் ஜெயித்து வெற்றி அடையனும். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை
அமையனும்.” என்று வாழ்த்தினாள்.
“அம்மா….உங்க மனசு தெரியும். அதான் இந்த நல்ல செய்தியை உங்க கிட்டே முதலில்
சொல்ல வந்தேன். எனக்கும் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகனுக்கும் கல்யாணம். நீங்க கட்டாயம்
வரணும்.” என்று பூ பழத்துடன் பத்திரிகை வைத்தாள். லட்சுமியின் முகம் மலர்ந்தது.
“எனக்கு உங்க கையால் குங்குமம் வச்சு விடுங்கம்மா.”
“தீர்க்க சுமங்கலியா, பதினாறும் பெற்று….தீர்காயுசுடன் இருக்கணும் அம்மா.” என்று
ஆசீர்வதித்து குங்குமம் வைத்தாள்.
“சரிம்மா. உங்க மேலே எனக்கு கோபம்.. ஒரு விஷயம் என்னிடம் மறச்சிட்டீங்க இல்லே.?”
“மறச்சேனா? இல்லையே.”
“நீங்க மீண்டும் பாட்டி ஆகப் போறதை மறச்சது தப்பு தானே.? சினேகா அக்கா எனக்கு
ஃபோன் பண்ணி சொல்லிட்டா.”
“அது வந்து……”
“என்ன சந்தோஷத்தையே காணும்?”
“.அவளை அபார்ஷன் பண்ணச் சொல்லி அவங்க மாமியார் வற்புறுத்றாங்களாம்.”
“என்னது? நிஜமாவ ஏன்?” அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“அவங்க மகளும் உண்டாக்கி இருக்காளாம். அம்மா வீட்டுக்கு வராளாம். ரெண்டு கர்பிணிகள்
எதிர் எதிரா பார்த்துக்க கூடாதாம். இங்கேயும் சினேகாவை அனுப்ப மாட்டாங்களாம்.
ரெண்டாவது பிரசவம் அவங்க தான் பார்ப்பாங்களாம். சினேகா நேத்து தான் சொல்லி ஓன்னு
அழுதா.” லட்சுமியின் கண்களில் நீர்.
“நீங்க எடுத்துச் சொல்லுங்க.”
“சொன்னா கேக்க மாட்டாங்க. என் கணவர் இருந்தா….”
“நிறுத்துங்க. உங்களுக்கு அவங்க கிட்டே பேச பயம். முதல்லே இந்த கணவர் இருந்தா
ஆட்டுக்குட்டி இருந்தான்னு பேசக் கூடாது. இது சட்ட விரோதம். ஃபோர்ஸ் பண்ணினா நான்
போலீஸ் புகார் கொடுப்பேன்னு சொல்லுங்க. கோழையா இருக்கக் கூடாது லட்சுமிம்மா.”
தன்னம்பிக்கையை விதைத்து விட்டுப் போனாள் ராகினி. அந்த தைரியத்தில். “அபார்ஷன்
பண்ணுவது நல்லதல்ல சம்மந்தி. உங்களுக்கு ரெட்டை மகிழச்சி தானே.? மகளும் உண்டாகி
இருக்கா. மருமகளும் உண்டாகி இருக்கா.” என்றாள்.
“பொண்ணை கட்டி கொடுத்தாச்சு இல்லே. நீங்க இதில் தலையிட வேண்டாம். போனை
வையுங்க.’ கடுமையாக பேசினாள் ராஜி.
“அப்படி ஏதாவது நடந்தா உங்க வீடு தேடி போலீஸ் வரும்.” என்று துணிந்து
சொல்லிவிட்டாள் லட்சுமி. ஷாக் ஆகிவிட்டாள் ராஜி.
“எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசணும்.? சரி சரி கூல். சினேகாவை அங்க அனுப்பி
விடறேன். கோவிச்சுக்காதீங்க.” என்றாள்.
அட…..நம்ம குரலுக்கு கூட முக்கியத்துவம் இருக்கே என்று லட்சுமி மகிழ்ந்து போனாள். சாதா
லட்சுமி தைரிய லட்சுமி ஆனாள். ராகினியின் உபயம்.. அண்ணன் வேண்டும் தம்பி வேண்டும்
என்ற பேச்சுக்கே இடமில்லை. லட்சுமி புரிந்து கொண்டாள். இதுவரை அவள் வாழ்ந்தது
எல்லாம் கொடி போல. கணவனை படர்ந்தே வாழ்ந்தாள். இனி அவள் மரம். வேப்ப மரம். எந்த
புயல் மழை, அசுரக் காற்று வந்தாலும் நின்று சவால் விடும் மரம். எதிர் நீச்சல் அடிக்க. ராகினி
கற்றுத் தந்தாள். அருணா குடும்பம் மாற்றல் கிடைத்து போக, .மீண்டும் யார் அதிரஷ்டப்
பூக்களின் தலைவி என்ற நிலைமை. அமிர்தா என்ற வட நாட்டுப் பெண் தலைவி பதவி
ஏற்றாள். அமிர்தா ஹிந்தியில் பேசுவதும், ஆங்கிலத்தில் பேசுவதும் என்று சொதப்பினாள்.
சிலருக்கு ரெண்டு பாஷையும் தெரியாததால் அதிருப்தி தெருவித்தனர். அவர் ஒரு அரசியல்
பிரமுகரின் மனைவி என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சங்கத்து மீட்டிங்கில்
உறுப்பினர்கள் குறைய ஆரம்பித்தனர். லட்சுமிக்கு ஹிந்தியும் ஆங்கிலமும் நன்றாக தெரியும்
ஆதலால் மொழி பெயர்த்து சொல்ல முன் வந்தாள்.
அவள் வழி நடத்த ஏழை பெண்கள் இருவருக்கு சங்கம் சார்பாக கல்யாணம் நடத்தி வைத்தாள்
அமிர்தா. பெண்ணுக்கு வேண்டிய சீர் பொருட்கள் அனைத்தும் லட்சுமி வாங்கிக் கொடுத்தாள்.
தாலிக்கு மட்டும் அமிர்தா பணம் கொடுத்தாள்.
ஒரு பிரபல குக்கிங் அரசியாக இருந்த வனிதாவை அழைத்து வந்தாள் லட்சுமி. ராகினி சிபாரிசு
பேரில் அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. சங்கத்து உறுப்பினர்களுக்கு விதம் விதமான டிஷஸ்
செய்து காட்டினாள். பட்டி மன்ற பேச்சாளர் விஸ்வநாதனை அழைத்து பேச வைத்தாள்.
எல்லோருக்கும் அது பிடித்தது. அவர் போகிற போக்கில் லட்சுமி அம்மா மாதிரி
இருக்கிறவங்க, அவரை மாதிரி, பூ பொட்டு வச்சுக்கிட்டு பிற்போக்கு மரபுகளை உடைத்து
வாழனும். என்று அதை நியாயப்படுத்தி விட்டுப் போனார். இவ்வளவு பெரிய பேச்சாளர்
சொல்கிறார் என்றதும் அதில் ஒரு நியாயம் இருப்பதாக நினைக்க ஆரம்பித்தனர். கேலி
பேச்சுக்கள் குறைந்தது. லட்சுமியின் வானம் விரிவடைந்தது.
“நான் மதர் தெரேசா இல்லை. ஆனால் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களிடம் கொஞ்சம்
கருணை, அன்பு, அக்கறை காட்டுவது எனக்குப் பிடிக்கும். இதில் சாதி, மத, மொழி
வேறுபாடுகள் எதுக்கு? நாம் கண்ணீர் விடும்போது எங்கே ஒரு கை துடைக்க உயருகிறதோ,
நாம் புன்னகைக்கும் போது எங்கே ஒரு வாய் நம்முடன் சேர்ந்து சிரிக்கிறதோ. அங்கே எல்லா
மொழிகளும் புரியும் இதயம் இருக்கிறது. எஸ்….இதயம் சதுப்பு நிலம் போல்
இருக்கவேண்டும். வறண்ட பாலைவனம் போல் இருக்கக் கூடாது.” என்று சங்க
மீட்டிங்குகளில் பேசினாள்.
“இவளை குறை சொல்லக்கூடாதுன்னு குல்சங்கி போடறா.” என்றனர் பொறாமை
பிடித்தவர்கள். செயலிலும் காட்டினாள் லட்சுமி. அந்தக் காலனி குழந்தைகளுக்கு கட்டணம்
இன்றி பாடம் சொல்லிக் கொடுத்தாள். நலிந்த பெரியவர்களை ஆஸ்பத்திரி கூட்டிப் போனாள்.
தன்னால் முடிந்த நிதி உதவி செய்தாள். என்ன கஷ்டம் வந்தாலும் லட்சுமி அக்காவிடம் வந்து
நின்றார்கள். “அவங்க முகத்தை பார்த்தாலே போதும். தீர்வு கிடைக்குமுன்னு நம்பிக்கை
வருது.” என்று பேச ஆரம்பித்தார்கள். லட்சுமிக்கு நன்றி நீர் சுரந்தது. அவளையும் அறியாமல்
அவள் பலர் நெஞ்சில் இடம் பிடித்தாள்.
ராஜி மருமகள் சினேகாவை பிரசவத்துக்கு தாய் வீடு செல்ல அனுமதிக்கவில்லை. இது
லட்சுமிக்கு அவள் தரும் தண்டனை என்று கருதிக் கொண்டாள். பிரசவ சமயம் லட்சுமி
திருவனந்தபுரம் சென்று அங்கேயே ஒரு வீடு அமர்த்தி சினேகாவை தினமும் சென்று
கவனித்துக் கொண்டாள். ராஜியால் அதை மறுக்க முடியவில்லை.
இதனால் பாதிக்கப்பட்டது ராஜியின் மகள் செண்பகம் தான். அவளை தங்கை உமாவின்
வீட்டில் தங்க வைத்து விட்டாள்.. கர்பிணிகள் எதிர் எதிரே சந்திக்கக் கூடாது என்று
சொன்னவள் ஆச்சே. செண்பகத்துக்கு இது துளியும் பிடிக்கவில்லை. சித்தியின் கவனிப்பு
ஏனோ தானோ என்று இருந்தது. லட்சுமி அங்கேயும் சென்று செண்பகத்தை கவனித்து
வந்தாள். செண்பகம் நெகிழ்ந்து போனாள்.
“அம்மா உங்களை பழி வங்கறதா நினைச்சு அண்ணி சினேகாவை உங்க வீட்டுக்கு
அனுப்பலை. அதை மனசில் வச்சுக்காம எனக்கும் வந்து உதவி செய்றீங்களே.” என்று கண்
கலங்கினாள்.
“நான் என்ன பெரிசா செஞ்சுட்டேன்.? உன்னை ஆஸ்பத்திரிக்கு செக்கப்புக்கு துணைக்கு
வந்தேன். இதுக்கு போய்……”
இருவருக்கும் நல்லபடியாக குழந்தை பிறந்தது. லட்சுமிக்கு ரொம்ப மகிழச்சி. சினேகா ஆண்
குழந்தையும், செண்பகம் பெண் குழந்தையும் பெற்றெடுத்தார்கள். குழந்தைகளை கொஞ்சி.
பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு பத்திய சாப்பாடு செய்து கொடுத்து. அங்கும் இங்கும்
அலைந்து கவனித்துக் கொண்டாள் லட்சுமி. பேத்தியை பார்க்க வந்த அம்மாவிடம் செண்பகம்
சொன்னாள்.
“நீயெல்லாம் ஒரு அம்மாவா.? வீம்புக்கு என்னை உன் தங்கச்சி வீட்டில் வச்சிட்டு. கடமையை
தட்டிக் கழிச்சிட்டே. லட்சுமி அத்த பாரு, அவங்க மகளுக்காக இங்கேயே வந்து தங்கி ரெண்டு
பேருக்கும் அவங்களாலே முடிஞ்ச உதவியை செஞ்சாங்க. என்னம்மா நீ? நல்லவங்களை
மதிக்க கத்துக்க.” என்று டோஸ் விட்டாள் செண்பகம் லட்சுமி எதிரவே.
“விடு செண்பகம். அம்மாகிட்டே அப்படியெல்லாம் பேசாதே. எது நம் கையில் இருக்கு.?
ரெண்டு பெரும் நல்லபடியாக குழந்தையை பெற்று எடுத்தீங்களே. அதுவே போதும்.” என்றாள்
லட்சுமி அடக்கமாக. சிலருக்குத் தான் அந்த அடக்கம் வரும். நானாகக்கும் எல்லாம் செய்தேன்
என்று பெருமைக்கு உதவும் மனிதர்களுக்கு மத்தியில், நிஜமான மனித நேயத்தோடு.
பாசத்தோடு லட்சுமி இருந்தது ராஜியின் மனசையே நெகிழ வைத்துவிட்டது. ஆடிப்
போய்விட்டாள் ராஜி.
எல்லாம் சுமூகமாக முடிய, வீடு வந்து சேர்ந்தாள் லட்சுமி. ஒரு வருடம் ஓடிவிட்டது. லட்சுமி
ராஜேந்தரை மிகவும் மிஸ் பண்ணுகிறாள். அவரின் அக்கறையான பேச்சு இப்பொழுது
அவளுக்கு இல்லை. அவர் அதிகம் வீடியோ கால செய்வதில்லை. ஆடியோ கால் தான்.
அதுவும் நின்றுபோய் வெறும் மெசெஜ் என்றாகிவிட்டது.
லட்சுமியை சுற்றி பட்டாம் பூச்சிகள் பறந்தன. ஆனால் அவளுக்குத் தான் தேன்
கிடைக்கவில்லை. ஓடி ஓடி அன்பு காட்டினாள், அவளுக்கே அவளுக்கென்று அன்பு காட்டி
வந்த ராஜேந்தர் அவளை மறந்துவிட்டார்.