Skip to content
Home » உறவின் மொழி-5

உறவின் மொழி-5

அத்தியாயம்…5


லட்சுமிக்கு பல்லில் வலி வந்தது. டாக்டரிடம் காட்டினாள்.
“உங்களுக்கு விஸ்டம் டூத் இருக்கு. அதை பிடுங்கணும்.” என்று விட்டார். தைரிய லட்சுமி
கோழை லட்சுமி ஆனாள். தனியாக இருக்கும்போது எப்படி.? மகள் சினேகா கூட இருந்தால்
நல்லாயிருக்கும். ஆனால் அவள் கைகுழந்தைக்காரி. ரெண்டு பிள்ளைகளை பார்த்துக் கொள்ள
வேண்டிய நிலைமை. அவளை தொந்தரவு பண்ணக் கூடாது.

எப்படியோ போய் பல்லை பிடுங்கி விட்டு வந்தாள். ஒரு வாரம் ஆகியது இயல்பு நிலைக்கு வர.
தாரா தான் உதவி செய்தாள். அக்கம் பக்கம் எல்லாம் வந்து அன்புடன் விசாரித்து விட்டுப்
போனார்கள். இரவு தூங்கும் போது அமைதியான அந்த சூழலில் நினைத்தாள் ராஜேந்தர்
இருந்தால் நன்றாக இருக்கும். அவரின் ஆத்மார்த்தமான வார்த்தைகள் மனசை நிரப்பும்.
இப்படி ஃப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணிவிட்டாரே!


அடுத்த வாரம் அவள் ரொம்ப பிஸி. சங்க உறுப்பினர்களுக்கு ஸ்போர்ட்ஸ் நடத்தனும். என்ன
விளையாட்டுக்கள், யர் யார் சேர்கிறார்கள்? வெற்றி பெற்றவர்களுக்கு என்ன பரிசு
பொருட்கள் வாங்கணும் என்று திட்டமிட்டு அமிர்தாவுடன் சேர்ந்து கடை வீதிக்குப் போனாள்
லட்சுமி. அங்கே ராஜேந்தரின் ஒன்று விட்ட தங்கை மாலதியைப் பார்த்தாள்.
“லட்சுமி அக்கா எப்படியிருக்கீங்க?” ஓடி வந்து கைபிடித்தாள்.


“நல்லாயிருக்கேன் மாலதி. நீங்க எப்படி இருக்கீங்க.? உங்க அண்ணன் வந்த புதுசில் ஒரு தரம்
வந்தீங்க. அப்புறம் ஆளையே காணும். ஆமா உங்கண்ணன் யு. எஸ் சே கதின்னு கிடக்கார்
போலிருக்கு. இப்பவெல்லாம் ஃபோன் பண்ணறதே இல்லை. புது புது நட்பு வந்திருக்கும்.
என்னை எல்லாம் நியாபகம் இருக்குமா என்ன.?” இது லட்சுமி
“புதுப் புது தலைவலி தான் வந்திருக்கு. அண்ணா திரும்ப வரப் போறார். அங்கே மருமகள்கள்
சரியில்லை. மகன்கள் தலையாட்டி பொம்மைகள்.”


“என்னாச்சு மாலதி.?”
“அதை ஏன் கேக்றீங்க லட்சுமி அக்கா. அவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்திட்டாராம்.
ஒரு மாலுக்குள் போகும் கட்டிடத்து படிகளில் ஏறும்போது. விழுந்திருக்கார். காலில் சரியான
அடி. .அப்படியே ஆஸ்பத்திரி கூட்டிப் போயிருக்காங்க. ரெண்டு நாள் டிரீட்மென்டில்
அறுபதாயிரம் டாலர் காலி. மருமகள்கள் முகம் சுளிக்க ஆரம்பிக்க, அண்ணா இந்தியா
வந்திடலாமுன்னு இருக்கார். தேவைபட்டா இங்கே ஒரு ஹோமில் சேர்த்து விடலாமுன்னு
இருக்காங்க. என்ன பிள்ளைகளோ.!” என்றுவிட்டுப் போனாள் மாலதி.


லட்சுமிக்கு மனம் கிலேசம் அடைந்தது. பாவம் அவருக்கு எப்படி இருக்கோ.? மனுஷன் ஒரு
வார்த்தை என்னிடம் சொல்லியிருக்கலாம். ஹிம்….நாம் என்ன உறவா? தங்கையிடம்
சொல்லியிருக்கார். அந்தளவு என்னை க்ளோசா நினைக்கலை போலிருக்கு. லட்சுமிக்கு
வருத்தமாக இருந்தது. மறு வாரமே அவளுக்கு ஒரு மெயில் வந்தது.
“நாளை மதுரை வரேன். நீ விமான நிலயம் வர முடியுமா?’ விமானம் வரும் நேரம் எல்லாம்
குறித்திருந்தார். ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும். மறு புறம் ஒரு வலி இருந்தது. “என்னை
யாரோன்னு வச்சிட்டார். ஏக்கமாக இருந்தது. இவ்வளவு தானா அவளுக்கு அவர் தரும்
முக்கியத்துவம்.? இதமான பச்சை நிற காட்டன் புடவை உடுத்தி லட்சுமி விமான நிலயம்
போனாள். அவள் கண்கள் பரபரப்புடன் அவர் வருகையை எதிர்நோக்கியது. எத்தனை
மாதங்கள் கடந்துவிட்டது….


அவர் வந்தார். பார்த்து திடுக்கிட்டுப் போனாள் லட்சுமி. விமான ஊழியர் ஒருவர் அவரை
வீல்சேரில் தள்ளிக் கொண்டு வந்தார். அவர் அருகில் வந்ததும் அவரின் வலது கையை பிடித்து
கண்கலங்கினாள் லட்சுமி. வீட்டுக்கு வந்ததும் “என்னாச்சு சார்.? எப்ப விழுந்தீங்க.? இன்னுமா
வீல்சேர்? பிசியோதிரப்பி பண்ணலையா.?” என்று கேட்டாள்.

பதில் சொல்ல விருப்பம் இல்லாதவர் போல் விழித்து விட்டு மெதுவாக சொன்னார்.
“அதுக்கெல்லாம் எக்கச்சக்க செலவாகுமே லட்சுமி. அதான் இங்க வந்திட்டேன். மகன்கள்
இருக்கத் தான் சொன்னாங்க. என்னால் எதுக்கு செலவு.? இங்க பார்த்துக்கலாம்.”
ராஜேந்தருக்கு அங்கு நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. மூத்த மருமகள் பிரீத்தி மூன்று
மாதம் ஒட்டு புன்னகையுடன் பார்த்தாள். கொஞ்ச நாளிலேயே கணவனிடம் “ஹனி..” என்று
ஆரம்பித்து ஆங்கிலத்தில் சொன்னாள். அவருக்கு என்னவோ ஆங்கிலம் தெரியாத மாதிரி..
“இவரை சமாளிக்க முடியலை ஹனி.”
“ஏன் என்னாச்சு டார்லிங்.?’
“ரொம்ப டீமாண்டிங் டைப். நான் என்ன அவர் மனைவியா? காலையில் இட்லி தோசை தான்
வேணுமாம். பதினொரு மணிக்கு டீ. மதியம் ஒரு குழம்பு, ரசம் பொரியல் என்று விதம் விதமா
சமைக்க என்னால் முடியுமா.? ஒரு நாள் என்றால் சரி. தினமும் இந்தக் கன்றாவியை இவருக்கு
மட்டும் செய்ய முடியுமா.? பிரெட் சாப்பிட மாட்டாராம். உங்க தம்பி வீட்டுக்கு அனுப்பிடுங்க.
துர்கா நல்ல ஹான்டில் பண்ணுவா.”


ரெண்டாவது மகனிடம் அனுப்பப்பட்டார். துர்கா அவரிடம், அவர் வந்து இறங்கியதுமே
சொல்லிவிட்டாள்.
“பிரீத்தி அக்கா பார்ட் டைம் ஜாப் செய்யறா. அவளுக்கு நேரமிருக்கும். நான் புல் டைம் ஜாப்
பார்க்கிறேன். அதனாலே எங்க புட் ஹாபிட்ஸ்க்கு பழகிக்கோங்க.” என்று தமிழில் பேசினாள்.
அவர் ஒரு ஆள் இருப்பதையே மறந்து பரபரப்பாக இயங்கினர்.
“சாவியை பத்திரமா வச்சுக்கோங்க தொலச்சிட்டு எங்களுக்கு ஃபோன் பண்ணாதீங்க அப்பா.
எங்களால் வர முடியாது. நீங்க அப்புறம் வெளியிலேயே, நாங்க வர வரை நிற்க வேண்டியது
தான்.” என்றுவிட்டு போனான் பாச மகன். இடங்களை சுற்றிக் காண்பித்தான்.


‘பெல்ட்டை சரியா போடுங்க. கருப்பு கண்ணாடி எதுக்கு? கோமாளி மாதிரி இருக்கு.”
என்றான். மரியாதை இல்லாம பேசறானே என்று திடுக்கிட்டுப் போனார். இடையில் பல
மையில்கள் தான் பிரித்துவிட்டது என்று நினைத்திருதார். அருகில் வந்தும் வெகு தூரத்தில்
இருப்பது போல் பட்டது. இடையிடையே பிச்சை போடுவது போல் கொஞ்சம் அன்பான
வார்த்தைகளை சொன்னான். குளிர் காலம் வந்ததும் ஸ்வெட்டர் வாங்கிக் கொடுத்தான். ஏதோ
அந்நியன் போல் உணர்ந்தார்.


மெக்சிகன், தாய் ரெஸ்டோரண்ட் என்று கூட்டிப் போனான். பழக்கமில்லாத பேர் தெரியாத
உணவினை சாப்பிட அவருக்கு பிடிக்கவில்லை.
“நல்லாயிருக்கும் பா. எப்பபார் தோசை இட்லி தானா.? என்ஜாய் புது புது டேஸ்ட்.” என்று
சிரித்தான். எல்லா இடமும் சுற்றிக் காட்டினான். மூத்த மருமகள் இளய மருமகளிடம் போனில்
பேசுவது கேட்டது.


“உன் கிட்டே மாமா வாலை சுருட்டிட்டு இருக்கார் போலிருக்கு.” மூத்த மருமகளின் கேள்வி.
“ஆக்சுவலி ஹி இஸ் நைஸ். நோ பாதரேஷன். எங்க கோக்கோ மாதிரி. போட்டதை
சாப்பிடுவார். நோ டிமாண்ட்ஸ்.” என்று சிரித்தாள் இளைய நிலா. கோக்கோ அவர்கள்
வளர்க்கும் நாய்.

ஒரே ஆறுதல் பேரன் பேத்தி தான். அந்த பிஞ்சுகள் அவரிடம் கதை கேட்பார்கள்.
கொஞ்சுவார்கள். கூட படுத்துக்க ஆசைப்படுவார்கள். அருகில் உள்ள பார்க்குக்கு கூடிப்
போவார். ஊஞ்சலில் ஆட்டுவார். சனிக்கிழமை தோறும் தமிழ் வகுப்புக்கு கூடிப் போவார்.
அவரும் தமிழ் எழுத கற்றுக் கொடுத்தார். “அவர் குழந்தைகளை நன்றாக பார்த்துக்
கொள்கிறார்.” என்று கணவனிடம் மாமனார் பத்தி நல் வார்த்தை சொன்னாள் இளய நிலா.
மூத்தவ எப்போதும் அம்மாவாசை தான். நெருங்க விடலை.


முதல் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, அவர் பிடிக்காத உணவு பழக்க வழக்கம் எல்லாம்
அட்ஜஸ்ட் பண்ணி இருக்க ஆரம்பித்தார். குழந்தைகளின் கள்ளமற்ற அன்புகக்காக அவர்
அங்கு இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
லட்சுமியுடன் அவர் பேச விரும்பி பேசிய போது. அதை முதலிலேயே கட்ட பண்ணிவிட்டாள்
இளயநிலா.


“பேசிட்டுப் போறார். விடு.” என்றான் மகன்.
“வள வளன்னு பேசிட்டு இருக்கார். இர்ரிடேட்டிங்கா இருக்கு. அவர் கேர்ள் ஃப்ரெண்டு போல.
உங்க அப்பா கில்லாடி தான். ஆசாரம் ஆசாரம்ன்னு சொல்லிக்கிட்டு இந்த நாட்டு வழக்கப்படி,
இந்த வயதில் கேர்ள் பிரெண்ட் பிடிச்சிருக்கார். அதிலே மட்டும் மேல்நாட்டு பாணி
இனிக்குதோ.?” என்று கிண்டல் அடித்து பேசி வந்தாள். எனவே அவர் அது பொறுக்காமல்
மெஜெஜ் மட்டும் அனுப்பினார். அதுக்கும் ஒரு கம்மெண்ட் வந்தது.


“எந்த நேரமும் போனில் மெசேஜ் தட்டிட்டு இருக்கார். காதலிக்கு தான் போலும்.” என்று
கிண்டல் செய்ய மகன் கோபமாக திட்டினான்.
“என்னவோ செய்திட்டுப் போறார் உனக்கென்ன.? சும்மா கிரிட்டிசைஸ் பண்ணிட்டு.”
என்றதும் “உங்கப்பா பத்தி ஒண்ணும் சொல்லப்படாதா?” என்றாள். இந்தப் போலி உலகத்தில்
அவரால் இருக்க முடியவில்லை.
“ஊருக்குப் போறேன் பா.” என்றார் மகனிடம். ரெண்டு மகன்களும் சண்டைக்கு வந்தனர்.
“என்னப்பா இது? உங்களை எப்படி தனியா விடறது.? ரொம்ப மறதி ஆகிவிட்டது. உங்களை
அங்கே அனுப்பிவிட்டு நாங்க இங்கே கவலைப்பட்டுக்கிட்டு இருக்க முடியாது. கிரீன் காரட்
அப்பளை பண்ணப் போறோம். பேசாம இருங்க.” என்றார்கள்.


கொட்டிலில் கட்டிய மாடு போல், புல்லை தின்று கொண்டு, சுருசுருப்பில்லாத செத்த
வாழ்க்கை வாழ முடியவில்லை. நான் நானாக இருக்கணும். மனைவி இறந்து இத்தனை
வருடம் ஆகிவிட்டது. சோகம் தான் என்றாலும் சுதந்திரமா வாழ்ந்தார். இன்று ஏதோ அடிமை
போல் உணர்ந்தார். மங்கை நீ இருந்திருந்தால் நான் இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்காது.
மனைவி இறந்த பிறகு ஒரு ஆண் வாழவே கூடாது. அதுவும் மகன்களிடம். அதுவும் வெளி
நாட்டில்….எதுவும் கேட்க பயம். காசு அவர்கள் செலவு செய்ய வேண்டுமே….டாலர்கள்
அவரிடம் ஏது?


அவருக்கு லட்சுமியின் நினைவு அடிக்கடி வருகிறது. அவரை ஹீரோவா பார்த்தவள் அவள்.
கம்பீரமாக இருந்தார். இங்கே நாய் கோக்கோவோடு செல்லப் பிராணி ஆக்கிவிட்டார்கள்.
அவர்கள் மேல் தப்பில்லை. அவருக்குத் தான் இந்த டம் வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை.
எப்படிடா கழற்றிக் கொள்வது என்று அவர் சிந்தித்திருந்த நேரம் வாகாக விழுந்து விட்டார்.

“இந்தியா போறேன். அங்கே போய் சரி பண்ணிக்கிறேன்.” என்று அடம் பிடித்தார்.
எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.
“விடுங்க.. அவருக்கு அவர் கேர்ள் பிரெண்ட் கூட இருக்க ஆசை போலிருக்கு. அவருக்கு
பிடித்த வாழ்க்கையை அவர் வாழட்டுமே.” என்று துர்கா சொல்லிவிட்டாள்.
“ஆமா. நமக்கு அங்கே வாழ பிடிக்குமா? அது போல அவருக்கு இங்கே பிடிக்கலை. இட்ஸ்
நேச்சுரல்.” என்றுவிட்டாள் பிரீத்தி.


“புருஞ்சுகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.” என்றார் துர்காவிடமும் பரீதியிடமும்.. அவர் இங்கு
இருப்பதில், அவருக்கு இருந்த ஓவ்வாமையை புரிந்து தான் அப்படி சொல்கிறார்கள் என்று
புரிந்து கொண்டார்.


“அப்பா…..என்னப்பா உங்களுக்கு இங்கே குறை? செலவானா பரவாயில்லே கால்முறிவை
சரி பண்ணிடலாம். பிளீஸ்.” என்று இரு மகன்களும் மன்றாடினர். அப்பொழுது தான்
அவருக்கே அவர்கள் தன் மேல் காட்டிய அன்பு அக்கறை புரிந்தது. மனசு இளகியது.


“இல்லேப்பா. உங்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பலே. ரொம்ப முடியலைன்னா இங்க தானே
வரணும்?” என்றார். கிரீன் கார்டுக்கு விண்ணபித்து விட்டுத் தான் அனுப்பினார்கள்.
“இது தான் நான் அமெரிக்காவில் வாழ்ந்த கதை லட்சுமி.” என்றார்.
லட்சுமி அவரை யோசனையுடன் பார்த்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *