எண்ணத்தில் தெளிவு
கிச்சனில் இருந்தாலும் காமாட்சியின் கண்கள் நொடிக்கு ஒரு முறை வீட்டு வாசலிலே ஏறிட்டன. ஆம், இருக்காத எப்பொழுதும் கல்லூரி முடிந்து சரியாக நான்கு மணிக்கெல்லாம் வீட்டு வாசலில் நந்தனி ஸ்கூட்டி சத்தம் கேட்குமே ! இன்று 4.45 ஆகியும் அவளை காணாது தவித்து கொண்டு இருக்கிறாள். அவளது தவிப்பை புரிந்தவராக வரதராஜன்.
”ஏன்? இப்படி பதறுகிறாய் உலகம் தெரிந்த பெண் நந்தினி என்று…” கணவன் முடிக்கும் முன்னரே , காமாட்சி ஆரம்பித்தாள்.
”இப்படியே செல்லம் கொடுப்பதால் தான் அவள் இஷ்டதிற்கு ஆடுறா…” அதற்கு பின் வரதராஜன் வாய் திறக்கவில்லை .
”எப்ப பார்த்தாலும் ஒரு மொபைல் கையில் வைத்து கொண்டு பேஸ்புக் , டூவிட்டர், வாட்ஸ் அப்-னு சுத்தறா. ஏன் ஒரு போன் அந்த மொபைலில் இருந்து பண்ணக் கூடாதா?” என ஆரம்பிக்கவும் நந்தினி கையில் அடிப்பட்டு கட்டு கட்டிய ஒரு நாய் குட்டியோடு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
மஞ்சள் நிற சுடிதாரில் துப்பட்டா மீது ரத்தக் கறைப்பட்டு இருந்தது.
காமாட்சி ஒரு நிமிடத்தில் அடிப்பட்ட நாய்க்குட்டியை எடுத்துகிட்டு வந்து இருக்கானு ஊகித்தாள். நந்தினி நாய் குட்டிக்கு ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றியவாறே பேச, ‘இல்லை , இல்லை’ கத்த ஆரம்பித்தாள்
.
”ஏன் ? நான்கு மணிக்கே வீட்டிற்கு வந்து அடனன்ஸ் கொடுக்கனுமா ? இது என்ன ஹாஸ்டலா? இல்லை சுதந்திரமா இருக்க விரும்பும் வீடா ? ஒரு சின்ன உயிர் கார்ல அடிப்பட்டு ரத்த வழியறச்ச அதை காப்பாற்றுவது முக்கியமா? இல்லை போன் எடுத்து பெர்மிஷன் கேட்டு வீட்டுக்கு தகவல் சொல்லி முடிச்சு அதுக்கப்பறம் ஹாஸ்பிடல் போறது முக்கியமா?” என பொரிந்து தள்ளினாள்.
காமாட்சி அதன் பின் வாயை திறக்க வில்லை. ஆம் அவளுக்கு தெரியும் நந்தினியின் பேச்சிற்கு எதிர் வாதம் புரிந்தால் தோற்பது நிச்சயம் ! அதுவும் இது போன்ற நிகழ்வுகள் தான் பார்த்திராது இல்லையே, போன மாதம் இப்படி தான் லேட்டாக வந்தால், நேராக கிச்சனில் காமாட்சியிடம்,
“அம்மா எனக்கு ஒரு ஆரஞ்சு ஜூஸ் ” என கூறி சோபாவில் அமர்ந்தாள். ஜூஸ் போட்டு எடுத்து சென்று கொடுக்கும் போது தான் பார்த்தாள். நந்தினியின் கையில் பிளாஸ்திரி,
”என்னடி , இது ? ” என கேட்க,
”ரத்த தானம் பண்ணிவிட்டு வரேன் அம்மா ” என்றாள்.
”இப்படி உடலை கெடுத்துகிட்டு என்னடி பண்ற? வயசு பெண்ணுக்கு இது தேவையா?” உடனே நந்தினியோ,
” இது நல்ல விஷயம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் கொடுப்பது நல்லது ” என நீட்டி முழக்கி ஒரு கட்டுரையே சொல்லி விட்டாள். இப்பொழுது நாய் குட்டிக்கும் மனிதாபிமானம் என்று ஒரு விரிவுரை கூட கொடுப்பாள். எதற்கு வம்பு என்று காமாட்சி பேச்சிற்கு முற்று வைத்தாள்.
இரவு உணவு உண்ட பின் நந்தினி தன் மொபைலை எடுத்து செல்ல மீண்டும் காமாட்சியின் மனம் யோசிக்க துவங்கியது.
எப்ப பார்த்தாலும் மொபைலை வைத்து பொழுதை போக்குகிறாள். இவளுக்கு முதலில் திருமணம் செய்யலாம் என்றாலும் மகளோ! திருமணமா? இப்பொழுது வேண்டாம் என்று தவிர்க்கிறாள். ஒரு வேளை பெண் காதலில் விழுந்து இருப்பாளோ?! என தாயின் மனம் நினைக்கையிலே இல்லை , இல்லை அப்படி இருக்காது , இருப்பினும் திருமண பேச்சை இனியும் தவிர்க்க கூடாது என தன் கணவனிடம் நந்தினியை பற்றி கூறினாள். வரதராஜும் தெரிந்த தரகர் ஒருவரிடம் ஜாதகம் கொடுத்து வரன் பார்க்க சொன்னார்.
அன்று ஞாயிறு சுட சுட இட்லி , சிக்கன் கிரேவி யும் என சகுந்தலா மணக்க மணக்க செய்து விட்டு வசந்தனை அழைத்தாள் . வசந்தன் குடும்பம் நந்தினி வீடு போல அப்பா, அம்மா, மகள் என சிறு குடும்பம் அல்ல.
தாத்தா, பாட்டி , அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அக்கா, மாமா என குடும்ப வட்டம் பெரிது . ஹாலில் சாப்பிட அமர்ந்த பின் நந்தினி என்ற பெண்ணின் ஜாதகம் பொருந்தி வருகிறது. பெண் பிடித்தால் மறு பேச்சினை ஆரம்பிக்கலாம் என தரகர் கொடுத்த நந்தினி புகைப்படம் மேஜையில் வைக்கப்பட்டது.
யாவரும் மாறி மாறி புகைப்படம் பார்த்து பெண் ”ஒ.கே . சூப்பர்” என்றனர்.
கடைசியாக சகுந்தலா வசந்தனிடம்,
”நேரம் எடுத்து நல்லா பார்த்து முடிவு சொல் வசந்த்” என்றாள். நந்தினி புகைப்படம் எடுத்து தன் அறையில் நுழைந்தவன் அடுத்த அரை மணி நேரத்தில் நல்ல பதிலாக “பெண் பிடித்திருக்கிறது ” என ஒற்றை வரியாக கூறி முடித்தான் .
காமாட்சிக்கு சுடு தண்ணிரில் காலை விட்டு கொண்டு துடிப்பது போல பதட்டம், பயம். இருக்காத பின்னே! நந்தினியை பெண் பார்க்க வர போகிறார்கள். விருந்தினரை உபசரிக்க டீ, ஸ்வீட் காரம் என உணவுகள் எல்லாம் தயார்… என்ன? இன்னும் பெண்ணிற்கு (நந்தினிக்கு ) விஷயம் கூற படவில்லையே !?
கல்லூரி முடிந்து வந்து இருந்த நந்தினியிடம் திக்கி திணறி ஒருவாறு காமாட்சி கூறி முடிக்க எவ்வித மாற்றம் இன்றி,
”சரி .! உங்கள் இஷ்டம். ஆனால் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றால் நோ தான், பிறகு என்னை குறை கூற கூடாது” என்றாள். காமாட்சிக்கு சண்டை போட்டு, கத்தி ஆர்ப்பாட்டம் போடுவாள் என நினைக்க இது இனிய அதிர்ச்சியாக இருந்தது .
கப்போர்ட் திறந்து தனக்கு பிடித்த சிம்பிள் ஆன சேலை எடுத்து உடுத்தி கொண்டாள். நந்தினியின் தாயாருக்கோ இது கனவு போல் இருந்தது . சற்று நேர அமைதிக்கு பின் வசந்த் குடும்பம் வந்து இறங்கினர் . விருந்தினரை வரவேற்று உபசரித்து ஸ்வீட் , காரம் என உண்ட பின், பெண் பிடித்திருக்கு என சகுந்தலா வீட்டினர் மன நிறைவோடு கூறினார்.
வசந்த் மட்டும் தன் தந்தையிடம் பெண்ணிடம் பேசனும் என்று கூற முதலில் விழி பிதுங்கினாலும் சற்று சமாளித்து நந்தினி வீட்டார் பேச அனுமதி அளித்தனர்.
வசந்த் எப்படி பேச்சை எடுக்க என யோசிக்க முயலுகையில், நாய் குட்டி ஓடி வர, வசந்திற்கு ஏதுவாக மாறியது.
”நாய்குட்டிக்கு காலில் அடிபட்டது சரி யாகி விட்டதா?” என கேட்டவாறு அதனை தூக்கி தடவி கொடுத்தான்.
”ம்ம்ம் …” என்றவாறு கூறிய நந்தினிக்கு முதலில் ஏதும் தோன்றவில்லை பிறகு,
”அது எப்படி? உங்களுக்கு…?” என கேட்க வசந்தனோ,
” உன் புகைப்படம் கொடுத்த அன்று உன் (முக நூலில் ) பேஸ் புக், போய் பார்த்தேன். அதில் உனக்கு பிடித்தவை கண்டேன். நாய்க்குட்டி அடிபட்டது, ரத்த தானம் கொடுத்தது, ரோஜா செடி வளர்ப்பது என உன் தோழியிடம் கமெண்ட் பேசியது பார்த்தேன். அதை விட உனக்கு ஜாயென்ட் பேமலி தான் ரொம்ப பிடிக்கும்ன்னு கூறி இருந்தாய்… அப்பொழுதே உன்னை மிகவும் பிடித்து போயிருந்தது. உனக்கும் என்னை பிடிக்கிறதா?!” என புன்னகையோடு பேசி முடித்து கேள்வியோடு அவளது விழியினை அலசினான்.
நந்தினிக்கு இதுவரை வராத வெட்கம் எப்படி உள்ளே புகுந்ததோ ..?! ஓடி சென்று தன் தாயிடம் சிரித்தவாறே தஞ்சம் அடைந்தாள். இதே போல் வெளியிலும் பெரியவர்கள் நந்தினியின் பெற்றோரிடம் வசந்த் கூறியதை கூறி முடித்தனர்.
தன் மகள் மீது இதுவரை இருந்த பயம் மாறி பெருமையாக இருப்பதை உணர்ந்தாள் இரு குடும்பமும் தொலைபேசி என்னை பறி மாறி கொண்டார்கள். நிச்சயதார்த்தத்திற்கு நல்ல நாள் பார்த்து பறி மாறி கொண்டார்கள்.
வரதராஜன் காமாட்சியிடம் பார்த்தாயா? நீ தான் போன், பேஸ்புக், டூவிட்டர், வாட்ஸ் அப்னு இளைய தலை முறையை பாழ் ஆக்கும் -னு பயந்து கிட்டே இருந்தே நந்தினிக்கு எப்பொழுதும் தெளிவான எண்ணம் உண்டு .
“தீயினால் விளக்கு ஏற்றவும் செய்யலாம், ஒரு குடிசையை எரிய விடவும் செய்யலாம் ஆனால் அத்தகைய தீயை எப்படி பயன் படுத்துவது என அறிந்தாலே போதும். என் மகள் அத்தகைய தெளிவான அறிவை பெற்றவள் என்றார்.
காமாட்சிக்கு இது நாள் வரை இருந்த பயம் துளியும் இல்லாது போயின ஆம். எத்தகைய புது கண்டு பிடிப்புகள் இளைய தலை முறையை சென்று அடைந்தாலும் “எண்ணத்தில் தெளிவு” இருப்பின் பயம் ஏது!!!
— பிரவீணா தங்கராஜ் .
Good story