அத்தியாயம்-2
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
கமலி தனது உடமையை எடுத்து வைத்திருந்த பையில் தலைசாய்த்து ஜன்னலோடு ஒன்றினாள்.
ஏசி பஸ் அவளது கோபத்தை தணிக்க போராடியது. அதை விட விஷ்ணுவின் நினைப்பு இதயத்தை கொன்று புதைத்தது.
அவ்வளவு எளிதில் பிரேக்கப் என்கின்றானே? அவ்வளவு தானா? இதே எண்ணங்களில் மோத பயணத்தில் உணவு உண்பதை மறந்து போனாள்.
இடையில் கார்த்திகா போன் செய்ததை எடுக்கவும் தோன்றாமல் வெறித்தாள்.
கார்த்திகா கூட, “ஓ.. விஷ்ணு கூடயிருக்கானா? மேடம் அதனால் என் போனை கண்டுக்கலை” என்று வாட்ஸப்பில் அனுப்பினாள்.
அவன் இருந்தால் தன் தோளில் கைப்போட்டு, கதை பேசி, சிரிக்க வைத்து, முத்தம் கேட்டு இல்லாத இம்சை புரிபவனே.
வழிநெடுக அவன் நினைவு நெஞ்சை அழுத்தியது.
நர்ஸிங் படிக்கும் போது, சில நேரம் அவள் படிக்கும் இடத்தில் இருக்கும் மருத்துவமனையில் அடிப்பட்டு யாரேனும் வந்தாள். முதலுதவி செய்ய இவர்களை நியமிப்பார்கள்.
அவ்வாறு முதலுதவி செய்யும் பிரிவில் கார்த்திகா மற்றும் கமலி இருவர் இருந்த சமயம் விஷ்ணு தன் தோழன் ஆனந்தை அழைத்து வந்திருந்தான்.
கமலி ஆனந்திற்கு நெற்றியில் கட்டுப்போட, கார்த்திகா ஆனந்தின் பெயர் விலாசம் போன் என்று பதிவில் குறிப்பிட்டு கொண்டிருந்தாள்.
“எப்படி அடிப்பட்டது? என்ற விவரத்தை கேட்க, “வேற யாருங்க இப்படி பாசமா அடிச்சிருப்பா. எல்லாம் இதோ நிற்கறானே நண்பன் இவன் தான் அடிச்சது” என்றதும் கமலி யாரென்று விழி நிமிர்த்தி ஏறிட அங்கே தன் வெள்ளி காப்பில் இரத்தத்துளிகள் இருக்க அதனை பஞ்சால் துடைத்து குப்பையில் போட்டு திரும்பிய விஷ்ணுவை கண்டாள்.
சிலருக்கு மட்டுமே கண்டதும் ஈர்க்கும் களையான முகம் வாய்க்கும். அந்த வரிசையில் விஷ்ணுவும் ஆணழகன்.
கார்த்திகாவோ, ‘பிரெண்டுன்னு சொல்றிங்க. இப்படி அடிச்சிருக்கார். இதென்ன விளையாட்டா? ஜஸ்ட் மிஸ் கண்ணுல பட்டு கண்ணு தெரியலைனா என்ன பண்ணுவாராம்” என்று எரிந்து விழ, “ஹலோ உன் வேலையை மட்டும் பார்க்கறியா?” என்று விஷ்ணு கடுகடுத்தான்.
“இந்த மாதிரி பிரெண்ட்ஷிப் தேவையா?” என்று கார்த்திகா ஆனந்திடம் உரைத்தாள்.
அதில் வெகுண்டெழுந்த விஷ்ணுவோ, “ஏய் லூசு. அவன் எனக்கு பிடிச்ச புரப்பஸர் பெயரை போர்ட்ல கிறுக்கி ஐலவ்யூனு போட்டு வச்சியிருக்கான்.
பாடம் நடத்தறவங்க கடவுளுக்கு சமம் இல்லையா? அதுவும் எனக்கு பிடிச்ச மேம். அதான் டஸ்டர் வச்சி அடிச்சேன். இவன் நேரம் போர்டுல படறதுக்கு பதிலா நெத்தியில பட்டுடுச்சு.” என்றான்.
அப்பொழுதும் கார்த்திகா விஷ்ணுவின் திமிரான நடத்தையால் முகம் திரும்பிக் கொண்டாள்.
“அடிவாங்கிய என் பிரெண்டே சும்மாயிருக்கான். இது துள்ளுது” என்று முனங்க, கமலி மட்டும் லேசான சிரிப்பில் அடிக்கடி ஏறிட்டாள்.
“நீ வெளியே நிற்கறியா?” என்று கார்த்திகா எறிந்து விழ, “நானா.. போனா… தானா… வருவானா இவன். ஏய் ‘ஏஞ்சல்’ நீ சொல்லு” என்று கேட்க, கமலி திடுக்கிட்டாள்.
அத்தனை பேர் எதிரே தன்னை ‘ஏஞ்சல்’ என்கின்றானே?
கமலி திடுக்கிட்டு திருதிருவென விழிக்க, ”உன்னை சிஸ்டர்னு கூப்பிட மனசு வரலை. அதான் ஏஞ்சல்னு கூப்பிட்டேன். ஏன் முழிக்கற?” என்று கேட்டான்.
கார்த்திகாவோ “ஏய் மிஸ்டர் என்ன பெரிய பிளேபாயா? பில்லை கொடுத்துட்டு கிளம்பு” என்று திட்ட, விஷ்ணு ‘பின்ன இங்கேயே இருக்க முடியுமா?’ என்றவன் கமலியை பார்த்து பார்த்து, பார்வையால் தாக்கி சென்றான். அதன் பின் அடிக்கடி அதேயிடத்தில் சந்திக்க நேர, காதலை சொல்லிவிட்டான். கமலிக்கு விஷ்ணு மீது கண்ட நாள் முதலாய், மனதில் ஒரு துள்ளல் பிறக்க, அவளுமே மற்றதை யோசிக்காமல் காதலில் விழுந்தாள்.
அதற்குபின் வந்த வருடங்கள் எல்லாம் இருவரின் சந்திப்பு, சாதாரணமாக நிகழ்ந்தது.
கடந்த இரண்டு வாரமாக கமலி ஊருக்கு நிரந்தரமாக போவதால், எப்படியாவது விஷ்ணுவை அக்கா மாமாவிடம் நிறுத்திட நினைத்தாள்.
விஷ்ணுவோ கூடுதலாக ஒரு வருடம் கேட்டு நின்றான். இதோ தற்போது சண்டையிட்டு அழுது களைத்து, கமலி ஓய்ந்தாள்.
கமலி சென்னை வந்திறங்கவும் கால் போன திக்கில் பேருந்து மாறி, சென்ட்ரல் வந்து, பின்னர் ஆவடிக்கு இரயிலில் பயணத்தை தொடர்ந்தாள்.
கார்த்திகா இம்முறை அழைக்கவும், மூக்குறிந்து, “சொல்லு கார்த்திகா?” என்றாள்.
“வீட்டுக்கு போயிட்டியா? உன் விச்சு என்ன சொல்லறான்? கூட இருக்காரா?” என்று ரகசியமாக கேட்டாள்.
கமலியோ, “அவன் வரலை கார்த்தி. இனி வரமாட்டான்.” என்று வலியோடு நடந்ததை கூற, என்ன ஏதென கார்த்திகா பல வினாக்களை எழுப்பினாள்.
“விஷ்ணு என் அக்கா மாமாவிடம் வந்து பொண்ணு கேட்க மாட்டானாம். காத்திருக்க பிடிக்கலைனா பிரேக்கப் பண்ணிடலாம்னு கூலா சொல்லிட்டு போயிட்டான்.” என்று முகம் பொத்தி பேசினாள்.
கார்த்திகாவுக்கு கமலி நிலை புரிய, “ஏய் கமலி உண்மையை தான் சொல்றியா?” என்றிட அவளது உடைபெடுத்த அழுகை உண்மை தவிர வேறென்ன கூறுவேனென்று சொல்லாமல் உரைத்தது.
“இடியட் எதுலையும் அவசரம். அவன் பக்கம் மட்டும் பார்த்து முடிவெடுக்கற குணம்.
நம்ம நிலை என்ன? நாம மத்தவங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு யோசிக்கவே மாட்டான்.
கமலி நீ அழாதடி. அவன் கிடக்கான் கிறுக்கன்.” என்று கூற, அதெல்லாம் காதில் வாங்காது சமாதானமாகாமல் இருந்தாள்.
“கார்த்தி ஸ்டேஷன் வருது. நான் இறங்க போறேன். அக்கா எதிர்ல என்னால் வேற பேச முடியாது. நானா கால் பண்ணறேன்” என்று துண்டிக்க முனைந்தாள்.
கார்த்திகா அவசரமாய் “ஏய் கமலி விஷ்ணுவை நினைச்சிட்டு அழாம அக்கா மாமா பார்க்கறவனை பிடிச்சிருந்தா கட்டிக்கோடி. காதல் தோல்வி எல்லாம் பெரிய கொலை குற்றம் இல்லை.
உன்னை பத்தி கவலைப்படாதவனுக்கு நீ உன் வாழ்க்கையை அழிச்சுக்காதே. நல்ல முடிவா எடு” என்று கூற “வைக்கிறேன் கார்த்தி” என்று துண்டித்தாள் கமலி.
‘ஒரு பேச்சுக்காவது சரிடின்னு வாய் வருதா? இந்த கமலிக்கு. எல்லாம் இந்த விஷ்ணுவை திட்டணும். அந்தளவு மயக்கி வச்சியிருக்கான். பேரை பாரு பேரை. இவ பேருக்கு ஏத்த மாதிரி, கமலி-விஷ்ணு.” என்று முனங்கினாள் கார்த்திகா.
கார்த்திகாவிற்கு முதலிலிருந்தே விஷ்ணு திமிர் பிடிக்காது. அதனால் கிடைக்கும் நேரமெல்லாம் அவனை திட்டி தீர்க்க சலிக்க மாட்டாள்.
கமலி ஸ்டேஷனில் இறங்கி நிற்க மாமா ரங்கநாதனும், ஆறு வயது பூர்த்தியடைந்த அக்கா மகள் ஐஸ்வர்யாவும் காத்திருந்தனர்.
ஐஸூ தந்தையின் கையை உதறி, “சித்தி.” என்று ஓடிவந்தாள்.
“ஐஸூ மெதுவா” என்று ரங்கராஜன் கத்த, அதற்குள் சித்தியை தேடி வந்து சேர்ந்தாள்.
லக்கேஜ் பையை கீழே போட்டு அக்கா மகளை கட்டி அனைத்து முத்தமிட்டாள் கமலி.
“சித்தி இனிமே உனக்கு காலேஜ் முடிஞ்சிடுச்சுனு அம்மா சொன்னாங்க. இனி என் கூடவே விளையாடுவியா?” என்று கேட்டு சிரிக்க, “ஆமாடா பட்டு” என்றாள் கமலி.
ரங்கநாதனோ “உங்க சித்தியை பொண்ணு பார்க்க வர்றாங்க. சித்திக்கு பிடிச்சா உடனடியா கல்யாணம் பண்ணி தரப்போறேன். உங்க சித்தி கல்யாணம் முடிஞ்சு போய்ட்டா நீ யார் கூட விளையாடுவ?” என்று லக்கேஜை எடுத்தார்.
கமலி தன் கையில் இருந்த லக்கேஜை கீழே வைத்து விட்டதால் இலகுவாய் இருக்க வேண்டும். ஆனால் கமலிக்கோ ‘திருமணம்’ என்ற பேச்சு, ஸ்டேஷன் வந்ததும் ஆரம்பித்ததால் மனதில் பாரம் ஏறியது.
மாமா தன்னையே காணவும் ஒப்புக்கு சன்னமான சிரிப்பை வழங்கினாள்.
பைக்கில் ஐஸூ முன்னே அமர, பின்னால் மச்சினிச்சியை ஏற்றி ரங்கநாதன் வண்டியை எடுத்தார்.
“பையன் பேரு ஈஸ்வரன். பேங்க்ல உத்தியோகம் பார்க்கறான். கை நிறைய சம்பளம். அம்பத்தூர் ஒரகடத்துல சொந்த வீடு வாசல் இருக்கு. அப்பா தர்மேந்திரன் இறந்துட்டார். அம்மா திவ்யபாரதி மட்டும் தான். நாத்தனார் எல்லாம் இல்லை. கூடப்பிறந்த அண்ணன் ராம் மட்டும் இருந்தார்.
அவருமே சமீபத்துல ஏதோ ஆன்லைன் சூதாட்டத்துல பணத்தை இழந்து தற்கொலை பண்ணிட்டார். அண்ணனோட மனைவி தேவியும் இறந்துட்டாங்க.
அந்த கஷ்டத்துல இருப்பதால இரண்டாவது பையனான ஈஸ்வரனுக்கு பொண்ணு தேடறாங்க. நல்லபடியா கல்யாணத்தை முடிச்சா நிம்மதியா இருப்பாங்க.
என்னடா மாமா வந்ததும் வராததும் கல்யாணத்தை பத்தி பேசறாரேனு பயந்துடாதே.
எங்க அம்மாவுக்கு தெரிந்தவங்க தான். அதனால் தான் சட்டுனு உன்னை பொண்ணு பார்க்க சம்மதிச்சது.
ரொம்ப நல்ல பையன்.” என்று கூறிக்கொண்டு வர, கமலிக்கு நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.
மச்சினி எந்த பதிலும் கூறாதது தாமதமாய் உணர, ரங்கநாதன் வீடு வரவும் இறங்கினார்.
மகளை இறக்கி விட்டு வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்தினார்.
கமலியோ மெதுவாய் வீட்டுக்குள் வர, சுதா ஓடிவந்து “எப்படிடி இருக்க? ஆளே நிறம் கம்மியா மெலிந்தது போல இருக்க? ஒழுங்கா சாப்பிட மாட்டியா?” என்று கைப்பிடித்து அழைத்து செல்ல, ”அப்படியெல்லாம் இல்லைக்கா. ரொம்ப நாள் கழிச்சி என்னை பார்க்கறதால உனக்கு அப்படி தெரியுது” என்றாள்.
செம்பில் நீரை எடுத்து கொடுத்து, “உங்க மாமா வர்றவழில மாப்பிள்ளை வீட்டை பத்தி சொன்னாரா? கண்டிப்பா சொல்லிருப்பார். இந்த வாரம் முழுக்க என் காதுல ஓட்டை வர்ற வரை சொன்னாரே. உன்னிடம் தெரிவிக்காம இருப்பாரா?” என்று தண்ணீர் செம்பை வாங்கி விட்டு கமலி கையில் ஈஸ்வரன் புகைப்படத்தை திணித்தாள்.
“இதையும் உங்க மாமா தான் கொடுப்பதா சொன்னார். நான் தான் முடியவே முடியாது. என் தங்கச்சியிடம் நான் தான் முதல்ல மாப்பிள்ளை போட்டோ காட்டி அபிப்ராயம் கேட்பேன்னு மறுத்துட்டேன். பிடிச்சிருக்கா பாரு?” என்று திணிக்க, கமலிக்கு மயக்கம் வராத குறை.
மாப்பிள்ளை வீட்டாட்கள் வருவதாக தெரியும். அதற்காக இப்படியா? ஸ்டேஷன் இறங்கி பைக்கில் வரும் போதே, பெயர், குடும்பம் பற்றி புகழுரை, வாசலில் நுழையவும் போட்டோ என்றதும் கமலி ஸ்தம்பித்து போனாள்.
“என்னடி பிடிச்சிருக்கா?” என்று தோளை தீண்ட புகைப்படத்தை கவனித்தாள்.
ஈஸ்வரன் என்பவன் நன்றாக தான் இருக்கின்றான். ஆனால் விஷ்ணுவை காதலித்த இதயம் யாரையும் ஏற்காதே. இதை எப்படி கூறுவது?
இன்றே பேசி நிலைமையை மோசமாக்க கமலிக்கு விருப்பமில்லை. அதனால் “இப்ப தானே வந்தேன். இரண்டு நாள் கழிச்சு சொல்லறேன் அக்கா. ஐஸூ இங்க வா உனக்கு சித்தி என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு” என்று பார்பி டாலை எடுத்து காட்ட ஐஸூ சித்தியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு பொம்மையோடு விளையாட, கமலி நைஸாக நழுவினாள்.
சுதாவிடம் ரங்கநாதன் “இரண்டு நாள்னு சொல்லிருக்கா, இரண்டு நாள்ல அவங்களை வரச்சொல்வோமா? என்று கேட்டார்.
“இதை கேட்கணுமா? வரச்சொல்லுங்க” என்று சுதா மொழிந்தாள். இவர்களாக தங்கைக்கு நல்லது செய்ய ஆயத்தமானார்கள்.
கமலி ஐஸூவிடம் விளையாட, குளித்து முடித்து, சாப்பிட்டு, பொறுமையாக விஷ்ணுவிற்கு அழைத்தாள்.
அவனுக்கு அழைக்க வேண்டாமென முடிவெடுத்த கட்டுக்கோப்பு, உடைந்து அவனிடமே தஞ்சம் கொள்ளுகின்றது’ என தன்னையே திட்டி தீர்த்து விஷ்ணுவுக்கு அழைத்தாள்.
விஷ்ணுவின் என்னானது தொடர்பு எல்லையில் இல்லை என்று கணினி குரல் வந்தது.
கமலிக்கு நிஜமாகவே தன்னை தலைமூழ்கி விட்டானா? என்று பயந்து கார்த்திகாவுக்கு அழைத்து விவரித்தாள்.
அவளோ “அவனுக்கு என்ன திமிரு? கமலி இப்படி நீ கெஞ்சி கூத்தாடி அவன் காலடில விழணும்னு அவசியமில்லை. அக்கா சொன்ன ஈஸ்வரனை கட்டிக்கோ. இந்த காதல் கத்திரிக்கா வேண்டாம் கமலி” என்று எடுத்துரைத்தாள்.
பல்லை கடித்தபடி, “கார்த்தி ப்ளீஸ் விஷ்ணுவிற்கு உன்னை பிடிக்காது. உனக்கும் அவனை பிடிக்காது. அதுக்காக நான் அவனை மொத்தமா விடமுடியாது.
என்னால் விஷ்ணுவுக்கு தொடர்ச்சியா கால் பண்ண முடியலை. ஹால் ரூம் மொட்டைமாடின்னு அக்கா மாமா சட்டுனு பக்கத்துல வந்துடறாங்க. நீ அவனுக்கு கால் பண்ணிட்டு இரு. அட்டன் பண்ணினா என்னோட சூழ்நிலையை சொல்லு.
அவனுக்கு வாட்ஸப்ல ஆடியோ மெஸேஜ் பண்ணிட்டேன். ஆனாலும் அவன் அதை பார்க்கலைனா. ப்ளிஸ் கார்த்தி” என்று கூறவும் கார்த்திகாவும் “சரிடி ட்ரை பண்ணுறேன்.” என்று ஆறுதலுரைத்தாள்.
‘நல்ல நாள்லயே என் போனை எடுக்க மாட்டான். இப்ப இதுங்க சண்டை போட்டிருக்கு, எப்படி எடுப்பான்.
இவ வேற பெட்ரோமாக்ஸ் லேட்டே வேணும்னு சொல்லறா’ என்று முனங்கினாலும் மணிக்கு ஒரு முறை அவனுக்கு அலைப்பேசியில் அழைத்து பார்த்தாள் கார்த்திகா.
இரண்டு நாளாய் விஷ்ணு போன் சுத்தமாய் எடுக்கப்படவில்லை. அக்கா மாமாவிடமும் விஷ்ணு பற்றி உரைக்க கமலிக்கு பயம் உண்டானது. ஆனாலும் விஷ்ணு பற்றி கூறவேண்டும்.
அதற்கான தருணத்திற்காக காத்திருக்க, சட்டென வீட்டில் ‘காலிங்பெல்’ அழுத்தம் கேட்டது.
கதவை திறக்க புகைப்படத்தில் இருந்த ஈஸ்வரன் நின்றிருந்தான்.
கமலி தான் கதவு திறந்தாள். ஐஸூவோ “அம்மா சித்தப்பா வந்துட்டார்” என்று ஓடினாள்.
‘என்னது சித்தப்பா வா?’ என்று கமலி அதிர்ந்தாள்.
“உங்க மாமா வழி உறவுல நான் ஐஸூக்கு சித்தப்பாங்க. அதான் அப்படி கூப்பிட்டு ஓடறா.” என்று விளக்கம் தரவும் கமலி மனமோ இப்படியா அதிர்ச்சியை காட்டி மனதில் இருக்கும் பயத்தை காட்டுவாய்?! என ஈஸ்வரன் அருகே இருந்த மாமா ரங்கநாதனின் அம்மா தெய்வானை, அப்பா சிதம்பரம் இருவரையும் வரவேற்றாள்.
கூடவே ஈஸ்வரன் தாயாக இருக்க வேண்டும் ஒரு முதியவள். அவரது கைப்பிடியில் ஐஸூ போல சின்ன பெண் சற்று பயத்தில் இருந்தாள்.
“கமலி ரூம்ல சேலை எடுத்து வச்சியிருக்கேன். நீ போய் சேலை கட்டு நான் வர்றேன்” என்று அனுப்பினாள் சுதா.
“அக்கா.” என்று அதிர, “என் மாமியார் பார்க்கறாங்க கமலி. முதல்ல உள்ள போ, வந்து பேசறேன்” என்று அனுப்பினாள்.
தெய்வானை மற்றும் ஈஸ்வரனின் தாய் திவ்யபாரதி கமலியை தான் கூர்ந்து கவனித்தனர்.
கமலியும் அறைக்குள் பதுங்கிட, “பொண்ணு பார்க்கறதை பத்தி சொல்லை. சர்பிரைஸா இருக்கட்டும்னு” என்று வந்தவர்களை வரவேற்று அமரவைத்தாள் சுதா.
வெளியே தெய்வானை கூட ஈஸ்வரன் தாய் திவ்யபாரதி ஒருவர் மாற்றி ஒருவர் தங்கள் பேத்திகளை பற்றி பேசிக்கொண்டனர்.
அறைக்குள் “ஏன்க்கா இப்படி பண்ணற? கல்யாணத்துக்கு என்ன அவசரம்?” என்று அழுகையை அடக்கி கேட்டாள் கமலி.
கமலிக்கு தலைவாறியபடி”என்ன அவசரமா? இங்க பாரு கமலி. மாமாவால முடிஞ்ச நல்லதை செய்ய பார்க்கறார். வயசு பொண்ணை வீட்ல வச்சியிருக்க முடியாது. எங்கத்தை இருக்கே, நீ இந்த வீட்ல இருந்தா உரல்ல இடிபடற மாதிரி பேசுவாங்க. அதே கல்யாணம் பேச்சு முடிஞ்சி, நீ ஒரு குடும்பத்துக்கு போறதா இருந்தா, நீ இங்க இருப்பதை தடுக்க மாட்டாங்க.
இந்த வரன் எங்க மாமியாரே கொண்டு வந்தது. ஈஸ்வரன் நல்லா தானே இருக்கார்.” என்று கேட்டாள்.
கமலி வாய் திறக்கும் முன் ”சேலை கட்டி நகை போட்டு சீக்கிரம் வா. உங்க மாமா கூப்பிடறார்” என்று புறப்பட பேசுவதற்கு வாய்ப்பே தரவில்லை சுதா.
கமலி திக்குமுக்காடி அலங்காரம் செய்து வந்தாள்.
அலங்காரம் என்று கூறிட இயலாது. அங்கிருந்த நகையை கூட அணிந்திடாது சேலை மட்டும் உடுத்தியிருந்தவளின் கழுத்தில் சுதா நகையை மாட்டிவிட்டாள்.
தலைக்கவிழ்ந்து மெதுவாக அடியெடுத்து வந்தவளுக்குள் நடுக்கம்.
இந்த கோலத்தை மட்டும் விஷ்ணு பார்த்தால் ‘பளார்’ என்று அறைந்திடுவான். தன் காதலி இன்னொருவன் முன் அலங்காரம் செய்து நிற்பதா?
சுதாவின் மாமியார் தெய்வானை பக்கத்தில் கமலி அமரவைக்கப்பட, யாரையும் ஏறிடவில்லை.
ஈஸ்வரனோ கமலியை பார்த்து கொண்டிருக்க, கமலி நிமிரவில்லை.
இங்கு வருவதற்கு முன் திருமணம் என்றதில் விருப்பமின்றி இருந்தவனுக்கு கமலியை பிடித்திட “நான் பொண்ணுகிட்ட தனியா பேசணும்” என்றான். அடுத்த நொடியே அவ்விடம் நிசப்தமானது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super
ரொம்ப அவசர நடவடிக்கையாக இருக்கு.
எந்தன் உயிரமுதே…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 2 )
பரவாயில்லையே, அக்காவும் மாமாவும் கமலி மேல ரொம்ப பாசமுள்ளவங்களாவும், அக்கறையுள்ளவங்களாத்தான் இருக்கிறாங்க.
அட ராமா…! இப்படி வந்து இக்கட்டுல மாட்டிகிட்டாளே…! ஆனா, எனக்கென்னவோ அந்த விஷ்ணுவை விட இந்த ஈஸ்வரனே மேலுன்னு தான் தோணுது. பேசாம அந்த விதண்டவாதக்காரனோட வாழறதை விட, இந்த ஈஸ்வரனை கட்டிக்கிட்டு குப்பை கொட்டலாம்ன்னு தோணுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super super super super super
ena tha akka mama vum pasama irunthalum ithu romba fast ah edukura mudivu ava virupam kekave illa rendu perum