Skip to content
Home » எனக்காக வந்தவனே – 21

எனக்காக வந்தவனே – 21

வந்தது வேறு எந்த உயிரினமும் அல்ல, தன்னை விட்டு இன்னும் பிய்த்துக் கொண்டு போகாமல் இருக்கும் அரியவகை உயிரினம்தான் என்று தெரியவும் மெல்ல இறங்கினாள் வனபத்ரா. அதற்குள் மெலிதாக என்றாலும் வெளியே கேட்டிருந்த அலறல் சத்தத்தில் சென்னையா அவனுடைய அலுவலகத்தை நோக்கி வந்தார். நல்லவேளையாக, அவரைத் தாண்டி பிறருக்குக் கேட்கும் சத்தத்தில் அவள் கத்தவில்லை.

“இங்க என்ன பண்ற பத்ரா…”

ஜீவிதன் கேட்கவும், வனபத்ராவுக்கு உள்ளே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அவளுக்கு அவள் வேலை செய்துகொண்டிருக்கும்போது தொந்திரவு செய்தால் பிடிக்காது. அதுபோல வேலை நேரத்தில் பணியிடத்திற்கு ஏன் வந்தாய்? என்று திட்டிவிடுவானோ? என்றிருந்தது. அவளாக இங்கு வரவேண்டும் என்று வரவில்லை.

அவள் வந்தது, அபிதன் தன்னுடைய சில ஆவணங்களைக் கல்லூரியில் கொடுக்க வேண்டும் என நகலெடுத்து வைக்கச் சொல்லியிருந்தான். அதைச் செய்துவிட்டு வண்டியை எடுக்கப்போனவளை நோக்கி அந்த மாவட்ட வன அதிகாரி வரவும் அவளுக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான். அப்போதுதான் வண்டியிலிருந்து இறங்கியிருப்பார் போல. அன்று அவளை அவ்வளவு நேரம் வந்து இறக்கிவிட்டிருந்த மாவட்ட வன அதிகாரிக்கு அவளை நன்றாக அடையாளம் தெரிந்திருந்தது. அவன் பணியிடம் அருகில் இருக்கிறது என்றே அவளுக்கு அதற்குப் பின்னர்தான் தெரியும். கழுதைப்புலி எப்படி இருக்கும் என்றே அவள் இன்றுதான் இணையத்தில் தேடிப் பார்த்தாள். அப்படி எதற்காவது பிரசவம் பார்க்கிறேன் என்று உள்ளே வைத்திருந்தால்? என்று அவள் மனதிற்குள் ஓட, அதை அறியாமல் “டாக்டரைப் பார்க்க வந்தீங்களா?” என்றார்.

அவள் பதில் சொல்லும்முன்னே, பேசிக்கொண்டே அவர் நடக்கத் தொடங்க, பெரிய மனிதர் என்று வேறு வழியில்லாமல் மதிப்பு காரணமாகத்தான் பின்தொடர்ந்தாள். வேலை நேரம் என்பதால் ஜீவிதனைப் பார்க்கவரவில்லை என்று அவள் சில முறை நாசுக்காகத் தெரிவிக்க, “வேலை இல்லாத நேரம் ன்னு எங்களுக்கு என்ன இருக்கு? ஜீவிதன் பலநாள் தூங்காம கூடக் காட்டுக்குள்ள அலைஞ்சுருக்காரு… அந்த மனுஷனுக்கு இருக்கற மனசுக்கு இன்னும் அலைவாரு.. அதுக்குக் காம்பன்சேட் பண்ணிக்கலாம். தப்பில்ல.. பேசிட்டுப் போங்க…” என்று அவன் அலுவலக அறையிலேயே விட்டுச் சென்றிருந்தார் அந்த மனிதர். அதற்குமேல் என்ன செய்ய?

கூடவே, காலையில் அவ்வளவு பேசி, வற்புறுத்தி அவனை ஊட்டச்சொல்லி, பின் அப்படி வந்தது அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஜீவிதன் பத்துநிமிடத்தில் இல்லாமல் இருந்தது வேறு கோபித்துக் கொண்டானோ என்று ஓடியது. சரி வந்தது வந்துவிட்டோம்… ஒரு மன்னிப்பு கேட்டுவிட்டுப்போய்விடலாம் என்று அமர்ந்திருந்தாள்.

நேரம் செல்ல, செல்ல, எங்கிருந்தாவது ஏதாவது புகுந்து வந்துவிடுமோ என்று வேறு பயமாக இருக்க, நாற்காலியில் நன்றாகக் காலைத் தூக்கி அமர்ந்திருந்தவள், கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் அதிலேயே எழுந்து நின்றிருந்தாள். இந்தப் பின் கதை தெரியாமல் ஜீவிதனும் “டாக்ட்ரே…” என்று உள்ளே வந்திருந்த சென்னையாவும் விழித்தனர். நல்லவேளையாக, சென்னையா வரும்முன் நாற்காலியில் இருந்து இறங்கியிருந்தாள்.

அவரிடம் அவளை அறிமுகப்படுத்த, ” அந்த வனதுர்கெயுடே பேரு… நல்ல பொருத்தமான ஜோடி…” என்று அவர் சிலநிமிடங்கள் பேசிவிட்டுச் சென்றார். அவர் சொல்லும்போதே, ஜீவிதன் முகத்தில் ஒரு கிண்டல் சிரிப்பு வந்து, அவர் பார்க்கும்முன் மறைத்திருந்தான். ஆனால், வனபத்ராவின் கண்ணில் விழுந்திருந்தது. அவர் செல்லவும், “எதுக்குச் சிரிச்சீங்க?” என்றாள்.

“இல்ல.. ஒரு விவேக் காமடி வரும் இல்ல.. சினேகா.. சினேகா… இந்தப் பேர்ல விழுந்துட்டேன் ன்னு… அதை நெனச்சேன்…” என்றான் அவன் சீண்டலாக.

அவனை முறைத்தாள்.

“சரி… இங்க என்ன பண்ற? இதுவும் மேடம் ட்ரீட்மென்ட்ல ஒரு பகுதியா?”

அவன் கேட்க, வனபத்ரா என்ன சொல்லலாம்? என்று ஒருகணம் யோசித்தாள். ஆம் என்று சொல்லி, அவ்வபோது வரச்சொன்னால்? அவளால் இயலாது. உண்மையைச் சொன்னால், ஓட்டுவான் என்றும் தோன்றியது. வேகமாக யோசித்தவளுக்குக் கையில் இருந்த தம்பியின் ஆவணங்கள் கண்ணில் தட்டுப்பட, அவனிடம் அந்தக் கோப்பை நீட்டினாள்.

“ம்?”

“அபி.. ஏதோ அட்டஸ்டட் வாங்கணும் ன்னு சொல்லிட்டு இருந்தான்… நீங்க போடலாம்தானே?”

அவளுடைய உடல்மொழியில் பொய் சொல்கிறாள் என்று தெரிந்தது. ஆனாலும் கையிலிருந்த ஆவணங்கள் குழப்பியது. கூடவே,”ஒரிஜினல் வச்சிருக்கியா?” என்று கேட்டான்.

அவள் தலையாட்டவும் பொறுமையாக அதைப் பார்த்துச் சரிபார்த்து அவன் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு “நிஜமாவே இதுக்குத்தான் வந்தியா?” என்றுகேட்டான்.

“ம்ம்…”

“வீட்லயே கேட்டுருக்கலாமே…”

“மறந்துட்டேன்…”

“வரவும் கேட்டுருக்கலாமே…”

“க்ரீன் இங்க்,சீல் லாம் வச்சுருப்பீங்களான்னு தெரியல… அதான்… வேலை நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டனா?”

“இல்ல… நான் சாப்பிடதான் போறேன்…”

மணியைப் பார்த்தவள், “ஏன் இவ்ளோ லேட்டா?” என்றாள்.

“ஒரு க்ரிட்டிக்கல் பேஷன்ட்… நீ சாப்பிட்டியா?” என்றவனுக்கு அவள் வேகமாகத் தலையை ஆட்டவும் சீண்டத் தோன்றியது.

“என்கிட்ட ஒரு ரெண்டு வாய் வாங்கிட்டுப் போ…” எனவும் அவள் முகம் போனபோக்கில் அவன் சிரிக்கத் தொடங்கியிருந்தான். அவன் சிரித்ததில் இன்னும் சீண்டப்பட்டதாக உணர்ந்தவள், “கொடுங்க…” என்றாள்.

இதை எதிர்பாராமல் ஒருகணம் விழித்தாலும், “இப்பதான் ஒரு பாம்புக்கு ஒரு சர்ஜரி பண்ணிட்டு வந்துருக்கேன்…” என்றான் சீண்டலாகவே.

“பரவால…”

“ராஜநாகம்…”

“இருந்துட்டுப் போகுது…”

“அதுக்கு நுரையீரல் தொற்று…”

ஒருகணம் தயங்கியவள், “பரவால… கொடுங்க…” என்றாள்.

“சீரியசா?”

“ப்ச்… கொடுங்க…”

அவளை ஆச்சரியமாகப் பார்த்தவன், “ஹம்… இது வேலை பாக்கற இடம் வனா… வீட்ல வந்து கொடுக்கேன்…” என்றபடி அவளை வாயில்வரை வந்துதான் விட்டான்.

அன்றிரவு. தன்முன்னால் இருந்த உணவையும் வனபத்ராவையும் மாறிமாறிப் பார்த்தான் ஜீவிதன்.

“ஏட்டி?”

“ஏட்டிலாம் கிடையாது.. ஊட்டி…”

“இது ஊட்டிதான்…”

“நாளைக்குச் சிரிக்கறேன்.. இப்ப ஊட்டிவிடுங்க…”

“என்ன வனா பண்ணிட்டு இருக்க? காலைல கேட்ட சரி… இப்ப மேல அபி இருப்பான்ல? நாம இந்நேரம் பேசிட்டு இருந்தா என்ன நெனப்பான்?”

“அபி கேம்ப் போயிருக்கான், காலைலயே சொன்னேன்தான? இந்நேரம் ட்ராவல்ல இருப்பான்…”

“காலைல கேம்ப்ன்னு சொல்லல நீ…” என்றவன், அவளுக்கு ஊட்டிவிட்டான்.

“காலைல நான் நீங்க…” அவள் சொல்லும்முன் உணவை அவள் வாய்க்குள் திணித்திருந்தான்.

“ஒண்ணும் பேசாத… சும்மா கழி…”

உண்டுமுடித்தவள், உறங்கப்போகிறேன் என்று மேலே வந்திருந்தாள். உண்ணும்போது ஒன்றும் தெரியவில்லை. ஆனால், மேலே தனியாக இருக்கவும், காலையில் கண்ட காணொளிக் காட்சி நினைவுவந்து குமட்ட, அதற்குமேல் அவளால் முடியவில்லை.

முகத்தைக் கழுவித் துடைத்தபடி அவள் வெளியே வந்தவள், வாசல்நிலையில் கைகளைக் கட்டியபடி சாய்ந்துநின்ற ஜீவிதனைப் பார்த்துவிட்டு உதட்டைக் கடித்தாள்.

“எனக்குக் கொஞ்சம் இட்லிஉப்புமா இருக்கான்னு கேட்கலாம்ன்னு நெனச்சேன்… ரொம்ப பழய இட்லியா இருக்கும்போல… நான் சோம்பல் பாக்காம ஏதாவது செஞ்சே கழிச்சுக்கேன்…”

“ஜீவி.. சாரிப்பா..”

அவள் ஒரு குற்றவுணர்வில் கண்கலங்க, “அழாதட்டி… இங்க வா…” என்றான். அவள் அருகில் வரவும், “குளிச்சுக்க…” என்றபடி அவளைத் தன் மீது சாய்த்துக் கொண்டான்.

“நீங்கதான் குளிக்கணும்.. நான்தான் வாந்…”

அவள் முடிக்கும்முன் கைகளில் தூக்கியவன், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து அவளைத் தன் மடிமீது இருத்தினான். ஒருகணம் நெளிந்தவள், பின் அவன் தோள்மேல் கன்னம்வைத்துச் சாய்ந்தாள். அவன் வெறுமனே, அவள் தலையைத் தடவிவிட்டபடி இருந்தான். சில கணங்கள் கழித்து, அவள் கண்ணீரை உணர்ந்தவன், “உன்னை அழாதன்னு சொன்னேன்டி…” என்றான்.

“நான் ஒண்ணும் அழல…” என்றபடி கண்ணீரைத் துடைத்துவிட்டுச் சிரித்துக்காட்டினாள். இது ஒரு பைத்தியம் என்பதுபோல ஜீவிதன் முறைத்தான். அவனை அவள் சீண்டியது நினைவுவரவே, “ஆமா… நான் அழுதா உங்களுக்கு ஏன் பிடிக்காது? இந்த ரொமான்டிக் நாவல், சினிமா லலாம் நீ அழுதா என்னால தாங்க முடியல… அந்த மாதிரி ஏதாவது ஆகுதா?” என்றாள் சீண்டலாக. அப்போதுதான் அழுகை நின்ற குரல் என்பதால், தழுதழுத்தாலும் சீண்டல் தெரிந்தது. அவள் மீள்கிறாள், அல்லது மீள முயற்சி செய்கிறாள் என்பது புரிந்தவன், ஒத்துழைத்தான்.

“அந்தக் கருமம் லாம் இல்ல… எனெக்கு நீ ன்னு இல்ல… யார் அழுதாலும் பிடிக்காது… ஏன் ன்னு தெரியாது சின்ன வயசுல இருந்தே கடுப்பாகும்…”

“ஓஹோ… அப்ப பிறந்ததுல இருந்து ஐயா அழுதது கிடையாது?”

“அப்படி கிடையாது. மத்தவங்க அழுதா பாக்கப்பிடிக்காது. நான் அழுதா நல்லாதான் இருக்கும். ஆனா, அவ்வளவா அழுதது கிடையாது…”

“ஏன்?”

“இதென்னடி கேள்வி? அழுதா மட்டும் அந்த விஷயம் சரியாகிருமான்னு இருக்கும்… அழக்கூடாதுன்னு இல்ல… சாமானியமா எனக்கு அழத்தோணாது…”

“அம்மாப்பா அடிச்சு? டீச்சர் அடிச்சுலாம் அழுதது இல்லயா?”

“அப்பா ஒருதடவ வெளுத்துவிட்டுருக்காரு… அழுதேன்… அம்மை அவ்வளவா அடிக்காது.. அதுலயும் அழுற அளவு ம்ஹும்… டீச்சர்? நான் அடிவாங்காத டீச்சர் பி.டி டீச்சர் மட்டும்தான்…அதுக்கெல்லாம் அழுதுட்டு இருந்துருந்தா அடிவாங்க நேரம் இருந்துருக்காது…”

அவள் ஜீவிதனைத் திகைப்பாகப் பார்த்தாள். இவன் பள்ளிக்கூடத்தில் பார்க்கும் ஆசிரியரிடமெல்லாம் அடிவாங்கியிருப்பானா?

“ஏன்டி இப்படி ஒரு க்யூட் ரியாக்ஷன் கொடுக்கற? என் மூஞ்சியப் பாத்தா அடிவாங்கற மூஞ்சி மாதிரி தெரியலயா?”

அவள் வேகமாக ஆம் எனத் தலையாட்டியது அணில் போல அழகாக இருக்க, அவனையறியாமல் அவள் கன்னத்தில் முத்தமிட்டிருந்தான். அதன்பின்னே, அவன் யோசிக்க, அவள் அதைத் தனியாகக் கவனித்திருக்கவே இல்லை. இயல்பு போல என ஒன்றியிருந்தவள், “அப்படி என்ன சேட்ட பண்ணுவீங்க?” என்று கேட்டாள்.

“சேட்டயா? நானா? நான் ஒண்ணுமே பண்ண மாட்டேன்…”

“சேட்ட பண்ணாம எப்படி அடிப்பாங்க?”

“எங்க ஸ்கூல்ல அடிப்பாங்க…அதுலயும் என் பேர் ஒரு இரண்டு,மூணு தடவ ரிப்பேர் ஆயிட்டு… அதச் சரிபண்ண முடியல… என்ன பண்ணாலும் அதைக் காரணம் வச்சு அடிச்சு அடிச்சு அப்படியே எல்லா தப்பும் நான்தான் பண்ணியிருப்பேன் ங்கற மாதிரி பண்ணிவிட்டுட்டாங்க…”

“இரண்டு மூணு தடவ பேர் ரிப்பேர் ஆகற அளவு ஐயா என்ன பண்ணீங்க?”

“ம்ம்… ஒரு தடவ ஸ்கூல் சுவரேறி குதிச்சுருக்கேன்…”

“அடப்பாவி.. எதுக்கு? சினிமா ஏதும் பாக்கவா?”

“இல்ல… அப்படி போனா,அப்பாம்மாட்ட சொல்லிட்டுத்தான் போவேன்…”

“பாருடா… அப்பறம் எதுக்குக் குதீச்சீங்க?”

“பொதுவாவே கேம்ஸ் ல இருக்க பிள்ளங்க மேல சொத்தெழுதிப் பிடுங்கின மாதிரியே சில வாத்தியாருங்க சுத்துவாங்கல்ல… அப்படி நான் நைன்த் படிக்கும்போது ஒரு ஆள் ரொம்ப நோண்டிட்டே இருந்தான்… டோரனமென்ட் வர்ற நேரத்துல க்ளாஸ்ல இரி.. க்ளாஸ்ல இரின்னு… எனக்கும் க்ளாஸ் கவனிக்கப் பிடிக்கும்தான். மாஞ்சு மாஞ்சு படிக்கக்க அதக் கவனிச்சுட்டுப் போயிரலாம். ஆனா ப்ராக்டிஸ் பண்ண வேணாமா? டிரைனிங் க்ரவுண்ட்க்கே வந்து அடிச்சு இழுக்கவும் எனக்குக் கோபம் வந்துருச்சு… உங்க க்ளாஸ்ல இரிக்கறதுக்குப் பதிலா சுவரேறிக் குதிச்சு வீட்டுக்குப் போயிருவேன்னு சொன்னேன்… அதைப்பிடிச்சுட்டு அந்தாள் ரொம்ப குதிச்சான்… நான் நிஜமாவே குதிச்சுட்டேன்…”

“பிறகு?”

“பிறகு.. திரும்பவும் ஸ்கூலுக்குள்ள குதிச்சு ப்ராக்டிஸ் பண்ணப் போயிட்டேன். அந்தாள் அது தெரியாம, ஹெச்எம் ட்ட புகார் கொடுத்து, எங்கப்பாவ கூப்பிட்டு, டிசி கொடுக்கப்போறேன் ன்னு மிரட்டி… எங்கப்பா பதறிப்போய் என்னெ ஊர் முழுக்கத் தேடி, காணோம்ன்னு திரும்பி ஸ்கூலுக்கு வந்து கத்திட்டு இருந்துக்காரு… இவ்வளவு கலவரம் நடக்க நான் வாட்டுக்குச் சமத்தா ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தனா?”

“உம்…”

“நான் அடிவாங்குன கத உனக்கு ஆர்வமா இருக்குல்ல…”

“உச்… சொல்லுங்க…அப்பறமென்னாச்சு?”

“என்னாச்சு? ஒருவழியா நான் ஸ்கூலுக்குள்ளதான் இருக்கேன்னு தெரிஞ்சு எல்லாரும் கும்பலா வரவும் பக்குன்னு இருந்துச்சு… எங்கப்பா முகத்துல நான் அவ்வளவு கோபத்த அன்னைக்குத்தான் பாத்தேன்… குதிச்சியான்னு கேட்டாரு.. ஆமான்னு சொன்னேன்.. பிடி ரூம்க்குள்ளயே விட்டு வெளுத்துட்டாரு…”

“அப்பதான் அழுதீங்களா?”

“ம்ம்… அந்த ஸ்கூல்ல அத்தன அடி வாங்கிருக்கேன்.. அப்பாட்டயும் அடி வாங்கிருக்கேன்… ஆனா, அங்க வச்சு அப்பா அடிச்சது ஒரு மாதிரி அவமானமா இருந்துச்சு…ரொம்ப வேற அடிச்சுட்டாரா? ஒரு மாதிரி ஈகோ ஹர்ட் ஆகிருச்சு… உடனே அழுகல… வண்டில கூட்டிட்டு வரும்போதே அப்பா நிதானமாகியிருந்தாரு… சமாதானமா சொல்லிட்டே வந்தாரு.. ஆனா, எனக்கு அப்பா சமாதானப்படுத்த படுத்த ரொம்ப அழுக…”

“அப்பறம்?”

“வீட்டுக்கு வரவும் நம்ம ஃபைனல் பாஸ்.. அம்மெ அப்பாவ ஏசவும் சோகமாயிருச்சு… அப்பறம் நான் ரெண்டுபேரையும் சமாதானப்படுத்திட்டு இருந்தேன்…”

“க்யூட்ல… வேற எதுக்கு அழுதுருக்கீங்க?”

“வேற… ஹான்… ஒரு பொண்ணு என் லவ்வ அக்சப்ட் பண்ணலன்னு அழுதுருக்கேன்…”

“நானா?”

“சீ…இல்ல..” அவன் சொல்லிய வேகத்தில் அவனை முறைத்தாள்.

“ஹே… அப்படி இல்லடி… ஒரு விஷயம் கிடைக்காதுன்னு முடிஞ்சாதான் அதுல இருந்து ரிலீப் ஆக அழணும்… என் செல்லம் எனக்குத்தான்னு எனக்குத் தெரியும்… அப்பறம் நான் ஏன் அழணும் சொல்லு?”

“சரி… உங்களுக்குக் கிடைக்காத செல்லத்தைப் பத்திச் சொல்லுங்க…”

“ஏட்டி… அது செல்லம்லாம் இல்ல.. சும்மா ஸ்கூல்ல ஒரு க்ரஷ்… ஏழாங்க்ளாஸ் படிக்கல்ல…வெறும் லெட்டர்தான் கொடுத்தேன்…”

“ஏழாவது படிக்கறப்பவே?”

“டீனெஜ் ம்மா…வயசுக்கோளாறு…  உனக்குக் க்ரஷ் யாரும் இருந்தது இல்லன்னு சொல்லாத… நம்ப மாட்டேன்…”

“க்ரஷ்… ஆக்சுவலி இல்ல…”

“அப்ப லவ்?”

“உங்களத் தவிர இல்ல…”

“நம்ப முடியலயே…”

“சீரியசாப்பா… சைட் அடிச்சுருக்கேன்… ஆனா, க்ரஷ், லவ் ன்னு லாம் போனது இல்ல…”

“ஏன்?”

“ம்ம்… பர்ஸ்ட் ரீசன், நான் படிச்ச ஸ்கூல், காலெஜ் எல்லாமே லேடீஸ் ஒன்லி…”

“சோ சேட்…ஒரு கலர்புல்லான வசந்தகாலத்தை மிஸ் பண்ணிருக்க…”

“கலரெல்லாம் காலெஜ் வாசல்ல தெரியத்தான் செஞ்சுச்சு… “

“பாருடா…”

“ஆனா நான்தான் கவனிச்சுப் பார்த்ததில்ல…”

“ஏன்?” என்றவனுக்குக் கேட்கும்போதே, காரணம் தெரிந்திருக்க நகைக்கத் தொடங்கியிருந்தான்.

“சிரிக்காதீங்க ஜீவி…” என்றாள் அவள் கோபமாக. “எவனையாவது பிடிச்சு, அவனுக்கு நாய், பூனன்னா பிடிக்குமோ ங்கற பயம் எனக்கு இருந்தது உண்மதான்…”

“ஆஹான்… ” என்றவன் சிரிப்பை அடக்க முயன்றபடி அவளைப் பார்த்தான்.

“ஆனா, அது மட்டும் காரணம் கிடையாது… படிக்கற வயசுல காதல்ன்னு போனா, மெச்சுரிட்டி இருக்காதுன்னு எங்கம்மா நல்லா என் மூளயக் கழுவி வச்சுருந்தாங்க…எட்டாங்கிளாஸ் படிக்கும்போது முப்பத்தைஞ்சு வயசு வேன்டிரைவர் கூடக் காதல்ன்னு கர்ப்பமான பொண்ணு, டிகிரிய முடிக்கறதுக்குள்ள ரகட் பாய்ன்னு வேல வெட்டி இல்லாத, மெச்சுரிட்டின்னா என்னன்னே தெரியாத  ஆதிக்கம் பிடிச்ச பக்கத்துக்காலெஜ்க்காரன்  எவன்கிட்டயாவது விழுந்து சரியான வேலைக்கும் போகமுடியாம அந்தக் கல்யாணத்துல இருந்து வெளியவும் வரமுடியாம மிதிவாங்கிட்டு இருக்க பொண்ணுன்னு நான் நேரடியாவே பாத்துருக்கேன்… வயசுக்கோளாறு ன்னால வாழ்க்கக் கோளாறா ஆகிரக் கூடாதுங்கற எண்ணம் எனக்கு இருந்துச்சு…”

“செரிதான்… நானும் காதலால நாசமா போன பசங்கள பாத்துருக்கேன்தான்…”

“நான் யாரையும் லவ் பண்ணுவேன்னு நான் நினைச்சதே இல்ல தெரியுமா? என்னத்துக்கு? பேசாம அப்பாம்மா சொல்ற பையனக் கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா இருக்கலாம் ங்றதுதான் என் எண்ணம்.”

“எனக்கும்தான்…”

“இப்பதான யாரோ செல்லத்துக்கு லெட்டர் கொடுத்தேன்னு சொன்னீங்க?”

“அடியே… நீ வேற… அதுலாம் ஸ்கூல்ல… அதோட, நான் தமிழ்ல அஞ்சுமார்க் க்வெஸ்டினுக்குக் கூட அரைப்பக்கத்த தாண்டி எழுத மாட்டேன்… அந்தப்பிள்ளக்காக ஏழு பக்கம் எழுதிக் கொண்டுபோய்க் கொடுத்தேன்… முழுசாக் கூடப் படிக்காம நேரா டீச்சர்கிட்ட போய்ப் போட்டுக் கொடுத்துருச்சு… அதுக்கப்பறம் ஏன் இந்தப் பொழப்புன்னு நான் பாத்ததுல்ல…”

“எப்படினாலும் எனக்கு முன்னாடி அந்தச் செல்லம் இருந்துருக்குல்ல… இந்த 96, ஆட்டோக்ராப் இதுலலாம் வர்ற மாதிரி ரீயூனியன், கல்யாணம் ன்னு எதுலயாவது பாத்தா ஒரு செகன்ட்னாலும் செல்லத்த கல்யாணம் பண்ணிருக்கலாம்ன்னு ஃபீல் பண்ணுவீங்கதான?”

“ஆல்ரெடி ஒரு ப்ரென்ட் கல்யாணத்துல பாத்தேன்.. அப்படிலாம் ஒரு ஃபீலிங்கும் வரல… அந்த இங்கிலீஷ் டீச்சர் ரவுண்டு கட்டி அடிச்சதுதான் ஞாபகம் வந்துச்சு…”

“ஆமா… செல்லம் பேரென்ன? காளியம்மா அப்படி ஏதாவது என் பேருக்குச் சம்பந்தம் இருக்க மாதிரி இருந்துச்சுன்னா நெஜமா உங்கள தூக்கிப்போட்டு மிதிப்பேன் ஜீவி…”

“சை… அப்படிலாம் இல்ல…அந்தப் பிள்ள பேரு கல்பனா…”

“அப்ப ஐயாக்குப் பேருலாம் ஞாபகம் இருக்கு…”

“அடியே… நான் அதைக் காஞ்சனான்னே நெனச்சுட்டு இருந்தேன்… இப்ப ரீசன்ட்டா அந்த லெட்டர பாக்கவும்தான் கல்பனான்னு ஞாபகம் வந்துச்சு…”

“ரீசன்ட்டா? அதை இவ்வளவு நாள் வரைக்கும் பத்திரமா வச்சுருக்கீங்களா?”

“நா வைக்கலட்டி.. டீச்சர் கூப்பிட்டுவிட்டுக் காட்டுனத எங்கம்மெ பத்திரமா வச்சுருந்துருக்கு…இப்ப பொங்கலுக்குச் சுத்தம் பண்றேன்னு பண்ணப்ப வந்ததுன்னு எடுத்துப்படிச்சு சிரிச்சுட்டு என்கிட்ட காட்டுனாங்க…”

“பொங்கல்… ஹே.. இங்க எடுத்துட்டு வந்துருந்தாங்களா அத்த?”

“இல்லையே?”

“அப்பறம் ஐயா பொங்கலுக்கு ஊர்ப்பக்கம் போகவே இல்லயே… இங்கதான இருக்கு? ஒழுங்கா எடுத்துக் காட்டுங்க…”

“இல்ல பத்ரா…”

“அப்பறம் நானா என்னமாவது நெனச்சுப்பேன்.. அதுக்கு உள்ளத காட்டுனாலாவது தேவல…” அவள் சொல்லவும், வந்து தொலை… என்பதைப் போல முகத்தை வைத்தபடி, கீழே அவனுடைய வீட்டுக்கு அவளை அழைத்துச் சென்றான். அன்னை கொடுத்ததுமே கிழிக்கத்தான் நினைத்தான். ஆனால், சரி.. என்ன எழுதியிருக்கிறோம் என ஒருமுறை முழுதாகப் படித்துவிட்டுக் கிழிக்கலாம் என்று தோன்றியது. வேறு வேலை வந்திருக்கவே தூக்கிப்போட்டுவிட்டுச் சென்றிருந்தான். இப்போது கிழிக்காமல் ஏன் விட்டோம் என நொந்தபடி அலமாரியின் ஒரு மூலையில் சுருட்டிப் போட்டிருந்ததை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

வாங்கியவள், முதலில் பக்கத்தைத்தான் எண்ணினாள். ” ஹே… நெஜமாவே ஏழுஉஉஉ பக்கம்… எனக்கு ஒரு ஏழு வாக்கியத்துல ஒரு லெட்டர் கொடுத்துருக்கியாப்பா?”

“அதான் ஏழு பக்கத்துக்கே புட்டுக்கிட்டு போயிருச்சே…” என்றபடி அவன் சமையலறைக்குள் செல்ல அவள் அந்தக் கடிதத்தைப் படித்தபடியே பின்னோடு வந்தாள். ஐந்து நிமிடத்தில் படித்து முடித்தவள் விழுந்துவிழுந்து சிரிக்கத் தொடங்க, ஜீவிதன் முறைத்தான்.

அவன் முறைக்கவும், சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கியவள், “ஜீவி… இந்த லெட்டரைப் பாத்தாலே எங்கப்பா உங்களுக்குப் பொண்ணு தரமாட்டாரு தெரியுமா?” என்றாள்.

“ஓய்.. அவ்ளோ மோசமால்லாம் எழுதிருக்க மாட்டேன்… அந்தப் பொண்ணு கன்னம் கொஞ்சம் பன்னு பன்னு ன்னு அழகா இருக்கும். அது பிடிக்கும் ன்னு எழுதிருப்பேன்… வேற ஒண்ணும் இருக்காது…ரொம்ப ஓட்டாத…”

“அது இல்ல… எங்கப்பா படிச்சது தமிழிலக்கியம். வானொலில வேலை பாக்கிறதுனால தமிழ் உச்சரிப்பு சரியா இல்லன்னாலே புலம்பிட்டே இருப்பாரு… மலையாளம் பக்கத்துல இருக்கனால நீங்க உச்சரிக்கிற ழகரம் கேட்கவே அழகா இருக்குன்னு ஆசையா வேற சொன்னாரு… இந்தக் காதள் காடித்தத்தை…” என்றவள் முடிக்காமல் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்க, பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ஜீவிதன் அந்தக் கடிதத்தைப் பிடுங்கிப்பார்த்தான்.

தொடக்கமே, “கண்னே கெல்ப்பணா…” என்று இருந்தது.

வேகமாக வாசித்துப் பார்க்க, அவனுடைய அப்போதைய தமிழ் தாறுமாறாகத் தடுமாறித்தான் இருந்தது. மகன் உடன்படிக்கும் பெண்ணிற்குக் காதல் கடிதம் கொடுத்தான் என ஆசிரியர் அழைத்துச் சொல்லவும் அடிக்காமல் திட்டாமல் நூலகத்திற்கு அழைத்துச் சென்று காதல் நாவல்கள் சிலவற்றை எடுத்துப் படிக்கச் சொல்லி தன் தாய் கொடுத்ததன் அடிப்படையில் தற்போது வேறு எண்ணமிருப்பது போலத் தோன்ற, வனபத்ரா அவனிடமிருந்து அந்தக் காடித்தத்தைப் பிடுங்கியிருந்தாள்.

“கண்னே கெல்ப்பணா, உண்னெ எணைக்கு ரெம்பப் பெடிக்கும்…, எதே… எண்ணைக்கு ரொம்பப்பிடிக்குமா?”

“அடியே…” என்றவன் அவஸ்தையாகச் சிரித்தபடியே சூடுபடுத்தியிருந்த உணவை, அவளுக்கு ஊட்டத் தொடங்கியிருந்தான். சிரித்துக் கொண்டிருந்தவள் தன்னைப் போல வாங்கியிருந்தாள். 

அவன் தனக்கு ஊட்டிவிடுகிறான் என்பதையே உணராதவளாக, அவள் அந்தக் கடிதத்தைப் படித்துச் சீண்டியபடியே கிண்டலடித்துக் கொண்டிருக்க, அவளுடன் ஈடு இணையாகப் பேச்சுக் கொடுத்தபடியே முழு உணவையும் அவளுக்கு ஊட்டியபடியே தானும் உண்டிருந்தான் ஜீவிதன். 

அதையே உணராமல், அப்படி இப்படி என இரண்டு மணிநேரம் பேசியவள், கண் சொக்கவும் அப்படியே சோபாவில் படுத்து உறங்கியிருந்தாள். அவளுக்குப் புதுப்போர்வை ஒன்றை எடுத்துப் பொத்திவிட்டவனுக்கு, ‘பேசாம அந்தக் கெல்பணாக்கு இன்னும் பத்து காதள் காடித்தம் கொடுத்திருக்கலாம்’ என்று தோன்றியது. 

ஆனால், அன்று வகுப்பறைக்குள் அவனை விரட்டிவிரட்டி அடித்த அந்த ஆங்கில ஆசிரியரின் முகமும் பள்ளி நண்பன் ஒருவன் திருமணத்தில் நண்பர்கள் ஞாபகப்படுத்திவிட்ட பின்னர் நினைவுவந்து மரியாதை நிமித்தம் புன்னகை ஒன்றை புரிந்தவனை எட்டு வயது குழந்தையுடன் இப்போது எந்த டீச்சரிடம் மாட்டிவிட என்பது போல முறைத்துப் பார்த்த கெல்ப்பணாவும் சேர்ந்து நினைவுவரவே, சிரித்தபடியே அந்த எண்ணத்தை உதறிவிட்டு உறங்கப்போயிருந்தான்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *