Skip to content
Home » எனக்காக வந்தவனே – 22

எனக்காக வந்தவனே – 22


“அக்கா…”

“சொல்லு அபி…”

“…”

“…”

“அக்கா…”

“ம்ம்…”

“க்கா…”

“சொல்லுடா…”

“அத்தான்…”

“சொல்லு மக்கா…”

“அத்தான்…”

“சொல்லு மக்கா…”

“அத்தான்…”

“சொல்லு மக்கா…”

“க்கா…”

“இப்ப சொல்லலன்னா உனக்கு நெஜமாவே சோத்துல எலிமருந்தக் கலந்துருவேன்…” வனபத்ரா எரிச்சலாகிச் சொல்ல, ஜீவிதன் அவளைக் காய்ச்சத் தொடங்கியிருந்தான்.

“இதென்ன பேச்சுப்பழக்கம் வனா?” என்றான் கடுமையாக.

“ப்ச்.. என்ன ஜீவி… சும்மா வெளாட்டுக்குத்தான சொன்னேன்…”

“ஆட்டத்துக்குன்னாலும் என்ன பேசணும்ன்னு உண்டுல்ல? முதல்ல பாரஸ்ட் ஏரியால எலிக்கே மருந்து வைக்கக்கூடாது தெரியுமா? எலிவகை விலங்குகளும் வனவிலங்குக் கணக்குலதான் வரும். அரெஸ்ட் பண்ணலாம்… அதோட, மத்த விலங்குகளோட உணவுச்சங்கிலிலயும் முக்கியமான இடத்துல எலி இருக்கும். நீ மருந்து வச்ச எலிய வேற விலங்கு ஏதாவது கழிச்சு ஏதாச்சு ஆயிட்டுன்னா நீ ஜெயிலுக்குத்தான் போகணும்…”

அபிதனுக்குக் குதூகலமாக இருந்தது. அவனுடைய பெற்றோரிடம் சொன்னால் கூட சில நேரங்களில் வனபத்ராவை அழுத்திக் கண்டிக்கமாட்டார்கள். ஆனால், ஜீவிதனிடம் சொன்னால், பல வேளை காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சி எடுத்துவிடுவான். கடுஞ்சொற்களையெல்லாம் பயன்படுத்தி திட்டமாட்டான்தான். குரலை உயர்த்திக் கத்தவும் மாட்டான். ஆனால், அமைதியான குரலில் அவன் அந்த நாகர்கோவில் வழக்கில் அக்காவைக் கழுவிகழுவி ஊற்றும்போது கேட்க ஆனந்தமாக இருக்கும். அதுவும் தனக்காக என்னும்போது பேரானந்தமாக இருக்கும். அந்த ஆனந்தத்தை இப்போதும் அனுபவித்தபடி அபிதன் அமர்ந்திருக்க, “எதுக்குடா கூப்பிட்ட?” என்றாள்.

வனபத்ரா – ஜீவிதன் காதல் இரசனையும் எச்சரிக்கையும் தேவைப்படும் வனஜீவிதமாக இன்னும் ஒரு வருடத்தைக் கடந்திருந்தது. ஜீவிதன் ‘கெல்ப்பணாவின் காதள் காடித்தத்தின்’ புண்ணியத்தில் குரங்கை நினைக்க வைக்காமல் மருந்து கொடுத்தால் வனபத்ரா குடித்துவிடுவாள் என்று கண்டிருந்தான். பெரும்பாலும் தன்னுடைய நோயாளர்களிடம் கவனத்தைத் திசைதிருப்பியே வைத்தியம் பார்த்துப் பழகியிருந்தவனுக்கு, அது அவ்வளவு கடினமாகவும் இல்லை.

என்ன? அவன் மருத்துவம் பார்க்கும் விலங்குகள் அவன் மருத்துவம் பார்த்து முடித்தபின் கண்டதையும் நினைத்துக் குழம்பா. இவள் குழம்புவாள். ஜீவிதனும் அதற்குப் பழகியிருந்தான், அவன் அவளுக்கு ஊட்டிவிடுவது, அவள் அவனுக்கு ஊட்டிவிடுவது, சில நேரங்களில் சில முத்தங்கள், அணைப்பாறுதல்கள் எனச் சென்று கொண்டிருந்தன. இரண்டுமூன்று இதழ் முத்தங்கள் கூடச் சத்தமில்லாமல் பரிமாறப்பட்டிருந்தன. ஆனால், திருமணம் என்கிற பேச்சை இருவருமே இன்னும் எடுக்கவில்லை. திருமணம் என்று எண்ணுகையில் மட்டும் ஒரு அச்சம் மூச்சுக் காட்டாமல் அவர்களுக்கிடையில் வந்து உருண்டுவிட்டுச் சென்றது.

சும்மா என்றால் திருமணம் என்று இருவீட்டிலும் வற்புறுத்தத் தொடங்கியிருப்பார்களோ என்னவோ, அன்று ஜீவிதன் காட்டிய செயல்முறை விளக்கத்தின்பின் திருமணம் என்கிற பேச்சை வீட்டில் எடுக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த புரிதலைப் பார்த்துவிட்டு இந்த இரண்டு அரியவகை உயிரினமும் இது இரண்டையும் தவிர, வேறு யாரையும் மணந்துகொள்ளாது என வீட்டினர் தெளிந்திருந்தனர். கிட்டத்தட்ட திருமணம் வேண்டும்போது வந்துநில்லுங்கள் செய்துவைக்கிறோம் என்றுவிட்டு, அவர்களைத் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைத்துணைக்குரிய அன்புடனும் மரியாதையுடனுமே நடத்தத் தொடங்கியிருந்தனர்.

சொல்லப்போனால் இந்த இடைப்பட்ட காலத்தில் வனபத்ராவை விட வேலை விஷயமாகச் சென்னை வந்துபோன ஜீவிதன்தான் அதிகமாக அவளுடைய பெற்றோரை நேரில் சந்தித்திருந்தான். முதலில் இரண்டாம் அபிதனுக்குப் பயந்து அவள் வீட்டுப்பக்கம் வரவில்லை. கட்டிப்போடுகிறேன் என்றும் கேளாமல், அபிதன் தன்னுடைய நண்பன் ஒருவனின் வீட்டில் சிலநாட்கள் விட்டுவந்தபிறகுதான் வந்து பெற்றோரைப் பார்த்துவிட்டுப் போனாள். அபிதன் வந்து அதைத் தூக்கிச்செல்லும்வரை மகள் பொறுத்ததும் தீண்டாமையை நடைமுறைப் படுத்தாமல் இருந்ததுமே அவர்களுக்கு நிம்மதியாகவும் ஆச்சரியமாகவும்தான் இருந்தது.

வனபத்ராவின் பெற்றோரின் பொறுமையை விட, ஜீவிதன் பெற்றோரின் பொறுமைதான் வனபத்ராவையே ஆச்சரியப்பட வைத்தது எனலாம். எந்த வித முறுக்கும் நெறிப்பும் இல்லாமல் அவர்கள் பழக, அவள் தன் மாமியாரிடமே கேட்டிருக்கிறாள். “நீ வேறம்மா.. அவனுக்கு நாங்க பொண்ணு பாக்கலன்னு நீ நெனக்க? மூணு வருஷமா நானும் பொண்ணு தேடிட்டுதான் இருந்தேன்… சம்பிரதாயமா லாம் வேணாம்… பேசிப்பாக்காம சொல்ல முடியாது… சும்மா போய் பொண்ணப் பாத்து பேசிட்டு வாரேன் ன்னு போவான்… அப்படி என்னதான் பேசுவான்னு தெரியாது… ஒண்ணு பொண்ணு இவனப் பிடிக்கலன்னுரும்.. இல்லன்னா இவன் பொண்ணப் பிடிக்கலன்னுருவான்… நாங்களே எங்க அவன் புலி பிடிக்கப்போறேன், பாம்பு பிடிக்கப்போறென்ன்னு காட்டுக்குள்ளயே சுத்திட்டுக் கெடப்பானான்னோ பயந்துட்டு இருந்தோம்… உன்னெப் பிடிச்சுருக்குன்னு சொன்னதே மண்டக்காட்டுப் பகவதியம்ம கருணெலதான் ன்னு நெனச்சுட்டு இருக்கோம்… அவனுக்கே அவசரமில்லங்கல்ல எங்களுக்கென்ன?” என்ற மாமியாரை அவளுக்கு நன்றாகவே பிடித்துப் போனது. ஜீவிதன் அடிவாங்கிய கதையைச் சொல்லியிருந்ததால் பகவதியிடம் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை இருந்தது. ஆனாலும் அன்பான மனிதர்தான்.

இப்போது கூட மகன் உண்ணுவதில்லை என்று தெரிந்தும் அவளுக்காகவும் அபிதனுக்காகவும் என அவர் எடுத்து வந்திருந்த பலாப்பழத்தைத்தான் மூவருமாகச் சுளையெடுத்துக் கொண்டிருந்தனர்.

“என்னன்னு சொல்லு மக்கா…” என்று ஜீவிதனும் கேட்க, மீண்டும் சில கணங்கள் தயங்கியவன், “ஒரு வேள நான் வீட்டுக்கு யாரயாவது பொண்ணக் கூட்டிட்டு வந்தா நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுவீங்க?” என்றான்.

கத்தியைக் கீழே வைத்துவிட்டு நிமிர்ந்தமர்ந்து தம்பியை ஒருகணம் மேலும் கீழும் பார்த்த வனபத்ரா, அவனுக்குப் பதில் சொல்லாமல் ஜீவிதனை அழைத்தாள்.

“ஜீவி…”

“ம்ம்…”

“மனுஷங்களுக்கு மருந்து வச்சா உணவுச்சங்கிலி பாதிக்கப்படாதுதான?” அவள் தீவிரமாகக் கேட்ட விதத்தில் ஜீவிதனுக்கே சிரிப்பு வந்திருக்க, “டி…” என்றவன், “ஏன் மக்கா இப்படி கேக்க?” என்றான் அபிதனிடம்.

“சும்மாதான் த்தான்…”

“கூட்டிட்டு வர்றதுக்கு பெண்ணு ஏதும் பாத்து வெச்சிருக்கியா என்ன? இருந்தா சும்மா சொல்லு…”

“ஐயோ அதெல்லாம் இல்லத்தா…”அபிதன் ஏதும் சொல்லும்முன் வனபத்ரா தம்பியின் கழுத்தோடு சேர்த்துப் பிடதியில் தட்டியிருந்தாள்.

“இங்க பாரு… ஆண்களுக்குத் திருமண வயது இருபத்தொன்னு… அது ஆக உனக்கு இன்னும் ஏழு மாசம் இருக்கு… ஆனா, அந்தத் திருமண வயது வந்துமே இன்னும் நாலைஞ்சு வருஷம் போனதா நல்ல மெச்சுரிட்டி வரும்.. அதுக்கு முன்னாடி, கும்கிப்பட லட்சுமி மேனன் பேர வச்சுருக்குன்னு அந்த மகாலெட்சுமிய கிச்சுமிய வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தன்னு தெரிஞ்சுச்சு… மகனே… செத்த நீ என்கிட்ட…”

அபிதன் மனதுக்குள் எப்படி கண்டுபிடித்தான் என்று விழித்தாலும் வெளியே, “அக்கா.. அந்த லூசு பேரு மகாலெட்சுமி இல்ல.. மகாதேவி… அதெல்லாம் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தா வச்சு சோறு போட்டு மாள முடியாது…” என்று சமாளித்தான்.

அக்காவைப் பேசினாள் என்று அபிதன் மகாதேவியுடன் பேசாமல்தான் இருந்தான். அதன்பின் அவளாகவே வந்துவந்து பேச முதலில் தவிர்க்க இயலாமல் எரிச்சலில் பேசத் தொடங்கியதுதான். ஆனால், அவளுடைய அந்த அதிகப்பிரசங்கித் தனத்தைத் தாண்டி சில நல்ல குணங்கள் இருக்கவே, அபிதன் அவளுடனான நட்பைத் தொடர்ந்திருந்தான்.வீட்டுச்சாப்பாடு, வீட்டுச்சாப்பாடு என்று புலம்புவதில் அவளுக்குப் பிடித்த உணவுகளை வனபத்ராவிடம் கேட்டுச் செய்யச்சொல்லியே கொண்டுவந்து கொடுப்பான். அதனாலோ என்னவோ அன்றைக்குப் பிறகு வனபத்ராவை மரியாதைக்குறைவாக மகாதேவியும் எதுவும் பேசியதில்லை. வீட்டுக்கும் வந்திருக்க, வனபத்ராக்கும் பழக்கம்தான். அவளுடனான தொடர்பைத் தம்பி இரகசியமாகக் காக்கவில்லை என்றதிலேயே வனபத்ராவுக்கு அது நட்பு மட்டும்தான் என்கிற தெளிவு. இருந்தாலும் தம்பி கேட்ட கேள்வியில் அவள்தான் முதலில் நினைவுக்கு வந்தாள்.

“அவ ன்னு இல்ல.. யார வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தாலும் நீ வேலைக்குப் போகாம சோறு போட முடியாது.. முதல்ல படிச்சு முடி.. அப்பறம் ஒரு வேலைக்குப் போ.. அதுக்கப்பறம் வீட்டுக்கு யாரயும் கூட்டிட்டு வரலாம்…”

“க்கா.. ஒரு பேச்சுக்குத்தான கேட்டேன்…” என்றவன் மகாதேவியைத்தான் மனதுக்குள் வறுத்தான். அவள் சொன்ன யோசனைதான் இது. வனபத்ரா சொன்னதுபோல அவளைக் கூட்டிப்போ என்று சொல்லவில்லை. ‘உங்கக்கா எப்ப கல்யாணச்சாப்பாடு போடுவாங்க?’ எனக்கேட்டு, அவன் தெரியாது எனவும்,’பேசாம நீ யாராவது ஒருத்திய வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ… அக்காவ வச்சுட்டுத் தம்பிக்குக் கல்யாணம் பண்ண முடியாதுன்னு முடிச்சுருவாங்க.. எனக்கும் கல்யாணச்சாப்பாடு கிடைக்கும்…’ என்றிருந்தாள். ‘எங்கக்கா ரொம்ப சந்தோஷம்ன்னு எனக்குக் கல்யாணம் பண்ணிவச்சுட்டு எங்கத்தான எட்டர்னல் சிங்கிளா சுத்தவிட்டுரும்…’ என அவளிடம் சொல்லியிருந்தாலும் என்ன செய்வார்கள் என்று ஒரு எண்ணம் வரக் கேட்டிருந்தான். என்னவோ, வனபத்ரா – ஜீவிதனைப் பார்த்தால் ஒருபுறம் காதலில் நம்பிக்கையும் மறுபுறம் பயமும் வந்தது. ‘என்னத்துக்கு? அப்பாம்மா பாக்கிற பொண்ணக் கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா அவளைக் காதலிப்போம்…’ என்று எண்ணியபடி வர, ஜீவிதன் சிரித்துக் கொண்டிருந்தான்.

“எதுக்கு சிரிக்கிறீங்கத்தான்?”

“இல்ல… அந்தப் பெண்ணு பேரு மகாதேவி ன்னு சொன்னல்ல.. எங்கம்மாக்குப் பழய படம் லாம் ரொம்பப்பிடிக்கும். மகாதேவின்னு ஒரு படம் உண்டு. அதுல மணந்தால் மகாதேவி… ன்னு ஒரு வசனம் வரும். அதை நெனச்சுச் சிரிச்சேன்…”

“ஜீவி… என்கரேஜ் பண்ணாதீங்க இதையெல்லாம்… ஏதோ உங்க நேரம் நல்லா இருந்ததால அந்தக் கெல்ப்பணா உங்கள டீச்சர்ட்ட போட்டுவிட்டுருக்கு… இல்லன்னா இந்நேரம் நீங்க வெட்னரி டாக்டரா இருந்துருக்க மாட்டீங்க… வெட்டியா சுத்திட்டு இருந்திருப்பீங்க…”

“இப்ப யாரு என்கரேஜ் பண்ணா இதெல்லாம்? வெளையாட்டுக்குத்தான சொன்னேன்…”

“ரெண்டு நிமிஷம் முன்னாடி நீங்கதான் வெளாட்டுக்குக் கூட சிலது சொல்லக் கூடாதுன்னு சொன்னீங்க…”

“பத்ரா… முன்னப்பின்ன காதலிக்கறவங்க யார் மூஞ்சியவாவது பாத்துருக்கியா? ஏன் உன் மூஞ்சியவே கண்ணாடில பாத்துருக்கியா? காதல் ன்னு வந்தாலே முகத்துல ஒண்ணு ஒரு தனிக்களை தெரியும்..இல்லன்னா களைப்பு தெரியும்… உன் தம்பி முகத்துல ரெண்டும் இல்ல…”

அபிதன், ஜீவிதனின் முகக்குறிப்பில் அகமறியும் வித்தையை எண்ணி கண்கள் விரிக்க,” நாங்க ரெண்டுபேரும் சீக்கிரம் கலியாணம் கெட்டிக்கணும்ன்னு அவ்ளோ ஆசையா மக்கா உனெக்கு? எப்பக் கலியாணம் வைக்கணும்ன்னு சொல்லு… நீ சொல்ற மாசத்துல உங்கக்காவ கெட்டிக்கேன்…” என்றான்.

“ஜீவி…”

“நெஜமாவா த்தான்?”

“அப்ப இந்…” என்றவனை முடிக்கவிடாமல் மீண்டும் வனபத்ரா தலையில் தட்டியிருந்தாள். “உண்மையாவே ஏதாவது பொண்ணு பாத்துட்டியா என்ன?ஒழுங்கா பழத்த உரி…” என்றவள், “இவ்வளவு பழத்த இப்ப என்ன பண்றது?” என்றாள் சோகமாகப் பார்த்து.

“அம்மெ கொடுக்கவான்னு கேக்கல்லயே உனக்குச் சொல்லிருக்க வேண்டிதான?”

“சொன்னனே… அத்த தான், என்னமோ நீங்க இந்தப் பழத்த ரெண்டுநாள்ல சாப்பிட்டு முடிச்சிருக்கீங்கன்னு சொன்னாங்க… நானும் சரி உங்களுக்கும் பிடிக்கும்ன்னு நெனச்சு சரின்னேன்… நீங்க என்னடா ன்னா சாப்பிடமாட்டேங்கிறீங்க…”

“அடியே… அது ஒரு பதினைஞ்சு பதினாறு வயசுல கழிச்சது. நான் இப்ப சக்கெ திங்க மாட்டேன்னு அம்மெக்கும் தெரியும். என்னெ ரெபரன்ஸ் காட்டி உன்னெ கழிக்கச் சொல்லிருப்பாங்க…அபியும் கழிப்பான்னு நெனச்சுருப்பாங்க…”

“யாரு? இவன்தான? ஒரு சுளை கூட இன்னமும் சாப்பிட்டது கிடையாது…”

“ஏன்?” என்றான் ஜீவிதன் வியப்பாக.

“அது… எங்க அம்மா வழிப்பாட்டியோட பெரியப்பா பொண்ணு…”

“யாரு?”

” எங்க அம்மா வழிப்பாட்டியோட பெரியப்பா பொண்ணு…ப்ச்… ஏதோ ஒரு மூதாதையர்… அவங்களுக்கு ஒரு அஞ்சு, ஆறு வயசு இருக்கும்போது பலாப்பழம் தொண்டைல சிக்கி இறந்துட்டாங்களாம். எங்க பாட்டி வீட்டுக்குப் போகும்போதுலாம் இந்தக் கதையச் சொல்வாங்க… அதனால சாப்பிட மாட்டான்…”

ஜீவிதன் ஒரு சிரிப்பில் ஆச்சரியமாகப் பார்த்தான்.

“சிரிக்காதீங்க த்தான்… அந்த ஆச்சி வீட்டுல, வட்டவட்டம் பலாப்பழத்தை வாங்கிக் கைல கொடுத்துட்டு இந்தக் கதையச் சொல்வாங்க… அப்பறம் எப்படி சாப்பிட?”

“இப்ப சாப்பிடு… நானோ உங்கக்காவோ கூட உரிச்சுத் தர்றோம்.. வா…”

“இல்லத்தான்… வேணாம்…”

“மக்கா… நான் நெறய சக்கெப்பழம் கழிச்சுருக்கேன். ஆனா, இதுல இருக்க டேஸ்ட் மத்த பழத்துல நான் பாத்ததுல்ல.. கழி… நல்லா இருக்கும்…”

“சாப்பிடு அபி… சப்போஸ் எப்படியாவது எசகுபிசகா சிக்குனாலும் உங்கத்தான பர்ஸ்ட் எய்ட் பண்ணச் சொல்லுவோம்… சாப்பிடு…”

“அக்கா…”

“கழி மக்கா…மென்னு மட்டும் கழி…” என்று ஜீவிதன் எடுத்துக் கொடுக்க, அபிதன் தயங்கித்தயங்கி உண்டான். சிறிது மென்றவன் கண்கள் விரிய, “நல்லாருக்கு…” எனவும் ஜீவிதன், வனபத்ரா இருவருக்குமே சிரிப்பு வந்திருந்தது.

“சொன்னேன்ல…”

“நீங்க ஏன் சாப்பிட மாட்டேன்றீங்க… இந்தாங்க…” வனபத்ரா பழக்கிண்ணத்தை நகர்த்த, ஜீவிதன் மறுப்பாகத் தலையசைத்தான்.

“ஏன் த்தான்?”

“ஒண்ணுமில்ல… சும்மாதான்… சாப்பிடுங்க…”

“ஏன்?”

ஜீவிதன் ஒன்றும் சொல்லாமலிருக்க, வனபத்ராவுக்கு ஏதோ… சொன்னால் தான் உண்ணமாட்டோம் என்று சொல்கிறான் என்று புரிந்தது. புழு இருக்கும் வேண்டாம், வண்டு இருக்கலாம் வேண்டாம்… எனப் பல உணவுகளை ஒதுக்கிப்பழகியிருந்தவளுக்கு, பலாப்பழத்துக்குள்ளும் அப்படி ஏதும் இருக்குமோ என்னும் பயம் வந்தது.

“வண்டு, புழு… ஏதாவது வருமா?” வனபத்ரா லேசாகப் பழத்திலிருந்து பின்னால் சென்றபடி கேட்க, மென்று கொண்டிருந்த அபிதனும் நிறுத்தி ஜீவிதன் முகம் பார்த்தான்.

“அதெல்லாம் இல்ல வனா… சாப்பிடு…”

“அப்பறம் என்ன? சும்மா சொல்லாதீங்க…”

அவர்கள் உண்ணும்போது இதைச் சொன்னால் சங்கடமாக இருக்கும் என்றுதான் ஜீவிதன் மறுத்தது. ஆனால், இப்போது சொல்லாவிட்டால் தொடவே மாட்டாள் என்பது புரிய சொன்னான்.

“அது.. ஒரு ஆனெ…” என்று அவன் இழுக்கவும், வண்டு,புழு என்று பலாப்பழத்திற்குள் இருப்பதற்கு வாய்ப்பிருக்கக் கூடிய உயிரினங்களாக யோசித்துவந்தவள், என்ன கேட்கிறோம் என்கிற அறிவில்லாமல், “பலாப்பழத்துக்குள்ள யான இருக்குமா?” என்றிருந்தாள் தீவிரமாக.

“அடியே…” என்று அவள் தலையில் தட்டியவன், “ஆனெக்குச் சக்கப்பழம் ன்னா ரொம்ப இஷ்டம்…” என்றான்.

“அப்பப் பலாப்பழம் வச்சுருந்தா யான வருமா?”

“ஆனெ நடமாடுற எடத்துல வச்சுருந்தா வரும்…” அவன் சொல்லவும் வனபத்ரா ஜன்னலைப் பயமாகப் பார்த்தாள்.

“பத்ரா.. நாம இருக்கது சிட்டி.. இவ்ளோ தூரம் இந்தப் பழத்துக்காக ஆனெ வராது… காட்டுவழில நெறய சக்கமரம் உண்டு.ஆனெ நடமாடுற பகுதில இருந்ததுனால சாப்பிடக்கூடாதுன்னு விட்டுட்டேன்…” என்றான். அவன் எதையோ மறைப்பது போலத் தெரிந்தது. இருந்தாலும் அந்தப் பழத்தின் சுவை பிடித்திருக்கவே, எதையாவது சொன்னால் உண்ணத்தோன்றாது என அதற்குமேல் வனபத்ரா எதுவும் கேட்கவில்லை. தம்பி கேட்டதும் ஜீவிதன் சொன்னதுமே உறுத்திக் கொண்டிருந்தது. யானை வரும் என்று சொன்னதில் வைத்திருக்கப் பயந்தவள், அவ்வளவு பழத்தையும் கேக் செய்கிறேன் என்று செய்துவைத்திருக்க, “அக்கா மகாக்குக் கொண்டுபோறேன்…” என்று தம்பி கிளம்பவும் உள்ளே ஏதேதோ சிந்தனைகள் ஓடின.

யோசனையோடே இருந்தவளிடம்,”அபி அப்படிலாம் யாரயும் கூட்டிட்டு வரமாட்டான்.. பயப்படாத…” என்றான் ஜீவிதன்.

“ஜீவி…”

“ம்ம்…”

“நெஜமாவே அபி சொல்ற மாசத்துல கல்யாணம் பண்ணிருப்பீங்களா?”

“ம்… உனக்கும் ஓகே ன்னா…”

ஒருகணம் யோசித்தவள், “நாம மேரெஜ் பண்ணிக்கலாம் ஜீவி…” என்றாள்.

அவளை ஒருகணம் பார்த்தவன், அவளது அருகில் வந்து அவளது முகம் நோக்கிக் குனிந்தான். அவள் கண்களை இறுக மூட, அவன் ஒன்றும் செய்யவில்லை. சிறிதுநேரம் கழித்துக் கண்களைத் திறந்தவள், தட்டிவிழித்தாள்.

“நான் இல்லாத குரளிவித்தையெல்லாம் காட்டாம உன் பக்கத்துல வந்தா, உன் ரியாக்ஷன் இப்படி, ஏதோ சங்குல மருந்து கரைச்சு ஊத்துற குழந்த மாதிரிதான் இருக்கு…”

“சாரி ஜீவி…”

“சாரி யெல்லாம் வேணாம்… எனக்குப் பிரச்சனை இல்ல… உனக்கும் நிஜமாவே பிரச்சன இல்லயா?”

“இல்ல ஜீவி…”

“ரைட். குட். கெட்டிக்கலாம்…”

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *