கேக்குடன் மகாதேவியைத் தேடிவந்த அபிதன், அவள் வழக்கமாக அமரும் மரத்தடியில் பெட்டி, பைகளோடு அமர்ந்திருப்பதைப் பார்க்கவும் வேகமாக ஓடிவந்தான். சண்டையும் சமாதானமும் அவர்கள் நட்புவழக்கமாக மாறிப்போயிருந்தது. அப்படி கிட்டத்தட்ட சிலபல வாரங்களாக அவளிடம் பேசாமல் இருந்தான். அலைபேசியில் அழைத்தாலும் அவள் எடுக்காமல் இருக்கவே, கல்லூரிக்குத் தேடிவந்தான்.
செமஸ்டர் நடந்துகொண்டிருந்தது.அவனுக்கே இன்னும் ஒரு தேர்வுதான் இருக்கும். அவளுக்குத் தேர்வு முடிந்திருக்கும். வீட்டுக்குக் கிளம்பும்முன் ஏன் சண்டையோடு செல்ல வேண்டும்? சமாதானப்படுத்தலாம் என வந்தவன், அவளுடைய முகத்தைப் பார்க்கவும் அதிர்ந்தான். உலகமே இடிந்துபோனது போல அமர்ந்திருந்தாள்.
மெல்ல, அருகே அமர்ந்தவன், “என்னாச்சு மகா?” எனவும்தான் நிமிர்ந்தே பார்த்தாள். இவனைப் பார்க்கவும் தாரைதாரையாகக் கண்ணீர் ஊற்றத் தொடங்கியது. அழுதே பார்த்திராதவன், இப்படி அழவும் பதறிப்போய், “என்னாச்சுப்பா? சொல்லு…” என்றான். தேர்வு எதுவும் கடினமாக இருந்திருக்குமோ,இல்லை வேறு யாரும் எதுவும் சொன்னார்களோ? என்றெல்லாம் யோசிக்க, அவள் அழுதபடி “அம்மா…” என்றாள்.
என்னவாக இருக்கக்கூடும் என்று யோசிக்கவே அவனுக்குப் பயமாக இருந்தது. அவளுக்கு அப்பா இல்லை. சிறுவயதிலேயே இறந்திருந்தார் என்று சொல்லியிருக்கிறாள். காதல் திருமணம் என, ஊரார் ஒதுக்கிவைத்து, அம்மா மட்டும்தான் கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் என்றும் சொல்லியிருக்கிறாள்.
அவளுக்கு அவள் அம்மாவை மிகவும் பிடிக்கும். அவருக்கு ஏதாவது ஆகியிருந்தால், இவள் என்ன ஆவாள் என யோசிக்கவே பயமாக இருக்க, “அம்மாக்கு என்னம்மா?” என்றான் மென்மையாக. என்ன என்று தெரிந்தால்தானே தீர்வு சொல்லமுடியும்?
“அம்மா.. இல்ல…” என்றவள் கதறி அழத் தொடங்க, அபிதனுக்கு கஷ்டமாய்ப் போனது. அவளைக் கொஞ்சநேரம் அழவிட்டவன், பின் மெதுவாக, “ஊருக்குப் போகணும்ல மகா?” என்றான்.
அவள் மறுப்பாகத் தலையசைத்தாள். “ஊர்ல யாரும் இல்ல…”
அபிதன் குழப்பமாகப் பார்த்தான். யார் இருந்தாலும் இல்லையென்றாலும் இறுதிச்சடங்குகளைப் பார்க்கவேண்டும்தானே? அதைக் கேட்கப்பிடிக்காமல் அவன் அமர்ந்திருக்க, “அம்மா இறந்து மூணு வாரமாச்சு…” என்றாள் தேம்பியபடியே.
அபிதன் இதில் இன்னமும் அதிர்ச்சியாகப் பார்க்க, “ஸ்டடி ஹாலிடேக்கு ஊருக்குப் போனப்பவே இறந்துட்டாங்க…” என்றாள்.
“அதோட வந்து பரீட்ச எழுதினியா?”
“அம்மா நான் நல்லாப் படிக்கணும்ன்னு சொல்வாங்க…” என்று அவள் இன்னும் இன்னும் தேம்ப, சத்தியமாக அபிதனுக்கு என்ன சொல்லிச் சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. வழக்கமாக அவன் அக்கா அழும்போதெல்லாம் அழாதக்கா என்பான், இதற்கு இவளை அழாதே என்று எப்படி சொல்லமுடியும்? அவளை அழவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தான். கொஞ்சம் அழுகை நிற்கவும்,”ஊருக்குக் கூட வரவா மகா?” என்றான்.
“ஊர்ல யாரும் இல்லன்னு சொன்னேன்தானே?”
“வீடு இருக்கும்லடா…”
அவள் மீண்டும் மறுப்பாகத் தலையசைத்தாள். “குவார்ட்டஸ்தான்… வெகேட் பண்ணிட்டேன்…இப்ப எங்கே போகன்னு தெரியல… ” அழுதபடி அவள் சொல்லவும் அமைதி காத்தான். விடுதியும் இன்று இல்லாவிட்டாலும் எல்லா வருடத் தேர்வும் முடிந்தால் காலி செய்துவிட வேண்டும். சில நிமிடங்கள் பொறுத்தவன், “வா…” என அவளைக் கைப்பிடியாக அழைத்துச் சென்றான்.
திருமணச் சம்மதத்தை, இருவீட்டுப் பெற்றோரிடமும் நேரடியாகச் சொல்வது என முடிவெடுத்த ஜீவிதனும் வனபத்ராவும் அபிதன் வரட்டும்.. அவனிடம் முதலில் சொல்லலாம் என ஆவலாகக் காத்திருந்தனர்.
வண்டிச்சத்தம் கேட்கவுமே, “அபி வந்துட்டான்…” என வெளியே வந்த ஜீவிதன், அழுகையும் கண்ணீருமாக உடன் வந்த மகாதேவியைப் பார்த்துத் திகைத்து நின்றிருந்தான்.
இவன் ஏன் வாசலில் இப்படியே நிற்கிறான் என வெளியே வந்த வனபத்ராவும் அதிர்ச்சியாக, இருவரது முகத்தையும் பார்த்த அபிதனுக்கு முன்விளக்கம் கொடுக்காமல் அழைத்து வந்திருக்கக்கூடாதோ எனக் காலம் கடந்து தோன்றியது.
“க்கா…” என அவன் ஏதோ சொல்லவர, தலையை மறுப்பாக அசைத்தவள், கோபமாக உள்ளே சென்றிருந்தாள். ஜீவிதனுக்குமே அதிர்ச்சிதான், “என்ன மக்கா?” என்று திகைப்பு மாறாமல் கேட்டுவிட்டு வனபத்ராவை நோக்கிப்போக, என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய அபிதன், “ஒரு நிமிஷம் இரு மகா…” என்றுவிட்டு உள்ளே சென்றான்.
வனபத்ரா உள்ளே சென்று அறையை இறுகப் பூட்டியிருந்தாள். இங்கு வந்திருக்கக்கூடாதோ? தம்பியின் முன்னிலையில் காதல் என்று தவறாக எதுவும் நடந்துவிட்டோமோ? தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டோமோ? என்கிற எண்ணம் அவளை ஒருமாதிரி அறுக்க, அவளுக்குத் தன்மேல்தான் கோபம். அபிதனிடமும் பேசப்பிடிக்கவில்லை. ஜீவிதனிடமும் பேசப்பிடிக்கவில்லை.
கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கும் மேலாகத் தட்டிப்பார்த்து அவள் திறக்காமல் இருக்கவே, “மக்கா.. அந்தப் பொண்ண உள்ளே கூப்பிடு முதல்ல…பேசிக்கலாம்…” என்றிருந்தான்.
ஜீவிதனுக்கும் சரி, அபிதனுக்கும் சரி எரிச்சல் வந்திருந்தது. அபிதன் மகாதேவியைத் தேடிவர, அவளுடைய பொருட்கள் இருந்தனவே தவிர, அவள் இல்லை. மகா.. மகா.. என்று அழைத்துப்பார்க்க, அவளைக் காணவில்லை. அலைபேசியில் அழைக்கலாம் என்று போக, “சாரி… நான் போறேன்…” என்று ஒரு குறுஞ்செய்தி மட்டும் வந்திருந்தது.
அதைப் பார்க்கவும் அபிதனுக்குத் திக்கென்றிருந்தது. அவள் சீராக இல்லை என்றுதான் உடன் அழைத்தே வந்திருந்தான். உள்ளே வந்தவன் ஆத்திரத்துடன் கிட்டத்தட்ட கதவை உடைப்பது இடிக்க, வனபத்ரா கதவைத் திறந்திருந்தாள்.
அவளுடைய முகம், அதில் தெரிந்த வேதனை எதையும் பார்க்காமல் “மனுஷன் என்ன சொல்ல வர்றான்னு நின்னு கேட்க மாட்டல்ல நீ? அந்தப் பொண்ணோட அம்மா செத்துப்போயிட்டாங்க… அவளுக்கு அம்மா மட்டும்தான் இருந்தாங்க.. யாரும் இல்ல.. நான் எதுக்கு இருக்கணும் ன்னு கேட்டுட்டு இருந்துச்சு… அதனாலதான் கூட்டிட்டு வந்தேன்.. என்ன சொல்ல வர்றேன்னு ஒரு வார்த்த கூடக் கேட்காம அப்படியென்ன வீம்பு உனக்கு? இப்ப அந்தப் பிள்ளயக் காணோம்…மகாக்கு ஏதாச்சு ஆச்சுன்னா உன்ன நான் மன்னிக்கவே மாட்டேன்க்கா…” வெடித்தவன் விறுவிறுவெனக் கீழே இறங்கிச் சென்றிருந்தான்.
ஜீவிதன் வனபத்ராவின் முகத்தைக் கவனித்திருந்தான். “வனா.. என்னவா இருந்தாலும் ரிலாக்ஸ்… நான் அபிகூடப் போறேன்…” என்றபடி அவனும் இறங்கியிருந்தான். அந்தப் பெண்ணைத் தேட வேண்டுமே? அபிதனைச் சாந்தப்படுத்திக் காரில் ஏற்றியவன், ஊட்டி முழுவதும் அவள் சென்றிருக்கக் கூடும் என்கிற இடங்களில் தேடக் காணவில்லை.
மூன்றுமணிநேரம் பதற்றத்திலும் படபடப்பிலுமாகச் சுற்ற, ஜீவிதனுக்கு வனபத்ராவிடமிருந்து அழைப்பு வந்தது. வண்டியை ஓட்டிக் கொண்டிருந்ததில் அபிதனிடம் எடுக்கச் சொல்ல, அவன் துண்டித்துவிட்டிருந்தான்.
“மக்கா…” என்றவன் அபிதன் பார்த்த பார்வையில் வாயை மூடியிருந்தான்.
இன்னும் ஒருமணிநேரம் கழித்து வனபத்ரா விடாமல் அழைக்க, அபிதன் துண்டித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்தவன், பிடுங்கி ஒலிப்பானில் போட்டான்.
“சொல்லு வனா…”
அவள் குரல் வழக்கத்துக்கு மாறான, வரவழைக்கப்பட்ட அதீத அமைதியில் ஒலித்தது.
“அந்தப் பொண்ணு இருக்க இடம் லொகேஷன் அனுப்பிருக்கேன்…” என்றவள், சுற்றுவட்டாரக் கிராமம் ஒன்றின் பெயரைச் சொன்னாள்.
“எப்படி தெரியும்?”
“அம்மா.. லோக்கல் போலிஸ்…”
“குட்…” என்ற ஜீவிதன் அந்த இடத்தை நோக்கி வண்டியை ஓட்ட,அந்த இடத்தில் ஒரு வனத்துறை வாகனம் மட்டும்தான் இருந்தது. திறந்திருந்த வனத்துறை வாகனத்தைப் பார்க்கவும் ஜீவிதன் நிறுத்த, மகாதேவி உள்ளே இருந்தாள். அபிதனைப் பார்க்கவும் சட்டென அதிலிருந்து இறங்கி, இவர்கள் காருக்குள் ஏறியிருந்தாள்.
யாரும் எதுவும் சொல்லும்முன், நேராகக் கையைக் காட்டியவள், “கொஞ்ச தூரத்துல யான இருக்கு…” என்றாள்.
“பாரஸ்ட் ஆபிசர் எங்கம்மா?” என்றான் ஜீவிதன்.
“அவரெ தூக்கி…” அவள் பயத்தில் முடிக்காமல் திணற,
“செரிம்மா… எத்தன ஆனெ இருந்துச்சு?” என்றான் பொறுமையாக.
“ஒண்ணு…”
“தந்தம் இருந்துச்சா?”
“குட்டியா இருந்துச்சு…”
ஒரு பெருமூச்சொன்றை விட்டபடியே ஜீவிதன் தன் அலுவலகத்தை அழைக்கத் தொடங்கியிருந்தான். நல்லவேளையாக அபிதனுக்கு வண்டி ஓட்டச் சொல்லிக் கொடுத்தோம் என நினைத்தபடியே, “அபி… மெல்ல ரிவர்ஸ் எடுத்து எவ்வளவுதூரம் சிட்டிக்குள்ள போக முடியுமோ போ… ஹாரன் அடிக்காத…” என்று இறங்க முற்பட்டான்.
“த்தான்…”
“நான் நெனக்கற ஆனெயா இருந்தா அந்த ஆனெ ஆளுங்கள சவட்டும் மக்கா… அவர் என்ன நெலமல இருக்காருன்னு பாக்காம வரமுடியாது…ஜீப்லதான் போறேன்…” என்றபடி அவன் வாகனம் மாறி அதை மெல்ல இயக்கத் தொடங்கினான்.
எப்பேர்ப்பட்ட சூழலில் மகாதேவி சிக்கியிருக்கக் கூடும் என்று அபிதனுக்கு வனபத்ராவின் மேல் கோபம்கோபமாக வரத் தொடங்க, “உங்கக்காவும் அங்கதான் இருக்காங்க…” என்றாள் மகாதேவி மெதுவான குரலில்.
அபிதனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. “அக்கா அங்க என்ன பண்ணுது?” என்றவன், தான் கடுமையாகப் பேசியதால் அவளும் மகாதேவியைத் தேடியிருக்கிறாள் என்பது புரிந்து இன்னும் திகைத்தான்.
வனபத்ரா இருந்து யானையைப் பார்த்திருந்தால், அவள் மயங்கியிருப்பது நிச்சயம். ஜீவிதன் அவளில்லை என்று நினைத்து அந்த வனத்துறை அலுவலரை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டால்?
நினைக்கவே உள்ளுக்குள் உதற, “அத்தான் இருக்கப்பவே சொல்லிருக்க வேண்டியதுதான மகா?” என்றான் பதட்டமாக. ஜீவிதன் அலைபேசியை அழைக்க, அது வேறொருவருடன் பேசிக் கொண்டிருப்பதாகச் சொன்னதில் ஜீவிதன் சொன்னதுபோலப் பின்னால் செல்லாமல் முன்னால் சென்றான்.
ஆனால், அவன் பயந்தது போலல்லாமல் ஜீவிதன் அந்த அலுவலருக்கு முன்னதாக, வனபத்ராவைத்தான் முதலில் பார்த்திருந்தான். காரணம், ஆக்ரோஷமாக யானை சற்றுத் தொலைவில் நிற்க, ஸ்கூட்டியை நிறுத்தி அதன்பின்னால் அரைமண்டியில் மறைந்து அமர்ந்திருந்தவள், ஸ்கூட்டியில் கால் வைக்கும் இடத்தினூடாக, யானைக்கும் அவளுக்கும் இடையே இருந்த இடத்தில் பட்டாசுகளை வெடித்துப் போட்டுக் கொண்டிருந்தாள். இந்தக் காட்சியை எதிர்பாராமல் ஜீவிதன் திகைக்க, வனபத்ரா அவனை மீண்டும் அழைத்தாள்.
அவள் ஏதோ சொல்லப்போக, “வெடி இன்னும் எவ்ளோ இருக்கு?” என்றான்.
“இன்னும் அரை மணிநேரத்துக்கு வெடிக்கலாம்…”
“நல்லது… நிறுத்தாத…பதறாத… ஓடாத… நான் இன்னும் பக்கத்துல வர்றேன்…”
என்றபடி அவன் இன்னும் சற்று அருகில் வண்டியைச் செலுத்த, கேட்ட யானையின் பிளிறலில் அவனுக்கே கொஞ்சம் மயிர்கூச்செறியத்தான் செய்தது. அவள் தொடர்ந்து வெடித்திருப்பாள் போல. யானை சற்றுத் தள்ளி அந்தப்பக்கக் காட்டுக்குள் மரங்களுக்கிடையில்தான் நின்றது. மெல்ல வனபத்ராவின் அருகில் வண்டியைக் கொண்டு சென்றவன், “ஜீப்க்குள்ள வா பத்ரா…” என்றான்.
“ஜீவி… ஒருத்தர்..”
“நீ வாடி… எவ்வளவு முடியுமோ அவ்வளவு பட்டாசப் பத்த வச்சுட்டு மிச்சத்தக் கைல எடுத்துட்டு வா… ஓடி வராத… முடிஞ்சளவு சட்டுன்னு அது கவனத்தை ஈர்க்காம பதறாம வா…” பட்டாசுப்புகையில் அவள் அமர்ந்தநிலையிலேயே மெல்ல நகர்ந்து ஜீப்பருகில் வர, ஜீவிதன் கதவைத் திறந்து அவளை உள்ளே தூக்கியிருந்தான்.
அவன் நாடித்துடிப்பு அவன் எவ்வளவு பதற்றத்தில் இருந்திருப்பான் என்பதை உணர்த்தியது.
“சென்னையா வா?” அவன் குரல் ஒருமாதிரி கலங்கிக் கேட்டது.
“யாருன்னு தெரியல… நான் வர்றப்ப இந்த ஜீப் நின்னுட்டு இருந்துச்சு…”
ஒருகணம் அவளை என்ன சொல்வது எனத் தெரியாமல் பார்த்தவன், “பட்டாசு பத்த வக்கிற அளவு நேரம் இருந்துச்சுன்னா வண்டிய ஓட்டிட்டுப் போயிருக்க வேண்டிதானடி?” என்றான்.
“அவர மிதிக்கல ஜீவி… தூக்கி வீச மட்டும்தான் செஞ்சுச்சு…”
“பல நேரம் ஆனெ தூக்கி வீசறதே கொல்றதுக்குப் போதுமானது பத்ரா… சப்போஸ் என்னையும் வீசுச்சுன்னா இறங்கிராத… ஜீப்ப எடுத்துட்டுத் திரும்பிப் பார்க்காம போயிரு… நான் பாரெஸ்ட் டிபார்ட்மென்ட்க்கு சொல்லிருக்கேன்.. அவங்க வந்துருவாங்க.. எக்காரணம் கொண்டு வண்டிய விட்டுக் கீழே இறங்கிராத… அந்த ஆனெ சவட்டும்…” என்றவன், கையில் ஏர்கன்னை எடுத்தபடி இறங்கினான்.
வனபத்ரா பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டுக்கொண்டே இருக்க, முடிந்தவரை அதன் கவனத்தைக் கவரமுயற்சி செய்யாமல் அந்த அலுவலர் கிடந்த பகுதிக்கு நுழைந்தான்.
அவர் சுயநினைவில்தான் இருந்தார். தூக்கிவீசியதில் இடுப்புப்பகுதியில் அடிபட்டு எழ முடியாமல் விழுந்துகிடந்தார். ஜீவிதனைப் பார்க்கவும் புன்னகைத்தவரின் விழிகளில் கண்ணீர் கசியத் தொடங்கியிருந்தது.
“இவத்தூ வனதுர்கே நன்னகடெ இரத்தாளே…” நலிந்த குரலில் சொன்னவரிடம், “கண்டித்தா இரத்தாளே…” என்றபடி அவர்கையில் ஏர்கன்னைக் கொடுத்தவன், அவரை மெல்ல தூக்கினான்.
பதமாக மேலும் காயத்திற்கு ஆளாகாமல் இருக்கும்படி தூக்கியவன், மெல்ல ஜீப்பை நோக்கி நடக்க, தன்னுடைய கார் அதற்கு முன்னதாகவே நிற்பதைப் பார்த்தான். அபிதன் வனபத்ரா இருப்பதை அறிந்து வந்திருக்கவேண்டும் என்பதைப் புரிந்து அவன் காரை நோக்கிச் சென்றவன், மெல்லக் கதவைத் திறந்து சென்னையாவை உள்ளே அமர்த்தினான்.
தானும் உள்ளே அமர்ந்தவன் வனபத்ராவை அழைக்க, மகாதேவி திடீரனக் காருக்குள் இருந்து இறங்கி யானையை நோக்கி ஓடினாள். இதை எதிர்பாராமல் திகைத்த நிலையிலும் அபிதன் இறங்கப் போக, “அபி… அந்த ஆனெ சவட்டும் ன்னு சொன்னேன்… இரு… நான்…” என்றபடி ஜீவிதன் இறங்கப்போகும் முன் அவன் சொன்னதைக் காதில் வாங்காமல் அபிதனும் இறங்கியிருந்தான். மானசீகமாகத் தலையில் அடித்த ஜீவிதன், கார் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.
நடந்தது இதுதான். அபிதன் பயந்ததில் எந்தத் தவறும் இல்லை. மகாதேவிக்கு தற்கொலை எண்ணங்கள் வந்துபோனது உண்மைதான். குதிக்கலாம் என ஒரு மலையுச்சி வரை சென்றவளுக்கு அச்சம் வந்திருக்கவே, வந்த ஏதோ ஒரு பேருந்தில் ஏறி எங்கேயோ இறங்கியிருந்தாள். வனபத்ரா அன்னையிடம் அவசரம் எனப் பதற்றப்படுத்த, அஞ்சனா விஷயத்தைச் சொல்லி உள்ளுர் காவல்நிலையத்திடம் உதவி கேட்டிருந்தார். அபிதனுக்கு அழைக்க, பேசாமல் வைக்க என அவள் செய்துகொண்டிருந்ததில் அலைபேசி எங்கிருக்கிறது என எளிமையாகக் கண்டுபிடித்துவிட, வனபத்ரா நேரடியாகவே வந்திருந்தாள்.
காட்டுப்பகுதியில் நடந்துகொண்டிருந்தவளைப் பார்க்கவும்தான் வனபத்ராவுக்கு உயிரே வந்தது. ஆனால், மகாதேவியை அணுக அவள் வரமாட்டேன் என அடம்பிடித்தாள். வனபத்ரா வாழ்க்கையில் யாரிடமும் அவ்வளவு தூரம் கெஞ்சியதில்லை. அபிதனிடம் சொல்லிவிட்டாவது போ.. என்று அவளிடம் வனபத்ரா கெஞ்சிக் கொண்டிருக்க, திடீரென ஒரு பிளிறல் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து யாரோ தலைக்குமேல் பறப்பது போல் இருக்க, எதிரே தூரத்தில் இருந்து பிளிறியபடி இந்த யானை ஓடிவந்துகொண்டிருந்தது. மகாதேவி யானையைப் பார்க்கவும் திரும்பி ஓடத் தொடங்கியிருந்தாள்.
எப்போது எங்கு வந்து எந்த யானை மிதிக்குமோ என்ற பயத்துடனே சுற்றிக் கொண்டிருந்த வனபத்ரா வழக்கமாக எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் பட்டாசுப் பையைக் கையில் வைத்திருந்தாள். உடனடியாக வெடிக்கும் முதலில் போட்டவள், வரிசையாகப் பட்டாசைக் கொளுத்திக் கொண்டே இருக்க, அந்த யானை அருகில் வரவில்லை. ஆனால் அதற்கு முழுமையாகப் பயந்து வனப்பகுதிக்குள் செல்லவும் இல்லை. பட்டாசு வெடிப்பதை நிறுத்தினால் இருவரையும் மிதிக்காமல் விடாது என்று வனபத்ராவின் உள்மனம் உறுதியாகச் சொல்ல, பட்டாசு தீருவதற்குள் யாராவது வந்துவிடவேண்டும் என்று வேண்டியபடியே இருந்தாள்.
நல்ல வேளையாகச் சில நிமிடங்களில் ஜீவிதனே வந்திருந்தான். அவன் காயம்பட்டவரை பத்திரமாகக் காருக்குள் கொண்டுசேர்ப்பதைப் பார்த்து அவள் நிம்மதி மூச்சு விடும் முன் மகாதேவியும் அபிதனும் காருக்குள் இருந்து இறங்கியிருந்தனர். வேகமாக யானையை நோக்கி ஓடிவந்த மகாதேவி பாதியில் பயந்து நிற்க, அபிதன் அவளை நோக்கி மெதுவாக வந்தான், யானை அவளைக் கவனித்திருக்கவில்லை. வனபத்ரா விடாமல் வெடித்துக் கொண்டிருந்த பட்டாசுகளில்தான் கவனம் இருந்தது. ஜீவிதனும் முடிந்த வரை காரை முன்னால் செலுத்த, தம்பி அவளைப் பத்திரமாக அழைத்துச் சென்று விட்டால் போதும் என உயிரைக் கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தாள். இதில் யானை இந்தப் பக்கமாகத் திரும்புவது போல லேசாக அசைய, வீறிச்சிட்டு இருந்தாள் மகாதேவி.
ஜீவிதனுக்கு முட்டாள் என்று யார் மேலாவது இந்தளவு கோபம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.மகாதேவி மேல் வந்தது. இவள் கத்தவும்தான் யானை இவர்கள் பக்கம் திரும்பவே செய்தது. அது திரும்பவும் இவளும் திரும்பி காரை நோக்கி ஓடிவரத் தொடங்கியிருந்தாள். இவள் ஓடியதில் யானையும் பிளிறியபடி ஓடிவரத்தொடங்க, அதன் பிளிறலில் எதிரே நின்ற அபிதனைக் கவனியாமல் இடித்துவிட்டு ஓடியதில் அவன் கீழே விழுந்திருந்தான். அவன் கீழே விழுந்தபிறகுதான் தள்ளினோம் என்பதைச் சுதாரித்து மகாதேவியும் நின்றிருந்தாள்.
இது பட்டாசுக்குப் பயப்படும் யானை அல்ல. அப்படி இருந்திருந்தால், வனபத்ரா வெடித்த வெடிக்கு எப்போதோ காட்டுக்குள் திரும்பியிருக்கும். விடாமல் கேட்ட வெடிச்சத்தத்தில் எரிச்சலில் மிதிக்க ஆள்தேடிக் கொண்டிருந்தது போல நின்றிருந்தது. அந்த யானையைத் திசைதிருப்ப கும்கி யானையோ, குறைந்தபட்சம் அனுபவம் வாய்ந்த ஆள்பலமாவது வேண்டும்.
யானை துரத்தினால் ஓடிப்பிழைப்பது கடினம். அதிலும் கீழே விழுந்துவிட்டால் சொல்ல வெண்டியதில்லை. மிதித்துக் கூழாக்கி, இறக்கும்வரை அருகிலேயே நின்று புரட்டிப்புரட்டிப்பார்த்து இறந்துவிட்டார்கள் என பிணவாடை கண்டபிறகுதான் செல்லும்.
அபிதன் எழுவதற்குள் அந்த யானை அருகில் வந்துவிடும் என்பதை உணர்ந்ததில், ஸ்டீரியங்கைப் பிடித்திருந்த ஜீவிதனின் கைகள் நடுங்கத் தொடங்க, ஓடிவந்த யானையின் பாதையை மறித்து விடாமல் ஹாரனை அடித்தபடி ஜீப்பை செலுத்தியிருந்தாள் வனபத்ரா. ஆக்ரோஷத்தோடு வந்த யானை ஜீப்பை உருட்டித் தள்ளும் வேகத்தோடு மோத, முடிந்தவரை ஜீப்பை முடுக்கி, சமாளிக்க முயன்றாள்.
தமக்கை கொடுத்த கணநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டவன், அம்பென எழுந்து மகாதேவியையும் இழுத்துக் கொண்டு வனபத்ரா இருந்த ஜீப்பிற்குள்ளேயே ஏறியிருந்தான்.
ஆக்ரோஷமான பிளிறலும் மோதலும் மிதிக்கவா உடைக்கவா என மேலே ஏறுவது போல வந்த கால்களும் துதிக்கையும் வனத்துறையின் வாகனமும் அதை ஓட்டிக்கொண்டிருந்தவளும் எவ்வளவு உறுதிகொண்டவை என உணர்த்த, அபிதனுக்கும் மகாதேவிக்கும் வார்த்தை வரவில்லை.
ஜீவிதன் சென்னையாவின் கையிலிருந்த ஏர்கன்னை வாங்கி விடாமல் யானைமேலும் ஜீப்பின் மேலும் படாமல் அருகில் சுடத் தொடங்கியிருந்தான். அதன்பிறகுதான் அந்த யானை பின்வாங்கியது. அது கால்களை இறக்கவுமே லாவகமாக ஜீப்பைப் பின்னோக்கிச் செலுத்தியிருந்தாள் வனபத்ரா.
ஜீவிதனும் வண்டியை எடுக்கத் தொடங்கியிருந்தான். பின்னால் அவன் செல்ல, முன்னால் பிளிறியபடி ஓடிவந்த யானையைப் பொருட்படுத்தாமல் வண்டியை நிதானமாகச் செலுத்தியவளின் அமைதியான முகத்தை ஜீப் சுவரில் ஒட்டியபடி மகாதேவி பார்க்க, நெஞ்சில் கைவைத்து மூச்சை இழுத்துவிட்டபடி அபிதன் சொன்னான், “சொன்னேன்ல…பயப்படாத நேரம் எங்கக்கா மாதிரி தைரியசாலி கிடையாது”
(தொடரும்…)