Skip to content
Home » எனக்காக வந்தவனே – 24

எனக்காக வந்தவனே – 24

அறுவை இயந்திரங்கள் என்று பெயர்மாற்றம் செய்தால் அந்த இயந்திரங்கள் கோபித்துக் கொள்ளும் என்னுமளவுக்கு உயிரை வாங்கும் உறவினர்களிடம் கூட, பொறுமையாக, தன்மையாக, இனிமையாகப் பேசிக் கொண்டிருந்த ஜீவிதன் தன்னைப் பார்த்தால் மட்டும் விட்டால் வெளுத்துவிடுவேன் என்னும் உடல்மொழிக்கு மாறுவது போல இருந்தது அபிதனுக்கு.

அருகில் செல்லத் தயங்கிப் பம்மிக் கொண்டிருந்தவன், தைரியத்தை வரவழைத்து நெருங்கும்போதெல்லாம் யாராவது இடையில் வந்து ஏதாவது வேலை சொல்லி அவனை அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

அதோடு அன்று நான்காவது முறை அருகில் வந்தவனை ஒரு பெரியப்பா அழைக்க, அவன் திரும்பும்முன், “மக்கா… இங்க வா…” என்று அழைத்திருந்தான் ஜீவிதன். “அபி…” என்றழைத்தபடி வந்த பெரியப்பா, “என்னங்க மாமா?” என்றபடி இவன் எழவும், “மாப்பிள கூட இருக்கியா இரு.. இரு…” என்றுவிட்டு நகர்ந்திருந்தார்.

“இங்க இரி… உங்கிட்ட ஒண்ணு கேட்கணும்…” என்றபடி அலைபேசியை எடுத்தவன், அபிதனுக்குத் தெரியுமாறு அலைபேசி அமைப்புகளுக்குள்(செட்டிங்க்ஸ்) சென்று வெறுமனே உருட்டிக் கொண்டிருந்தான். பார்ப்பவர்களுக்கு அவன் ஏதோ முக்கியமான விஷயமாக அபிதனிடம் கேட்பது போல இருக்கும். ஆனால், அவன் வெட்டியாக அவனை அருகில் அமரவைத்து அலைபேசியை உருட்டிக்கொண்டிருந்தான்.

“அத்தான்…”

“என்ன மக்கா?” என்றபடி ஜீவிதன் நிமிர்ந்தான்.

அவ்வளவு நேரம் எல்லாரிடமும் சிரித்தமுகமாகப் பேசிக் கொண்டிருந்த ஜீவிதன், சிரிப்பில்லாமல் தன்னைப் பார்ப்பதே முறைப்பது போலத்தான் இருந்தது அபிதனுக்கு. அவன் பாவமாக முகத்தை வைத்தபடி விழிக்க ஜீவிதனுக்குச் சிரிப்பு வந்திருந்தது. அவளுடைய பெற்றோர் எடுத்து அனுப்பும் இரண்டாம் அபியின் புகைப்படங்களுள் அது சில நேரம் பாவமாக முகத்தை வைத்திருக்கும் புகைப்படங்கள் அழகாக இருக்கும். அதைப் புலனத்தில் ஸ்டிக்கராகவே மாற்றி வைத்திருந்தார்கள். அதை அவனுக்கு அனுப்பிய வனபத்ரா, ஜீவிதன் பேசாமலிருப்பதால் தம்பியின் முகம் அப்படிதான் இருக்கிறது என்று அனுப்பியிருந்தாள். அவள் சொன்னதைப் போலவே அபிதனின் முகம் இருக்கச் சிரித்திருந்தான்.

அவன் சிரிக்கவும் அபிதனின் முகமும் மலர்ந்தது. பின்னே? அன்று அந்த யானை நிகழ்வில், பாதுகாப்பான தூரத்திற்கு வரவுமே, இவர்கள் மூவரையும் இறங்கச் சொல்லி, அடி ஏதும் படவில்லைதானே என மீண்டும் மீண்டும் கேட்டதுதான் ஜீவிதன் இவனிடம் கடைசியாகப் பேசியது. வனபத்ராவிடம் திரும்பத் திரும்ப எங்கும் வலிக்கிறதா? அடிபட்டிருக்கிறதா? எனத் திரும்பத்திரும்பக் கேட்டவன், அவள் இல்லை எனத் தலையசைக்கவும் சென்னையாவை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று, அவர்களையும் ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ளுமாறு சொன்னவன் அவர்கள் உடன் வரவில்லை. அவனுடைய அப்பத்தா ஒரு தட்டு ஒன்று வைத்திருப்பார், எல்லா புறமும் நெளிந்திருக்கும். இருந்தாலும் சீதனம் எனத் தூக்கிப்போடாமல் வைத்திருப்பார். அந்தத் தட்டை விட மோசமாக எல்லாப்பக்கமும் நெளிந்திருந்த அந்த வனத்துறை வாகனத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் யானையிருந்த பக்கமே சென்றிருந்தான்.

வனபத்ரா அவன் செல்கிறேன் எனவும் தயங்க, “போடி…” என்று ஒரு அதட்டு அதட்டியிருந்தான். அந்த அதட்டலில் அபிதனுக்கு உதறத் தொடங்கியது ஒரு மாதம் கழித்து ஜீவிதனைப் பார்க்கும்போதும் உள்ளே உதறிக் கொண்டிருந்தது.

இப்போது ஜீவிதன் சிரிக்கவும்தான் அந்த உதறல் மறைவதைப் போல இருக்க, அபிதனின் முகம் மலர்ந்தது. அந்நேரம் பார்த்து, “அங்கிள்.. அபிய எனக்கே கொடுத்துர்றீங்களா?” என்று பாலமுருகனிடம் பேசியபடி வந்தாள் மகாதேவி.

அபிதன் பதறிப்போய் ஜீவிதனைப் பார்க்க, “எவ்ளோ க்யூட் தெரியுமா? அவ்ளோ நல்லாவும் பிகேவ் பண்ணுது… நானே தூக்கிட்டுப் போய் வச்சு வளக்கணும் போல இருக்கு… அதுக்கும் என்னை அவ்ளோ பிடிச்சுருக்கு…”என்று தொடர்ந்து பேசிக் கொண்டே ஏதோ வாங்கிவந்த பையைத் தூக்கியபடி சமையலறைக்குள் சென்றாள்.

“அவ நாயப் பத்திப் பேசுறா த்தான்…”

“தெரியுது…” என்ற ஜீவிதன் ஒருகணம் பொறுமையாக அபிதனின் முகம்பார்த்தான்.

“உனக்கு அந்தப் பிள்ளய கெட்டுற எண்ணம் ஏதாவது இருக்கா அபி?”

“த்தான்…”

“சொல்லு…”

“அப்படிலாம் எதுவும் இல்லத்தான்… அவ என் ப்ரென்ட்தான். அவளுக்கும் அப்படிலாம் எந்த எண்ணமும் கெடயாது.”

“ஷ்யூர்?”

“கண்டிப்பா த்தான்…”

“அப்படி ஏதாவது எண்ணம் வந்தா சொல்லு… நான் உனக்குச் சோத்துல மருந்து வைக்கணும்…” என்றான் அலட்டாமல்.

தான்தான் தவறாக எதுவும் கேட்டுவிட்டோமோ? என்று அபிதன் ஒருகணம் விழித்து விட்டு, “என்ன சொன்னீங்கத்தான்?” என்றான் மீண்டும்.

“அந்தப் பெண்ணக் கெட்டுற எண்ணமிருந்தா சொல்லு… நான் உனக்குச் சோத்துல மருந்து வைக்கணும் ன்னேன்…” என்றான் ஜீவிதன் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலளவில்.

தெளிவாக அவன் சொன்னது காதில் விழுந்திருக்க, “யோவ்.. எங்கக்கா கூடச் சேராதன்னு சொன்னேன்… கேட்டியா?” என்றிருந்தான் அபிதன்.

அதில் வழக்கமாக வனபத்ரா தட்டுவது போலப் பின்னங்கழுத்தோடு சேர்த்துத் தட்டினான் ஜீவிதன். அந்த நேரம் பார்த்து அபி… என்றபடி வந்த ஒரு அத்தை இந்தக் காட்சியைப் பார்த்துத் திகைக்க, குனிந்திருந்தவனின் தலையை நிமிர்த்தவிடாமல் பிடித்தபடி, “இரு அபி.. ஏதோ பூச்சி…” என்று இல்லாத பூச்சியைத் தேடினான். “ஐயோ பூச்சியா?” என்று அபிதனும் சட்டையை உதறியபடி ஒத்துழைக்க, ” ஏதாவது கரப்பானாதான் இருக்கும்… பாத்து அடிங்கப்பா…” என்றபடி அந்த அத்தை சென்றுவிட்டார்.

அவர் செல்லவும் வாயிலில், “என்ன பூச்சி?” என்று மெதுவாக ஒரு குரல் கேட்டது. கவனமும் வரப்போகும் பதட்டமுமாக வனபத்ரா நிற்க, ஐயோ என்றானது இருவருக்கும்.

வனபத்ரா அறைக்குள் வராமல் வாயிலிலேயே நின்றபடி “என்ன பூச்சி?” என்று மீண்டும் கவனமாகக் கேட்க, “இந்தப் பூச்சிதான்…” என்று மீண்டும் அபிதனின் பிடதியில் லேசாகத் தட்டினான் ஜீவிதன். அதில் நடந்தது புரிய உள்ளே வந்தவள், “என் தம்பிய அடிப்பீங்களா நீங்க?” என்றாள்.

“கேளுக்கா…” என்ற அபிதன் இருவரும் பேசட்டும் என எழப்போக, அவன் தோளில் கையிட்டு அமரவைத்தவன், தள்ளிமட்டும் அமர, வனபத்ரா அருகில் அமர்ந்தாள்.

“என்ன கேளுக்கா? நீ சொல்ல வேண்டியதுதானடா? என்னை மரியாதையா ட்ரீட் பண்ணலன்னா, எங்கக்காவக் கட்டிக்…” என்றவள் முடிக்கும்முன் அவளது தலையிலும் தட்டியிருந்தான். வனபத்ரா விழிக்க, “என்னக்கா பண்ணிவச்ச நல்லாருந்த எங்கத்தான?” என்றான் அபிதன்.

“அரும்பாடு பட்டு இப்பதான் பூவைக்கவே வந்துருக்கோம்…இதுல எதையாவது அரச்சொல்லா சொல்லி வக்காதடி…” என்றான் ஜீவிதன். விளையாட்டாகச் சொல்வது போலச் சொன்னாலும் அதிலிருந்த தீவிரத்தில், “சாரி ஜீவி…” என்றாள் வனபத்ரா பாவமாக.

“சரி என்ன விஷயம் சொல்லு…”

“வந்து… பூ வைக்கிறதுக்கு வாங்குன பூ இருக்கும்ல…”

“ம்ம்…”

“அத்த கிட்ட அத ஒரு தடவ தண்ணில மட்டும் போட்டுப் பாத்துர சொல்றீங்களா ஜீவி? அம்மாட்ட சொன்னேன், திட்டிவிட்டுட்டாங்க…”

“என்னக்கா நீ? அன்னைக்கு யானக்கே பயப்படல…” என்ற அபிதனிடம், “அன்னைக்கு அவ ஆனெக்குப் பயப்படலன்னு உனக்காரு சொன்னது?” என்றான் ஜீவிதன்.

“பயப்படறவங்கதான் ஜீப்ப கோபத்தோட வர்ற காட்டுயானக்கு நேரா விடுவாங்களா?”

“அபி… பயம் கொடுக்கிற முட்டாள்தனமான துணிச்சலை எதுவும் கொடுக்காது. அப்படிப்பட்ட துணிச்சல்தான் அன்னைக்கு பத்ரா காட்டுனது. அதுக்காக, அவளுக்கு இருக்க பயம் போயிருச்சுன்னு அர்த்தம் கெடயாது…ஆனெ இருக்க கோவில்ல கல்யாணம் வைக்கலாம்ன்னு சொல்லு… திரும்ப கல்யாணமே வே…” என்று ஜீவிதன் முடிக்கும்முன் வனபத்ரா அவன் தலையில் தட்டியிருந்தாள்.

“கஷ்டப்பட்டு பூ வைக்கிற வரை வந்துருக்கோம்…”

“அப்ப நம்ம விசாலாட்சி தலைமைல கல்யாணம் பண்ணுவோமா?” ஜீவிதன் அவளைச் சீண்ட, முறைத்தாள்.

“பாத்தியா? அன்னைக்கு உங்கக்கா பண்ணது ரொம்பவே முட்டாள்தனம். மக்னா ஆனெயா இருந்த கண்டி, கொம்பு இல்லாதது புண்ணியம். டஸ்கரா இருந்திருந்தா, பத்து செகன்ட்ல தந்தத்தால அந்த ஜீப்பக் கவுத்திப் புரட்டியிருக்கும். இதுவுமே ஜீப்ப கவுத்தணும்ன்னு நெனச்சுருந்தா பண்ணிருக்கும்தான். இவ திடீர்ன்னு உள்ளுக்க வரவும் அதுக்குமே ஒருநிமிஷம் என்ன பண்ணன்னு தெரியல… ஜீப்ப ஏறிச் சவட்டாம முட்டித் தள்ளிருந்துச்சுன்னாலோ, உங்கக்காக்கு நல்லா கார் ஓட்டத் தெரியாம இருந்துருந்தாலோ அன்னைக்கு ஆன கால்ல சாகலன்னாலும் ஆக்சிடன்ட்ல அஞ்சுபேரும் செத்துருப்போம்…ஆனா, அந்த முட்டாள்தனத்தைத் தவிர, வேற எதுவும் அன்னைக்கு உன்னையோ, அந்தக் கோட்டிப்பிள்ளயவோ காப்பாத்திருக்காது. அதை விடச் சென்னையா….” என்றவன் பெருமூச்செறிந்தான்.

இன்றுவரை மகாதேவியை நேரடியாக ஒருவார்த்தை சொல்ல ஜீவிதனுக்கு மனம் வராததற்குக் காரணமும் இதுதான். அன்று மகாதேவி அந்தப்பகுதியில் செல்லாமல் இருந்து, வனபத்ரா அங்கே இல்லாமல் இருந்திருந்தால், சென்னையா இந்நேரம் இருந்திருக்க மாட்டார். அந்தக் கணம் தோன்றிய கலவையான உணர்வை ஜீவிதனால் வகைப்படுத்தவே முடியவில்லை.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க, உள்ளே வந்த அஞ்சனா, “பத்ரா…” என்றார். அதன்பின்தான், ஒருமணி நேரத்தில் பூவைக்கும் நிகழ்வை வைத்துக் கொண்டு மணமகனும் மணமகளும் இப்படி இணைந்து உட்கார்ந்திருந்தால், பார்ப்பவர்கள் ஏதாவது சொல்வார்கள் என்பது உறைத்தது. அவள் சட்டென எழ, அவள் சொன்னது போலப் பூவைச் செய்யச் சொல்லி, மனோன்மணியிடம் சொல்வதற்காக, ஜீவிதனும் நேர்த்தியாகக் கழன்றிருந்தான். “என்ன பத்ரா?” என்று மகளைக் கடிந்துகொண்டவர், “அபி… மேல போய் அபியப் பாரு… தனியா இருக்கும்… பாவம்…” என்றார்.

“ம்மா… அதுக்குப் பேர மாத்துங்கம்மா… அக்கா வெளாட்டுக்குச் சொல்லுச்சுன்னு நீங்களும் என் பேரையே வச்சுவிட்டுருக்கீங்க?” என்று எப்போதும் போல அவன் நொடிக்க, “உன் பேர யார் வச்சா? நீ அபி’தன்’… அது அபி’தா’…போ… போய் கொஞ்ச நேரம் அதுகூட வௌயாடிட்டு வா…” என்றார்.

வனபத்ராவுக்காக, ஏழுகடல், ஏழுமலை தாண்டி என்பதைப் போல, மொட்டைமாடியின் கடைக்கோடியில் தனியாக இருந்த அறைக்குள் பாவமாகக் கட்டிப்போடப்பட்டிருக்கும் என்று நினைத்தபடி அபிதன் கதவைத் திறக்க, அது மகாதேவியின் மடியில் அமர்ந்து செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தது.

“தெய்வமே… இப்படிலாம் பழக்காத… தப்பித்தவறி அக்கா பக்கம் போச்சுன்னா அவ்ளோதான்…”

“ஹையோடா.. அபியக் கட்டிப்போடலன்னா பத்ராக்கா வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சுருவாங்களா என்ன?” என்று சொன்னவளின் முகம் மறுகணத்தில் இருளாகியிருந்தது.

“ஓய்.. என்ன? திரும்பவும் மூஞ்சி பீஸ் போயிருச்சு… உண்மைய தான சொன்ன? தப்பு கிடையாது…”

அவள் மறுப்பாகத் தலையசைத்தாள். அவள் முகம் குற்றஉணர்வில் படிய, “லூசு, எதுக்கு இப்ப இப்படி மூஞ்சிய வைக்குற? எத்தன தடவ சொல்றது? அன்னைக்கு உன் தப்பு எதுவும் இல்ல மகா…” என்றான் தன்மையாக.

“சாகலாம்ன்னு யானய நோக்கிப் போனது தப்பில்ல அபி… ஆனா, பயந்து பாதில நின்னது தப்பு, பயந்து ஓடும் போது என்னைக் காப்பாத்த ன்னு வந்த உன்னைப் பிடிச்சுத் தள்ளிவிட்டுட்டு ஓடினது மிகப்பெரிய தப்பு…”

“மூஞ்சி.. நீ யானய நோக்கிப் போனது தப்பில்லன்னு சொன்னது மட்டும் எங்கத்தானுக்குத் தெரியணும்… ப்பா… அவர்கிட்ட இவ்ளோ அனலடிக்கும்ன்னு நான் நெனச்சுக் கூடப் பாத்ததுல்ல தெரியுமா?”

“என்னை எதுவும் சொன்னாங்களா அபி?” என்றாள் அவள் சோகமாக.

“சேச்சே.. இல்ல…” என்றான் மருந்தை மறக்க முயன்றபடி.

“என்னெ பெரிய சுயநலவாதின்னு நெனச்சுருப்பாங்கல்ல?”

“என்ன உளர்ற மாடே…”

“ஆக்சுவலா எனக்கு அன்னைக்குச் சாகணும்ன்னு அவ்வளவு உள்ளயிருந்து தோணல அபி… அதுதான் எனக்கு அதிர்ச்சியே. அம்மா இல்லன்னா என்னால வாழவே முடியாதுன்னு நெனச்சுருக்கேன்.. ஆனா, அவங்க இல்லன்னாலும் அவங்கள… அனுப்பிட்டு… நான் பரீட்ச எழுத வந்துட்டேன்… என்னாலயே அதை கிரகிக்கவே முடியல அபி… அம்மாக்கு ஏதோ நான் உண்மையா இல்லாத மாதிரி ஒரு உணர்வு…அம்மா எனக்கு ரொம்பப் பிடிக்கும்ன்னா நான் அம்மா கூடவே போயிருக்கணும்ல…”

“பைத்தியம்…” என்றவன், வானத்தைப் பார்த்துக் கத்தத் தொடங்கியிருந்தான், “ஆண்டவா…பழய பேஷன்ட டிஸ்சார்ஜ் பண்ணு… புது பேஷன்ட்ட அட்மிட் பண்ணுங்கற மாதிரி, எங்கக்கா, இவ ன்னு ஏன் பைத்தியமா பார்த்து டீல் பண்ணு ன்னு என்கிட்ட அனுப்புற? ஞானப்பண்டிதா… முருகா…”

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *