வனபத்ரா சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். மணி இரவு இரண்டு. வழக்கமாக இந்நேரம் கடந்துபோவது கூட அவளுக்குத் தெரியாது. இப்போதானால், இரவாகிவிட்டால், ஒவ்வொரு வினாடியும் நான் போய்வருகிறேன் போய்வருகிறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் மீண்டும் வந்து நிற்பது போல இருந்தது.
தூக்கம் என்கிற வார்த்தையே மறந்துவிட்டதைப் போல அவளது மூளை கண்டதையும் அள்ளி நினைவில் கொட்டியதே தவிர, நிம்மதியான உறக்கம் இல்லை. அப்படியே உறங்கித் தொலைக்கின்ற சில மணிநேரங்களிலும் கரப்பான்பூச்சி முதல் கரடி வரை விதம்விதமாகக் கனவில் வர, பதறியடித்து எழுந்து அமர்ந்திருந்தாள். மனம் மிகுந்த அலைப்புறுதலில் இருக்கும்போதுதான் அவளுக்கு இப்படியெல்லாம் கனவுகள் வரும்.
நினைவில் ஜீவிதனும் கனவில் கண்ட உயிரினங்களும் அவளை உறங்கவிடாமல் செய்ய, உணவும் உண்ணப்பிடிக்கவில்லை. ஒருவாரத்தில் நன்றாகவே மெலிந்திருந்தாள். கண்ணில் கருவளையம், செயலில் சோர்வு என மொத்தமாகவே துவண்டுபோயிருந்தவளை வீட்டில் இருப்பவர்களால் காணவே முடியவில்லை.
அபிதன் அடிக்கடி வந்து அக்காவை, கல்கத்தரிகாகிதம் போன்று எதையாவது விளையாட அழைத்தான். அவள் மறுக்கவில்லை. ஆனால், பொம்மை போலக் காகிதமாக விரித்த கையையே மீண்டும் மீண்டும் வைக்க, அபிதன்தான் வெறுத்துப் போய் அந்தப் பக்கம் போனான். பாலமுருகன் மகளுக்குப் பிடித்ததுபோல முறுகலாக நெய்தோசை ஊற்ற அஞ்சனா அதை ஊட்டிவிடுவதாக ஆசைகாட்டிப் பார்த்தார். ஒருவாய்க்கு மேல் வாங்கவில்லை.
“இப்படி இருக்கதுக்குப் பேசாம அந்தப் பையனயே கட்டிக்கடி…” என்றார் அஞ்சனா கோபமாக. அவள் மறுப்பாகத் தலையசைத்தாள்.
“சரிபட்டு வராதும்மா…” அவள் உதட்டைக் கடித்து அழுகையை அடக்கியபடி சொல்ல, பெற்றவர்களுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது.
“வா…” என அஞ்சனா கைகாட்ட, வனபத்ரா அன்னை மடியில் தஞ்சமடைந்திருந்தாள். அவருடைய ஆதரவான அணைப்பு, அழுகையை வெளிப்படுத்த சொல்ல, குலுங்கிக்குலுங்கி அழத் தொடங்கியிருந்தாள்.
பாலமுருகன் மகளையே வருத்தமாகப் பார்த்தார். அவரது மகள் அழும் தருணங்கள் அரிது. யானை, பூனை என்று பயந்தாலும் மயங்கிக் கூட விழுவாளே அன்றிப் பெரும்பாலும் அழ மாட்டாள். அப்படிப்பட்டவள், ஒருவாரமாக அல்லும்பகலுமாக அழ, அவருக்குமே மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது.
மகள் விரும்பியிருக்கிறாள் என்று தெரியவுமே ஜீவிதனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியிருந்தார். அஞ்சனாவும். ஏற்கனவே, மகன் இருக்கின்ற வீட்டில் இருக்கிறான் என்பதற்காக மேலோட்டமாக விசாரித்ததுதான். இப்போது இன்னும் ஆழமாக விசாரிக்க, கிடைத்த தகவல்களில் இன்னும் வருத்தமாக இருந்தது. பையன் தங்கம். குணநலன்களில் அவர்களே தேடினாலும் இப்படிப்பட்ட பையன் கிடைப்பது அரிது.
சாதி வேறுதான். ஆனால் மகளது விருப்பத்தின்முன் அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டில்லை. ஊர்க்கட்டுப்பாடு அது இதென அவரைக் கட்டுப்படுத்தும் எதிலும் அவர் தொடர்பு வைத்திருக்கவும் இல்லை. அவனது வேலை மட்டும்தான். நல்ல வேலை, கிடைப்பதற்கரிய வேலைதான். இளம்வயதில் அந்த வேலையில் இருக்கிறான் என்றால், அவன் வேலையில் அவன் திறமைசாலியாக இருப்பான் என்பதில் சந்தேகமும் இல்லை.
ஆனால், மகளது பயத்தையுமே தள்ளிவைத்துவிட்டுப் பார்த்தாலும் அந்த வேலையில் இருக்கின்ற ஆபத்து பெற்றவர்களைத் தயங்க வைத்தது. அதிலும் குறிப்பாக அஞ்சனாவுக்கு. தறிகெட்டு வருகின்ற மனிதர்களைச் சந்திக்கின்ற வேலையில் இருப்பவருக்கு, அத்தகைய மனிதர்களைச் சமாளிப்பதே எவ்வளவு கடினம் என்று தெரியும். அப்படி இருக்கும்போது, மனிதர்களின் சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்படாத விலங்குகளோடு மல்லுக்கட்டுபவனை எப்படி? என்று இருந்தது. வனபத்ரா சரியென்றிருந்தால், அந்த உறுத்தலைத் தள்ளிவைத்துவிட்டு மணமுடித்து வைத்திருப்பார்கள்தான். அவளே சரிபட்டு வராது என நிற்கிறாளே? இதில் என்னவென்று சொல்ல?
“வேற மாப்பிள பார்க்கட்டுமாடா?” பாலமுருகன் கேட்க, அஞ்சனாவின் மடியில் இருந்தபடி முகத்தை மட்டும் நிமிர்த்திஅவரது முகத்தைப் பார்த்த மகளது முகத்தில் தெரிந்த அதிர்ச்சி இன்னும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
சில கணம் யோசித்த வனபத்ரா மறுப்பாகத் தலையசைத்தாள். மகளது தலையை மென்மையாக வருடிவிட்ட அஞ்சனா, “இப்ப கஷ்டமாதான் டா இருக்கும். கொஞ்சநாள் ஆனா சரியா போயிரும்… நல்ல பையனா பார்ப்போம்… கல்யாணம் ன்னு ஆகிட்டா, பரபரன்னு வேற எதையும் யோசிக்க நேரம் கூட இருக்காது…” என்றார்.
“ஆமாக்கா.. நான் கூட வேணும்ன்னா ஹாஸ்டல், இல்ல வேற வீடு… ஏன் காலெஜ டிஸ்கன்ட்னீயு கூடப் பண்ணிட்டு இந்தப் பக்கம் சேர்ந்துரேன்… அந்தண்ணா பக்கமே போக வேண்டாம்… ஏதாவது நல்ல ஆடா சிக்கும். அதை மேரெஜ் பண்ணிக்கோ… வழக்கம்போல அதை டார்ச்சர் பண்ணிட்டு ஜாலியா இரு… அதான் உனக்கு செட்டாகும். இப்படி அழுதுட்டே இருக்காதக்கா… ” அபிதன் விளையாட்டாகப் பேச முயற்சி செய்ய, வனபத்ரா முறைத்தாள். பின் ஏதோ முணுமுணுத்தாள்.
சரியாகக் காதில் விழாமல், “என்னது?” என்றான் அபிதன். அவனை மீண்டும் முறைத்தவள், “அண்ணன்னு சொல்லாத…” என்றாள்.
“ரொம்ப முக்கியம்…” என்ற அஞ்சனா, “அப்ப அவனையே கட்டிக்கிறியா?” என்றார். அதற்கும் மறுப்பாகத் தலையசைத்தாள்.
“அப்பறம் காரைக்கால் அம்மையார் மாதிரி பழம் நீயப்பா ன்னு பாட்டுப் பாடிட்டு கல்யாணம் பண்ணிக்காமலே சுத்தப்போறியாடி?” என்றார் அஞ்சனா கோபமாக.
அன்னையின் முகத்தைப் பார்த்தவள், “காரைக்கால் அம்மையாருக்குக் கல்யாணம் ஆகிருக்கும்தானே?” என்றாள் மெதுவான குரலில்.
“அடியே? உன்கிட்ட இப்ப திருத்தம் கேட்டாங்களா?” என்ற அஞ்சனா எதையோ தொடர்ந்து சொல்லப்போக, “அவங்கள அவங்க ஹஸ்பன்ட் விட்டுட்டுப் போன மாதிரி எங்க ஜீவி என்னை விட்டுட்டுப் போயிருவாரோன்னுதான் மா எனக்குப் பயமா இருக்கு…” என்றாள் கலங்கிய குரலில்.
பாலமுருகனது முகத்தைப் பார்த்த அஞ்சனா, கடினமான குரலில் தொடர்ந்தார், “அப்ப வேற பையனைப் பார்க்கிறோம்… கல்யாணம் பண்ணிக்கோ…” என்றார்.
“கொஞ்சநாள் போகட்டும் ம்மா…”
“ஆமா… மாப்பிளைங்கலாம் காய்கறி, கருவேப்பில விக்கிற மாதிரி பக்கத்துத் தெருவுலதான் விக்கிறாங்க… போனவுடனே வாங்கிப் பையில போட்டுட்டு வந்துரலாம்… அது எவ்ளோ பெரிய வேல தெரியுமாடி? இப்ப பார்க்க ஆரம்பிச்சா, நீ சொல்ற கொஞ்சநாள் தானா போயிரும்…”
“ம்மா…”
“நீ அந்தப் புலி பிடிக்கிறவனைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் ன்னு சொல்லு… எவ்ளோ நாள் வேணும்ன்னாலும் காத்திருக்கோம்.. இல்லயா ஒழுங்கு மரியாதையா நாங்க சொல்ற மாப்பிளைக்கு கழுத்த நீட்டு…”
“ம்மா… அவரை மரியாதையா பேசுங்கம்மா…”
“மருமகனா வரப்போறவன்னா மரியாத கொடுக்கலாம். கண்டவனுக்கெல்லாம் நான் ஏன்டி மரியாத கொடுக்கணும்? வீடேறி வந்து என் பிள்ளைய அடிச்சுட்டுப் போயிருக்கான்… நான் பேசாம இருக்கதே உனக்காகத்தான்…”
“ம்மா…”
“சும்மா ம்மா..ம்மா… ன்னு கன்னுக்குட்டி மாதிரி கத்திட்டுக் கிடக்காத… ஒழுங்கா எந்திரிச்சு முகத்தைக் கழுவிட்டு வேற வேலையப் பாரு…”
அன்னை வரவும் எழுந்து முகத்தைக் கழுவி வந்தவள், பாவமாகவே முகத்தை வைத்திருக்க, “அக்கா… சும்மா ஒரு ரவுன்ட் போயிட்டு வரலாம்.. வர்றியா?” என்று கேட்டான் அபிதன். வீட்டில் இருக்க இருக்க, வேறு கல்யாணம் என்று அன்னையும் தந்தையும் ஆரம்பிப்பார்களோ என்று பயந்தவள், தம்பியிடம் தலையாட்டினாள்.
அக்கா இப்படி இருப்பதில் அபிதனுக்குத்தான் அதிக வருத்தமாக இருந்தது. தன்னால்தானோ என்கிற எண்ணம். அதிலும் வழக்கமாக, இப்படி எதையாவது செய்துவிட்டு வந்தால், வனபத்ரா அவனை வாட்டியெடுப்பாள். இந்த முறை அப்படி கூட கோபத்தைக் காட்டாமல் இருக்க, நிஜமாகவே அக்காவுக்குத் தன்மேல் வருத்தம் என்பது புரிந்திருந்தது. அவளை இயல்பாக்கத் தன்னால் ஆன வரை முயன்றான்.
இருசக்கரவண்டியில் பின்னால் அமர்ந்திருந்தவளது முகத்தைப் பார்த்தவன், “அக்கா… அப்பாம்மா சொல்ற மாதிரி நல்ல பையனா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ.. அதோட உன் டேஸ்ட் ஒண்ணும் அவ்ளோ நல்லாவும் இல்ல.. அந்தாள் என்ன நல்லாவா இருக்காரு? என் அளவு கூட அழகா இல்ல…” என்றான்.
வழக்கமான வனபத்ராவாக இருந்தால், இந்நேரம் அவனது பின்னந்தலையைச் சேர்த்து அடித்திருப்பாள். இப்போது சோர்வாக இருக்க அவனை முறைக்கக் கூடச் செய்யாமல் சோகமாக வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.
ஒரு பெருமூச்சு ஒன்றைச் சத்தம் காட்டாமல் விட்டவன், ஒரு பூங்காவின் முன் வண்டியை நிறுத்தினான். “கொஞ்ச நேரம் உள்ள நடந்துட்டு வரலாமாக்கா?” அவன் கேட்கவும் வனபத்ரா பொம்மை போலத் தலையசைத்தாள். அதைப் பார்த்த அபிதனுக்கு ஆச்சரியமே.
வழக்கமாகப் பூங்கா என்றால், மரம் இருக்கும், மரத்தில் புழு இருக்கும், புழுவைத் தின்ன பறவை இருக்கும் என ஆரம்பிப்பவள் இன்று எதுவும் சொல்லாமல் தலையாட்டிவிட்டு இறங்க, அவனும் இறங்கினான்.
எதற்கும் இருக்கட்டும் என நடைபாதை போல இருந்த பகுதியில் மரமில்லாமல் இருந்த பக்கமே அக்காவோடு நடக்க, அவள் செக்குமாடு போல வேறு எதையும் கவனிக்காமல் தம்பியின் கைப்பிடியில் சுற்றிக்கொண்டிருந்தாள். அவன் எதையெதையோ பேசியபடி, அங்கங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைக் காட்டியபடி வர, அதையெதையும் அவள் கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் அபிதன் அமைதியாகி, ஒன்றும் பேசாமல் நடக்க, ஒன்றரைமணிநேரத்திற்கு மேலாகியும் அவள் நடப்பதை நிறுத்தவில்லை.
“அக்கா…” என்று அவன் அழுத்தி அழைத்தபிறகுதான் நின்று திரும்பினாள். பதிலுக்கு எதுவும் கேட்காமல் இருக்கவும் “உட்காருவோமா?” என்றான் அவனே அங்கிருந்த இருக்கைகளைக் காட்டி. அவள் தலையசைக்கவும் அழைத்துச் சென்று அமரவைத்தவன், அதன்பிறகுதான் அருகிலிருந்த இருக்கையில் இருந்தவனைப் பார்த்தான்.
ஜீவிதன் அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் சம்மணமிட்டு அமர்ந்து ஏதோ தியானத்தில் இருப்பவனைப் போல உட்கார்ந்திருந்தான். அக்கா அவனைக் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்தவன், இருவரும் பார்க்கும்முன் அவளைக் கிளப்ப முயன்றான்.
“அக்கா வீட்டுக்குப் போலாம்…” எனவும் தம்பியின் கைச்சாவியில் இயங்குபவளைப் போல இயங்கிக்கொண்டிருந்த வனபத்ராவும் எழுந்தாள். ஆனால், அபிதனது குரலைக் கேட்ட ஜீவிதனின் விழிகள் திறந்திருந்தன. அவன் அபிதனைக் கண்டுகொள்ளவில்லை. வனபத்ராவையே பார்க்க, அவளும் அவனைப் பார்த்திருந்தாள். இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. ஜீவிதனின் பார்வையில் ஒரு கோபம் இருக்க, அபிதனின் பார்வையில் ஒரு தற்காப்புணர்வு வந்திருந்தது.
“அக்கா நீ போ…” என்றவன், ஜீவிதனிடம் “இந்த ஃபாலோ பண்ற வேலையெல்லாம் ஏன் பண்றீங்க?” என்றான்.
அவன் நக்கலாகச் சிரித்தான். “யார் யார ஃபாலோ பண்றது? நான் வெள்ளன ஏழுமணிக்கூர்ல இருந்து இங்கனயுண்டு…”
“அபி…” என்றழைத்த வனபத்ரா அமைதியாக அவள் ஏற்கனவே அமர்ந்திருந்த இருக்கையில் மீண்டும் அமர்ந்தாள்.
“ப்ச்.. நீ ஏன்க்கா இங்க உட்கார்ற? வா.. வீட்டுக்குப் போலாம்…”
“கால் வலிக்குது…” என்றவளை ஜீவிதனின் பார்வை எடைபோட்டபடிதான் இருந்தது. அவளது நொந்துபோயிருந்த தோற்றத்தில், அவள்மேல் இருந்த கோபம் மறைந்து பரிதாபம் வருவதுபோல இருக்க, தன்னைத்தானே கடிந்தபடி அலைபேசியை எடுத்து உருட்டலானான். அவன் தன்னைப் பார்க்கவில்லை என்பதை உணரவும் தம்பியைப் பார்ப்பதுபோல அவனைப் பார்த்துகொண்டிருந்த வனபத்ரா, நன்றாகவே அவன்புறம் திரும்பிப் பார்த்தாள்.
அவளுடைய தோற்றத்திற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல்தான் அவனுடைய நிலையும் இருந்தது. அவள் முகத்தில் முளைக்காத தாடியும் அவனது முகத்தில் படர்ந்திருக்க, கலைந்த தலையும் கசங்கிப்போயிருந்த சட்டையுமாக தேவதாஸ் தோற்றத்திற்குக் கையில் ஒரு பாட்டிலும் காலடியில் ஒரு நாயும் இல்லாததுதான் குறையாக அமர்ந்திருந்தான்.
வனபத்ரா யோசிக்கும்போதே அவள் காலடியில் ஏதோ உணர, குனிந்துபார்த்தாள். அவளது காலடியில் ஒரு நாய் நின்றிருந்தது. சில நாட்கள் முன்னதாக அவளைத் தெருதெருவாகச் சுற்றவிட்ட அதே குட்டிநாய்.
(தொடரும்…)